சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 34)
கல்யாண மண்டபமே கல்யாணக் கலையில் மின்ன, மணவறையில் ஹோமகுண்டத்தின் முன் வீற்றிருந்த மணமகளின் விரிந்த இதழுக்கு எதிராக இருந்தது அவளுக்கு பக்கத்தில் வீற்றிருந்த கௌதமின் இதழ்கள்.
தன் பெற்றோர் கேட்டதும் யோசிக்காது பெண்ணின் புகைப்படத்தை கூட பார்க்காது கல்யாணத்திற்கு சம்மதித்தவன் தான் அவன். ஆனால், சரீரம் இங்கு இருக்க, மனமோ குழப்பத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மந்திரத்தை கூட உச்சரிக்க மறுத்தன அவனிதழ்கள்.
அவனுடைய நினைவில் அந்த ஒருத்தியின் முகம். அவளுடைய கோபம், அவளுடைய கன்னக்குழிச் சிரிப்பு, குழந்தை போன்ற அவளின் செல்ல நடத்தைகளே மனதை சிறைப்பிடித்திருந்தன. அதிலிருந்து விடுபடவும் அவனால் முடியவில்லை, அந்த நினைவலைகளிலிருந்து விடுவிக்கப்படவும் அவனுக்கு தோன்றவில்லை.
“நிஜமாவே என்னை விட்டு போறியா? உன் கூட சண்டை போடுவேன் தான். ஆனா, உன்னை விட்டு போகனும்னு நான் நினைச்சும் பார்த்தது கிடையாது. ஐ லவ் யூ கௌதம்” என்ற அவளின் கடைசி வார்த்தைகளே அவனது காதில் ஒலித்துக் கொண்டிருந்தன
‘என்னால் அவளை விட்டு வாழ முடியுமா? இத்தனை நாட்கள் வராத அவளுடைய நினைவு இன்று மட்டும் ஏன்?’
அவளுடைய நினைவில் அவன் விழிகள் விழிநீரில் மூழ்க, இதழ்கள் “காவ்யா…” என்று முணுமுணுத்தன
புரிதல் இருப்பின் பிரிதல் இருக்காது. அந்த புரிதல் தான் இருவரிடமும் இல்லாது போனது. அவனது நினைவுகளோ ஒரு வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வுகளை மீட்டியது.
ஒரு வருடத்திற்கு முன், அந்த அலுவலகத்தின் கடைசி தளத்தில், “ஏய், அவ்வளவு சொல்லியும் அவன் கூட பேசிக்கிட்டு இருக்க. அப்ப என்னோட வார்த்தைக்கு என்னடி மரியாதை?” என்று கௌதம் தன்னெதிரே இருந்தவளிடம் கத்த
“புரிஞ்சிக்காம பேசாத கௌதம், ஒரே டீம்ல இருந்துக்கிட்டு எப்படி பேசாம இருக்க முடியும்? அதுவும் நானா போய் பேசக் கூட இல்லை” என்று அவனிடம் புரிய வைக்க நினைத்த காவ்யாவின் வார்த்தைகள், காற்றில் கரைந்த கற்பூரம் தான்
“ஓஹோ… அப்ப நீங்க பண்றது சரி, நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டு தப்பு பண்றேன் ரைட்?” என்ற கௌதமை எப்படி சமாதானப்படுத்துவது என்று அவளுக்கு சுத்தமாக தெரியவில்லை
“அதான் அவ்வளவு சொல்றேனே அவன் கூட பேசாதன்னு. அவன் வந்து பேசும் போது அப்படி என்னடி சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டு இருக்க? பார்க்கும் போதே எரிச்சலா இருக்கு” என்று கௌத்தம் கடுப்பாக சொல்ல
“ஏன் இப்படி பேசுறடா? ஒரே இடத்துல வேலை பார்த்துக்கிட்டு பேச வேணாம்னு சொன்னா எப்படி? நிலைமை தெரிஞ்சும் நீ இப்படி நடந்துக்குறதை என்னால ஏத்துக்க முடியல” என இயலாமையில் வந்து விழுந்தன காவ்யாவின் வார்த்தைகள்
“எனக்கு எதுவும் புரிய வேணாம், நீ பேச கூடாது அவ்வளவு தான்” என்று கத்திவிட்டு அவன் தன் வண்டியை உயிர்ப்பிக்க, அவனுக்கு புரிய வைக்க முயன்றவளின் முயற்சிகள் அத்தனையும் தோல்வி தான்.
“ச்சே” என்று அவள் பற்றியிருந்த தன் கையை உதறியவன், அவள் பேச வந்ததை காது கொடுத்து கேட்காது அங்கிருந்து விறுவிறுவென சென்று மறைய, அவனையே கலங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்
#ads – Best Deals in Amazon 👇
கௌதம், காவ்யா – இன்றோ நேற்றோ அல்ல, கல்லூரி இறுதி ஆண்டிலிருந்து காதலித்து வரும் ஜோடி. ஆரம்பத்திலிருந்த இனக்கவர்ச்சி காதலாகி நன்றாக சென்றுக் கொண்டிருந்த காதல், காலம் போக போக புரிந்துணர்வை இழந்து விட்டது.
ஒரு உறவில் இருக்க வேண்டிய நம்பிக்கை, புரிதல் இல்லாது போய் ஈகோ தலை தூக்க, காதல் கானலாகி போனது
அன்றிரவு தன்னவனுக்கு அழைத்து சில கெஞ்சல்கள், சில கொஞ்சல்கள், பல முத்தங்கள் கொடுத்து அவனை சமாதானப்படுத்தியதும் தான், அவளுக்கு இருந்த அழுத்தம் குறைந்தது போன்றிருந்தது. ஆனால், அடுத்த நாளே புதுப் பிரச்சினை
“என் கூட உன்னால வர முடியாது தானே? எந்தப் பொண்ணும் உன்னை மாதிரி இல்லை டி. நீதான் ச்சே” என்று கௌதம் சலித்துக் கொள்ள, நெற்றியை நீவி விட்டுக் கொண்ட காவ்யா, அவனை சலிப்பாக பார்த்தாள்.
“நீ என்ன குழந்தையா? இல்லை இல்லை குழந்தை கூட நான் சொல்றதை புரிஞ்சிக்கும். ஏற்கனவே வீட்டுல இருக்குறவங்களுக்கு என் மேல சந்தேகம் வந்துடுச்சோன்னு எனக்கே பக்கு பக்குன்னு இருக்கு. இதுல உன் கூட வந்ததை பார்த்தாங்கன்னா அவ்வளவு தான்” என்ற காவ்யா, ஆட்டோ ஓட்டுனரிடம், “வேகமாக போங்கண்ணா!” என்று சொன்னவாறு பாதி முகத்தை கைக்குட்டையால் மூடிக் கொண்டாள், யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில்
“ஆமாடி உனக்கு மட்டும் தான் பயம் எல்லாம். ஏன் நம்ம ஆஃபீஸ்ல கூட மத்த பொண்ணுங்களும் தான் இருக்காங்க. அவங்க ஆளுங்க கூட பைக்ல போகலயா என்ன? உனக்கு பிடிக்கலன்னு சொல்லு” என்ற கௌதமிற்கோ, அவள் தன்னுடன் பைக்கில் வர மறுத்ததில் அத்தனை கோபம்
“எனக்கும் ஆசையெல்லாம் இருக்குடி, உன்னால அதை புரிஞ்சிக்கவே முடியாது. எப்ப எது கேட்டாலும் முடியாது இல்லைன்னா வேணாம். உன்னை போய்…” என்று வாய் வரை வந்த வார்த்தையை அவன் நிறுத்த, அவன் சொல்ல வந்ததை புரிந்துக் கொண்டவளுக்கு, சட்டென விழிகள் கலங்கின
“எதுக்கு நிறுத்தின? சொல்ல வேண்டியது தான. நீ என்னை புரிஞ்சி நடந்துக்குறியா? உன் இஷ்டத்துக்கு நான் இருக்கனும். முன்னாடி எல்லாம் ஒரு சண்டை போட்டா பத்து நிமிஷத்துல என்கிட்ட வந்துடுவ. இப்பல்லாம் நான் வர பத்து மாசம் ஆனாலும் பரவாயில்லைனு அப்படியே இருக்க. உனக்கு என்மேல முன்னாடி இருந்த லவ் இப்ப இல்லை” என்று அவள் அழுதவாறு மூக்கை உறிஞ்ச
“ஆமாடி, இப்ப மொத்த பழியையும் என் மேல போட்டுட்ட. எல்லாமே என்னால தான், அப்படித் தான” என்று கோபமாக கேட்ட கௌதம், ஆட்டோவை நிறுத்தி வண்டியிலிருந்து இறங்க, காவ்யாவும் அவனை அழைக்காது இறுகிய முகமாகவே அமர்ந்திருந்தாள்
அடுத்த ஒரு வாரத்திற்கு பேசிக் கொள்ளவேயில்லை. அலுவலகத்தில் ஒரே குழுவில் இருப்பவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டு இருக்க, சுற்றியிருந்த நண்பர்களுக்கோ அவர்களின் சண்டை ஒன்றும் புதிது இல்லையே. வழக்கமாக நடப்பது தான் என்று அவர்களின் போக்கில் விட்டு விட்டனர்
ஒரு வாரம் கழிந்த நிலையில், காவ்யாவுக்கு தான் தன்னவனுடன் பேசாது இருக்க முடியவில்லை. அலுவலகத்தில் மும்முரமாக அவன் மடிக்கணினியில் வேலை செய்துக் கொண்டிருக்க, அவனருகில் சென்று நின்றவள், சமாதானப்படுத்தும் விதமாக சாக்லெட்டை நீட்டினாள்
அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்த கௌதம், தன் பக்கத்தில் நின்றிருந்தவளை ஒற்றை புருவத்தை உயர்த்தி முறைத்து விட்டு பார்வையை திருப்பிக்கொள்ள, “வீட்டுக்காரரே! வீட்டுக்காரரே!” என்று அவள் அழைத்த தோரணையில் அவனுக்கே சிரிப்பு வந்து விட்டது
அடர்ந்த மீசைக்கு நடுவே துளிர்ந்த புன்னகையை அடக்க முடியாது அவனிதழ்கள் விரிந்துவிட, “யாஹூ…” என்று கத்திய காவ்யா, பின்னரே இடம், பொருள் உணர்ந்து திருதிருவென விழிக்க, இப்போது அவளின் பாவனையில் கத்தியே சிரித்து விட்டான் கௌதம்
அவளின் தலைமுடியை லேசாக கலைத்து விட்டவன், “சாரி பேபி…” என்று சொல்ல, “நானும் சாரிடா” என்றவளை, காதலுடன் அணைத்துக் கொண்டான் அவன்
இப்படியே சில நாட்கள் நன்றாக செல்ல, மீண்டும் வழக்கம் போல் இருவருக்குமிடையில் குட்டி குட்டி சண்டைகள் உருவாகின.
ஒருபுறம் புரிதலின்மை மறுபுறம் அதீத உரிமை இவர்களின் தற்காலிக சண்டைகளுக்கு காரணமாகிப் போக, இவை இரண்டுமே ஒருகட்டத்தில் இவர்களின் நிரந்தரப் பிரிவுக்கும் காரணமாகிப் போனது.
அன்று அலுவலகத்தில் கேளிக்கை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, ஆடல் பாடல் என மொத்த பேருக்குமே கொண்டாட்டம் தான்
அன்று டிஸைனர் புடவையில் தேவதை போல் இருந்த காவ்யா அவன் கண்களுக்கு மட்டும் ராட்சசியாக தெரிந்தாளோ என்னவோ, கடுகடுவென இறுகிப் போய் இருந்தது கௌதமின் முகம்.
“உன் இஷ்டப்படி தான் ட்ரெஸ் போட்டு வருவேன்னா நான் தரும் போது ‘வேணாம். என்னால நீ தர்றதெல்லாம் போட முடியாது’ ன்னு முகத்துல அறையற மாதிரி சொல்லிருக்க வேண்டியது தான. எதுக்குடி சரி சரின்னு மண்டைய ஆட்டின?” என்று கோபமாக கேட்டவாறு கௌதம் தன் தட்டில் உணவை எடுத்து வைக்க,
பாவம் போல் அவன் பின்னால் நின்றவள், “நான் போட முடியாதுன்னு சொன்னேனா? அதை நான் எடுத்து வச்சிருக்கேன்” என்று சொல்லி முடிக்கவில்லை
“நீ பெட்டியில போட்டு பத்திரப்படுத்தி வைக்கவா நான் உனக்கு அந்த ட்ரெஸ் வாங்கித் தந்தேன்?” என்று கோபமாக வந்தன கௌதமின் வார்த்தைகள்.
“கௌதம், என்னை புரிஞ்சிக்கவே மாட்டியா? வீட்ல தெரிஞ்சா பிரச்சினை ஆகும். நானே அதை எவ்வளவு பயந்து பயந்து என் கபோர்ட்ல வச்சிருக்கேன் தெரியுமா?” என்று காவ்யா புலம்பவும், அவளின் வழக்கமான புலம்பல்களில் கடுப்பாகி விட்டான் அவன்.
“நீ எப்ப தான் எனக்கு பிடிச்ச மாதிரி இருந்திருக்க? எப்ப பாரு அவன் பார்த்துருவான் இவன் பார்த்துருவான்னு பயந்துகிட்டு, ச்சே” என்று அவன் சலித்துக் கொள்ளவும்
“நீ மட்டும் எனக்கு பிடிச்ச மாதிரியா இருக்க? சிகரெட் பிடிக்காதுனு சொன்னா கேக்க மாட்ட. ட்ரிங்க் பண்ற, இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது. நீ மட்டும் உன் விருப்பப்படி வாழலாம், நான் மட்டும் கேக்கனுமா?” என்று பதிலடி கொடுத்தாள் காவ்யா.
அதில் அவனுக்கு கோபம் தலைக்கேற, “அறைஞ்சேன்னா…” என்றவாறு ஒரு அடி முன்னே வைத்தவன், அவளின் மிரண்ட முகத்தையும் சுற்றுப்புறம் உணர்ந்தும் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டான்.
“எதிர்த்து பேசாத காவ்யா, செம்மயா டென்ஷன் ஆகுது. நான் சொன்னா பதிலுக்கு நீயும் சொல்லுவியா? உன்னை கோபப்படுத்தாம நான் நடந்துக்குறேன். பட் யூ? எப்ப பாரு ஏதாச்சும் பண்ணி என்னை கோபப்படுத்துற. எப்போ பாரு நொய் நொய்னுகிட்டு, என் ஆசைய புரிஞ்சிக்கவே மாட்டேங்குற” என்று அவன் திட்டிக் கொண்டே போக, கீழுதட்டை கடித்து அழுகையை அடக்கிக் கொண்டாள் அவள்.
சில நொடிகள் இருவரும் எதுவும் பேசவில்லை. கௌத்தமின் இறுகிய முகமும், காவ்யாவின் கலங்கிய கண்களுமே இருவருக்குள் இடம் பெற்றிருந்த ஊடலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அதே நேரம் மெல்லிய இசை ஓட, எல்லாரும் மேடைக்கு வந்து ஜோடி ஜோடியாக நடனமாட ஆரம்பிக்க, கௌத்தமை திரும்பிப் பார்த்த காவ்யா, ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டவாறு முகத்தை பாவமாக வைக்க, அவளை திரும்பி முறைத்தவனோ முகத்தை கோபமாக திருப்பிக் கொண்டான்.
சரியாக இவர்களின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தருண், “ஹாய் காவ்யா…” என்றவாறு காவ்யாவின் அருகில் வந்து நிற்க, அவளுக்கு தான் பக்கென்றானது.
