in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 13) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்... (அத்தியாயம் 13)

ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

13. வரலாறு அறிகிறான்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

 

தியேட்டர் வாசல்..! 

கிருஷ்ணனும் சிநேகிதனும் படம் பார்த்துவிட்டு, வெளியே வந்தனர்.

“படம் இப்படி..! அப்படி..!” என்று வாயிலேயே புகழ் மாலை கட்டிக் கொண்டிருந்தான் சிநேகிதன்.

ஆனால், கிருஷ்ணனோ, நேரே அந்த ஜூஸ் கடைக்காரரிடம் சென்று, “இங்க லாரியில ஒரு குடும்பம் வந்தது இல்லீங்க..? அவங்க எந்த அட்ரெஸ் கேட்டாங்க..?” என்று வெளிப்படையாகக் கேட்டுவிட்டான்.

சிநேகிதனுக்குச் சுருக்கென்றது. “டேய்.. அப்போ இவளோ நேரம் நீ கதைய பாக்கல. அங்க வந்த பொண்ண தா நெனெச்சிட்டு உட்காந்திருக்க? ச்சே..! நா ஒரு பைத்தியக்காரன்..!” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

கிருஷ்ணன் வாயில் வந்த சமாதானத்தைச் சொல்ல முயன்று, அதில் தோல்வியடைந்தான்.

இதற்குள் ஜூஸ் கடைக்காரர், “அவுங்க பிச்சனூர்ல எங்கியோ கேட்டாங்க பா.. எனக்கு அந்த ஏரியாலாம் அவ்லவா தெரியாதே.. ஏரியா எங்க இருக்குன்னு மட்டும் சொல்லிபுட்டேன். விலாசம் அங்க போய் கேட்டிக்குறேன்னு அவுகளும் போய்ட்டாங்க..” என்று வெள்ளந்தியாகச் சொன்னார். 

அட்ரெஸ் கிடைத்துவிட்ட ஜோரில் சிநேகிதனோடு சைக்கிளில் பறந்தான் கிருஷ்ணன்.

பின்னால் உட்கார்ந்திருந்த சிநேகிதன், “டேய்.. மொல்ல போயேண்டா..! ஆனாலு உனக்கு ரொம்ப தாண்டா தெகிரியம்.. இப்போதா அந்தப் பொண்ண பாத்த.. உடனே அட்ரஸ் வாங்கிட்டு அவள பாக்க பறக்கிறியே..!” என்று லேசான விரக்தியோடு சொன்னான்.

கிருஷ்ணன் அதைப் புரிந்து கொண்டவனாய், “ஏண்டா? நீ யாரையாவது காதலிச்சியா?” என்று சட்டென்று நாக்கைப் பிடுங்கினான்.

சிநேகிதனும், “ஆமான்டா..! நானு பேச்சின்னு ஒரு பொண்ண லவ் பண்ண. சொல்றதுக்கு ஏது தெகிரியம்? அத பாத்தாவே மனசு பஞ்சு மாறி ஆகி, தொண்டையெல்லாம் அடைச்சிட்டு வார்த்தையே வராது. அதுவே புரிஞ்சிக்கும்னு நினைச்சி, அப்பொப்ப பாத்துட்டே இருப்பேன். அப்ரோம்… போன வாரம் அதுக்கு கல்யாணம்ல ஆயிடுச்சு..!” என்று “கொல்” என்று சிரித்தான்.

கிருஷ்ணனுக்குச் சிரிப்பு தாளவில்லை. ஆனாலும் அடக்கிக் கொண்டான். அட்ரஸ் வந்துவிட்டதே..!

‘அதே TN நம்பரைக் கொண்ட லாரி…’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு, சைக்கிளை ரொம்பவும் சாதரணமாக மிதித்தான். வேண்டுமென்றே இரண்டு மூன்று முறை, ‘கிளிங் கிளிங்…’ என்று பெல் அடித்தான்.

அங்கே லட்சுமியின் அண்ணன் வேலு, தூக்க முடியாமல் அந்தப் பீரோவை தூக்கிக் கொண்டிருந்தார். சிநேகிதன் அதைப் பார்த்துவிட்டு, “டேய்.. ஹெல்ப் பண்ற மாறி அப்டே போய் விசிட் பன்னா என்ன?” என்று கிருஷ்ணனைச் சீண்டினான்.

“நல்ல யோசன..” என்று விறுவிறுவென்று அதைச் செயல்படுத்தினான் கிருஷ்ணன். 

வேலுவிடம், “ஏங்க.. இருங்க..! நானு ஹெல்ப் பன்றே..!” என்று ஒரு கையில் பீரோவைப் பிடித்துக் கொண்டான்.

வேலு, முதலில் ‘யாரிவன்…’ என்பது போல பார்த்து, பின்பு ‘உதவி தானே செய்றான்.. நல்லவன் தான்…’ என்று முடிவுக்கு வந்து விட்டார். பிறகு, கிருஷ்ணனும் சிநேகிதனும் ஆளுக்கொரு கைப்பிடிக்க லாரி அதன் காலியான வாயை அகல பிளந்து காட்டிற்று. 

டிரைவருக்கு வேலு பைசல் பண்ணிவிட்டு, இவர்களை ஒரு பார்வை பார்த்தான். கிருஷ்ணன் அதைப் புரிந்து கொண்டு, “இல்லைங்க காசுலா வேணாம்.. நாங்க உதவி தான பண்ணோம்.. எனக்கு இதே ஊரு  தான்..” என்று சொன்னான்.

“சரி சரி..” என்று சிரித்து, அவர்களை உள்ளே அழைத்துச் சென்று, “மா.. இவங்களுக்கு காஃபி போடுங்களேன்..” என்றான் வேலு. 

கிருஷ்ணன் வீட்டிலிருந்த மற்றவர்களுடனும் சகஜமாய்ப் பேசி சிநேகம் பண்ணிக் கொண்டான். ஏனோ லட்சுமி அங்கு இல்லை. அவளுக்காக வந்து, அவளைப் பார்க்காமலேயே சென்று விடுவோமோ என்று அவன் மனம் தவித்தது. 

அந்த நேரம் புனிதவதி, “ஏ லட்சுமி.. இங்க வாடி..” என்று சமையலறையிலிருந்து கத்தினாள்.

கிருஷ்ணனுக்கு ஒரே குதூகலம். ‘ஓ.. நம்ம நெனச்ச பேரு தான் அவ பேரு போல..! லட்சுமி…’ என்று மனதில் ஒருமுறை சொல்லிக் கொண்டான்.

லட்சுமி அவர்கள் இருவரைப் பார்க்காமல், நேரே அம்மாவிடம் சென்றாள். அவள் அம்மா, “இந்தா.. இந்த காஃபிய குடுத்துட்டு, அப்டே ஒவ்வொரு ரூமா கிளீன் பண்ணிட்டே வா..” என்று சொல்லி, அவள் வாயில் ஒரு பிஸ்கட்டை பாசமாய்த் திணித்தாள். லட்சுமியும் அதை வேகமாக விழுங்கி விட்டு, காபி தட்டோடு வெளியே வந்தாள். 

அங்கே கிருஷ்ணன் இருப்பதைப் பார்த்ததும் அவள் கண்கள் வெட்கத்தில் கவிழ்ந்தன. அதில் ஏராளமான அதிர்ச்சி ரேகை வேறு.

காஃபி கொடுக்கும் போது, ‘நீங்க எப்படி இங்க? என்ன பாக்காவா வந்தீங்க..? மொதல்ல உங்கப் பேரு கிருஷ்ணனா?’ என்று ஆயிரம் கேள்விகள் கேட்கத் துணிந்தாள்.

ஆனால், சொற்கள் வாயிலிருந்த வெளிவராததற்கு கிடுக்குப் பிடியாய் அவள் அண்ணன் அங்கு நின்று கொண்டிருந்தான். காஃபியைப் பருகிக் கொண்டிருக்கையில் கிருஷ்ணனைப் புரிந்துகொண்ட சிநேகிதன் பேச்சை வளர்த்தான்.

“நீங்க ஏன் அவ்ளோ தூரத்துலேர்ந்து இங்க வந்திருக்கீங்க..? தோ கிருஷ்ணன் கூட அங்க சர்வோதயால தான் வேலப் பாக்குறான். இப்போ ஒரு ரெண்டு நாள் லீவுக்கு வந்திருக்கான். வேல கிடைக்கிறது நாய் பொலப்பால்ல ஆயிடுச்சு..” என்று சலித்துக் கொள்வது போல நடித்து, கிருஷ்ணனின் விவரங்களைச் சொல்லி விட்டான்.

அது லட்சுமிக்கு பேராறுதலாக இருந்தது. ‘அப்போ ஜோசியர் சொன்ன வரன் இவருதா..! நடராஜா..! எப்பிடியாவது இவரோட ஜாதகத்த இன்னொரு முறை எங்கப்பா கேக்குற மாறி பண்ணுப்பா…’ என்று மனமுவந்து வேண்டினாள். 

கிருஷ்ணன், ‘கிளம்பலாம்’ என்று சிநேகிதனிடம் சைகை காட்டிட, சிநேகிதனும் புரிந்து கொண்டு, “சரிங்க.. நேரமாவது நாங்க பொறப்படுறோம்..” என்று பேச்சை முடித்துக் கொண்டான்.

கிருஷ்ணன் கண்ணாலே லட்சுமியிடம் விடைப்பெற்றுக் கொண்டான். லட்சுமியிடம் தலைகவிழ்ந்த நிலையில் ஒரு சிரிப்பு. அதில் சரி என்ற ஆமோதிப்பும், பின் எப்போது சந்திப்போம் என்ற ஏக்கமும் மிளிர்ந்து கொண்டிருந்தது…… 

குடியாத்தம் காமராஜர் பாலம்..! 

1957ல் காமராஜர் குடியாத்தம் இடைத்தேர்தலில் நின்று வெற்றி கண்டார். தனக்கு வெற்றியளித்த மக்களுக்காக, தனது முதல் வாக்குறுதியான, பாலம் கட்டும் பணியைச் சிறப்புற செய்தும் முடித்தார்.

அறுபது ஆண்டுகள் கடந்தும் பாலம் தன் கம்பீரத்தை இழந்து விடவில்லை. எத்தனையோ வெயில், மழை, வெள்ளப்பெருக்கு கண்டிருக்கும் அது. அவை யாவும் பாலத்தை ஒன்றும் செய்து விடவில்லை…! 

மாலை அரும்பும் வேளை. பாலம் வெறிச்சோடி இருந்தது. கிருஷ்ணன் மெல்ல சைக்கிளை மிதித்துக் கொண்டிருக்க, சிநேகிதன் சினிமா பாட்டு பாடியபடி பின்னால் அமர்ந்திருந்தான்.

லட்சுமியின் நினைவுகளில் தன்னை மறந்து போய்க் கொண்டிருந்த கிருஷ்ணனை, சிநேகிதன் வழிகாட்டி கொண்டே வீட்டில் விட்டான்.

சிநேகிதனிடம் விடைபெற்ற கிருஷ்ணன், வீட்டினுள் சென்றதும், முகத்தைக் கழுவி, அப்படியே நினைவுகளை மிச்சப்படுத்தி வைத்துவிட்டு, சாப்பிட அமர்ந்தான். 

கிருஷ்ணன் வந்திருப்பதால், அன்று அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டனர்.

‘தன் காதலைப் பற்றி சொல்லலாமா? என்னவென்று சொல்வது..? அதற்கு முன்பு.. அவளைப் பற்றி தெரிந்து கொண்டாக வேண்டும்…’ என்று முடிவு செய்து அந்த நினைப்பையும் முடக்கினான். கமகமவென்று மூக்கைத் துளைத்தது வத்த குழம்பும், வாழைக்காய் வருவலும். அனைவரும் ஒரு பிடி பிடித்தனர். 

பிறகு, கிருஷ்ணன் அப்பாவிடம் சென்றான். அவர் கால்களைப் பார்த்ததும் அவன் மனம் நொறுங்கி விட்டது.  

“அப்பா.. நிச்சயமா எனக்கு மறுஜென்ம இருக்குதுன்னு நினைக்கிறே. உங்களுக்கு நா நிறைய கடன்பட்டிருக்கேன்” என்று சொல்லும் போதே அவனுக்குத் தொண்டை அடைத்தது.

பழனி பலமாகச் சிரித்து, “டேய்.. பந்த பாசமெல்லாம் சும்மா டா.. எல்லாம் மாயை.. பொறக்கணு, சம்பாரிக்கணு, வாழனு, நேரம் வந்தா பொறப்படனும்.. அடுத்து நம்மளோட ஆத்மா எங்கேயாவது காத்தா போயிடும்..!” என்று வாழ்க்கையை வரி இரண்டில் அடக்கினார்.

கிருஷ்ணனுக்குத் துக்கம் நெஞ்சை வலித்தது. அதைப் புரிந்து கொண்ட பழனி, “டேய்.. ஒனக்கு இன்னு வயசு இருக்கு..! வாழ வேண்டிய புள்ள. உன் ஜாதகத்த உங்கம்மா பல ஊர் ஜோசியராண்ட கொடுத்திருக்கா, உன் ஜாதகப்படி உனக்கு வெளியூர் பொண்ணு தா வருவா.. அவளு நல்லா படிச்சிருப்பா..!” என்றதும் கிருஷ்ணனின் மனம் சற்றே சமாதானம் அடைந்தது. 

கிருஷ்ணன் மேலும், “பா.. நா கண்ணானத்துக்கு அப்ரோமாவது இங்கே உங்களோட இருப்பேனா?” என்று ஏக்கத்துடன் கேட்டான்.

பழனி சொன்னார். “இப்போதைக்கு உனக்கு குரு தச டா.. எது நடந்தாலும் நல்லதாவே தா நடக்கும். விரயம் ஆனாலும் சுபவியரமாத்தான் இருக்கு. வெளியூர் சமாச்சாரம் அதிகமாவே இருக்கும். சனி உனக்கு வலுவா இருக்கான். சனிய வெளிநாட்டு கிரகம்னு சொல்றதுண்டு. அதெல்லாம் வெச்சு பாக்குறச்ச.. நீ வர இன்னும் ரொம்ப நாளாவு..” என்று கிரகங்களில் பெயரில் பழியைப் போட்டுவிட்டுச் சிரித்தார்.

கிருஷ்ணனுக்கு அது பெரிய ஏமாற்றம். அமைதியாக எழுந்து செல்ல நினைத்து, “பா.. நீங்க தூங்குங்க.. ஒடம்ப பாத்துக்கோங்க..” என்று சொல்லிவிட்டுச் சென்றான். 

அங்கிருந்து ராதா இருக்கும் அறைக்குப் போய் உட்கார்ந்து கொண்டான். ராதா விடிய விடிய புத்தகம் படிப்பான். அவனுக்கு அப்படி ஒரு பழக்கம்.

அவன் அறை முழுதும் பேப்பர்கள், ஜோதிட குறிப்புகள், ஆன்மீக சம்மந்தமான விஷயங்கள் நிறைய கிடக்கும். அதையெல்லாம் நோட்டமிட்ட கிருஷ்ணன், “ணா.. என்னா ண்ணா? நைனா இங்க வரவே மாட்டேன்னு சொல்றாரு..” என்று ஆரம்பித்து, விரக்தியில் தரையில் ஓங்கி குத்தினான்.  

கிருஷ்ணனின் கைகளைத் தடவியவாறே, “தோ.. உன் ஜாதகம்..” என்று நோட்டை எடுத்து வைத்துக்கொண்டு, “இப்போ உனக்கு குரு தசைல்ல..! அது 16 வருஷம். பொறவு சனி தசை வந்தா எல்லா சரியாகிரும்..” என்றார் ராதா.

கிருஷ்ணனுக்கோ சோகம் தட்டியது. ‘நைனா நாள் கணக்கில் சொன்னதை, இவன் வருடக்கணக்கில் அல்லவா சொல்கிறான்?’ என்பது தான் அது. 

“சரி.. அத்த வுடு. நம்ம வேற விஷயம் பேசுவோம். நா தா கடைசில பொறந்தேன் வூட்ல..! அதுக்கு முன்னாடிலாம் ஊர்ல ரொம்ப பஞ்சமாமே..! உனுக்கு அத பத்திலாம் தெரியுமா..?” என்று திசையைத் திருப்பினான்.

ராதா வெகுஜோராக வந்தமர்ந்து கொண்டு, கீ திருகின பொம்மை போல சொல்லத் தொடங்கினான்.

“நீ பொறக்குறப்போ ஊர்ல ரொம்ப பஞ்சம். மொத நம்ம அப்பா அம்மா கண்ணானம் பண்ணும் போது அவுகளுக்கு எதுவும் கெடயாது. இந்த தெரு கடைசில முன்ன ஒரு வூடு உண்டு. அங்க தான் கண்ணான ஆன புதுசுல இருந்ததா சொல்வாங்க. பொறவு அவுங்க வீட்ட விக்கவும், இந்த வீட்ல வந்து இருக்கச் சொல்லி, சொன்னாங்களாம். அப்போ முந்நூறு ரூபா.. கொடுத்து இந்த வூட்ட வாங்கிருக்காங்க. மனுஷனுக்கு ரொம்ப பெரிய மனசு. அந்த 300 ரூவாய்க்குக் கூட எவ்ளோ கஷ்டம். ராத்திரி பகலும் தெறி நெஞ்சி, காசு வாங்கி, துணி மூட்ட கொண்டு போய் வித்து பணம் பாக்குறதுக்குள்ள போது போதுன்னு ஆகிரும். இப்ப மாறி இட்லி தோசைலாம் கெடையாது. காலைல களி கரச்சி குடிச்சா அவுளந்தான். பொறவு ராத்திரி தா சோறு வடிப்பாங்க. வேலைல நேரம்போரதே தெரியாது…” என்று சொல்லவும் கிருஷ்ணனும் கடிகாரத்தைப் பார்த்தான்.

9.30 மணி. “தூங்கிறியா?” என்று ராதா கேட்க, உடனே கிருஷ்ணன், “இல்லல்ல நாளைக்கு ஊருக்கு போயிட்டா.. இப்டிலாம் பேச முடியாது.. நீ சொல்லு..” என்றான் வாஞ்சையோடு.

“முன்னலாம் ராவான வண்ணாத்தி வருவாங்க. துணிமணிலாம் குடுத்தா அடுத்த நாள் தோச்சி கொண்டாருவங்க. நாம அனிக்கு ராத்திரி சாப்பாடு போட்டுடனும். காசெல்லம் கேக்கறதுல. பொறவு கொஞ்ச நாளு கப்றோ ராட்டின சுத்தி அதுல கொஞ்ச காசு பாத்தது. தடுக்கு அடுக்குவோம். அப்போலாமும் ரேஷன்ல அரிசி உண்டு. அத வாங்கிறத்துக்கே உண்டு இலனு ஆய்ப்புடும். அவுங்க இருந்த நிலைமையிலிருந்து நம்மல தூக்கி உட்ருகாங்க. அதுவே பெரிய விஷயம். கடவுள் அருள்.. பெரியவரு படிச்சாரு பூட்டாரு. இருந்து செஞ்சிருக்கலாம்.. என்ன சொல்றது..? புத்தி மாத்திடுச்சு……” என்று இழுத்து மீண்டும் விட்ட ரயிலை பிடித்த கதையாய் கதைக்குள் ஓடினான். 

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எதிர்பாராத முத்தம் (சிறுகதை) – ✍ கே.என்.சுவாமிநாதன், சென்னை

    டாக்டர். ஊசீஸ்வரனும், ஊர்வசியும் (சிறுகதை) – ✍ மரு உடலியங்கியல் பாலா