sahanamag.com
சிறுகதைகள்

தேசத் துரோகி (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து

மாத போட்டிக்கான பதிவு (அக்டோபர் 2021)

கேஷ்வரனின் குடும்பம் சென்னையில் குடியேறி இரண்டு தலைமுறைகளாகி விட்டது. பியூசி படிப்பு முடித்தவுடன் ஆபிஸ் உதவியாளராக ரயில்வே பணியில் சேர்ந்தவர் 

அவரின் உழைப்பு அவருக்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த குடும்பத்திற்கே பேருதவியாக இருந்தது. உடன் பிறந்தவர்களின் படிப்பு, கல்யாணம், காட்சி என்று, தன்னால் முடிந்த அளவு அனைவருக்கும் உதவி செய்தார். ஓய்வுக்கு பின்னரும் அப்படித் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் மகேஷ்வரன்

அவருக்கு ஏற்றார் போலவே அவரது மனைவி மல்லிகாவும் இருந்தார். இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்த மகன் குமரன் ரயில்வேயில் கிளரிகல் வேலையிலும், இளைய மகன் சீனு கோச் வயரிங்கிலும் வேலை பார்க்கிறார்கள்

ரயில்வேயில் வேலை கிடைத்ததால், சென்னை பெரம்பூர் பகுதியிலேயே சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி, ஹவுசிங் லோன் போட்டு முப்பது வருடங்களுக்கு முன்பே இரண்டு பெட்ரூம்கள் கொண்ட வீட்டை கட்டி முடித்து விட்டார் மகேஷ்வரன்

ஆனால் தற்போது மகன்கள் இருவரும் சேர்ந்து இன்னும் இரண்டு மாடிகள் கட்டி விரிவாக்கி, மகேஸ்வரனுடனே வசித்து வருகிறார்கள்

ஓய்வு பெற்ற பிறகு, தான் வசித்து வரும் ரங்கசாயி தெருவில் உள்ள சிவன் கோயிலில் தான் பெரும்பான்மையான நாட்களை கழித்து வருகிறார் மகேஷ்வரன்                 

அன்றும் அதேப் போல் கோவிலில் அமர்ந்திருந்தவரை நோக்கி வந்தாள் ஆனந்தி

“அப்பா எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?’’                                                      

“நான் நல்லாயிருக்கேன்மா? நீ நல்லா இருக்கியா? என்ன இன்னைக்கு காலையிலேயே வந்துட்ட?’’                                         

“அப்பா இன்னைக்கு பிரதோஷம்ல, அதான் பால் வாங்கிட்டு வந்திருக்கேன்’’            

“கொடு இப்படி, ஐயர் வர லேட்டாகும். வந்தவுடனே நான் கொடுத்துடுறேன்”              

“சரிங்கப்பா… நான் சாயங்காலமா வர்றேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள் ஆனந்தி

ஆனந்தி, எதிர் வீட்டுப் பெண். அவளது கணவன் சென்னையில் ரயில்வே துறையில் தான் வேலை பார்க்கிறார். எப்போதும் கலகலப்பாக பேசுபவள். ஒரே பையன், படித்து விட்டு ஒரு பிரைவட் கம்பெனியில் வேலை செய்கிறான்

பிரதோசம் என்றால், மகேஷ்வரன் கோயிலே குடி என்று தான் கிடப்பார். அந்த ஏரியாவில் அவரை தெறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது                         

மாலை ஆறு மணி

கோயம்பேட்டிலுள்ள சிவன் கோயிலில் பிரதோசம் ஆரம்பமானவுடன், ரங்கசாயி தெருவிலுள்ள சிவன் கோயிலிலும் பூஜைகள் ஆரம்பமாகின. ரிடையர் ஆன பிறகு, சிவபக்தனாகவே மாறிவிட்டார் மகேஷ்வரன்  

கழுத்தில் உத்திராச்சை கொட்டை, நெற்றியில் திருநீர் பட்டை, கையில் சிவபுராண புத்தகமென, கோயிலின் கருவறைக்கு முன்பாக அவர் வயதையொத்த நண்பர்களுடன் அமர்ந்திருந்தார்

அபிஷேகம் ஆரம்பமானது. சிவனுக்கு பாலாபிஷேகம் தொடங்கி, வரிசையாக பன்னீர் சந்தனம் திருநீர் அபிஷேகம் என வரிசையாக நடந்து கொண்டிருந்தது

பெருசுகளும் சிறுசுகளுமாக, கோயில் காம்பவுண்டுக்குள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆறு மணிக்கு தொடங்கிய பூஜைகள் முடிய, இரவு எட்டு மணி ஆகியது

குடும்பம் குடும்பமாக வந்திருந்தவர்கள், வரிசையில் நின்று பொங்கலையும், சுண்டலையும் வாங்கிக் கொண்டிருந்தார்கள்                                            

“என்ன ஆனந்தி சுண்டல் வாங்கிட்டு வந்திட்டியாம்மா?” என மல்லிகா கேட்க

“ஆமாமா நான் போய் அப்பாட்ட வாங்கிட்டு வந்துட்டேன் இந்தாங்க” என்றாள் ஆனந்தி

“என்ன ரமாண்ணி ரேகாண்ணி, நீங்க ரெண்டு பேரும் போய் வாங்கிட்டு வரவேண்டியது தான?’’ என ஆனந்தி கேட்க

“ம்ம் நாங்கப் போனா அவ்ளோ தான், மாமா எங்கள உண்டு இல்லன்னு பண்ணிடுவாங்க. அதான் நாங்க காயத்ரிய அனுப்பி வச்சிருக்கோம்” என்றாள் ரமா

ரமாவும் ரேகாவும், மாமனார், மாமியாரின் மனங்கோனா மருமகள்கள்

மூத்தவன் குமரனுக்கு ஒரே மகன், பெங்களுருவில் வேலை செய்கிறான். சின்ன மகன் சீனுவின் மகள் தான் காயத்ரி

இன்ஃபொர்மேசன் டெக்னாலஜி முடிச்சி சென்னையில் ஒரு பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். அவள் மீது ஆனந்திக்கு ரொம்பப் பிரியம்.                                                        

“அம்மா இந்தாங்க நீங்களும் பெரியம்மாவும் எடுத்துக்கோங்க. ஆச்சி இந்தாங்க, ஆண்டி நீங்களும் எடுத்துக்கோங்க” என பிரசாதத்தை நீட்டினாள் காயத்ரி

“ஆச்சி… நான் போய் வரிசையில நின்னுட்டு தட்ட நீட்டினேனா, தாத்தா தட்டுல பொங்கல போடும் போது நிமிந்து பார்த்துட்டு முறைச்சாரு. நான் சத்தம் போடாம வந்துட்டேன், நைட்டு வீட்டுல வந்து இருக்கு. எனக்கு என்ன ஆகப் போகுதுன்னே தெறியல” என்றாள் காயத்ரி

“நீ ஒங்க தாத்தாவோட செல்லமாச்சே, உன்னை ஒண்ணும் சொல்ல மாட்டார்” என்றாள் மல்லிகா

“காயத்ரிமா… ஆண்டிக்கு இன்னும் கொஞ்சம் சுண்டல் வாங்கிட்டு வாயேம்மா”

“இன்னொரு தடவை நான் போய் நின்னேன்னா தாத்தா என்னைய திட்டுவாரு, வாங்க ஆண்டி ரெண்டு பேரும் போய்ட்டு வரலாம்” என காயத்ரி அழைக்க

“ஏண்டிமா பொங்கல் தான தாத்தா கொடுக்குறாரு, சுண்டல் அப்பா தான கொடுக்கறான், போய்ட்டு வாம்மா” என்றாள் பாட்டி

காயத்ரி நகர்ந்ததும், “அம்மா நான் ஒண்ணு கேட்கப் போறேன், நீங்க என்னைய தப்பா நினைச்சிடாதிங்க” என ஆனந்தி யோசனையாய் பார்க்க        

“என்ன ஆனந்தி பேசற நீ. நான் எப்பவுமே உன்னை எம் பொண்ணு மாதிரி தானே பாக்கறேன், புதிர் போடாம சொல்லுமா ?’’ என்றார் காயத்ரியின் பாட்டி

“அம்மா இன்னைக்கு ப்ரதோஷம், நல்ல நாள்… நாம எல்லோருமே கோயில்ல ஒண்ணா உட்கார்ந்திருக்கோம் அதனால…’’ என ஆனந்தி தயக்கத்துடன் நிறுத்த                                            

“அதனாலென்ன, சொல்லு’’ என ஊக்கினார் பாட்டி 

“எம் பையனுக்கு காயத்ரிய ரொம்ப புடிச்சிருக்கும்மா. அவனுக்கு மட்டுமில்ல, எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் கூட ரொம்ப புடிச்சிருக்கும்மா. அதான் முதல்ல ஒங்க மூணு பேர்கிட்டயும் இன்னைக்கு கோயில்ல வச்சி கேட்றலாம்னு கேட்டுட்டேன்மா, தப்பா நினைச்சிடாதீங்க’’ என ஆனந்தி எதிர்பார்ப்புடன் பார்க்க

“அப்பா அம்மா அண்ணன் அண்ணினு சும்மா கூப்பிட்ட நீ, அந்த உறவுகள உண்மையாக்கிக்க பாக்குற, இதில தப்பா நினைக்கிறதுக்கு ஒன்னுமில்லம்மா” என்றவர், மருமக்களின் பக்கம் திரும்பி, “ரமா ரேகா ஒங்க ரெண்டு பேருக்கும் சம்மதமா?’’ எனக் கேட்க இருவரும் சம்மதமாய் தலையை ஆட்டினார்கள்

“எங்க எல்லாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லம்மா, ஆனா எங்க வீட்ல எந்த முடிவு எடுக்கனும்னாலும் ஒங்கப்பா தான் இறுதி முடிவு எடுப்பார். நாங்க எல்லோரும் அவர்ட பேசிட்டு முடிவ சொல்றோம்மா” என்றார் மல்லிகா பாட்டி

கோயிலில் கூட்டம்  மெல்ல மெல்ல கலையத் தொடங்கியது. கோயிலுக்கு அருகேயுள்ளவர்கள் மட்டுமே இருந்தார்கள். மகேஷ்வரன் குடும்பத்தாரும்  பிரசாதங்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடையை கட்டினார்கள்

கோயில் நடை சாத்தியப் பின் தான் மகேஷ்வரன் வீட்டிற்கு செல்வது வழக்கம். அன்றைய தினம் உள்ளங்கள் குளிர, அனைவரும் வீட்டிற்கு சென்றார்கள்.                         

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை                                                              

எல்லா ஞாயிறுகளிலும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவை மல்லிகா கையில் சாப்பிடுவது வழக்கம். அன்று மதியமும் அப்படி தான் எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தனர்

“என்ன பெரியவனே இன்னும் கொஞ்சம் மீன் குழம்பு ஊத்தட்டுமா?’’ என மல்லிகா கேட்க

“போதும்மா… போதும் வேணும்னா நானே ஊத்திக்கறேன்மா” என்றான் மகன்

“காயத்ரிய எங்கம்மா காணோம், சாப்பிட்டாளா இல்லையா?’’ என மகேஸ்வரன் கேட்க

“அவ லேசா தலைய வலிக்குதுன்னா… அதான் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா. இப்ப வந்திருவாங்க” என்ற மல்லிகா, “என்னங்க… ஒரு முக்கியமான விசயம் கேட்கலாமாங்க?’’                          என கணவனை பார்த்தார்

“என்ன கேட்கப் போற? கேளு” என்றார் மகேஷ்வரன்

“ஒரு சந்தோசமான விசயம்ங்க”

“சரி… சந்தோஷமான விசயத்தை எல்லோர்டேயும் சொன்னா நாங்களும் சந்தோஷப்படுவோம்ல. சீக்கிரமா சொல்லுடி, ஏன் தயங்குற?’’                         

”நம்ம எதிர்வீட்டு ஆனந்தி இருக்காள்ல, அவ நேத்து கோயில்ல வச்சி எங்கிட்ட ஒரு விசயம் கேட்டாங்க. அதப் பத்தி தான் கேட்கலாம்னு” என மல்லிகா தயக்கமாய் நிறுத்த 

அதுவரையில் குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மகேஷ்வரன், தலையை நிமிர்த்தி “என்ன?” என்றார்

“ஒண்ணுமில்லங்க, ஆனந்திக்கும் அவ குடும்பத்துக்கும் நம்ம காயத்ரிய ரொம்ப புடிச்சிருக்காமா. நேத்து எங்ககிட்ட கோயில்ல வச்சி கேட்டா?’’ எனவும்

“ஓ… நேத்து கோயில்ல ஒண்ணா உக்காந்து இதப் பத்தி தான் பேசிட்டு இருந்தீங்களோ? அது சரி, ஆனந்தி கேட்டதுக்கு நீ என்ன பதில் சொன்ன?’’ எனக் கேட்டார்

“எதாயிருந்தாலும் மாமாகிட்ட கேட்டுத் தான் முடிவு சொல்லுவோம்னு சொல்லிட்டோம் மாமா” என்றாள் மருமகள் ரேகா, மாமியாரை முந்திக் கொண்டு

“எனக்கு விருப்பமில்ல” என்றார் மகேஸ்வரன் சட்டென

”குமரா, சீனு… ஒங்க தாத்தா யாருன்னு ஒங்களுக்கு தெரியும்ல’ப்பா?’’ என மகன்களை பார்த்து மகேஸ்வரன் கேட்க        

ஒருவன் கையை தட்டிலும், ஒருவன் சோற்றை வாயுனுள்ளும் வைத்தவாறே, “நம்ம தாத்தா சுதந்திரப் போராட்ட வீரராச்சேப்பா” என்றனர் 

“நான் வேலைப் பார்த்த வரைக்கும், மனசாட்சிக்கு பயந்து வேலை பார்த்தேன். நீங்க ரெண்டு பேருமே அப்படித் தான். தினமும் வியர்வை சிந்தி உழைக்கிறீங்க, அது எனக்கு ரொம்ப பெருமையாய் இருக்கு.

ஆனா ஆனந்தி புருஷன் காலையில ஏழு மணிக்கு வேலைக்குப் போய் கையெழுத்த போட்டுட்டு பத்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடுறான். தினமும் பணம்கிற பேர்ல பாவத்தை சம்பாதிக்கிறான்.

நம்ம இடத்து மரத்தில காய்கிற காயும் பழமும் நம்ம இடத்தில தான் விழும், வேற இடத்திலப்போய் விழாது. பாவத்தையும் புண்ணியத்தையும் தான் சொல்றேன். அவன் உழைக்காம சம்பாதிக்கிற பாவ காசுல தான் அந்த வீட்டை கட்டியிருக்கான், அந்த பாவ குகையிலப் போய் எம்பேத்திய குடுக்க சம்மதம்னா குடுங்க

மக்களோட வரிப்பணத்தில தான் அரசு சம்பளம் கொடுக்குது. எம் பேத்திய நம்ம கண்ணுக்குள்ள வச்சி பாதுகாக்குறோம், அந்த கண்ணை வித்து தான் நாம ஓவியம் வாங்கனுமா? உழைக்காம சம்பளம் வாங்குற அரசு ஊழியனும், அயோக்கித்தனம் பண்ற அரசியல்வாதியும் தேசத்துரோகினுதான் சொல்வேன்

எல்லாத்துக்கும் மேல, நடந்து முடிஞ்ச தேர்தல்ல ஆனந்தி வீட்டுக்காரன் ஓட்டு கூட போடல தெரியுமா? இந்த நாட்டோட உண்மையான குடிமகன்னா அவன் ஓட்டுப் போடறவன் மட்டும் தான். ஓட்டுக்கூட போடாத தேசத்துரோகியோட வீட்டுக்கு எம் பேத்திய கட்டிக் குடுக்க முடியுமா?” என மகேஷ்வரன் ஆவேசமாய் கேட்க, வீட்டிலுள்ள அனைவருக்கும் அவர் சொல்வது சரியெனபட்டது

அனைவரும் மௌனமாய் தலைகுனிந்து நின்றனர்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

  

Similar Posts

5 thoughts on “தேசத் துரோகி (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து
  1. மிக அருமையான கதை வாழ்த்துக்கள் ஐயா👍💐🎂👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!