இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 84)
இக்கதை சுமார் நூறாண்டுகள் பின்னோக்கி செல்கிறது.
வள்ளியூர் அழகான சிற்றூர். செந்தில்நாதன் அவ்வூரில் பெரிய தனவந்தர். மகாதேவி, செந்தில் நாதனின் துணைவி ஆவார். இந்த தம்பதிகளுக்கு மூன்று ஆண் இரண்டு பெண் என ஐந்து குழந்தைகள்.
மூத்தவன் சரவணன் அடுத்து கமலா, அடுத்து தேவி,அப்புறம் வடிவேலு இளையவன் கதிரேசன். விவசாயமும், விளைந்த பொருட்களை விற்பதுவே செந்தில் நாதருக்கு வேலை
நூற்றாண்டுகளுக்கு முன் இந்த அளவுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், காளை மாடுகள் பூட்டிய வண்டிகள் தான் அதிக பயன்பாட்டில் இருந்தது.
அவசியம், அவசரம் என்றாலே மக்கள் இந்த வண்டிகளை பயன்படுத்தி வந்தனர். பெரும்பாலும் ‘நடராஜா சர்வீஸ் ‘ என்று நடந்து செல்லும் பழக்கம் அதிகம் இருக்கும்
செந்தில்நாதன் தனது ஐந்து குழந்தைகளையும், அந்த காலத்திலேயே படிக்க அருகில் இருக்கும் திண்ணைப் பள்ளியில் சேர்த்து பயில வைத்தார். ஆரம்பத்தில் மணல் மேல் அமர்ந்து முன்னால் உள்ள மணலில் எழுத்துக்கள் எழுதி பழக்கியும், பின்னர் சோளத்தட்டை குச்சியை மேலே உள்ள பகுதிகளை நீக்கிவிட்டு நடுவில் இருக்கும் தண்டை பேனா மை தொட்டு எழுதும் வழக்கம் இருந்தது
கோழி கூப்பிடும் முதல் கூவலில், அதாவது மூன்று மணிக்கே எல்லோரும் உறக்கம் விட்டு எழுந்து கொள்ள வேண்டும். அவருக்கு இருந்த நூறு ஏக்கர் நில புலங்கள் மற்றும் பால் தரும் முப்பது பசு மாடுகள், வண்டி இழுக்கும் மாடுகள், உழவு பணிகள் செய்யும் மாடுகள், ஏற்றம் இறைக்கும் மாடுகள் அனைத்தும் பராமரித்து சுத்தம் செய்து தீவனம் கொடுத்து, அன்றைய உணவுக்கு வேண்டிய சிறுதானியங்கள் குத்தி புடைத்து கழுவி தருவது வரை பள்ளி செல்லும் நேரத்திற்குள் செய்ய வேண்டும். ஆளுக்கொரு வேலையாக அனைவரும் பகிர்ந்து செய்வது வழக்கம்.
இந்த வேலையை முடித்து செல்லும் சரவணன், வடிவேலுக்கு மூக்கில் திணித்து கூட படிப்பு வாசனை ஏறவில்லை. கமலா, தேவி, கதிரேசன் படிப்பில் கெட்டியாக இருந்தனர்.
ஆனால் பெண் பிள்ளைகள் எழுத, படிக்க தெரிந்தால் போதும் என்ற நிலை இருந்த காலத்தில், இருவரையும் ஐந்தாம் வகுப்போடு நிறுத்தி விட்டார் செந்தில் நாதன். அவருடைய பணியாளர்கள் சுமார் முப்பது பேர் அவரை அழைப்பது செந்திலய்யா
கமலா தான் படித்து ஆசிரியை ஆக வேண்டும் என்று கனவு கண்டவள். கனவு காணாமல் போனது. பண்ணையாட்களுடன் தானும் ஒருத்தியாக மாறி, ஏற்றம் இறைக்க, களை பறிக்க, வண்டி பூட்டி வியாபாரம் செய்ய என்று ஆண் / பெண் பேதமில்லாது சமமாக உழைத்தாள். பதினெட்டு வயதில் பூப்படைந்து அடுத்த ஆண்டில் திருமணமும் ஆனது.
கமலாவை கைபிடித்த கணேசன், ஒரு இயந்திர தொழிற்சாலை மேலாளர். தனக்கு அதிகம் படிக்காத, வீட்டை நிர்வகிக்கும் பெண் தான் வேண்டும் என தேட கமலா மனைவியானாள். ஆனால் கணேசனின் தாய் கனகலட்சுமிக்கு சிறிதும் விருப்பம் இல்லை.
கமலாவின் பெற்றோர், தனது மகள் மண்ணில் பட்ட பாடு போதும் நாகரீகமாக வாழ வேண்டும் என தேடிப் பிடித்த மாப்பிள்ளை கணேசன். வண்டி சீர், கூடை நகை அதில் எத்தனை வகைகள் என்று கொடுத்த வரும் கணக்கு வைக்கவில்லை, போட்டவளும் தெரிந்து கொள்ளவில்லை.
நல்ல அண்டங்காக்கை நிறத்துடன் மினுமினுக்கும் நிறத்தை கொண்டு இருந்த கணேசனுக்கு, எலுமிச்சை நிறத்தில் வட்ட முகத்தோடு பச்சை பட்டு உடுத்தும் போது மதுரை மீனாட்சி அம்மன் போன்ற அழகு என்று ஊரே கொண்டாடிய கமலாவை ஏனோ? மாமி கனகத்திற்கு பிடிக்கவில்லை
தம்பதிகள் இருவரும் நிறத்தில் பொருந்தா விட்டாலும், எண்ணத்தில் பொருந்தி மன மொத்த தம்பதியாக இருந்தனர். வாய்ப்பை எதிர்நோக்கி காத்து இருந்தார் மாமியார் கனகா.
காலங்கள் உருண்டோட பதினாறு ஆண்டுகள் கடந்த நிலையில் தம்பதிகள் வாழ்வில் குழந்தை செல்வம் கிட்டவில்லை. மாமி தனக்கு கிடைத்த வாய்ப்பு என்று வார்த்தை அம்புகள் கொண்டு, கமலாவின் இதயத்தை துளைத்து எடுத்தார்.
கணேசன் வீட்டில் இருந்த நேரத்தில் ஒரு விதமாகவும், அவர் வெளியே சென்று விடும் நேரத்தில் வேறு மாதிரியாகவும் மாறி மாறி கனகா தனது மாமியார் பதவியை பயன்படுத்தி வந்தார். எதையும் வெளிக்காட்டாமல் பொறுமையாக சகித்துக் கொண்டு வாழ்ந்தாள் கமலா.
கமலா கணேசன் விழி நீர் துடைக்க இறைவன் கருணையால் கமலா கருத்தரித்தாள். ஆம், நம்பமுடியாத அதிசயமாக இத்தனை ஆண்டுகள் கழித்து பிள்ளை வரம் கிடைத்தது
சுற்றமும் நட்பும் ஆச்சரியமாக கொண்டாட நாளொரு மேனி பொழுது ஒரு வண்ணமாக வளர்ந்த வயிற்று குழந்தை வெளி உலகை கண்டது ஒரு பவுர்ணமி நாளில், நிலவு போன்ற வட்ட முகத்தோடு பிறந்தது ஓர் பெண் மகவு.
கமலாவின் நிறத்தோடு கணேசன் குணத்தை கொண்டு கொழு கொழு அழகில் வளர்ந்த குழந்தை, தன் சிரிப்பில் மொத்த குடும்பத்தையும் கட்டி போட்டது.
கனகா, கமலாவின் மாமியார் குழந்தை பற்றிய எண்ணம் தவிர வேறு சிந்தனை இன்றி வாழ்ந்தனர்.
ஆனால் எதிர்பாராமல் வேறு ஒரு இடத்தில் துவேஷம் பிறந்தது. அது கனகாவின் உடன் பிறந்த சகோதரன் வடிவேலன் தான்.
இத்தனை ஆண்டுகளில் கமலா அப்பா செந்தில் நாதன், சகோதரர் சரவணன் கதிரேசன் மருத்துவ வசதி அதிகம் இல்லாத காலத்தில் நோய் வாய்பட்டு ஏன் எதனால் என்று தெரியாமல் இறந்து விட, தாய் மகாதேவி தங்கை தேவி என்ற குடும்ப உறுப்பினர்கள் இருக்க, நூறு ஏக்கர் நிலமும் தனக்கு என்ற கனவுடன் இருந்த வடிவேலுக்கு, புது வரவான கமலாவின் மகள் பொம்மி என்ற வத்சலா, வேண்டாத விருந்தாளி ஆனாள்
வத்சலா என்பது கனகாவின் கணவன் கணேசனின் பாட்டி பெயர். அதனால் அந்த பெயரில் அழைக்காமல் ‘பொம்மி’ என அழைத்தனர்.
இறைவன் என்ன கணக்கு வைத்து உள்ளார் என்பது யாருக்கும் தெரியாது. வடிவேலின் இரு மகன்களில் இளைய மகன் அசோகனுக்கு திருமணம் முடித்து, வேறு இடத்தில் வசித்து வந்தனர்.
முதல் மகன் கிருஷ்ணன் நிஜ கிருஷ்ணனாக பெண் பித்தனாக இருந்தான். இரண்டாம் மகன் அசோகன் தனது தகப்பன் பெயரைக் காப்பாற்ற அவர் போலவே காசு பணம் சொத்து என்று அதிலேயே தன் கவனம் செலுத்தி கருத்தாக இருந்தான்.
பொம்மி என்ற வச்சலா, அழகு படிப்பு குணம் என்று சிறப்பாக வளர்ந்து வந்தாள். கமலா தான் கண்ட கனவை மகள் மூலம் நிறைவேற்றி திருப்தி காண துடித்தாள்.
தையல் பயிற்சி, வயர் கூடை போட டைப் ரைடிங், என்ற நேரத்தை வீணாக்காமல் பயிற்சி பெற வைத்தாள். பொம்மி எதற்கும் சலிக்காமல் எந்தவொரு பயிற்சி செய்தாலும் அதில் சிறந்து விளங்கினாள்.
பருவ வயதில் பூப்படைந்த பொம்மிக்கு, தாய் மாமன் வடிவேலு ஆடம்பரமாக பொன் பொருளோடு சீர்வரிசை செய்தார்.
இந்த நேரத்தில் பள்ளி படிப்பை முடித்த பொம்மி கலை இலக்கியம் பயில அருகே உள்ள நகரத்தில் தங்கி படிக்க ஏற்பாடு செய்தார் அவளின் தந்தை கணேசன். அடிக்கடி வீட்டு பக்கம் வந்து நலன் விசாரணை செய்து கொண்டார் வடிவேலு.
நல்ல முறையில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்த மகளிட,ம் திருமண பேச்சை ஆரம்பித்தார் கணேசன். இதற்குள் தாய் கனகா தனது எண்பத்தி ஓராம் வயதில் தனது பெயர்த்து திருமணம் காண தவித்து கொண்டு இருந்தார்.
திருமணப் பேச்சு ஆரம்பித்தவுடன் வடிவேலு தன் மூத்த மகன் கணேசனுக்கு பொம்மையை மணம் முடித்து தர வேண்டினார். கிருஷ்ணனுக்கு வயது முப்பத்தாறு. பொம்மி இருபத்து மூன்று வயதே ஆனவள்.
அடிக்கடி வடிவேலு வந்த காரணம் தெளிவாக புரிந்தது. பெண் மோகம் கொண்ட மகனுக்கு, வயது வித்தியாசம் பாராது உறவு என்று பெண்ணை கேட்க வந்திருப்பதை அறிந்து கொதித்து போனார் கனகா. எதிர்ப்புகள் தோன்ற, அமைதியாக இருந்து உள்ளே வன்மத்தோடு இருந்தார் வடிவேலு
தேடித் தேடி ஒரு வரன் அமைந்தது பொம்மிக்கு. தனியாக பிறந்த மகளுக்கு நிறைய சொந்த பந்தங்கள் வேண்டும் என நினைத்து, நான்கு மகன் இரண்டு மகள் கொண்ட ரத்தினவேல் குடும்பத்தில் மூத்த மகனான சிங்காரத்தை மாப்பிள்ளையாக நிச்சயம் செய்தனர்
மாப்பிள்ளை சிங்காரம் அரசு வேலையில் பத்திர துறையில் பணியாற்றி வந்தார். சிங்காரம் வத்சலா (பொம்மி) திருமணம் சீரும் சிறப்பாக நடந்தது. மறு வீடு கறி விருந்து மறு சீர் என அமர்களமாக ஒவ்வொரு நாளும் கடந்தது.
இந்த கொண்டாட்டம் விருந்து எதிலும், பொம்மி முகத்தில் துளியும் சந்தோஷம் தெரியவில்லை. இதை கவனித்து வந்த தாய் கமலா, யாரிடம் கேட்க சொல்வது என தெரியாது குழம்பி தவித்தாள்.
அதற்கு அவசியம் இல்லை என்று, கணவன் வீடு செல்ல மறுத்தாள் பொம்மி. தாயும் தந்தையும் மாறி மாறி கேட்டும், எதுவும் பேசாது போக விருப்பம் இல்லை என்று கூறி பிடிவாதமாக இருந்தாள்.
ஆச்சரியம் என்னவென்றால் சிங்காரமும், “பொம்மி இங்கேயே இருக்கட்டும்” என்று கூறியது தான்
குடும்ப பிரச்சினை என்றால் யாராவது ஒருவர் சொல்ல வேண்டும். யாரும் சொல்லாமல் என்ன பிரச்சனை என்று தெரியாது ஆறு மாதங்கள் ஓடிய நிலையில் கணேசனும் கமலாவும் காரணம் அறியாது கலங்கி தவித்தனர்.
பாட்டி கனகா ஒரு படி மேலாக நான் என் மருமகளை துன்புறுத்தியதற்கு தெய்வம் தந்த தண்டனையோ என்று தவித்தார்.
இந்த நிலையில் தன் குடும்பத்தார் வற்புறுத்தலால் சிங்காரம் தாய் தந்தையரோடு பொம்மியை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்தார்.
வந்தவர்களை வரவேற்று உபசரித்த பிறகு, “என்ன உங்க மகளை வாழ வைக்கும் எண்ணம் உங்களுக்கு இல்லையா? அப்படி இருந்தால் உங்களோடு இருக்க விட்டு இருப்பீர்களா?” என ரத்தினவேல் கேட்க கேள்விகள் கணேசன் குடும்பத்தை அசைத்து பார்க்க, பொம்மியும் அக்கேள்வியால் சஞ்சலப்பட்டாள்.
“திருமணமான பெண் பதினைந்து நாட்கள் கழித்து தாய் வீடு சென்றவள் திரும்பி வராதது ஏன்?” என்று கேட்டார்கள்.
பொம்மி தீர்க்கமாக யோசித்த பிறகு, “திருமணம் செய்து கொள்ள கூடாத ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தது தான் காரணம்” என பதில் சொல்ல, அந்த இடம் மயான அமைதி அடைந்தது
சபையில் ஒரு பெண் பேசுவதே பெரிது. அதிலும் குற்றம் சொன்னால் , நிச்சயம் பொய் இருக்காது என்று நம்பிய காலம். அதனால் பொம்மியை யாரும் குறுக்கு விசாரணை செய்யவில்லை.
சற்று நேர அமைதிக்கு பிறகு, சிங்காரத்தை அழைத்து கொண்டு அவரது குடும்பம் அங்கிருந்து சென்றது. ஆனால் பொம்மி சொன்ன பதிலால் கணேசன் கமலா கனகா ஆகியோருக்கு உயிர் வரை வலித்தது.
ஒரே மாதத்தில் கனகா கணேசன் இருவரும் அதிர்ச்சி மாறாது இவ்வுலகு நீத்து வானுலகம் செல்ல தாயும் மகளும் நிராதரவாக இருந்தவர்களை வடிவேலு மீண்டும் நாடி வந்தார்.
இப்போதும் பெரிய மனதோடு தனது மகனுக்கு பொம்மியை மனைவியாக ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவிக்க, “என் மகளை பாழுங்கிணற்றில் தள்ளி னாலும் தள்ளுவேன், உன் மகனுக்கு பெண் தரமாட்டேன்” என உறுதி பட கூறினாள் கமலா
“எப்படி தாயும் மகளும் பிழைக்கிறார்கள் என்று பார்க்கிறேன்” என கறுவினார் வடிவேலு
தன் படிப்பை மேலும் தொடர்ந்த பொம்மி, முதுகலை பட்டம் பெற்று அதில் ஆராய்ச்சி படிப்பும் முடிக்க, அரசு கலை அறிவியல் பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியில் அமர்ந்தாள்.
இதற்குள் காலம் யாருக்காகவும் நில்லாது ஓடியதில், வயது முப்பதை நெருங்கியது. கமலாவிற்கு தன் மகள் தன்னிறைவு பெற்றதில் மகிழ்ந்தாலும், தனக்கு பிறகு அவள் வாழ்வு என்னவாகும் என்ற கவலை கொள்ள வைத்தது.
கல்யாணம் ஆனாலும் கன்னியான அவளைத் திருமணம் செய்ய பலரும் முன் வர, மீண்டும் அந்த பந்தத்தில் நுழைய தயங்கினாள் பொம்மி.
ஆனால் இறைவன் போடும் முடிச்சு இடையே யாரால் தடுக்க முடியும்.
தங்கள் சமூகம் இல்லாத, படித்த முற்போக்கு எண்ணம் கொண்ட மாதவனை கரம் பற்றினாள் பொம்மி.
இம்முறை தாயைப் போல, இவளுக்கும் மாமி தான் மாமியார் தோரணை காட்டினாள். உண்ணும் உணவில் ஆரம்பித்து, உறங்க விடாது பேச விடாது சிரிக்க விடாது என அனைத்தையும் தடா என்று தடை செய்ய அனுசரித்து அனுபவித்து வாழ்ந்தாள்
அந்த வாழ்விலும் வசந்தம் வந்தது. பொம்மி தாயானாள்
இதற்கு தான் ஆசைப்பட்டேன் என்று கொண்டாடினாள் கமலா. கனவிலும் பார்த்திராத அத்தனை செல்வங்களையும் பொம்மிக்கு தாய் வாரி வழங்க, மாமிக்கு ஏனோ பொறாமை குணம் தோன்றியது.
அவளுக்கு வந்த சொத்து மட்டும். அல்ல, அவள் உண்ணும் உணவை மற்றவர்களுக்கு கொடுத்து பொம்மி வயிற்று பிள்ளைகாரி என்று பாராது பல நாள் பட்டினியாக படுக்க வைத்தாள்.
இத்தனை கடுமை காட்டியும் கரையாது கரு பிள்ளையென உருமாறி அழகான ஆண் குழந்தை பிறந்தது. பொம்மையின் துயர் துடைக்க, துன்பம் தந்தவரை தட்டி கேட்க இறைதூதனாக வந்தான்.
பிரசவத்தில் ஆரம்பித்து, பெயர் சூட்ட , சோறு ஊட்ட முதல் மொட்டை போட்டு காது குத்த என்று ஒரு வழி பண்ணினார் மாமியார். ஆனாலும், தன் மகனை கண்டு மனம் கலங்காது தன் உலகத்தை வேறு பகுதியில் பார்க்க தொடங்கினாள்
குழந்தை கண்ணன், ஆமாம், தாயின் துயர் தீர அந்த கண்ணனே வந்தது போன்ற அழகு, அறிவுடன் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ச்சி பெற்றான்.
எந்த சுப காரியங்கள் நடத்தினாலும் முன்னால் விட மாட்டார் மாமியார் . “இரு வாழ்க்கை கண்டவள், இரண்டு மாமியார் பார்த்தவள் குலம் விளங்காது” என்று வசை பாடுவார்.
