எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வளர்ப்பு பிராணிகளாக நாய்க்குட்டிகளையும் பூனைக்குட்டிகளையும் வளர்ப்பவர்கள் உண்டு. கார்களிலும் பைக்குகளிலும் சுகமாக ஆரோகணித்து போகும் அவற்றை நான் வேடிக்கை பார்த்திருக்கிறேன். மிகவும் வியந்துமிருக்கிறேன்.
சிவசங்கரியின் ராணா, சியாமா மாதிரி அக்கம் பக்கத்தில் ஜீஜோ, டோக்கியோ என்று நிறைய நாய்களை பார்த்திருக்கிறேன். பார்த்திருக்கிறேன் என்பதை விட பயந்திருக்கிறேன் என்றே சொல்லலாம்.
‘என்னவோ தெரியவில்லை !நீ சௌக்கியமா இரு ! நானும் நிம்மதியா இருக்கேன் ‘,என்று சொல்லி விட்டுப்போகத்தான் தோன்றும்.
இப்படி இருக்கும்போது என் பெண் நாய்க்குட்டி வளர்க்கிறாள் என்றபோது கொஞ்சம் நெருடலாக இருந்தது. எப்போதும் அவள் வீட்டுக்கு போக வேண்டும் என்றால் மிகவும் மகிழ்ச்சியுடன் எல்லாம் தயார் செய்யும் எனக்கு இந்த முறை எப்படியாவது தப்பிக்கவே தோன்றியது.
எப்போது பேசினாலும் ஜாங்கோவைப் பற்றியே பேசும் அவள் என் பயத்தையோ தயக்கத்தையோ துளியும் லட்சியம் பண்ணவில்லை.
‘அம்மா , ப்ளீஸ் ! அவன் ஒண்ணும் பண்ண மாட்டாம்மா! நீ வாயேன் ! ‘
கெஞ்சல் கொஞ்சல் எதற்கும் வழியில்லாமல் நாங்கள் நெதர்லாந்துக்கு பயணப்பட்டோம்.
வீட்டை அடையும் போது கொஞ்சம் திக் திக் தான்.( தேவையா இவளுக்கு)
வெளியே வரும் போது அதை (அவனை) ஒரு ஏரியாவில் அடைத்துவிட்டுத்தான் வருவார்களாம். நிம்மதி!
ஜாங்கோ எங்களைப் பார்த்து ஜோராக வாலாட்டியது. செல்லமாக குரைக்கவும் செய்தது.
‘சரி , சரி, நீ அங்கேயே இரு !’ என்று சொல்லிக்கொண்டேன்.
மாடியில் குளித்துவிட்டு கீழே வரும்போது அதைத்தான் அடைத்து வைத்திருப்பார்களே என்று அலட்சியமாக கதவை திறந்தால், எதிர்பாராமல் பாய்ந்து என்னை நோக்கி ஓடி வந்த அந்த பெரிய உருவத்தை கண்டு பயந்து கதவை இழுத்து பிடித்துக் கொண்டேன்.
என் பெண் அந்தப்பக்கம் இழுக்க நான் கெட்டியாக இந்தப் பக்கம் பிடித்துக்கொண்டு நின்றேன். பயம் என்னை ஆட்டி வைத்தது. ஒரு வழியாக அதை மறுபடியும் அடைத்துவிட்டு கதவை திறக்க வைத்தாள்.
‘இப்படி பயந்தால் எப்படிம்மா! அவன் உன்கிட்டே வரப் பிரியப்படறான் பாரு!.’
‘நான் இங்கே பயப்படறேன் பாரு!’என்றேன். அவள் அதை சட்டையே பண்ணவில்லை. சோஃபாவில் உட்கார்ந்திருந்த என் அருகில் கொண்டு வந்தாள். ‘கொஞ்சம் அதை தடவிக் கொடும்மா !அது ஒண்ணும் செய்யாது.’
மெதுவாக என் கையைப் பிடித்து அதைத்தடவ வைத்தாள்.
வெகுசமீபத்தில் நாயை நான் பார்த்ததே இல்லை. அதன் பற்களும் நாக்கும் பயமுறுத்தும் போது எப்படி இருக்கும்! வேண்டா வெறுப்பாக தடவிக் கொடுத்தேன். பக்கத்தில் பார்த்த போது அந்த கண்கள் எதையோ யாசிப்பது மாதிரி தெரிந்தது.
