in ,

மாறுபட்ட, வித்தியாசமான, தனித்துவமான?…(சிறுகதை) – ✍ சத்யா GP, சென்னை  

மாறுபட்ட, வித்தியாசமான, தனித்துவமான?...
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 16)

“ஐயப்பா”

காலை நாலு மணிக்கெல்லாம் அப்பா எழுப்புவது எரிச்சலைத் தந்தாலும், கொஞ்சம் படபடப்பையும் ஏற்படுத்தியது

“உன் பெரியப்பாவுக்கு கொஞ்சம் சுகமில்லையாம், அண்ணி பதறிப் போய் போன் அடிச்சா. நெஞ்சுவலியாம், மணிவாசகத்துக்கிட்ட காட்ட சொல்லிருக்கேன், அவர்கிட்டயும் போன் பண்ணி சொல்லிட்டேன்.  நீ ஏழரை மணிக்கு போய் மெடிக்கலை திறந்துரு, நம்ம டிஸ்பென்சரி டாக்டர் எட்டு மணிக்கு கரெக்டா வந்து பத்து மணிக்கு டியூட்டிக்கு கிளம்புறவர். அவர் வரும் போது மெடிக்கல்ஸ் சாத்தி இருந்தா நல்லா இருக்காது”

“திருச்சி போறீங்களாப்பா? பல்லு விளக்கி டீ குடிச்சுட்டு நானும் வரேன், வண்டில புது பஸ் ஸ்டாண்டுக்கு உங்களை கொண்டு போய் விட்டுடறேன்”

“உனக்கெதுக்கு டா சிரமம், முருகன் கோயில் பஸ் ஸ்டாண்ட் போனா ரூட் வண்டி வரும்… அஞ்சே நிமிஷம் பஸ் ஸ்டாண்ட் போயிருவான்”

“இந்த நேரத்துக்கு பட்டுகோட்டை வண்டி அதிகம் வராதுப்பா, இதா நான் பல்லு விளக்க கிளம்பிட்டேன், அம்மாவை எனக்கும் சேர்த்து டீ போட சொல்லுங்க”

முருகன் கோயிலிலிருந்து சிறிது தொலைவில் எதிர்ப்புறம் டீக்கடை, தள்ளி ஒரு பெட்டிக்கடை, பால் பூத் இது தவிர நாஞ்சிக்கோட்டை ரோட்டில் வேறு கடைகள் திறந்திருக்காது.

குறிப்பிட்ட கடைகளில் ஜன வருகைக்கு பஞ்சமும் கிடையாது. ஐயப்பனுக்கு அச்சூழல் மிகவும் பிடிக்கும். டீ-மானிடைசேஷன் நேரத்தில் காலை கூட்டம் இருக்காது என்று சொல்லி, மூன்றரை நான்கு மணியளவில் வந்து டீ குடித்து அருகே உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுத்த நாட்களை நினைத்துப் பார்த்தான்

அப்போதிருந்து தான், அதிகாலை நேரத்தில் வேலை நிமித்தமாக எங்காவது டூவீலரில் பயணிப்பதை விரும்பத் துவங்கினான்.

அப்பாவை வழியனுப்பிவிட்டு, புது பஸ் ஸ்டாண்டிலிருந்து வண்டியை வெளியே கொண்டு வந்து ஆர்.ஆர்.நகர் பேருந்து நிறுத்தம் வழியாக செல்ல ரோட்டை க்ராஸ் செய்து, பெட்ரோல் பங்க் மறுபுறம் சற்று தள்ளி இருந்த டீக்கடை மற்றும் பெட்டிக் கடையை நோட்டம் விட்டான்

அன்றைய தந்தி பேப்பரில் என்ன சங்கதி என்பதை சொல்லும் தொங்கும் விளம்பரத்தாள், மேலே பாய்லர் புகை. பேப்பர் வாங்கி வண்டியில் வைத்து, டீ குடித்தபடி மொபைல் நெட்டை உயிர்பித்தான்

குமாரின் வாட்ஸ் அப் செய்தி “வந்தாச்சு… பழைய பஸ் ஸ்டாண்ட். லாட்ஜ்… ரூம் நம்பர்…” அலைபேசி தொடுதிரையில் குமாரின் எண்களை ஒற்றி எடுக்க ஆரம்பித்தான்

“குமார்… எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன்… என்ன டா இந்த நேரத்துல போன்?”

“இந்த நேரத்துல தானே வாட்ஸப் அனுப்பி இருக்க, மணி நாலம்பது”

“அது சரி நாலரைக்கு வந்தேன், ரூம் போட்டு திங்க்ஸ் எல்லாம் வெச்சுட்டு உனக்கு டெக்ஸ்ட் பண்ணேன். டிவி பார்க்கறேன், ஸ்லீப்பர் பஸ்ல நல்ல தூக்கம், இப்போ கலைஞ்சுட்டு… தூக்கம் வரல”

ஐயப்பனுக்கு ஒரு யோசனை வந்தது. இவனைப் பார்த்து அரை மணி நேரம் பேசி வீட்டுக்கு வந்து குளித்துப் புறப்பட்டால் மெடிக்கல்ஸ் திறக்க எதுவாக இருக்கும்

சம்பத் வேறு பெங்களூரில் இருந்து வந்திருக்கிறான். குமார், சம்பத், கணபதி, ஐயப்பன்… முடிந்தால் ஒரு நாள் பழைய செட்டுடன் தஞ்சையில் ரவுண்ட் கட்டி சுற்றிப் படம் பார்த்து… 

“நீ ரூம்ல இரு குமார் நான் வரேன்”

“வா வா”

காலிங் பெல்லை அழுத்தியவுடன், “வா டா திறந்து தான் இருக்கு” உள்ளே இருந்து குமாரின் குரல்.

ஏஸி பதினேழில் ஓடிக் கொண்டிருந்தது. ஷார்ட்ஸ், கை இல்லாத பனியனுடன் கட்டிலில் படுத்திருந்தான். டிவியில் எச்.பி.ஓ. குமார் கையில் மொபைல் உயிர்ப்புடன் இருந்தது

“என்னடா காலைல தூங்காம இருக்க, என்னாச்சு?”

“பெரியப்பாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு அப்பா திருச்சி கிளம்பினார், நான் தான் வண்டில கொண்டு போய் புது பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு வந்தேன். ரிட்டர்ன் வந்து தந்தி பேப்பர் வாங்கும் போது, உன் வாட்ஸ் அப் மெசேஜ்”

“தம் போடுறியா?”

“ஏஸியை ஆஃப் பண்ணி கதவை சாத்திட்டு பால்கனிக்கு வா, அடிக்கலாம்”

“அடேங்கப்பா, நீ மாறவே இல்லை டா”

மொபைலை கையில் எடுத்த குமாரைத் தடுத்து, “காலைல அஞ்சே கால் மணிக்குமா? வெச்சுட்டு வா, ஒன்னும் ஆவாது”

“நம்ம தஞ்சாவூர் எப்படி டா இருக்கு?”

“ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் வந்த, அதுக்குள்ள என்ன மாறிடப் போகுது? அப்படியே தான் இருக்கு. அம்மா, அப்பாவையும் கூட்டிட்டு போயி ரெண்டு வருஷம் ஆச்சு, வைஃப்பையும் பிள்ளைகளையும் பக்கா மதராஸி ஆக்கிட்ட”

குமார் சிரித்தான்

பொதுவான பேச்சு முடிந்து குமாரின் சினிமா பற்றிய பேச்சு துவங்கியது. குமாரில் இருந்த ‘குமார்’ வெளிப்பட்டான்.