ஆரம்பத்தில் இல்லாத கவலை, பயம் இப்போது தோன்றியது. காரணம் வளர்ந்து வரும் மகனுக்கு என்னவென்று விளக்குவது? எப்படி புரிந்து கொள்வான்? என்று குழப்பம் தோன்றியது.
மாமியார் என்ன பேசினாலும் எதிர்த்து பேசாது சென்று விடுவது வழக்கம். இரண்டு வாழ்க்கை காரணம் காட்டி மகன் விஷயத்திலும் பின்னுக்கு தள்ள, மனம் வருந்தினாள் பொம்மி.
இந்த வாழ்க்கை வாழத் துணிந்தது தவறோ? என்ற எண்ணம், இப்போது பல முறை தோன்றியது.
கண்ணன் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் காலடி வைத்தான். கவலை அற்ற வாலிப துடிப்போடு இளம் கன்று பயம் என்பது அறியாமல் பருவத்தில் எல்லாம் விளையாட்டாக ஆனந்தமாக அனுபவமாக அவனுடைய வாழ்க்கை சென்றது.
இத்தனை காலத்திற்கு அப்புறமும் வடிவேலு மனதில் குறையாத கோபம் இருந்தது. கிருஷ்ணனுக்கு பெண்ணே அமையாது ஆடி ஓய்ந்து இருந்தான். இப்போது அவன் தவறு அவனுக்கு புரிந்தது.
இந்த நிலையில் அவனுக்கு மனைவி அமைந்து இருந்தால் அவன் வாழ்க்கை சிறந்து இருக்கும் என்பது வடிவேலுவின் எண்ணம். இரண்டாவது முறையாக கூட தனது மகனை கட்டிக் கொள்ளாத பொம்மி மீது வன்மம் விஸ்வரூபம் எடுத்தது.
அதற்கு அவர் கையாண்ட வழி, கண்ணன் மனதில் விஷத்தை விதைத்தது.
கல்லூரி சென்று கண்ணனை சந்தித்து, “உன் அம்மா பொம்மி மறு திருமணம் செய்தவள், அதனாலே பாட்டிக்கு பிடிக்கவில்லை. அது தான் எப்போதும் திட்டி தீர்ப்பது” என்று பலவிதமான குறைகளை கூறி அவனை அதிர வைத்தார்.
எப்போதும் கல்லூரி முடிந்து வீடு திரும்பும் போது பாட்டை விசிலடித்து ஹம் பண்ணி கொண்டு வருபவன், அன்று உற்சாகமில்லாமல் வாடி வதங்கிய கீரைத் தண்டு போல களையிழந்து வந்தான்.
‘என்ன வேலையோ?’ என்று யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அறைக்குள் சென்றவன், தேநீர் அருந்த வராது போகவே, கூப்பிட சென்றாள் பொம்மி
உடை மாற்றாது கட்டிலில் மல்லாந்து படுத்து மேலே வெறித்த வண்ணம் படுத்து இருக்கும் மகனைக் கண்டு கலங்கி போனாள் பொம்மி. உடம்பு சரியில்லையா என்று பதறி நெற்றியில் கை வைத்து பார்க்க, அப்போது தான் தாயைக் கண்டான் கண்ணன்.
சட்டென துள்ளி எழுந்தவன், “ஏம்மா?” எனக் கேட்க
“ஒண்ணும் இல்லை பா.. கீழே காபி பலகாரம் சாப்பிட வரலையேனு பார்க்க வந்தேன்” என்ற தாயிடம்
“நீங்க போங்கம்மா… நான் வரேன்” எனச் சொல்லி எழுந்து சென்றான்.
சரியென தலையாட்டியபடி சிந்தனை செய்தவாறு சென்றாள் பொம்மி. சிறிது நேரம் கழித்து, குளித்து உடை மாற்றி சென்றவனிடம், சூடான கேழ்வரகு அடை கொடுக்க மெதுவாக சுவைத்து சாப்பிட்டு தேநீர் அருந்தினான் கண்ணன். இந்த அமைதி கண்ணிடம் காண்பது புதிது.
அமைதியாக யாரிடமும் பேசாது தனது அறைக்கு சென்றவன், மீண்டும் இரவு உணவு உண்ணவே கீழே வந்தான். இப்படியே காலை அமைதி காத்து காலை கல்லூரி சென்று திரும்பி வந்தான்.
கல்லூரியிலும் கலகலப்பு இன்றி அமைதியாக இருந்தான். அந்த வருடத்தின் ஆண்டு விழா அண்மையில் நடக்க இருந்தது. கண்ணன் ஆடல், பாடல் என அனைத்திலும் கலந்து கொள்வான்.
அந்த ஆண்டின் நடக்கும் கலை விழாவில் பங்கு கொள்ள ஷேக்ஸ்பியர் நாடகம் தயார் செய்து அவ்வப்போது ஒத்திகை பார்க்கப்பட்டு வந்தது. கண்ணன் அதில் முக்கிய வேடமேற்று ஒத்திகை பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அதை முற்றிலும் மாற்றி, பொம்மையின் கதையை தழுவி, வேறு காரணங்கள் உருவாக்கி, தைரியமாக முடிவு எடுத்து, திருமண பந்தத்தில் இருந்து ஒரு பெண் விலகுவதாக கதையமைப்பு செய்து ஒத்திகை பார்த்து, கல்லூரி ஆண்டு விழாவில் அரங்கேற்ற தயரானான் கண்ணன்
இதை தன் குடும்பத்தார் அவசியம் காண வேண்டும் என நினைத்து, அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்தான்.
அந்த நாளும் வந்தது. கண்ணன் குடும்பத்தார் புடை சூழ கல்லூரி விழா களை கட்டியது
கண்ணன் ஏற்று நடித்த நாடகம் அரங்கேறியது. நாடகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பொம்மி தன் மனவெழுச்சியை விவரிக்க இயலாத ஒன்று ஆட்கொண்டதை உணர்ந்தாள்.
மாமியார் கண்ணனின் பாட்டி, ஊசி விழுந்தால் கேட்கும் அமைதியில் சிக்குண்டார். நாடகம் நிறைவுப் பகுதியை கண்டபோது அரங்கில் கரகோஷம் வானைப் பிளந்தது.
இப்போது சர்வ நாடியும் அடங்க முகம் வெளுத்து அமர்திருந்தவளை, கண்ணனின் குரல் இவ்வுலகிற்கு இழுத்து வந்தது. கைதட்டல் அடங்கிய பின் கண்ணன் பேசத் தொடங்கினான்.
“நண்பர்களே இக்கதையின் முடிவு உங்களுக்கு பிடித்ததா?” என்று கேள்வி எழுப்ப, கூட்டம் ஆமென கூச்சலிட்டனர்
“ஏன்னா முற்போக்கு சிந்தனை பேச நல்லா இருக்கும். நிஜத்தில் தவறை சுட்டி காட்டி யார் வேண்டுமானாலும் நியாயம் கேட்கலாம். ஆண், பெண் என்ற பேதமின்றி அதற்கு குறுக்கே நில்லாமல் இருந்தால் போதும்” என்று முடித்தான். அரங்கம் மீண்டும் கைதட்டலால் அதிர்ந்தது.
அமைதியாக எல்லோரும் வீடு வர, கண்ணன் நடு வீட்டில் நின்று மேல் நோக்கி பார்த்த படி, பேசத் தொடங்கினான்
“நாடகம் நானே தேர்வு செய்து நடித்தேன். இந்த காலத்தில் புரட்சியாக தெரியும் காட்சிகள், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நிஜமாகவே நடந்ததுள்ளது. ஆனால் அதற்காக ஏன் வெட்கப்பட வேண்டும், வேதனை பட வேண்டும்.
நாமே குற்றம் செய்து விட்டோமா என்று நினைத்து மற்றவர்கள் முன் தலை குனிய வேண்டியதில்லை. உண்மையும், நியாயமும் எல்லாக் காலமும் பொதுவானது. அதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல” எனக் கூறி எல்லோரையும் பார்க்க, திரௌபதியின் மானங்காத்த கண்ணன் மீண்டும் தன்னை காக்க வந்ததாக தோன்றியது பொம்மிக்கு
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings