in

ஏக்கமும் ஏகாந்தமும் (சிறுகதை) – ✍ மீனாட்சி அண்ணாமலை, சென்னை

ஏக்கமும் ஏகாந்தமும் (சிறுகதை)

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

த்மாவுக்கு தலை கிறுகிறுவென சுற்றுவது போல் இருந்தது. ரேசன் கடையில் வாங்கின பொருட்களை கட்டைப் பையில் தூக்கிக் கொண்டு, கோடை வெய்யிலில் நடக்க முடியவில்லை. எதிரே இருந்த கடையில் ஜூஸ் வாங்கி பருகி சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

இரண்டு தெருவை கடந்தால் வீடு வந்துவிடும், இதற்குப் போய் ஆட்டோக்காரன் ஐம்பது ரூபாய் கேட்கிறான். இந்நேரம் நமக்கு வண்டி ஓட்டத் தெரிந்திருந்தால் கணவரின் வண்டியை எடுத்து வந்திருக்கலாம். அவர் பின்னாடி உட்கார்ந்துதான் பழக்கப்பட்டிருக்கிறோமே தவிர, எனக்கு வண்டி ஓட்ட கத்துத் தருகிறீர்களா? என்று ஒரு நாளும் அவரிடம் நானும் கேட்டதில்லை, அவரும் கற்றுத் தரவில்லை. தவறு நம்முடையதா அல்லது அவருடையதா என்று வயதான இந்த காலத்தில் யோசித்து என்ன பயன் என்றபடி வீட்டை நோக்கி நடந்தாள்.

கதவை திறந்து, சோபாவில் உட்கார்ந்து தண்ணீர் அருந்தும் போது மகளிடம் இருந்து போன் வந்தது.

“கரண்ட் பில் கட்ட நாளைக்குத் தான் கடைசி நாள், உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்” என்றாள்.

“சரிம்மா” என்று மகளிடம் கூறினாளே தவிர மனதுக்குள்ளேயே அவளை திட்டித் தீர்த்தாள்.

‘உன்னை படிக்க வைத்ததன் பலன் உன் பில்லை வீட்டிலிருந்தபடியே நீ ஆன்லைனில் கட்டிக் கொள்கிறாய். வயதான அம்மாவிற்கு உதவ மனமில்லை, இ.பி.ஆபீஸ் சென்று என்னை பணம் கட்ட சொல்கிறாய்’ என நினைத்து வருந்தினாள்.

எனக்கென தனியாக என் பெயரில் வங்கியில் கணக்கு ஆரம்பித்து பணம் போட்டீர்கள். ஆனால் வங்கி கார்டை பயன்படுத்த ஒரு நாளும் எனக்கு சொல்லிக் கொடுத்ததில்லை.

சமையல் ஒன்றைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் நீங்களே பார்த்துக் கொண்டீர்கள், எனக்கு நல்ல கணவராகவும் தோழனாகவும் குருவாகவும் இருந்தீர்கள். ஆனால், இப்பொழுது தெரியாத எதையும் தெரிந்து கொள்வதற்கு பெற்ற பிள்ளைகளிடம் கூட கேட்க தயக்கமாக இருக்கிறது, கூச்சம் தடுக்கிறது. இப்போது நான் படும் அவஸ்தையை பார்த்தீர்களா? என்று சுவரில் மாட்டியிருந்த கணவரின் போட்டோவை பார்த்து,  கோபமாக கேட்டாள்.

உன்னை ராணி மாதிரி உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறேன் என்றீர்கள்.  ஆனால் இன்றைய கணினி உலகில் இதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா? அதனால்தான் ஒன்றும் தெரியாத ஞானசூன்யம் என்ற பட்டத்தை இன்று உறவுகளிடமும், நாம் பெற்ற பிள்ளைகளிடமும் வாங்கியிருக்கிறேன்.

எந்நேரமும் கையில் ஆன்ட்ராய்ட் மொபைலை வைத்துக்கொண்டு நண்பர்களிடமும், பிள்ளைகளிடமும் வீடியோ காலில் பேசி மகிழ்வீர்கள். உனக்கு எதுவும் தெரியாது பிள்ளைகளிடம் பேச இதுபோதும் என்று எனக்கு மட்டும் பட்டன் மொபைலை வாங்கிக் கொடுத்தீர்கள். இப்போது உங்கள் பிள்ளைகளுக்கு நான் முகநூல் வாட்ஸ் ஆப், யூ டியூப் என எதிலும் இல்லை, இ.மெயில் அக்கவுண்ட் இல்லை நீ வாழ்வதே வேஸ்ட் என்று கேலி செய்கிறார்கள்.