‘பழகும் வகையில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே ! பாசம் காட்டி ஆசை வைத்தால் மிருகம் கூட தெய்வமே! ‘
மேஜர் சுந்தர்ராஜன் பாடும் அந்த பாடல் செவிகளில் எதிரொலிக்க மீண்டும் அந்தக் கண்களைப் பார்த்தேன். அந்தப் பெரிய கண்களில் தெரிந்தது நேசம் மட்டும்தான். எங்கேயோ என் மனதில் கொஞ்சம் மாற்றம் வந்தது போல இருந்தது.
நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன் பழக ஆரம்பித்தோம். காலையில் முதலில் எழுந்து வரும் என்னை அது அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து வேக வேகமாக வாலை ஆட்டும். முகத்தை மட்டும் நீட்டிக் காண்பித்து கொஞ்சம் தடவிக் கொடேன் என்று அடம் பிடிக்கும்.
அவர்கள் வந்து அதை விடுவித்த பின் சுதந்திரமாக வளைய வரும். படித்துக் கொண்டிருந்தாலும் பேசிக் கொண்டு இருந்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும் முகத்தைக் கொண்டுவந்து மடியில் வைக்கும்..
ஒரு பந்தைக் கொண்டு வந்து கொடுத்து தூக்கிப் போடச் சொல்லும். வாயில் கெட்டியாக பந்தை பிடித்துக் கொண்டு ‘எடு பார்க்கலாம்!’ என்று மல்லுக்கு நிற்கும்.
மொத்தத்தில் அவன் ஒரு விஷமக்கார செல்லப் பையன் என்று முழுமையாக அந்த வீட்டில் ஆட்சி செய்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
என் பேரன் தினேஷ் உள்ளே வந்த உடன் அவனுடன் கொஞ்சிக் தீர்க்கும். அவனை ஒரு வார்த்தை திட்டினாலோ கோபமாக பேசினாலோ உடனே பாய்ந்து வந்து கோபமாக குரைக்கும். இத்தனை பாசமா என்று நினைக்கத் தோன்றும்.
செல்லமாக வளர்த்தாலும் நிறைய கட்டுப்பாடுகள் அதற்கும் உண்டு .சாப்பாடு அதன் கிண்ணத்தில் வைத்துவிட்டு அதை சாப்பிடு என்று சொல்லும் வரை பார்த்துக் கொண்டே நிற்கும். சொன்னவுடன் ஒரே பாய்ச்சல் தான்.
அந்தக் கிண்ணத்தை வழித்து வழித்து ஒருவழியாக்கிவிடும். அத்தனை பசியை எப்படி அடக்கிக் கொண்டு இருந்தது என்று வியப்பாக இருக்கும்.
அதேமாதிரிதான் காலையில் மதியம் மாலை வெளியே கூட்டிப் போய் அதன் இயற்கை கடன்களை தீர்க்க வைப்பார்கள். என்றாவது அது இரவில் ஏதாவது தவறாக சிறுநீர் கழித்து விட்டால் பாவமாக முகத்தை வைத்துக் கொள்ளும்.
வெறும் துணி காயப்போடும் ஸ்டாண்டு களைத்தான் அதற்கு வெளியே வராமலிருப்பதற்கு பயன்படுத்தியிருப்பார்கள். அதை தாண்டி தானாக வெளியே வராது. ஆச்சரியமாக இருக்கும். இதெல்லாம் அதற்கு ஒரு பொருட்டே இல்லை .ஆனாலும் கட்டுப்பட்டு அதற்குள்ளேயே சுற்றும். விஷமமும் செய்யும் . குழந்தைகளை கண்டால் கொண்டாட்டம் தான் அதற்கு.
வெளியே கூட்டிக் கொண்டு போய் இருக்கும் போது பக்கத்தில் இருந்த சின்ன செய் குளத்தில் பாய்ந்து சொட்ட சொட்ட ஈரமாக நின்றதாம். தெரிந்தவர்கள் அழைத்து விட்டால் ஓடும் வேகத்தில் பிடித்திருந்த கயிற்றுக்கு இடையில் பாய்ந்து ஓடியதில் என் பேரனை கீழே தள்ளி விட்டதாம்.
அதன் குறும்புகளும் சேட்டைகளும் வீட்டை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும். வாயில்லா ஜீவன் என்றாலும் அதன் பாசத்தையும் நேசத்தையும் வாலை ஆட்டியே காண்பித்து விடும். வெளியே எங்காவது போய்விட்டு வந்தால் எப்படி என்னை விட்டு போகலாம் என்று ஒருதவிப்புடன் பாய்ந்து வரும்.
செல்லப் பிராணிகள் என்றைக்குமே செல்லப் பிராணிகள் தான்! பிரிந்து வரும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மறுபடியும் ‘பழகும் வகையில்’ பாடல் மனதில் எதிரொலித்தது.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings