in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 1) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்... (அத்தியாயம் 1)

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பிறந்தான் மாயக் கண்ணன்

வானம் இளஞ்சிவப்பும் கருமையும் கலந்து காணப்பட்டது. ஏதோ அதிசயம் அன்று நிகழப்போவதை முன்னமே தெரிந்து கொண்டிருந்த மேகங்கள், அதை மானுடற்குச் சொல்ல நினைத்தன. பின்பு யார் சொல்வது என்று தங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொள்ளவே அது இடியாக பூமியில் விழுந்தது.

அரசு மருத்துவனையில் ஒரு பெண்மணி தன் மேடிட்ட வயிற்றைப் பிடித்தபடி, “அம்மா.. அம்மா..” என்று தலையை ஆட்டியவாறு கத்திக் கொண்டிருத்தாள்.

“பெரிய டாக்டர் பாக்குறாருல.. புள்ள புழைச்சிக்குவான்..” என்று ஒருவர் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். குழந்தை பிறக்கும் நேரத்தைக் குறிக்க காத்துக் கொண்டிருந்தனர் அந்தப் பெண்மணியின் உறவினர்கள். 

ஆனால், மருத்துவரின் முகத்தில் மகிழ்ச்சி ரேகை சிறிதும் படர்ந்திருக்கவில்லை. தலைகுனிந்து கடிகாரத்தைப் பார்த்தார். 4.00 AM என்று கம்பீரமாகக் காட்டியது அது. அவரின் வாயில் வரும் வார்த்தைகளை எதிர்நோக்கி உறவினர்கள் வெளியே காத்திருந்தனர்.

பெரிய டாக்டர் முககவசத்தைக் கழட்டியபடி வெளியே வந்து, “வெரி சாரி.. தாய்க்கு ஏதும் ஆகல. ஆம்பள புள்ள..! ஆனா செத்து தான் பொறந்திருக்கு..” என்று  சொல்லி விட்டுத்  தனக்கே உரித்தான பாணியில் அங்கிருந்து அகன்றார்.

அனைவர் முகத்திலும் சோகம். குழந்தை இறந்ததையே இன்னும் ஏற்காத நிலையில், அந்தக் குழந்தையை ஒரு துணியில் சுற்றிக் கொண்டு, செவிலியர் வெளியே வந்தாள்.

உறவினர்களில் ஒருத்தி, உடனே அவளிடமிருந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு, தோளில் சுமத்தி, “என் ராசா.. கண்ண திற ட.. உங்கம்மாக்கு என்னய்யா நாங்க ஆறுதல் சொல்லுவோம்?” என்று நெஞ்சு வெடிக்க அழுதாள்.

ஓரிரு நிமிடங்கள் கழித்து, குழந்தையை வாங்கிக் கொண்டு போய் பிணவறையில் போட்டு விட்டாள் செவிலி. அவள் பின்னாலேயே அழுது கொண்டு கொஞ்சம் பேர் சென்றார்கள். இரண்டொரு உறவினர் வீட்டிற்குச் சென்று, தகப்பனிடம் தகவலைத் தெரிவித்தார்கள்.

தகப்பன் அரை சித்தனாவான். உடனே தன் ஜாதகத்தை எடுத்து, ஏதேதோ கணக்கிட்டான். விரல்கள் மடக்கி, நீட்டி, பின் ஒரு முடிவுக்கு வந்து, “குழந்தை சாவாது. 4.01க்கு பொறந்திறருக்கு. அப்போ ஆண்பிள்ளை தானே?” என்று பழனி சாதாரணமாகக் கேட்டார்.

உறவினர்களுக்கு விருட்டென்றது. “ஆமாம்… ஆமாம். ஆனா எப்படி சொல்றீங்க பாக்காமயே?” என்று கேட்டனர்.

“அதுலாம் ஒரு கணக்கு. ஒவ்வொரு அரை மணிநேரத்துக்கும் ஆண் காலம் பெண் காலம்னு உண்டு. ஆண் காலத்துல ஆண் கொழந்த தான் பிறக்கும். இதுலாம் ஜோசியத்துல பேசிக் பாடம்னு வெச்சிக்கோங்களேன். சரி சரி..! பேசிட்டு கெடக்க வேணாம். என் புள்ள கண்டிப்பா புழைச்சிடுவான்.. போய்க் கூட்டிட்டு வாங்க” என்று சாதரணமாகச் சொல்லி விட்டுத் துணி மூட்டையை எடுத்துக் கொண்டு, வேலைக்குச் சென்று விட்டார். 

இதைக் கேட்டவுடன், உறவினர்கள் திரும்பவும் கிடுகிடுவென்று மருத்துவமனைக்கு விரைந்தனர். அன்று ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. மழை அதற்கு மேல் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. முழுக்க நனைந்து மருத்துவமனைக்குள் நுழைந்து நேரே பிணவறைக்குச் சென்றனர்.

தங்கள் குழந்தையை அடையாளம் கண்டு தூக்கிக் கொண்டு வந்து, அதே டாக்டரிடம் காட்டிக் கெஞ்சினர். அவர் முதலில் கோபப்பட்டாலும், பின் குழந்தைக்குச் சிகிச்சை கொடுத்தார். தன் சுவாசக் காற்றை அமுக்கிப் பிடித்து, குழந்தையின் வாயில் ஊதினார். முதுகைத் தட்டிக் கொடுத்துத் தேய்த்து விட்டார். இரு நிமிடங்கள் இதே நிகழ்வுகள் தொடர்ந்தன. 

அனைவரின் கண்களிலும் ஆவல் நிறைந்திருக்க, திடீரென்று, சிகிக்சை அறையிலிருந்து “குவா…குவா….” சத்தம் கேட்டது. மனம் நிறைய அனைவரும் சிரித்தனர்.

“குரோதி வருடம் ஆனி 32ஆம் தேதி, நேரம் 4 மணி 25 நிமிஷம்.. நான் குறிச்சிக்கிட்டேன்” என்று அதே சிரிப்புடன் ஒருவர் சொன்னார்.

டாக்டர் வெளியே வந்து, “புழச்சிட்டான்… ஆயுசு கெட்டி.. ஆனா ஒரு அஞ்சு வயசு வரிக்கும் அழுவாம பாத்துக்கோங்க.. அப்டி அழுதா மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பிருக்கு..!” என்று சொல்லி அதே கம்பீர பாணியோடு நகர்ந்தார்.

தாய், சேய்க்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். அவளைச் சூழ்ந்து கொண்ட உறவினர்கள், நடந்ததைச் சொல்லி ஆச்சரியப்பட்டனர். அரைமணி நேரங்கழித்து, அந்தப் பெண்மணியைக் கைத்தாங்கலாக ஆட்டோவில் ஏற்றிப் பத்திரமாகக் குழந்தையுடன் வீட்டில் சேர்த்தனர்.

“ஒரு ஆன்மா உடலை விட்டுச் சென்றது. அந்த இடத்தை இன்னொரு ஆன்மா வந்து நிரப்பி, இறப்பைத் தவிர்த்து விட்டது..! இது தான் நாங்கள் சொல்ல வந்த அதிசயம்” என்று மேகங்கள் உறக்கச் சொல்ல நினைத்தது போலும். அதன் அடையாளமாய் அடைமழை தன் வேகத்தை அதிகரித்துக் காட்டிக் கொண்டிருந்தது. 

ஒவ்வொரு உயிரின் வரவையும் மனிதர்கள் ஆரவாரமாய்த் தான் கொண்டாடுகிறார்கள். ஆனால், பிறப்பெடுக்கும் மனிதன் ஏனோ அழுது கொண்டே தான் பிறக்கிறான். 60 நாழிகை (24 மணி) கொண்ட ஒரு நாளில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பிறக்கின்றனவாம். அதில் மனிதப் பிறப்புகள் ஏறக்குறைய ஏழாயிரம் இருக்குமாம்.

மேலும், ஒரே லக்கினத்தில் 600 பேர் பிறக்கின்றார்கள் என ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. “எத்தனையோ பிறவிகளில் மனிதப்பிறவியும் ஒரு பிறப்பே” என்பதை உணராமல், மனிதப் பிறப்பெடுத்த நாம், ஏழை-பணக்காரன், உயர்வு-தாழ்வு, பதவியிருப்பவன்-இல்லாதவன் என அதிலும் ஏராளமான பிரிவுகளை ஏற்படுத்தியிருக்கிறோம். ஆனால், வானவியல் சாஸ்திரத்தைப் பொருத்த மட்டில், நாம் அனைவரும் 12 ராசிகளாக மட்டுமே பிரிக்கப் பட்டிருக்கிறோம்.

இனி கதைக்குள்..!

அந்தப் பெண்மணியின் பெயர் பார்வதி. அவள் ஈன்றெடுத்த பிள்ளைக்கிட்ட பெயர், ‘கிருஷ்ணன்’. கண்ணனைப் போலவே சுகமோடு வளர்ந்தான். வேலூரை அடுத்துள்ள குடியேற்றம் தான் இவன் வசிக்கும் ஊர். வீட்டிற்குக் கடைக்குட்டி. ஆதலால் செல்லம் அதிகம். உணவிலிருந்து சகலம் வரை அவனுக்குத் தான் முதல் மரியாதை.

ஊரில் பஞ்சம் தலைவிரித்தாடிய போதும் அவள் அம்மா அவனுக்குக் குறை வைத்ததில்லை. தகப்பன் துணி நெய்து அதைப் பக்கத்து ஊரில் சென்று விற்று வருவார். அந்த வருமானத்தில் தான் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. அம்மா வீட்டு வேலை முடித்து, தினசரி ஓயாது கட்டு ஒட்டுவாள். 

அப்படித்தான் கிருஷ்ணனின் மூத்த அண்ணனை அதாவது வீட்டிற்கு மூத்த பிள்ளையைப் படிக்க வைத்தார்கள். அவரும் வெகு ஜோராகப் படித்தார். நல்ல மதிப்பெண் அனைத்திலும் பெற்று, பெற்றோருக்குப் பெருமை சேர்த்தார். அந்தக் காலத்திலேயே அவர் மதிபெண்ணுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படிக்க இடம் கிடைத்தது.

நான்கு வருடம் கடினப்பட்டு படித்தார். தொடர்ந்து எம்.இ’யும் படிக்க வாய்ப்பு கிட்டியது. குடும்பம் மேலே வந்து விடும் என்ற தெம்பு தகப்பனுக்கு வந்தது. ஆனால், நடந்ததோ முற்றிலும் வேறாக இருந்தது.

படித்த இடத்திலேயே மூத்த அண்ணனுக்கு வேலை கிட்டியது. படிப்புக்கு ஏற்ற வரன் வந்ததும், அவள் பேச்சைத் தட்ட முடியாமல் அப்படியே போய்விட்டார் அவர். தன் ஓய்வுக்காலம் வரை அவர் அண்ணா பல்கலைகழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆனால், அவரின் வேலையோ புகழோ, அவருக்கே கூட பயனளிக்கவில்லை. பின் பெற்றெடுத்த குடும்பத்திற்கு ஏது? 

அடுத்து, கிருஷ்ணனின் இளைய அண்ணன். பத்தாம் வகுப்பைப் பத்து முறை படித்தார். பிறகு நமக்கு படிப்பு வராது என்று தெளிந்து கொண்டு, தன் அப்பாவிடமிருந்து ஜோசியத்தைக் கற்றுக் கொண்டார்.

“சொல்லியும் கேட்டும், கற்ற அறிவு” ஆதலால், அவரை நம்பி முதலில் யாரும் ஜோசியம் கேட்க வரவில்லை. நாட்கள் அப்பாவின் பணத்திலேயே மீண்டும் ஓடத் தொடங்கின. 

கிருஷ்ணனும் வளர்ந்து இளம் பருவத்தை எட்டியிருந்தான். படிப்பில் கிருஷ்ணன் பயங்கர சுட்டியெல்லாம் இல்லை. மெல்ல தவழ்ந்து, பத்தாம் வகுப்புப் படிக்கட்டில் ஏறி நின்று கொண்டிருந்தான்.  குடும்ப சூழ்நிலையைப் புரிந்து கொள்ளும் தன்மை அவனிடத்தில் மேலோங்கி இருந்தது.

எப்போவும் போல அன்றிரவு  சாப்பிட்டு விட்டு, எப்போதுமில்லாமல் அப்பாவின் கட்டிலின் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

அவனைப் பார்த்த அப்பா, “என்னடா?” என்று கண்களால் கேட்டார்.

அவன் சற்று அமைதியாக இருந்தபின், “நைனா.. நா எப்போ சம்பாரிப்பேனு ஜாதகம் பார்த்துச் சொல்லேன். நான் உன்னையும் அம்மாவையும் பாத்துக்கணும் ஆசப்படுற” என்று சொல்லி அழுதான்.

அந்த அழுகையைக் கேட்ட தகப்பன் சிறிதும் கலங்கவில்லை. எப்போவும் போல கண்களை மூடி அர்த்த ராத்திரியில் தியானத்தில் ஆழ்ந்தார்…

நைனா ஏதோ கண் திறந்து சொல்லப் போகிறார் என்று நினைத்து, கிருஷ்ணன் உட்கார்ந்து கொண்டே இருந்தான். இரண்டு மணி நேரமாயிற்று. அதற்கு மேல் அவனால் பொறுமை கொள்ள முடியவில்லை.

“நைனா.. கண்ண தொறயேன். நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாம இப்படி சிலையா உட்காந்துட்டு இருக்கியே” என்று அவரை உலுக்கியபடி கத்தினான். அவனின் அலறல் கேட்டு, அவன் அம்மா பார்வதி தூக்கம் கலைந்து ஓடி வந்தாள்.

கிருஷ்ணனின் கைகளைத் தன் கணவர் மீதிருந்து விலக்கி அங்கிருந்து இழுத்துச் சென்றாள். அவன் அழுது கொண்டே அம்மாவின் புடவை நுனியைப் பிடித்துக் கொண்டான். அம்மா அவனைச் சமாதானம் செய்து பாயில் படுக்க வைத்தாள். 

கண்களில் ஈரம் மேலிட, “அம்மா.. அப்பா ஏன் இப்படி அமைதியா ஆயிட்டாரு?” என்று கேட்டான்.

அம்மா பாசமாய் அவன் தலையை வருடியபடி, “அதெல்லாம் ஒன்னுல டா.. அவரு அப்டித்தான். கந்தர் சஷ்டி கவசம் அத்துப்படியா தெரியும். ஒரு காத்து கருப்பு அவர அண்ட முடியாது. எதுக்கும் கவலை இல்லாத ஆள். சித்தர் கணக்கா பொருளைத் தங்கமா மாத்துறேன்னு ஏதாவது மண்ணு சாருன்னு கொண்டு வந்துடுவாரு.. இராத்திரி ஆனா, தோ..! இப்படி மூச்ச அடக்கி உட்காந்துக்குவாரு. அவர் மேல் கை வெச்சா சில நேரம் ஜில்லுன்னு இருக்கும். சில நேரம் அணல் அடிக்கும். மனுஷன் அரை சித்தன்..” என்று சொல்லிக் கொண்டே போனாள்.

இதைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்த கிருஷ்ணன், “அப்போ நம்ம அப்பா.. பேய் பிசாசுலாம் ஓட்டுவாரா? அதுங்க கூடெல்லாம் பேசுவாராம்மா?” என்று கேட்டான்.

“தூங்கையில என்னடா பேச்சிது?” என்று அதட்டி, அவனைத் தூங்கச் சொன்னாள் பார்வதி.

கிருஷ்ணன் அடம்பிடித்தான். சொன்னால் பயப்படுவானோ என்ற பயத்திலேயே, சொல்லத் தொடங்கினாள்.

“நம்ம வீட்ல தறி நெய்க்கிற ரூம் இருக்குல.. அந்த ரூம்ல ஒரு ஜன்னல் இருக்குது.. அது வழியா பாத்தா அடுத்த தெருவுக்கும் நம்ம தெருவுக்கும் இருக்குற சந்து தெரியும். அந்தப் பக்கம் பொதுவா யாரும் போறதில்ல.. பேய் பிசாசு நடமாட்டம் இருக்குறதா சொல்வாங்க.. உங்க நைனா தறி நெய்யுறப்போ அதுங்க கூடல்லாம் பேசுவாரு.. அதுங்களும் பேசும்.. சில நேரத்துல ‘டேய் பழனி.. ஒரு பீடி குடுறா’ன்னு கேக்கும். ‘எனக்கு அந்தப் பழக்கலாம் இல்ல..! போ…போன்னு’ சொல்லிடுவாரு உங்க அப்பா. ஆயிரம் தெரிஞ்சாலும் எளிமையா தான் நடந்துப்பாரு” என்று பெருமிதத்துடன் சொல்லி முடிக்கும் போது, கிருஷ்ணனின் கண்களில் பிரமிப்பும் பயமும் ஒரு சேர தெரிந்தது.

அவன் அம்மாவைக் கட்டிப்பிடித்து, “மா.. இராத்திரி நா தூங்குனதுக்கு அப்ரோ கூட… எங்கேயு எழுந்து போவாதம்மா.. எனக்கு பயமா இருக்கு” என்று சொல்லிக் கண்களை இறுக மூடிக்கொண்டான். பார்வதியும் நிம்மதியோடு அவன் முதுகில் தட்டியபடி தூங்கினாள்….

(தொடரும் – வெள்ளி தோறும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஏக்கமும் ஏகாந்தமும் (சிறுகதை) – ✍ மீனாட்சி அண்ணாமலை, சென்னை

    என்னை… நான்! (சிறுகதை) – ✍ சுபகீதா, சென்னை