கௌதமிற்கும் இவளுக்குமான சண்டைகளின் முக்கிய காரணமே இவள் தருணுடன் பேசுவது தானே
அவன் அருகில் வந்து நின்றதும் கௌதமை சடாரென்று திரும்பிப் பார்த்தவள், அவனின் கோபப் பார்வையை உணர்ந்து திருதிருவென விழித்தவாறு நிற்க, “யூ லுக்கிங் கோர்ஜியஸ் காவ்யா.” என்ற தருணின் வார்த்தைகளில்
‘அய்யோ!’ என்று தான் இருந்தது அவளுக்கு. அதுவும், கௌதம் கோபத்தில் பற்களை நரநரவென கடிக்கும் சத்தம் வேறு இவளின் காதுகளில் ஒலிக்க, ‘கடவுளே!’ என்று மானசீகமாக புலம்ப ஆரம்பித்து விட்டாள் அவள்.
இவன் சாதாரணமாக பேசிச் செல்லும் இரண்டு வார்த்தைகளுக்கே தன்னவன் ஆடும் ஆட்டத்தை அவள் தானே அறிவாள்
“ஹிஹிஹி… தேங்க் யூ!” என்று வராத புன்னகையை வரவழைத்துச் சொன்னவளுக்கு, அடுத்து தருண் செய்த காரியத்தில் தூக்கி வாரிப் போட்டது.
“ஷெல் வீ டான்ஸ்?” என்று கேட்டவாறு அவளின் கையை பிடித்து அவன் இழுத்துச் செல்ல, முதலில் அதிர்ந்து விழித்தவள்
பின்னரே உணர்ந்து அவனிடமிருந்து கையை எடுக்க முயன்றவாறு, “தரு… தருண் ஐ அம் சோரி. ஐ கான்ட்” என்று திக்கித்திணறி சொல்லி முடிக்க, அவனோ மேடைக்கே அவளை இழுத்து வந்து விட்டான்.
“அய்யோ தருண், என்னை விடுங்க. எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை. ப்ளீஸ்…” என்று அவள் அவனிடமிருந்து விலகி நகர போக
அவளை பிடித்து நிறுத்தியவன், “என்ன காவ்யா நீ? எல்லாரும் பார்க்குறாங்க. சின்னதா டான்ஸ் தான. அதுல என்ன தப்பு இருக்கு?” என்ற தருண் அவளை விடுவதாக இல்லை.
அவளும் எல்லோரினதும் பார்வையை உணர்ந்து தயக்கமாக ஆட ஆரம்பிக்க, கௌதமின் மனநிலையை சொல்லவா வேண்டும்?
கோபம், ஆத்திரம், எதையும் செய்ய முடியாத இயலாமை அவனுக்குள். எந்த ஆணால் தான் தன் காதலி இன்னொரு ஆணுடன் ஆடுவதை பொறுத்துக் கொள்ள முடியும்?
அவளுடன் நடனமாடிக் கொண்டிருந்த தருணுக்கோ, ஏற்கனவே விருந்தில் அருந்தியிருந்த போதை அதன் வேலையை செவ்வெனச் செய்ய, உணர்ச்சியின் பிடியில் அவளின் கையில் முத்தமிட்டு விட்டான் அவன்
காவ்யாவுக்கோ அதிர்ச்சி. அவனிடமிருந்து தீச்சுட்டாற் போன்று விலகியவள், எரிக்கும் பார்வைக் கொண்டு அவனை முறைத்து விட்டு கௌதம் நின்றிருந்த திசையை நோக்க, அங்கு அவன் இருந்தால் தானே
விறுவிறுவென அவனை தேடிச் சென்றவள், அவன் அலுவலகத்திற்கு பின் வளாகத்திலிருக்கும் தோட்டத்திற்கு சென்றிருப்பதை அறிந்து வேகமாக அங்கே சென்றாள். அங்கோ கௌதம் நின்றிருக்க, அவன் கை முஷ்டியை இறுக்கியிருந்த விதத்திலே அவனின் கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.
எச்சிலை விழுங்கியவாறு “கௌதம்” என்றவாறு அவனை நோக்கிச் சென்றவள், நிதானமாக அவன் திரும்பிப் பார்த்த பார்வையிலேயே சட்டென நின்று விட்டாள். ஏதோ விபரீதமாக நடக்கப் போகின்றது என்பதை உணர்த்தியது அவள் மனம்
“ஓஹோ… மேடம் டான்ஸ் பண்ணி முடிஞ்சதா? இல்ல அவன் கூட கொஞ்சி குலாவ வேண்டியது இன்னும் மிச்சம் மீதி இருக்கா?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கேட்க
“என்ன பேசுற நீ?” என்று அவனுக்கு புரிய வைக்க வந்தவள்
“இனாஃப்…” என்ற அவனது கர்ஜனையில் அதிர்ந்து நின்றாள்.
“என்னடி? என்னை வச்சி விளையாடிக்கிட்டு இருக்கியா? ச்சீ… உன்னை பார்க்க பார்க்க டென்ஷன் ஆகுதுடி. எப்படி உங்களால மட்டும் எல்லாம் பண்ணிட்டு எதுவுமே தெரியாத மாதிரி ரியாக்ஷன் கொடுக்க முடியுது? நல்லா நடிக்கிறடி…” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கத்திய கௌதம்
“கௌத்தம் ப்ளீஸ் கோபப்படாத, இதை நானே எதிர்ப்பாக்கல. அவன் தான் நான் சொல்ல சொல்ல கேக்காம…” என்று பேச வந்தவளை பேச விட்டால் தானே
“ஏய் போதும் டி, விட்டா அவன் கூட ரொம்ப தான் உரசுற. ஆரம்பத்துல அவன் விஷயத்துல நீ என் பேச்சை கேக்காம இருக்கும் போதே நான் புரிஞ்சிருக்கனும். ஒருத்தருக்கு உண்மையா இரு. முதல்ல என்னை சொல்லனும்” என்று பேசிக் கொண்டே சென்றவனின் கோபம், அவன் கண்களை மறைத்திருந்தது என்னவோ உண்மை தான்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சும்மாவா சொன்னார்கள்?
“கௌதம் நீ எல்லை மீறி பேசிக்கிட்டு போற. நிதானமா யோசிச்சு பாரு, நான் தப்பு பண்ணல டா. அவன் இப்படி நடந்துப்பான்னு நானே எதிர்ப்பார்க்கல” என்று காவ்யா அழுதவாறு சொல்ல, அவளின் விழிநீர் கூட அப்போது அவனின் கோபத்தை கரைக்கவில்லை.
“போதும், இதுக்கு மேல எதுவும் பேசாத. எல்லாமே போதும். ஐ அம் டன், இதோட எல்லாத்தையும் முடிச்சிக்கலாம். எப்ப பாரு சண்டை பிரச்சினைனு என்னால இந்த ரிலேஷன்ஷிப்ல இதுக்கு அப்றமும் இருக்க முடியாது. ஒரு உறவுக்குள்ள விரும்பி இருக்கனும், நம்மள நாமளே கட்டாயப்படுத்தி ஒரு உறவுக்குள்ள இருக்கக் கூடாது. அது நிலைக்கவும் செய்யாது. இனி உன்னோட வாழ்க்கைய நீ பாரு, அவ்வளவு தான். நல்லா இரு” என்று கோபத்தில் பேசி விட்டு கௌதம் அங்கிருந்து நகர எத்தனிக்க
அவன் பேசியதில் திகைத்துப் போய் நின்றவள், அவன் செல்வதை உணர்ந்து வேகமாக அவனின் கையை பிடித்தாள்.
“கௌ… கௌதம் என்ன சொல்ற? அப்ப அவ்வளவு தானா?” என்று தழுதழுத்த குரலில் அவள் கேட்கவும்
ஒரு பெருமூச்சு விட்ட கௌதம், “லுக் காவ்யா, இதுக்கப்பறமும் என் கூட இருந்தா என்னால நீ தான் காயப்படுவ. என்னால நிறைய விஷயங்களை அக்செப்ட் பண்ண முடியல. எப்பவோ ஒருநாள் பிரியுறதுக்கு இப்பவே பிரிஞ்சிரலாம்” என்றவன், அவளின் கையை உதறி விட்டு சென்றான்
“நிஜமாவே என்னை விட்டு போறியா? உன் கூட சண்டை போடுவேன் தான். ஆனா, உன்னை விட்டு போகனும்னு நான் நினைச்சும் பார்த்தது கிடையாது. ஐ லவ் யூ கௌதம்” என்ற காவ்யாவின் வார்த்தைகள் அவன் காதில் விழுந்தாலும், திரும்பியும் பார்க்காது சென்றான் அவன்.
நடந்ததை நினைத்துப் பார்த்தவனின் விழிகள், விழிநீரில் மூழ்கியிருந்தன. அன்றைய தினத்துக்கு பிறகு அவனும் வேறு குழுவிற்கு மாறியிருக்க, அவளை பார்ப்பதற்கான வாய்ப்பும் குறைந்து போனது என்று சொல்வதை விட, அவன் அவளை பார்ப்பதையே தவிர்த்தான் எனலாம்
இன்று கல்யாண மேடையில் அவன். பக்கத்திலோ வேறொரு பெண். ஆனால், அவன் நினைவுகளோ அவனவளிடம்…
அவன் தன் காதலின் ஆழத்தை உணர இது தான் சந்தர்ப்பமா? இப்போது கடவுள் வரம் கேட்க சொன்னாலும், காலத்தை முன்னோக்கி சென்று நடந்ததை மாற்ற முயற்சிப்பானோ என்னவோ?
இமை சிமிட்டி கண்ணீரை வெளிவர விடாது தடுத்து நிமிர்ந்து பார்த்தவனது விழிகளோ சாரசர் போல் விரிய, இதழ்களோ “கவி…” என்று முணுமுணுத்தது
அவளை காதலித்த ஆரம்பத்தில் அவன் அவளை அழைக்கும் பிரத்யேக அழைப்பு அது
ஆரம்பத்தில் அடிக்கடி வந்த அழைப்பு, அதன் பிறகு வந்த தொடர் பிரச்சினைகளில் காணாமலே போய் விட்டது. இப்போது மீண்டும் அதே அழைப்பு அவனிதழ்களில்
ஆம், மண்டபத்தில் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தாள் காவ்யா.
அது அவனின் பிரம்மையா? இல்லை, அவனவளே தன்னவனின் திருமணத்தை பார்க்க வந்திருக்கின்றாளா? அவனுக்கே சந்தேகம், ஆனாலும் விழிகளை மட்டும் நகர்த்தவில்லை அவன்
அவளுடைய கண்கள் வீங்கி சிவந்து போயிருந்தன. அதிகமாக அழுதிருப்பாளோ? என்று தோணியது அவனுக்கு
அவன் அவளையே பார்க்க, வராத புன்னகையை வரவழைத்து அவளின் இதழ்கள் அசைந்தன, “ஹேப்பி மேரீட் லைஃப்” என்ற வார்த்தைகளை உச்சரிக்க…
தொலைவிலிருந்தாலும் அவளின் இதழசைவை புரிந்துக் கொள்ள முடிந்தது அவனால். விழிகள் அவளை ஏக்கமாக நோக்க, மனம் அவளையே நாடியது. அடுத்து என்ன என்று கூட தெரியவில்லை
சரியாக ஐயர் தாலியை எடுத்து அவனிடம் நீட்டி, “கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” என்று சொல்ல, அவரின் குரலில் நிகழ்காலத்திற்கு வந்து அவர் புறம் திரும்பியவன், மீண்டும் அவளிருந்ந இடத்தை நோக்க, காவ்யா இருந்தால் தானே
நிஜமாகவே பிரம்மை தானோ? என்று குழம்பியது அவன் மனம். விழிகளை அங்குமிங்கும் சுற்றி தன்னவளை தேடினான் கௌத்தம். எங்கும் தென்படவில்லை அவளின் பிம்பம்
தன் அம்மாவின் தட்டலில் தாலியை வாங்கியவனுக்கு, அதை வேறொரு பெண்ணுக்கு அணிவிக்க தான் முடியவில்லை
‘அன்று நிதானமாக பொறுமையாக நடந்திருந்தால், இன்று இந்த நிலைமையில் நின்றிருப்பாயா?’ என்று தன்னையே கடிந்துக் கொண்டது அவனின் மனசாட்சி.
கண்களை அழுந்த மூடித் திறந்தவன், சட்டென எழுந்து நின்று, “ஐ அம் சாரி…” என்று மணப்பெண்ணிடம் சொன்னவாறு, திகைத்து நின்றிருந்த தன் பெற்றோரை ஒரு பார்வை பார்த்தான். அவர்களின் பார்வையை சந்திக்க முடியவில்லை அவனால்.
மாலையை கழற்றி வைத்து விட்டு மண்டபத்திலிருந்து அவன் வெளியேற, சுற்றியிருந்தவர்களுக்கோ அதிர்ச்சி
வெளியே வந்தவனுக்கு நிச்சயமாக தெரியும், தான் பார்த்தது பிரம்மை இல்லையென்று. சுற்றி முற்றி தேடிய கௌதமிற்கு மண்டபத்திற்கு பின்னாலிருந்த தோட்டம் தென்பட, அவன் எதிர்ப்பார்த்தது போலவே, விழிநீர் ஓட பூக்களை வெறித்தவாறு நின்றிருந்தாள் காவ்யா.
எதுவும் யோசிக்காது “கவி…” என்று அழைத்தவாறு அவளை நோக்கி ஓடிய கௌதம், அவளை பின்னாலிருந்தவாறு அணைத்துக் கொள்ள, விம்மலுடன் வெடித்து அழுதாள் அவள்
“ஏன் என்னை விட்டு போன கௌதம்?” என்று காவ்யா அழுகையுடன் கேட்க, ‘சாரி’ என்ற வார்த்தையை தவிர வேறு வார்த்தை வரவில்லை அவனிதழ்களில்.
அவன் புறம் திரும்பியவள், அவனையே இமை சிமிட்டாது ஆழ்ந்து நோக்க, “நான் உன்னை புரிஞ்சிக்காம நடந்துக்கிட்டேன்டி, என்னை மன்னிச்சிடு. எனக்கு நீதான்டி வேணும், நீ மட்டும் தான் வேணும்.” என்று சொல்லி முடிக்கவில்லை, அதே இடத்தில் மயங்கி சரிந்தாள் அவள்
அவனுக்கோ இதயமே நின்று விட்டது
அவளை தன்னுடன் தாங்கிக் கொண்டவன், “கவி, என்னாச்சுடி?” என்று பதற்றமும் அழுகையுமாக கேட்க
“சாரி!” என்று மட்டும் சொன்னவளின் உயிர், அவளின் உடலிலிருந்து மட்டுமல்ல அவளவனை விட்டும் மொத்தமாக பிரிந்தது
அவனின் திருமணத்தை பார்க்க வரும் போதே அவள் விஷத்தை அருந்தியிருப்பது புரிந்தது அவனுக்கு
அவளை கைகளில் தாங்கியவண்ணம், “கவி… கவி…” என்று கதறியழுதான் கௌதம்.
கைவிட்டு போன பின் தேடி பயனில்லையே…
என்று தன் எழுத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கௌதம், பேனாவை பற்களுக்கு நடுவில் வைத்து கடித்தவாறு, “கவி, இது ஓகே தானே?” என பக்கத்திலிருந்த தன் மனைவி காவ்யாவுக்கு தான் எழுதிய கதையை கௌதம் வாசித்துக் காட்ட, உக்கிரமாக அவனை பார்த்தாள் அவள்.
“ஏன் டா நான் செத்த மாதிரி கதையில க்ளைமேக்ஸ் வச்சியிருக்க? அதான் நான் விஷம் குடிக்கல. உன் நினைப்புல சாப்பிடாம தான் அன்னைக்கு மயங்கிட்டேன்னு தெரியும் தானே? அப்றம் என்னடா இது?” என்று கோபமாக அவள் கேட்க
“நிஜத்துல தான் நடக்கல… கதையிலயாச்சும்…” என்று இழுத்தவனை, அடுத்த வார்த்தை பேச, அவள் விட்டால் தானே
அவள் அவனை அடிக்கத் துரத்த, தன் மனைவியின் கைகளில் விரும்பியே சிக்கி செல்ல அடிகளை வாங்கிக் கொண்டான் கௌதம்
(முற்றும்)
#ads – Best Deals in Amazon 👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
எதிர்பாராத முடிவு. 🙂
Super
Super nalla irundhichi I like it … 👌❤😍