சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 71)
“ஒறச்சுப் பொட்டு வெக்க ஒரு பைசா கூட தரமாட்டன்டி. போய்கிட்டே இரு”
பழனியம்மாளின் பேச்சைக் கேட்டு அப்படியே நின்றிருந்தாள் சரசு
அம்மா, அப்பாவின் இறப்புக்குப் பின் அண்ணனே கதி என்று வந்தாள். அண்ணனும் பெயர் தெரியாத வியாதி வந்து இறந்து விட்டார். அம்மா இல்லாத இடத்தில் அண்ணியை வைத்துப் பார்த்தாள். அண்ணியோ ஆகாதவளாகப் பார்த்தாள்.
அண்ணி இருக்கிறாளே என்று நினைத்திருந்த சரசு, நொந்து தான் போனாள்.
“நங்கயா! உங்கிட்ட பணந்தான கேட்ட. ஐநூறு குடு போதும். எனக்கு அப்ப அப்ப வவுத்த வலிக்குது. டவுனாஸ்பத்திரி போய்ட்டு வர்ற. வேலக்கிப் போன காசு வந்தவுடனே குடுக்கிற”
சரசுவின் பேச்சு அவள் மனதைக் கரைக்கவில்லை.
“சல்லிக்காசு கூட கெடையாது. உங்கொக்கா சீமக்கண்ணி அவ கிட்ட போயி வாங்கு” பழனியம்மாள் வெறுப்பைக் காட்டிவிட்டுச் சென்றாள்
சரசுவுக்குத் திருமணமாகவில்லை. ஏன் எனக் காரணம் தெரியவில்லை. வீட்டின் கடைசிப் பிள்ளையாய் இரண்டு அண்ணன்மார்கள், அக்காக்களுடன் பிறந்தவள்.
ஒற்றை நாடி தேகம். பனம்பழத்தைச் சப்பிப் போட்டதைப் போன்ற தலைமுடி. ஒழுங்கில்லாத சேலைக்கட்டு. இடுப்பில் வெற்றிலைபாக்கு போட்டு வைக்கும் மடிப்பை.
மூக்கில் ஒரு மூக்குத்தி. காதுகளில் கம்மல் போடுவதற்கான துளையில் வேப்பங்குச்சி. கழுத்தில் வெளுத்துப் போன வெள்ளைப் பாசி. குழி விழுந்த கண்கள். ஊதி விட்டால் பறந்து விடும் பலம் கொண்டவள்.
ஐம்பது வயதைக் கடந்துவிட்டாள். ஊருக்குள் நிறைய சரசுகள் இருந்ததால் நிறைய பேர் இவளது உடல்வாகினைப் பார்த்து, ‘கொசுவா’ என்பார்கள்.
“தாய் வெச்ச பேரு தலமேட்டுல இருக்கு. நாய் வெச்ச பேரு நடுவூருக்குள்ள” என்பது போல கொசுவா என்ற பேரே நிலைத்துப் போனது.
“அக்கா. காசிருந்தா குடுக்கா. நங்கயா இல்லைனு சொல்லிட்டா. நீயாச்சுக் குடு. மேக்கால தோட்டத்துல கள வெட்டுன காசு ரெண்டு நாளு கெரமிச்சு தருவாங்க. வவுத்த வலி சுண்டியிழுக்குதுக்கா. பொறுக்க முடியல. ஐநூறு வேணும். காசு வந்த ஒடனே குடுக்கிற” சந்திராவிடம் கெஞ்சினாள் சரசு.
இரண்டு அண்ணனும் உயிருடன் இல்லை. ஒரு அக்கா வெளியூரில் இருக்கிறாள். அவள் கண்டுகொள்வதே கிடையாது. சந்திரா ஏதோ ஒரு முறை கவனிப்பாள். அந்த தைரியத்தில் அக்கா வீட்டு வாசலுக்கு வந்திருந்தாள்.
“அடியேண்டி நீ வேற, நானே வெத்தல வாங்க காசில்லாம குக்கியிருக்கற. எங்கிட்ட ஏது காசு. வவுத்துக்கு சோறு வேணா தின்னுட்டுப் போ. அந்த மீனுவாச்சிகிட்ட உஞ்சொத்து இருக்குது. அவ மயத்த வளச்சுப் போட்டு காசு கேளுடி”
அக்காவும் உதவவில்லை
‘நானெல்லாம் பொறந்திருக்கவே கூடாது. படுபாவி எங்காயா செத்தப்பவே நானும் செத்திருக்கோனும். எனக்குனு யாரு இருக்கறா’ சொல்லியழுதுவிட்டு அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டாள்
சரசுவின் கையில் முப்பது ரூபாய் மட்டும் இருக்கிறது. உடுமலை சென்று மருத்துவம் பார்க்க முடியாது. குமரலிங்கம் தர்மாஸ்பத்திரி செல்ல முடிவு செய்தாள். ராணி மங்கம்மா பஸ் எலையமுத்தூர் சென்று விட்டு திரும்பி வந்தது. அந்த பஸ்சில் ஏறினாள்.
“கொமரலிங்கம் ஒரு சீட்டுக் குடுங்க” கண்டக்டரிடம் ஐந்து ரூபாய் கொடுத்து விட்டு வாங்கிக் கொண்டாள். வயிற்று வலி பின்னியெடுத்தது. திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் கொடுத்த சூலை நோய் போல. மருத்துவமனை செல்வதற்குள் துடியாய்த் துடித்தாள்.
ஆஸ்பத்திரியில் கூட்டமாக இருந்தது. நீண்ட நேர காத்திருப்புக்குப் பின் மருத்துவரைப் பார்த்தாள்.
“உங்ககிட்ட அன்னின்கே டவுனாஸ்பத்திரி போகச் சொன்ன. மறுபடியும் வந்திருக்கீங்க” பேந்தப் பேந்த விழித்தாள் சரசு. கண்களில் கண்ணீரும் கொட்டியது.
“எங்கிட்ட காசில்லீங்க. எனக்கு வைத்தியம் பாக்கவும் யாரும் வரமாட்டாங்க. விதியில உண்டானபடி ஆகட்டுங்க. வவுறு ரொம்ப வலிக்குதுங்க. ஊசி போடுங்க”
பரிதாபப்பட்ட மருத்துவர் ஊசி போட்டு மாத்திரை கொடுத்தார்.
“உங்க உடம்பை நீங்க தான் பாத்துக்கனும். சீக்கிரமா டவுனாஸ்பத்திரி போங்க..”
மருத்துவரிடம் தலையாட்டிவிட்டு வீடு வந்தாள்
காட்டு வேலைக்குச் சென்று கிடைத்த பணத்தை பழனியம்மாளிடம் கொடுத்து விட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. அவளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் ஆக்கிக் கொட்ட வேண்டிய வேலையும் சரசுவுக்கு இருந்தது.
எல்லா வேலைளையும் செய்தால் மட்டுமே சாப்பாடு கிடைக்கும். போக்கிடம் இல்லாததால் சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்தாள். சொத்துப் பிரித்தலின் போது சரசுவின் பங்கு பெரிய அண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் இறந்த பின்னர் ஆதரவில்லாமல் போனாள் சரசு.
பழனியம்மாளுக்கு சொத்து முழுவதும் தனக்கே சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சரசுவின் காலத்திற்குப் பின் தனக்கு வந்து சேரும் என்ற நினைப்பில் இருக்கிறாள்
நடவு வேலைக்குக் கொத்துக்காரர் ஆட்களைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். சரசு வேலையில் சுமார் ரகம் . அவள் சக்திக்கு உண்டான அளவு வேலை செய்வாள். களை வெட்ட மட்டும் பாவம் பார்த்துக் கூப்பிடுவார்கள். நடவு வேலைக்கு அவள் லாயக்கில்லை..
“கொத்துக்கார்ரே… நானும் வரட்டுமா?”
“உன்னால சேத்துல நாத்திழுக்க முடியாது. வேற வேல வந்தா சொல்ற” சொல்லிவிட்டு நிற்காமல் சென்று விட்டார்.
எதிர்காலத்தை நினைக்க பயமாக இருந்தது. வேலை செய்த பணம் கைக்கு வந்து சேர்ந்தது. பழனியம்மாள் கொழுமம் கோயிலுக்குச் சென்றிருந்தது வசதியாய்ப் போனது. டவுனாஸ்பத்திரிக்குப் போக முடிவு செய்தாள்.
உடுமலைப்பேட்டை செல்லும் 32யு பேருந்து வந்ததும் ஏறிக்கொண்டாள்.
“டவுனு. ஒன்னு குடுங்க”
“ஏம்மா. 12 ரூபா டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபா கொடுக்கற”
“எங்கிட்ட சிலுவானம் இல்லீங்க”
“ரெண்டு ரூபாயாவது கொடுமா” கண்டக்டர் சலிப்புடன் கேட்டார்.
மடிப்பையில் தேடினாள். புகையிலை வாசம் படிந்து இரண்டு ரூபாய்க் காசு கிடைத்தது. ஒரு வழியாக உடுமலை வந்து சேர்ந்தாள்
ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழி அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. சொந்த ஊரான பார்த்தசாரதிபுரத்திலிருந்து மருத்துவமனைக்கு மட்டும் 4 கி.மீ தொலைவில் உள்ள குமரலிங்கத்திற்கு தனியாகச் சென்றிருக்கிறாள். சேலை உள்ளிட்டவற்றை வாங்க உடுமலைப்பேட்டைக்கு துணையுடன் சில முறை சென்றிருக்கிறாள்.
துணைக்கு யாராவது கிடைக்கும் வரை பயணத்தை ஒத்திப் போடுவாள். தனக்குத் தெரிந்தவர்கள் செல்லும் வரை காத்திருப்பாள். அவர்களைக் கெஞ்சிக் கேட்டு கடைக்குக் கூட்டிச் செல்லச் சொல்லுவாள். அவர்களும் உதவுவார்கள். இப்போது தனியாக வந்திருக்கிறாள்
“ஏனுங்க. தர்மாஸ்பத்திரி எங்க இருக்குதுங்க” சிகரெட் பிடித்துக் கொண்டு வாட்டசாட்டமாக நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டாள்.
“இப்படியே ஸ்டெய்டா போயி ரைட்ல கட் பண்ணி. லெப்ட்ல போங்க. நிறைய ஷாப்ஸ் இருக்கும். நெக்ஸட் நீங்க கேட்ட பிளேஸ் இருக்கு”
வேகமாகத் தலையாட்டினாள். ஆனால் அவளுக்கு அவர் சொன்னது புரியவில்லை.
பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் காத்திருந்தாள். நரிக்குறவர் இனச் சிறுவர்கள் நாய்க்குட்டி ஒன்றைப் பிடித்து சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள். பார்க்கப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
அப்போது இரண்டு பெண்கள் தர்மாஸ்பத்திரியில் உறவினர் ஒருவரைப் பார்க்கப் போவது தெரிந்தது. சுதாரித்துக் கொண்டு அவர்களுடன் மருத்துவமனையைக் கண்டுபிடித்து விட்டாள்
‘கொன்னி மக்கா! எவ்ள பெரிய ஆஸ்பத்திரி. இத்தன பேருக்குமா சீக்கு. நெறயப் பேரு இருக்கறாங்க’ வாயைப் பிளந்தபடி சொல்லிக் கொண்டிருந்தாள்.
பிறகு மருத்துவரைப் பார்க்க நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தாள். வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வியாதியைப் பற்றியும் மற்றவர்களிடையே பேசிக் கொண்டிருந்தனர். சில வியாதிகளின் பெயர்கள் சரசுவுக்குப் புரியவில்லை.
எப்படியோ நேரம் போய்க் கொண்டிருந்தது. பழனியம்மாள் வீட்டிற்கு வந்து தன்னைத் தேடினால் என்னவாகுமோ? பயத்தில் வயிறு கலங்கியது. ஒரு வழியாக மருத்துவரை நெருங்கி விட்டாள்.
“உடம்புக்கு என்ன பிரச்சினை”
“வவுத்த வலிங்க”
“எவ்வளவு நாளா இருக்குது”
“போன ஆடி நோம்பிலயிருந்து இருக்குதுங்க”
மருத்துவர் கோபப்பட்டார், “என்னமா அஜாக்ரதயா இருக்கீங்க”
சரசு தன்னுடைய சூழலைத் தெரிவித்துவிட்டு குமரலிங்கம் மருத்துவர் கொடுத்த மருந்துச்சீட்டு, மாத்திரைகளைக் காண்பித்தாள். பரிசோதனைகள் முடிந்தது.
“உங்க கூட யாரு வர்லீனு சொல்றீங்க. வேற வழியில்ல. உங்ககிட்டயே சொல்லிடுற. வயித்துல ஒரு கட்டியிருக்குது. சீக்கிரமா ஆப்ரேசன் பன்னனும். நாள் கடத்தாதீங்க. சீக்கிரம் வந்து அட்மிட் ஆயிருங்க”
சரசுவுக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது
“ஐயோ” பெருங்குரலெடுத்து அழுதாள். மருத்துவர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். பேருந்து நிலையம் வரும் வரை அழுதுகொண்டே வந்தாள்.
வழியில் போவோர், வருவோர் எல்லோரும் சரசுவை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றார்கள்.
“அடி மாரியாத்தா எந்தலைல இடி விழுந்திருச்சே. நா என்ன பண்ணுவ. உனக்கு வாசக்கூட்டி கோலமெல்லாம் போடுறனே” சொல்லியழுது கொண்டே வந்தாள். தன்னை எல்லோரும் பார்ப்பது தெரியவே, அழுகையை அடக்கிக் கொண்டாள்.
பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாள். கிரக்கமாக இருந்தது. ஐந்து ரூபாய் கடையில் டீ வாங்கிக் குடித்தாள். சற்று தெளிவடைந்தாள். மனம் ரணமாக இருந்தது. அன்று சந்தைக்கு வந்தவர்களில் சிலர் சரசுவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.
வாய்த்துடுக்கான ராமாத்தாள் சரசுவிடம் பேச்சுக் கொடுத்தாள்.
“அடி கொசுவா, நீயெங்கிடி இங்க?”
“ஆஸ்பத்திரிக்கு வந்த”
“நீயெல்லாம் டவுனுக்கு வந்து வைத்தியம் பாக்குற. சரி சரி. என்ன நோவு?”
“வவுத்துல கட்டி வந்திருச்சாம். சீக்கிரம் செத்துப் போயிருவ” மனமுடைந்து அழுதாள்.
ராமாத்தாளுக்கு பரிதாபமாக இருந்தது. “பயப்படாத. சரி பண்ணிறலா” அமைதிப்படுத்தினாள்
“சந்திராக்கா பையன் பெரியவங்கட்ட சொல்லி பாத்துக்கலாம். அவன் டவுனலதான இருக்கறா”
ஏதோ யோசனையில் இருந்தாள் சரசு. “பொழுது சாஞ்சு போச்சு. நங்கயா திட்டுவா”
“அவள நான் பாத்துக்கற. வா போலா” பேருந்தில் ஏறி வீடு வர வர பயந்து கொண்டே வந்தாள் சரசு
வீட்டு வேலை செய்ய சரசுவைக் காணாமல் ஆத்திரத்திலிருந்தாள் பழனியம்மாள். பயந்து கொண்டே பம்மிப் பம்மி சரசு வருவது தெரிந்தது. தொலைவில் அவள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஆவேசமான பழனியம்மாள் சேலையைச் சுருட்டி இடுப்பில் சொருகிக் கொண்டு கொண்டை போட்டாள்.
வாயில் வெற்றிலையின் எச்சில் சொட்டிக் கொண்டிருந்தது. சரசு வீட்டை நெருங்கியதும் கோபம் வெளிப்பட்டது.
“எங்கடி போயி ஊரு மேஞ்சுட்டு வர்ற. தட்டுவாணிச் சிறுக்கி” எனச் சொல்லி முடியை வளைத்துப் போட்டு முதுகில் கும்மினாள்
“அய்யோ அம்மா” என்று கதறினாள் சரசு. அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் சிறிது நேரம் வேடிக்கை பார்த்து விட்டு பழனியம்மாளை அடிக்க விடாமல் பிடித்துக் கொண்டனர்.
சந்திராவின் காதுக்கு மின்னல் வேகத்தில் செய்தி போய்ச் சேர்ந்தது. பதறியபடியே ஓடிவந்தாள். தலைவிரி கோலமாக மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிய நிலையில் சுயநினைவின்றி வாசலில் துவண்டு கிடந்தாள் சரசு
சந்திராவுக்கு மனம் பதறியது. “அடியே மீனுவாச்சி. எதுக்குடி அடிச்ச. அவ சொத்த தின்னுகிட்டு, வேல வாங்கிகிட்டு அடிக்கிறியா. பொளந்து போடுவன்டி”
வாயில் வசைமாரி அடைமழையை விட வேகமாகக் கொட்டிக் கொண்டிருந்தது.
“எங்கே பொளடி பாக்கலாம். உந்தொங்கச்சி ஊர் மேஞ்சுட்டு வந்தா. கட்டிப்பிடிச்சு முத்தமா கொடுப்பாங்க”
“நீதாண்டி மோசமாத் திரியற. ஊரே காறிக்காறி துப்புது…” சண்டையை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டிருந்தது. தொலைக்காட்சித் தொடரில் மூழ்கியிருந்தவர்களும் இக்காட்சியைப் பார்க்க அதை விட்டுவிட்டு வந்திருந்தார்கள்.
நன்றாகவே ரசித்துக் கொண்டிருந்தார்கள். மூத்த பெண்களில் சிலர் சமாதானப்படுத்தினர். சண்டை முடிந்தது. தொலைக்காட்சி தொடரைப் பார்க்க ஓட்டம் பிடித்தார்கள்.
சரசுவைத் தெளியவைத்துத் தன் வீட்டுக் கூட்டி வந்தாள் சந்திரா.
சரசு தனக்கு ஏற்பட்ட வியாதியை அக்காவிடம் சொல்லியழுதாள். விசயம் கேள்விப்பட்டு சந்திராவின் மகன் சரசுவை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று வைத்தியம் பார்த்தான்.
வயிற்றிலிருந்த கட்டி நீக்கப்பட்டது. சில நாட்கள் அக்காவின் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டாள். பழனியம்மாள் கடனே எனப் பார்த்து விட்டுச் சென்றாள். சரசு அக்காவிற்கு நீண்ட நாள் சிரமம் கொடுக்க விரும்பவில்லை.
“அக்கா நா நங்கயா கட்டப் போற.”
“சரிடி ஏதாச்சும் லொள்ளு பண்ணுனா நா வர்ற” எனச் சொல்லி அனுப்பி வைத்தாள்
பழனியம்மாள் வீட்டுக்குச் செல்ல பயமாகத் தான் இருந்தது. வேறு வழியின்றி சென்றாள். சமையல் செய்து கொண்டிருந்தாள் பழனியம்மாள். சரசுவை அந்த வழியாகப் பார்த்ததும், பகல் நேரக் காட்சிக்கு கூட்டம் கூடியது.
“எதுக்குடி வந்த, அப்படியே போக வேண்டியது தான. எல்லா என் தலச்சுழி வந்து தொல” வீட்டு வேலை செய்து அலுத்துப் போனதால் இப்படிச் சொன்னாள்.
வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு சப்பென்றிருந்தது. கூட்டம் கலைந்து விட்டது
சரசு காலையில் எழுந்து மாரியம்மன் கோயிலுக்குச் சென்ற போது குப்பை அதிகமாகக் கிடந்தது.
“மாரியாத்தா. ஒனக்கு வாசக் கூட்ட ஒருத்தருமே இல்லை. என்னாலயும் முடியல. முடிஞ்ச வரைக்கும் செய்யற. சீக்கிரமா என்னைய கொண்டு போயிரு” அழுது கொண்டே வாசல் கூட்டினாள். மூன்று மாதங்கள் சீராகப் போய்க் கொண்டிருந்தது.
மறுபடியும் வயிற்று வலி ஆரம்பமாகியது. வயிறு புடைத்துக் கொண்டு வந்தது. நிறைமாத கர்ப்பிணி போல் வயிறு பெருத்திருந்தது. கோயமுத்தூர் மருத்துவமனைக்கு சென்றால் மட்டுமே உயிரைக் காப்பாற்ற முடியுமென டவுனாஸ்பத்திரியில் கூறப்பட்டது.
ஒரு மாதமாவது மருத்துவமனையில் இருக்க வேண்டும். யாரும் போவதற்குத் தயாராயில்லை. பழனியம்மாளின் வீட்டின் ஒரு பகுதியில் தரையோடு தரையாகக் கிடந்தாள் சரசு.
வயிறு மட்டும் தரையில் இருக்கும் திட்டு போல் காட்சியளித்தது. யாராவது பார்த்து விட்டு வருவார்கள். வாயிலும், பிறப்புறுப்பிலும் ரத்தம் கசிவதாக ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்
“அவ எல்லா இருந்து என்ன செய்யப் போறா. பேசாம போய்ச் சேர்றது நல்லது” இப்படிப்பட்ட பேச்சுகள் எல்லா இடங்களிலும் பேசப்பட்டது. சரசுவின் பேச்சும் நின்று போனது. பால் மட்டும் எப்போதாவது ஒரு முறை இறங்கிக்கொண்டிருந்தது.
பழனியம்மாளின் சின்னமகன் அத்தையின் மேல் பாசம் கொண்டவன். வேண்டிய பணிவிடைகளைச் செய்வான். சந்திராவும் வேலைக்குப் போய்விட்டு வந்ததும் இரவெல்லாம் தங்கையைப் பார்த்துக் கொள்வாள்.
பத்து நாளாக எமனுடன் போராடிக் கொண்டிருக்கிறாள். உறவுக்காரர்கள் வந்து பார்த்தால் கண்ணீர் மட்டும் அவளிடமிருந்து வெளிப்படும். மாரியாத்தா அவளின் வேண்டுதலை நிறைவேற்ற தயாராகி விட்டாள்
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings