தொடர்கதைகள்

ஆழியின் காதலி 💕(பகுதி 1) -✍விபா விஷா

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ன்று சென்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தது

இந்தியாவின் பிரபல கடல் ஆராய்ச்சி நிறுவனமான ‘அர்னவ் கடல் ஆராய்ச்சி கழகத்தின்’ நீர்மூழ்கிக் கப்பல், இந்தியப் பெருங்கடலில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் போது, கரையுடனான அதன் தொடர்பை (Signal) இழந்து விட்டிருந்தது

அந்தக் கப்பல் எந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது என வெளிப்படையாகத் தெரியாத போதும், அதன் ஆராய்ச்சியினால் அர்னவ் நிறுவனத்திற்கு பெரிய பலன் கிடைக்கிறது  என்பது மட்டும் நிஜம் 

அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி வேலவ மூர்த்தி பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்

“எங்க கம்பெனி இந்தியப் பெருங்கடல் பற்றிய முக்கியமான ஆராய்ச்சியில ஈடுபட்டிருந்தது. ஆனால் அசம்பாவிதமாக இன்று காலை எங்கள் நீர்மூழ்கிக் கப்பல் கரையுடனான தொடர்பை முழுவதும் இழந்து விட்டது” என்றார் வேலவமூர்த்தி

“சார்… அப்ப அந்தக் கப்பல்ல இருந்தவங்க என்ன ஆனாங்க?” என நிருபர் கேட்க 

“அவங்கள பற்றிய எந்த தகவலும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை, ஆனால் விரைவில் விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கிறோம்” என பதிலளித்தார் வேலவமூர்த்தி

“அதெப்படி சார்? கப்பலை தொடர்பு கொள்ள முடியலைனு அதிகாரப்பூர்வமா சொல்லிடீங்க. அப்பறம் எப்படி மறுபடியும் அவங்க தொடர்பு கொள்வாங்கனு நம்பறீங்க?” என விடாமல் கேள்வியெழுப்பினார்  நிருபர்

“லுக் மிஸ்டர், அந்த கப்பல் அவ்ளோதான்… அதுல இருந்தவங்க எல்லாரும் இறந்துட்டாங்கனு நாங்க சொல்லல. அவங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்கலாம்னு தான் நினைக்கிறோம். இப்ப கூட அவங்களுக்கு என்னாச்சுன்னு கண்டுபிடிக்கற  முயற்சில தான் இருக்கோம்” என்றார் வேலவ மூர்த்தி.

“சார், அப்ப அந்தக் கப்பல்ல நம்ம நாட்டோட மூத்த அறிவியலாளர் குருநாதன் இருந்ததா ஒரு தகவல் வந்துருக்கே, அது உண்மையா?” என கேள்வி எழுப்பினார் மற்றொரு  நிருபர்

“யார் இந்த மாதிரி வதந்திகளை பரப்புறாங்கனு தெரியல. அவர் எங்க கப்பல்ல இல்ல. எனக்கு இன்னும் நிறைய மீட்டிங் இருக்கு. அதனால நாம பேட்டியை இத்தோட முடிச்சுக்கலாம்” என்றதோடு இடத்தை விட்டு அகன்றார் வேலவமூர்த்தி

“சார் சார்” என மேலும் கேள்விகள் கேட்பதற்காக நிருபர்கள் அவரை பின் தொடர்ந்து செல்ல, வேகமாக அங்கிருந்து வெளியேறினார் 

#ad

             

         

ர்னவ் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றவர், அதன் தலைமை நிர்வாகி அர்னவிடம் நடந்ததை விவரித்தார் 

“அர்னவ்… நிலைமை ரொம்ப கைமீறி போயிட்டுருக்கு. அந்த சைன்டிஸ்ட் நம்ம கப்பல்ல இருந்தார்னு ப்ரஸ்க்கு சந்தேகம் வந்துடுச்சு. இன்னும் நம்ம கடல் ஆராய்ச்சி எதுக்காகனு உண்மைய கண்டுபுடுச்சுட்டாங்கன்னா, அது நமக்கு பெரிய ஆபத்தாகிடும்” என்றார் பதட்டமாய் 

“எப்படி அங்கிள் அவங்களுக்குக் குருமூர்த்தி பற்றி தெரிஞ்சது? இங்க என்ன நடக்குதுனே எனக்கு புரியல. இப்படித் தான் நேத்து, அந்தக் கப்பலில் இருந்து நாம தேடுற பொருள் கிடைச்சுட்டதா தகவல் வந்துச்சு. ஆனா அடுத்த கொஞ்ச நேரத்துல கப்பலோட சிக்னல் கட்டாயிடுச்சு. அங்க என்ன நடந்ததுனே தெரியல. கடைசியா நாம அவ்ளோ ரகசியமா வச்சிருந்த குருநாதனுடைய பயணம் பத்தின தகவல் எப்படி வெளியே கசிஞ்சது? அதான் எனக்கும் ஒரே அதிர்ச்சியா இருக்கு, நானே களத்துல இறங்கினா தான் எல்லாம் சரிப்பட்டு வரும்னு நினைக்கிறன்” என்றான் அர்னவ்

“ஹே அர்னவ்… என்ன சொல்ற நீ? அப்போ நீயே அங்க போய் பாக்க போறியா? நடக்கற விஷயமா இது?” என்றார் வேலவமூர்த்தி.

“இல்ல அங்கிள்… நானே நேர்ல போய் பாத்தா தான் என்ன நடந்ததுனு புரியும். கைய கட்டிக்கிட்டு இங்க  உக்காந்துட்டு டென்ஷன் ஆகிட்டு இருந்தா எந்த பிரயோஜனமும் இல்ல” என்றான் அர்னவ்

“இங்க பாரு அர்னவ், நான் இந்த கம்பெனியோட போர்டு மெம்பெர் மட்டுமில்ல. உன் அப்பாவோட நெருங்கிய ஸ்நேகிதனும் கூட. அதனால தான் மறுபடியும் சொல்றேன், ரிஸ்க் எடுக்காத. அங்க ஏதோ மர்மமா இருக்குனு எனக்கு தோணுது. இதுக்கு நாம வேற ஏதாவது வழி செய்யலாம்” என அவன் மனதை மாற்ற முயன்றார் வேலவமூர்த்தி

“நீங்க என் அப்பாவோட சினேகிதன் மட்டுமில்ல அங்கிள், என்னோட கார்டியன் கூடவும் தான். அப்பா போனதுக்கு அப்பறம், இந்த கம்பெனியை நீங்க இல்லாம என்னால தனியா சமாளிச்சுருக்கவே முடியாது. ஆனா இந்த ஒரு விசயத்துல மட்டும் என்னால உங்க பேச்சைக் கேட்க முடியாது, தப்பா நினைக்காதீங்க. நான் போறதுனு முடிவெடுத்துட்டேன்” என்றான் அர்னவ் தீர்மானமாய் 

“அப்ப என் பேச்சை மீறி நீ அங்க போறதுனு முடிவெடுத்துட்ட?  சரி… ஆனா நீ திரும்பி வரவரைக்கும் நம்ம கம்பெனிய யார் பார்த்துக்கறது? இங்க இன்னும் எத்தனை ரிஸர்ச் நடந்துட்டுருக்கு? அதுமட்டுமில்லாம கப்பல் மூலமா எவ்வளவோ ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்கள் பண்ணிட்டு இருக்கோம்? இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவெடுக்கும் நிலையில் நீ இல்ல” என வலியுறுத்தினார் வேலவமூர்த்தி.

“ஏன் அங்கிள் நம்ம கம்பெனிய நான் வரவரைக்கும் நீங்களும் ராகேஷும் பாத்துக்க மாட்டீங்களா? என்ன, நீ எதுவும் பேசாம வேடிக்கை பார்த்துட்டு இருக்க? அவருக்கு எடுத்துச் சொல்லுடா ராகேஷ்” என ராகேஷை உதவிக்கு அழைத்தான் அர்னவ்

“இல்ல அர்னவ். இந்த  விஷயத்துல  நான் எடுத்துச்  சொல்ல வேண்டியது அப்பாவுக்கு இல்ல, உனக்குத் தான். ஆனா நீ ஒரு முடிவெடுத்துட்டா உன்னை யாராலயும் தடுக்க முடியாதுனு எனக்கு நல்லாவே தெரியும். அதனால நானும் உனக்குத் துணையா கூட வரலாம்னா… நான் படிச்சது பிசினஸ், எனக்குக் கடல் பத்தியோ இந்த ஆராய்ச்சி பத்தியோ எதுவும் தெரியாது, அதனால நீயே என்ன கூட்டிட்டு போகமாட்ட. சோ, நீ  தகுந்த பாதுகாப்போட கடலுக்குள்ள போவேன்னு எனக்கு வாக்கு குடுக்கணும்” என்றான் வேலவமூர்த்தியின் மகன் ராகேஷ்

“கண்டிப்பா நான் பக்காவான பாதுகாப்போட தான் போவேன், கவலைப்படாத டா..” என உறுதியளித்தான் அர்னவ்

“அப்படினா… நீ என்ன சொல்ல வர?” வேலவமூர்த்தி

“இந்த முறை நான் போகப் போற கப்பல், வெறும் ஆராய்ச்சி கப்பலா மட்டும் இருக்காது, போர்க்கப்பலாவும் இருக்கப் போகுது. அதுமட்டுமில்லாம நான் நம்ம விக்கியையும் கூட கூட்டிட்டு போகப் போறேன்” என்றான் அர்னவ்

“என்ன சொல்ற நீ? அவன கூட கூட்டிட்டு போறதுக்கு நீ தனியாவே போலாம். அவன் கூட வந்தா ஒரு வேலை உருப்படியா செய்யவும் மாட்டான், செய்ய விடவும் மாட்டான்” என்றார் வேலவமூர்த்தி.

“அங்கிள்… அவன் ஜாலியா பேசி வாயடிச்சுட்டு இருக்கறதால உங்களுக்கு அப்படித் தெரியுது. ஆனா அவன் வேலையில ரொம்பவே ஸ்மார்ட். அதனால நீங்க ரெண்டு பெரும் கவலையேபடாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்றான் அர்னவ்.

“அப்போ நீ போறதுனு முடிவெடுத்துட்ட? சரி அப்ப நீ இல்லாதப்ப கம்பெனிய அப்பா பாத்துக்கணும்னா அவர் பேர்ல நீ பவர் ஆப் அட்டர்னி  குடுக்கணும்ல?” என ராகேஷ் கேட்க 

“கண்டிப்பா செய்யணும் ராகேஷ், அதுக்கான பேப்பர்ஸ் எல்லாம் நாளைக்கு என் கையில் இருக்கணும். எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் நான் கிளம்பனும்” என்றான் அர்னவ்.

அவனிடம் சரியென உரைத்து விட்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்த அப்பாவும் மகனும் மர்மமாக ஒருவரைப் பார்த்து மற்றவர் புன்னகைத்துக் கொண்டனர் 

#ad

              

                  

__________________________________________________________________________

ழலவன் தன் செங்கதிர் கொண்டு இந்த ஞாலமதில் பகலதுவை வரைய, உறக்கத்திலிருந்து எழுந்ததும் மிகுந்த உற்சாகத்துடன் தன் தந்தை இளந்திரையனை நோக்கி ஓடி வந்தாள்  சாமினி

“ஐயனே… ஐயனே… எங்கு இருக்கிறீர்கள்?” எனத் தேடிக் கொண்டே வந்தவள், தன் தந்தையைக் கண்டதும், “ஐயனே இன்று அதிகாலை வேளையில் நான் ஒரு கனவு கண்டேன்”

“அப்படியா தாயே, அந்த கனவினால் தான் நின் பொன் வதனம் இன்னும் பேரெழிலுடன் விளங்குகின்றதோ?” என வினவினார் அவர்

“ஆம் ஐயனே, ஆனால் தாங்கள் இன்னும் என் கனவு என்னவென்பதை கேட்கவே இல்லையே?” என மகள் அலுத்துக் கொள்ள 

“ஹா ஹா… நான் கேட்டால் தான் விளம்புவாயோ? சரி இப்பொழுது கேட்கிறேன், கூறு பார்க்கலாம்” என்று அவள் கூறப்போகும் விடயமறிய விரும்பினார் அவர்

“ஐயனே… ஓர் நாள் நான் பௌர்ணமி இரவில் ஓம்கார வனத்திற்குத் தனியாக நடந்து சென்றேன். கூதைக் காற்று மேலுடல் தழுவிட, நம் கயாகர மூப்பரைப் பார்க்கச் சென்ற பொழுது, அவர் சற்று இடர் கொண்ட மனதுடன் இருக்கக் கண்டேன். 

ஆனால் பதிலேதும் பேசாமல் அவர் அருகே யான் அமர்ந்து இருக்க, பின்பு அவரே எம் முகத்தைப் பார்த்து, ‘வா சாமினி.. இங்கு இருக்கும் கருங்குளத்தின் நீர் பெருகிக் கொண்டே வருகிறது. இது எனக்குச் சற்று கவலை அளிக்கிறது தாயே. ஆம்… நம் ஆழிக்கு எதோ ஆபத்து வருமென தோன்றுகிறது’ என வருத்த மொழி விளம்பினார்

அதைக் கேட்ட என் மனம் விண்டு விடும் போல் ஆனது. உடனே ஐயத்துடன் நான், “ஏன் மூப்பரே நம் இனத்திற்கு ஏற்கனவே இழைந்து கொண்டிருக்கும் அநீதிகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் சாபமும் போதாதா? மற்றுமொரு ஆபத்தை நம் மக்கள் தாங்கிடுவரா?” என வினவ 

“கவலை கொள்ளாதே மகளே… அதி ஆபத்து நெருங்குகையில் தான் தர்ம வீரனும் தலை தூக்குவான்” என்றவர் கூறிக் கொண்டிருந்தார் 

அதே நேரம், நீறணிக் கடவுளைப் போல் ஒரு சுந்தரப் புருடன் வினோதமான நாவாயில் அங்கு வந்திறங்கினார். அவனைக் கண்டதும் அவ்வளவு உவகை நம் மூப்பருக்கு

அதைக் கண்ட எனக்குச் சற்றுப் பொறாமையாகக் கூட இருந்தது. என்னைக் கண்டு கூட நம் மூப்பருக்கு இவ்வளவு உவகை வர வில்லையே என்று

அதைக் கண்ணுற்ற மூப்பர் மென்னகையுடன், “தாயே.. பொறு. இத்துணை நாட்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நம் இனத்தின் சாபத்தைப் போக்கும் திண்மையுடையவன் இவ்வாலிபன் தான்” என்றிட மென்னதிர்வு என்னுள்

“என்ன மூப்பரே, என்ன இயம்புகிறீர்கள்? நீங்கள் உரைப்பது உண்மை தானா? நம் இனத்திற்கு விடிவு பிறக்கப் போகின்றதா?” என நான் வினவ

‘ஆம் தாயே, இதோ இவர் மணிக்கட்டில் இருக்கும் மச்ச(மீன்) உருகொண்ட அகழெலி(மச்சம்) கொண்டே உணர்ந்தேன். நம் மக்களின் துயர் களைய அந்த முக்கண்ணோன் அனுப்பிய தூதுவன் தான் இவர்’ என விளம்பினார் ஐயனே” என தன் கனவு பற்றி தந்தையிடம் கூறி முடித்தாள் சாமினி

“இது மிக நல்ல சகுனமாகத் தான் தெரிகிறது தாயே” என்றார் இளந்திரையன் 

“என்ன ஐயனே நீங்கள்? நான் இவ்வளவு எடுத்து மொழிகிறேன் நீங்கள் மிகச் சாதாரணமாக அப்படியா எனக் கேட்டுச் சென்று விட்டீர்?” என சாமினி சலித்துக் கொள்ள

“அதுதான் நீ உரைத்தது நல் சகுனம் என்று விட்டேனே அம்மா பின் என்ன?” என்றார் 

“பின் என்ன என்றா வினவுகிறீர்? ஐயனே நான் ஓம்கார  வனத்திற்குப் பௌர்ணமி இரவில் நடந்து சென்றேன்” என அழுத்திக் கூறிட,

அப்பொழுதுதான் அவள் சொன்னதின் அர்த்தம் முழுமையாய் விளங்கிட, அவள் தந்தை,  “நீ கூறுவது மெய்யா தாயே?” என ஆர்வ மிகுதியில் வினவுகையில், அவர் கண்கள் கரித்துச் சிறுதுளி நீர் கன்னம்  வழிந்தது.

__________________________________________________________________________

சென்னையில்…

ராகேஷ், தன் தந்தை வேலவமூர்த்தியை மெச்சிக் கொண்டிருந்தான்.

“அப்பா நீங்க எவ்வளவு பெரிய புத்திசாலி.. ச்சே.. எப்படி இப்படி ஈஸியா அந்த அர்னவ்கிட்ட இருந்து பவர் ஆப் அட்டார்னி வாங்கறதுக்கு சம்மதம் வாங்குனீங்க?” என ராகேஷ் கேட்க 

“இது என்னோட எவ்ளோ நாள் திட்டம் தெரியுமாடா? எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இல்லாம ஏதோ அவன் அப்பன் வச்சிருந்த குறிப்ப வச்சு அந்தக் கடல்ல இப்படி ஒரு ரத்னமணி கிரீடம் இருக்கு, அத எடுக்கறது தான் உன் அப்பாவோட வாழ்க்கை லட்சியமேனு சொன்னேன். உடனே பாசக்கார மகன் அதுக்கான ஆராய்ச்சியைத் தொடங்கிட்டான்.

நீயும் தான் இருக்கியே, இன்னும் எதுக்கெடுத்தாலும் என் மூஞ்சியவே பார்த்துகிட்டு. நீ மட்டும் அந்த அர்னவ் மாதிரி திறமைசாலியா இருந்திருந்தா, அவன் அப்பன் அந்த திவாகரன் செத்தப்பவே அந்தக் கம்பெனிய என் பேர்ல மாத்தி இருப்பேன்” என்றார் வேலவமூர்த்தி

“ஆமா வார்த்தைக்கு வார்த்தை என்னை மட்டம் தட்டலனா உங்களுக்குத் தூக்கம் வராதே. முதல்ல இத எப்படி சாத்தியப்படுத்துனீங்கனு சொல்லுங்க. அப்பறம் பொறுமையா என்னை ரூம் போட்டு திட்டிக்கலாம்” என சலித்துக் கொண்டான் ராகேஷ்

அவனை ஒரு தீப்பார்வை பார்த்த வேலவமூர்த்தி, “உனக்குத் தெரியுமா? அந்தக் கிரீடத்தை எப்படியாவது எடுத்துடனும்னு இந்தியாவிலேயே ரொம்பப் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சி செய்யற விஞ்ஞானி குருநாதன இதுக்குள்ள இழுத்து விட்டதும் நான் தான். ஏன்னா இந்த முயற்சியில ஏதாவது ஆச்சுன்னா, கண்டிப்பா அர்னவ் மாட்டிப்பான். 

அப்படி இல்லாம அந்தக் கிரீடம் பற்றிய கதை உண்மையா இருந்து, அந்தக் கிரீடம் கிடைச்சுடுச்சுனா, எப்படியாவது அத எனக்கு சொந்தமாக்கிட்டு அவன் கதையை முடிச்சிடலாம்னு இருந்தேன்.

ஆனா எனக்கு அந்தச் சிரமம் வைக்காமலேயே அந்த குருநாதன காணோம்னு கேள்விபட்டதும் ஆடு தானாவே கடல்ல கைமா ஆகறதுக்குக் கிளம்புது” எனக் கெக்கலிப்புடன் கூறினார்

“ஆனா இன்னும் இது ஒன்னு தான்ப்பா புரியல, குருநாதன் அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கறதா எனக்குக் கூடத் தெரியாது. அப்பறம் எப்படிப்பா ப்ரஸுக்கு விஷயம் தெரிஞ்சது” என கேள்வியுடன் ராகேஷ் பார்க்க 

“போடா முட்டாள்.. அது எப்படி யாருக்கும் தெரியாம பிரஸுக்கு தெரியும்? அவங்க என்ன தினமும் ஜோசியமா பார்த்துட்டு இருகாங்க. அவங்களுக்கு இந்த விஷயத்தைச் சொன்னதே நம்ம ஆளுங்க தான்” எனவும், அதிர்ந்தான் ராகேஷ்

“அப்பா.. அப்பா.. நீங்க இருக்கீங்களே.. உங்கள புகழ எனக்கு வார்த்தைகளே இல்லப்பா. இப்போ வெறும் பேப்பர்ல மட்டும் தான் பவர் கிடைக்கப் போகுது. இன்னும் அதிகாரபூர்வமா அந்த கம்பெனி நம்ம பேர்ல முழுசா கிடைச்சுட்டா.. ராஜ வாழ்க்கைத் தான்” என குதூகலமாக மகன் கூற

“ஆமாண்டா குடுச்சுக் குடுச்சுத் தீர்க்க அறுநூறு கோடி என்ன? அறுபதாயிரம் கோடி கிடைச்சாலும் உனக்குப் பத்தாது” என்றார் வேலவமூர்த்தி

அதைக் கேட்டதும், கோபமாய் அங்கிருந்து கிளம்பினான் ராகேஷ்

ற்றொரு புறம், அர்னவ் விக்ரமிடம் எல்லாவற்றையும் விளக்க, தாங்கள் செய்யப் போகும் கடல் பயணம் ஒரு சாகசமெனவே தோன்றியது விக்ரமிற்கு 

“என்ன பாஸ் சொல்றீங்க? கடல்ல நாம மட்டும் தனியாவா? செம்ம ஜாலி தான் போங்க” என விக்ரம் சந்தோசமாய் கூற 

“இங்க பாரு விக்கி… நாம ஒண்ணும் ஜாலி ட்ரிப் போகல. முக்கியமான ஆராய்ச்சிக்குப் போறோம். அதை விட முக்கியமா குருநாதன் சார கண்டுபிடிக்கப் போறோம். அதனால உன்னோட ஆர்வக் கோளாறுல விஷயத்தைக் கடைபரப்பி காசுக்கு வித்தறாதடா” எனக் கொஞ்சம் திகிலுடன் அர்னவ் கூற 

“சேச்சே… அப்படியெல்லாம் யார்கிட்டயும் சொல்லிட மாட்டேன் பாஸ். ஆனா நீங்க என்ன தான் என்ன அது இதுனு சொல்லிப் பயமுறுத்துனாலும் எனக்கு ரொம்ப ரொம்ப ஆர்வமாத் தான் இருக்கு. நான் இருக்கறப்ப நீங்க எதுக்குக் கவலைபடறீங்க?” என்றான் விக்ரம்

“ஆமா ஆமா, நான் எதுக்குடா கவலைபடணும்? உன் கேர்ள் ப்ரண்ட்ஸ் தான் ரொம்பக் கவலைப்படுவாங்க. மற்று நின் வரவு இங்கு வாழ்வாருக்குச் சொல்னு சொல்லிட்டு நம்ம கூட வராம இருந்தாங்கன்னா போதும்” என விக்ரமை கேலி செய்தான் அர்னவ்

“அட போங்க பாஸ்… நீங்க வேற. இப்படித் தான் நான் எல்லார்கிட்டயும் சகஜமா பேசறதை வச்சு எல்லாப் பொண்ணுங்களும் இவனுக்கு ஏற்கனவே ஆள் இருக்குனு என்னை அண்ணனா பாக்க ஆரம்பிச்சுடறாங்க” என மூக்கால் முராரி வாசித்தான் விக்ரம்

உடனே கை தட்டி சிரித்த அர்னவின் கைகளை விக்ரம் உற்றுப் பார்க்க, தன் ஸ்மார்ட் வாட்சை மணிக்கட்டின் மீது சரிபடுத்திக் கொண்டான் அர்னவ்

(தொடரும்… வெள்ளி தோறும்)

இந்த இணையத்தளத்தில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய அணுகலாம்👇

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!