in ,

அன்பைத் தேடி (சிறுகதை) – ✍ அனுராஜ், போடிநாயக்கனூர்

அன்பைத் தேடி (சிறுகதை)

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 98)

டிரிங்… டிரிங்… என தொடர்ந்து அடித்த ஃபோனை எடுத்து காதில் வைத்தவராய், “ஹலோ.. இன்ஸ்பெக்டர் ராம் ஹியர்..” என்றார்.

“…..”

“என்ன இரட்டை தற்கொலையா..?”

“…..”

“எங்க? “

“…..”

“உடனே வர்றேன், யாரும் எதையும் கலைச்சிடாம பார்த்துக்கங்க”

“கந்தசாமி வண்டியை எடுங்க..மோகன் எல்டாம்ஸ் ரோட்ல ஒரு இன்ஸிடண்ட்..வாங்க போயிட்டு வந்திடலாம்..”

ஜீப் மூவரையும் சுமந்து கொண்டு விரைந்தது.

“சார்..என்ன கேஸ்..? ” என்றார் சப்இன்ஸ்பெக்டர் மோகன்.

“தற்கொலையாம், தாயும் மகளும் தற்கொலை பண்ணிக்கிட்டதா சொன்னாங்க”

ல்டாம்ஸ் சாலையில் ஜனத்திரள் நிரம்பி வழிய, காய்கறி மார்க்கெட்டிற்கு முன்னதாகவே ஜீப்பை நிறுத்தி விட்டு, மார்க்கெட்டிற்குள் புகுந்து சின்னதாய் இருந்த அந்த சந்திற்குள் நுழைந்தார்கள்.

வீட்டின் முன் ஏகமாய் ஆட்கள் கூடியிருக்க, போலீஸ் தலைகளைக் கண்டதும் ஒரு சிலர் மெல்ல நழுவினர்.

அடுக்குமாடி குடியிருப்பு

அதனை அணுகியதும் ஒருவன், “இரண்டாவது மாடில சார்”, என்றான் எதுவும் கேட்பதற்கு முன்பாகவே

படிகளில் ஏறி இரண்டாவது மாடியை அடைய, தற்கொலை நடந்த வீட்டின் முன் நின்றிருந்த பலரும் ஒதுங்கிக் கொள்ள, வீட்டிற்குள் நுழைந்தார்கள் காவலர்கள்.

நடுத்தர வயதுடைய ஒரு பெண்ணும், அவளது இளவயது மகளும் ஆளுக்கொரு  அறைகளில் இறந்து கிடந்தார்கள்.

“எனக்கு தகவல் தந்தது யாரு?” கூட்டத்தை நோக்கி கேட்டார் ராம்.

“நான் தான் சார்..”

“நீங்க..?”

“இந்த ஹவுஸோட ஓனர், என்  பேர் ராம்பத்ரன். அடுத்த ஃபோர்ஷன்ல தான் இருக்கேன். காலையிலே வாசல்ல போட்டிருந்த பால் பாக்கெட்டை கூட எடுக்கலை, அதான் என்னான்னு கேட்க, கதவை தட்டினேன். அதுவா திறந்துகிடுச்சு. வாசல்லே நின்னு கற்பகம்மா கற்பகம்மான்னு ரெண்டு தடவை கூப்பிட்டேன், பதில் இல்லை. சரின்னு உள்ளே நுழைஞ்சு பார்த்தா இப்படியிருக்கு, அதான் உடனே உங்களுக்கு தகவலைக் கொடுத்தேன்” என்றார் ராம்பத்ரன் மூச்சுவிடாமல். வெற்று பனியனுடன் நின்று கொண்டிருந்த அவருக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்கும்

“நடுத்தர வயசான அம்மா பேரு கற்பகமா..? அவங்க பெண்ணோட பேரு..?”

“நித்யா சார்..”

“தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு என்ன பிரச்சனையின்னு ஏதாவது தெரியுமா..?”

“இல்ல சார், இங்க யாரு சார் பக்கத்து வீட்ல அன்யோன்யமா பழகறாங்க. அவங்க அவங்க வீட்டுக் கதவை மூடிட்டு உள்ளேயே இருக்காங்க..”

“கற்பகத்தோட கணவன்..?”

“அவரு ஒரு வருசத்துக்கு முன்னாடி ஆக்ஸிடெண்ட்லே போய் சேர்ந்திட்டாரு..”

“கற்பகம் ஏதாவது வேலை பார்க்கறாங்களா..? அவங்க பெண்ணும் சின்ன பெண்ணா தான் தெரியுது”

“ஆமா சார்..கற்பகம் மயிலாப்பூர்லே ஏதோ பிரைவேட்  கம்பெனியிலே வேலை பார்க்கறதா அபார்ட்மெண்ட் மீட்டிங்லே சொன்ன ஞாபகம்”

“கற்பகம்மா பொண்ணு நித்யா என்ன  பண்றா?”

“காலேஜ்லே இரண்டாவது வருசமோ மூணாவது வருசமோ படிக்குது சார்”

“எந்த காலேஜ்?”

“ஏதோ பிரைவேட் காலேஜ்னு நினைக்கிறேன், சரியா தெரியல சார்”

“ம்..ம்..” எனக் கேட்டுக் கொண்ட ராம், “மோகன், ஆம்புலன்ஸூக்கு போன் போட்டாச்சா?”

“அப்பவே பண்ணிட்டேன் சார், வண்டி வந்திட்டு இருக்கும்..”

“மோகன்… எந்தப் பொருளையும் கலைச்சிடாம, ஏதாவது லெட்டர் அது இதுன்னு எழுதி வச்சது இருக்கா பாருங்க..”

“பார்த்திட்டேன் சார்… எந்த லெட்டரும் இல்ல”

ஆம்புலன்ஸ் சைரன் ஒலிக்க வந்து சேர, அங்கிருந்து நான்கு பணியாளர்கள், இரண்டு ஸ்டெரக்‌ஷருடன் வந்து சேர்ந்தார்கள்.

“பாடியை கவனமா கீழே இறக்குங்க..” என்றார் ராம்.

கற்பகத்தின் நாக்கு இலேசாய் வெளித்தள்ளியிருக்க, கண்களும் அரைகுறையாய் வெறித்திருந்தது. நித்யாவோ கண்களை இறுக மூடியபடி இறந்து போயிருந்தாள்.

இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு விரைய, வீட்டினைப் பூட்டி சீல் வைத்தார்கள் மோகனும், கந்தசாமியும்.

“மிஸ்டர் ராம்பத்ரன், கேஸ் முடியறவரைக்கும் வீட்டோட சாவி எங்ககிட்டே தானிருக்கும். இறந்து போன கற்பகம்மாவுக்கு உறவுன்னு சொல்லிக்க யாராவது உண்டா..? “

“எனக்குத் தெரிஞ்சு இல்லே சார்..அவங்க இந்த வீட்டுக்கு வந்து மூணு வருசமாச்சு..இதுவரை யாரும் அவங்க வீட்டுக்கு தேடி வந்த மாதிரி தெரியலை..”

“வசதி வாய்ப்பு எப்படி..? வாடகை எல்லாம் சரியாக வந்திடுமா..? “

“அதெல்லாம் சரியா கொடுத்துடுவாங்க சார்..”

“தற்கொலை பண்ணிகிட்டதுக்கு என்ன காரணம் இருக்க முடியும்னு நினைக்கறீங்க..?”

“தெரியலை சார்..அவங்களோட அவ்வளவா பேச்சுவார்த்தை வச்சுகிட்டது இல்லே..!  நீங்க எதுக்கும் கற்பகம்மா வேலை பார்த்த இடத்திலே விசாரிச்சீங்கன்னா ஏதாவது தகவல் கிடைக்கலாம்.”

 “ஓ.கே.மிஸ்டர் ராம்பத்ரன் , தகவல் ஏதாவது தேவைன்னா வர்றேன்.”

“ஓ.கே..சார்..”

படிகளில் ஷூ அதிர இறங்கிப் போனார்கள் மூவரும்.

மெரினா கடற்கரைச் சாலையில் அவளை உதிர்த்து விட்டுப் போன ஆட்டோவிலிருந்து இறங்கி நடந்தவள், கால்  போன போக்கில் நடந்தாள்.

கடற்கரையில் கூடியிருந்த ஜனத்திரளை அவள் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. அனைவரையும் ஒதுக்கி விலகி நடந்தவள், சற்று கூட்டம் குறைவாய் இருந்த பகுதியைச் சென்றடைந்ததும், மணற்பரப்பில் அமர்ந்தாள்.

எதிரே தெரிந்த நீலக்கடலோ, கரையை நோக்கி ஓடி வந்த வெண்நுரை அலைகளோ அவளது கவனத்தை கவர்ந்ததாக தெரியவில்லை. பலத்த சிந்தனையில் இருந்தவளது கண்ணில் இருந்து இலேசாய் கண்ணீர் வழிந்தோட, துடைத்துக் கொண்டாள்.

ஹேண்ட் பேக்கை திறந்து பார்த்தாள். உள்ளிருந்த ஒன்று அவளை கலவரப்படுத்தியிருக்க வேண்டும். சட்டென ஹேண்ட்பேக்கை மூடியதோடு, தன் கண்களையும் மூடினாள். விழிகளில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடற்கரை மணலில் நீண்ட நேரமாக அமர்ந்திருந்த அவளது முகத்தில் சோகம் அப்பியிருந்தது. வாழ்க்கையில் எந்தவொரு விசயத்திலும் பிடிப்பு ஏற்படவில்லை. கடந்த ஓராண்டு காலமாக வாழ்க்கையென்பது இயந்திரகதியாகத் தான் இருந்திருக்கிறது.

வாழ்க்கை மீது எரிச்சல் எரிச்சலாய் வந்தது. தன்னை மட்டும் ஏன் இறைவன் இவ்வளவு சோதிக்க வேண்டுமென பலமுறை தனக்குள் கேள்வி கேட்டு, அதற்கான பதில் தெரியாமல் திகைத்தும் போய்விட்டாள்.

வாழ்க்கை மீது சலிப்பு ஏற்பட்டு விட்டது. வாழ்க்கையில் கடந்து போய்விட்ட வசந்தங்கள் இனி வரப் போவதில்லை. நாள்தோறும் ஏதாவது ஒரு வகையான பிரச்சனைகளால் அல்லாடும் நிலை. சே..என்ன வாழ்க்கை இது..!

வானில் இலேசாய் கருமை படரத் தொடங்கியது. அவளது உள்ளத்திலும் அதே கருமை தான். ஆங்காங்கே சோடியம் வேப்பர் வெளிச்சத்தில் சாலைகள் நனைய, மெல்ல எழுந்தாள்

அவளது நடையில் ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்ட உறுதி தென்பட்டது. மெல்ல பேருந்து நிலையத்தை அடைந்தவள், மாநகராட்சி பேரூந்துக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

னது புல்லட்டை நிறுத்தி விட்டு ஸ்டேஷனுக்குள் நுழைந்த ராமிடம், “சார், நீங்க வந்தவுடனேயே ஜி.எச்.க்கு சீப் டாக்டர் வரச் சொன்னார்” என்றார் கந்தசாமி.

“யாரு டாக்டர் மித்ராவா..? “

“ஆமா சார்… ஆத்தாளும் மகளும் இறந்த கேஸ்லே உங்ககிட்டே என்னவோ சொல்லணுமாம்”

“ஆமா… போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டை ரெடி பண்ணி வச்சிருப்பாரு. அதை யாருகிட்டேயாவது கொடுத்து விடறதை விட்டுட்டு, வெட்டியா நம்மளை வேற வரச் சொல்லிட்டு இருக்கார். சரி ரிப்போர்ட் வந்திடுச்சுன்னா தற்கொலை  கேஸை குளோஸ் பண்ணிட்டு வேற ஜோலியைப் பார்க்கலாம்”

“104… ஸ்டேஷனைப் பார்த்துக்க. கந்தசாமி மோகன் வந்தார்னா, கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வரச் சொல்லு. நான் ஜி.எச்.க்கு போயிட்டு வந்துடறேன்” என்றவராய் வெளியேறி தனது புல்லட்டை ஓங்கி மிதித்தார். அது சென்னை நகரத் தெருக்களில் வண்டிகளோடு வண்டியாய் கலந்தது.

ரசுப் பொது மருத்துவமனையில் நுழைந்த ராம், அங்கிருந்த வேப்பமர நிழலில் தனது வண்டியை பார்க் செய்து விட்டு, தாழ்வாரத்தில் டக்..டக்..என தனது ஷூ அதிர நடந்தார்.

டாக்டர் மித்ராவின் அறைக்குள் நுழைந்தவரை, “வாங்க மிஸ்டர் ராம், உட்காருங்க” என்றார் டாக்டர் மித்ரா.

“என்ன டாக்டர், உடனே வரச் சொன்னீங்களாமே?”

“அட இருங்க மிஸ்டர் ராம், எப்ப பார்த்தாலும் பரபரன்னு, டீயா காப்பியா? எது சாப்பிடறீ்ங்க? சொல்லுங்க”

“டீயே போதும்..”

தன் முன் இருந்த மணியை அழுத்தியதும் எட்டிப் பார்த்தவனிடம், “இரண்டு டீ..” என்றவர், “இன்ஸ்பெக்டர் உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்” என்றார் டாக்டர் மித்ரா.

“அதானே, நீங்களாவது ஷாக் கொடுக்காம இருக்கறதாவது. என்ன விசயம் சொல்லுங்க?”

“ராம் நீங்க நினைச்சிட்டு இருக்கற மாதிரி நேத்து அனுப்பின தாய் மகள் கேஸ் தற்கொலை கேஸ் இல்ல” என்றார் திடுமென டாக்டர் மித்ரா.

“டாக்டர் ..என்ன சொல்றீங்க..?”

“நேத்து நீங்க அனுப்பின பாடியிலே ஒண்ணு தற்கொலை பண்ணிகிட்ட கேஸ், ஆனா இன்னொன்னு ப்யூர்லி மர்டர்”

“என்ன சொல்றீங்க..?”

“எஸ் மிஸ்டர் ராம்… அம்மாவோட பெயர் கற்பகம் தானே? அவ தற்கொலை பண்ணியிருக்கா, ஆனா மகள் நித்யா கொலை செய்யப்பட்டிருக்கா. பி.எம்.ரிப்போர்ட் அதை தான் சொல்லுது”

“டாக்டர் பி.எம். ரிப்போர்ட் ரிசல்ட் என்ன..?”

“நித்யா ஹெவி பாய்சனை சாப்பிட்டு இருக்கா, உடனே அவளோட உயிரும் போயிருக்கு. கற்பகம் சேலையிலே சுருக்க மாட்டி தொங்கியிருக்கணும்”

“டாக்டர், பாய்சனை விரும்பி சாப்பிட்டு இருந்தா எப்படி கொலையாகும்?”

“ராம், யாராவது பாய்சனை விரும்பி சாப்பிடுவாங்களா? நீங்க சொல்ற மாதிரி தெரிஞ்சுட்டே பாய்சனை எடுத்தா வாமிட்டிங் வந்திருக்கும். மனசு பாய்சனை உள்ள போக விடாது. ஆனா இங்கே கொலையானவங்களுக்கு தெரியாம கொடுக்கப் பட்டிருக்கு, ஜீரணமாகாம இருந்த உணவோட பாய்சன் கலந்திருக்கு”

“டாக்டர்… கற்பகமே மகளை கொன்னுருக்கலாம்னு சொல்றீங்களா?”

“அதெப்படி சொல்ல முடியும்? எந்த தாய்  பெத்த மகளை கொல்லப் போறா? ஒரு வேளை மகள் கொலையாகி இறந்த அதிர்ச்சியில கூட தாய் தற்கொலை பண்ணியிருக்கலாம்”

“ஆக… அம்மா தற்கொலை பண்ணிகிட்டா, பெண்ணோ கொலை செய்யப் பட்டிருக்கா”

“ஆமா… அது தான் நடந்திருக்கு”

“கேஸை முடிச்சு கை கழுவலாம்னா விடமாட்டீங்களே”

“நான் என்ன செய்யறது ராம்… அது உங்க ராசி” என்று விட்டு டாக்டர் மித்ரா நகைத்தார்

“சரி வர்றேன் டாக்டர், ரிப்போர்ட் ரெடியா இருக்கா?”

“ஓ… உங்க முன்னாடி இருக்கறது அது தான்”

“ஓ.கே தாங்க்ஸ் டாக்டர், நான் வர்றேன்”

கைகுலுக்கி விடைபெற்றார் ராம் 

ஸ்டேஷனுக்குள் நுழைந்த ராம் அயர்ச்சியுடன் தன் மேசை மீது பி.எம்.ரிப்போர்டை எறிந்தவராய், அங்கிருந்த வாட்டர் பாட்டிலைத் திறந்து மடக்மடக்கென தண்ணீரைக் குடித்தார்.

நித்யா கொலை செய்யப்பட்டிருக்கா… ஏன்? அவளது கொலையை பார்த்த கற்பகம், ஒருவேளை மனவேதனையிலே தற்கொலை பண்ணிக்கிட்டாளா?

இருக்கலாம், மகளோட சாவு அம்மாவை பாதிச்சு இருக்கலாம். ஆனா டாக்டர் சொல்லும் போது, நித்யா விசம் குடிச்சு இறந்திட்டதா சொல்லியிருக்கார்

அவள் விசத்தை குடிச்சாளா? இல்ல யாராவது விசத்தை அவளுக்குத் தெரியாம கொடுத்தாங்களா? இது தெரிஞ்சுக்க வேண்டிய விசயம் தான்.  ஒண்ணு மட்டும் தெரியுது, மகளோட சாவை பார்த்த மனவேதனையிலே தாய் இறந்திருக்கணும்

போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டும் அதை உறுதிபடுத்தற மாதிரியிருக்கு. மகள் இறந்த பின்னாடி தான் தாய் இறந்திருக்கறதா தெளிவா ரிப்போர்ட் சொல்லுது

அப்படின்னா… நித்யா ஏன் செத்தா? ஏதாவது லவ் பெய்லியரா இருக்குமா? இரண்டாவது வருசம் காலேஜ் படிக்கறதா வீட்டுக்காரர் சொல்லியிருக்கார்

பார்க்கலாம்… நித்யாவோட காலேஜூக்கு போய் விசாரிக்கணும், அப்படியே கற்பகம் வேலை பார்க்கிற இடத்திலேயும் விசாரிக்கணும்

‘ராகவ் கார்மெண்ட்ஸ்’ என்ற பிளாஸ்டிக் போர்டு பெரிதாக தெரிந்த அந்த கம்பெனிக்குள் நுழைந்தார் ராம்

கோதண்டம் என்ற பெயரைப் பார்த்ததும், வயதானவராக இருப்பாரோ என எண்ணியதற்கு மாறாக, அந்நிறுவன முதலாளி  இளைஞனாய் இருந்தார்.

ராமை வரவேற்றதோடு, குளிர்பானம் ஒன்றையும் அவரது கையில் கொடுத்தபடி, “சார்… நான் இங்கே வேலை பார்க்கற வொர்க்கர்ஸ்ஸை சந்திக்கறதே மன்திலி சேலரி கொடுக்கும் போது மட்டுந்தான். மத்தபடி எல்லாரும் அவங்கவங்க செக்‌ஷன்லே தான் இருப்பாங்க. கட்டிங் மாஸ்டர்ஸ் மட்டும் தான் வந்து டிசைன் கேட்டுட்டு போவாரு

நீங்க சொல்ற கற்பகம் ஸ்டிச்சிங்  செக்‌ஷன்லே வேலை பார்த்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். அங்க சூப்பர்வைசர் ஒரு லேடி தான், பேரு மைதிலி. அவங்களை வரச் சொல்றேன், நீங்க அவங்ககிட்ட எதுன்னாலும் கேட்டு தெளிவு படுத்திக்கலாம்” என்றபடியே உள்ளே பார்த்து, “செல்வம்… சூப்பர்வைசர் மைதிலியை வரச் சொல்லு” என்றார் கோதண்டம்.

“வணக்கம் சார்” என்று வந்து நின்றவள், முப்பது வயதிற்குள் இருப்பாள்.

“வணக்கம், எனக்கு நீங்கள் கொஞ்சம் தகவலை சொல்லி உதவணும்”

“சொல்லுங்க சார்”

“உங்க செக்‌ஷன்ல வேலை பார்த்த கற்பகத்தைப் பத்திச் சொல்லணும்”

“கற்பகமா… அவங்க யாருகிட்டேயும் சரியா பேச மாட்டாங்க. அவங்க வேலையை முடிச்சுட்டு அமைதியா போயிடுவாங்க. கேண்டீன்லே சாப்பிடறப்பவும் தனியா உட்கார்ந்து தான் சாப்பிடுவாங்க. கடந்த ஒரு வருசமாவே அவங்க செயல்பாடுகள் நிறைய மாறிப் போச்சு சார்”

“இப்படி கூட ஒரு பெண்ணாலே இருக்க முடியுமா..?”

“இல்ல சார், அவங்களும் கலகலப்பா இருந்தவங்க தான். ஒரு வருசத்துக்கு முன்னாடி  அவங்க வீட்டுக்காரர் இறந்ததில இருந்து, அவங்க கேரக்டரே மாறிப் போச்சு. வாழ்க்கையே தொலைஞ்ச மாதிரி சோகமாவே இருப்பாங்க”

“அவங்களுக்கு சொந்தம்ன்னு சொல்லிக்கறதுக்கு…?”

“யாருமில்லைன்னு சொன்ன ஞாபகம் சார். அவங்க வீட்டுக்காரர் டிரைவரா இருந்தவர், லவ் மேரேஜ்னு சொன்னாங்க. அது ரெண்டு பேர் வீட்டிலேயும்  பிடிக்கலைன்னு ஒதுங்கி வந்துட்டதா முன்ன சொல்லியிருக்காங்க. ஆனா இப்ப இந்த ஒரு வருசமா அவங்க முகத்திலே நான் சந்தோசத்தையே பார்க்கலை”

“ம்…அவங்களோட சொந்த ஊர் எதுன்னு  தெரியுமா..?”

“இல்லை சார், தெரியாது”

“நன்றி” என்று விட்டு, ராகவ் கார்மெண்ட்ஸை விட்டு வெளியேறிய ராமிற்கு, கற்பகம் கேஸானது தொடங்கிய இடத்திலேயே நின்று கொண்டிருப்பதாக பட்டது.

நித்யா படிக்கும் கல்லூரிக்குள் நுழைந்தார் ராம்

கண்ணாடி பிரேமுக்குள் தெரிந்த கண்ணில், கண்டிப்பு தெரிந்தது கல்லூரி முதல்வரிடம்

“மேடம், சமீபத்திலே இறந்த நித்யா உங்க காலேஜ்லே தான படிக்கறாங்க?”

“ஆமா சார்… பி.ஏ. எகானமிக்ஸ் இரண்டாம் வருஷம் படிக்கிறா”

“நித்யாவிற்கு பிரெண்ட்ஸ்ன்னு சொல்லிக்கறதுக்கு யாரெல்லாம் இருக்காங்க”

“ஒன் மினிட் சார், அவங்க மேடம் கல்யாணியை கேட்டுட்டு சொல்றேன்” என்றவராய், முதல்வர் செல்போனில் ஒரு எண்ணில் தொடர்பு கொண்டு பேசிவிட்டு வைத்தவர்

“சார்… நித்யா பெரும்பாலும் தேவி, ரம்யான்னு ரெண்டு பேரோடு தான் நெருக்கமா பழகுவாளாம். அவங்க அட்ரஸை தர்றேன், நீங்க எந்த விபரம்னாலும் நேரடியா கேட்டு தெரிஞ்சுக்கலாம்” என்றபடி

“பரமசிவம், பி.ஏ.எகானமிக்ஸ் லெட்ஜர்லே, செகண்ட் இயர் படிக்கற தேவி, ரம்யாவோட அட்ரஸ், செல் நம்பர் எல்லாம் குறிச்சு எடுத்திட்டு வாங்க” என்றார் பியூனிடம்.

சில நிமிடங்களில் முகவரி எழுதிய காகிதத்தை பரமசிவத்திடம் இருந்து வாங்கி, ராமிடம் நீட்டிய கல்லூரி முதல்வருக்கு நன்றியை தெரிவித்து விட்டு வெளியேறினார் ராம்.

ன் எதிரே கைகட்டியபடி நின்றிருந்த இளம்பெண்ணை கவனித்தவராய், “நித்யா உன்னோட பிரெண்டா..? உன்னோட பேர் தான் தேவியா?” என்றார் இன்ஸ்பெக்டர் ராம்.

“ஆமா சார், நித்யாவோட பிரெண்ட் தான் நான். என்கிட்டேயும், ரம்யா கிட்டேயும் தான் அவ நெருங்கி பழகுவா”

“சரி, நித்யாவுக்கு காதல் காதலன்னு…”

“அதெல்லாம் கிடையாது சார்”

“நித்யாவுக்கு வேற வகையிலே யாராவது எதிரிங்க உண்டா?”

“இல்லை சார், அமைதியான பொண்ணு. காலேஜ் விட்டாச்சுன்னா உடனே வீட்டுக்குப் போயிடுவா, நாங்க கூப்பிட்டாலும் எங்க வீட்டுக்கு கூட வரமாட்டா”

“சரி நான் வர்றேன், நித்யாவை பற்றி வேற தகவல் கிடைச்சா  எனக்கு தெரியப்படுத்தணும்”

“சரிங்க சார்”

டுத்தபடியாக ராமின் புல்லட் வளசரவாக்கத்தில் இருந்த ரம்யாவின் வீட்டை நோக்கி ஓடியது

தன் முன் நின்றிருந்த ரம்யாவும், தேவியின் கருத்தையே பிரதிபலித்தாள். நித்யாவைப் பற்றி இருவரும் கூறிய கருத்துக்கள் அவளை ஒழுக்கமுள்ள அமைதியான பெண்ணாக சித்தரித்தது.

நல்ல பெண்ணாக இருக்க கூடிய நித்யா ஏன் கொலை செய்யப்பட்டாள்..? அவளைக் கொன்றது யார்? பல்வேறு வகையான ஊகங்கள் செய்தும் முடிவுக்கு வர இயலவில்லை

இரண்டு சிகரெட் பாக்கெட் காலியாகி இருந்தது. தலையை வலித்தது. கொலைக்கான காரணம் தெரிந்து விட்டால், தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிப்பது எளிதாகி விடும். ஆனால் நித்யா கொலையில் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.

அப்போது ராமின் அலைபேசி சிணுங்கியது.

“இன்ஸ்பெக்டர் ராம் ஹியர்”

“….”

“குட் ஈவ்னிங் சார்..”

“….”

“இல்ல சார், அம்மாளும், மகளும் இறந்த கேஸ்லே எந்த முன்னேற்றமும் தெரியலை சார். அம்மா வேலை பார்க்கற கார்மெண்ட்ஸூக்கும், மகளோட பிரெண்ட்ஸ் வீட்டுக்கும் அலைஞ்சது தான் மிச்சம்”

“….”

“என்ன சார் சொல்றீங்க?”

“….”

“கேஸ் முடிஞ்ச மாதிரியா, நான் அங்கே வரணுமா..? உடனே வர்றேன்” அலைபேசியை அணைத்த ராமிற்கு, ஆச்சர்யமாக இருந்தது.

கமிஷனர் இந்த கேஸ் முடிந்து விட்டதாக சொல்கிறாரே, அப்படி என்ன எவிடென்ஸ் அவருக்கு கிடைச்சிருக்கும்

கமிஷனர் அலுவலகம் நோக்கி ராமின் புல்லட் பறந்தது.

“வாங்க மிஸ்டர் ராம்… உட்காருங்க”

“என்னங்க சார் கற்பகத்தோட கேஸ் முடிஞ்சிட்டதா சொன்னீங்களே, அப்படி என்ன சார் எவிடென்ஸ் திடீர்ன்னு கிடைச்சது?” ஆர்வம் மின்னியது ராமின் கண்களில்.

“மிஸ்டர் ராம், நீங்களே படிச்சுப் பாருங்க” என்றவராய், கமிஷனர் ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.

கமிஷனர் நீட்டிய கடிதத்தில் பார்வையை ஓட்டினார் ராம்

“உயர்திரு போலீஸ் கமிஷனர் அவர்களுக்கு,

துர்பாக்கியசாலி கற்பகம் எழுதிக் கொண்டது. இக்கடிதம் உங்கள் கைகளில் கிடைக்கும் பொழுது நானும், எனது மகளும் இந்த உலகை விட்டு வெளியேறியிருப்போம். இந்த அழகிய உலகம் எங்களுக்கு மட்டும் ஏனோ துயரத்தையே வழங்கியிருக்கிறது.

காதலில் கை பிடித்த கணவனோடு வாழ்வதை, உறவுகள் வெறுத்து விரட்டி அடித்தனர். மகள் பிறந்த பின் லேசாய் எட்டிப் பார்த்த மகிழ்ச்சியும், அவள் கல்லூரியில் சேர்ந்த பின், எனது கணவனின் மறைவினால் தொலைந்து போய்விட்டது

வாழ்க்கையே வெறுத்துப் போய் வேண்டாவெறுப்பாக வாழ்கிறோம். எங்களிடம் அன்பு செலுத்தும் எந்தவொரு ஜீவனையும் இதுவரை நான் கண்ணில் கண்டதில்லை. அதனாலேயே அனைவரிடத்தில் இருந்தும் ஒதுங்கியே வாழ்கிறேன்.

என் கணவரது மறைவிற்கு பின், வாழும் வாழ்க்கையே அர்த்தமற்றதாக போய்விட்டது. நடைபிணமாக எத்தனை நாள் தான் வாழ்வது?  நான் மட்டும் இந்த உலகின் பயணத்தை முடித்துக் கொள்ளலாம் என நினைத்தால், என் மகள்… அவளை தனியாக இந்த பாழும் உலகில் விட்டுச் செல்ல மனமில்லை

எனவே தான், மன்னித்துக் கொள்ளுங்கள், அவளை விசம் கொடுத்து கொல்ல முடிவு செய்து விட்டேன்.

அவள் தற்கொலை என்பது கோழைகளின் செயல் என்பாள். நான் கோழையாகவே இருந்து விட்டுப் போகிறேன். அன்பில்லாத இந்த கொடூர உலகத்தை விட்டு அன்பைத் தேடி, என் கரங்களைப் பற்றிய என்னவரைத் தேடி பயணிக்கப் போகிறேன்

கூடவே எனது மகளையும் அழைத்துக் கொண்டு செல்கிறேன். எங்களுக்கு இவ்வுலகில் உறவுகள் என்று யாருமில்லை. எனவே எங்களது மரணத்திற்குப் பின் உரிய முறையில் தகனம் செய்து விடுங்கள்.

எங்களது (எனது) இந்த முடிவு சுயமாய் சிந்தித்து எடுத்த முடிவு தான். இந்த உலகத்தில் கிடைக்காத அன்பையும், நிம்மதியையும் தேடிக் கிளம்புகிறேன். நன்றி வணக்கம்

இப்படிக்கு,

கற்பகம்”

கடிதத்தைப் படித்து முடித்த ராம், செயலற்று நின்று விட்டார்

“என்ன சார் இப்படி பண்ணிட்டாங்க. அவங்க பொண்ணுக்காகவாவது யோசிச்சு இருக்கணும்”

“உண்மை தான் ராம், மனசுவிட்டு யார்கிட்டயாவது பேசி இருந்தா மனம்  மாறி இருக்க வாய்ப்பிருக்கு”

“எஸ் சார், ஏதாச்சும் கவுன்சலிங் எடுத்து இருக்கணும். கணவர் மேல அன்பு இருக்க வேண்டியது தான், ஆனாலும் அந்தம்மா செஞ்சது பெரிய தப்பு. ஒருவேளை மகள் செத்து இவங்க பொழைச்சு இருந்தா என்னாகிறது”

“அது மட்டுமில்ல, செத்து போறவங்களை மிஸ் பண்ற எல்லாரும் சாகணும்னு முடிவு எடுத்தா, இந்த உலகமே சுடுகாடா தான் இருக்கும்”

“வாஸ்துவம் தான் சார், ஒரு நிமிச மன பலவீனத்துனால, வாழ வேண்டிய அந்த சின்ன பொண்ணும் சேந்து போனது தான் பெரிய கொடுமை”

“ஆமாம் ராம், இது போல நடக்காம இருக்கணும்னா, சின்ன வயசுல இருந்தே கஷ்டங்களை தாங்கும் மனபக்குவதோட பிள்ளைகளை பெற்றோர் வளர்க்கணும்”

“சரியா சொன்னீங்க சார், ஓகே சார், நான் கிளம்பறேன்” என விடைபெற்றார் இன்ஸ்பெக்டர் ராம் 

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

12 Comments

  1. வணிக உலகத்தில் ஏது அன்பு
    சிறப்பானக் கதை
    அனைவரும் படிக்க வேண்டும்

  2. சோகமான முடிவு.. விறுவிறுப்பான கதை… உண்மை சம்பவத்தை படிப்பது மாதிரியான உணர்வு.. வாழ்த்துக்கள்.. ஐயா

இசை (சிறுகதை) – ✍ மது ஸ்ரீதரன், சென்னை

நிராகரிப்பு !! (சிறுகதை) – ✍ மா. சித்திவினாயகம், கனடா