“அப்பா மொபைலை என் பிள்ளைக்கு கொடுங்கள், இனிமேல் ஆப்பிள் போனை வைத்துக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள்?” என்று உங்களைப் போலவே பேசி மகன் பிடுங்கிக் கொண்டான்.

பேரப் பிள்ளைகளும், “தாத்தா இருந்தாலாவது எங்களுக்கு ஏதாவது செல்லித் தருவார், இந்த பாட்டிக்கு ஒன்றும் தெரியவில்லை வேஸ்ட்” என்று என்னை பார்த்து ஏளனமாக பேசுகிறார்கள். 

இந்த வார்த்தைகளை கேட்டு உங்களுடைய பெண்ணும் பிள்ளையும் என்னை பார்த்து ஏளனமாக சிரிக்கிறார்கள் என கணவரோடு மான்சீகமாக பேசி தன் குறைகளை, மனக்குமுறலை கொட்டித் தீர்த்தாள்.

உன்னை உலகம் தெரியாமல் இன்றுவரை குழந்தை மாதிரி வைத்துக் கொண்டிருக்கிறேன். குடும்பதிற்காக உழைத்து தேய்ந்த உனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி உடல்நிலை வேறு சரியில்லாமல் போகிறது.நா ன் இல்லாமல் தனியாக உன்னால் வாழ்வது சிரமம், உனக்கு செய்ய வேண்டிய எல்லாச் சடங்கையும் செய்து முதலில் உன்னை கரையேற்றி விட்டுத்தான் நான் சாவேன் என்று அடிக்கடி கூறுவீர்கள். 

நானும் ‘பூவோடும், பொட்டோடும் போவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பேன். ஆனால் காலதேவன் மாரடைப்பு என்ற பெயரில் எதிர்பாராமல் திடுதிப்பென்று உங்களை அழைத்துக் கொண்டார்.  நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் வேறு ஒன்றை நினைக்கும் என்பார்கள், அது என் விஷயத்தில் உண்மையாகி விட்டதே என்று கண்கலங்கினாள்.

அதிசயமாக இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு மகனும் மகளும் குடும்பத்தோடு ஒரு சேர வந்து பத்மாவை வியப்பில் ஆழ்த்தினர்.  புறப்படும்போது, அம்மா இவ்வளவு பெரிய வீட்டில் நீ ஒருத்தியாக இருந்துக் கொண்டு பராமரிக்க ஏன் கஷ்டப்படுகிறாய், மேலே ஒரு சிறிய போர்ஷன் கட்டிக்கொண்டு, கீழே வாடகைக்கு விட்டு விடலாமே, உங்களுக்கும் துணையாக இருக்கும் என்றார்கள்.

அவர்களின் நோக்கம் புரிந்து மனம் கசந்த பத்மா, “வாடகை பணத்தை வாங்கி நீங்கள் பங்கு போட்டுக் கொள்கிறீர்களா?” என்று கோபமாக கேட்டதற்கு,

“ஏன்? அதிலென்ன தவறு, அப்பா பென்சன் பணம் உன் ஒருத்திக்கு போதாதா?” என்று கேட்டனர்.

“ஓஹோ, நீங்கள் சம்பாதிப்பது போதவில்லையா? உங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு இதற்காகத்தான் இங்கு வந்தீர்களா?” என்றாள்

“எப்படியும் நீங்கள் இறந்த பிறகு இந்த வீடு சட்டப்படி எங்களுக்குத்தானே, அதை இப்பொழுதே நாங்கள் அனுபவிப்பதில் என்ன தவறு?” என்று பிள்ளைகள் உரிமையாக கேட்டனர்.

“அப்பா உங்களுக்கு என்ன குறை வைத்தார். உன் அண்ணனை டாக்டருக்கு படிக்க வைத்தார், டாக்டர் பெண்ணையே திருமணமும் செய்து வைத்தார். தன் கடமை மறந்து அவன் என்னை தனியாக விட்டு விட்டு போய் விட்டான், பேருக்குத்தான் பிள்ளை. உன்னை இன்ஜினியருக்கு படிக்க வைத்து, நன்கு சம்பாதிக்ககூடிய இன்ஜினியருக்குதான் கட்டி வைத்தார். நன்றாகத் தானே சம்பாதிக்கிறீர்கள், என்ன குறை?” என்று மகளை கேட்டாள் பத்மா.

“நானும் அப்பாவும் வாழ்ந்த இந்த வீடு ஏன் உங்க கண்ணை உறுத்துகிறது. அம்மா என்று நான் ஒருத்தி உயிரோடு இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?” என்று வருத்தமாக கேட்டாள்.

“பென்சன் பணத்தை அக்கவுண்டிலிருந்து எடுத்து வந்து கொடுத்து என்னிடம் அன்பாக பேசி ஒரு தொகையை எடுத்துக் கொள்வாயே, எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்து விட்டாயா? பெற்ற பாசத்தால் ஒன்றும் தெரியாதது போல் அமைதியக இருப்பேன். என்னிடம் பணமிருந்தால் யாருக்கு செலவழிக்கப் போகிறேன், நீங்கள் பெற்ற என் பேரப் பிளைகளுக்குத்தானே? அதுகூடவா படித்த உங்களுக்கு புரியாது?” என்று கேட்டபடி பாசம் மறந்த பிள்ளைகளை பார்த்தாள்.

“அப்பா இருந்தவரை, கணவர், பெற்ற பிள்ளைகள் என உலகம் தெரியாமல் வீட்டிற்குள்ளேயே செக்கு மாடாக உழன்று கொண்டிருந்து விட்டேன்.  உங்கள் வளர்ச்சியை பார்த்து ஆனந்தப்பட்டேன், அது தவறா? ஆனால் நீங்களோ, உங்களுக்காகவே மெழுகாக உருகிப்போன என்னை, ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது போல நடந்து கொள்கிறீர்கள். அப்பா இந்த வீட்டை என் பெயரில்தான் வாங்கி வைத்துள்ளார். எப்பொழுது உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்பொழுது கொடுக்கிறேன். இனிமேலும் என் வாயை கிளறாமல் என்னை வற்புறுத்தாமல் சென்று வாருங்கள்” என்று விடைகொடுத்தாள்.

கணவர் இல்லாமல் தனிமரமாய் வாழ்வது ஒரு பக்கம் வருத்தமென்றால், உறவே வேண்டாம் பணமே பிரதானம் என்று எண்ணும் பிள்ளைகளின் வாழ்க்கை பிற்காலத்தில் என்னவாகும் என்ற கவலை மறுபக்கம் பத்மாவை வாட்டியது. 

தான், தன் குடும்பம் என்று சுயநலமாக வாழும் இன்றைய பிள்ளைகளால்தான் அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் பெருகி வருகிறதோ! என்று நினைத்தாள்.

தலை விண் விண் என்று வலிக்க, காபி கலந்து வந்து வாயில் வைத்த போது செல்போன் சிணுங்கியது. பெற்ற பிள்ளைகள் யாராவதுதான் இருக்கும் என்று நினைத்தபடி செல்லை எடுத்து பார்த்த பொழுது, வேலைக்காரி கிரிஜாவின் போன் என தெரிந்தது.

“ஹலோ” என்று பத்மா சொல்லும் பொழுதே மறுமுனையில் இருந்து அழுகை சத்தம் கேட்டது.

“அம்மா என்னை அனாதையாக விட்டு விட்டு போயிட்டாங்க” என்று கிரிஜாவின் மகள் ராணி கேவினாள்.

“என்ன ஆச்சு? அழாம சொல்லுடா” என்று பத்மா கேட்க

“கொரோனா அம்மாவை எடுத்துக் கொண்டு போய்விட்டது” என்று கதறினாள்.

“நீ அழாதேடா, தைரியமாக இரு, நான் புறப்பட்டு உடனே அங்கு வருகிறேன்” என்று செல்லை துண்டித்தாள்.

வேலைக்காரியாக இருந்தாலும் பத்மாவிற்கு நல்ல தோழியாக இருந்த கிரிஜாவின் மறைவு கேட்டு பத்மாவின் மனம் துடிதுடித்தது, துக்கம் நெஞ்சை பாரமாக அழுத்தியது.

தன்னைத் தானே தேற்றிக்கொண்டு கிரிஜாவின் வீட்டிற்கு புறப்பட்டாள், ராணியின் முகத்தில் பயமும், மிரட்சியும் அப்பிக் கொண்டிருந்ததை பார்த்து பத்மாவின் கண்கள் கலங்கின.

கிரிஜாவின் ஈமச்சடங்குகள் முடிந்தவுடன் அங்கிருந்த அவள் உறவினர்களிடம் “ராணியை அழைத்துச் சென்று நான் வளர்த்துக் கொள்கிறேன்” என்று கேட்டாள்.

“தாராளாமாக அழைத்துச் செல்லுங்கள் அவ அப்பாவும், அம்மாவும் இவளுக்காக எதுவும் சேர்த்து வைக்கவில்லை, அன்றாடங் காய்ச்சிகள் தான். இவளுடைய தலையெழுத்து உழைத்துத்தான் சாப்பிட வேண்டும் என்று எழுதியிருக்கிறது. அதனால் நீங்கள் தாராளமாக அழைத்துச் செல்லுங்கள்” என்றனர். தங்களுக்கு பாரம் குறைந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பத்மாவுடன் வந்த ராணி வீட்டிற்குள் நுழைந்தவுடன் நேராக சமையல்கட்டுக்குச் சென்று பாத்திரங்களை துலக்க ஆரம்பித்தாள். பத்மா கணவரின் படத்தை பார்த்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், ராணியை நான் என் மகளாக தத்தெடுத்துக் கொண்டு வந்து விட்டேன். நம் பிள்ளைகளின் லட்சணத்தை மேலிருந்து நீங்கள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள். வேலைக்காரி என்றாலும் கிரிஜாவும் நம் குடும்பத்தில் ஒருத்தியாக இருபது வருடங்களாக உழைத்துக் கொண்டு இருந்தாள்.

தன் கணவன் இறந்தபின், நம் வீட்டோடு சேர்த்து இன்னும் இரண்டு வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து பெண்ணை படிக்க வைத்தபடி கஷ்டஜீவனம் நடத்தி வந்தாள். அவள் மகள் ராணி இன்று அனாதையாகி விட்டாள். உறவினர்களோடு தங்கிக் கொண்டால் கூட அவளை யார் படிக்க வைப்பார்கள், சோறு போடுவார்கள்,  ராணிக்கு உழைத்து சாப்பிடும் வயதல்ல, ரெண்டுங் கெட்டான் வயது, பக்குவப்படாத மனம், உலகம் தெரியாதவள் இவளை எப்பொழுது கொத்தித் திங்கலாம் என்று சமுதாயம் கழுகுப் பார்வையாக அவளை பார்க்கும்.  எனவேதான் நமக்கு விசுவாசமாக உழைத்த கிரிஜாவிற்கு நன்றிக்கடனாக, அவள் ஆன்மா சாந்தியடைய அவள் பெண்ணை தத்தெடுத்துக் கொண்டேன் என்றாள்.

நான் அதிகமாக படித்திராவிட்டாலும், உங்கள் மறைவிற்குப்பின் உலகை சற்று புரிந்து கொண்டேன், நம் பிள்ளைகளின் எதிர்ப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியும், எதிர்க்கும் தைரியமும் எனக்கிருக்கிறது. அவர்களுக்கு பயந்து ராணியையும் அனாதை இல்லத்தில் சேர்க்க மாட்டேன், நானும் வீட்டை விட்டு வெளியேறி முதியோர் இல்லத்தில் சேர மாட்டேன்.

கிரிஜாவை வேலைக்காரியாக பார்க்காமல், நல்ல தோழியாக, ஏன் உடன் பிறவா தங்கையாக எண்ணி அவளுடன் நான் பழகியதால், அவள் மகளை இனி என் மகளாக வளர்த்து ஆளாக்கப் போகிறேன். என்றும் உங்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும் என்று வணங்கினாள்.

இவளை படிக்க வைத்து ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுக்கும் வரை நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், என் ஆயுள் காலம் நீடிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டும் பொழுது, “அம்மா உங்களுக்கு காப்பி போட்டு கொண்டு வந்திருக்கிறேன்” என்றபடி ராணி எதிரே நின்ற போது, பத்மா கண்களில் நீர் மல்க தாய் பாசத்தோடு அவளை வாரி அணைத்து முத்தமிட்டாள்.

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். என்ற கருத்தை எளிய நடையில் எடுத்துரைத்துள்ளார்.

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 8) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 1) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்