ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
துபாய் செல்லும் சந்தர்ப்பம் முதலில் கிட்டிய போது, என் மனைவி என்னுடன் வர ஆர்வம் காட்டியது ஆச்சரியம் என்பதால், உடனே இருவருக்கும் வீசாவிற்கு ஏற்பாடு செய்தேன்.
என்னுடைய அலுவலக வேலை நிர்ப்பந்தத்தின் காரணமாக, பெரும்பாலான என் வெளிநாட்டுப் பயணங்கள் தனியாகவே அமைந்து விடும். ஒரு சில பயணங்கள் என் நண்பர்களுடன் அமையும்.
ஒரே ஒரு முறை தான் குடும்பத்துடன் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து சென்று வந்தேன்.
எனவே துபாய்க்கு மனைவியுடன் பயணம் என்பதால் குஷியாகவே உணர்ந்தேன். என் மகள் கூட “ரெண்டாவது ஹனிமூனா, என்ஜாய் பண்ணுங்க” என்று கலாய்த்தாள்.
துபாயில் காலை ஆறு மணிக்கு விமான நிலையத்திலிருந்து வெளிவந்த போது ஏதோ அடுப்புக்குள் வந்த மாதிரி ஒரு சூடு. உடனடியாக காத்திருந்த காரில் ஏறி ஹோட்டலுக்கு சென்று விட்டோம்
என் மனைவி, முட்டை கூடத் தொடாத தீவிர சைவம் என்பதால், சாப்பாடு சரியாக அமையா விட்டால் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு சர்விஸ் அப்பார்ட்மென்ட்டை (Belvedere Court) புக் செய்து வைத்திருந்தேன்.
நல்ல காற்றோட்டமாக, வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் என்று சகல வசதிகளுடன் இருந்த அந்த சர்விஸ் அப்பார்ட்மென்ட்டைப் பார்த்தவுடன், என் மனைவிக்குக் குஷி வந்து விட்டது.
“சாப்பாடு சரியில்லை என்றால் நானே சமைத்து விடுகிறேன்” என்று சொல்லியவுடன், ஒரு நாள் வாடகை நம் இந்திய மதிப்பில் அதிகம் என்றாலும், நானும் குஷியாகி விட்டேன்.
துபாய் நண்பர் வெங்கடேஷ், அருகிலிருக்கும் ‘சுக் சாகர்’ என்ற இந்திய உணவகத்துக்கு அழைத்து சென்றார். சூடாக இட்லி, வடை சாப்பிட்ட பிறகு துபாயில் 5 நாட்களை கடத்தி விடலாம் எனத் தோன்றியது.
ஒரு பாலைவனத்தை இப்படி ஒரு மெகா நகரமாக மாற்றி அமைத்ததற்காகவே துபாய் அரசை பாராட்ட வேண்டும்.
தண்ணீர், காய்கறிகள், பழங்கள், அரிசி அனைத்து பொருட்களுமே இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயம் என்றாலும், எதிலுமே குறை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் எல்லாமே விலை அதிகம்.
எனக்குத் தெரிந்து துபாயில் விலை குறைந்த ஒரே சமாசாரம் பெட்ரோல் தான். ஒரு லிட்டர் விலை கேட்டவுடன் பேசாமல் ஒரு டேங்கர் பெட்ரோலை சென்னைக்கு கடத்தினால் என்ன என்று கூட அபத்தமாக தோன்றியது.
பல நாடுகளில் பெரிய, பெரிய ஷாப்பிங் மால்களை ஏற்கனவே பார்த்து விட்டதால், மாறுதலுக்கு வேறு எங்காவது செல்லலாம் என்று துபாய் தங்க வீதிக்கு (Gold Souk) சென்றோம்.
ஜாய் ஆலுக்காஸ் இங்கும் பெரிய கடை ஒன்றைத் திறந்து அட்சய திரிதியை முன்னிட்டு தங்கம் வாங்கினால் தங்கம் இலவசம் என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள்.
தங்கம் வாங்கும் ஆசை இருந்தாலும், டப்பு அதிகமில்லை என்பதால் “விண்டோ ஷாப்பிங்” செய்து விட்டு (பிளாட்டினம் காயின் முதற்கொண்டு எல்லாம் கிடைக்கிறது) வண்டி ஏறினோம்.
ஆனால், சில பிரபல மால்களையும் விடவில்லை. துபாய் மால், டேரா மால், எமிரேட்ஸ் மால் ஆகியவை மிக பிரமாதமாக இருக்கின்றன.
ஏஸி பஸ் ஸ்டாப்
துபாய் ஷேக்குக்கு துட்டு அதிகம் என்ற காரணத்தினால், ஊரையே ஏஸி செய்து வைத்ததோடு நில்லாமல், பஸ்சுக்கு காத்திருக்கும் போதும் பொது மக்கள் வெயிலில் வாடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பஸ் ஸ்டாப் வரை ஏஸி செய்திருக்கிறார்.
பாலைவன சவாரி
மறுநாள், துபாய் பாலைவனத்திற்கு சென்றோம் (Desert Safari).
எல்லாமே இருந்தும், சுற்றுலா மூலம் நல்ல வருவாய் வரும் என்று தெரிந்தும், சர்வ அலட்சியத்துடன் இருக்கும் நாம் எங்கே, வெறும் பாலைவனத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அதன் மூலம் விதவிதமான சுற்றுலா திட்டங்களை வைத்து வெளிநாட்டு பயணிகளைக் கவரும் துபாய் எங்கே!
பாலைவன சவாரி, அதிகாலையில் பாலைவனத்தில் இருந்து பெரிய பெரிய பலூன்கள் மூலம் சூரிய உதயத்தை ரசிக்க பிரமாதமாக ஏற்பாடுகள், பாலைவனத்தில் இரவு பிரத்யேக கூடாரங்களில் தங்கும் வாய்ப்பு, இரவு நடனத்துடன் (Belly Dance) உணவு என்று ஏராளமாக இருக்கின்றன.
பாலைவன மணலில் சும்மா சர்வ சாதாரணமாக ஒரு கையிலேயே காரை ஓட்டிய (மறுகையில் செல்போன்) அந்த ஓட்டுனரைப் பாராட்ட வேண்டும் (வண்டியினுள் அமர்ந்திருந்த எங்களுக்கு திக் திக் என்று இருந்தது வேறு விஷயம்)
புர்ஜ் காலிஃபா
மறுநாள் அலுவலக வேலையாக துபாய் இண்டர்நேஷனல் ட்ரேட் சென்டர் வரை சென்று விட்டு, மதியம் உலகின் மிக உயரமான கட்டிடமான “புர்ஜ் காலிஃபா (Burj Khalifa) சென்றோம்.
ஏறத்தாழ 2718 அடி உயரம் கொண்ட இந்தக் கட்டிடத்தில், 164 மாடிகள் உள்ளன. பொதுமக்கள் 124 மாடிகள் வரை தான் அனுமதிக்கப்படுகிறார்கள். உலகின் மிக உயரமான கட்டிடம் என்பது தவிர, மேலும் சில பெருமைகளும் இதற்கு உண்டு
- உலகின் மிக உயரமான தனித்த கட்டிடம் (Tallest Free Standing Building)
- உலகில் அதிக மாடிகள் உள்ள கட்டிடம்
- உலகில் அதிக உயரத்துக்கு செல்லும் மின்-தூக்கி (Lift)
- உலகில் அதிக உயரத்தில் இருக்கும் கண்காணிப்பு மேடை (Observation Desk)
இந்தக் கட்டிடத்தில் இருந்து பார்க்கும் போது, துபாய் பரப்பளவில் எவ்வளவு சிறியது என்பது தெரிகிறது.
ATM மெஷின் தங்கம்
பெட்ரோல் வளம் அதிகம் என்பதால், தங்கம் கூட ATM மெஷின் மூலம் கிடைக்கிறது. துபாயில் திருட்டு பயம் என்பது அறவே கிடையாது. திருட்டுக்கு மிகக் கடுமையான தண்டனை என்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை.
பெட்ரோல் விலையும், கார்கள் விலையும் குறைவு என்பதால், சிறிய கார்களைக் காண்பது அரிதாகவே இருந்தது.
சாலைகள் மிக சுத்தமாக, பெரும்பாலும் காலியாகவே இருக்கின்றன (சென்னை நெரிசலோடு ஒப்பிடும் போது அப்படித் தெரிகிறதோ?)
நான் சந்தித்த வரையில் இந்தியர்கள் (குறிப்பாகத் தமிழர்கள்) அதிருப்தியாகவே இருக்கிறார்கள். கடுமையான வேலை செய்தும் விலைவாசி மிக அதிகம் என்பதால், சேமிப்பு குறைவாகவே இருக்கிறது, குடும்பத்துடன் இருப்பது மிக கஷ்டமான காரியம் என்கிறார்கள்.
துபாயில் என்னை மிகவும் உறுத்திய விஷயம், இந்தியர்களை அவர்கள் நடத்தும் விதம். விமான நிலையத்திலேயே சுற்றுலா பயணிகள் என்று தெரிந்தும் மரியாதை குறைவாகவே நடத்துகிறார்கள்.
இமிக்ரேஷன் வரிசையில் நிற்கும் போதே, தேவை இல்லாமல் ஒரு செக்யூரிட்டி அதிகாரி “லைன் மே ஜாவ்” எனக் கத்திக் கொண்டிருந்தார்
பெரும்பாலான இந்தியர்கள் பலி கடா மாதிரி தலையைக் குனிந்து கொண்டே செல்கிறார்கள். இமிக்ரேஷன் வரிசை எவ்வளவு நீளமாக இருந்தாலும், தெரிந்தவர்கள் வந்தால், செக்யூரிட்டி அதிகாரிகள் அவர்களைப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டு போய் வரிசையில் முதலில் நிற்க வசதி செய்கிறார்கள்.
பயணம் முடிந்து சென்னை செல்ல விமானம் ஏறியபோது என் மனைவியிடம் இருந்து ஒரு கேள்வி, “இவ்வளவு முறை சிங்கப்பூர் சென்று வருகிறீர்களே, எது பெஸ்ட், சிங்கப்பூரா, துபாயா?”
என்னைப் பொறுத்த வரை என்ன முக்கினாலும், எவ்வளவு புர்ஜ் காலிஃபா வந்தாலும் துபாய் சிங்கப்பூரை நெருங்கக் கூட முடியாது. எல்லாவற்றையும் விட சிங்கப்பூரில் மனிதாபிமானம் அதிகம் என்பதே என் கருத்து
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021ல் வெற்றி பெற்ற 20 சிறுகதைகள், நம் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின்’ வெளியீடாக, ISBN எண்ணுடன், அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலக சாதனை நிகழ்வில் அச்சு புத்தகமாக வெளிவர இருக்கிறது.
இந்த நிகழ்வில் புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்களுக்கு, உலக சாதனை சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உலக சாதனை நிகழ்வில் நீங்களும் புத்தகம் வெளியிட விரும்பினால், இதில் கொடுத்துள்ள வழிமுறையை பின்பற்றுங்கள். நன்றி 👇
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
மிக அருமையாக உங்கள் எண்ணங்களை / அனுபவங்களை எழுதியிருக்கிறீர்கள். ரசித்துப் படிக்க முடிந்தது. நான் இன்னும் துபாயைப் பார்த்ததில்லை.
துபாய் அனுபவங்களை அற்புதமாகக் கண் முன் கொண்டு வந்துவிட்டீர்கள். அங்கு நீங்கள் பார்த்த இடங்களைப் பற்றி இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாம்.
சுவாரசியமான கட்டுரை. என்னைப் போன்றவர்களுக்காக துபாயில் நீங்கள் பார்த்து ரசித்த இடங்களைப் பற்றி மேலும் விவரங்கள் தந்திருக்கலாமே? ஒரு முழு அனுபவம் கிட்டியிருக்குமே ?