எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சுரேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் Accounts manager ஆக வேலை செய்கிறான். அவனுக்கு சென்ற ஆண்டுதான் திருமணம் நடந்தது. அவன் தந்தையின் தூரத்து உறவுக்கார பெண் ரமாவைத் தான் திருமணம் புரிந்து கொண்டான். ஆனால் அவன் அம்மாவுக்கு ஆரம்பத்திலிருந்தே அவளை பிடிக்கவில்லை. அவள் கொஞ்சம் கருமை நிறத்தில் இருப்பாள். சுரேஷின் தந்தைக்கு அவளின் குடும்பத்தை மிகவும் பிடித்திருந்தது. ஆகவே அவர் தான் ஒற்றை காலில் நின்று சுரேஷிற்கு ரமாவை கட்டி வைத்தார்.
எப்போதும் மருமகளை குறைகூறி கொண்டே இருந்தாள் பரிமளா. கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். நேற்று ரமா தலைவலி என்று மாலை நேரத்தில் கொஞ்ச நேரம் உறங்கி விட்டாள். அவ்வளவுதான் பரிமளா காச்மூச் என்று ஒரேடியாக, ஏண்டி, ஒரு பொம்பளை பொண்ணு விளக்கு வச்சி தூங்கலாமா?? உன் ஆத்தா என்ன கற்று கொடுத்து இருக்கிறா? சரியான கேடுகெட்ட குடும்பம் அது இது என்று வாய்க்கு வந்தபடி பேசினாள்.
அதுவரை சும்மா இருந்த சுரேஷின் அ0ப்பா துரைக்கு கோபம் கோபமாக வந்தது. ஏண்டி, இப்படி கத்தற? தலைவலின்னு தானே படுத்துண்டா, ஏன் உனக்கு வந்தா, நீ படுக்க மாட்டாயா என்று கத்தினார்.
பெண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணாமல் இன்னிக்கு வந்த அவளுக்கு பண்றீங்களா? என்று பரிமளா கோபத்தோடு கண்களை உருட்டி கொண்டு கேட்டாள். இவர்களின் வாக்குவாதம் பெரிதாகியது. அதற்குள் சுரேஷும் வந்து விட்டான். அம்மா உனக்கு என்ன தான் பிரச்சினை? ஏன் எப்ப பாரு கத்தி கொண்டே இருக்கிறாய் என்று கேட்டான்.
உன் மனைவி தான் பிரச்சினை, தெருவில் இருக்கிறவங்க எல்லார் வீட்டிலும் மருமகள் நல்ல சிகப்பா தக்காளி மாதிரி இருக்கிறார்கள், இதோ இவள் தான் அண்டங்காக்கா மாதிரி இருக்கா, எனக்கு இவளாலே எங்கேயுமே தலை காட்ட முடியல என்று கத்தினாள்.
சரி இப்ப நான் என்ன பண்ணனும், சொல்லு என்று சுரேஷ் கேட்டான். இந்த மூதேவியை உதறிட்டு நான் சொல்லுகிற பெண்ணை கட்டிக் கொள் என்றாள் பரிமளா. அதற்குள் துரை வாயில் அடித்து கொண்டு அடிப்பாவி, நீயும் ஒரு பொம்பளை தானே, நீ பேசறது நியாயமா என்று கேட்டார். ஆமாம், அவ இனி இந்த வீட்டில் இருக்க கூடாது என்று அடித்து சொன்னாள் பரிமளா.
சுரேஷ் ரமாவின் கையை தர தர என இழுத்து கொண்டு தன் அறைக்கு சென்றான். ரமா துணிமணி எல்லாத்தையும் pack பண்ணு, இனி ஒரு நிமிடம் கூட இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்றான். ரமாவும் அழுது கொண்டே pack செய்தாள். இருவரும் கிளம்பி விட்டார்கள். துரை அவர்களை தடுத்தார், கெஞ்சினார், ஆனால் சுரேஷ், அப்பா தயவு செய்து எங்களை போக விடுங்கள், போதும் இதுவரை பட்ட பாடு என்று சொன்னான். அவரும் அதற்கு மேல் அவர்களை வற்புறுத்தவில்லை. ஆனால் பரிமளா வாயை திறக்கவே இல்லை.
சுரேஷ் நேற்று ஒரு ஓட்டலில் மனைவியோடு தங்கிவிட்டான். இதோ இன்று வாடகைக்கு வீடு தேடி அலைந்தான். வீடும் கிடைத்து விட்டது. நாளை பால் காய்ச்சி குடிபுக வேண்டும். அப்பாவுக்கு call செய்து நாளைக்கு வர சொன்னான். எல்லாம் நல்லபடியாக முடிந்தது. துரை அவ்வப்போது வந்து செல்வார். பரிமளாவோ துரையிடம் இதுவரை அவர்கள் இருவரும் எப்படி இருக்கிறார்கள் என்று கூட கேட்கவில்லை.
மூன்று மாதம் அப்படியே ஓடிப்போனது. ஒரு நாள் துரை, அவசர அவசரமாக சுரேஷ் வீட்டிற்கு வந்தார், பதற்றட்டத்தோடு காணப்பட்டார். அப்பா என்ன ஆச்சு ? ஏன் பதட்டமாக இருக்கிறீர்கள் என்றான் சுரேஷ்.
அம்மாக்கு தீடிரென நெஞ்சு வலி, ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு பக்கத்து வீட்டு கோதண்டத்தை துணைக்கு வைத்துவிட்டு வந்திருக்கிறேன், டாக்டர் என்னன்னவோ சொல்கிறார், எனக்கு ஒன்றுமே புரியலடா, நீ கொஞ்சம் என்னோடு வா என்றார்.
சுரேஷும் உடனடியாக பேன்ட் சர்ட்டை மாட்டி கொண்டு கிளம்பினான். ரமா, என்னங்க நானும் வரேன் என்றாள். வேண்டாம், வேண்டாம், உன்னை பார்த்தால் அம்மா இன்னும் கத்துவாங்க, அப்புறம் நிலைமை இன்னும் மோசமாயிடும், நான் உன்னை நாளைக்கு கூட்டி கொண்டு போகிறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக சுரேஷ் அப்பாவோடு கிளம்பினான்.
அம்மா இவனை பார்த்து சுரேஸு சுரேஸு என் ராஜா எப்படி டா இருக்க? நான் போய்ச் சேர்ந்துடுவேன் போல இருக்குடா என்று எதேதோ உளரிக் கொண்டு இருந்தாள். சுரேஷ், அம்மா ஒன்றுமாகாது. நீ கொஞ்சம் அலட்டிக்காம பேசாமல் இரு, நான் அப்பாவோடு போய் டாக்டரை பார்த்து பேசிவிட்டு வரேன் என்றான்.
இருவரும் டாக்டரை பார்த்தார்கள். டாக்டர் சுரேஷிடம் நிறைய அடைப்புகள் இருக்கு, உடனே bypass surgery பண்ணனும் என்றார்.
அதுக்கு என்ன சார், உடனே ஏற்பாடு செய்யுங்கள், என்னிடம் medical insurance இருக்கிறது, நான் இப்போதே ஆபீஸில் பேசி முன்னேற்பாடு செய்கிறேன் என்றான் சுரேஷ்.
டாக்டர் பிரச்சினை surgery செய்வதில் இல்லை, உன் அம்மாவின் blood group rare blood group, இரத்தம் நிறைய தேவைப்படும், ஆனால் எங்களிடம் ஸ்டாக் இல்லை. அந்த group கிடைப்பதும் மிகவும் கஷ்டம். Blood bank-ல் சொல்லி இருக்கோம், நீங்களும் முயற்சி செய்யுங்கள். இரத்தம் கிடைத்தால்தான் operation-கு ஏற்பாடு செய்ய முடியும், மேலும் இரண்டு மூன்று நாட்களுக்குள் surgery செய்ய வேண்டும், இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்றார்.
சுரேஷ் பதற்றத்துடன் டாக்டர், அம்மாவோட blood group என்ன என்று கேட்டான். டாக்டர் AB Negative, சீக்கிரம் try பண்ணுங்க என்றார். சுரேஷ் சரி டாக்டர் என்று சொல்லிவிட்டு அப்பாவுடன் வெளியே வந்தான்.
அப்பா நீங்கள் போய் அம்மாக்கு பக்கத்தில் இருங்கள், நான் கீழே சென்று டீ குடித்து விட்டு உங்களுக்கும் வாங்கி கொண்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு மாடிப்படி இறங்கி கீழே வந்தான்.
எதிரில் ஒரு பெட்டி கடை இருந்து. ஒரு டீ order செய்து விட்டு, ஒரு சிகரெட்டை வாங்கி குபு குபு என பிடிக்க ஆரம்பித்தான். ஒரு கையில் சிகரெட் பிடித்து கொண்டே இன்னொரு கையில் டீயை வாங்கி உறிஞ்சினான். பிறகு நண்பன் ஒருவன் blood bank-ல் இருக்கிறான், அவனுக்கு call செய்தான். பல தரவை பண்ணியும் தூக்கவில்லை. Tension ஆகி இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்தான்.
அதற்குள் அவன் நண்பனும் call செய்து, என்ன மச்சான், என்ன எதாவது பிரச்சினையா?? இத்தனை வாட்டி call பண்ணி இருக்க என்றான். சுரேஷ், ஆமாம்டா, எங்க அம்மாக்கு bypass surgery பண்ண வேண்டும், அதற்கு இரத்தம் தேவைப்படும், AB Negative டா என்றான்.
அதற்கு அவன் AB negative ஆ??? மச்சான் கொஞ்சம் கஷ்டம்டா, சரி நான் முடிந்தவரை பார்க்கிறேன்டா என்று கூறி வைத்து விட்டான்.
அடுத்த நொடியே ரமா call செய்து, என்னங்க, என்ன ஆச்சு அத்தைக்கு, இப்ப எப்படி இருக்காங்க, நீங்க போய் ஒரு மணி நேரம் ஆச்சு, ஏன் ஒரு call கூட பண்ண வில்லை என்றாள். இவன் இருக்கும் tension-ல் கோபமாக இப்ப நீ முதல்ல ஃபோனை வை, நான் அப்புறமா பேசறேன் என்று ஜோராக கத்தி வைத்து விட்டான். ரமாவிற்கு புரிந்து விட்டது அவன் எதோ டென்ஷனில் இருக்கிறான் என்று.
அவள் மாமாவிற்கு call செய்து மாமா, அத்தையை எந்த ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறீர்கள் என்றாள். மாமா நம்ம வீடடிற்கு மூன்று தெரு தள்ளி ஒரு பெரிய நர்ஸிங் ஹோம் இருக்கே மா அங்கதான் மா, எதுக்குமா என்றார்.
ரமா ஒன்றுமில்லை மாமா சும்மாதான் கேட்டேன் என்று வைத்து விட்டாள்.
புடவையை மாற்றி கொண்டு நேராக ஆட்டோவில் ஏறி ஆஸ்பத்திரிக்கு சென்றாள். ஆஸ்பத்திரி நுழைவதற்குள் பக்கத்து கடையில் சுரேஷை பார்த்துவிட்டு ஆட்டோகாரனிடம், அண்ணே நிறுத்துங்க நிறுத்துங்க என்று கூறி இறங்கினாள்.
நேராக சுரேஷ் அருகில் சென்று என்ன ஆச்சு உங்களுக்கு? அத்தைக்கு என்ன problem? சொன்னால் தானே எனக்கு தெரியும் என்றாள்.
பிறகு அவன் எல்லாவற்றையும் கூறினான். ரமா, சரி இப்ப நீங்கள் என்னை டாக்டரிடம் கூட்டி செல்லுங்கள் என்றாள். எதற்கு என்றான் அவன். பேசாமல் என்னை கூட்டிண்டு போங்க என்றாள் ரமா. ஒரு நிமிடம் இரு என்று கூறிவிட்டு அப்பாவுக்காக ஒரு டீயை பார்சலில் வாங்கி கொண்டான். பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
சுரேஷ் ரமாவை ரூமிற்கு வெளியிலேயே நிற்க வைத்துவிட்டு அப்பாவிடம் டீயை கொடுத்துவிட்டு அவளை டாக்டரிம் கூட்டி கொண்டு போனான்.
ரமா டாக்டரிம், டாக்டர், எனக்கும் blood group AB Negative தான், நீங்கள் தேவையான டெஸ்ட் செய்து என் இரத்தத்தை எடுத்து அத்தைக்கு செலுத்துங்கள் என்றாள். சுரேஷிற்கு அளவில்லா சந்தோஷம். டாக்டர் ரமாவின் இரத்தத்தை பரிசோதித்தார், perfect matching என்று கூறினார். பிறகு இரத்தத்தை எடுக்க தொடங்கிவிட்டார்.
சுரேஷிடம், Mr. Suresh, so நாளைக்கே அம்மாக்கு surgery பண்ணிடலாம், நீங்க insurance ஏற்பாட்டை பண்ணிடுங்கோ, நர்ஸ் இப்ப கொஞ்ச நேரத்தில் உங்க ரூம்கு வந்து அம்மாக்கு என்னென்ன மருந்து கொடுக்கணமோ அதெல்லாம் கொடுப்பாங்க, எல்லாவற்றையும் விவரமாக சொல்வார்கள் என்று டாக்டர் கூறினார்.
சுரேஷ் அப்பாவை வெளியில் கூப்பிட்டு இரத்தம் கிடைத்து விட்டது, ரமா தான் இரத்தம் கொடுக்கிறாள், எனக்கே தெரியாது ரமாக்கும் same group nu, இரத்தத்தை எடுத்து கொண்டு இருக்கிறார்கள், நாளைக்கே surgery, ஆனால் அம்மாகிட்ட இப்ப ரமா தான் இரத்தம் கொடுக்கிறாள் என்று சொல்லாதீர்கள் என்றான்.
அப்பா சுரேஷிடம் ரமா எந்த ரூமில் இருக்கிறாள் என்று கேட்டு கொண்டு அவளை பார்க்க சென்றார்.
ரமா சிறிது சோர்ந்த நிலையில் இருந்தாள், இன்னும் இரத்தம் எடுத்து முடித்த பாடில்லை. அவர் அவள் அருகில் சென்று, அம்மாடி பரிமளா உன்னை எத்தனை சொல்லி இருக்கா அப்பகூட நீ அவளுக்காக உன் இரத்தத்தை கொடுக்கிறேயேம்மா, என் கண்ணு என் ராசாத்தி என்று சொல்லி அவள் தலையில் கைகளால் மெதுவாக தடவி கொடுத்தார். பிறகு டாக்டர் வரவே வெளியே வந்து விட்டார். மறுநாள் காலை ஆப்ரேஷனும் நல்லபடியாக நடந்து முடிந்தது.
ஆபரேஷனுக்கு பிறகு பரிமளாவை ICU வில் வைத்தார்கள். கிட்டதட்ட இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்தாள். உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. மூன்று நாள் கழித்து ரூமிற்கு மாற்றினார்கள்.
டாக்டரிடம் பரிமளா ஐயா, ரொம்ப நன்றி என் உயிரை காப்பாற்றியதற்கு என்றாள். டாக்டர், அம்மா இரத்தம் சரியான நேரத்தில கிடைச்சுது இல்லைனா இப்ப வர என்ன ஆயிருக்கும் என்று சொல்ல முடியாது. நீங்கள் இரத்தம் கொடுத்தவங்களுக்கு நன்றி சொல்லுங்கள் என்றார்.
டாக்டர் கிளம்பி போன பிறகு பரிமளா சுரேஷிடமும் கணவரிடமும் இரத்தம் கொடுத்தது யார் என்று கேட்டாள். சுரேஷ், அம்மா இப்ப நான் யாருன்னு சொல்ல மாட்டேன், சொன்னா நீ லபோ திபோன்னு கத்துவ என்றான்.
என்னங்க நீங்களாவது சொல்லுங்களேன் என்றாள் கணவரிடம். அவரும் அம்மா தாயே, ஆளை விடு, நான் எதாவது சொல்லி அப்புறம் நீ கத்தி எதாவது ஏடாகுடம் ஆச்சுன்னா என்றார்.
நான் எதும் கத்தமாட்டேன், தயவு செய்து சொல்லுங்கள் என்றாள் பரிமளா. சுரேஷ் தயங்கி தயங்கி அம்மா உனக்கு ரமாதான் இரத்தம் கொடுத்தாள் என்றான். அப்படியா!!!! இப்ப ரமா எங்கே என்றாள் பரிமளா. சுரேஷ் வெளியில் தான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள் என்றாள்.
அவளை கூப்பிடு என்றாள் பரிமளா. சுரேஷும் கூப்பிட்டான். அவள் மெதுவாக தயங்கி தயங்கி உள்ளே வந்தாள். பரிமளா அவளை வாம்மா, வா இங்கே என் பக்கத்தில் வா என்றாள். அவளும் அருகில் வந்தாள். ரமா, அத்தை இப்ப எப்படி இருக்கு உடம்பு என்றாள். இப்ப பரவாயில்லை மா என்றாள் பரிமளா.
ரமா, அத்தை நான் ஒண்ணு சொன்னா கோபப்பட மாட்டீங்களே என்றாள். சொல்லுமா சொல்லு என்றாள் பரிமளா.
அத்தை சத்தியமா சொல்றேன், என் உடம்பு நிறம் தான் கருப்பு ஆனால் என் இரத்தம் சிவப்பாகதான் இருந்தது என்றாள். உடனே பரிமளா சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தாள். கூடவே எல்லோரும் சேர்ந்து சிரித்தனர்.
என்னங்க என் ராசாத்தி எப்படி பேசறா பாருங்க என்றாள் பரிமளா. ஒரு வாரம் கழித்து டிஸ்சார்ஜும் ஆகி விட்டாள். சுரேஷை வீட்டை உடனடியாக காலி செய்து இங்கேயே வந்து விடு என்றாள். எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
எழுத்தாளர் அகிலா சிவராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings