in , ,

அது ஒரு கனாக் காலம் 💗 (பகுதி 2) – சுஶ்ரீ

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஆமாம் என்ன சொல்லிட்டிருந்தேன் லண்டன போறதுக்காக தயார் பண்ணிட்டிருந்தது தானே? இந்தியன் ஏர்லைன்ஸ் பிளைட் சென்னைல இருந்து டெல்லி டெல்லில இருந்து லண்டன் ஹீத்ரூ.

மதுரைல இருந்து என் நண்பன் கார்ல சென்னை கூட்டிண்டு போறான்.

என்னாச்சு மாரியப்பன் சார், உங்களுக்கு இந்த லண்டன் போற கதை வேண்டாமா?( இந்த வாசகர் தொல்லை ஓவராப் போச்சு எதையும் சொல்ல விட மாட்டேன்றார்.) அந்த பழைய கதைதான் இன்ட்ரஸ்டிங்கா இருக்கா? இந்த வயசுல பழைய காதல் கதையெல்லாம் பேச வைக்கறீங்களே.சரி மேலே என்னாச்சு மதுரை சரஸ்வதி ஸ்டோர்ல அதுதானே வேணும், சொல்றேன்.

“அம்மா நீ மிளகாய்தானே அரைக்க கொடுத்தே?, இப்ப அரிசி கொடுத்தேன்றயே, தூக்கு மாறிப் போச்சா? நான் என்ன பண்ண அதுக்கு..”

“டேய் என்ன ஆச்சுடா உனக்கு? பித்தளை தூக்கு ரொம்ப வெயிட்டா இருக்குனு சொல்லிதானே தூக்கிண்டு போனே, மறந்துட்டயா? அரிசி யாராவது அரைச்சதுக்கப்பறம் அரைக்கச் சொல்லுன்னேன், நீயும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு போனே.”

“சரிம்மா போய் பாக்கறேன்”, நேரா மாவு மில்லுக்கு அலுமினியத் தூக்கை தூக்கிண்டு போனேனா, அந்த பாண்டியே “என்ன தம்பி பாத்திரம் மாத்தி எடுத்துட்டு போயிட்டே அந்த அய்யரு இவ்வளவு நேரம் கத்தினு கிடந்தாரு”

அம்மாவோட, அம்மாவோடதாம் அந்த ராக்ஷச தூக்கு அம்மாக்கு அரிசி மாவை விட அந்த தூக்கு முக்கியம்.

மறுநாள் மணி 8.45 , “அம்மா போய்ட்டு வரேன்” கோவில் மணியாய் ரீங்காரமிட்டது அந்த இசைக் குரல்.

அவ அம்மாவோட குரலும் கேட்டது,”எத்தனை தடவைடி சொல்லுவே, போய்த் தொலையேன்டி கடங்காரி, நானே டென்ஷன்ல இருக்கேன் இந்த வடாம் மாவு கெட்டியா கோந்து மாதிரி ஆயிடுத்தேனு”

“உனக்கு வராத வேலையை ஏன் பண்றே எப்பவும் போல அப்பாவை கிளறித் தரச் சொல்லிட்டு கோளாரு மட்டும் சொல்றதுதானே”

“கொழுப்பா வாய் நீளறது ரொம்ப, உங்கப்பாதான் வடிச்சுக் கொட்றாரா தினம்.ஓடிப் போ ஸ்கூலுக்கு, உதை வாங்காமே. பாரு இந்த பிராமணனை பொண்ணோட அதிகப் பிரசிங்கித் தனத்தை ரசிச்சிண்டு உக்காந்திருக்கறதை”

சுசீலா திரும்ப, “அம்மா, அப்பா போயிட்டு வரேன்” ஒரு தடவை கழுத்தை மயிலாய் நொடித்து எங்க போர்ஷன் பக்கம் ஒரு பார்வை, வேகமாய் படியிறங்கினாள்.

டீ ஷர்ட்டை அவசரமா நுழைச்சிண்டு வாசத் திண்ணைக்கு ஓடி வந்தேன்.அதோ அந்த பொதுக் குழாய் பக்கத்துல போனவுடனே திரும்ப அதே ஒயிலாக தலையை திருப்பி பார்த்தாள், ஒரு அரைப் புன்னகையுடன்.

கையை லேசாக தூக்கி ஆட்டினேன். அவள் கையை உயர்த்தாமலே லேசாய் ஆட்டி விட்டு நடையை தொடர்ந்தாள். அந்த தெரு முனை திரும்பி மறையற வரை நின்னு பாத்தேன்,லேசா மனசு பாரமானது.

காலேஜுக்கு போகவே பிடிக்கலை, ஆனா அம்மாவுக்கு ஏதோ பொறி தட்டி இருக்கு போல. “என்ன ஆச்சு காலேஜ்ல ஏதாவது பிராப்ளமா? வேற ஏதாவது பிரச்சனையா, ரெண்டு மூணு நாளாவே ஒரு மாதிரி இருக்கயே”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா”

“சரி சொல்ல இஷ்டமில்லைன்னா வேண்டாம், ஆனா இது பாதிக்கற வயசு, பொண்ணுங்க விஷயத்தில ஜாக்கிரதையா இரு எங்கயாவது போய் மாட்டிக்காம படிச்சு முடிக்கற வழியைப் பாரு”

“போம்மா நீயா ஏதாவது தப்பு, தப்பா கற்பனை பண்ணிக்காதே” சொன்னானே தவிர ஆச்சரியம் இந்த அம்மா எப்படி சட்னு என்னை படிச்சிடறானு.

“சரி விபூதி வச்சிண்டு காலேஜுக்கு போ”.

மெதுவா எங்க வீட்டு மொட்டை மாடி எங்க காதலை வளர்த்து விட்டது.சுசீலா எப்ப துணி காயப்போட வந்தாலும் நான் அங்கே ஆஜர்.

அன்னிக்கு கேக்கறா, “ஏய் நான் ஒண்ணு கேப்பேன் நிஜம் சொல்லுவயா, பொய் சொல்லக் கூடாது”

“பொய்யா, அப்படின்னா என்னப்பா?”

“ஓகோ, அரிச்சந்திரனோட அக்கா பையனோ? மூஞ்சியைப் பாரு புளுகு மூட்டை”

“சரி கேளு ஏதோ கேக்கணும்னயே”

“தப்பா நினைச்சுக்கக் கூடாது சரியா?, சின்ன டவுட்தான்” சொல்லும் போதே அவ முகம் தக்காளி சிவப்பு.

“சொல்லுப்பா, ரொம்பதான் சஸ்பென்ஸ் வைக்கறயே”

“நிஜமா தப்பா நினைக்கக் கூடாது என்ன” தலையை குனிந்து கொண்டு முணுமுணுத்தது கேக்கலை.

“கொஞ்சம் பலமா சொல்லு கேக்கலை”

“ஆமாம் இதைப் போய் ஊர் பூரா டமாரம் அடிக்கறேன். திருட்டுகொட்டு என் உள்ளாடையை நீதானே எடுத்து வச்சிருக்கே?”

“ஐய்யே அதுதானா, என் பனியன் மாதிரி இருந்தது எடுத்துட்டுப் போயிட்டேன், அப்பறம் பாத்தா உள் பக்கம் ரவுண்டா மஞ்சள் அப்பி இருக்கு ஏதோ வாசனையாவும் இருந்தது, என்ன சந்திரிகா சோப்பா?”

“சீ,சீ வெக்கமா இல்லை உனக்கு இப்படி பேச, திரும்ப கொண்டு வந்து இந்த கொடில போட்டுடு அப்பறமா”

“மாட்டேன், நானே என் பொட்டிக்கடில பத்திரமா வச்சிருக்கேன், நம்ம கல்யாணம் ஆனவுடனே போட்டு விடறேன்”

“ஐய்யோ, தப்பு தப்பா பேசறே, நான் இனிமே உன்கிட்ட பேச மாட்டேன்”

“என்ன தப்பா பேசினேன் இப்ப திரும்ப கொடுத்துடறேன்னுதானே சொன்னேன்”

“போடா என்னை அப்படி பாக்காதே உடம்பெல்லாம் குறுகுறுன்றது”

“சரி சுசீ ஹிந்தி படம் ஷோலே போட்டிருக்கான் ரொம்ப நல்லா இருக்காம் போலாம் வரயா”

“ஐய்யோ அப்பாக்கு தெரிஞ்சா கொன்னுடுவார், நான் மாட்டேன்பா”

“உன் பிரண்டோட போறேன் சொல்லிட்டு வாயேன், அங்கிள் அப்படி ஒண்ணும் மோசம் இல்லைனுதான் தோணறது”

“எந்த பிரண்டுனு கேட்டா?”

“உன் மேலச் சித்திரை வீதி பிரண்ட் மாலானு சொல்லேன், அவளையும் வேணா கூட்டிண்டு வா”

“அடப்பாவி அவளையும் சைட் அடிக்கறையா, கொன்னுடுவேன் உன்னை”

“இல்லைப்பா அவ என் கிளாஸ்மேட் விச்சுவோட தங்கைதான், எனக்கு ரொம்ப வருஷமா தெரியும் எனக்கும் தங்கை மாதிரிதான்”

“சரி நம்பறேன், ஜாக்கிரதை, வேற யாரையாவது மனசால நினைச்சா கூட கண்டு பிடிச்சிடுவேன்”

“ஐய்யோ பயமா இருக்கே, அவ்வளவு காதலா என் மேலே?”

“சீ, ரொம்பதான், போடா வெக்கமா இருக்கு”

“சரி சாயந்தரத்துக்குள்ளே சொல்லு வெள்ளிக்கிழமைக்கு ஷோலே பிளான் பண்ணலாம்”

எப்படியோ கெஞ்சி கூத்தாடி சுசீலா அனுமதி வாங்கிட்டா, மாலாவோட பேரண்ட் சுசீலாவோடன்னு சொன்னவுடனயே சரின்னுட்டாங்களாம். நான் கூட வரது மாலாவுக்கு கடைசி வரை தெரியாது.

வெள்ளிக்கிழமை எனக்கு காலைல இருந்து நிலை கொள்ளலை, 2 மணி ஷோதான் அம்பிகா தியேட்டர்ல.தனித் தனியா போறதாதான் பிளான். நான் 1.30 மணிக்கு தியேட்டர்ல ஆஜர்.

மாலாவும், சுசீலாவும் சரியா 2 மணிக்கு வரதுக்குள்ளே தவியா தவிச்சிட்டேன்.

மாலா “ஏய் பாருடி ஶ்ரீதர் அண்ணா நிக்கறான் உங்க ஸ்டோர்லதான் இருக்கான், தெரியுமா?

“ஓ அவனா பாத்திருக்கேன் ஏதோ காலேஜ்ல படிக்கறான் இல்லை?”

“ஆமாம் என் அண்ணாவோட கிளாஸ் மேட், ரொம்ப நல்ல பையன், வா பேசலாம்”

“வேண்டாம்டி முன்னே பின்னே தெரியாதவங்ககிட்ட பேசினா அம்மா திட்டுவா, நேரா கவுன்டர்ல போய் டிக்கெட் எடுப்போம்”

அதுக்குள்ளே ஏதேச்சையா பாத்த மாதிரி நான் மாலாவை பாத்து கையசைச்சிட்டு பக்கத்துல போனேன், “என்ன,விச்சு வரலையா?”

“இல்லைண்ணா, இவ சுசீலா என் பிரண்ட். உங்க ஸ்டோர்லதான் இருக்கா”

“ஆமாம் எங்கேயோ பாத்த மாதிரிதான் இருந்தது, நீ பியூசி படிக்கறே இல்லை பாத்திமால”

“இல்லை முனிசிபல் ஸ்கூல்ல ஏழாவது படிக்கறேன்.”

“அப்படியா, பெயிலாயி, பெயிலாயி படிக்கிறயா?”

“ஆமாம் அப்படித்தான்” அழகா முகம் சுழித்து வக்கணை காட்டினாள் மாலா கவனிக்காதப்ப.

மாலா, “இல்லைண்ணா இவளும் 11th தான்”

நான், “சரி எங்கிட்ட ரெண்டு டிக்கெட் எக்ஸ்டிரா இருக்கு வேணுமா, நீங்க வாங்கியாச்சா”

மாலா, “நல்லவேளை நாங்க வாங்கலை, கொடுங்கண்ணா எந்த டிக்கட், எவ்வளவு பணம்?”

“பணம் இப்ப வேண்டாம், போறப்ப டிபன் வாங்கிக் கொடு அலங்கார்ல”

“சரி முத பெல் அடிச்சிட்டான் வாங்க போலாம்”, அவசரமா மாலா உள்ளே நுழைஞ்சா.

“D 1,2,3 பாத்து உக்காரு மாலு.”

சுவரோரம் மாலா, அடுத்து சுசீலா, பக்கத்துல நான்.

அந்த அனுபவம் இருக்கே எழுத்தில் எழுதினா அவ்வளவு ருசிக்காது. எழுதற திறமையும் எனக்கு கிடையாது.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தொடரும்.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அது ஒரு கனாக் காலம் 💗 (பகுதி 1) – சுஶ்ரீ

    அது ஒரு கனாக் காலம் 💗 (பகுதி 3) – சுஶ்ரீ