in

பாசத்தின் விலை❤ (சிறுகதை) -✍ பானுமதி பார்த்தசாரதி

பாசத்தின் விலை❤ (சிறுகதை)

“சென்னை போக டிக்கட் வாங்கிட்டீங்களா? ஆபீஸ்ல லீவ் சொல்லிட்டீங்களா?” என ஆர்வத்துடன் கேட்டாள் சரண்யா

“இல்ல” என்றான் ஸ்ரீதர்

“அம்மாக்கு உடம்பு ரொம்ப மோசமா இருக்கு உடனே வா’னு அப்பா போன்ல சொன்னாரே, நீங்க என்ன இவ்ளோ கேர்லஸ்ஸா பதில் சொல்றீங்க?” என்றாள் புரியாமல்

“இப்ப அமெரிக்கால H1B விசால வேலை செய்யறவங்க சொந்த நாட்டுக்கு போனா திரும்பி இங்க வர முடியாதுனு என் ஆபீஸில எல்லாரும் சொல்றாங்க. அதான் யோசிச்சுட்டு இருக்கேன்” என்றான்

“நல்ல கதையா இருக்கே, பெத்த தாய் முக்கியமா, அமெரிக்கால இருக்கிறது முக்கியமா? இப்ப தான இங்க வந்து நாலு வருசமாச்சு. அதுக்கு முன்னாடி சென்னைல இருந்தப்ப பட்டினியா கிடந்தோம்? ரொம்ப ஸெல்பிஷ் நீங்க” என்றாள் கோபமாய்

“நாம திரும்பி வர விசா கிடைக்கலைனா?” என்றான் ஸ்ரீதர் கவலையாய்

“அதனால நாம் ஒன்றும் தெருவுல நிக்க மாட்டோம். கெடச்சா கஞ்சித் தண்ணி, கெடைக்காட்டா கொழாத் தண்ணி” என பழைய சினிமாப் பாடலைப் பாடினாள்

“ரொம்ப கொழுப்பு தான் உனக்கு. எனக்கு ஒரு விஷயம் புரியல, மாமியாரும் மருமகளும் இந்தியால ஒண்ணா இருந்தப்ப தினம் ஒரு சண்டை போடுவீங்க, சென்னையிலிருந்து அமெரிக்கா வந்தவுடன் வெள்ளைப்புறா பறக்குதே, அது எப்படி?” என்றான் ஆச்சர்யமாக.

“அதெல்லாம் இன்டர்னல் பாலிட்டிக்ஸ். உங்களுக்குப் புரியாது” என சிரித்தாள் சரண்யா

 

சிறுகதைப் போட்டி 2021

ரண்யா சொன்னபடி ஏதோ ஒரு தைரியத்தில் மேல் அதிகாரிகளிடம் நிலைமையை விவரித்து விடுமுறைக்கும் விண்ணப்பித்து விட்டான் ஸ்ரீதர்

நெவார்க் (Newark) விமான நிலையத்தில் இருந்து கிளம்பி, குடும்பத்துடன் சென்னை வந்து சேர்ந்தான்

வந்த பிறகு தான் நிலமையின் தீவிரம் அவனுக்குப் புரிந்தது.

இருபது வருடங்களாக சர்க்கரை வியாதியில் கஷ்டப்பட்ட அவன் அம்மாவின் இரண்டு சிறு நீரகங்களும் முற்றிலும் பழுதுபட்டு டயாலிஸிஸ் செய்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள்.

நல்லவேளையாக மேலும் தாமதிக்காமல் வந்து சேர்ந்தோம் என்று நினைத்துக் கொண்டான் ஸ்ரீதர்.

மறுவாரமே அவன் தாய் போய் சேர்ந்து விட்டாள். மூத்த மகன் என்ற முறையில், ஸ்ரீதர் தான் தன் தாய்க்கு செய்ய வேண்டிய எல்லா இறுதிச் சடங்குகளும் செய்தான்

அப்பா தான் மிகவும் நொந்து கவலையாக இருந்தார். வீடு மிகவும் மாறி இருந்தது. அம்மாவிற்கு முன், அம்மாவிற்குப் பின் என சொல்லும்படி இருந்தது.

ஸ்ரீதரின் தம்பி முரளிதரன், அப்பாவின் செல்லப்பிள்ளை. அவனுக்கு ஸ்ரீதரின் தாய் மாமாவின் பெண், மஞ்சரி தான் மனைவி. சரண்யா அத்தை மகள். இருவருக்கும் அவ்வளவாக ஒத்துப் போவதில்லை.

ஆனால் அம்மா கண்மூடித்தனமாக மஞ்சரி பக்கம் தான் பேசுவாள், தன் பிறந்த வீட்டு சொந்த என்பதால்

அப்படி இருந்த மஞ்சரி, ஏன் அம்மா மருத்துவ மனையில் இருக்கும் போது சரியாக கவனிக்காதது போல் இருந்தாள் என்று புரியவில்லை ஸ்ரீதருக்கு

அம்மாவும் எப்போதும் சரண்யாவிடமே பேசிக் கொண்டிருந்தார். அடிக்கடி சரண்யாவின் கைகளைப் பிடித்துக் கொள்வார்.

முரளி இப்போது தனிக்குடித்தனம் போய் விட்டிருக்கிறான். இதெல்லாம் பார்க்கப் பார்க்க ஸ்ரீதருக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

முரளியின் குழந்தையுடன் ஸ்ரீதரின் குழந்தைகள் மிகப் பிரியமாக விளையாடினார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது தான், நிறைய சந்தோஷமான தருணங்களை இழந்து விட்டோமோ என நினைத்தான் ஸ்ரீதர்

எல்லோரும் ஒன்றாக ஒரே குடும்பமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினான் . தன் எண்ணங்களை முரளியிடம் சொன்னான்.

ஆனால் முரளியும் முன் போல் இல்லை, மஞ்சரியிடம் கேட்க வேண்டும் என்றான். இந்த நேரத்தில் ஸ்ரீதரின் அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. அமெரிக்கா வேலையும் போயிற்று.

ஸ்ரீதருக்கு அதெல்லாம் கூட வருத்தமாக இல்லை. மஞ்சரி கூறிய வார்த்தைகள் தான் நெஞ்சில் முள்ளாய்க் குத்தின.

“பெரிய அத்தான், இதெல்லாம் நினைத்துத்தான் எல்லோகும் ஒரே குடும்பமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார் போலும்” என்று கூறி விட்டு கேலியாக சிரித்தாள். சரண்யா மௌனமாக தன் கணவனைப் பார்த்தாள்.

அம்மாவின் பதினாறாம் நாள் காரியங்கள் முடிந்த கையோடு, தங்கள் வீட்டுக்கு சென்று விட்டனர் முரளியும் மஞ்சரியும். அப்பா பரப்பிரம்மமாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்.

நல்லவேளையாக சரண்யா கொஞ்சம் அனுசரித்து அமைதியாகப் போகும் ரகம். அப்பாவையும் அக்கறையாகக் கவனித்துக் கொண்டாள்.

அமெரிக்கா வங்கியின் சேமிப்பும் கரைந்து கொண்டே வந்தது. இங்கேயும் ஸ்ரீதரின் படிப்பிற்குத் தகுந்த வேலை கிடைக்கவில்லை. கையிருப்பு முழுவதும் கரைந்து அடுத்தவரிடம் கையேந்தும் நிலை வரக் கூடாதென்று, உடனே கால் டாக்ஸி டிரைவராகப் போய் வேலையில் சேர்ந்தான்

ருநாள் சரண்யா ஸ்ரீதரிடன் ஒரு கவரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“சரண்யா, என்ன கவர் இது?” என ஸ்ரீதர் கேட்க

“வேலைக்கான இன்டர்வியூ” என்றாள் சரண்யா

“நீ எப்ப அப்ளை செஞ்ச? என்கிட்ட சொல்லவே இல்லையே?” என்றான் சற்றே வருத்தமாய்

“நாம் அமெரிக்காவிலிருந்து கிளம்பும் போது, திரும்பி வர விசா கிடைக்கிறது கஷ்டம், சென்னைலயும் உடனே வேலை கிடைக்காதுனு சொன்னீங்க இல்லையா. நான் படிச்சா படிப்புக்கு ஏதாவது அப்ளை செய்து பார்க்கலாம்னு தான் ஆன்லைன்ல அப்ளை செஞ்சேன். நானும் தான் பயோ- கெமிஸ்ட்ரி படிச்சுருக்கேனே. நீங்க தான என்னை அங்க படிக்க வெச்சீங்க. நீங்க குடுத்த கல்வி உங்க கஷ்டத்திற்கு உதவட்டுமேனு தான்… ஏன் என் மேல் கோபமா?” என யோசனையுடன் கேட்டாள் சரண்யா

“ஹ்ம்ம்… இப்படி ஒரு மருமகள், அப்படி ஒரு மருமகள். அஞ்சு விரல்களும் ஒண்ணா இருக்கறதில்ல. இதுல யோசிக்க என்னம்மா இருக்கு? கஷ்டத்தில் கை கொடுப்பவள் தான் மனைவி. பாரதியாரே, காதல் கணவனை கைபிடித்து, அவன் காரியம் யாவினும் கை கொடுத்துனு பாடலயா?” என்றார் ஸ்ரீதரின் அப்பா மெல்லிய சிரிப்புடன்

அப்பா அவருடைய பென்ஷன் பணத்தையும் முழுவதுமாக என்னிடம் கொடுத்து விட்டார். ஆனால் சரண்யா அதை எடுக்க அனுமதிக்கவில்லை.

அப்பாவிற்கே ஏதாவது, அவசரத் தேவையென்றால் என்ன செய்வது? என்றாள்.

எனவே அவள் கூறுவதும் நியாயம் தான் என்று நினைத்தான். ஸ்ரீதர் டாக்சி டிரைவராக இருந்து கொண்டு வரும் பணம் குடும்ப செலவிற்குப் போதவில்லை. அதனால் சரண்யா வேலைக்குப் போவதற்கு ஸ்ரீதர் மறுப்பு சொல்லவில்லை

மேலும் இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலையில் இன்டர்வியூ கடிதம் மட்டும் தான் வரும், வேலை எங்கே கிடைக்கப் போகிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

குழந்தைகள் இருவரையும் அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டான். அதனால் பள்ளிக்கூட செலவைப் பற்றிக் கவலையில்லை. கல்லூரியில் உதவிப்

பேராசிரியர் வேலைக்கு நேர்முகத் தேர்விற்கு சென்ற சரண்யாவிற்கு, அந்த வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டான்

நியூஸ் பேப்பரில் வேலைக்கான விளம்பரங்கள் பார்த்த போது, இஞ்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ரயில்வே இலாக்காவின் சர்வீஸ் கமிஷன் தேர்வு பற்றிய விவரம் வெளியாகியிருந்தது.

சரண்யாவுடன் கலந்து ஆலோசித்து விட்டு அதற்கும் விண்ணப்பம் செய்து, தேர்வும் எழுதி விட்டு வந்தான் ஸ்ரீதர்

சரண்யா நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று உதவிப் பேராசிரியர் பணியில் சேர, குடும்பக் கஷ்டம் தீர்ந்தது. ஸ்ரீதருக்கு டாக்ஸி டிரைவர் வேலை பழகி விட்டது. ஆனாலும் சில பயணிகள் மதிப்புக் குறைவாக நடத்தும் போது, கோபம் வரத் தான் செய்தது.

ரு நாள் அவன் டாக்ஸியில் ஏறிய பெண்ணைப் பார்த்ததும், தன் நிலை மறந்து, “ஹேய் மாலதி” என்றான் ஸ்ரீதர்

அந்தப் பெண்ணும் ஆச்சர்யத்துடன் பார்த்து, “ஹே ஸ்ரீதர், இதென்ன புது அவதாரம். நீ யு.எஸ்.ல இருந்து எப்ப வந்த? பி.ஈ. மெக்கானிக்கல் பர்ஸ்ட் கிளாஸ் வித் டிஸ்டிங்ஷன் வெச்சுட்டு கால் டாக்ஸி டிரைவரா?” என்றாள் ஆச்சர்யத்துடன்

ஸ்ரீதர் தன் கதை முழுவதும் விவரித்தான். இருவரும் தொழில்நுட்பக் கல்லூரியில் நண்பர்கள். சரண்யாவின் சம்பளத்தால் குடும்பம் நன்றாக ஓடுகிறது என்றும் கூறினான்

அவள் தன் கைப்பையைத் திறந்து ஒரு கம்பெனி கார்ட் ஒன்றைக் கொடுத்து அந்த முகவரியில் போய் பார்க்கச் சொன்னாள். அது அவள் தோழி ஹேமாவின் கணவர் நடத்தும் கம்பெனி என்றும், திறமையான, ஸின்ஸியரான ஒர்க்ஸ் மேனேஜர் பதவிக்கு ஆள் தேடுகிறார்கள் என்றும் கூறினாள். நல்ல சம்பளம் என்றும் தெரிவித்தாள்.

தோழியின் சிபாரிசில், அந்த கம்பெனியில் ஸ்ரீதருக்கு வேலை கிடைத்தது

அந்த கம்பெனியில் சேரும் போது, சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதியிருப்பதை ஸ்ரீதர் தெரிவித்தான். அதற்கு அந்த நிறுவனத்தின் முதலாளி, அதில் தேர்ச்சி பெறுவது பகல் கனவு என்றும், அவ்வாறு தேர்ச்சி பெற்றால் சந்தோஷமாக அனுப்பி வைப்பதாகவும் வாக்களித்தார்

மாதம் ஒரு லட்சம் சம்பளம் என்றும், சொந்த உபயோகத்திற்கு ஒரு காரும் உண்டு என தெரிவித்தார்
சரண்யாவிடமும் தன் அப்பாவிடமும் இந்த சந்தோஷ சமாசாரத்தைத் தெரிவித்தான் ஸ்ரீதர்.

டாக்ஸி கம்பனியிலும் முறையாகச் சொல்லி, சமயத்திற்கு உதவி செய்ததற்கு நன்றி தெரிவித்து விடை பெற்றான்.

சரண்யா தன் சந்தோஷத்தை மாமனாரிடம் பகிர்ந்து கொண்டாள்.

“உன் நல்ல குணத்திற்கு எல்லாம் நல்லதாகவே அமையும் அம்மா” என்றார் அவரும் மகிழ்ச்சியாக.

“அது மட்டுமில்ல மாமா. எங்களைவிட உங்கள் பேரக் குழந்தைகளை நீங்க நல்லா பாத்துக்கறீங்க, அதனால தான் நாங்க எங்க வேலைய ஒழுங்கா செய்ய முடியுது” என்றாள் சரண்யா. உணர்ச்சிப் பெருக்கில் அவள் தொண்டை அடைத்து கண்களில் கண்ணீர் திரையிட்டது.

“அசடு… இதுக்கெல்லாம் உணர்ச்சி வயப்படலாமா? அவர்கள் என் பேரக் குழந்தைகள் இல்லையா? இந்தக் கிழவனைத் தாங்கிப் பிடிக்கும் விழுதுகள் இல்லையா? தேவையில்லாம உணர்ச்சி வசப்படாம ஆக வேண்டியதப் பாரும்மா” என்றார் பெரியவர்.

ஸ்ரீதருக்கும் நல்ல சம்பளம், காருடன் வேலை, சரண்யாவிற்கும் நல்ல பெரிய கல்லூரியில் உதவிப் பேராசிரியர் வேலை என்றதும், மஞ்சரி வலிய வந்து பழக ஆரம்பித்தாள்.

ஆனால் ஸ்ரீதரோ அவன் அப்பாவோ அவளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் நின்றனர்

று மாதம் கழித்து, சர்வீஸ் கமிஷனலிருந்தும் நிர்வாகப் பொறியாளராகத் தேர்வு செய்யப் பெற்று வேலைக்கான உத்தரவு வந்தது.

சம்பளம் இப்போது வாங்குவதை விட கொஞ்சம் குறைவு தான், இருந்தாலும் நிரந்தர வேலை என ஒப்புக் கொண்டான் ஸ்ரீதர்

அதே நேரம், அமெரிக்காவில் முன்பு பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து, விசாவிற்கு அவர்களே ஏற்பாடு செய்வதாகவும் உடனே வந்து கம்பனியில் சேர முடியுமா என்றும் கேட்டனர்

கஷ்டம் வந்தாலும், சந்தோஷம் வந்தாலும் தனியாக வராது போல என நினைத்துக் கொண்டான் ஸ்ரீதர்

இரண்டு நாட்களில் தன் முடிவை தெரிவிப்பதாக கூறியவன், சரண்யாவிடம் கலந்து பேசினான்.

அவள் இவனைப் போல் யோசிக்கவில்லை, “இவங்களுக்கு வேற வேல இல்ல, வெச்சா குடுமி சரைச்சா மொட்டை. அதோட, அப்பாவ தனியா விட்டுட்டு நாம் எந்த சந்தோஷத்தத் தேடி அங்க போகப் போறோம்?” எனக் கேட்டாள் சரண்யா

“எனக்காகப் பாக்காதீங்க, உங்க எதிர்காலத்துக்கு எந்த முடிவு சரியோ, அதை பாருங்க” என்றார் அப்பா

“எதிர்காலத்துலயும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி விரட்டுவாங்க அப்பா” என்றாள் சரண்யா

“சரி முடிவா நீ என்ன தான் சொல்ற?” என ஸ்ரீதர் கேட்க

“என்னத்த சொல்றது? பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் என்னைக்கும் நம்மள கை விடாது. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை வந்த வேண்டும் அயல் நாட்டில்?” என்று பாடினாள் சரண்யா.

“எதுக்கெடுத்தாலும் சினிமாப் பாட்டு தான் இவளுக்கு” என்று ஸ்ரீ தரும், அப்பாவும் சிரித்தனர்

(முற்றும்)

#ad

                      

#ad 

                      

             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

  1. கதை அருமை….பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்….தாய்திருநாடு…என்பதை உணர்த்திய கதை…சிறப்பான கரு…எழுத்து நடை எதார்த்தம்…நடை முறை வாழ்க்கை நிகழ்வு….
    எழுத்தாளருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்…

சிறுகதைப் போட்டி 2021

ஆழியின் காதலி ❤ (பகுதி 9) -✍ விபா விஷா