in ,

தீபாவளி வந்தாச்சு (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி.

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

வருடம்..1972…ஐப்பசி மாதம் இரண்டாம் தேதி என்றது ஹாலில் மாட்டியிருந்த நாள்காட்டி …ஊஞ்சலில் அமர்ந்திருந்த ராஜதுரையின் பக்கத்தில் வந்தமர்ந்த லட்சுமி அம்மா மகனிடம்…

“ஏம்பா ராசா… தீபாவளிக்கு இன்னும் மூணு வாரம்தான் கிடக்கு போத்தி ஓட்டல் நம்பி ஐயர அடுத்த வாரம் பலகாரம் செய்ய வர சொன்னியா ..? தீபாவளி நெருங்கிடுச்சுன்னா ஐயர கைல பிடிக்க முடியாது …நிறைய வீட்டுல அவர கூப்பிடுவாங்க பலகாரம் செய்ய…அவர் கை பக்குவத்துல பலகாரம் அம்புட்டு ருசியா இருக்கு..அதான் அவருக்கு இவ்வளவு கிராக்கி   “

” ஆமாம்மா அவர பாத்து சொல்லிட்டு  தான் வந்தேன். அம்மாகிட்ட கேட்டு   நல்ல நாள் பார்த்து சொன்னீங்கன்னா அன்னைக்கு வந்து அடுப்பு பத்த வச்சுடறேன்னு’ சொன்னாரு..”

” வர்ற விசாலக் கிழமை நல்ல நெறஞ்ச முகூர்த்தமா இருக்கு அன்னைக்கு பூசைய பண்ணி எண்ணெய் சட்டிய வைச்சுடுவோம்…”

“ராசா நீ பட்டணத்துக்கு போய் ஒன் ரெண்டு தங்கச்சிகளுக்கும் பலகாரம் வச்சு, தீபாவளி துணிமணிகளை கொடுத்துட்டு வரனும். போன வருஷம் சின்னவ தல தீபாவளினால இங்க வந்தா.. இது ரெண்டாவது தீபாவளினால மாப்பிள்ளை வீட்ல தான் இருப்பா ..200 லட்டு 200 அதிரசம் 500 முறுக்கு ..ஒரு மூணு படி மிச்சர் ..அவளுக்கு கொடுத்து விடுவோம். பெரியவளுக்கு நாலஞ்சு வருஷம் ஆச்சு அதனால 101.. 101..இனிப்பு  வச்சு பலகாரங்கள் கொண்டு போய் கொடுத்திடு… அவ குடும்பம் சின்னது தான் .”

“அம்மா சின்னவளுக்கு இது போதுமா? அவ குடும்பம் பெருசாச்சே …”

“போன வருஷம் தல தீபாவளிக்கு நல்ல செஞ்சாச்சு ஆயிரம் ஆயிரம்  எல்லா பண்டத்திலேயும் கொண்டு வச்சாச்சு …நல்ல காஞ்சிபுரம் புடவை, மாப்பிள்ளைக்கு ஜரிகை வேஷ்டி, வைர மோதிரம், அழைப்புச் சுருள்…பணத்தோட சேத்து ஒரு பவுன் தங்க காசு … எல்லாம் சீர் செஞ்சு ஜாம் ஜாம் என்று தலதீபாவளி கொண்டாடியாச்சு, ஊர் முழுக்க பலகாரம் போட்டாச்சு. இது இரண்டாவது தீபாவளிதானப்பா… இருந்தாலும் நீ சொன்னாப்பல எதுக்கு குறை வைப்பானேன். 301.. 301 ..ம் அஞ்சு படி மிச்சரும் வைச்சுடுவோம் .”

அதற்குள் ராஜதுரை பொண்டாட்டி தனம் உள்ளிருந்து குரல் கொடுத்தாள்… “அத்தை எண்ணெய் செட்டியார் வந்திருக்காரு. எத்தனை லிட்டர் வாங்க …”

“நல்லெண்ணெய் அந்தப் பெரிய ஜாடியில அஞ்சுலிட்டர் வாங்கி வையி..தீபாவளி அன்னைக்கு எல்லாரும் எண்ண தேச்சு குளிக்கனும். .அப்புறம் பலகாரம் செய்ய கடலை எண்ணெய் 10 லிட்டர்   டின் வாங்கிடு .”

“அப்புறம் ராசா சீல கடை செட்டியார் வர சொல்லு வீட்ல உள்ள அம்புட்டு பேருக்கும் ஜவுளி எடுக்க வேண்டும் …”

ராஜதுரை கூடப் பிறந்தவங்க நாலு பேரு அண்ணன் தம்பிகள். அதுபோக ரெண்டு தங்கச்சிகளையும் பட்டணத்தில் கல்யாணம் பண்ணி கொடுத்திருந்தது ..அப்பா பெரிய பண்ணையார் இருந்தவரை எந்த கவலையும் கிடையாது, எல்லாம் பொறுப்பையும் அவரே பார்த்துக்கொள்வார்.

இப்போது ஒவ்வொரு காரியமும் ராஜதுரை தான் பொறுப்பாக செய்ய வேண்டியதாயிருக்கிறது. தம்பிகள் எல்லாம் மத்த வேலைகளை பார்த்துக் கொள்வார்கள் என்றாலும், நிர்வாகப் பொறுப்பு மட்டும் ராஜதுரைக்கு தான்.

மறுநாள் சீலை செட்டியார் வர. “அம்மா பெரியம்மா கும்பிடுதேன். ஐயா சொன்னாக…கேட்ட சமாசாரம்  பூரா எடுத்துட்டு வந்திருக்கேன். உங்களுக்கு மனசுக்கு பிடிச்சத வாங்கிக்கிடுங்க”

“செட்டியார்.. இப்போ துணிமணி  வாங்கிகிடுதோம். அறுவடை முடிஞ்சு  வெள்ளாம  வீடு வந்து சேர்ந்ததும் கணக்கபுள்ள துட்ட கொண்டு வந்து கொடுத்திடுவாரு “

“பெரியம்மா நம்ம வீட்டு துட்டு எங்க போகப் போகுது? அவசரமே இல்ல நீங்க புடிச்சத வாங்கிக்கிடுங்க” என்றார்.

லட்சுமி அம்மா உள்ளே குரல் கொடுத்தார் …”ஏ..தனம்..கமலம்… ராசம்..வசந்தி  எல்லாரும் இங்க வாங்கடி…செட்டியார் சீல கொண்டு வந்திருக்காரு…”

நாலு பேரும் சீலை என்றதும் ஆசையையும் ஆர்வத்தையும் வெளியே காண்பிக்காமல் மறைத்துக் கொண்டு  அடக்க ஒடுக்கமாய் மாமியார் பின்னாடி வந்து நின்றனர்…

எல்லா புடவையும் அலசி ஆராய்ந்து நாலு புடவை வெவ்வேறு கலரில் ஒரே மாதிரியாக எடுத்து வைத்தார் லட்சுமி அம்மா.

“உடல்ல புட்டா போட்டு,  மாங்காய் சரிக பார்டர்  நல்லா இருக்கு நாலு கலர்ல.. யாருகிட்ட எந்த கலர் இல்லையோ அவக அதை எடுத்துக்கிடுங்கடி”

ஆரணி பட்டு புடவை மருமகள்களுக்கு எடுத்த பிறகு ,நல்ல காஞ்சிபுரம் பட்டு கெட்டியாக ஜரிகை போட்டு உடலில் கட்டம் போட்டு ரெண்டு மகள்களுக்கும் ஒரே மாதிரியாக எடுத்தார்.

“வெள்ளையில்ல கலர் புட்டா போட்டு ஜம்பர் துணி ஒரு ரோல் கொடுத்துடுங்க.  அவங்களுக்கு வேணும்ங்கிறத  எடுத்து ஜம்பர் தைச்சுக்கிடுவாங்க ..”

பின்னால் பொம்மையாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நால்வரும் தலையாட்டினர். “அக்கா எனக்கு போன தடவயே இதே சிவப்பு கலர் தான். எனக்கு அந்த கலர் வேணாம்” என்றாள் வசந்தி கிசுகிசுப்பாக..

“வசந்தி அத்த காதில விழுந்தா சத்தம் போடுவாக.. பேசாம இரு.. நமக்குள்ள அப்புறம் எந்த கலர் பிடிக்குதோ அதை எடுத்துக்கலாம் “

பிறகு வீட்டு வேலையாட்களுக்கு …சம்சாரி குடும்ப பொண்டுகளுக்கு என்று ஆறு கோடம்பாக்கம் சீலை எடுத்தார்…அதுபோக செட்டியார் ராஜதுரை சொல்லி இருந்தபடி ஒரு ரோல் வெள்ளை சட்டை துணி ஆண்களுக்கு… கட்டம் போட்ட சட்டை துணி ஒரு ரோல் பிள்ளைகளுக்கும் எடுத்து வைத்தார்.

பிறகு 8 முழ வேட்டி ஆறும்… நாலு முழ வேட்டி ஆறும் …12 துண்டும் ..என எல்லாவற்றையும் எடுத்து வைத்து  ஒரு நோட்டு புத்தகத்தில் கணக்கை எழுதிக் கொண்டார்.

“அப்படியே செட்டியார்..  கிருஷ்ணபிள்ளை டய்லர் உங்க வீட்டு பக்கத்துல தான் இருக்காருல்ல.. அவர வர சொல்லும்.. இவக எல்லாருக்கும் ஜம்பர் தைக்கனும். பிள்ளைகளுக்கெல்லாம் டவுசர் சட்டை தைக்கனும் ..பேத்திகளுக்கு பாவாடை தைக்கனும் “

அம்மாவின் பேச்சு கடைக்குட்டி மகன் கனகுவின் காதில் விழுந்தது. வருஷா வருஷம் இந்த கிருஷ்ணர் பிள்ளை டைலரு கடைக்கு அலைஞ்சே அவன் கால் தேஞ்சுடும். ஆனால் அம்மாவின் அபிமானம் அவர் பெயரில் இருந்ததால் அவர்களுக்கு ஆஸ்தான டெய்லர் கிருஷ்ண பிள்ளை தான்.

லஷ்மி அம்மா அவரிடம் சொல்லும்  விஷயம் “வளரக்கூடிய பிள்ளைங்க நல்ல பெருசா தைச்சிடுங்க”ன்னு… அவரும் வஞ்சகம் இல்லாமல் இருக்கும்  துணியை கூறும் அளவுக்கு மேலேயே நாலஞ்சு இன்ச் வச்சு தைத்து விடுவார். அது அதற்கு அடுத்த வருடம் தீபாவளிக்கு ஒரளவு சரியாக இருக்கும்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்க வீடு பரபரப்பை அப்பிக் கொண்டது.. பரணியில் இருந்த பெரிய டவ்வியை கீழே  இறக்கி பலகாரம் செய்ய ரெடியாயானார்கள். மூத்தவரும், அடுத்தவரும் பட்டணத்துக்கு தங்கைகளுக்கு பண்டம், பலகாரம், துணிமணிகள் கொடுக்க கிளம்பி போயிருந்தனர்.

“சமையலை எளிதா செய்ங்க.. ஒரு தேங்காய் துவையல் அரைச்சு வச்சுட்டு, இன்னைக்கு முறுக்கு சுத்திடுவோம்” என்று லஷ்மி அம்மா சொல்ல, ஒரு பக்கம் கை முறுக்கு செய்ய ஆரம்பித்தார்கள்..லட்சுமி அம்மாவும், தனமும், முறுக்கு சுத்துவதில் கெட்டிக்காரர்கள். அவர்கள் இருவரும் முறுக்கு சுத்த,  கமலமும்,  வசந்தியும் வெந்தெடுத்தார்கள் …ராசம் சமையல் வேலைகளையும், பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுப்பது போன்ற வேலைகளை பார்த்துக் கொண்டாள்.

வேலையாட்கள் அன்னம், பேச்சி ரெண்டு பேரும் மாலாடு..ரவாலாடு… செய்ய உரலில், பொரி கடலை, சீனி, ரவை எல்லாவற்றையும் உரலில் இடித்து, சலித்து வைத்தார்கள். புறவாசலில் வெளியே இருந்த ஒரு பெரிய கூடத்தில் பலகாரம் செய்து கொண்டிருக்க, ராசம் வீட்டுக்குள் இருந்த  அடுப்பில் ..நல்ல பசும்  வெண்ணையை காய்ச்சி நெய்யாக்கினாள்.மாலாடு ரவா லாடு பிடிக்க, “ராசம்.. அப்படியே ஒரு பிடி முருங்கை கீரையை மோர்ல நனைச்சு போடு.. அப்பத்தான் நெய் நல்ல வாசமா இருக்கும்” என்று குரல் கொடுத்தார் லட்சுமி அம்மா.

மறுநாள் தட்டை, அவரைக்காய் பலகாரம், மிச்சர் என்று தினம் ஒரு பலகாரமாக வீடே எண்ணெய்யும், நெய்யுமாக மணத்தது. தீபாவளிக்கு சுட இட்லிக்கு  ஒரு நாலு படி அரிசி வீட்டின் பின்புறம் இருந்த மூன்று உரல்களில் அரைத்து வைத்தனர். அன்னம் பேச்சி இருவரும் தலா ஒரு கிலோ பருப்பை ஊறவைத்து ஆமவடை, உளுந்த வடைக்கு அரைத்தெடுத்து வைத்தனர்.

விடிந்தால் தீபாவளி…  இரவு  பேருக்கு படுத்து எழுந்து விட்டு ..பலகாரம் செய்ய ஆரம்பித்தனர் ..சுசியம் ஆமவடை உளுந்த வடை எல்லாம் ஒரு பெரிய பானை நிறைய தனமும், வசந்தியும் சுட்டெடுக்க …ராசமும், கமலமும் நாலு பக்கா  மாவையும் பிள்ளைகளுக்கு மட்டும் ஒரு சட்டி மாவு எடுத்து வைத்துக் கொண்டு மீதியைப் பூராவும் இட்லி ஊத்தி ஒரு பெரிய குத்து போனியில் எடுத்து வைத்தனர்.

“இட்லிக்கு ரெண்டு தேங்கா சட்னி அரைச்சா சரியா இருக்கும்ல அத்த …”

“25 பச்சை மிளகா.. ஒரு எலுமிச்சை அளவுக்கு புளி..கை பிடி உப்பு ..ரெண்டு தேங்காய துருவி எல்லாத்தையும் லேசா ஒரு இருப்பு சட்டியில ஒரு பிரட்டு பிரட்டிட்டு ஆட்டுரல்ல அன்னத்த  அரைக்கச் சொல்லு….வாக்கா எண்ணெய் விட்டு தாளிச்சு எடுத்து வச்சா ராத்திரி வரைக்கும் சுள்ளுன்னு இருக்கும்… சட்னி கெட்டுப் போகாது” என்றார் லட்சுமி அம்மா…

விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் பிள்ளைகள் மத்தாப்பு போட ஆரம்பிக்க, எல்லோரையும் இழுத்துப் பிடித்து நல்லெண்ணெயில் சீரகம் மிளகு போட்டு காய்சி எடுத்து அதை வெள்ளி கிண்ணத்தில் வைத்து பெரியவராய் லட்சுமி அம்மா எல்லோருக்கும் ஒரு கை எண்ணெய் வைத்து விட, எல்லோரும் எண்ணெய் குளியலை முடித்தனர்.

சாமி கும்பிட்டு விட்டு ..புதுசை கட்டி கொண்டனர். பின் எல்லோரும் லட்சுமி அம்மாவிடம் விபூதி பூசி கொண்டனர். பின்னர் அம்மா கொடுத்த பலகாரத்தை எடுத்துக்கொண்டு தாய்மாமா மூவர் வீட்டுக்கும்… மற்றும் சித்தப்பா அத்தை இருவர் வீட்டுக்கும் போய் கொடுத்துவிட்டு,  ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர்.

“என்னங்க இன்னும் எந்திரிக்கலையா மணி பாருங்க” என்ற தனத்தின் குரலில்  ராஜதுரை கண் விழித்தார்.

தீபாவளி கொண்டாட்டம் பூரா கனவிலா அந்த காலத்து தீபாவளி நினைவை நிறைக்க… மனம் பூரா ஒரு சந்தோஷமும் குதுகலமும் தொத்திக் கொண்டது.

“என்னங்க நம்ம பேத்தி  நிஷாவோட  தலை தீபாவளி. அரவிந்த் இன்னைக்கே வர சொல்லிட்டான் ..சீக்கிரம் கிளம்புங்க” என்றாள்

அவர்களை வரவேற்றனர் மகன்  அரவிந்த்தும் ..மருமகள் தீபாவும் …பேத்தி நிஷா..அவள் புருஷன் விக்ரம் ஆச்சி தாத்தாவின் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணிக் கொண்டார்கள்.

“என்னம்மா தீபா..  தீபாவளி பலகாரம் எல்லாம் சம்பந்தி வீட்டுக்கு கொடுத்து விட்டாச்சா ?” தனம் மெதுவாக மருமகளிடம் கேட்க ..

“அத்தை எல்லாமே ஆர்டர் கொடுத்துட்டோம் … ஸ்வீட் பாக்ஸ் இருபது  கொண்டு போய் கொடுத்துட்டோம், இவங்க ரெண்டு பேருக்கும் டிரஸ்க்கு பணமா கொடுத்துட்டோம் .அவங்க ரெடிமேட் டிரஸ் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிட்டாங்க, தீபாவளி  காலைக்கு டிபன், மத்தியானம் சாப்பாடு, எல்லாமே ஸ்விகில ஆர்டர் போட்டுடலாம்… பேருக்கு வீட்ல  கேசரியும், கொஞ்சம் பஜ்ஜியும் பண்ண போறேன் அத வச்சு பூஜை பண்ணிக்கலாம்” என்றாள் கூலாக தீபா.

“சம்பந்தி வீட்ல வந்து சாப்பிட்டு கிளம்பிடுவாங்க.  சாயங்காலம் ஷோக்கு இந்த பிள்ளைங்க தீபாவளி ரிலீஸ் படத்திற்கு எல்லோருக்கும்  டிக்கெட் போட்டு இருக்காங்க,,,”

“எம்மா தலை தீபாவளியே கோயிலுக்கு போக வேண்டாமா?” என்றாள் தனம்.

“ஏம்மா காலத்துக்கு ஏத்த கோலம்… உன் காலத்தை நினைச்சுகிட்டு பேசாத…நீ வேணா கோவிலுக்கு போயிட்டு வா  ..ஒரு நாள் கிடைக்குது அந்த பிள்ளைங்களுக்கு.. இஷ்டபடி சந்தோஷமா லீவ ஸ்பென்ட் பண்ணட்டும் ..”

தனியாக இருக்கும்போது ராஜதுரை மனைவியின் வாடிப்போன முகத்தைப் பார்த்து, “தனம் காலம் மாறிப்போச்சு. இப்போ சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் தீபாவளில கிடையாது.. கோலாகலம் கொண்டாட்டம் தான். உன்னையும் என்னையும் தவிர எல்லாம் ஆன்லைன்ல கிடைக்கிறது ..அதனால அவங்களுக்கு எதுக்கும் டென்ஷன் கிடையாது. சாஸ்திர சம்பிரதாய தீபாவளி ..உறவுகளோடு சேர்ந்து எவ்வளவு சந்தோஷமா குதூகலமா கொண்டாடினோம். எதிலுமே ஒரு த்ரில் இருந்தது ..வீட்ல செஞ்ச பலகாரம கடைசி வரை தீபாவளி துணி கைக்கு வருமா என்கிற திரில்.. விடியற்காலையிலேயே எழுந்து பட்டாசு …ம்ம்ம்”

எழுந்த நினைவுகளை மனதிற்குள்ளேயே போட்டு பூட்டிவிட்டு சிரித்துக் கொண்டே. தீபாவளியை கொண்டாட ரெடியானாள்

தனம். ஏதாவது சொன்னால் பிள்ளைகளுக்கு பிடிக்காது என்று தெரியும்.  தீபாவளி காலை நிதானமாக எழுந்தனர் பிள்ளைகள்… காலிங்பெல் அடிக்க ஸ்விகி பையன் வெளியே நின்று இருந்தால் பெரிய பார்சலோடு…அவ்வளவுதான் தீபாவளி .

டென்ஷன் இல்லாத திரில் இல்லாத தீபாவளி…இந்த ஜோதியில் கலந்தனர் ராஜசேகரும் தனமும்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பஞ்சாபகேசனும் பொன்னியின் செல்வனும் (சிறுகதை) – சுஸ்ரீ

    தார் சாலை மனசு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை