in ,

நிவாரணம் (சிறுகதை) – ✍பெரணமல்லூர் சேகரன், திருவண்ணாமலை

நிவாரணம்
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 30)

க்கத்து வீட்டு பழைய கடிகாரம் ஏழு முறை மணியடித்து நேரத்தை உணர்த்தியது குப்பனுக்கு

மனைவி மல்லிகா காலை சமையல் செய்து வைத்து விட்டுப் போன சோறு மதியத்திற்கும் இரவுக்கும். அதோடு தோட்டத்தில் கிடந்த மணத்தக்காளி கீரையைக் கடைந்து வைத்து விட்டுப் போயிருந்தாள்

மதியம் கொஞ்சம் சோறும் கீரையும் சாப்பிட்டு விட்டு மீதி வைத்திருந்த சோறும் கீரையும் தான் குப்பனுக்கு இரவு உணவு. மாலையே அந்தக் கீரையைச் சுட வைத்திருக்கலாம்.

அவனுக்கு அதன் மேலெல்லாம் நாட்டமில்லை. ஆனால் இப்போது கீரை வாடை வருமே என்ற உள் மனம் அவனை எழுந்திருக்கவும் செய்தது.

எழுந்தவன் தெருவிளக்கைப் போட்டு விட்டு வந்தான். சில்லென்று பனிக்காற்று வீசத் துவங்கி விட்டிருந்தது. மஞ்சம்புல் வேய்ந்த அந்த வீட்டில் முன் பக்கம் முற்றம், உள்ளே ஒரே அறை தான்

உள்ளே சென்றவன் கீரைச் சட்டியைத் திறந்து பார்த்தான். வாடை வர ஆரம்பிப்பது போல் தெரிந்தது. ‘கழுதை… இதை எதற்குச் சுட வைக்க வேண்டும்’ என்று எண்ணியபடியே சோற்றுச் சட்டியையும் கீரைச் சட்டியையும் எடுத்து வந்து முற்றத்தில் வைத்தான்

முன்பெல்லாம் அரசு டி.வி.யைப் பார்த்தபடியே சாப்பிடுவான். கேபிள் டி.வி.க்குப் பணம் கட்டாததால் 6 மாதமாக டி.வி. ஓடவில்லை. மூக்கைப் பிடித்தால் ஜீவன் போகிறது. என்ன செய்ய? கேபிள் டி.வி. கட்டணம் 50 ரூபாயில் துவங்கி செட்டாப் பாக்ஸ் அது இது என்று, 100, 150 என்றாகி இப்போது 200 ரூபாயாகி விட்டது

தட்டை எடுத்து கீழை வைத்தவன், சோறை அள்ளிப்  போட்டுக் கீரையை வழித்துப் போட்டு சோறைப் பிசைந்தான். அப்போதே வித்தியாசமான மணம் தெரிந்தது குப்பனுக்கு. மதியம் சாப்பிடும் போது இருந்த மணம் இப்போது இல்லை. மல்லிகா இருந்திருந்தால் கீரையைச் சுட வைத்திருப்பாள்.

‘இப்ப என்ன கெட்டுப் போச்சு, இந்தக் கட்டை கெட்ட கேட்டுக்கு சுட வச்சி சாப்பிடறது ஒன்னுதான் கொறச்சல்’ வைத மனதுக்கு எதிர்வாதம் போடாமல் சாப்பிட்டு சட்டிகளுடனும் தட்டுகளுடனும் வெளியே வந்தான்.

சின்னதாய்  கீற்றால் கட்டியிருந்த குளியலறை சகிதமான இடத்திற்கு வந்தவன், அண்டாவிலிருந்த தண்ணீரை அலுமினிய சொம்பால் மொண்டு சட்டிகளையும் தட்டையும் கழுவினான்.

வழக்கமாய் பாத்திரங்களைக் கழுவும் மனைவி மல்லிகாவை நினைத்துக் கொண்டான். சட்டிகளையும் தட்டையும் உள்ளே கொண்டு வந்து வைத்துவிட்டு சொம்பெடுத்து பானையிலிருந்து தண்ணீரெடுத்துக் குடித்தான்

ராத்திரியில் கீரை மோரெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லும் அம்மாவை நினைத்துக் கொண்டான், கண்கள் கலங்கின

“தைரியத்தை மட்டும் விட்டுறக் கூடாதுடா மவனே, மரம் வச்சவன் தண்ணி ஊத்தாமப் போக மாட்டான்”

இதை அம்மா அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறான் குப்பன். கல்யாணமான ஐந்து வருடத்திலேயே கணவனை இழந்தும், குழந்தை குப்பனுடன் ஒண்டிக்கட்டையாய் மல்லுக்கட்டி வாழ்ந்தாள் அம்மா

கிராமமாக இருந்தாலும், எடுபட்டப் பயல்கள் வாளிப்பான அம்மா உடம்புக்காக அலஞ்சி திரிஞ்சானுங்க. ஆனா “நெருப்புடீ அவள்”னு கிராமமே சொல்லும் அளவுக்கு அல்லவா வாழ்ந்தாள். கழனியும் குப்பனும் வீடுமே உலகமானது அம்மாவுக்கு.

தான் ஆம்பளையாய் இருந்தும், தன்னால் அம்மாவைப் போல் தைரியமாக வாழ முடியவில்லையே என்னும் ஆதங்கம் இருந்தது குப்பனுக்கு. தனக்குப் படிப்பு வரவில்லையே என்ற ஏக்கம் குப்பனுக்கு இருந்ததை விட, அவன் அம்மாவுக்குத் தான் அதிகம் இருந்தது.

இருந்தாலும் தன்னுடன் கூடவே கழனிக்குக் குப்பனைக் கூட்டிச் சென்று விவசாய வேலைகளில் பழக்கப்படுத்தியிருந்தாள். கணவன் விட்டுப் போயிருந்த அரைகாணி நிலம், கிணறு பம்ப் செட்டை எந்த சோதனையான காலத்திலும் விட்டுக் கொடுக்காமல் தன் கணவனுடன் வாழ்ந்த ஐந்தாண்டு கால நினைவுச் சின்னமாய் விளங்கிய கழனியே கதியெனக் கிடந்தாள்.

தனியாளாக அலைந்து திரிந்து ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக பக்கத்து ஊரில் தூரத்து உறவாக இருந்த மல்லிகாவைக் கட்டி வைத்தாள் குப்பனுக்கு.

“பேரக் குழந்தையைப் பார்க்காமல் கண்ணை மூடமாட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், பேரக் குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே கர்ப்பப்பை பிரச்சனையால் போராடி தர்மாஸ்பத்திரியில் வைத்தியம் பார்த்தும் குணமாகாமல் ஒரு மழையிரவில் இறந்து போனாள்.

இதையெல்லாம் இப்போது நினைத்துக் கொண்ட குப்பனின் கண்கள் கலங்கின.

“நீ போன இடத்துக்கே வந்துடறேன் மா, என்னக் கூப்பிட்டுக்கம்மா” நேற்று இரவு முழுவதும் குப்பன் புலம்பிக் கொண்டிருந்தது மனைவி மல்லிகாவுக்கு தூக்கி வாரிப் போட்டது

மாமியாரின் தைரியமும் அரவணைப்பும் தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாக எண்ணிக் கொண்டிருந்தவள், மாமியாரை இழந்த சோகம் தாளாமல் ஓராண்டாக அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். இப்போது புருசனின் வாய்ச்சொல் தலை மூட்டையாகி விடுமோ என அஞ்சினாள்.

எவ்வளவு சமாதானமும் தைரியமும் சொன்ன போதிலும், குப்பனால் வாழ்க்கையை வழிமறிக்கும் அரக்கத்தனமான நிகழ்வுகளைத் துணிச்சலாக எதிர் கொள்ள முடியவில்லை. சாண் ஏற முழமல்லவா சறுக்குகிறது.

குப்பனின் கல்யாணத்துக்கு வாங்கிய கடன் ஒரு லட்சம் ஒரு பக்கம் கழுத்தை நெறிக்க, மறுபக்கம் கரும்புப் பயிருக்கு வாங்கிய கடனும் மிரட்டியது

கடன்பட்டு விவசாயம் செய்த கரும்பு, நன்றாகத் தான் வளர்ந்து வந்தது. இத்தனை வருசமாக இல்லாத காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் கரும்புப் பயிரை துவம்சம் செய்ததைக் குப்பனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை

இன்னும் ஒரு மாதத்திலேயே வெட்டப்பட வேண்டிய கரும்பு இப்போது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாசமாகி வந்தது. அக்கம் பக்கம் நெல் பயிரை எலிகள் பதம் பார்த்தன.

வேர்க்கடலை போட்டிருந்தவர்களுக்கு மத்தளத்துக்கு இருபக்கமும் இடியாய் எலித்தொல்லையும் காட்டுப்பன்றி தொல்லையும் சேர்ந்து கொண்டன.

எந்த வருடமும் இல்லாத வகையில் நெல் வயல்களும் வேர்க்கடலை நிலங்களும் மின்சார வேலிகளைச் சுற்றிக் கொண்டன. மாலை இருட்டு வயல்களை ஆக்கிரமிக்கும் தருணங்களில் வீடுகளில் எந்த விவசாயியைம் பார்க்க முடியாது.

எல்லோரும் தத்தம் கழனிகளில் மின்சார வேலி அமைப்பதும், அமைக்கப்பட்ட வேலிகளைக் கண்கொத்திப் பாம்பு போல காவல் காப்பதுமான வேலையே பிரதானமாக இருந்தது.

பக்கத்து நிலத்து அரசப்பன் வேர்க்கடலைச் செடிக்காக போட்டு வைத்த மின்வேலியில், காட்டுப் பன்றி ஒன்று போன வாரம் விழுந்தது. எலிகள் விழுந்தால் பிரச்சனை இல்லை, அவை விவசாயிகளாலேயே அப்புறப்படுத்தப்பட்டு விடுகின்றன.

காட்டுப் பன்றியை எடுத்துச் சென்று புதைப்பது சவால் மிகுந்த பணி. அறுத்து சாப்பிடுபவர்களும் உண்டு. ஆனால் தகவல் வனத்துறைக்குச் சென்றுவிட்டால் ஒன்று கம்பி எண்ண வேண்டும், இல்லையெனில் பெருமளவில் வனத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். அப்படித் தான் அரசப்பனின் அனுபவம் இருந்தது.

“காட்டுப் பன்னிய சுட்டுச் சாப்டுப் பாருடா அதோட சுவையே தனிடா”

உசுப்பேத்திய நட்புகளும் அரசப்பனும் திட்டம் போட்டு மின்வேலியில் சிக்கிய பன்றியைப் பங்கு போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, வனத்துறை ஜீப் கிராமத்துக்கு வந்து விட்டது.

கூடவே போலீஸ் ஜீப், மின்வாரிய ஜீப். கேட்கவா வேண்டும். வெலவெலத்துப் போனார்கள் அரசப்பனும் அவனது நட்புக்களும். பெரும்பாலான விவசாயிகள் நமக்கேன் வம்பு என்று அவரவர் வீட்டுக்குள் மறைந்து கொண்டார்கள்.

புகாரைக் கைபேசியில் சொன்னதும் அதே ஊர்க்காரன் தானே. அரசப்பனுக்கு ஆகாத மாரிமுத்து தான் ரகசியமாக மூன்று துறைக்கும் தகவல் கொடுத்து விட்டான்.

அவ்வளவு தான், மாரிமுத்து கொடுத்த பட்டியல்படி அரசப்பன் உள்ளிட்ட ஐந்து பேரையும் ஜீப்பில் தூக்கிப் போட்டுக் கொண்டு வனத்துறை ஜீப்பும், காவல் துறை ஜீப்பும் பறந்தன. மின்வாரிய ஜீப் மட்டும் நின்று கொண்டிருந்தது.

குப்பனும், அவனைப் போன்ற சிலரும் வீட்டிலிருந்தே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பேண்ட் ஷர்ட் போட்டுக் கொண்டு ஒருவர் பேசிக் கொண்டிருக்க, சிவப்புத் துண்டு போட்ட இன்னொருவர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.

“சார், இது உங்களுக்கே நல்லாயிருக்கா? விவசாயிகள் இன்றிலிருந்து யாரும் கரண்ட் வைக்கக்கூடாது, மீறி வச்சா கம்பி எண்ண வேண்டியது தான்னு கறாரா சொல்றீங்க. சட்டப்படி நீங்க சொல்றது சரி தான், ஆனா விவசாயிகளுக்கு வேறென்ன வழியிருக்கு. இந்த வருசந்தான் நல்லா மழை பெஞ்சது, ஆனா இப்படி எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் எலிகளும் காட்டுப் பன்றிகளும் ஒட்டு மொத்த விவசாயத்தையே காலி பண்ணா எங்க கதி என்ன ஆவறது? இதப் பத்தி எந்த அதிகாரிங்க கவலப்படறீங்க?”

கிணற்றில் பேசுவது போன்று குப்பனின் காதுகளில் விழுந்த வார்த்தைகள் இதமாய் இருந்தது.

“இவ்வளோ பேசுறீங்களே, அனேகமாக ரெண்டு மாசமா எல்லா விவசாயிங்களும் கரண்ட் வச்சிக்கிட்டு தான் இருக்கீங்க. நாங்க வந்தமா, நடவடிக்கை எடுத்தமா. கண்டுங் காணாம போனமில்ல. இப்பமட்டும் ஏன் வரோம்? குசும்புக்கார விவசாயிங்க காட்டுப் பன்னிய பங்கு போட்டுச் சாப்பிடவும் அதை உங்க விவசாயிகள்ள ஒருத்தரே மூனு டிபார்ட்மெண்டுக்கும் தகவல் கொடுத்தா நாங்க என்ன செய்ய?”

“ஏன் சார், அந்த காலத்திலேயே எட்டப்பன் இருந்ததை வரலாறு சொல்லுது. இந்தக் காலத்துல அது போல ஆளுங்க இல்லாமலா போயிடுவாங்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க”

இப்போது சிவப்புத் துண்டுக்காரர் பவ்யமாகச் சொன்னது குப்பனுக்கு வினோதமாகப் பட்டது. டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் அந்த சிவப்புத் துண்டுக்காரர் ஆவேசமாக பேசியது இப்போதும் குப்பனுக்கு எதிரொலித்துக் கொண்டிருந்தது.

சுமார் ஆயிரம் விவசாயிகள் உள்ள ஊரில் ஐம்பது பேர் மட்டுமே கலந்து கொண்டது மனசுக்குள் ஆதங்கமாக இருந்தாலும், கலந்து கொள்ளாமல் வீட்டுக்குள் இருந்து கொண்டு காதால் கேட்டுக் கொண்டிருந்த கோழழைத்தனத்தைப் பார்த்து அம்மா திட்டுவது போல் இருந்தது

அன்றிலிருந்து தினமும் மின்சார வாரிய ஊழியர்கள் அந்த கிராமத்தை ஜீப் சகிதமாய் ரோந்து வந்தனர். கரண்ட் வைக்காதபடி காத்துக் கிடந்தனர்.

ஒரு வாரந்தான் ஆனது. ஏற்கெனவே கால்பங்கு கழனியின் கரும்பைப் பதம் பார்த்த காட்டுப் பன்றிகள், இப்போது முக்கால் பங்கு கழனி கரும்பைக் கபளீகரம் செய்தது.

தலை மீது கை வைத்துக் கொண்ட குப்பன், தூக்கம் வராமல் இரவு நேரங்களில் புலம்பிக் கொண்டிருந்தான். அப்படித் தான் நேற்று புலம்பினான்.

அம்மாவின் நிழலில் வாழ்ந்த அவனுக்கு, அம்மா போதித்த தைரியமும் நம்பிக்கையும் கை கொடுக்கவில்லை. விரக்தியே அவனைத் தழுவிக் கொண்டது. எனவே தான் அம்மா வீட்டுக்குப் போய் ஏதாவது பணம் பண்டம் வாங்கி வரலாமென்று கைக் குழந்தையோடு போனாள் மல்லிகா.

அப்படித் தான் போன மாதம் ரெட்டியார் நிலத்தில் வைத்திருந்த மின்வேலியில் பழங்குடியின சேட்டு தவறி சிக்கிச் செத்துப் போனான். ஆனால் விலைமதிப்பற்ற மனித மரணத்தைப் பணத்தால் மறைத்து விட்டார் ரெட்டியார்

கோர்ட், கேஸ் என்று போனால் அந்தஸ்து என்னாவது. செத்துப் போன சேட்டு குடும்பத்துக்கு ஒரு லட்சமும், மின்சார வாரிய அதிகாரிகளுக்கு ஒரு லஞ்சமும், காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு லட்சமும் கொடுத்து, முழுப் பூசணியைச் சோற்றில் மறைத்தார்கள்

அப்போதும் அந்த சிவப்புத் துண்டுக்காரர் பிரச்சனையைக் கிளப்பினார். ஆனால் ஊர்க் கூட்டம் போட்டு நாட்டாமைகள் முடிவெடுத்தனர்.

“செத்துப் போன குடும்பத்துக்கு ஒரு லட்சம்கிறது வரப்பிரசாதம். இதக் கிளறி கொடி பிடித்துப் போராட்டம் அது இதுன்னு ஏதாச்சும் பண்ணினாக்கா ஒன்னும் கிடைக்காது. இப்ப அந்தக் குடும்பத்துக்கு யார் படியளக்க. அதனால் ரெட்டியார் கொடுக்கும் பணத்தை அந்தக் குடும்பமே ஏத்துக்கனதால இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வச்சாச்சு”

நாட்டாமை தீர்ப்பில் ஒரு லட்சத்தை வாங்கிக் கொண்டு சேட்டு குடும்பம் மட்டுமில்லாமல் பழங்குடியினர் குடும்பமே ஊர்ப் பஞ்சாயத்துக் காலில் விழுந்தது. அப்போதும் சிவப்புத் துண்டுக்காரர் எழுந்து பேச முற்படும் போது, பழங்குடியினர் குடும்பமே கையெடுத்துக் கும்பிட்டுத் தலையிட வேண்டாம் என்று கெஞ்சியது, சிவப்புத் துண்டுக்காரரை அதிர்ச்சி அடைய வைத்தது

“அன்னிக்கே பெரிய பிரச்சினையை விட்டது தப்பு. அப்ப மனுசன், இப்ப காட்டுப்பன்றி”

இப்படிச் சொன்ன மின்வாரிய அதிகாரியிடம், “அப்ப ஒரு லட்சம் கொடுக்க ஆள் இருந்தது, இப்ப ஒத்த ரூபா கொடுக்க ஆளில்லா..த்தூ..”

சிவப்புத்  துண்டுக்காரர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஜீப் பறந்து சென்றது இப்போது குப்பன் நினைவுக்கு வந்தது.

பகக்த்து வீட்டு பழைய கடிகாரம் எட்டு முறை மணி அடித்து, எட்டு மணியை உணர்த்தியது குப்பனுக்கு. விளக்கணைத்துப் படுத்த குப்பனுக்கு உறக்கம் வரவில்லை. அம்மாவே மீண்டும் மீண்டும் அவனை அழைப்பது போன்ற பிரம்மை ஆட்டிப் படைத்தது.

பாவம் மல்லிகா என்ன செய்வாள். அவள் அம்மா வீடும் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ கதை தான். அங்கேயும் மூக்கைப் பிடித்தால் ஜீவன் போகிறது. வேண்டாம் என்றால் கேட்காமல் அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறாள்

மாமியார் வீட்டுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டதாகவே உணர்ந்தான் குப்பன்.

“ச்சீ..என்ன பொழப்பு இது. அரைகாணி கரும்பு நாசமாப் போச்சு.. ஏற்கெனவே பட்ட கடன் ஸ்டேட் பாங்கில் அப்படியே இருக்கு. கரும்புக்குப் பட்ட கடன் வேறு இப்ப சேர்ந்துடுச்சி. இந்தக் கரும்பை அழிச்சிட்டு வேற ஏதாச்சும் பயிர் வைக்கனும்னா அதுக்கு வேற கடன் வாங்கனும். அம்மா, தயவு செய்து என்ன கூப்பிட்டுக்கம்மா..”

விரக்தியின் விளிம்பில் புலம்பிய மனம், குப்பனைத் தட்டி எழுப்பியது. எழுந்தவனுக்கு இருட்டில் எங்கு பார்த்தாலும் அம்மா இரு கரம் நீட்டி அழைப்பதாகவே தெரிந்தது. லைட்டைப் போட்டான்.

விளக்கு வெளிச்சத்திலும் அம்மாவே எங்கு பார்த்தாலும் தெரிந்தாள். உள்ளே சென்றவன் பூட்டாமல் மூடிக் கிடந்த  டிரங்க் பெட்டியைத் திறந்தான். மல்லிகாவை இன்று பஸ் ஏற்றி விட்டுத் திரும்பும் போது தனியார் அக்ரோ சென்டரில் பயிருக்கென்று பொய் சொல்லி கடனாக வாங்கி வந்த புத்தம் புது பூச்சிக் கொல்லி மருந்து பாட்டில் பளபளத்தது.

எடுத்துக் கொண்டு வந்தவன் தரையில் போடப்பட்டிருந்த பாயில் உட்கார்ந்தபடி சுவரைப் பார்த்தான்.

‘வா மகனே’ என இருகரம் நீட்டி அம்மா அழைப்பது போலிருந்தது. மடமடவென பாட்டிலைத் திறந்தான். பாட்டிலைக் கலக்கி வலது கையால் தூக்கினான். டமடமவென கதவு தட்டப்பட்டது.

கூடவே ‘குப்பன் தோழர்… குப்பன் தோழர்’ என அழைப்பது கேட்டது. பாட்டிலைக் கீழே வைத்து விட்டுக் கதவைத் திறந்தான். சிவப்புத்துண்டுக்காரர்‌ முகம் சுருங்கியது.

“என்ன குப்பன், பேயறைந்த மாதிரி இருக்கீங்க?”

உள்ளே போக முயலவும், தலையசைத்து அழைத்துச் சென்றான் குப்பன்.

குப்பன் சாதுரியமாக பாய்க்குச் செல்லாமல், முன்பக்க தரையிலேயே உட்காரச் சொல்ல, சிவப்புத் துண்டுக்காரும் உட்கார்ந்து கொண்டார்.

“ஒரு நல்ல செய்தி. நீங்க கலந்துக்கலன்னாலும் நாங்க விவசாய சங்கத்துல தொடர்ந்து போராடியதால் கரும்புக்கு இன்சூரன்ஸ் கட்டாதவங்களுக்கும் நிவாரணம் தர்ரதா வாக்குறுதி கொடுத்தாங்க விவசாயத் துறை அதிகாரிங்க. ரெண்டு நாள் நூறு விவசாயிகள் தொடர்ந்து நடத்துன காத்திருப்புப் போராட்டத்தில், நாம் வற்புறுத்தினபடி எழுதிக் கையெழுத்துப் போட்டே கொடுத்திருக்காங்க,தோ பாருங்க”

தாளை வாங்கி மெதுவாகப் படித்து முடிக்கவும், குப்பனின் கண்கள் கண்ணீருக்கு விடுதலை கொடுத்தன

“தோ பாருங்க, அழாதீங்க. ஆக வேண்டியதப் பாருங்க, நீங்க நாளைக்கே கரும்பு வயலோட இன்றைய நிலையப் போட்டோ எடுத்துட்டு என் கூட வாங்க. பாதிக்கப்பட்ட நம்ம ஊர் விவசாயிகள் நாளை மறுநாள் ஒன்னா சேர்ந்து, மனு போட்டோ எல்லாம் கொடுத்துடுவோம். அதிகபட்சம் 15 நாளில் பணம் கிடைக்கும். இல்லேனா தொடர்ந்து போராடுவோம். தைரியமும் நம்பிக்கையும் அவசியம் வேணும், உங்க அம்மாவைப் போல. இனிமேலாவது எல்லா போராட்டத்திலேயும் கலந்துக்குங்க”

இப்போதும் கலங்கினான் குப்பன். எழுந்த சிவப்புத் துண்டுக்காரின் விரல்கள் குப்பனின் கண்ணீரைத் துடைத்தன

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Best Deals in Amazon 👇


 

#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 

             

                         

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அன்புக்கு நான் அடிமை (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    அல்வா நாட்கள் 😂(சிறுகதை) – ✍ இந்துமதி கணேஷ்