in

நீல வானம் ✈✈✈ சிகாகோ பயண அனுபவம் – வித்யா அருண், சிங்கப்பூர்

சிகாகோ பயண அனுபவம்

ப்ரல் 2019ல் அலுவலக வேலையாக ஒரு பத்து நாட்கள் சிகாகோ செல்ல வேண்டியிருந்தது. சிகாகோ என்று சொல்லப்படும் இந்நகரம், அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்று.

சுவாமி விவேகானந்தர் ஒரு நூற்றாண்டுக்கு முன் பேருரை ஆற்றிய ஊர். காற்றுக்கும் பனிமழைக்கும் பெயர் போன ஊர்.

இந்தக்கட்டுரையில் நான் சென்று வந்த சில இடங்களைத் தான் பார்க்கப் போகிறோம்

சிகாகோ & Great Fire of Chicago

இன்று அமெரிக்காவின் பெருநகரமான சிகாகோ உலகில் பேசப்படுவது, அதன் வானுயர்ந்த கட்டிடங்களுக்காகவும் (Skyscrapers) தான். இந்த நகரம் 1837ஆம் ஆண்டு தான் உருவானது.

ஆனால் 1871இல் எழும்பிய பெருந்தீயில் (Great Fire of Chicago), நகரம் முழுவதும் தீக்கிரையானது.

மீண்டும் உயிர்த்தெழும் சவாலோடு, சிகாகோவின் பலக் கட்டிடங்கள், இரும்பைக் கொண்டு, இயற்கையின் பல சவால்களை எதிர் கொள்ளும் விதமாக கட்டப்பட்டிருக்கின்றன.

கொரோனா காலத்தில் பலருக்கும் வேலை இழப்பு ஏற்படுகிறது. பலவிதமான சிக்கல்கள். பலரும் அவரவர் குடும்பத்தைப்பார்க்க ஏங்குகிறோம். பலருக்கு இறந்த உறவினர்களின் முகத்தைக் கூட பார்க்கமுடியாத சூழல்.

ஆனால் கஷ்டம் யாருக்கு இல்லை என்று ஆறுதல் சொல்வதைப் போல இருக்கிறது சிகாகோவின் வரலாறு.

1930 களில் ஏற்பட்ட பொருளாதார சரிவில் (Great Depression) பலரும் வேலை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்றைய கொரோனோவின் போது எப்படி நலிந்தவருக்கான உதவிக்கரம் நீட்டப்படுகிறதோ, அப்படியான ஒரு நிலை இருந்திருக்கிறது.

அதன் பிறகு ஒரு நல்ல காலம் வந்து சிகாகோ வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. நமக்கும் நல்ல காலம் வரும்!

மிச்சிகன் ஏரி

(Satellite Image: 5 Great Lakes)

இப்போது சிகாகோவில் சில முக்கியமான இடங்களைப் பார்க்கலாம்.

நான் தங்கியிருந்த விடுதிக்கு நான் சென்று சேர்ந்தது நள்ளிரவில். மறுநாள் காலை வின்டர் ஜாக்கெட் அணிந்தும், காதுகளை மறைக்கும் விதமாக சால்வை அணிந்திருந்தும் வாசலுக்கு வந்தால் குளிர் காற்று வெடவெடக்க வைத்தது.

வெயில் நன்றாக அடித்தாலும் குளிர்காற்றின் வேகம் குறையவில்லை. காரணம், உலகின் பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான மிச்சிகன் மிக அருகில் இருந்தது தான்.

உலகின் ஐந்து நன்னீர் பெரு ஏரிகளைப்பற்றி நாம் படித்திருக்கிறோம்.இவை அனைத்தும் வடஅமெரிக்காவிற்கே சொந்தம் 

நீரின்றி அமையாது உலகு என்கிறது குறள்.

தென்னிந்தியாவில் இது போன்ற பெரிய ஏரிகள் இல்லையே என்ற ஏக்கம் வந்தது. ஆண்டு தோறும் காவிரிப்பங்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்திருக்கும். விவசாயிகள் தற்கொலை என்பதற்கே இடமிருந்திருக்காது.

திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக வேலை, சனிக்கிழமை பகல் பொழுது மட்டுமே சுற்றிப் பார்க்க  இருந்தது. ஞாயிறு அதிகாலையில்  நான் திரும்ப வேண்டிய விமானத்திற்காக விமான நிலையம் செல்ல வேண்டும்.

அந்த சனிக்கிழமை காலை நேரம் என்னால் என்றும் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒன்றானது. (மிச்சிகன் ஏரி- Lake Michigan)

வரைபடத்தைப் பார்த்தபடி நடைபாதையில் நடந்து கொண்டே வந்தேன். திடீரென்று நான் சாலை முகப்பிற்கு வந்து விட்டேன். சாலையை கடந்தால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீல நிறமாக கடல் போல விரிந்து என்னை அழைத்தது மிச்சிகன் ஏரி.

தமிழில் பறவை என்ற சொல் எல்லாரும் அறிந்தது.

ஆனால் பரவை என்ற சொல்லுக்கு பொருள் என்ன? பரந்து விரிந்த ஒன்று. அதுவே பரவை. அதனால் கடலை பரவை என்றும் சொல்லலாம்.

என் வரையில் இந்த நீர்ப்பரப்பு பரவை மிச்சிகன்.

இந்த ஏரியின் கரைகள் முழுவதும் அமெரிக்காவிற்குள் இருப்பதால், சரக்கு போக்குவரத்திற்கு இந்த ஏரியை பயன்படுத்துவதும் உண்டு. அதன் கரையோரம் நடக்க நடக்க பிரமிப்பே கூடியது. கொள்ளளவில் இது உலகின் இரண்டாவது பெரிய ஏரி

மறுகரையிலிருந்த கட்டிடங்கள் மட்டுமே நான் இன்னும் உலகில் இருக்கிறேன் என்பதை நினைவுப்படுத்தின.

தன்னை மறந்த மோனம் இங்கு எல்லாருக்கும் சாத்தியம் தான்.

எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், சில ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் வந்திருந்தார். அவரை ஒரு சில வாசக நண்பர்களோடு சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

மனித மனம் பெருவெளியை பார்த்த மாத்திரத்தில் தன்னை மறக்கும் அழகை அவர் சொல்லிக் கொண்டிருந்தார். உண்மை தான்!

மிச்சிகன் ட்ரைல் (Michigan Trail) எனப்படும் நான்கு கிலோ மீட்டர் பாதை மிச்சிகன் ஏரியிலிருந்து மில்லினியம் பார்க் (Millennium Park) வரை நீள்கிறது

என் பின்னால் தெரியும்  வானுயர்ந்த கட்டிடம் சியர்ஸ் டவர் என்று நினைக்கிறேன்.

மில்லினியம் பார்க்

மிச்சிகன் ஏரியின் கரையோரம் நடந்தபடி நடந்து மில்லினியம் பார்க் வரை வந்துவிட்டேன்.

2000ஆம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பது பற்றி உலக அளவில் உற்சாகம் இருந்தது. காரணம் புது ஆயிரமாவது வருடத்தில் அவர்கள் பிறப்பு என்பது மிக தனித்துவமானதாகக் கருதப்பட்டது (Very special- 2K Millennium babies).

அந்த உற்சாகம் சிகாகோவில் அதிகம் தான். அவர்கள் புது ஆயிரமாவது ஆண்டை வரவேற்க, ஒரு பூங்காவை புதிதாகத் திட்டமிட்டார்கள். அதன் பெயர் மில்லினியம் பூங்கா.

திட்டமிட்ட செலவை தாண்டி, திட்டமிட்ட வருடத்தையும் தாண்டி, 475 மில்லியன் டாலர் செலவோடு, 2004ம் ஆண்டில் இந்த பூங்கா திறக்கப்பட்டது.

ஆண்டுக்கு சுமார் 25 மில்லியன் பார்வையாளர்கள், இந்த பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்.

இந்த பூங்கா ஒரு ரயில் நிலையம், ஒரு பெரிய வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றில் மேல் இருப்பதால், உலகின் மிக பெரிய பூங்கா, அதுவும் உயரத்தில் இருப்பது என்ற பெருமையை பெறுகிறது. (World’s Largest roof garden)

இந்த பூங்கா மிகப்பெரியது. இதில் பல பகுதிகள் இருக்கின்றன.

கிரௌன் நீர் ஊற்று என்பதும் அதில் ஒன்று. மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த ஊற்று செயல்படுகிறது. ஒருவர் வாயிலிருந்து துப்புவது போன்ற இந்த அமைப்பில், விளையாட, எல்லாருக்கும் விருப்பமாக இருக்கிறது. நான் சென்றது ஏப்ரலில் என்பதால், இந்த நீரூற்று செயல்பாட்டில் இல்லை.

பீன் (Cloud gate)

பீன் (Cloud gate) என்ற ஒரு சிற்பம் இருக்கிறது.அதில் நான் நீ என்று புகைப்படம் எடுக்க மக்கள் வந்து நிற்கிறார்கள்.

என் தலைக்கு பின்னால் இருக்கும் உருண்டை தான் பீன். இந்த சிற்பத்தை அமைத்தவர் ஒரு பிரிட்டிஷ்-இந்தியர். அவரது பெயர் அனிஷ் கபூர். சுற்றிலும் நல்ல மக்கள் கூட்டம்.

இந்த சிற்பத்தை 2006ஆம் ஆண்டில் தான் முடித்திருக்கிறார்கள். வெளிப்புறம் அப்படியே கண்ணாடி போல அங்கிருக்கும் காட்சியைப் பிரதிபலிக்கிறது. இந்த சிற்பத்தை பாதரசம் போல கற்பனை செய்து வடிவமைத்தாராம். (Liquid Mercury)

இந்தக் காட்சிகளில் லயித்துக்கொண்டே பக்கத்திலிருந்த வழியில் சிகாகோவின் முக்கியப் பகுதிக்கு வந்து விட்டேன்.

டிரம்ப் பெயரில் ஒரு கட்டிடம் இருக்கிறது. அவருடையதா என்று அவரைத்தான் கேட்க வேண்டும்😊 

நடந்து நடந்து கால்கள் சோர்வடைய, உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு , என் மகனுக்கும், கணவருக்கும் துணிகள் வாங்கிக் கொண்டு ஒரு வாடகை வண்டியில் மீண்டும் விடுதிக்கு வந்துவிட்டேன்.

சுட்டெரிக்கிற வெயிலின் எதிர்பதமாக வேறொரு நாளை,சிகாகோவில் இறைவன் எனக்கு மிச்சம் வைத்திருக்கிறார் என்பது தெரியாமல், மூட்டை முடிச்சுகளைக் கட்ட ஆரம்பித்தேன்.

தனியாகப் போகும் போது நம்மையும் அறியாமல் அதிக விழிப்பு நிலையில் இருக்க வேண்டியிருக்கிறது.

எதிர்பாரா திருப்பம்

அதிகாலையில் வாடகை வண்டியில் ஓஹ் ஹேர் விமான நிலையத்திற்கு புறப்பட்டேன். லேசான தூறலோடு மழை. விமான நிலையம் நெருங்க நெருங்க, சிறு சிறு ஐஸ் கட்டிகள் காரின் முன்பகுதியில் விழ ஆரம்பித்தன.

எதிர்பாராத பனிமழை. விமான நிலையம் சென்ற பிறகும் பனிமழை தொடர்ந்தது. சிகாகோவிலிருந்து கனடா அலுவலகம் போய், அங்கிருந்து நான் சிங்கப்பூர் வந்தாக வேண்டும்.

மூன்று நான்கு மணி நேரம் காத்திருந்த பின், நீங்கள் பயணிக்க வேண்டிய விமானம் வரவில்லை. நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.

அமெரிக்காவில் விஷு

நான் வந்திருப்பதைத் தெரிவித்ததால், என் மாமா மகள்  மூன்று நான்கு நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் பேசியிருந்தாள். அவள் வீடு கொஞ்சம் தூரம் என்றாலும், இன்றைய பொழுதை அவளோடு செலவழிக்க ஆசைப்பட்டேன்.

விமான நிலயத்திலிருந்து ஒன்றரை மணி நேரப் பயணத்தில் அவள் வீடு வந்து சேர்ந்தேன். அன்று விஷு.

அவள் வளர்ந்தது திருவனந்தபுரத்தில். இறைவன் சோதித்தாலும் நல்லுணவோடு, மகனின் நினைவில் இருந்த எனக்கு, என் மகன் பெயரிலிருந்த அவள் மகனைக் கொஞ்சும் வாய்ப்பு, என்று அந்த நாளை, நல்ல நாளாக அருளினார்

ஏப்ரல் மாத பின்பகுதியில் அவர்களே எதிர்பாராத பனிப்பொழிவு.

பனி விழும் மலர்வனம், சாலைகள், வீடுகள் என்று எல்லாவற்றையும் கண்டு, மறுநாள் வேகமான வெந்நீரால் ஐஸ் நீக்கப்பட்ட விமானத்தில் என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

நீங்களும் என்னோடு பனியில் நனைந்தீர்களா?

மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம்

(முற்றும்)

#ad

      

        

#ad 

              

          

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆழியின் காதலி ❤ (பகுதி 9) -✍ விபா விஷா

    இமயம் என் இமைக்குள் ❤ (சிறுகதை) -✍அஞ்யுகாஶ்ரீ