in

வெஜிடபிள் பிரியாணி – ✍ சியாமளா வெங்கட்ராமன்

வெஜிடபிள் பிரியாணி

1980 வருடம். ஒரு நாள் எங்கள் பள்ளி ஸ்டாஃப் ரூமில், மதிய உணவு வேளையில் நாங்கள் அனைவரும் அவரவர் டிபன் பாக்சை திறந்தோம்

ஒரு ஆசிரியையின் டிபன் கேரியர் திறக்க ’கம்’மென்று பிரியாணியின் வாசனை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. எங்கள் எல்லோருடைய கண்களும் அவள் டிபன் பாக்ஸை பார்த்தது

அவள் உடனே “உங்கள் எல்லோருக்கும் சேர்த்து தான் கொண்டு வந்திருக்கிறேன்” என்று கூறி ஒவ்வொருவருக்கும் ஒரு கரண்டி அளவு பிரியாணி பறிமாறினாள். “ஆஹா ஆஹா பிரமாதம்” என்று அனைவரும் கூறினோம்

எனக்கு அதை எப்படியாவது செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆவல். உடனே அவளிடம் “இது செய்வது கஷ்டமா?” என்று கேட்டேன்

“மற்ற சமையலை விட இது மிகவும் சுலபம்” என்று கூறினாள். உடனே ஒரு பேப்பர் பென் சகிதம் அவள் அருகில் உட்கார்ந்தேன்

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை கவர இதை விட ஒரு வரப்பிரசாதம் எதுவும் இல்லை என்று கூறி அதன் செய்முறையை விளக்கினார்

அப்புறம் என்ன? அந்த Weekend எங்கள் வீட்டில் நான் செய்த பிரியாணியின் வாசனை வாசல் வரை வந்து மூக்கை துளைத்தது, அதை எழுத்தில் வர்ணிக்க முடியாது

அன்று முதல் இன்று வரை ‘ஆம்பூர் பிரியாணி’ என்று கூறுவது போல, என் பிள்ளைகள் ‘அம்மா பிரியாணி’ என்றும், என் பேரப் பிள்ளைகள் ‘பாட்டி பிரியாணி’ தான் வேண்டுமென்று கூறுவார்கள்

இது எங்கள் வீட்டின் ‘டிரேட் மார்க்’ மாதிரி ஆகி விட்டது. செய்வதும் சுலபம், உடலுக்கும் நல்லது

அதற்கு தேவையான பொருளையும் செய்முறையும் கூறுகிறேன். நீங்களும் இதை செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களின் பாராட்டைப் பெறுங்கள்

இனி ஹோட்டலுக்கு சென்றால் பிரியாணி ஆர்டர் செய்ய மாட்டார்கள் என்பது உறுதி

தேவையான பொருட்கள்

அரிசி – 2 கப் (பாஸ்மதி அரிசி இருந்தால் நல்லது)

எண்ணை – 1 டேபிள் ஸ்பூன்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

ஏலம் – 2

கிராம்பு – 2

பட்டை – 1 அங்குலம்

பிரியாணி இலை – 2 

முந்திரி – 5

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

கெட்டித்தயிர் – 2 கரண்டி

கசகசா – 2 டேபிள் ஸ்பூன்

தேவையான காய்கள்

கேரட் – 2

பீன்ஸ் – 1 கைப்பிடி

பெரிய வெங்காயம் – 2

உருளைக்கிழங்கு – 2

பச்சை பட்டாணி – ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் – 4

இஞ்சி – 1 அங்குலம்

பூண்டு – 10 பல்

தேங்காய் – 1 மூடி

கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி

புதினா – 2 கொத்து

செய்முறை

  1. அரிசியை களைந்து வடிகட்டி 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு ஒரு ஸ்பூன் நெய் விட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்
  2. பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை எண்ணெய் விட்டு வதக்கவும்
  3. சோம்பு ஏலம் கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, கசகசா, முந்திரி, தேங்காய், வதக்கிய பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி இவற்றை மிக்ஸியில் நைசாக அரைக்கவும்
  4. காய்களை சிறு துண்டுகளாக நறுக்கவும். கொஞ்சம் எண்ணெய் விட்டு வாணலியில் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். அத்துடன் தயிர் சேர்க்கவும்
  5. ரைஸ் குக்கரில் அரிசியை போட்டு 6 கப் தண்ணீர் விட்டு, வதக்கிய காய்கறிகளை போட்டு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு போட்டு மூடவும்
  6. அரிசி சாதம் பதம் வந்ததும், மீதமுள்ள நெய் மற்றும் கொத்தமல்லி. புதினா போட்டு அலங்கரிக்கவும்

ஆறியதும் பிரியாணி பரிமாறலாம். இதற்கு தயிர் வெங்காயம் சரியான சைடிஷ்

இதில் சேர்த்து உள்ள அனைத்து பொருட்களும் உடலுக்கு மிகவும் நல்லது. எனவே இதை குழந்தைகளுக்கும் தைரியமாக கொடுக்கலாம் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட்

#ad

      

        

#ad 

              

          

             
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    குதிரை வண்டித் தாத்தா…! (குழந்தைகளுக்கான கதைப் பாடல்) – ✍வளர்கவி

    பாலி பயண அனுபவம் ✈✈✈ – வித்யா அருண், சிங்கப்பூர்