“படிக்கிற புத்தகம், பார்க்கும் திரைப்படம், கேட்கும் இசை, கிரகிக்கும் ஒவ்வொன்னும் உலகளாவிய படிமத்தின் சேர்மானமா இருக்கணும். சிந்தனையை, செயல்பாட்டை, ரசனையை உலகளாவிய உன்னத படைப்புகள் நோக்கி திருப்பணும்.

நுட்பமான ஊடுருவும் அவதானிப்பு அவசியம். ரஷ்ய, கொரிய, ஈரானிய படங்கள்… தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளை நுகராதவன் மனிதனாக வாழவே தகுதியற்றவன்.  

அசிஸ்டண்ட் டைரக்டரா இருக்கற நான் கூடிய சீக்கிரம் இயக்குனர் ஆகப் போறேன். புதுசா அறிமுகமாகும் இயக்குனரின் முதல் படம் பிரமாதமா இருக்கும், ஆனால் அடுத்தடுத்த படங்கள் ஃபிளாப் ஆகும்.

அதுக்கு காரணம் தன்னோட சிந்தனை, திரைக்கதைக்கான மெனக்கெடல் இப்படி எல்லாத்தையும் முதல் படத்திலேயே வெளிப்படுத்திடுவான். அடுத்தடுத்து படங்களுக்கு திரைக்கதை அமைக்கத் திணறுவான்.

இப்பவே நான் அஞ்சு ஸ்க்ரிப்ட் பக்காவா டிராஃப்ட் ரெடி பண்ணி கைல வெச்சுருக்கேன். இதைத் தவிர ஒன்பது ஸ்டோரி நாட் மைண்ட்ல இருக்கு. இந்த குமார் சினிமால சொல்லி அடிப்பான். வெயிட் & ஸீ”

குமார் பேச்சின் முதல் பத்தி குழப்பமாக இருந்தது. என்ன சொல்ல வருகிறான் என்பதே விளங்கவில்லை. இரண்டாம் பத்தி நார்மலான மொழியில் இருந்ததால் புரிந்தது.

முதல் பத்தியை புரிந்து கொண்ட அளவுக்கே ஒரு சந்தேகம் எட்டிப் பார்த்தது. அதைக் குமாரிடம் கேள்வியாக்கினான்.

“தேடித் தேடி வெளிநாட்டு படங்களைப் பார்த்து வெளிநாட்டு புக்ஸைப் படிச்சு அதுல இருந்து படம் எடுப்பியா குமாரு?”

“நீ இன்னும் பக்குவப்படணும் ஐயப்பா”

“நான் அப்படித் தான்”

“புதுசா என்ன படம் பாத்த?”      

“தியேட்டர்ல போய் பார்த்த படம் கோமாளி, ஜெயம் ரவி பின்னி எடுத்துட்டான்”

“ஒரு வாட்டி ஃபோன்ல பேசும் போது கூட சொன்ன. ஜெயம் ரவி சார் காமெடி நல்லா பண்ணி இருக்கார், உன்னோட சினிமா டேஸ்ட்… வேணாம் எதுவும் சொல்றதுக்கில்ல”

“ஜெயம் ரவி சார்… ஹஹா”

“எதுக்கு டா சிரிக்கிற?”

“இந்த புது பழக்கத்தை இன்னும் விடலியா? ஸ்கூல் காலேஜ்னு இல்லை தஞ்சாவூர்ல எங்க கூட சுத்தும் போது நீயும் எங்களை மாதிரி தான இருந்த”

“மாறுபட்ட விஷயங்கள் மேல ஈர்ப்பு, மேம்பட்ட ரசனையை வளர்துக்கறது, தனித்துவமா இருக்கறது, இப்படி இருந்தா எல்லார் மேலயும் மரியாதை வரும். உனக்கு அதெல்லாம் புரியாது”

“சரி சரி பெங்களூர்ல இருந்து சம்பத் வந்திருக்கான், ஒரு நாள் பழைய மாதிரி ஊரை சுத்தி லந்து விடலாம், நீ எப்போ ஃபேஸ்புக்ல என்னை ஃப்ரெண்ட்டா ஏத்துக்குவ?”

“அடேய் அதுல லிமிட் ஐயாயிரம் தான். முழுக்க முழுக்க சினிமா ஆளுங்க நட்பில் இருக்காங்க… நினைச்சா உன் கிட்ட போன்ல பேச முடியும். நீ ஃபாலோயரா இரு, போஸ்ட்ஸ் பத்தி கருத்துகளை போன்ல சொல்லு. அதைப் பத்தி எல்லாம் பேசறதே இல்லை”  

“இந்த மாதிரி எல்லாம் எப்படி உன்னால எழுத முடியுதுன்னு ஒரு பிரமிப்பு வருது, வாயடைச்சு போய்டறேன்”

“தரணி திரைப்பட விசிறிங்கற தலைப்புல நான் எழுதுற வோர்ல்ட் சினிமா கட்டுரைகளுக்கு என்ன ரெஸ்பான்ஸ் தெரியுமா? போன வாரம் ‘யட்சியின் மனப்பிறழ்வு’ன்னு 59 பக்க சிறுகதை ஒண்ணு, என் ப்ளாக்ல எழுதி லிங்க் போட்ருந்தேன் பாத்தியா? படிச்சியா?”

ஐயப்பனுக்கு அடி வயிறு கலங்கியது… ஒரு பக்கம் முழுதாக அந்தக் கதையை படிப்பதற்குள் கதறித் துடித்தது நினைவுக்கு வந்தது. வார்த்தைப் பிரயோகம் அனைத்தும் உச்சந்தலையில் கூரான ஆயுதம் கொண்டு அடிப்பது போல் இருந்தது

“…ம்… படிச்சேன் சொல்லு”

“கதையைப் படிச்சுட்டு பெரிய ப்ரொட்யூஸர் போன் பண்ணி ஒன் ஹவர் பாராட்டினார். இந்தக் கதையை திரைக்கதையை கச்சிதமா டிராஃப்ட் பண்ணு, சித்திரை முடிஞ்சு பூஜை போட்டு ஷூட் போகலாம்னு சொன்னார், ஃபார்மாலிட்டிக்கு அட்வான்ஸ்னு ஒரு லட்ச ரூபாய் தந்திருக்கார்”            

“நல்ல விஷயம், வாழ்த்துகள்… வீட்டுக்கு புறப்படுறேன்… கடையை ஓபன் செய்யணும். அப்பா எப்போ வருவார்னு தெரியல, நீ எவ்வளவு நாள் ஜாகை?”

“இன்னிக்கு திருவையாறுல சின்ன வேலை, நாளைக்கு லோக்கல் கோயில்கள். நாளை மறுநாள் அம்மாபேட்டை வரைக்கும் போகணும்… முடிஞ்சு நைட் புறப்பாடு”

“மெட்ராஸ்ல நிரந்தரமா குடி போனாலும் ஊரை மறக்காம, ரூம் போட்டு தங்கி… உன்னை நினைச்சா பெருமையா இருக்கு”

“வேர்களைத் தேடி அடிக்கடி வரணும், சொந்த மண்ணை இங்க வந்து சுவாசிக்கிறேன் பாரு… இது தான் ஆக்சிஜன். அப்படியே உள்ள ஸ்டோர் ஆகி சென்னையில் சுவாசிக்க வாழ உதவும். சேமிப்பு குறையும் போது நம்ம ஊருக்கு வந்து சார்ஜ் ஏத்திக்கிறேன்”

‘பெருமையா இருக்கு… சொல்லி இருக்கக் கூடாது’ என ஐயப்பன் நினைத்தான்.

மதியம் இரண்டு மணிவாக்கில் குமார் ஐயப்பனுக்கு செல் அடித்தான்.

“லஞ்ச் எப்படி? நான் இப்போ தான் ரூமுக்கு வந்தேன், சேர்ந்து சாப்பிடலாமா?”

“அப்பா நைட் வருவேன்னு சொல்லிட்டார், கடைல தான் இருக்கேன். பக்கத்து வீட்டு பையன் லஞ்ச் தந்திட்டு போனான், நீ கடைக்கு வாயேன், வீட்டு கேரியர் சாப்பாடு தாராளமா ரெண்டு பேர் சாப்பிடலாம்”

“என்னால வல்லம் வரைக்கும் வர முடியாது… நீ சாப்பிடு. ஹோட்டல்ல சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கறேன்”

ஐயப்பன் சாப்பிட்டு முடித்து பாதி சாப்பாட்டை பக்கத்து அண்ணாச்சி கடை பணியாளரிடம் தந்தான். பெங்களூரு சம்பத்துக்கு போன் அடித்தான்.

“இன்னிக்கு காலைல குமார் வந்துட்டான், இந்த முறை நம்ம நாலு பேரும் சேர்ந்து ஒரு நாள் சுத்தணும். நீயும் ஊருக்கு வந்துருக்க, எப்போ ஃப்ரீன்னு சொல்லு, கணபதி கிட்டயும் பேசறேன்”

“…”

“நாளை மறுநாள் காலைல குமார் அம்மா பேட்டை போறான், நாளைக்கு உனக்கு செட் ஆவாதா?

“…”

“சரி, அவன்கிட்ட பேசறேன். நாளை மறுநாள் ஈவ்னிங் எல்லாரும் சேர்ந்து மீட் பண்ணுவோம், அவனை பஸ் ஏத்திவிடுவோம்”

“…”

“அந்த பேட்டி ஏற்பாடு மேட்டரா? இன்னும் சொல்லல. கிளம்பறதுக்குள்ள கேட்கலாம்னு இருக்கேன், என் நீண்ட நாள் ஆசை”   

கணபதிக்குப் போன் செய்தான்

“குமார் இன்னிக்கு தான் ஊருக்கு வந்துருக்கான், சம்பத்கிட்டயும் பேசினேன். நாளை மறுநாள் அவனும் ஃப்ரீயாம், நாம பழைய மாதிரி ஒரு ரவுண்ட் அடிப்போமா?”

“ஐயப்பா புரிஞ்சுக்க, அவன் இயல்பா பேசுற வரை ஓகே. இலக்கியம், உலக சினிமா, கருத்தியல், குறுக்கு வெட்டு தோற்றம், முதலாளித்துவம், மார்க்ஸியம்னு ரீபோக் ஷூ, மினரல் வாட்டர், பெரிய ஸ்க்ரீன் லேட்டஸ்ட் மொபைல் போன் வெச்சுக்கிட்டு பேசுவான். எனக்கு ஒத்துவராது. கடைல வேலையா இல்லை? கணபதி ஆயில் மில் சப்ளை வேற எடுத்துருக்கோம்”

“இதெல்லாம் ஒரு மேட்டரா? நீ வா டா”

“சாரி ஐயப்பா. எப்போ பாரு, ‘உன் டேஸ்ட் சரியில்லை, பார்வை சரியில்லை, பெண்களை நீ மதிக்கிறதில்ல… புரையோடிப் போன புத்தியை மாத்து, வெளிய வா…’ இப்படி கடுப்பு மயிரை ஏத்துற மாதிரி பேத்துவான். நானும் பதிலுக்குப் பேசி… இருக்கற ஃப்ரெண்ட்ஷிப்பும் புட்டுக்க வேணாம். போன் பண்ணி நலம் விசாரிக்கிறேன், கடைக்கு கூட்டிட்டு வா, கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிடுவோம், பேசுவோம்”

மறுநாள் காலை குமாரின் போன் அனைத்தையும் மாற்றியது

“டேய் நாளைக்கு காலைல மதுரை போறேன், ஒரு முக்கிய வேலை… முடிச்சுட்டு அப்படியே சென்னைக்கு பஸ் ஏறிடுவேன்”

“சம்பத் நாளைக்கு ஈவ்னிங் பாக்கலாம்னு சொன்னான், நீ என்ன டான்னா…”

“பரவால்ல விடு”       

“அப்பாகிட்ட சொல்லி பன்னெண்டு மணிக்கு கடைல இருந்து கிளம்பிடறேன், ரூமுக்கு வரேன், நம்ம வீட்ல சாப்பிடலாம்”              

“இல்லை வெளிய என்வி சாப்பிடலாம்”

“டேய் இன்னிக்கு செவ்வாய்கிழமை, கவுச்சி சான்சே இல்லை. கோயில் போலாம்னு சொன்ன, இப்போ அசைவம்னு பேசுற?”

“கோயில் கேன்சல்ட்”

“ஒண்ணு செய், சாப்ட்டு ரூம்ல தூங்கு. ஈவ்னிங் அஞ்சு மணிக்கு வரேன், சரியா?”

அஞ்சு மணிக்கு ரூமுக்கு சென்ற போதும், தூக்க கலக்கத்தில் தான் இருந்தான் குமார். டீ, சிகரெட் என ரூமிலேயே ஆறு மணி ஆனது… குமார் குளித்து ஜீன்ஸ் டீ ஷர்ட் என அலங்கரித்து கிளம்பிய போது மணி ஏழு…

“இப்ப எங்க போறோம்?”    

“கணபதியை போய் கடைல பாக்கலாம். கீழவாசல் பக்கம், நெக்ஸ்ட் சம்பத் வீட்டுக்கு போகலாமா? அவன் நைட் எட்டரை மணிக்கு வீட்டுக்கு வந்துருவேன்னு சொன்னான்”

“வீடு வேணாம் ஐயப்பா, கணபதி கடைக்கு போவோம். அடுத்து டெம்பிள் டவர் போய்டலாம், சரக்கு அடிக்கணும்”

கடை என்பதால் கணபதி அடக்கி வாசித்தான். குமார் வாசிக்கவே இல்லை. சேர்த்து வைத்து டெம்பிள் டவரில் குமாரின் கச்சேரி அமர்க்களமாக நடந்தேறியது.

“’இறுதியில் பார்ப்பனீயம் தலித்தியத்தை எப்படி காவு வாங்கியது’ என்பதை பல தரவுகளுடன் ஆதாரப்பூர்வமா நிறைய ஆராய்ச்சி செய்து ஒரு கூர் பார்வையுடன் விரிவான கட்டுரை எழுதி இருக்கேன். அடுத்த வாரம் ‘டெட் பால்பாயிண்ட்’ பத்திரிகையில் வெளிவருது” என்று முடித்தான்.   

ஹோட்டலை விட்டு வெளியே வந்தவுடன் ஐயப்பன் தன்மையாக கேட்டான்.

“டின்னருக்கு சாந்தி பரோட்டா போவோமா?”

“விட்டா தயிர் சாதம் சாப்பிட சொல்லுவ. பக்கத்துல ஒரு தம் போடுவோம், டைம் பாஸ் பண்ணிட்டு ராமநாதன்கிட்ட போவோம், இட்லிக்கு சேர்வை சேர்த்து அடிக்கணும்”

“… நான்…”

“தெரியும் டா… செவ்வாய் கிழமை நீ கவுச்சி சாப்பிட மாட்ட, செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்னு எத்தனை நாள் அசைவம் கிடையாது? என்னிக்கு தான் சாப்பிடுவ?”

“ஒன்லி புதன். அதுவும் கிருத்திகை, சஷ்டி, சதுர்த்தி, பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமின்னா டச் பண்ண மாட்டேன், உனக்குத் தான் தெரியுமே”

“விளங்கிரும் டா”

“மண் வாசனை சார்ஜ் ஆகி உடம்பு முழுக்க இருக்கு, அதை ஏன் குமாரு கெடுத்துக்கணும்?”

குமார் முகம் கறுத்தது… வண்டியில் அழைத்துக் கொண்டு ரூமில் இறக்கி விட்டான்.

“நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்புவ? ஒன் ஹவர் முன்ன கால் பண்ணு, புது பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விடுறேன்”

“கண்டிப்பா”

“உன்கிட்ட ஒரு உதவி கேட்கணும்னு நினைச்சேன், இப்போ வேண்டாம் நாளைக்கு கேட்கிறேன்”

“பரவால்ல சொல்லு ஐயப்பா”

“நாளைக்கு சொல்றேன்… குட் நைட்”

மறுநாள் ஐயப்பன், ரூமுக்குச் சென்றான். முக்கால் மணித்தியாலம் கழித்து இருவரும் புது பஸ் ஸ்டாண்ட் சென்றார்கள். பஸ் புறப்படாது நிற்க, குமார் ஆரம்பித்தான்.

“என்னமோ உதவி கேட்ட, தயங்காம சொல்லு”

“அவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், செம ஆக்டிங், முக்கியமா அந்த பதினாறு கேரக்டர்ஸ், மறக்கவே முடியாது… அவங்களை மீட் பண்ணி அரை மணி நேரம் பேசணும், கேள்விகள் கேட்கணும்”

“வழக்கமான நடிக்க வரலன்னா என்ன ஆகி இருப்பீங்க? என்ன ஸ்வீட் பிடிக்கும்? உங்க அழகின் ரகசியம் என்ன? இப்படி இல்லாம நடிச்ச கேரக்டர்ஸ் பத்தி பேசணும். ஒவ்வொரு கேரக்டர் எப்படி வித்தியாசமா நடிக்கிறாங்க?  என்ன ஹோம் வொர்க் செய்யறாங்க? இப்படி நிறைய கேள்விகள் இருக்கு குமாரு… அவங்களை மீட் பண்ண ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தர முடியுமா?”

“உன் ஃபேவரிட்… ஹஹா யாரு அவளா? உனக்கு வேற ஆளே கிடைக்கலியா? போயும் போயும் அந்த ஐட்டம், அந்த கேவலமான, பாலிடிக்ஸ் ஆள் கூட எல்லாம் அவ காசுக்கு? அந்தக் கதை உனக்கு தெரியுமா? ஆசையா இருந்தா கொஞ்சம் பணம் தேத்திக்க, மேட்டருக்கு என் சோர்ஸ் மூலமா அவகிட்ட பேசறேன், ஹவர்ஸ் கணக்காம் ஓகே வா?”

பஸ் புறப்பட்டது… குமார் கை அசைத்தான். முகத்தில் எள்ளல் சிரிப்பு மீதம் இருந்தது.

வண்டியை எடுத்துக் கொண்டு ரோட்டைக் கடந்து பெட்ரோல் பங்க் மறுபுறம் இருந்த டீக்கடைக்கு போன ஐயப்பன், சிகரெட் வாங்கி பற்ற வைத்தான். படபடப்பு குறைந்த மாதிரி இருந்தது.

மொபைல் நெட்டுக்கு உயிர் கொடுத்து, பேஸ்புக்குக்குள் நுழைந்தான். சர்ச் போய் குமார் பெயரை டைப்பினான். அன் ஃபாலோ செய்து, யோசித்தான். பின் ப்ளாக் செய்தான்

தற்காலிகமாக வெயில் மறைந்ததால், நிழல் பிம்பம் காணாமல் போயிருந்தது.    

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

  

       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

வேர்கள் (சிறுகதை) – ✍ சிபி சரவணன், சென்னை

தேசத் துரோகி (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து