இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 128)
தன்னழகைப் பார்த்து அதிசயித்து, ஆராதித்த உலகம், தன் முகத்தைப் பார்த்து வெருண்டோடும் காலமொன்று வருமென்று, மீனா கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவள் தந்தைக்குக் கொளுத்து வேலை, அம்மா சமையல்காரி. இருவரும் வெளியில் சென்று உழைத்தால் தான், வீட்டில் அடுப்பெரியும் நிலைமை.
இவ்வளவு அழகாகத் தனக்குக் குழந்தை பிறந்திருக்க வேண்டாம் என்று நினைத்தாள் அலமேலு. மீனாவைப் பத்திரமாகக் காப்பாற்றி, ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கும் வரை, வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டுமே எனக் கவலைப்பட்டாள்.
பள்ளி விடுமுறை நாட்களில், வேலைக்குச் செல்ல முடியாமல், வீட்டிலிருந்து அவளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அவள் அம்மாவுக்கு
பசுவிற்கும், கன்றுக்கும் வேறுபாடு அறியாக் காலமல்லவா இது!
ஐந்தாம் வகுப்பில் மாணவன் ஒருவன், “உன்னைக் காதளிக்கிறேன், கல்யாணம் செய்து கொல்கிறேன்,” என்று கடிதமெழுதி, மீனாவிடம் கொடுத்தான்.
“நீ கல்யாணம் செய்து, என்னைக் கொல்வதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். தமிழைக் கொலை செய்து, இப்போது என்னைக் கொல்லாதே” என்று பதிலெழுதி, அவனிடம் கொடுத்தாள் மீனா
அவள் எழுதியது புரிந்ததோ, இல்லையோ, அவளைப் பார்க்குந்தோறும், முகத்தை அஷ்டகோணலாக்கி, அவன் பழிப்புக் காட்டிச் சென்றான்
‘கடிதம் பற்றி வீட்டிலோ, பள்ளியிலோ சொன்னால், அத்துடன் தன் படிப்புக்கு, அம்மா முழுக்குப் போட்டுவிடுவாள், என்பதை மீனா உணர்ந்திருந்த காரணத்தால், காதல் கடிதப் பிரச்சினைகளைத் தானே சமாளிக்க முடிவு செய்தாள்.
ஆறாம் வகுப்பிலிருந்து மாணவர்களை விட, ஆசிரியர்களின் பாலியல் சீண்டல்களைச் சமாளிப்பது, அவளுக்குப் பெருஞ்சவாலாக இருந்தது.
கூடப் படித்தவர்களில், இளம்பரிதி என்பவனைத் தவிர, மற்ற அனைவரும் அவளிடம் பழகத் தவமாய்த் தவமிருந்ததால், தான் பிரமாதமான அழகி என்ற எண்ணம், அவளுக்குக் கர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.
பரிதி மட்டும், இவளைச் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை என்ற போது, அவன் மீது ஈர்ப்பு உண்டானது. எதிரெதிர் துருவம் ஈர்ப்பது, இயற்கை தானே?
அவன் அப்பா எங்கோ ஓடிவிட, அம்மா தான் வீடுகளில் பாத்திரம் தேய்த்துக் குடும்பத்தைக் காப்பாற்றுவதாகக் கேள்விப்பட்டிருந்தாள். அவனுக்கு அவ்வளவு திமிரா? தன்னைச் சட்டை பண்ணாத அவனை மட்டந்தட்ட மீனா முடிவு செய்தாள்.
ஒருநாள் காலையில், பள்ளிக்குச் சென்ற வழியில், அவனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவே, “ஏ முக்கா பேண்ட்! முக்கா பேண்ட்டு” என்று சத்தம் போட்டுக் கூவினாள்.
தெருவில் சென்ற சிலர், அவனைப் பார்த்துக் கிண்டலாக நகைத்தவாறே சென்றனர். அவன் திரும்பிப் பார்த்தான்.
“நில்லு நானும் வாரேன், பேசிக்கிட்டே போலாம்” என்று அவள் சொன்னவுடன் அவள் வரும் வரை காத்திருந்தான்.
“எல்லாரும் ஒன்னை முக்கா பேண்ட்டுன்னு கூப்பிடறாங்களே, ஒனக்கு அவமானமாயில்லியா? தைக்கிற பேண்டை, கொஞ்சம் இறக்கமாத் தைச்சாத் தான் என்ன?” நடந்து கொண்டே நக்கலாகக் கேட்டாள்
“என்ன பதிலே காணோம்?”
“இதெல்லாம் எனக்குத் தைச்சதில்ல. எங்கம்மா வேலை செய்யற வீட்டு அண்ணனோடது. அவரு கொஞ்சம் குள்ளம். அதனால எனக்கு முக்கா தான் வருது”
தான் நினைத்தபடி, இவன் திமிர் பிடித்தவனில்லை. தன்னை விட பரம ஏழை, கள்ளங் கபடின்றி, உள்ளதை உள்ளபடி உரைக்கும், பாவப்பட்ட ஜீவன் என்றறிந்த போது, அவன்மீது அவளுக்கு இரக்கம் துளிர்த்தது
“பள்ளிக்கூடத்துல சீருடைத் துணி, இலவசமாத் தானே கொடுக்கிறாங்க, அதையாவது இறக்கமாத் தைச்சுக்கலாமில்லியா?” என்று பாவமாகக் கேட்டாள்
“எப்பிடியோ என்பேரு முக்கா பேண்ட்டுன்னு ஆயிடுச்சி. இனிமே இறக்கமாப் போட்டா மட்டும், மாறவாப் போகுது? பள்ளிக்கூடத்துல கொடுத்த துணியை, இறக்கமாத் தைச்சி வைச்சிருக்கேன். வெளியில எங்கியாவது விசேஷத்துக்குப் போவும் போது, புதுசாப் போட்டுட்டுப் போவேன்” என்றான்.
‘அடப்பாவமே, வெளியில போகும் போதும், சீருடையா?’ என்று பரிதாபப்பட்டவள், “நான் ஒன்னு கேட்கறேன், தப்பா நெனைச்சிக்க மாட்டியே” என்றாள்.
“ஹூகும்”
“நம்ம வகுப்பில, ஒன்னைத் தவிர எல்லாப் பசங்களும், எங்கிட்ட பழகறதுக்கு வாய்ப்புக் கிடைக்காதான்னு அலையறானுங்க. நீ மட்டும் ஏன் எங்கிட்ட பேசக்கூட மாட்டேங்கிறே? என்னைப் பார்த்தாலே ஒதுங்கி ஒதுங்கிப் போறே?”
“அவனுங்களுக்கு ஒன்மேல காதல், அதான் பைத்தியமா அலையறானுங்க. என்னை ஈர்க்கிற மாதிரி, ஒங்கிட்ட விஷயம் எதுவுமில்லியே” என்றான் அப்பாவியாக
“ஓஹோ… ஐயாவோட பர்சனாலிட்டிக்கு என்னைவிட அழகானவளாப் பார்த்தாத் தான், காதல் வருமோ?” கோபத்தில் அவள் கன்னங்கள் மேலும் சிவந்தன
“அச்சச்சோ… நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. அழகுங்கிறது, வெளித் தோற்றத்துல இல்ல. மனசுல இருக்கு. வயசானா, இந்த அழகெல்லாம் போயிடும். என்னைப் பொறுத்தவரை, இந்த உலகத்திலேயே, ரொம்ப அழகானவங்க, என் அம்மா தான். பிறவியிலேயே, ஒனக்கு கண்ணு, மூக்கெல்லாம் பாக்க லட்சணமாத் திருத்தமா அமைஞ்சிருக்கு. ஆஹா ஓஹோன்னு பாராட்டிப் புகழ, இதுல ஒன்னோட திறமை என்ன இருக்கு?” என்றான் அவன் யோசனையுடன்.
சாட்டையால் அடித்த மாதிரி, அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதுவரை இந்தக் கோணத்தில், அவள் சிந்தித்ததே இல்லை. தன்னழகைப் பற்றிய கர்வம் அன்றோடு, அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது.
பள்ளி நெருங்கி விட்டதால், அத்துடன் பேச்சு நின்றது. அதற்குப் பிறகு பள்ளியிறுதி நாளில் விடைபெற்றுக் கொண்டதோடு, அவனுடனான தொடர்பு முற்றாக அற்றுப் போனது
பள்ளியிறுதி வகுப்பிலும், அவனே பள்ளியின் முதல் மாணவனாகத் தேறியிருந்தான்.
கல்லூரியில் காலெடுத்து வைத்த போது, காதலர் தினம் என்ற நாளில், மாணவர்கள் பண்ணிய அட்டகாசத்தை, மீனாவால் தாங்க முடியவில்லை. அவள் அழகாய் வேறு இருந்ததால், மற்றவர்களை விட அவளுக்கு இம்சை அதிகமாயிருந்தது.
‘காதல் இல்லாத கல்லூரி வாழ்க்கையா? யாரையாவது ஒருத்தியைப் பிடித்தே தீர வேண்டும்’ என்ற ‘கொலைவெறி’யில், அவர்கள் அலைந்தனர்.
சொந்தத்தில் மாப்பிள்ளை பேசி முடிவாகி விட்டதென்றும், படிப்பு முடிந்தவுடன் கல்யாணமென்றும், எல்லோரிடமும் சொல்லித் தப்பித்துக் கொண்டிருந்தாள்
ஆனால் சுகுமார் என்பவன் மட்டும், மீனா சொன்னதைக் கேட்காமல் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் ஆளுங்கட்சி மந்திரியின் செல்லப் பிள்ளை என்றார்கள்.
அவள் படிப்பு முடிந்து தனியார் கம்பெனியொன்றில், வேலையில் சேர்ந்த பின்னரும், தொந்திரவு நின்றபாடில்லை.
தான் ஆசைப்பட்டது எதுவும், இதுவரைக் கிடைக்காமலிருந்தது இல்லை என்றும், தனக்குக் கிடைக்காதது, யாருக்குமே கிடைக்கக் கூடாதென்றும் அவள் சம்மதிக்க மறுத்தால், முகத்தில் அமிலம் வீசிக் கொன்று விடுவேன் என்றும் சுகுமார் அடிக்கடி மிரட்டினான்.
ஆனால் அவன் மிரட்டலை, அவள் சிறிதும் சட்டை செய்யவேயில்லை.
சில மாதங்கள் கழித்து, ஒரு நாள் காலை, மீனா வேலைக்குச் செல்ல, தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் நின்றிருந்தாள். காலை ஏழுமணி என்பதால், கூட்டம் அதிகமில்லை. தூரத்தில் வந்து கொண்டிருந்த வண்டியின் மீது, அவளின் முழுக் கவனமும் இருந்தது
திடீரென்று அவளை நோக்கி வந்த ஒருவன், அவள் முகத்தில் எதையோ வீசி விட்டு ஓடினான்.
கண்ணிமைக்கும் நேரத்தில், உள்ளுணர்வு காரணமாக கைகளை வைத்து மறைத்ததால், அவளது கண்கள் தப்பித்தன. கன்னங்களில் வீசப்பட்ட திரவம் தோலை வழித்தெடுத்துக் கொண்டு, கழுத்திலும், கைகளிலும் இறங்கியது.
“ஆ ஐயோ அம்மா…” என்று கத்திக் கொண்டே, மீனா தரையில் விழுந்து புரண்டாள். சுட்டுப் பொசுக்கும் அமிலத்தின் வெப்பம் தாங்காமல், நிலையமே அதிரும் வண்ணம் அலறினாள் கதறினாள் துடிதுடித்தாள் துவண்டாள்
கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் தூக்கிப் போட்டாற் போல, அமிலம்பட்ட இடங்கள் பற்றி எரிந்தன. தரையிலேயே தட்டாமாலை சுற்றினாள்.
அமிலம் கோரப் பசியுடன் சதைகளைச் சுவைத்துத் தின்றபடி, துளைத்துச் சென்று, தோலால் மூடியிருந்த எலும்புகளை, வெள்ளையாக வெளிச்சம் போட்டுக் காட்டிற்று
அவள் கூக்குரலைக் கேட்டு, அங்கு வந்து குழுமியவர்கள், சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களேயொழிய, ஒருவரும் உதவ முன்வரவில்லை. இளைஞர்களில் சிலர், அணுஅணுவாக அவள் படும் சித்ரவதைகளைத் துல்லியமாக(!) கைபேசியில் வீடியோ எடுத்து, வாட்ஸ்அப்பில் அனுப்பிக் கொண்டிருந்தனர்.
யாரோ ஒருவர் மட்டும், அவள் துடிப்பதைக் காணப் பொறுக்காமல், ஆம்புலன்ஸைத் தொடர்பு கொண்டார். ரயில்வே காவல்துறை, அமிலம் வீசியவனின், அங்க அடையாளங்களை விசாரித்தது.
நேரடியாக பார்த்த சிலரும், எதற்கு வம்பென்று சாட்சியம் சொல்லப் பயந்து, யாரையும் பார்க்கவில்லையெனச் சாதித்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்
அவள் அம்மா விஷயம் கேள்விப்பட்டு, வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வந்தாள். நான்கு நாட்கள் கோமாவில் கிடந்த பின்னர், அவளுக்கு நினைவு மீண்டது.
கண்டிப்பாகச் சுகுமாரின் ஆள் தான், அமிலத்தைத் தன் மீது வீசியிருக்க வேண்டும் என்று அம்மாவிடம் சொன்னாள் மீனா.
ஊடகங்கள் இச்செய்தியை இருட்டடிப்புச் செய்து விட்டு, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா, என்பது போன்ற, தமிழக வரலாற்றைப் புரட்டிப் போடக்கூடிய(?) அதிமுக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை அறிவு ஜீவிகள் சிலரைக் கூப்பிட்டுக் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தன.
மாதர் சங்கங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம், விஷயம் கசிந்து பரபரப்பான போது, யாரோ ஒரு அப்பாவியைப் பிடித்து, அவன் மேல் குற்றஞ்சாட்டி, அவன் சிறைக்குள் இருந்தபோதே, ‘தற்கொலை,’ செய்ய வைத்து, வழக்கை அவசரமாக முடித்தது, காவல்துறை.
மர்மச் சாவு என்று சிலர் வெளியே கூக்குரலிட்டாலும், அது பெரியளவில் கவனம் பெற முடியாமல், அமுக்கப்பட்டது. வழக்கம் போல் பொதுமக்கள் வசதியாக அச்செய்தியை மறந்துவிட்டுத் ‘திரைக்கு வந்து சில மாதங்களே ஆன’ திரைப்படங்களைக் கண்டு ரசித்தனர்.
பெண்களோ மெகா தொடர்களைப் பார்த்து, கணவனிடம் தினமும் அறை வாங்கும் பெண்ணுக்காக உருகி உருகி அழுதனர். மருமகளைக் கொடுமை செய்யும் நாத்தனாரையும், மாமியாரையும் விரல்களை நொடித்துச் சபித்துக் காலந் தள்ளினர்
மருத்துவமனையில் சேர்ந்த நான்கு மாதங்களில், முகத்தில் மட்டும் ஆறு அறுவைகள் செய்யப்பட்டன. தொடையிலிருந்து சதையை எடுத்து, முகத்திலிருந்த ஒவ்வொரு பள்ளமாக நிரப்பினார்கள்.
அன்று அவளைக் காண இளம்பரிதி வந்திருந்தான். பள்ளியிறுதி வகுப்பு முடிந்த பிறகு, அவனை அன்று தான் மீனா சந்தித்தாள்.
அவன் கல்லூரியிலும் சிறப்பாகப் படித்து கேம்பஸ் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று பொறியாளனாக ஆகி விட்டான் என்று கேள்விப்பட்டிருந்தாள்.
ஏதோ ஒரு புரோஜெக்ட் விஷயமாக, அமெரிக்கா சென்றிருக்கும் விஷயத்தையும் ஏற்கெனவே அறிந்திருந்தாள்.
அவனைப் பார்த்த போது, அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. பள்ளியில் பார்த்த ஒட்டடைக்குச்சி பரிதி இப்போது இல்லை. உடம்பில் சதைபிடித்து, முகத்தில் செல்வச் செழிப்பின் காரணமாய், மினுமினுப்புக் கூடியிருந்தது.
“வா பரிதி… எப்படியிருக்கே? எப்ப வந்தே?”
“நல்லாயிருக்கேன் மீனா, வந்து ரெண்டு நாளாச்சு. விஷயம் கேள்விப்பட்டேன், வருத்தமாயிருந்துச்சி. பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன். நீ எப்படியிருக்கே?” என்று கேட்டவன், அவளுக்காக வாங்கி வந்திருந்த ஒரு பெரிய பழக்கூடையை மேசை மேல் வைத்தான்.
அவன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல், “அடடே… இப்பவும் முக்காபேண்ட் தானா?”என்று சிரித்தாள்
“இல்ல… இப்ப அது அரை பேண்ட் ஆயிடுச்சி” என்று முழங்கால் வரை அணிந்திருந்த பெர்முடாஸைச் சுட்டிக் காட்டிச் சிரித்தான்.
“கடுமையான வறுமையில, தெருவிளக்குல கஷ்டப்பட்டுப் படிச்சி, இந்தளவு முன்னேறியிருக்கிற ஒன்னைப் பார்த்தாப் பெருமையாயிருக்கு. என் நெலைமையைப் பார்த்தியா? இப்ப என்னைப் பாக்கிற சின்னப் புள்ளைங்க, பேய் பிசாசைக் கண்ட மாதிரி பயந்து அலறுதுங்க.
எப்பேர்ப்பட்ட அழகுன்னு வைச்ச கண்ணு வாங்காம பார்த்தவங்கல்லாம், பார்க்கக் கூடாத எதையோ பார்த்தது மாதிரி, அருவருப்போட மொகத்தைச் சுழிக்கிறாங்க. இனிமே வெளியில போறப்ப, முக்காடு போட்டுக்கிட்டுத் தான் போகணும்”
“அதுக்கெல்லாம் கவலைப்படாதே மீனா. பிளாஸ்டிக் அறுவை மூலம் எல்லாத்தையும் சரி பண்ணிடலாம். இப்ப, மருத்துவத்துறையில எவ்வளவோ முன்னேற்றம் வந்துடுச்சி. நல்லாயிருக்கிற மூக்கையே அறுவை பண்ணி மாத்திக்கிற காலமிது”
“அதுக்கெல்லாம் நெறைய செலவாகும். இதோட ஆறு அறுவை பண்ணியாச்சி. இன்னும் நாலு பண்ணனுமாம். விட்டாப் போதும்னு இருக்கு. மாசக் கணக்கா ஆஸ்பத்திரியில படுத்துக் கெடக்கிறது கொடுமையாயிருக்கு. ஏன் உயிர் பொழைச்சோம், அப்பிடியே செத்துருக்கக் கூடாதானு, தினந்தினம் மனசுக்குள்ள அழறேன்.
என்னைக் கட்டிக்கணும்னு ஒத்தக் கால்ல நின்ன மாமன் மகன்லாம் இந்தப் பக்கம் எட்டியே பார்க்குறதில்ல. பார்க்க வந்தா, என்னைக் கட்டிக்கிறியான்னு கேட்டுடுவேன்னு பயம்” சொல்லி விட்டு விரக்தியாகச் சிரித்தாள் மீனா.
“இப்போதைக்கு ஒனக்குத் தேவை, மனதைரியம் தான். மனசைத் தளரவிடாதே. அந்த விபத்துல ஒன் கண்ணு, தப்பிச்சித நெனைச்சிச் சந்தோஷப்படு. கண்ணுல பட்டிருந்தா என்ன ஆயிருக்கும்?”
“அது உண்மை தான்பா. கண்ணு போயிருந்தா, என் கதி என்ன ஆயிருக்குமோ தெரியலை. சரி எங்கதையை விடு. ஒங்கம்மா எப்பிடியிருக்காங்க?”
“நல்லாயிருக்காங்க. அமெரிக்காவுக்குக் கூட்டிட்டுப் போயி, சுத்திக் காட்டினேன். இங்கச் சொந்த வீடு வாங்கியிருக்கேன். இனிமே வேலைக்கெல்லாம் போகக் கூடாதுனு கண்டிச்சிட்டேன். வேலை செஞ்சுக்கிட்டே இருந்த ஒடம்பு. அவங்களால வேலை செய்யாம சும்மா இருக்க முடியல, வீட்டுல தனியா இருக்கப் பயமாயிருக்கு, பொழுது போகலைனு எப்ப போன் பண்ணினாலும், ஒரே படுத்தல் தான்”
“சீக்கிரமா ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி, பேரனோ பேத்தியோ பெத்துக் கொடுன்னு கேட்டிருப்பாங்களே”’
“ஆமா, அந்தத் தொணதொணப்பைத் தாங்க முடியாமத் தான் இந்தியாவுக்குக் கெளம்பி வந்தேன்”
“பொண்ணு பார்த்தாச்சா? இனிமே தான் பாக்கணுமா?”
“ஏற்கெனவே பார்த்தாச்சு, ஆனா…”
“ஆனா என்ன?”
“அவங்களுக்குத் தான், கொஞ்சம் ஒடம்பு சரியில்ல”
“நீ சுத்தி வளைச்சு எங்க வரேன்னு புரிஞ்சிடுச்சு பரிதி. ஒனக்கு உண்மையிலேயே தங்கமான மனசு தான். ஆனா எம் மேல பரிதாபப்பட்டோ, அனுதாபப்பட்டோ என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறதுக்கு, என் தன்மானம் இடம் கொடுக்காது. யாரோட அனுதாபமும், எனக்குத் தேவையில்ல
கன்னம்லாம் குழி விழுந்து, மூக்கு ஒரு பக்கமா இழுத்து, தீயில சுட்ட மாதிரியிருக்கிற மூஞ்சியைக் கண்ணாடியில பார்க்க, எனக்கே சகிக்கில. இந்த நெலைமையில, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு, ஒருத்தன் சொன்னான்னா, ஒன்னு என் மேல பச்சாத்தாபப்பட்டு, கருணையினால சொல்லணும், இல்லேன்னா, அவனுக்கு மூளை கலங்கிப் போயிருக்கணும்.
இப்பக் கல்யாணம் பண்ணிக்கிற மனநிலையும் எனக்கில்ல. அம்மா கூட சொச்சக் காலத்தை ஓட்டிடலாம்னு நெனைச்சிக்கிட்டிருக்கேன். உன் நல்ல மனசுக்கு அழகான பொண்ணு கிடைப்பா.
நீயும் இப்ப நல்லாச் சம்பாதிக்கிறே. ஒன் ஒடம்புலேயும் சதை பிடிச்சி மினுமினுப்பு கூடியிருக்கு. பழைய வத்தல் பரிதி இப்ப இல்ல. அதனால நல்ல அழகான பொண்ணாப் பார்த்துப் பண்ணிக்கோ.
அம்மாவோட நியாயமான ஆசையை ஒடனே நிறைவேத்து. உன் கல்யாணத்துக்கு என்னால வர முடியாது. அதனால இப்பவே அட்வான்ஸ் வாழ்த்துகளைச் சொல்லிடறேன்” என்றாள் மீனா.
“ஒனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற மனநிலை, இப்ப இல்லேன்னா கண்டிப்பா நான் வற்புறுத்த மாட்டேன். ஆனா ஒம் மேல பரிதாபப்பட்டுத் தான் இதச் சொன்னேன்னு மட்டும் தயவு செஞ்சு நெனைக்காதே மீனா
அன்னிக்கு நான் முக்கா பேண்ட் போடறதுக்கான காரணத்தைச் சொன்னவுடனே, உன் கண்ணுலே கசிஞ்ச ஈரத்தைப் பார்த்தேன். அதுக்கப்புறம், யாரும் என்னை அப்படிக் கூப்பிடக் கூடாதுன்னு நம்ம வகுப்புல எல்லார்க்கிட்டயும் நீ கண்டிச்சுச் சொன்னதாவும் கேள்விப்பட்டேன்.
அன்னியிலேர்ந்து உன்னை ஒருதலையாக் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா அன்னாடங்காய்ச்சியா நான் இருந்த நெலைமையில, என் காதலைக் கண்டிப்பா நீ ஏத்துக்க மாட்டேன்னு பயந்து, என் விருப்பத்தை உங்கிட்ட வெளிப்படுத்தவேயில்ல.
அதனால தான் கல்லூரி படிக்கிறப்பக் கூட, ஒம் பக்கமே வராம ஒதுங்கிப் போயிட்டேன். ஒரு நாள் பள்ளிக்கூடம் போறப்ப, அழகு பத்தி நான் சொன்னது, ஒனக்கு நினைவிருக்கும்னு நினைக்கிறேன். அன்னிக்குச் சொன்னது தான் இன்னிக்கும்.
அக அழகு தான் என்னிக்குமே நிரந்தரமான அழகு. உனக்கு உடம்பும் மனசும் தேறுற வரைக்கும் கண்டிப்பாக் காத்திருப்பேன். என்னைப் புடிக்கலேன்னா சொல்லிடு, கட்டாயப்படுத்த மாட்டேன். என் விருப்பத்தை ஒம் மேல திணிக்க மாட்டேன்.
நீ மாட்டேன்னு சொல்லிட்டா, வேற பொண்ணு பார்க்க அம்மாக்கிட்டச் சொல்லிட்டு கெளம்பிடுவேன். என் காதல் நிறைவேறலைங்கிற ஒரு சின்ன வருத்தம் மட்டும் மனசோட ஆழத்துல என்னிக்கும் இருக்கும். அதனால உடனே ஒம் முடிவைச் சொல்லணும்னு அவசியமில்லே. பொறுமையா யோசிச்சி சொன்னாப் போதும்” என்றான் பரிதி
“இந்த மாதிரி ஆன பிறகு, என்னைக் கட்டிக்க யாருமே முன் வர மாட்டாங்கன்னு நெனைச்சிருந்தேன். என் நெலைமையைப் பார்த்துப் பரிதாபப்பட்டுத் தான் இப்பிடிச் சொன்னேன்னு நெனைச்சேன். உடம்பைப் பார்க்காம, மனசைப் பாக்கிற உன்னை மாதிரி ஒருத்தன் கணவனாக் கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும். உங்கம்மா ஒத்துக்குவாங்களான்னு யோசிச்சிக்கோ” என்றாள் மீனா
“என் விருப்பத்துக்கு எங்கம்மா எப்பவுமே குறுக்க நிக்க மாட்டாங்க. என் காதலை ஏத்துக்கிட்டதுக்கு நன்றி மீனா. போய்ட்டு வரேன், ஒடம்பைப் பார்த்துக்கோ. எப்பவும் மனசைத் தளரவிடாம தைரியமாயிரு. நான் அப்புறமா உனக்கு கால் பண்றேன். பணத்தைப் பத்திக் கவலைப்படாதே, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. நீ குணமானாப் போதும், எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டுக் கிளம்பினான் பரிதி.
“போயிட்டுவா பரிதி” என்று உற்சாகமாகச் சொன்ன மீனாவின் கண்களில் ஆயிரம் அயிரை மீன்கள் துள்ளிக் குதித்தன
அன்றிரவு எட்டு மணியிருக்கும்.
மீனாவின் முகத்தைச் சிதைத்துக் கோரமாக்கி விட்டால், அவள் மேல் மகனுக்கு இருக்கும் பித்து தெளிந்து விடும் என்று கணக்குப் போட்டுக் காரியத்தைக் கச்சிதமாக நிறைவேற்றியது தன் தந்தை தான் என்ற உண்மை தெரியவர, அவரிடம் சண்டை போட்டு விட்டு, அவர் கண் முன்னாடியே ஐந்தாம் மாடியிலிருந்து குதித்துச் தற்கொலை செய்து கொண்டான், அளவுக்கு மீறிக் குடித்திருந்த சுகுமார்
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
அக அழகு தான் அழகு என்பது தான் சரி . ஆனால் எத்தனை பேர் இதை நினைக்கிறார்கள் ?
அருமையான கதை.அக அழகை காண்பவர்கள் இங்கு மிகச் சிலரே…கதை நல்ல கருத்தோடு. பல்வேறு நிகழ்வுகளை நினைவுகூரும்படி அமைந்துள்ளது ரொம்பவும் சிறப்பு.
அக அழகு:) அழகா ஆழமா சொல்லிருக்கீங்க அம்மா