in

ஆழியின் காதலி ❤ (பகுதி 9) -✍ விபா விஷா

ஆழியின் காதலி ❤ (பகுதி 9)
சிறுகதைப் போட்டி 2021

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ம்பரத் தீவின் இந்தக் கொடுமையான சாபம் விலக்கி, இந்த மக்களின் வாழ்வினை விளங்கிட வைக்கும் வல்லமை படைத்த பெண் சாமினி தான் என்று அர்னவும் விக்ரமும் எண்ணியிருக்க, சாமினிக்கு முன்பாகவே அந்தப் பெரும் வல்லமை படைத்த பெண் ஒருத்தி இருக்கிறாள் என்று மூப்பர் கூறவும், இருவரும் திகைப்புடன் பார்த்தனர்         

அதிலும் அந்தப் பெண் சமுத்திரா தான் என அறிந்ததும் இருவருக்கும் உலகமே ஸ்தம்பித்தது போல் ஆனது.

அந்தக் கொடூரமானவளா குலம் காக்க வந்தவள்? இது எப்படிச் சாத்தியம் என இருவரும் மூப்பரை கேட்க, விவரத்தினை கூறலானார் அவர் 

“நாங்கள் சாபம் பெற்று ஆயுத ஆண்டுகள் (பதினாயிரம் ஆண்டுகள்) கழிந்தும், எவ்வித மாற்றமும் இன்றி பிறத்தல் இறத்தலும்..  இறத்தல் மீண்டும் பிறத்தலுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த வருடம் இரண்டு, மூன்று பெண்கள் சூலுற்று இருந்தனர். இந்த வருடமாவது எம் இனத்தின் விடிவு பிறக்குமா என எண்ணியிருந்த எங்களுக்கு, அன்று அந்தி கழிந்து நிலமகள் உதிக்கும் நேரத்திற்குச் சற்று முன்பாக, ஒரு குழவியை ஈன்றெடுத்தாள், நித்யமங்கை என்றொருத்தி

அந்தக் குழந்தை மண்ணில் விழுந்தது தான் தாமதம் , எங்கிருந்தோ பறந்தோடி வந்தது வன்னி. எம்மவர் அனைவரும் ஆனந்தத்தில் ஈசா… ஈசா… எனக் கதறி கண்ணீர் மழை பொழிந்தனர். மறுபடியும் இருளும் கவிந்திட எம் அனைவரையும் கடல் ஈர்த்து மச்ச மாந்தராக்கியது.

ஆனால் எம்மவர் அனைவரும், இனி நம் வாழ்வில் ஒளி வந்துவிட்டது என்றெண்ணியே பேருவகைக் கொண்டு கூத்தாடினர். அவளே எம் சிவை (அன்னை பார்வதியின் மற்றொரு பெயர்) என்று உவகைப் பெருக்கில் தாண்டவமாடினர்..

அவளுக்கு யோகினி என்னும் திருப்பெயர் இட்டு வணங்கினோம். அவளுக்குப் பதினெட்டு அகவை முடிந்தது. அன்றோடு அவளுக்கு இத்தீவின் மர்மமெல்லாம் விளக்கிய பின் அவள் காணப்போகும் நூறாவது பௌர்ணமி.

அந்த நூறாவது பௌர்ணமி அன்று அவள் கடல் நடுவினில் இருக்கும் சல லிங்கத்திற்கு வில்வமலர் கொண்டு பூசித்திட, அவளுக்கு எம் இனத்தைக் காக்கும் வல்லமை வந்து விடும். அவள் பிறந்த அதே வேளையில் மனிதனாய் பிறந்த காலகாலன் எம்மிடம் நோக்கி வரும் நாளும் அருகே வந்து விட்டது என்றே அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தோம்.

அந்த நாளும் வந்தது. ஆம் காலகால ரூபனாய்.. ருத்ர தேவனாய் அந்த மானிடனும் வந்தார். அவர் எப்படியோ விதி வசமாய் வழித்தவறிப் போய் இத்தீவினை அடைந்தார். அவரைக் கண்டதுமே உண்மை விளங்கிற்று எமக்கு. அவர் தாம் தேவதேவனின் அம்சமென்று.

பின்பு ஒருவாறு அவரிடம் நடந்ததனைத்தும் விளக்கி, அடுத்து சிவ வழிபாட்டிற்கு உகந்த நாளினையும் குறித்தோம். அதற்கு இன்னும் ஒரு திங்கள் இருந்தது. எனவே அனைவரும் எங்கள் சாபம் விலகிடும் நாளிற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தோம்.

ஒரு திங்கள் கழிந்து அந்த நாளும் வந்தது. நாங்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் ஓம்கார வனத்திற்குச் செல்ல, அங்கு யோகினி எம் தேவனின் அம்சமான அவருடன் அதி பயங்கரப் போர் புரிந்துக் கொண்டிருந்தாள். நாங்கள் என்ன ஏதென்று அருகினில் போய் அறிவதற்கு முன்பாகவே, எங்கள் கண்முன்னே அவர் உயிருடன் இருக்கையிலே.. அவருடைய முதுகுத் தண்டினை உடலிலிருந்து உருவியெடுத்து ‘ஹா ஹா ஹா’ என மிகக் கோரமாய்ச் சிரித்தாள் அவள்.

பின்பு கருங்குளத்திற்கு அருகினில் இருந்த யட்சிணி தேவி கோவிலுக்குச் சென்றவள், அங்கு அவளுடைய கையைக் கீறிய ரத்தத்துடன், அந்த முதுகெலும்பிலிருந்து வடிந்த ரத்தத்தையும் சேர்த்து, அந்தத் தேவிக்கு அபிடேகம் செய்தாள்.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை, சற்று நேரம் அப்படியே இருந்தவள், ‘காளி… ஏன் இன்னும் தாமதம்? ஏன் என் வரத்தினை நிறைவேற்ற நீ இன்னும் வரவில்லை’ என இந்தத் தீவே அதிரும்படி கத்தினாள்.

நாங்கள் அனைவரும் என்ன நடக்கிறது என்பது அறியாமலே ஐயத்துடன் அங்கு நடப்பதைக் கண்ணுற்றோம்.

அவ்விடத்தில் உக்கிர தேவியாகத் தோன்றிய யட்சிணி தேவி.. ‘என் படையலாக யான் எதிர்பார்த்தது உயிருள்ள மானிடனின் ரத்தத்தையே அன்றி, இறந்த பிண்டத்தின் ரத்தமல்ல. ஆதலால் இப்புவியினை உன் காலடியில் கொணர்ந்து, நீ சர்வ வல்லமை கொண்ட சர்வாதிகாரியாக ஆகிடும் உமது விருப்பம் நிறைவேறப் போவதில்லை.

மேலும் இறந்த பிண்டத்தின் ரத்தத்தினைக் கொண்டு என் வாழிடத்தை மாசுபடுத்திய நீ நிரந்தரமாக மச்ச மனிதியாவாய்’ எனவும்

பதறிய யோகினி, யட்சிணி தேவியின் பாதம் பற்றித் ‘தாயே யான் உன்னைத் திருப்தி படுத்தவென்றே இவனின் ரத்தத்தினை உமக்குப் படைத்தோம். என் அறியாமையால் நிகழ்ந்த இப்பிழை பொறுத்து எம்மை இரட்சிப்பாய் அம்மா’ என்று கூற

சற்று மனம் இறங்கிய அந்தத் தேவி, ‘என்று எனக்கு நூறாயிரம் மனிதரின் முதுகெலும்பினைப் படைத்து பலி பூசை செய்து என் சினம் இறக்குகின்றாயோ அன்று மீண்டும் நீ இந்நிலையினை அடைவாய். அதன் பின்பே அந்த முக்கண்ணோன் மறுஉருவான ருத்ர தேவனின் துணை கொண்டு, உன் ரத்தமும் அவன் ரத்தமும் சேர்த்து எனக்கு அபிடேகம் செய்திட, நீ விரும்பியது போலவே இப்புவிக்கு நீயே சர்வாதிகாரி ஆகி, முப்பத்து முக்கோடி தேவரும் உன் பாதம் பணிந்திட, ஈரேழ் உலகும் நீ காலால் இட்ட பணியைத் தலையால் செய்திட துடிக்கும் உன்னத நிலையினை அடைவாய். அதுவரை என் சாபம் உன்னை அடைந்தே தீரும்’ எனக் கூறி மறைந்தாள்

அதற்குப் பின்னரே எங்களுக்கு யோகினியின் உண்மை ரூபம் தெரிந்தது. அவுணர் (அசுரர்) குணம் கொண்டு இந்த ஞாலமே அவள் திருவடியினைத் தொழுதிடும் வரம் வாங்க விழைகிறாள் என்று

அன்று முதல் அவளே அவளுக்கு இட்டுக் கொண்ட பெயர் தான் சமுத்திரா. அவள் கையிலிருக்கும் ஆயுதம் வேறொன்றுமெல்ல, உங்களுக்கு முன் வந்த அந்த ருத்ரதேவனின் முதுகெலும்பு தான். அது தான் பல்வேறு அதர்வண யாகங்களுக்குப் பின்பு இந்திராயுதமாக அவள் ககரத்தில் இருக்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. உம்மை அவளாலும், அவளை உம்மாலும் மட்டுமே அழித்திடவியலும். அது போலவே தான் சாமினியும். அவள் சாபம் பெற்று நூறாயிரம் ஆண்டுகள் சென்ற பின்பு, ஒரு சிவராத்திரி அன்று வெய்யோன் தனது கரம் கொண்டு இந்தப் புவனம் நிறைக்கின்ற வேளையில் உதித்தவள்

அதன் பின்பு யோகினி முழுதாக மச்சமாகச் சபிக்கப்பட்ட அன்று, அவளுக்கு அரணாய் நின்றிருந்த வன்னியும் காற்றோடு கரைந்து போனது. அது மீண்டும் சாமினியின் பிறப்பின் போது தான் வந்தது” என மூப்பர் கூறி முடிக்கவும், இளந்திரையன் தொடர்ந்தார்..

“ஆனால் சில காலங்களிலேயே அந்த யோகினியின் ஆட்டம் தாங்க முடியாது போயிற்று. அவள் வேண்டுமென்றே, அப்பொழுது தான் பிறந்த சிறு குழந்தைகளைக் கவர்ந்து செல்வதும், தனியே கடலினுள் செல்பவர்களைக் கொன்று குவிப்பதுமாய், மிகுந்த ஆங்காரம் பிடித்த அரக்கியாய் மாறினாள்.

அவளது கொட்டத்தினை அடக்கவே நம் மூப்பர் மிகுந்த யோக சாதனங்களைக் கைகொண்டு, ஊசிமுனை தவம் மேற்கொண்டு, அவளை அழிக்கவியலும் ஒரு வாளினை ஈசனிடமிருந்து வரமாய்ப் பெற்றார். அந்த யோகங்கள் மூலமே தனது சாபம் நீங்கப் பெற்று, இவர் மனித நிலை அடைந்து முக்தி நிலை எட்டவிருக்கிறார்” என்று கூறவும்

“ஐயா அப்படின்னா நீங்களும் எங்களை மாதிரி மனிதனாகிட்டீங்களா? அப்ப உங்கள மாதிரி எல்லாரும் யோகம் செஞ்சு மனுஷனாகிடலாமே?” என விக்ரம் கேட்க 

மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தவர், “பிறக்கும் எல்லா உயிரும் சித்தம் அடைந்திட இயலாது மகனே. அதற்கென அவர்கள் பிறக்கும் நேரமும், காலமும், வாழும் முறைமையும், முற்பிறவி வினையும் நன்றாய் அமைந்திட வேண்டும். அது அந்த ஈசனின் அருளினால் இந்த அடியேனுக்கும் வாய்க்கப் பெற்றது.

எனக்குப் பிறகு, நம் எல்லாளன் இருக்கிறாரே, அவர் தான் அது போன்ற யோகமுறைகளைக் கைகொள்ளத் துணிந்தவர். இன்னும் சிறிது காலமே, அதற்குள் அவரும் என் நிலையினை அடைந்து விடுவார்” என்று கூறியதும், மகிழ்வுற்ற எல்லாளன் சட்டென மூப்பரின் பாதம் பணிந்தான்

“அப்ப அந்த வாள் எங்க இருக்கு? ஏன் நீங்க அத வச்சு அவளை அழிக்கல?” என்று கேட்டான் அர்னவ்

“அந்த வாள் இப்பொழுது சாமினியிடம் தான் இருக்கிறது. அதன் உதவியினால் தான், சாமினியுடன் எல்லாளனும், கயாவும் வந்து, அன்று முதல் நாள் உங்களிருவரையும் சமுத்திராவிடமிருந்து காப்பாற்றி அழைத்து வந்தது”

இவ்வாறு அவர் சொல்லி முடிக்கவும், அங்கு அந்தப் பறக்கும் வெண்புரவி வந்தது. இப்பொழுது அனைத்து உண்மையும் அறிந்து கொண்ட பிறகு, சாமினியைக் காண ஆவல் பெருகிற்று அர்னவிற்கு.

ஏனெனில் ஒரு கூட்டமே, அவர்கள் சாபம் பெற்றவராயிருப்பினும், தேவர்களுக்கு ஒப்பானவர்கள். அப்படிப்பட்டவர்கள் வணங்கிடும் நிலையிலிருக்கும் ஒரு பெண், மனதில் எவ்வித கர்வமுமின்றித் தன் மக்கள் தன் குடி என, ஒரு தாய் தனது குழந்தை மேல் கொண்டிருக்கும் பாசம் போல, இவள் இம்மக்களின் மீது பேரன்பு பொழிகிறாள்

தூரத்திலிருந்து அவள் அந்தப் புரவியின் மேல் பறந்து வரும் லாவகம் கண்டு லயித்தது போய் நின்றிருந்த அனைவரும், அவள் அவர்களுக்கருகில் வர, திகைத்து பயந்து ஈரெட்டு பின்னடைந்தனர்.

ஏனெனில் அந்தப் புரவியில் வந்திறங்கியது… யோகினி. 

ஆம்.. அந்தச் சமுத்திரா தான்.

அங்கிந்த அனைவரும் அவளைக் கண்டு பயத்தினால் உறைந்து நிற்க, எல்லோரையும் தனது கீழ்கண்ணினால் மிகுந்த அலட்சியத்துடன் நோக்கினாள் அவள்

இறுதியாக அவளது பார்வை அர்னவிடம் வந்து நின்றது.

அவளைக் கண்ட மூப்பர், “யோகினி.. நீ.. நீ.. எவ்வாறு மீண்டும் இந்நிலை அடைந்தாய்?” என்று வினவியதும், 

பார்வையை அர்னவிடமிருந்து திருப்பக் கூட இல்லாமல், “என்ன கயாகரா… என்னை இப்படிக் காண்கையில் உவகைக் கொள்ளுவாய் என நினைத்தேன். அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? உமக்கு நினைவில்லையோ? நூறாயிரம் மனிதத் தலை கொய்து அவன் முதுகெலும்பு உருவி எம் அன்னை யட்சிணி தேவியின் திருப்பாதங்களுக் சமர்ப்பித்திட, நானும் உம்மைப் போலவே என் பழைய நிலைய வந்தடைவேன் என எனக்கு விமோசனம் பகின்றாளல்லவா? அந்த நூறாயிரக் கணக்கு நேற்றைய பௌர்ணமியுடன் தான் முற்றுப் பெற்றது.

இது யார்… இரண்டு புது வரவுகள்? ஓ.. அன்று என்னிடமிருந்து உம் சிவை… அது தான் அந்தச் சாமினியால் காப்பாற்றப்பட்டவர்களோ? ஆகா.. மீண்டும் வந்து விட்டானா? ருத்ர… தேவன்..” என்று கூறி, அர்னவின் கழுத்தில் தனது இந்திராயுதத்தை வைத்து சற்று அழுத்தினாள் சமுத்திரா.

“அது.. அது.. இவர் தான் ருத்ர தேவனென்று நீ எவ்வாறு அறிவாய்?” எனச் சற்று பதட்டத்துடன் மூப்பர் வினவ

“தன் பலி யாரென்று அந்த யட்சிணி அறிய மாட்டாளா என்ன” என்று சமுத்திரா கூற, எங்கிருந்து தான் அர்னவிற்கு அவ்வளவு தைரியம் வந்ததோ தெரியவில்லை

“ஏய் வாய மூடு.. அவர் எவ்ளோ பெரிய துறவி? அவரைப் போய் பேர் சொல்லி கூப்பிடற மரியாதை இல்லாம? அது சரி உன்னையே நம்பி இருந்த மக்களை இப்படித் துரோகம் செஞ்சு ஏமாத்தினவ நீ, உன்கிட்ட இந்த மாதிரி நல்ல குணங்கள் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா? ச்சே.. நீயெல்லாம் ஒரு பொண்ணு? ஆனா நீ எத்தனை முயற்சி செஞ்சாலும், என்னையோ இந்த மக்களையோ உன்னால எதுவும் பண்ண முடியாது. நல்லா ஞாபகம் வச்சுக்கோ, என் கையாலதான் உன் அழிவு” என வெறுப்புடன் கூறினான்

“ஓ… உமக்கு எம்மைப் பார்த்தால் பெண்ணினத்தைச் சேர்ந்தவளைப் போலத் தெரியவில்லையோ? ஒருவேளை தாயுள்ளம் கொண்ட அந்தச் சாமினியைப் பார்த்தாள் உமது விழிகள் பெண்ணென்று ஏற்குமோ?” என வஞ்சமாகச் சிரித்து விட்டு மேலும் கூறினாள்

“ஹ்ம்ம்.. எம்மிடம் எவரும் தன் நெஞ்சம் நிமிர்ந்து ஒரு வார்த்தையும் உதிர்க்கக் கூடாது. உமது முதுகு வளைந்து, கூனி, பணிந்து உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஐயம் நிறைந்திருக்க வேண்டும். மீறினால், நிமிர்ந்து நிற்கும் உன் முதுகுத் தண்டு உன்னைப் பிரிந்து என் கரம் சேரும்” என சமுத்திரா கூற, அதே நேரம் அங்குப் புயலென விரைந்து வந்தது சாமினியின் புரவி

வந்த வேகத்திலேயே அர்னவின் கழுத்து மீதிருந்த சமுத்திராவின் இந்திராயுதத்தினைத் தனது கையிலிருந்த ருத்ரவாளினால் தட்டிவிட்டு விட்டாள் 

பின் கோபத்துடன், “உன் முன் யாரும் நெஞ்சம் நிமிர்த்தக் கூடாதா? எம் ருத்ர தேவனின் பாதம் பணியும் தகுதி கூட இல்லாதவள் வாயிலிருந்து உதிரும் வார்த்தைகள் மிகவும் ஆணவத்துடன் விழுகின்றனவே? நம்பியவரின் புறம் குத்தி உயிர் பறித்து அந்த ரத்தத்தினை உண்டு வாழும் சுயநலப் பிண்டத்திற்கே இத்துணை இறுமாப்பு இருக்குமெனில், எம் இனத்தினையே காக்க ருத்ரனாய் வந்திருக்கும் எம் நீறணிக் கடவுளுக்கு எத்துணைக் கர்வம் இருக்க வேண்டும்?

ஆனால் அதையெல்லாம் கலைந்தவர் தான் கடவுளாக உயர முடியும். அது எங்கே உமக்குப் புரியப் போகிறது? ஆனால் என்னே உன் அறியாமை? நீலகண்டனின் கண்டத்திலேயே கட்கம் வைத்திட எவ்வளவு துணிச்சல் உமக்கு?” என கூறியவாறு, மிகுந்த ரௌத்திரத்துடன் சமுத்திராவின் கழுத்தினில் ருத்ர வாளினை இறக்கினாள் சாமினி.

மனதிலுள்ள வன்மமெல்லாம் ஒருங்கே சேர, தான் இறைவனைப் போல வழிபடும் ஒருவனின் கழுத்தினில் வஞ்சம் கொண்டு சமுத்ரா வாள் வைத்திட, சினம் தலைக்கேறி சாமினி சமுத்திராவின் கழுத்தினில் தனது வாளினை இறக்கினாள்

அப்பொழுது காற்றும் நின்றது.. கடல் அலையும் நின்றது… அலையினுள் வந்து புரளும் நுரையும் நின்றது… விண்ணில் பிறந்து மண்ணில் விழுந்த மாரித் துளியும் சட்டென நின்றது..

சுற்றி இருந்த மக்களனைவரும் சிலையென நின்றனர்.. பட்சிகள் ஒலியும் கேட்கவில்லை, பறந்து வந்த புரவியின் ஒலியும் கேட்கவில்லை

சிவந்து நின்ற சிவையின் சினமும் மற்றவர் சிந்தை சேரவில்லை. அத்துணை நிசப்தத்தையும் கீறி.. மீறி ஒலித்தது, ஒருத்தியின் ஓலம்.. அது மரண ஓலமல்ல. மாறாக, அது ஏளன ஓலம்.

“ஹா.. ஹா.. ஹா… சாமினி ஆத்திரத்தில் உமதறிவு கூட நிதானத்தை இழக்குமா என்ன? ஆகா… இளந்திரையனின் தவப்புதல்வி, கயாகரன் கைதொழும் தேவதை, மய குலத்தையே இரட்சிக்க வந்திருக்கும் சிவை.. பொறுமையின் பிறப்பிடம், தாய்மையின் தனி இடம்.. அப்படிப்பட்ட அதிரூப சுந்தரி.. அலங்கார மோஹினி, எம்மைக்கண்டு பதறி.. இருக்கும் சிறு மதியும் சிதறி.. என் கண்டத்திலேயே கட்கம் இறக்குகிறாயா?

நான் என்ன உன் ஒற்றைக் கரத்தால் பற்றிக் கொள்ளும் திருக்கை மீனென நினைத்தாயோ? நான் சமுத்திரா.. என் முன் தலை நிமிர்ந்து நிற்பவரின் தலையையே ஒரே வீச்சில் அறுத்து என் பாதம் பணிய வைப்பேன். நீயோ கடகம் கொண்டு என் கண்டம் தொட்டாயா? உன்னை…” என கூறி, மின்னலென விரைந்து சாமினியின் கரத்திலிருந்த ருத்ர வாளினை தன் கரங்களாலேயே பற்றித் தூர எரிந்து விட்டு… இடது கரத்தால் சாமினியின் குரல்வளையைப் பற்றி இருந்தாள்.

சாமினியைக் காப்பாற்றப் போன அர்னவையும் தடுத்து, அவனது குரல் வளையையும் தனது வலது கரத்தினால் பற்றி விட்டாள்.

(தொடரும்)

#ad

      

        

#ad 

              

          

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாசத்தின் விலை❤ (சிறுகதை) -✍ பானுமதி பார்த்தசாரதி

    நீல வானம் ✈✈✈ சிகாகோ பயண அனுபவம் – வித்யா அருண், சிங்கப்பூர்