in ,

காவேரியின் கைபேசி (சிறுகதை) – ✍ வைகை,  சிங்கப்பூர்

காவேரியின் கைபேசி (சிறுகதை)
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 68)

இன்று 

துபாயின் ஒரு வெள்ளிக்கிழமை. விடுமுறைதின மாலை நேரம் சுந்தரத்தின் கைபேசி அலறியது. விடுமுறை தானே என்று மதியம் சாப்பிட்டு அசந்து தூங்கியவனுக்கு, அது பேரிரைச்சலாய் அலற எடுத்துக் பார்த்தான்

திரையில் உமையாள் என்று வந்தது, உமையாள் சுந்தரத்தின் மகள் தான். யோசனையாய் எடுத்துக் காதில் வைத்ததும் உமையாள் கிட்டத்தட்ட அலறினாள் 

“அப்பப்பா… இங்க அம்மா நம்மள விட்டுட்டுப் போய்ட்டாங்கப்பா, போலீஸெல்லாம் வந்துருக்குப்பா” என்று சொல்ல

பக்கத்து வீட்டு சுப்பு மாமா, “இங்க கொடும்மா” என்று போனை வாங்கி 

“சுந்தரம்.. காவேரி நம்மளையெல்லாம் ஏமாத்திட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாப்பா! உடனே உன் தம்பிகிட்ட மெதுவா இதச் சொல்லிக் கிளம்பி வர ஏற்பாடப் பண்ணுங்க, கிளம்பிட்டு எனக்கு தகவல் சொல்லு. மத்த வெவரமெல்லாம் இங்க வந்ததும் சொல்றேன்” என்று அவராகவே கைபேசியை அணைத்து விட்டார். 

இங்கு காரைக்குடி வீட்டில் ,கட்டிலில் வாயில் நுரை தள்ளி கை கால்களால் எட்டுப் போட முயன்று தோற்றுப் போய் ஒரு சாயலாய் இழுத்துக் கொண்டு காவேரி இறந்து கிடந்தாள்

கட்டிலுக்குக் கீழே ஒரு முப்பது வயது தோற்றமுடைய இளைஞனும் கடைசி நிமிடத்தில் ஏதோ சொல்ல முயன்று அது நிறைவேறாமலே தன உயிரை விட்டிருந்தான். 

ஆய்வாளர் இளமாறன் அவன் யாரென்று கேட்டபோது, உமையாளுக்குத் தவிர வேறு யாருக்கும் அவன் யாரென்று தெரியவில்லை. 

உமையாள், தான் அவனைத் தன்னுடைய கம்பியூட்டர் சென்டரில் வேற ஒரு பேட்சுக்குக் கிளாஸ் எடுக்கும் போது பார்த்திருப்பதாகப் போலீசிடம் சொன்னள். 

அறையை மெதுவாக ஆராய்ந்த இளமாறன் காவேரியின் தலைமாட்டில் ஒரு கடிதம் படபடத்துக் கொண்டிருந்ததைக் கவனித்து எடுத்துப் பிரித்தார்

“அன்புள்ள மாமாவுக்கு, 

நான் உங்க முகத்தையெல்லாம் பாக்கும் அருகதய இழந்து வெகுநாட்கள் ஆகிருச்சு, தப்பான உறவின் முடிவு இதான் என்று தெரிஞ்சிருந்தும் அதில விழுந்து விட்டேன், அதுவும் ஒரு தப்பானவனுடன். திரும்ப அதுல இருந்து மீண்டு வர திக்கு தெரியாமல், அவன் மிரட்டலுக்கெல்லாம் பயந்து, இந்த ஆறு மாசத்துல அவங்கிட்ட பணம் நகை என நீங்களும் சுந்தரம் மாமாவும் பாடுபட்டுச் சேத்ததையெல்லாம் இழந்துட்டு நிக்கும் போது

அதுவும் பத்தாதுன்னு அவன் நம்ம உமயாளையே கல்யாணம் பண்ணிவை இல்லைன்னா நம்ம உறவப் பத்தி உன் புருஷன்கிட்ட சொல்லிருவேன்னு மிரட்ட ஆரம்பிச்சுட்டான்

அப்ப தான் முடிவு செஞ்சேன்,  நான் மட்டும் இல்ல, இந்த அயோக்கியனுமே இங்க வாழ அறுகதையில்லாதவன்னு. அந்த அயோக்கியன் செத்துட்டான்னு தெரிஞ்சுக்கிட்டு தான் என் உயிரு போகும்

இது உங்களிடம் கிடைக்கும் போது ரெண்டுமே நடந்திருக்கும். நம்ம உமயாளை நல்லபடியாப் பாத்து நல்லபடியா கல்யாணம் பண்ணி வைங்க. அடுத்த பிறவிலையாவது உங்களுக்கு நான் ஒரு நல்ல பொண்டாட்டியா வரணும்னு வேண்டிக்கிறேன் மாமா

சுந்தர மாமாவும் என்ன மன்னிச்சிருங்க

இப்படிக்கு 

காவேரி” 

கடிதத்தைப் படித்த இளமாறன் அதிர்ச்சியை முகத்தில் வாங்கிக் கொண்டு கேஸ் இழுத்தடிக்காமல் உடனேயே  முடிவுக்கு வந்த நிம்மதியில்,  பக்கத்து வீட்டு சுப்பு மாமாவை அருகில் அழைத்து விபரங்கள் கேட்கத் துவங்கினார்

“உங்க பேரு சுப்பு தானே சொன்னீங்க?” 

“ஆமா சார் சுப்புரமணி, எல்லோரும் சுப்புன்னு கூப்பிடுவாங்க” 

“காவேரியைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க, ஏன் வீட்ல வேற யாருமே இல்ல? இவங்க கணவர் துபாய்ல இருக்கார்ல? நீங்க தானே தகவல் சொன்னீங்க?” என்று கேள்விகளை அடுக்க ஆரம்பித்தார் இளமாறன். 

“சார் இந்தப் பொண்ணு காவேரிய எனக்கு அவ சின்ன வயசுல இருந்தே தெரியும் சார், சுந்தரத்தோட அத்த பொண்ணு தான் சார். அதாவது சுந்தரத்தோட அப்பா அண்ணாமலயோட தங்கச்சி மக தான் சார். அண்ணாமலக்கு ரெண்டு பசங்க, சுந்தரமும் அவன் தம்பி ஆறுமுகமும்

அதே மாதிரி அவன் அத்த பார்வதிக்கும் ரெண்டு பொண்ணுங்க, காவேரி இளையவ, மூத்தவ அலமேலு.

சுந்தரத்தோட அப்பா அண்ணாமலையும் அவன் அம்மாவும் ஒரு சால விபத்துல செத்ததுக்குப் பிறகு, அவன் அத்த பார்வதி தான் தன் மூத்த மக அலமேலுவ சுந்தரத்துக்கு கட்டி வச்சு இந்தக் குடுமபத்த பார்த்துக்கிட்டா. அவங்க திருச்சில இருக்காங்க தகவல் சொல்லியாச்சு” என கொசுறாகச் சொல்லி விட்டு, இன்ஸ்பெக்டரின் அமைதியைப் பார்த்து, சுப்பு மாமா மேலும் தொடர்ந்தார். 

“இந்தக் குடும்பத்துக்கு என்ன கெட்ட நேரமோ? நீங்க பார்த்திங்களே உமையா, அவளப் பெத்த ஒரு வருசத்துல அலமேலு போய்ட்டா. சரி பச்சப் புள்ளைக்கு அம்மா வேணுமேன்னு எல்லோரும் சின்னவ காவேரிய கட்டிக்கச் சொல்லி சுந்தரத்துக்கிட்ட சொன்னாங்க

அதுக்கு அவன் ‘ஏன் நான் கட்டிகிட்டா தான் உமையாக்கு அவ அம்மாவா’ன்னு கேட்டு, தன் தம்பி ஆறுமுகத்துக்கு காவேரிய கட்டி வச்ச கையோட, துபாய் போய்ட்டான். கொஞ்ச வருசத்துல தன் தம்பி ஆறுமுகத்தையும் கூட்டிகிட்டான்.

காவேரிக்கு இன்னும் கொழந்த இல்ல சார், அவ அதிகமா படிக்கவும் இல்ல. ஆனா அவ தான் இந்தக் குடும்பத்தப் பொறுப்பா கவனிச்சு உமையாவுக்கு ஒரு நல்ல  அம்மாவா இருந்து பாத்துக்கிட்டா சார். அவளுக்கு ஏன் சார் இந்த நிலமை”னு ஒரே மூச்சில் சொல்லிவிட்டு கண் கலங்கினார் சுப்பு மாமா

“சரி.. கீழ இறந்து கிடக்குற இந்தப் பையன யாருன்னு தெரியுமா?” என்று அந்த கடித விபரத்தைக் கூறாமலே கேட்டார் இளமாறன். 

“தெரியலயே சார், இதுக்கு முன்ன இந்தப் பையன இங்க பாத்தது கூட இல்ல. அவன் ஏன் இங்க வந்து செத்துக் கிடக்குறான்னும் புரியல சார்” என்றார் சுப்பு மாமா

“சரி நீங்க மத்த வேலைகளைக் கவனிங்க, வேற தகவல் ஏதும் தேவைப்பட்டா கூபிட்றேன்” என்று கூறி விட்டு, அதன் பிறகு மளமளவென்று உத்தரவுகளைப் பிறப்பித்தார் இளமாறன்

தடய சேகரிப்புகளை முடித்து இரண்டு பிரேதங்களையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி விட்டு, மறுநாள் காவேரியின் கணவர் ஆறுமுகம் வந்ததும், ஜி.ஹட்ச்சில் பிரேதத்தை வாங்கிக்க சொல்லி விட்டு கிளம்பி விட்டார் இளமாறன்

அங்கு துபாயில் இருந்து சுந்தரமும், ஆறுமுகமும் கிளம்பி விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு, அழுது கொண்டிருந்த உமையாளை கூடவே அழைத்துச் சென்று தன் வீட்டில் மனைவியோடு இருக்க வைத்து விட்டு, மற்ற வேலைகளைக் கவனிக்க சென்று விட்டார் சுப்பு மாமா

உள்ளே அழுது கொண்டிருந்த உமையாளுக்கு ஒன்றுமே புரியவில்லை

‘அம்மா ஏன் இப்படி பண்ணினாங்க? அவன்.. ஆங்.. அவன் பேரு கூட அசோக்.. அவன் ஏன் நம்ம வீட்டுக்கு வந்தான்? அம்மாவுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?” எனக் குழம்பிப் போய்க் கிடந்தாள்

ஆனால் பாவம் உமையாளுக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆறு மாதங்களுக்கு முன் எல்லாமே தன்னிடம் இருந்து தான் ஆரம்பித்தது என்று

ஆறு மாதத்திற்கு முன்பு…. 

“அம்மா… அப்பா தான் அடிக்கிறாங்க எடுங்க இந்தா வர்றேன்” என்று ரிங் டோனை வைத்தே அடையாளம் அடையாளம் கண்டு, பாத்ரூமில் இருந்து குரல் கொடுத்தாள் உமையாள்.

“இவளுக்கு இதே வேலையாப் போச்சு” என்று அலுத்துக் கொண்டபடியே, அடுப்படியில் இருந்து  முந்தானையில் கைகளை துடைத்தபடியே வந்து போனை எடுத்தாள் காவேரி

“இந்தாடி.. இதுல எத அமுக்கிடி பேசணும்?” என்றபடி அந்த டச் போனை தடவி தடவிப் பார்த்தாள் காவேரி

“அம்மா.. அந்த பச்சை கலரா வருதுல்ல, அத மேல தள்ளிட்டு காதுல வைங்க” என்று உள்ளே இருந்தவாறே சொன்னாள் உமையாள்

“என்ன கருமமோ” என்றபடியே அந்தப் பச்சையை கட்டிலில் ஊரும் கரப்பான் பூச்சியை தள்ளுவது போலத் தள்ளி கடைசி ரிங்கிற்குள் அதை ஆன் செய்து காதில் வைத்தாள் காவேரி. 

 “மாமா.. நல்லா இருக்கீங்களா? நான் காவேரி பேசுறேன், உமையா குளிக்கிறா போல, அவுக எப்பிடி இருக்காங்க மாமா?” என்றாள்

“காவேரி, நான் நல்லா இருக்கேன்மா, நீ எப்பிடி இருக்க? தம்பி நல்லா இருக்காந்த்தா, அப்பறமா பேசுவான் உனக்கு. ஒண்ணுமில்லாத்தா, உமையா ஏதோ கம்பியூட்டர் கிளாஸ்க்கு காசு கட்டணும்னு கேட்ருந்துச்சு, அதான் என்ன வெவரம்னு கேக்க பண்ணுனேன். சரித்தா, நான் அப்பறமா தம்பி பேசும் போது உன்கிட்ட வெவரம் கேட்டுக்கச் சொல்றேன். நீ உமயாகிட்ட கேட்டு வைத்தா, நான் உமயாகிட்ட ராத்திரிக்கு  பேசுறேன். இப்ப வக்கிறேன் வேலை கெடக்கு” என்று துண்டித்தான் சுந்தரம். 

கைபேசியை கட்டிலில் போட்டு விட்டு, “உமயா.. அப்பா அப்பறமா பண்றேன்னு சொன்னாங்க” என்றபடியே அடுப்படிக்குள் நுழைந்து அடுப்பைத் தூண்டி விட்டு விட்டதில் இருந்து கிண்ட ஆரம்பித்தாள். 

“என்ன டச்சு போனோ கருமமோ, எழவு காதுல வச்சா காப்பிச் சட்டியாட்டம் சுடுது” என்று நினைத்தபடி தன் பழைய மாடல் நோக்கியோ போனை ஒருமுறை பார்த்தாள் தன் “அவுக” எப்போது கூப்புடுவான் என்று

உமையா கூட சொன்னாள் “அம்மா எனக்கு போன் வாங்கும் போது, உங்களுக்கும் ஒரு டச் போன் வாங்கி கொடுத்துவிடச் சொல்லுங்க. இந்த பழைய மாடல தூக்கி போடுங்கன்னு” 

ஆனால் காவேரி மறுத்து விட்டாள்

“நீ பன்னெண்டாவது வந்துட்டன்னு உனக்கு மாமா வாங்கித் தர்றாங்க, எனக்கு எதுக்கு அம்புட்டு வெல கொடுத்து? எனக்கு இது போதும்” என்று கூறி விட்டாள்.   

தன் போனையே பார்த்துக் கொண்டிருந்த காவேரி, திடீரென்று அது அலறவும் ஓடிப் போய் எடுத்தாள் அது தன் கணவன் ஆறுமுகமாக இருக்கும் என்று

ஆனால் திரையில் லோக்கல் நம்பரைப் பார்த்தவள், இது அம்மா நம்பர் கூட இல்லையே என்று குழப்பத்துடன் ஆன் பண்ணிக் காதில் வைத்தாள்

“ஹலோ..” 

“ஹலோ… இது உமையாளோட சித்தி காவேரி தானே?” 

“ஆமா… நீங்க யாரு?” 

“நான் யாருங்கிறது முக்கியம் இல்ல, நாளைக்கு உங்களுக்கு கொரியர்ல ஒரு கவர் வரும். அதைப் பார்த்துட்டு இப்ப வந்த இந்த நம்பருக்குக் கால் பண்ணுங்க, அதுவரை யார்கிட்டயும் இதப்பத்தி மூச்சு விடாதீங்க. அது தான் உங்க உமையாளுக்கு நல்லது” என்று பதிலை எதிர்பார்க்காமல் வைத்தான்.  

எதிர்முனையில் அவன் போனை வைத்ததில் இருந்து காவேரி இயந்திர கதியில் இருந்தாள். யார் அவன்? என்னவாக இருக்கும் என்று யோசித்து யோசித்து ஒன்றுமே தோணவில்லை

பிறகு ஆறுமுகம் பேசியது, சுந்தரம் பேசியது எதுவுமே நினைவில் இல்லை

இரவு உமையாள் கூடக் கேட்டாள் “ஏம்மா ஒருமாதிரி இருக்கீங்கன்னு?” 

சிரித்து ஏதோ சொல்லி மழுப்பியவள், எப்போது அந்தக் கொரியர் வரும் என்று மறுநாளுக்காகக் காத்திருக்கத் துவங்கினாள்

தூக்கமே இல்லாத இரவைக் குழப்பங்களோடே நகர்த்தியவள், மறுநாள் உமையாளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டுக் காத்திருக்கும் போது வந்தது அந்தக் கொரியர்

அவசரமாக கையெழுத்துப்போட்டு வாங்கி வீட்டுக்குள் சென்று பிரித்தாள் அதை, பிரித்து எடுத்ததுமே “ஆத்த்தீ..” என்று நெஞ்சில் கை வைத்துச் சரிந்தாள் காவேரி.            கொஞ்சம் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு மீண்டும் கவரில் இருந்து அவற்றை எடுத்தாள். கம்பியூட்டரில் ப்ரிண்டவுட் எடுத்த ஐந்து புகைப்படங்கள். ஐந்திலும் உமையாள் அரைகுறை ஆடையுடன் இருந்தாள்

அனைத்துமே உடை மாற்றும் போது அவளுக்கே தெரியாமல் எடுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. எங்கு எப்போது என்று தான்  காவேரிக்குப் புரியவில்லை

ஆனாலும் அவளைப் பெறாத அவள் வயிறு பிசையத் துவங்கியது, அதற்கு மேலும் அதைப் பார்க்க முடியாமல் ஒரு தீக்குச்சியை உரசி அதை எரித்தவள், நேற்று வந்த நம்பரைத் தேடி அழைத்தாள். 

மறுமுனையில் எடுத்ததும் “ஹலோ”என்றாள் தயக்கமாக, 

“ஹலோ…காவேரி.. கரெக்ட்டா கூப்டீங்களே? என்றான்

“யாருடா நீ? ஏன்டா என் உமயாள இப்பிடி அசிங்க அசிங்கமா எடுத்து வச்சுருக்க?” என்றாள் காவேரி

“கரெக்ட்டா பாய்ண்டுக்கு வந்தீங்க! என் பேரு அசோக், உங்க உமையா படிக்கிற கம்பியூட்டர் சென்டர்ல டீச்சர்.டெய்லி ஸ்கூல் முடிச்சிட்டு கம்பியூட்டர் க்ளாஸ் வர்ற உமையா இங்க வந்து யூனிபாஃர்ம மாத்திக்குவா, ரொம்பக் காத்திருந்து எடுத்த காஸ்ட்லீ போட்டோஸ். வீடியோஸ் கூட இருக்கு.. இருக்கீங்களா? ஹலோ.. ” 

மறுமுனையில் அதிர்ச்சியில் மூர்ச்சையாகி நின்றவள் “ம்ம்..” என்றாள் உணர்வில்லாமல்

“இதை உமையாகிட்ட காட்டி என்னால நினைச்சதை சாதிச்சிக்க முடியும், நான் சொல்றது புரியும்ன்னு நினைக்கிறேன். ஆனா என் தேவை அதில்லை, எனக்குப் பணம் வேணும், நிறைய அதுவும் நான் கேக்கும் போதெல்லாம் வேணும்.

மாட்டேன்னுசொன்னா இந்த வீடியோ போட்டோஸ் எல்லாம் உலகம் பூராம் வரும், அப்பறம் உமையாளுக்காக நீங்க சேர்த்து வச்சதை அனுபவிக்க உமையாள் இருக்க மாட்டா யோசிச்சுச் சொல்லுங்க” என்றான்

அன்று ஆரம்பித்தது.. இந்த ஆறு மாதத்தில், வீட்டில் இருந்த நகை சேமித்த பணம் என எல்லாவற்றையும் காவேரியை மிரட்டியே வாங்கியவன், இனி வாங்குவதற்கு ஒன்றும் இல்லை என்ற போது தான் அதைக் கேட்டான் 

“நீ வேண்டும்” என்று

“உமையாளை தொந்தரவு செய்யக் கூடாதென்றால் எனக்கு வேண்டும் போதெல்லாம் நீ வேண்டும், உமையாளை மனதில் வைத்து நாளைக்கு நல்ல பதிலைச் சொல்லு” என தலையில் இடி இறக்கினான். 

இரவு முழுவதும் யோசித்து தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்த காவேரி, மறுநாள் உமையாள் பள்ளிக்கு கிளம்பிப் போனதும் அவனை வீட்டுக்கு வரச் சொன்னாள். 

விடிந்ததில் இருந்து அவள் அழைப்புக்காகவே காத்திருந்த அசோக், உரிமையாக வீட்டுக்குள் வந்து  “சூழ்நிலையைப் புரிஞ்சி இவ்ளோ சீக்கிரம் சரின்னு சொல்லி உமையாள காப்பாத்திட்ட. நேத்து நைட்ல இருந்து உன்னையவே நினைச்சு மனசும் உடம்பும் சூடா இருக்கு, ஜில்லுன்னு ஏதாவது குடிக்க கொண்டு வா காவேரி” என்று கூறியபடியே உரிமையாக சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தான்

இப்படி ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த காவேரி,  தயாராக வைத்திருந்த தூக்க மாத்திரைகளைப் போட்டு கூல்ட்ரிங்க்ஸை கைகள் நடுங்க அவனிடம் நீட்டினாள்

“சாப்டுட்டு இருங்க காலைலே கதவெல்லாம் பூட்டியிருந்தா சுப்பு மாமா வீட்ல சந்தேகமா நினைப்பாங்க. அவங்க வீட்ல போய் கொஞ்ச நேரம் பேசிட்டு தலை வலிக்குது தூங்க போறேன்னு சொல்லிட்டு வர்றேன்” என்றாள் காவேரி. 

“இப்பிடி சொல்லிட்டு என்னைய வீட்டுக்குள்ள வச்சு லாக் பண்ண ஏதும் பிளான் பண்ணலையே காவேரி? எது பண்ணாலும் உமையாளோட வாழ்க்கை உன் கைல அத மனசுல வச்சுப் பண்ணு” என்றான்

“அத மனசுல வச்சுத் தானே இப்பிடி ஒரு முடிவ எடுத்தேன்” என்றவள், பதிலை எதிர்பார்க்காமல் வெளியே சென்றாள்

அரைமணி நேரம் கழித்து, அவனிடம் சொல்லியபடியே, சுப்பு மாமா வீட்டில் “தலை வலிக்குது தூங்கப் போறேன்” என்று சொல்லி வந்தவள், எதிர்பார்த்தபடியே அவன் சோஃபாவிலே கடவா ஒழுகக் தூங்கிக் கிடைப்பதைக் கண்டாள்

ஆத்திரமும் ஆவேசமுமாகப் அருகில் போனவள்  “ஏன்டா நாயே.. நாங்க தான் படிக்கலைனாலும், எங்க புள்ளைகளாவது படிக்கட்டும்ன்னுதானடா வெளிய அனுப்புறோம். அதுங்க ஒதுங்குற கக்கூஸ்ல கூட ஒளிஞ்சிருந்து படம் புடிச்சு இப்பிடி எத்தனை பேரு குடும்பத்தை சீரழிச்சிருப்ப. என் உமையா மட்டும் இல்லடா, இன்னும் எத்தனையோ உமையாவோட வாழ்க்கையை நான் காப்பாத்தினதா இருக்கட்டும். அதுக்கு வெல என் கற்புதான்னா, அதுவாகவே இருந்துட்டுப் போகட்டும்” என்றவள், ஆத்திரம் தீர தலையணையை வைத்து அவன் மூஞ்சியில் அழுத்தினாள்

எவ்வளவு நேரம் அழுத்தியிருப்பாள் என்று அவளுக்கே தெரியாது, சுயநிநினைவுக்கு வந்தவள், உடம்பு சூடா இருக்கு என்று வந்தவன் ஜில்லிட்டுக் கிடப்பதை உணர்ந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.  

பரபரவென அவனுடைய கைப்பேசியைத் தேடியவள், சோபாவில் கிடப்பதைக் கண்டு அதை எடுத்தாள்

‘பேச மட்டுமே போன் இருந்தப்ப எந்தப் பிரச்னையும் இல்ல. ஆனா இப்ப எல்லோரு கைலயும் போன் இருந்தும் யாருக்கும் யாரு கூடவும் பேச நேரம் இல்ல. ஆனா இப்படி பல குடும்பங்கள சத்தம் இல்லாம அழிக்குது இது’ என்று நினைத்தவள், அதை சுக்கு நூறாக உடைத்து கிணற்றுக்குள் போட்டாள்

பின் நிதானமாக வந்து அசோக்கை இழுத்து படுக்கை அறையின் கட்டிலுக்கு கீழே போட்டாள்

முதல் நாளே எழுதி வைத்த கடிதத்தை எடுத்து கட்டிலில் வைத்தவள், மானசீகமாக இரண்டு மாமாவிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு, கொஞ்சம் கூட யோசிக்காமல் தயாராக வைத்திருந்த விஷத்தைக் குடித்து அப்பிடியே கட்டிலில் சாய்ந்தாள்.  

இன்று.. 

மறுநாள் சுந்தரமும் ஆறுமுகமும் விடிகாலைலே வந்துவிட, ஜிஹச்சில் பாடியை வாங்கி காரியங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும், அருகில் வந்தார் காவல் அதிகாரி இளமாறன் 

“காவேரியோட ஹஸ்பண்ட் யாரு சார்?”

“நான் தான்” என்று ஆறுமுகம் முன்னே வர

“ஸாரி சார், உங்க வைப் எழுதின அந்த லெட்டரை படிச்சிருப்பீங்க. அது போக 

நாங்களும் தரோவா விசாரிச்சு எவிடன்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டோம். கடந்த ஆறு மாசமா உங்க மனைவியோட நம்பருக்கு, இந்த அசோக் அதிகமா பேசியிருக்கான்

அது போக உங்க மனைவி கடிதத்தில் சொன்ன மாதிரி, அவனோட பேங்க் அக்கவுண்ட்ல இந்த ஆறு மாசத்துல அதிகமான பணம் க்ரெடிட் ஆயிருக்கு

நகை என்ன ஆச்சுன்னு தெரியல, என்கொயர் பண்ணிட்டு இருக்கோம். லீகலா ரெகவரி பண்றதுக்கு ட்ரை பண்றோம். டேக் கேர்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். 

அவர் நகர்ந்ததும் ஆறுமுகம் சுந்தரத்தைக் கட்டிக் கொண்டு அழுதான் 

“நம்ம காவேரிக்கு எப்பிடி இந்தத் துரோகம் பண்ண மனசு வந்துச்சு அண்ணே? இந்தக் குடும்பத்தோட சாமி மாதிரி தானே அண்ணே அவளப் பார்த்தோம்?” என்று கதறினான். 

“டேய்.. ஊரு ஆயிரம் சொல்லட்டும், ஏன் அவளே சொல்லட்டும். ஆனா நம்ம காவேரி அப்பிடி இல்லடா. அப்பிடியே நீயும் நம்பு. இன்னும் நம்ம குடும்பத்த அவ தான் தெய்வமா இருந்து காப்பா, நீ வேணாப் பாரு” என்று தம்பியை அணைத்துக் கொண்டார். 

“வெளிநாட்டில் இருக்கும் கணவனிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டியதால்,  கள்ளக் காதலனைக் கொன்று விட்டு, அந்தப் பெண்ணும் தற்கொலை” என்று எதிர் வீட்டு தொலைக்காட்சியில் ஒருவர் ஏற்ற இறக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்

காவிரியின் அறை செல்ஃப்பில் இருந்து இது எல்லாவற்றையுமே பார்த்துக் கொண்டு, உண்மையின் மௌன சாட்சியாக ஊமையாகக் கதறிக் கொண்டிருந்தது காவேரியின் கைபேசி!  

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Deals in Amazon👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மன்னி சிரிக்கிறாள் (சிறுகதை) – ✍ சாந்தி பாலசுப்ரமணியன்

    தேன்மொழி (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி