சிற்றுண்டி உண்பதற்கு நகரி லுள்ள
சிறந்ததொரு உணவகம்தான் சென்ற போது
உற்றதொரு தோசைஇட்லி இலவ யம்தான்
உண்டாலோ வாந்திபேதி வருமென் றேதான்
நற்றமிழில் அனைவருமே படிக்கு மாறு
நன்றாக எழுதிவைத்த பலகை கண்டு
முற்றாக ஒருவருமே நுழைய வில்லை
முன்வைத்த கால்தன்னைப் பின்னே வைத்தார் !
எங்குமிந்தப் பேருந்தில் செல்வ தற்கே
எந்தவிதக் கட்டணமும் இல்லை யென்றே
அங்குநின்று நடத்துநர்தாம் கூவிக் கூவி
அழைத்ததினைக் கேட்டவர்கள் வியந்து பார்க்க
உங்களூர்தாம் வரும்போது நிறுத்து தற்கே
உரியதொரு *தடைப்பொறிதாம் இல்லை யென்று
சங்கூதல் போல்சொல்லக் கேட்ட வர்கள்
சத்தமின்றி அகன்றதன்றி ஏற வில்லை !
மருத்துவமனை வாசலிலே எந்த நோய்க்கும்
மருத்துவம்தான் இலவயமாய்ச் செய்வோ மென்றே
அருந்தமிழில் பெரிதாக எழுதி வைத்தே
அழைத்தார்கள் இருவரங்கே நின்று கொண்டு
மருத்துவத்தைக் காசின்றிப் பார்ப்போ மன்றி
மாவுயிர்க்கோ உறுதிதர இயலா தென்று
கருத்துரைத்த மருத்துவரின் சொல்லைக் கேட்டுக்
காததூரம் ஓடினார்கள் நின்றி ருந்தோர் !
குடிகுடியைக் கெடுக்குமென்றும் குடிப்ப ழக்கம்
குடும்பத்தை அழிக்குமென்றும் கடையின் முன்பு
படிக்கின்ற வகையினிலே கொட்டெ ழுத்தில்
பலகையினைப் பெரிதாக வைத்தி ருந்தும்
அடிமாடாய்க் கண்ணிருந்தும் குருட ராக
அலையலையாச் செல்கின்றார் வாங்கு தற்கே
மடிந்திடுவோம் என்றறிந்தும் விட்டில் போல
மயங்குகின்ற மக்களினை என்ன சொல்ல !
*தடைப்பொறி- பிரேக்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings