சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 52)
காலை நேரம்
அலுவலக கேட்டிற்குள் நுழைந்து, காரைப் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு, நிதானமாய் நடந்து, “குட் மார்னிங் சார்” சொன்ன ஒல்லிக்குச்சி ரிசப்ஷனிஸ்ட்டுக்கு, “குட் மார்னிங் தேவி” சொல்லி விட்டு என் அறைக்குச் சென்றமர்ந்தேன்.
அவசரமாய் வந்த ப்யூன் ஏ.சி.யை ஆன் செய்தான்.
“மே ஐ கம் இன் சார்” கேட்டவாறே உள்ளே நுழைந்தாள் எம்.டி.ரகோத்தமனின் பர்ஸனல் செகரட்டரி மாலினி.
வந்தவள், “சார்…ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் முன்னாடி எம்.டி.போன் பண்ணினார், இந்த வருஷ செஸ் டோர்னமெண்ட்ல உங்களை கலந்துக்க வேண்டாம்னு சொன்னார்”
அவள் சொன்ன அந்தத் தகவலைக் கேட்டதும், என் ரத்த அழுத்தம் “ஜிவ்”வென்று ஏறியது
“என்ன? என்ன சொல்றீங்க மாலினி? இந்த வருஷ ஆண்டு விழாவுல நடக்கற செஸ் போட்டில நான் கலந்துக்க வேண்டாம்னு எம்.டி.சொன்னாரா? வொய்?” எனக்குள் கோபமும் ஆற்றாமையும் கொந்தளித்துக் கொண்டிருக்க, மறுபடியும் கேட்டேன்
“வொய்?னு என்னைக் கேட்டா, எனக்கு எப்படி சார் தெரியும்? அவர் உங்ககிட்ட சொல்லச் சொன்ன விஷயத்தை நான் சொல்றேன், அவ்வளவு தான்” கோபமான வார்த்தைகளையும் சிரிப்போடு சொல்வது தான் அந்த மாலினியின் ஸ்பெஷாலிட்டி
எனக்குக் குழப்பமாயிருந்தது, ‘இது நான் எதிர்பார்க்காத விஷயம்’
மாலினி அங்கிருந்து சென்றதும், ஆரம்பத்திலிருந்து நடந்தவற்றையெல்லாம் வரிசையாக நினைத்துப் பார்த்தேன்.
பத்து வருடங்களுக்கு முன் இதே எம்.டி.யின் எதிரில் இண்டர்வியூவுக்காக அமர்ந்திருந்த நான்…அந்த இண்டர்வியூவில் வெற்றி பெற்றதே என் படிப்புச் சான்றிதழ்களால் அல்ல. செஸ் விளையாட்டில் மாவட்ட அளவில் சாம்பியனாகவும், மாநில அளவில் ஒன்றிரண்டு கோப்பைகளையும் வென்று அதற்கான சான்றிதழ்களை இணைத்திருந்த காரணத்தினால் தான்.
எம்.டி.ரகோத்தமன் ஒரு தீவிர செஸ் பிரியர், அதனாலேயே நான் அவரிடம் ஒரு தனிப்பட்ட செல்வாக்கு பெற்றிருந்தேன். செஸ் விளையாட்டில் சாம்பியன் என்பதால் கம்பெனியில் பல சலுகைகளையும் பெற்றவன்.
செஸ் விளையாட்டில் தனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாய் ஆண்டு தோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தன்னுடைய ‘ரகோன் குரூப் ஆஃப் கம்பெனி’களின் ஆண்டு விழாவில் ஒரு மாபெரும் செஸ் போட்டி நடத்தி “ரகோன் கோப்பை”யை வழங்கிக் கொண்டிருந்தார் எம்.டி.ரகோத்தமன்
இதில் என்ன விஷேசமென்றால், ஒவ்வொரு ஆண்டும் இன்கிரிமெண்ட் லிஸ்ட் வரும் போது, நான் தான் ஹை இன்கிரிமெண்ட் வாங்கியிருப்பேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் வேலைக்கு சேர்ந்த வருடத்திலிருந்து, அதாவது கடந்த ஒன்பது வருடங்களாக அந்த ‘ரகோன் கோப்பை’யை தொடர்ந்து கைப்பற்றியவன் நான். அந்த ஒரே சாதனை என்னை விரைவிலேயே ஜெனரல் மேனேஜர் ஆக்கியது.
‘ஏன்? ஏன் எம்.டி. அப்படிச் சொல்லியிருப்பார்? தொடர்ந்து ஒன்பது வருடம் கோப்பையை வென்ற நான் இந்த வருடமும் வென்று பத்தாண்டுச் சாதனை படைக்க நினைத்திருந்தேனே…இப்படித் திடீரென்று தடை போட்டு விட்டாரே…ஏன்? அவருக்கு செஸ் விளையாட்டின் மீதிருந்த ஆர்வம் மறைந்து போய் விட்டதா? இல்லை என் விளையாட்டு அவருக்கு சலித்துப் போய் விட்டதா?’ எனக்குள் பல விடை தெரியாத கேள்விகள் எழுந்து எழுந்து அடங்கின
இந்தத் தடை உத்தரவு என் மனத்தைக் காயப்படுத்தியதோடல்லாது, எனக்குள் ஒரு அவமான உணர்வையும் விதைத்தது
‘கம்பெனிக்குள் ஒரு ‘செஸ் சொஸைட்டி’யை ஏற்படுத்தி பணியாட்கள் பல பேரை அதில் இணைத்து, எல்லோரும் செஸ் கற்றுக் கொண்டிருந்தேன். இனி எப்படி நான் அவர்கள் முகத்தில் விழிப்பேன்?’
என்னால் இன்று முழுவதும் வேலையில் ஈடுபடவே முடியவில்லை. என் மேஜை மேல் நிறைய ஃபைல்கள் என் கையெழுத்துக்காக காத்திருந்தன
குவாலிட்டி கண்ட்ரோல் செக்ஷனிலிருந்து என்னைப் பார்க்க வந்த க்யூ.சி.இன்சார்ஜ் வெங்கடேஷை, ஒரு சாதாரண விஷயத்திற்காக கண்டமேனிக்குத் திட்டியனுப்பினேன்
ஆனாலும், எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது, ‘நிச்சயம் எம்.டி. சரியான காரணமில்லாமல் இப்படிச் செய்ய மாட்டார்’ என்று
நீண்ட நெடிய மனப் போராட்டத்திற்குப் பிறகு, ‘இதை யோசிச்சு நான் ஏன் என் மண்டையை உடைச்சுக்கணும்? பேசாம எம்.டி.யை நேரிலேயே சந்தித்து இதைப் பற்றி அவரிடமே கேட்டு விடலாமே?’ எனக்குள் முடிவு செய்து கொண்டு, எம்.டி.யின் அறை நோக்கி நடந்தேன்
அவருடைய பி.ஏ.மாலினியிடம், “எம்.டி.யைப் பார்க்கணும்” என்றேன்.
“ஒன் மினிட் சார்” என்று சொல்லி விட்டு, எம்.டி.யின் அறைக்குள் சென்று விட்டுத் திரும்பியவள், “ஸாரி சார், எம்.டி.கிட்ட நீங்க வெய்ட் பண்ணிட்டிருக்கற விஷயத்தைச் சொன்னேன். அவரு ரொம்ப பிஸியா இருப்பதாகவும், இன்னிக்கு உங்களை மீட் பண்ண முடியாதுன்னும் சொல்லிட்டார். ரெண்டு மூணு நாள் கழிச்சு அவரே கூப்பிடறதாகவும் சொல்லியிருக்கார்” என்றாள்
எத்தனை பிஸியாயிருந்தாலும் எனக்காக நேரம் ஒதுக்கும் எம்.டி., இன்று அப்படிச் சொன்னது எனக்குள் பெரிய கவலையை ஏற்படுத்தியது. அந்த நிராகரிப்பும் கூட ஒரு அவமானப்படுத்தலின் வெளிப்பாடு தான் என, என் உள் மனம் கூறியது
நொந்து போய்த் திரும்பிய என்னை, “சார்…ஒன் மினிட்” என்று சொல்லி மறுபடியும் நிறுத்தினாள் அந்த மாலினி.
சலிப்புடன் திரும்பிப் பார்த்தேன். வேகவேகமாக என் அருகில் வந்து கையிலிருந்த ஆண்டு விழா அழைப்பிதழை என்னிடம் நீட்டி, “ஸாரி சார், எம்.டி.இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னார். நான் தான் மறந்திட்டேன்” என்றாள்.
“என்ன இது?” கேட்டவாறே வாங்கித் திறந்து பார்த்தேன்.
பத்தாம் ஆண்டு ‘ரகோன் கோப்பை’ செஸ் போட்டி
கோப்பையை வழங்குபவர் : ‘செஸ் கிங்’ திரு.திவாகர் (ஜெனரல் மேனேஜர்)
ரகோன் குரூப் ஆஃப் கம்பெனீஸ்
எனக்கு சிரிப்பு தான் வந்தது. நான் கலந்து கொள்வதைத் தடுத்து விட்டு, அதை மறைக்க ‘கோப்பையை வழங்குபவர் : செஸ் கிங் திவாகர்’னு போட்டா நான் மயங்கிடுவேனா?
இந்த டிரிக்கெல்லாம் நான் பல வருஷத்துக்கு முன்னாடியே பார்த்திட்டேன்!…நான் ஒண்ணும் சின்னக் குழந்தையில்லை, இந்த மிட்டாய்க்கெல்லாம் ஆசைப்பட, என்று மனதிற்குள் நினைத்தேன்
மாலினியிடம், “உங்க எம்.டி.கிட்ட ஏதோ தவறா தெரியுது. அவர்கிட்ட சொல், திவாகர் சார் போட்டி நடக்கற தினத்தன்று வர மாட்டாராம், அந்தக் கோப்பையை வழங்க வேற யாரையாவது ஏற்பாடு பண்ணிக்கச் சொன்னாருனு சொல்லிடு. அதே மாதிரி, இந்த ஜி.எம். போஸ்டிலேயும் தொடரப் போவதில்லையாம், அதுக்கும் வேற ஆளைப் பார்த்துக்கச் சொன்னாருனு சொல்லிடு…என்ன?” என்று சொல்லி விட்டு விருட்டென்று திரும்பி, வேக வேகமாக நடந்தேன்.
இரவு மொட்டை மாடியில் தனியாக நடைபழகிக் கொண்டிருந்தேன். என் எண்ணம் முழுவதும் எம்.டி. எனக்குச் செய்த துரோகங்களே நிறைந்திருந்தது.
நான் எதிர்பார்த்தது போலவே, மாலினி மூலமாய் நான் செய்து வந்த அதிரடி வைத்தியம் நன்றாகவே வேலை செய்தது. எம்.டி.யிடமிருந்து என் மொபைலுக்கு கால் வந்தது.
காலை அட்டெண்ட் பண்ணலாமா? வேண்டாமா? என்று நீண்ட நேரம் யோசித்து விட்டு, அசுவாரஸியமாய் அட்டெண்ட் செய்தேன். “யெஸ் சார், திவாகர் ஹியர்”
“என்ன மிஸ்டர் திவாகர், செஸ் டோர்னமெண்ட்டுக்கு வர மாட்டேன்னு சொன்னீங்களாமே? ஜி.எம்.போஸ்டையும் ரிஸைன் பண்ணப் போறீங்களாமே, என் பி.ஏ.சொன்னா. ஏன் இந்த அவசர முடிவு?” எம்.டி.குரலில் சின்ன வருத்தம் தொணித்தது.
“காரணத்தை நான் சொல்ல வேண்டியதில்லை சார், அது உங்களுக்கே தெரியும்” என்றேன்.
“ஆக்சுவலா….நான் கம்பெனியோட எம்.டி.யா இருந்தாலும் உங்களோட ரசிகன். உங்களோட செஸ் ஆட்டத் திறமைக்கு என்றைக்குமே மதிப்புக் குடுக்கறவன், நீங்க ஏனோ அதை மறந்திட்டீங்க”
“நான் மறக்கலை சார்!…நீங்கதான் மறந்திட்டீங்க!…அதனாலதான் என்னைப் போட்டியிலேயே கலந்துக்கக் கூடாதுன்னு உத்தரவு போட்டிருக்கீங்க?” ஆவேசமாய்ச் சொன்னேன். அதான் வேலையை ரிஸைன் பண்றதா முடிவே பண்ணியாச்சு…அப்புறம் என்ன பயம்?
மெலிதாகச் சிரித்த எம்.டி. “யு ஸீ மிஸ்டர் திவாகர்…உங்களுக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும்!…நான் எதைச் செய்தாலும் ஒரு காரண காரியத்தோடதான் செய்வேன், இப்ப உங்களுக்கு எதுவும் புரியாது, நான் செய்வதெல்லாம் உங்களுக்கு கோபத்தைக் கூட வரவழைக்கும்!…அதனால….போட்டி நடக்கற அன்னிக்குத் தவறாம வாங்க! வந்து பாருங்க! நீங்களே புரிஞ்சுக்குவீங்க…நான் ஏன் அப்படிச் சொன்னேன்?னு” என்று சொல்ல,
சில விநாடிகள் யோசித்து விட்டு, “ஓ.கே. சார்…ஐ வில் ட்ரை” என்றேன்.
“இந்த டிரை…கிரை…எல்லாம் வேண்டாம்!…நீங்க வர்றீங்க!…அவ்வளவுதான்” ஆணித்தரமாய்ச் சொன்னார் எம்.டி.
“சரி சார்!….நீங்க சொன்னதுக்காக நான் வர்றேன்…வந்து பார்க்கறேன்” அரைமனதோடு சொல்லி விட்டு இணைப்பிலிருந்து வெளியேறினேன்.
அன்று போட்டி தினம். காலையிலிருந்தே ஒரு தீர்மானமில்லாமல், குழப்பத்தில் இருந்தேன். “ஃபங்ஷனுக்குப் போகலாமா?…வேண்டாமா?…”
எனக்குள் பட்டிமன்றம், விவாதஅரங்கம், எல்லாம் நடந்து முடிய, “வந்து பாருங்க…நீங்களே புரிஞ்சுக்குவீங்க”ன்னு எம்.டி. சொன்னாரே?…அப்படி என்ன தான் அங்க நடக்குதுன்னு போய்த் தான் பார்ப்போமே?.” என்ற முடிவோடு ஆர்வமேயில்லாமல் கிளம்பினேன்.
என்னைக் கண்ட்தும் எம்.டி.வேக வேகமாய் வந்து, என்னை மிகவும் மரியாதையோடு உபசரித்து, முன் வரிசையில் அமர வைத்தார்.
முதலில் லீக் போட்டிகள் துவங்கின.
அடுத்தடுத்து நடைபெற்ற பல லீக் போட்டிகளில் பலர் வென்று…பலர் தோற்று…கால் இறுதி….அரையிறுதி…என நகர்ந்து…நகர்ந்து…மாலை வாக்கில் இறுதிப் போட்டி துவங்கியது.
எம்.டி.ரகோத்தமன் என் அருகில் இருந்த சேரில் வந்து அமர்ந்து கொண்டார்.
இறுதிப் போட்டியில், ரகோன் குரூப்ஸின் மூன்றாவது யுனிட்டில் சாதாரண ஃபிட்டராகப் பணி புரியும் குமார் என்னும் சின்னப் பையன், சீனியர் என்ஜினியரான செல்லத்துரையுடன் மோதினான். கடந்த ஐந்து வருடங்களாக என்னுடன் இறுதிப் போட்டியில் மோதியவர் அந்த செல்லத்துரை.
மொத்தப் பார்வையாளர்களும் செல்லத்துரை எளிதாய் வென்று விடுவார் என்றே கணித்தனர். நானும் அதையே தான் கணித்தேன். எனக்குத் தெரியுமல்லவா?…அந்த செல்லத்துரையின் திறமை?.
ஆனால், எல்லோருடைய கணிப்பையும் பொய்யாக்கினான் அந்தக் குமார். அவனுடைய சில அசத்தலான காய் நகர்த்தல் பல பேரை புருவம் உயர்த்த வைத்தது. நானே சில இடங்களில். “வாவ்….பிரில்லியண்ட் மூவ்” என்னையுமறியாமல் கூவி விட்டேன்.
அந்த மாதிரி நேரங்களில் எம்.டி.என் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தார்.
நானும், “பயல் பார்த்தால் தான் சின்னப் பையனா இருக்கான்…ஆனா ஜீனியஸ் மாதிரி விளையாடறான்” என்றேன்.
பல நேரங்களில் அவனுடன் போட்டியிடும் சீனியர் என்ஜினியர் செல்லத்துரையின் திணறல் எல்லோரையும் “த்சொ…த்சொ…” சொல்ல வைத்தது. இந்த செல்லத்துரை கடந்த ஐந்து வருடமாக இரண்டாமிடம் பெற்று ரன்னர் கோப்பையை வென்றவர்.
அதே போல், இந்த வருடம் முதலிடம் எனக்குத்தான் என்று நேற்று வரை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தவர். தற்போது வியர்வை சொட்டச் சொட்ட விளையாடிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நகர்வுக்கும் நீண்ட நேரத்தை எடுத்துக் கொண்டார். தோல்வி பயம் அவர் விரல்களின் நடுக்கத்தில் தெரிந்தது.
இரவு வரை நீடித்த போட்டியில், அந்த ஃபிட்டர் பையன் ஜெயித்து விட, அவமானத்தால் குன்றிப் போனார் சீனியர் என்ஜினீயர் செல்லத்துரை. அவர் முகத்தில் சவக்களை தாண்டவமாடியது..
என் மனதிற்குள் இன்னதென்று புரியாத ஏதோவொன்று என்னை பிறாண்டிக் கொண்டேயிருந்தது. “இந்த வயதில் இந்த மாதிரி நான் கூட விளையாடியிருக்க மாட்டேன்”
கோப்பை வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது. நானும் எம்.டி.யும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேடையில் அருகருகே அமர்ந்திருந்தோம்.
சில சம்பிரதாய பேச்சுக்கள் முடிந்த பின், “இப்போது இரண்டாமிடம் பெற்று ரன்னர் கோப்பையை வென்ற செல்லத்துரை அவர்களுக்கு நமது நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் திரு,ரகோத்தமன் அவர்கள் கோப்பையை வழங்குவார்” என்று தொகுப்பாளர் அறிவிக்க, உற்சாகமே இல்லாமல் வந்து கோப்பையை வாங்கிச் சென்றார் செல்லத்துரை.
அவருடைய வின்னர் கோப்பைக் கனவு தகர்ந்த சோகத்தில் அவருடைய நடையே லேசாய்த் தள்ளாடியது.
“அடுத்து, கடந்த ஒன்பது வருடங்களாக ‘ரகோன் கோப்பை’யைக் கைப்பற்றிய ‘செஸ் விளையாட்டின் பிதாமகன்’, நமது ஜி.எம்.திவாகர் அவர்கள் இன்று சிறப்பாக விளையாடி முதலிடம் பெற்று, இந்த ஆண்டிற்கான ‘ரகோன் கோப்பை’யை வென்ற வின்னர் குமாருக்கு தனது பொற் கரங்களால் வழங்குவார்” என்ற அறிவிப்பு வந்த மறு விநாடி, அங்கே பரவிய கைதட்டல் விண்ணில் எதிரொலிக்க, வெற்றி பெற்ற அந்தப் பையனுக்கு என் கையால் கோப்பையை வழங்கி, வாழ்த்துக் கூறினேன்.
விழா முடிந்து வீடு திரும்பிய பின்னரும் எனக்குள் அந்தப் பிறாண்டல் இருந்து கொண்டேயிருந்தது
“அந்தப் பையனை ஜெயிக்க வைப்பதற்க்காகவே என்னை விளையாட வேண்டாம் என்று எம்.டி. தடுத்திருப்பாரோ?”
இரவு மொட்டை மாடியில் வழக்கம் போல் மினி வாக்கிங் பண்ணிக் கொண்டிருந்த போது மொபைல் ஒலித்தது. எடுத்துப் பார்த்தேன். எம்.டி.தான் அழைத்திருந்தார்.
“ம்ம்..சொல்லுங்க சார்” என்றேன்.
“என்ன மிஸ்டர் திவாகர்? இன்னிக்கு நடந்த செஸ் டோர்னமெண்ட்ல…அந்தச் சின்னப் பையனோட ஆட்டம் எப்படி?…உங்க கருத்தைச் சொல்லுங்க” எம்.டி.கேட்டார்.
“ம்ம்ம் அபாரம் சார்! நான் எதிர்பார்க்கவேயில்லை சார்!…அவனோட சில மூவ்கள் இன்னமும் கண்ணுக்குள்ளாரவே நிக்குது சார்! கடினமான சிச்சுவேஷன்ல நானே அடுத்த மூவ் எப்படிப் பண்ணினா சரி வரும்?ன்னு யோசிச்சிட்டிருக்கும் போதே அவன் அஸால்ட்டா மூவ் வைக்கறான்!…சொல்லப் போனா…என்னையே அசத்திட்டான்” என் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் அக்மார்க் உண்மையே.
எல்லாவற்றையும் கேட்டு முடித்த பின், “மிஸ்டர் திவாகர் அவனைப் பற்றியோ, அவனோட ஆட்டத் திறமை பற்றியோ இதுவரை நீங்க கேள்விப்பட்டதே இல்லையா?…யாருமே உங்க கிட்ட இப்படியொரு ப்ளேயர் நம்ம கம்பெனிக்குள்ளார இருக்கான்!னு சொல்லவேயில்லையா?””
“நோ சார்.! இன்னிக்குத் தான் இந்தப் பையனையே நான் பார்க்கறேன், ஆக்சுவலா… கம்பெனிக்குள்ளார நான் ரன் பண்ணிக்கிட்டிருக்கற செஸ் சொஸைட்டில கூட இவன் மெம்பரில்லை!…”
“பட்… நான் கேள்விப்பட்டிருக்கேன் திவாகர், இவனோட ஆட்டத்தையும் ரெண்டு மூணு தடவை வெளியில பார்த்திருக்கேன்!…”
“சார்…என்ன சொல்றீங்க?…நீங்க அவன் ஆட்டத்தைப் பார்த்திருக்கீங்களா?…எங்கே சார்?” நம்ப முடியாமல் கேட்டேன்.
“நான் தான் செஸ் பைத்தியமாச்சே?..…ஊர்ல இருக்கற எல்லா செஸ் அசோஸியேஷனிலும் மெம்பர்…அதனால…அங்கங்கே நடக்கற டோர்னமெண்ட்டுக்கெல்லாம் எனக்கு அழைப்பு வரும்!…போவேன்…அப்படிப் போனப்ப தான் ரெண்டு மூணு டோர்னமெண்ட்ல இந்தப் பையனையும் இவனோட திறமையையும் பார்த்தேன்!… அங்கிருக்கறவங்ககிட்ட ‘இவன் யாரு என்ன’னு விசாரிச்சேன்!…அப்பத் தான் தெரிஞ்சுது…இவன் நம்மளோட மூன்றாவது யுனிட்ல வேலை பார்க்கற ஃபிட்டர்ன்னும், இந்த வருஷ ஆண்டு விழா போட்டில கலந்துக்க இவனும் பெயர் குடுத்திருக்கான்னும்!…அதனால தான்…நீங்க கலந்துக்க வேண்டாம்னு தடை போட்டேன்” சொல்லி விட்டு எம்.டி.நிறுத்த,
எனக்குக் குழப்பமாயிருந்தது. “சார்..நீங்க சொல்றது எனக்குப் புரியலை!…அதுக்காக என்னை ஏன் சார் விளையாட வேண்டாம்!னு தடுத்தீங்க?”
“யெஸ் மிஸ்டர் திவாகர்! என்னைப் பொறுத்தவரை நீங்க தான் செஸ் ஆட்டத்தின் கடவுள்! பத்து வருஷமா உங்க ஆட்டத்தைப் பார்த்துப் பார்த்து ரசித்தவன் நான்!…நான் மட்டும் ஒரு பெண்ணாய் இருந்திருந்தா…உங்களை துரத்தித் துரத்திக் காதலிச்சிருப்பேன்!…ஊரே எதிர்த்திருந்தாலும் உங்களையே கல்யாணமும் பண்ணியிருப்பேன்!…அந்த அளவுக்கு க்ரேஸ் உங்க மேலே!…அப்படிப்பட்ட நீங்க…ஒரு சாதாரண ஃபிட்டர் பையன்கிட்டத் தோற்று விடுவீர்களே?ன்னு ஒரு பயம் எனக்குள் வந்திடுச்சு!… அதனால் தான் நீங்க அவனோட விளையாடறதையே தடுத்தேன்! அதற்கு பதிலா உங்களை உயர்த்திக் காட்ட, உங்க கையால அவனுக்குக் கோப்பையைக் குடுக்க வெச்சு, உங்களை கௌரவப் படுத்தினேன்”
“சார்….நீங்க சொல்றதைப் பார்த்தா…உங்களுக்கு…என் திறமையின் மேல்..” நான் சொல்ல, என்னைப் பேச விடாமல் இடையில் புகுந்த எம்.டி.,
“தயவு செய்து உங்க திறமை மேல நான் நம்பிக்கை இழந்துட்டேன்னு மட்டும் நினைச்சிடாதீங்க! ஒன்பது வருஷமா கோப்பையைத் தட்டிக்கிட்டு ஒரு புலி மாதிரி உலாவிட்டிருக்கற நீங்க ஒரு சின்ன அதிர்ச்சி தோல்வியாலே பூனையா மாறிட நேர்ந்திடுச்சுன்னா? ஓ மை காட்! என்னால அதைத் தாங்கிக்க முடியாது திவாகர்!” பேச்சை சட்டென்று அவர் நிறுத்திக் கொள்ள,
“சா….ர்”
“திவாகர்! என்னோட இந்தச் செயல்ல ஏதாவது தவறோ…அல்லது உங்க மனசை புண் படுத்தற மாதிரி ஏதாவது இருந்தாலோ….என்னை மன்னிச்சிடுங்க….ப்ளீஸ்!…முழுக்க முழுக்க உங்க மேல் இருந்த அபிமானத்தால் தான் நான் இதைச் செய்தேன்!”
“தேங்க்யூ சார்” என்றேன் நான் தழுதழுத்த குரலில்.
“ஓ.கே.!…பை!…வீ வில் மீட் டுமாரோ” சொல்லிவிட்டு அவர் தொடர்பைத் துண்டித்ததும், நான் என் விழியோரம் திரண்டு நின்றிருந்த கண்ணீர் திவலையை விரலால் சுண்டியெறிந்தேன்.
எனக்குள் இயல்பாகவே அந்தக் கேள்வி எழுந்தது. ‘என்னால் அந்தப் பையனை ஜெயித்திருக்க முடியுமா?’
‘முடியும்…’ என்று என் வாயும் சொல்லவில்லை. என் மனமும் நினைக்கவில்லை.
‘ஒரு வேளை எம்.டி. நினைத்தது போலவே நான் அந்தச் சின்னப் பையன்கிட்டத் தோற்றிருந்தால்? என்னால் அந்த அவமானத்தைத் தாங்கிக்க முடியுமா?’ நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது.
என் மனதில் எம்.டி.ரகோத்தமன் இமய அளவு உயர்ந்து நின்றார்.
(முற்றும்)
#ads – Deals in Amazon👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings