in

அல்வா (சிறுகதை) – ✍ கார்த்திக் கிருபாகரன்

அல்வா (சிறுகதை)

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ந்தி சாயும் நேரம் நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே உள்ள ஒரு கடை மட்டும் மூடிக் கிடக்கிறது!

அக்கடையின் பக்கத்து கடைக்காரர்கள் எல்லாம், “ஒரிஜினல் அல்வா, சுடச்சுட அல்வா” என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள்

இது கொரோனா காலம். மாலை ஆறு மணி வரை கடை திறப்பதற்க்கு அனுமதி என ஊரடங்கில் சில தளர்வுகள் இருந்தது. அதனால் மாலை ஆறுக்குள் வியாபாரம் ஆக வேண்டுமென்று கடைக்காரர்கள் போட்டி போட்டு கத்தினார்கள்.

அங்கே நடமாடுகிற மக்கள் யாரும் அந்தக் குரல்களைப் பொருட்படுத்தவே இல்லை. வேணுவும் அதே போல பொருட்படுத்தாமல் நின்றார்.

மாலை வெயிலின் தாக்கம் தனிந்திருந்தாலும், சற்று புழுக்கத்தால் சலிப்புடன் நின்றாள் கீதா. ஆனால் மகன் கவிபாரதி, அப்பாவை கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

நெல்லையப்பரை தரிசிக்க, விடியற்காலையே கிளம்பி, கார் மூலம் மதுரை வழியாக திருநெல்வேலி மதியம் 3 மணிக்கு வந்து சேர்ந்தார்கள். விடியற்காலை முதலே சாக்லேட் கேட்டு அப்பாவை நச்சரித்தான் கவி.

“இந்தா வாங்கி தரேன்” என ஏமாத்தி திருநெல்வேலி வரை கூட்டி வந்துட்டார் வேணு

நான்கு மணிக்கு கோவில் நடை திறந்தது. மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. கோவில் உள்ளே செல்ல முக்கவசம் அணிய சொல்லியும், கைகளில் சாணிடைசர் அடித்தும் அனுப்பினார்கள். முக்கவசம் அணியாத ஆட்களுக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

வேணுவும், அவரது மனைவி மகனும் முக்கவசத்தோடு கோவிலுக்குள் சென்றனர். தரிசனத்திற்கு பிறகு கோவில் வெளிமண்டபத்தில் சற்று நேரம் அமர்ந்திருந்தார்கள்

‘சாமி தரிசனத்துக்கு பின், வீட்டுக்கு புறப்படாமல் ஏன் இப்புடி காக்க வைத்திருக்கிறாரு’ என கோபித்துக் கொண்டாள் கீதா.

காலையிலிருந்து ‘சாக்லேட் வேணும்’ என  சுட்டி பையன் கவி அடம் பிடித்து கொண்டிருந்தான்.

மகன் அழுவதை பார்த்து, பர்சிலிருந்து பணம் எடுத்து, அருகில் உள்ள கடையில் சாக்லேட் வாங்க சென்றாள் கீதா.

அவளை நிறுத்தி,  “கொஞ்சம் பொறு, உனக்கு  சுவையான ஒரு இனிப்பு வாங்கித் தருகிறேன்” என மகனை சமாதானப்படுத்தினார்.

ஆனால் மகன் பிடிவாதமாக, “நா சாக்லேட் தான் திம்பேன், வேற வாங்கி குடுத்தா திங்க மாட்டேன்” என்றான்.

வேணு எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாக இருந்தான். சாக்லேட் கேட்டு கவியின் நச்சரிப்பு கீதாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

கோபமாக, “புள்ளக்கி வாங்கி தர அம்பது ரூபா செலவு பண்ணா கொரஞ்சுட மாட்டீங்கன்னு” திட்டினாள். அவளின் வார்த்தைகளை கேட்டும், கவியின் நச்சரிப்பை கவனித்தும் அமைதியாகவே நின்றார் வேணு.

சற்று நேரத்தில் சூரியன் மறைந்து, வெயில் உறங்க ஆரம்பித்தது. சடசடவென்று ஆங்காங்கே ஒரு சிறு கூட்டம் பரபரத்தது.

அங்கு ஒரு கடையின் மரப்பலகைகள் ஒவ்வொன்றாக எடுத்து வைக்கப்படுகிறது. ஆங்காங்கே கூட்டமாக நின்றவர்கள் அந்த கடை வாசலுக்கு வந்து நிற்கிறார்கள்.

கூட்டம் ஒழுங்காகிறது. கூட்டத்தில் வேணுவும் சென்று நின்றார்.பெண்கள் வரிசையில் கீதாவையும் நிற்க சொன்னார், அவளும் சென்று நின்றாள்.

ரேக்ஷனில் சர்க்கரையோ மண்ணெண்ணேயோ போடுகிறார்கள் என்றால் கூட, இரைச்சல் அதிகம் கேட்கும். ஆனால் வரிசையில் நின்றவர்களிடம் வேறு எந்த சத்தங்களும் இல்லை.

“நாலு அரை, பதினைஞ்சு அரை, ஒரு கிலோ ரெண்டு, சாப்பிட நூறு” என்று இந்தக் குரல்கள் மட்டுமே எழுந்தது. பத்து, பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின் மூவரும் சாப்பிட நூறு கிராம், இரண்டு கிலோ பார்சல் என வாங்கி வந்தார்கள்.

சாக்லேட் வாங்கி தராத கோபம், முகம் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தான் கவி.

“என் கண்ணு… என் ராசா… அப்பா உனக்காக சூப்பரா ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு. இதை சாப்புட்டு பாரு, எப்படி இருக்கும் தெரியுமா” என்று சிறு வயதிலிருந்து பலமுறை சுவைத்த அந்த சுவையை, அதில் கிடைக்கும் ருசியை தன் மகனும் அனுபவிக்க வேண்டும் என அவனை சாப்பிட சமாதானப் படுத்தினார்.

“எனக்கு சாக்லேட் வாங்கி தரலேல்ல, நான் இதை சாப்பிட மாட்டேன் போ” என கோவித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் கவி.

சாப்பிடுவதற்கு வாங்கிய அல்வா, சிறிய வெண்மஞ்சள் நிற வாழை இலையில் பழைய பியர்ஸ் சோப் நிறத்தில், தண்ணியாகவும் இல்லாமல், கெட்டியாகவும் இல்லாமல் தொட்டால் நழுவுகிற விலங்கு மீன் மாதிரி வழுக்குகிற அதுவும் சுடச் சுட வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றி நெல்லையப்பரைப் பார்த்து திரும்பி நின்றபடி வலது கையின் இரு விரல்களால் மட்டுமே அள்ளி கவியின் வாயினை மெல்ல திறந்து இட்டார்.

“ஹீம்ம்ம்…” என தன் வாயை இறுக்கி மூடியிருந்த கவியின் வாய் இடுக்கு வழியே நுழைந்த சிறு அல்வா, ஆஹா.! இதுவென்ன ஜாலம் பல்லில் படாமல் நாக்கின் அத்தனை சுவை நரம்புகளையெல்லாம் சுகிக்க வைக்கிற அந்த சுவை வழுக்கிக் கொண்டுச் சென்றது

ருசி கண்ட பூனை போல, நாக்கை வெளியில் எடுத்து சுழற்றி, அந்த பிஞ்சு உதட்டின் ஓரம் இருந்த அல்வாவை வலித்து, சுவையை முற்றிலும் உணர்ந்தவன் போல் “ஸ்….தப்” என நாக்கில் செடுக்கு போட்டு ருசித்து, அப்பாவிடம் அடுத்த வாய் கேட்டேன்.

அவரும் சந்தோஷமாக ஊட்டி விட, அவனுக்கு இருட்டுக்கடை அல்வா பிடித்துப் போனது.

ஏதோ பெரிய சாகசம் செய்தார் போல் தன் மனைவியை பார்த்து, “அம்பது ரூபா சாக்லேட்டு வியாதிய தான் குடுக்கும். ஆனா இது மாறி ருசி கிடைக்குமா?  நம்ம குழந்தைகளுக்கு நம்மூர் தின்பண்டங்கள ஊட்டி வளக்கனும்” என்றார்.

ஆனால் அல்வா சுவையில் லயித்து, “பேசாம சாப்பிடுங்க” என்றாள் கீதா

லேசான புன்சிரிப்புடன் வேணுவும் அல்வாவை ருசித்தார்.

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

                            

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அவளுக்கும் மனமுண்டு ❤ (சிறுகதை) – ✍ கவிஞர் இரஜகை நிலவன், மும்பை

    சமயோசிதம் (சிறுகதை) – ✍ பொன்னப்பன், நாகர்கோவில்