“பூஜா… ஏய் பூஜா… சீக்கிரம் சீக்கிரம் ஸ்கூலுக்கு நேரமாகுது” என்று மகளை அழைத்தார் சரண்யா
அன்னையின் அழைப்புக்குக் கூட பதில் கூறாமல், பூஜா வாசலில் அமர்ந்து ஒரே இடத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
மகளிடமிருந்து பதில் வராததில், “இன்னைக்கும் ஆரம்பிச்சுட்டாளா? அப்படி என்ன தான் இருக்கோ அங்க, இந்த ஊருக்கு வந்த நாளிலிருந்து இதே வேலையாப் போச்சு. தினமும் எழுந்ததும் வாசல்ல போய் உட்கார்ந்துக்கிறா” என புலம்பினார் சரண்யா
அதற்கு பூஜாவின் அண்ணன் சரத், “முன்பு இருந்த ஊரை விட இந்த ஊர் அவளுக்குப் புடிச்சு போயிடுச்சு போலம்மா” என்றவன்
“எனக்கும் நாம இருந்த திருச்சியை விட இந்த ஊர் தான் சூப்பரா இருக்கு” என மகிழ்ச்சியுடன் கூறினான்
“என்ன பண்ண? எனக்கும் உங்க அப்பாவுக்கும் கூடத் தான் இங்க இருந்து திருச்சி போக மனசே இல்லை… மனசு முழுக்க வலி… இருந்தும் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு சம்பாதிக்கவும், உங்களுக்காகவும் தான் போனோம்…ஆறு வருஷமா படாதபாடுபட்டு, நாயா பேயா வேலை செஞ்சு மூணு வேளையும் வயிறார திண்ணோம். இங்கேயே இருந்திருந்தா இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல” என தாய் வேதனையாகக் கூற
“விடுங்கம்மா… அழாதீங்க… இப்ப தான் நம்ம இடத்துக்கு வந்துட்டோமில்ல… இனி நமக்கு ஏறுமுகம் தான்… யாரிடமும் சோத்துக்காக நிக்க வேண்டிய அவசியமில்லை, அந்த ஆண்டவனை நெனச்சு மண்ணை நம்பி நம்ப உழைப்ப போடுவோம்” என அழுத்தமாகக் கூறினான் சரத்
அப்பொழுது அங்கு வந்த பூஜாவின் தந்தை லோகநாதன், “தேவையில்லாததை தூக்கி சுமக்காம அடுத்த வேலையப் பாப்போம்” என்றார்
“அதுவும் சரி தான்… இத்தனை நாள் நடோடியா போய் வேலை செஞ்சு பட்டதெல்லாம் போதும்… நம்ம ஊர்ல, நம்ம நிலத்திலயே உழைச்சு கஞ்சோ கூழோ குடிச்சுக்கலாம்” என்றார்
ஆறு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கஷ்டத்தில் லோகநாதன் நிலத்தை விற்று விட்டு, வேலைக்காக குடும்பத்துடன் திருச்சி சென்றனர். அங்கு சென்ற பின் மிகவும் கஷ்டப்பட்டு தான் ஒரு வேலையில் சேர்ந்தார்
அவரின் கடின உழைப்பும்,சரண்யாவின் சாதூரியமும் சேர ஆறு வருடங்கள் அங்கேயே வேலை பார்த்து, சிறுக சிறுக சேமித்து, பாக்கலாக்கில் விற்ற நிலத்தையே வாங்கியவர்கள், இங்கேயே நிரந்தரமாக வந்து விட்டனர்
“பாப்பா எங்க சரண்யா?” என லோகநாதன் கேட்க
“எங்க இருப்பா? அதே எடத்துல மறுபடியும் போய் உக்காந்துட்டு இருக்கா” எனவும்
‘அங்கேயா? அப்படி என்ன தான் பார்க்கிறான்னு இன்னைக்கு தெரிந்து கொண்டே ஆகணும்’ என நினைத்தவர், பின் கட்டிற்கு சென்றார்
அங்கே சென்றவர் கண்டது, இமைக்க மறந்து ஒரே இடத்தையே பார்த்துக் கொண்டிருந்த மகளைத் தான்
மகளின் அருகில் சென்று அமர்ந்தவர், “அங்க என்னடா தெரியுது? எனக்கும் காமி” எனக் கேட்க
“இமயம்’ப்பா… அதோ அங்க பாருங்க” என அவள் கை நீட்டிய திசையை குழப்பத்துடன் பார்த்தார் லோகநாதன்
பின் புன்னகையுடன், “அது இமயமலை இல்ல பூஜா… போங்கிர் மலைடா” என்றார்
“இருந்துட்டுப் போகட்டும்… ஒருநாள் அந்த மலையில் ஏறணும்ப்பா” என கண்கள் மின்னக் கூறினாள்
மகளின் ஆசையைப் புரிந்து கொண்ட லோகநாதன், “ஏறலாம்டா…நம்ம மாதிரி ஆதிவாசி விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த மலையும் காடுகளும் இன்னொரு அம்மா மாதிரி தான் பூஜா” என்றார்
“ம்… அப்புறம் இமயமலை ஏறணும்” எனவும், லோகநாதனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தார்
அதை வேறு மாதிரி புரிந்து கொண்ட பூஜா, “உங்களுக்கு நம்பிக்கை இல்லையாப்பா? நிச்சயமா நான் ஒருநாள் இமயமலை ஏறுவேன்” என அழுத்தம் திருத்தமாகக் கூறினாள்
“நான் அப்படி நினைக்கலை பூஜா… எப்படினு தான் தெரியலை” என்றார் லோகநாதன்
“எனக்கும் புரியலப்பா… ஆனா ஒருநாள் ஏறி சாதனை படைப்பேன்” என்றாள் மீண்டும் உறுதியான குரலில்
“அப்படி நடந்தா அப்பாவுக்கும் சந்தோஷம் பூஜா” என லோகநாதன் புன்னகையுடன் கூற
“தேங்க்ஸ்ப்பா” என்ற பூஜா, தந்தையை கட்டிக் கொண்டாள்
“சரி வா… இன்னைக்கு முதல் நாள் ஸ்கூலுக்குப் போகணும் இல்லையா… நேரமா கிளம்பிடுடா” என்றவர், அவளை அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றார்.
மகளையும் மகனையும் பள்ளியில் விட்டவர், தனது வேலையை பார்க்க சென்றார்
ஆனாலும் அவரின் மனதில் மகளின் ஆசைகள் தான் தோன்றி இம்சித்தது. பின் ஏதோ முடிவு செய்தவர், வேலையில் முழு மூச்சாக இறங்கினார்
ஏதேச்சையாக தனது பால்ய நண்பன் மூலம், சமூகநலத்துறை கல்வி ஹாஸ்டலில் இலவசமாக தங்கிப் படிக்கும் வாய்ப்பு இருப்பதை அறிந்த லோகநாதன், விரைவில் பூஜாவை அங்கு சேர்த்தார்
அவளுக்கு அந்த இடம் பிடித்துப் போக, மகிழ்வுடன் படிப்பைத் தொடர்ந்தாள்
அவ்வவ்போது சரண்யா தான் மகளை நினைத்து கண்ணீர் சிந்துவார். அப்போதெல்லாம், சரத் தான் அதன் நன்மையை பற்றிக் கூறி அன்னையைத் தேற்றினான்
பூஜா படிப்பில் ஆர்வமாய் இருக்க, ஒரு நாள் தொலைவில் இருந்து ஆசை ஆசையாய் அவள் ரசித்த, போங்கிர் மலை ஏறும் பயிற்சிக் குழுவில் இவளும் தேர்ந்தெடுக்கப்பட்டாள்
தனது கனவு நிறைவேறுமா? இல்லையா? என தெரியாமலிருந்த பூஜாவிற்கு, போங்கிர்மலை ஏறும் வாய்ப்பு கிடைக்க, அந்த இமயத்தையை நேரில் பார்த்தது போல் அகமகிழ்ந்து போனாள்
அன்று மாலையே தந்தைக்கு தொலைபேசியில் அழைத்தவள், “அப்பா” என சந்தோஷத்தில் கூவினாள்.
அதில் ஒட்டு மொத்த ஹாஸ்டலும் அங்கு ஆஜராகி விட்டது, அது எதுவும் அவளின் கவனத்தில் பதியவில்லை
மகளின் சத்தமான அழைப்பில் பதறிப் போன லோகநாதன், “என்னடா ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? அப்பா உடனே வரட்டா?” என படபடத்தார்
கணவரின் பதட்டமான குரல் கேட்டு, பால் கரந்து கொண்டிருந்த சரண்யாவும் படித்துக் கொண்டிருந்த சரத்தும் அப்படியே எல்லாவற்றையும் போட்டு விட்டு பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்
“அப்பா… நான் நெனச்சது நடக்கப் போகுது” என சிரிப்புடன் கூற
“என்னடா சொல்ற? அப்பாவுக்கு புரியல தெளிவா சொல்லு பூஜா” இன்னும் விலகாத பதற்றத்துடன் கேட்டார்
“நீங்க என்னை திட்டுவீங்கல்ல, இப்ப நான் சொல்றதக் கேட்டா அப்படியே ஸ்டன் ஆகிடுவீங்க” என்றவள், போங்கிர் மலையேறும் வாய்ப்பு கிடைத்ததைப் பற்றிக் கூறினாள்.
அதைக் கேட்டதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது மொத்த குடும்பமும்
ஆம்…! மகிழ்ச்சி தான்
மகளை ஹாஸ்டலில் விட்ட அடுத்த நாளே, லோகநாதன் அவளின் லட்சியத்தைப் பற்றி மனைவியிடமும் மகனிடமும் கூறி விட்டார்
பயப்பட்ட சரண்யாவை, பேசிப் பேசி புரிய வைத்தான் சரத்
“நிஜமாவாடா சொல்ற? என்னால நம்பவே முடியல, அந்த கடவுள் கண்ணைதி றந்துட்டான். எம் பொண்ணு இனி நல்லா வருவா” என சந்தோஷத்தில் கண்ணீர் சிந்தினார்
பூஜா அவள் தந்தையிடம் கூறிய செய்தியைக் கேட்ட ஹாஸ்டல் மாணவிகள், சந்தோஷத்தில் கூச்சல் எழுப்ப, அந்த இடமே அவர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்தது
“ஏய் பூஜா சொல்லவே இல்ல பாரு?” என தோழிகள் சிலர் கோபித்துக் கொள்ள
“நான் மட்டுமா செலக்ட் ஆனேன்? என்கூட இன்னும் பத்தொன்பது பேர் செலக்ட் ஆகி இருக்காங்க” என்றாள் நிறைகுடமாய்
“அவங்க யாரும் நம்ம கூட இங்க இல்ல, நீ மட்டும் தான இருக்க?” என தோழி ஒருத்தி கூற, அனைவரும் அதை ஆமோதித்தனர்
பூஜாவுக்கு தோழிகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்
அடுத்த நாளே மகள் இருக்கும் ஹாஸ்டலுக்கு கணவன் மற்றும் மகனுடன் கிளம்பி விட்டார் சரண்யா
பூஜாவைப் பார்த்து தங்களது வாழ்த்தைக் கூறியவர்கள், அவளை மேலும் உற்சாகப்படுத்தி விட்டு ஊர் வந்து சேர்ந்தனர்.
அடுத்த இரண்டாவது வாரத்தில் இருபது பேர் கொண்ட குழு, போங்கிர் மலையேறும் பயிற்சிக்காக கிளம்பினர்.
நீண்டநாள் ஆசை நிறைவேறப் போகும் வெற்றியில், பூஜா கயிற்றின் துணை இல்லாமலே மலை ஏறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாள். பயிற்சியாளரும் சக மாணவ மாணவிகளும் வெகுவாக பாராட்டினர்
இதை அறிந்த அந்த மாநிலத்தின் சமூகநலத்துறை உண்டு உறைவிடப்பள்ளி கூட்டமைப்பு செயலாளராக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி, பூஜாவுடன் சேர்த்து அந்த இருபது மாணவர்களையும் அழைத்து பாராட்டினார்.
அவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், இந்த மாணவர்களுக்கு டார்ஜிலிங்கில் உள்ள மலையேறும் பயிற்சிகள் பள்ளியில் பயிற்சி பெற நிதியுதவி ஏற்பாடு செய்து கொடுத்தார்.
அந்த சந்தோஷமான செய்தியை, தனது பெற்றோருக்கு பூஜா தெரிவிக்க, அதில் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்ற லோகநாதன் கண்ணீர் சிந்தினார் என்றால், சரண்யா தங்களை ஒதுக்கிய சொந்த பந்தங்களுக்கு செய்தியை பகிர்ந்து பெருமை பேசினார்
சரத்தும் தன் நண்பர்களிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் கூறி மகிழ்ந்தான்.
“நமக்கு அந்த கடவுள் காசு பணம் கொடுக்கலைன்னாலும், அருமையான குழந்தைகளை கொடுத்திருக்கார் சரண்யா. சரத்தை பார், தங்கச்சியோட முன்னேற்றத்த எப்படி சந்தோசமா கொண்டாடுறான்” என்றார் மனநிறைவுடன்
“ஆமாங்க… பூஜாவுக்கு உசுரு மலை ஏறுறதுலனா, இவனுக்கு மல்யுத்தம். பாருங்க அவளுக்கு மாதிரி இவனுக்கும் விடிவு காலம் சீக்கரம் வரும்” எனவும்,
அதை ஆமோதிப்பது போல், தேவதைகள் ததாஸ்து கூறினார்கள்
சில நாட்களில் பூஜாவும் அவளது குழுவனர்களும் டார்ஜிலிங் நகருக்கு பயிற்சிக்காக சென்றனர்.
எல்லாத் தடைகளையும் தாண்டி, வெறி கொண்ட வேங்கை போல், கடுமையாக பயிற்சி செய்தாள் பூஜா
அவளின் திறமையைக் கண்ட பயிற்சியாளர், பூஜாவின் பெயரை இமயமலை ஏறும் குழுவிற்கு பரித்துரை செய்தார். ஆம்… இமயம் ஏற வேண்டும் என்ற அவளின் ஆசைக்கு தீனி போட இந்த வாய்ப்பு அமைந்தது
இறுதியாக, பூஜாவும் அவளுடன் பயிற்சி பெற்ற சகமாணவன் ஒருவனும் இமயமலை ஏற தேர்வானார்கள்.
இந்த வாய்ப்பு கிடைத்த பின், ஒன்றும் சாதாரணமாக மலை ஏற சென்று விடவில்ல. இருவரின் உடல் வலிமையை அதற்கேற்றவாறு மாற்ற, கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு மேல் கடும் பயிற்சி கொடுக்கப்பட்டது
இந்தப் பயிற்சி காலத்தில் பூஜாவுக்கு தினமும் இருபத்தெட்டு கிலோ மீட்டர் தூரம் ஓட்டப் பயிற்சியும்,யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது
அதோடு மட்டுமின்றி, இந்த பயிற்சி காலத்திலேயே கஞ்சன் ஜங்கா பகுதியில் உள்ள பதினேழாயிரம் அடி உயரமுள்ள, ரீனூக் மலையேறி சாதனை படைத்தாள் பூஜா
அதுவும் சாதாரணமாக அல்ல, மிக மிகக் கடுமையான கால நிலையில் தான் ரீனூக் மலையேறி சாதனையும் படைத்தாள்
ஒவ்வொரு நாளும் பயிற்சி கடினமாக இருந்தாலும், மிகவும் மகிழ்ச்சியாக எதிர்கொண்டாள்
பயிற்சி முடிந்த பின் மொத்த குழுவும் இமயமலை ஏறக் கிளம்பியது. மலையின் அடிவாரம் அருகில் வந்ததும், பூஜா கண்கள் மூடி இத்தனை நாளாக மனதில் வடித்த பிம்பத்தை இமைக்குள் கொண்டு வந்தாள்
பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட பூஜா, கண்கள் திறந்து பார்க்க, மலை அன்னை பனியெனும் தாயமுதை பொழிந்து தன்னுடைய மக்களை அன்போடு வரவேற்றாள்
இந்த சூழ்நிலைக்கென பிரத்யேகமாக உபயோகிக்கும் பேசியில் தந்தைக்கு அழைத்தாள் பூஜா
போனை எடுத்த லோகநாதன், “சந்தோஷமா பூஜா?” எனக் கேட்க
“இல்லப்பா… மேல ஏறினா தான் எனக்கு உண்மையான சந்தோஷம்” என்றாள்
“இத்தனை நாளா நீ கண்மூடி கண்ட கனவு, இன்னைக்கு நனவானது போல அதுவும் நடக்கும், நீ திரும்பி வரும் நாளுக்காக காத்துக்கிட்டு இருப்போம்” என்றார் பூஜாவின் அன்னை சரண்யா, கண்ணில் நீருடன்
“வாழ்த்துகள் பூஜா. பயணத்தை முடிச்சிட்டு சீக்கிரமா வீட்டுக்கு வா, நாங்க எல்லாரும் உனக்காக காத்துக்கிட்டு இருக்கோம்” என்றான் சரத்
“கண்டிப்பா அண்ணா, நானும் உங்களை பார்க்க ஆவலா இருக்கேன்” என்றவள், அழைப்பை துண்டித்தாள்
இத்தனை நாட்களாக இமயத்தை தனது இமைக்குள் இருத்தியவள், இன்று அதைத் தொட தனது பயணத்தை தொடங்கினாள்
பெண்ணவளின் பயணம் இதோடு நில்லாமல், உலகத்தையே இமைக்குள் கொண்டு வரும் நாள் வருமென வாழ்த்துவோம்
(முற்றும்)
#ad
#ad
GIPHY App Key not set. Please check settings