in

பாலி பயண அனுபவம் ✈✈✈ – வித்யா அருண், சிங்கப்பூர்

பாலி பயண அனுபவம்

ணவில் அறுசுவை உணவு என்று இருப்பதைப் போல, ஒரு சுற்றுலாவில் நீங்கள் என்ன எல்லாம் எதிர்பார்க்கலாமோ, அவை அத்தனையும் உள்ளடக்கியது இந்தோனேசியா தீவான பாலி

ஆஸ்திரேலியா ஒரு விதம் என்றால், ஆஸ்திரேலியாவின் தலை மேல் இருக்கும் இந்தோனேசியா வேறு பல வகையில் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது

மத்யரேகைக்கு அருகிலுள்ள இயற்கை வளம் மிகுந்த நாடு. அடிக்கடி, நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதியும் கூட. பெரும்பாலானவர்கள், தென்னிந்தியர்கள் போன்ற நிறத்தில், சற்றே உயரம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள்

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளின் கூட்டம் இந்தோனேசியா. அதில் தவறவிடக் கூடாத தீவு பாலி

நாங்கள் பாலிக்கு சென்றது 2010ம் ஆண்டில். பதினோரு ஆண்டுகள் ஆனாலும், பசுமையாய் மனதில் தாங்கும் அளவுக்கு, வித விதமான அனுபவங்கள். வாருங்கள் சற்றே பின்னால் போய் ரசிக்கலாம்

பயண ஆரம்பம்

சிங்கப்பூரிலிருந்து பாலியை இரண்டரை மணி நேர விமான பயணத்தில் அடைந்தோம். இந்த தீவில் வாழ்பவர்கள், சுற்றுலாப் பயணிகளை நம்பி தான் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

சுமார் ஆறு நாட்கள் தங்கினோம். பாலியை நீங்கள் நன்றாக சுற்றிப் பார்க்க, குறைந்தபட்சம் ஐந்தாறு நாட்கள் கண்டிப்பாக வேண்டும்

சிங்கப்பூரிலிருந்து கிளம்பும் போதே ஆங்கிலம் தெரிந்த ஒரு ஓட்டுனரின் தொடர்பு ஏற்கனவே பாலி சென்று வந்த நண்பர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்தது

பாலியின் கலாச்சார மையம் உபுட் (UPUD)

பெரும்பாலும் எல்லாரும் தங்குவது கடற்கரை பகுதியில். ஆனால் நாங்கள் தங்கியது பாலியின் கலாச்சார மையமான உபுட்(Ubud) பகுதியில்

ஏன் இங்கே தங்க வேண்டும்? உபுடில் இரவு நேரத்தில் நாட்டியத்தோடு கூடிய ராமாயண நாடகம் நடக்கும். அது மட்டுமல்ல, பாலியைப் பற்றிய நல்ல புரிதலைப் பெற, நாங்கள் அங்கிருந்த ஒருவரின் வீட்டில் தங்கினோம் (Home Stay) 

இந்த கோபுரத்தை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறதா?

பெரிதாய் கண்ணைப் பறிக்கும் வெளிச்சம் இல்லை. ஒரு கோபுரத்தின் முகப்பு போன்ற பகுதியில் அங்கங்கே சின்னச் சின்ன விளக்குகள், சில தீப்பந்தங்கள். பலரும் வட்டப்பாதையில் அமர்ந்து கொண்டிருந்தோம்.

பாலி என்ற தீவே, சுபாலி என்ற இராமாயணக் கதாபாத்திரமான  வாலியின் பெயரிலிருந்து மருவி வந்தது தான். பாலியில் வாழ்பவர்களின் 86% பேர், இந்து மதத்தை கடைபிடிப்பவர்கள்

இந்தோனேஷியா இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் நாடு. ஆனால் பாலியில் மட்டும் பத்தாயிரம் இந்து கோயில்களுக்கு மேல் இருக்கின்றன

கலை நிகழ்வுகள்

பாரம்பரிய இசை கலைஞர்கள் வாசிக்க, முதலில் லெகோங் நடனம் நடந்தது

ஒரு சில கை அசைவுகளில் கதக் நடனத்தை நினைவுபடுத்தியது லெகோங் நடனம். அத்தனை நடன மங்கைகளும், கைகளும் ஏன் கண் அசைவுகளும் கூட ஒரே லயத்தில் இருந்தன

அன்று கும்பகர்ணனை ராமன் எப்படி வதம் செய்தார் என்று காட்டினார்கள். தரையில் அனுமன் அமர்ந்திருப்பதைப் பாருங்கள்

என்னோடு இந்தோனேஷியா கிளையில் வேலை செய்த இந்தோனேசியர் ஒருவரின் பெயர் வேதேஸ்வர பாண்டு (Wedaswara Pandu)

இந்தியாவில் எங்கே எல்லாம் V என்ற ஆங்கில எழுத்தை பயன்படுத்துகிறீர்களோ, அங்கெல்லாம் அவர்கள் எழுத்தை  W என்ற பயன்படுத்துகிறார்கள்

அன்றைய இரவில் எங்கள் கனவில்  லெகோங் நடனம் ஆடிய அப்சரஸ் போன்ற இந்த பெண்களே வந்தார்கள்

பச்சை பசேல் வயல்கள்

மறுநாள் காலை நாங்கள் பச்சை பசேல் வயல்களுக்கு நடுவே சென்றோம். நம்ம ஊருக்கு வந்துவிட்டோமோ என்பது போல கண்ணை கவரும் பச்சை

கால்களை வாய்க்காலில் விட யாருக்குத் தான் பிடிக்காது?

எங்கள் மகன் பிறப்பதற்கு முன் சென்ற பயணம் இது. ஆளுக்கு ஒரு பக்கம் நானும் என் கணவரும் மட்டுமே புகைப்படங்களில் இருக்கிறோம் 

படிக்கட்டு முறை விவசாயம் – சுபாக்

பாலியில் படிக்கட்டு முறையில் ஒரு சில பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த முறைக்கு சுபாக் என்று பெயர். இது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று

நாங்கள் வேறொரு இயற்கை வேளாண் பண்ணைக்கு செல்லும் வழியில் இவற்றைப் பார்த்தோம். ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் வரும் சிப்பியிருக்கிறது முத்துமிருக்குது பாடலில் இடையில் வரும் இடத்தை நினைவுபடுத்தியது இந்த இடம் 

(Subak Irrigation method: in the background)

பாலி யானைகள்

அடுத்து யானைகளைப் பார்ப்போமா? பாலியில் யானைகள் இல்லை. ஜாவா பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் தான் இருக்கின்றன

உபுட் பகுதியில் உள்ள ஒரே யானை பூங்காவிற்கு நாங்கள் சென்றோம். ஆசிய யானையாக இருந்தாலும், இங்குள்ளவற்றுக்கு தலையில் மயிர் இல்லை.

யானைத் தம்பதிக்கு நடுவே நாங்கள் நிற்கும் இந்தபடம் மனதுக்கு மிகவும் பிடித்தமானது 

எரிமலை

எரிமலையைப் பற்றி படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் எல்லாம் அஞ்சாத ரகம். எப்படி என்று கேட்கிறீர்களா?

இந்த படத்தில், என்னவரின் பின்னால் இருக்கிறது எரிமலை. இவரோ, அதற்கு எதிர்பதமான இளநீரை வைத்துக் கொண்டிருக்கிறார் 😊

குனுங் என்றால் மலை. குனுங் பதூர் என்பது இந்த எரிமலையின் பெயர். சீற்றமுள்ள எரிமலை தான். அவ்வப்போது எரிமலை குழம்பை மிதமாக கக்கும் நிலையில் தான் இருக்கிறது. கடைசியாக 2000ஆம் ஆண்டில் எரிமலையிலிருந்து வந்த புகை முன்னூறு அடி வரை சென்றதாம்.

இந்த எரிமலையின் மேல் வரை நடந்து சென்று, சூரிய உதயம் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்

ஒரு கப் காபியின் விலை 30,000 ரூபாய்

பெரும்பாலும் தமிழர்கள் காபியை விரும்பிக் குடிப்பவர்கள். இங்கு, ஒரு கப் லுவாக் காபியின் விலை 30,000 இந்தோனேசிய ரூபாய்.

புனுகு பூனையின் இந்தோனேசியப் பெயர் தான் லுவாக். டென்பெசார் விமான நிலையம் இருக்கும் பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்திற்கு சென்றோம்.

அங்கே புனுகு பூனைகளை வளர்க்கிறார்கள். அவை காபிக் கொட்டைகளை சாப்பிட்டு, செரிக்காமல் மலமாய் வெளியேற்றிய கொட்டைகளின் மணத்திற்காகவே லுவாக் காபிக்கு அதிக மவுசு.

நீங்கள் சென்றால் ருசித்துத் திரும்பலாம் 

பாலி மிளகாய்

நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்தில் விளையாட்டாக ஒரு போட்டி வைத்தார்கள்.

அசாம் பகுதியில் வேலை பார்க்கும் ஒருவர் தன் தோட்டத்திலிருந்து, மிளகாயை எடுத்து வந்தார். போட்டிக்கு மற்றொரு இந்தோனேசியக்காரரும் பாலி மிளகாயைக் கொண்டு வந்தார்

காரத்துக்கான  போட்டியில் காரத்தில், அளவில் சிறியதான பாலி மிளகாய் வென்றது.

நாங்கள் சென்ற தோட்டத்திலிருந்து பாலி மிளகாய்களைப் பாருங்கள் 

ஆகம இந்து தர்மா

அடுத்ததாக ஒரு சில கோயில்களையும், தீர்த்தங்களும் கண்ணாரக் கண்டு ரசிக்கப் போகிறோம். அதற்கு, சற்றே இந்தோனேசியாவின் ஹிந்து மதத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

பாலியில் ஹிந்து மதம் ஆகம இந்து தர்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. வேதங்களும், உபநிஷத்துகளும் முக்கிய நூல்களாகப் போற்றப்படுகின்றன.

இந்தியாவிற்கும், இந்தோனேசியாவிற்கும், பல ஆயிரம் ஆண்டுகளாகவே தொடர்பு இருந்து வந்திருக்கிறது.

முன்னோர்களுக்கு நாம் செய்யும் பித்ரு பூஜை, பாலியிலும் கடைபிடிக்கப்படுகிறது.

பௌத்த மதத்தின் போதி சத்வர்களையும் ஹிந்து மக்கள் பாலியில் வழிபடுகிறார்கள்

இந்தியாவில் முக்கியத் தீர்த்தங்களில் நீராடுவது, எத்தனை புண்ணியம் வாய்ந்தது என்று நம்பப்படுகிறதோ, அதே நம்பிக்கை பாலி மக்களிடமும் இருக்கிறது.

பாலியில் கோயில்களுக்கு செல்லும் போது, முழு நீள உடை அணிவது முக்கியம். இல்லை என்றால், கேரளக் கோயில்களில் வாடகைக்கு வேட்டி கிடைப்பதை போல இங்கேயும் சரோங் கிடைக்கும். வாங்கி சுற்றிக் கொண்டு போக வேண்டும்

நான் முழு நீள உடை அணிந்திருந்தாலும், ஒரு சில கோயில்களில், இப்படி ஒரு சரோங் சுற்றிக் கொள்ள வேண்டும் என்றார்கள் 

தெருவோர மாடங்கள்

தெருவோரம் அங்கங்கே கீழே உள்ள படத்தில் இருப்பதை போல இப்படிப்பட்ட மாடங்களும்  இருந்தன.

விளக்கேற்றுவதற்காக இருக்குமோ என்று முத்தத்தில் நினைத்தேன்.

அசிந்தியா என்றால் வடமொழியில் சிந்தனைக்கு எட்டாத என்று பொருள். ப்ரஹ்மம் என்ற ஒன்றையே சிந்தனைக்கு எட்டாதது என்பார்கள்.

பாலியில் சந்நிதியில் எங்கும் சிலைகள் இல்லை. இது போன்ற மாடங்களே இறைவனுக்கான குறியீடாக இருக்கும் 

இது போன்ற மாடங்கள், வீட்டு வாசல்களில் இறைவனை நினைத்து வழிபட வைத்திருக்கிறார்கள்.

நம் அர்ச்சனைக்கூடையை போல அவர்களின் அர்ச்சனை தட்டுகள் இவை. இவை மாடங்களின் கீழ் தரையில் இருந்தன

பனை ஓலையில் செய்த இந்த தட்டில் உள்ள ஒவ்வொன்றும் மும்மூர்த்திகளை குறிக்கின்றன. வெற்றிலை, பூக்கள், பாக்கு என பலவும் இதில் இருக்கின்றன. இதை, கானங் சாராய் (Canang Sari) என்கிறார்கள் 

தீர்த்தா எம்புல்

நாங்கள் தீர்த்தா எம்புல் எனப்படும் ஒரு தீர்த்தத்திற்கு சென்றோம். இங்கு நீராடுவது, பாவங்களைப் போக்கும் என்று நம்பப்படுகிறது 

பிரம்ம ஸ்வரூபம்

ஹிந்து மதத்தினரின் ஒரே கடவுளாக அசிந்தியா எனப்படும் விதி வசா இருக்கிறார். ஒரு கோயிலின் முகப்பிலிருக்கும், அசிந்த்தியாவின் சிலை உங்களுக்காக. இவர் தான் பிரம்ம ஸ்வரூபம் 

புரா உலுவாது

புரா என்ற சொல் கோயிலைக் குறிக்கிறது. பண்டரிபுரம் என்பது பண்டரிநாதர் வாழும் புரம் இல்லையா? அப்படித் தான் இறைவன் கோயில் கொண்டுள்ள இடம் புரா

புரா உலுவாது என்ற கோயில், நீங்கள் பாலிக்கு சென்றால் தவற விடக் கூடாத ஒரு கோயில்.

கீழே இந்தியப் பெருங்கடல், மேலே கோயில் 

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று பாரதியார் பாடியதைப் போல இந்த இடத்தில் பாடத் தோன்றியது.

இது தான் கோயிலின் முக்கிய வாசல். ஒரு தீப்பிழம்பை இரண்டாய் வெட்டியது போல இருக்கும் அமைப்பு, நாம் எப்போதும் மனம், மொழி மெய் தூய்மையோடு, நெருப்பை போல சுத்தமாக கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பதற்காக என்று திரு.குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் சொன்னதாக அறிகிறேன்

துவார பாலகர்

துவார பாலகரின் வாய்வழியே செல்வதை போன்ற அமைப்பிலான கோயில் ஒன்றை வழியில் கண்டோம். இதற்குள்ளும் சென்று வந்தோம்

தானா லாட் சூரிய அஸ்தமனம்

அன்று மாலை நேர சூரிய அஸ்தமனம் மறக்க முடியாத ஒன்றானது. ‘தானா லாட்’ எனப்படும் மற்றொரு கோயில் அலைகளுக்கு நடுவே இருக்கிறது. இங்கு சென்று வருவதும் ஒரு பேரனுபவமாகவே இருக்கிறது

White Water Rafting

கோயில்களை தரிசித்ததோடு மட்டுமில்லாமல், ஆற்றில் ஒரு சவாரியும் போய் வந்தோம். தூரத்தில் அலைகளுக்கு மத்தியில் இருக்கும் பகுதி வரை சென்று சென்று உள்ளே பார்த்து வந்தோம். சூரியன் அஸ்தமிக்கும் வரை நின்று விட்டு அறைக்கு திரும்பினோம்.

ஆறு போன்ற ஒரு சிறிய பகுதியில் துடுப்பு போட்டுக் கொண்டு, ஒரு அருவிக்கு அருகில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது (White water rafting).

துடுப்பு போட்டபடி ஒரு மெல்லிய அருவிக்குக் கீழே அமர்ந்து கொண்டோம் 

பாலியின் சைவ சாப்பாடு

பாலியின் சைவ சாப்பாட்டையும்  உங்களுக்குக் காட்ட ஆசைப்படுகிறேன்

பரங்கிக்காய் தோசை. பூம்பூம் பாலி எனப்படும் ஒரு பாலினீஸ் சைவ உணவுக் கடையில் விற்கிறார்கள்.

பாலியில் பல இடங்களில் சமைக்கவும் கற்றுத் தருகிறார்கள். பல ஐரோப்பிய மக்கள், ஆர்வமாய் சமைத்து சாப்பிடுவதைப் பார்த்தோம்

ஜயத்ரதன் வதம்

ராமாயணமும் மகாபாரதமும் இன்றளவும் பாலியில் பேசப்படுகின்றன என்பதற்கான அடையாளமாய், சாலையோரமிருந்த ஜயத்ரதன் வதம் பற்றிய சிலையை பார்த்தபடியே விடைபெறுவோம் 

கொரோனா முடிந்த பின், மீண்டும் எங்கள் மகனோடு நாங்கள் ஒரு முறை பாலிக்கு செல்லப் போகிறோம். நீங்களும் தானே?

#ad

      

        

#ad 

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வெஜிடபிள் பிரியாணி – ✍ சியாமளா வெங்கட்ராமன்

    அறிவியல் கதைப் போட்டி 2021