எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காலையில் எழுந்ததும் ஒருமுறை மாடிப்போர்ஷனை போய் பார்த்துவிட்டு வரலாமென்று வீட்டை சாத்திவிட்டு படிகளில் ஏறினாள் சுமதி. படிகளில் ஏறும்போதே, நேற்று வந்து பார்த்துட்டுப் போன ஃபேமிலி வந்துவிட்டால் ரொம்பவும் நன்றாகயிருக்கும் என்றும் நினைத்துக்கொண்டாள்.
கீழ் போர்ஷன் இவர்களுக்கு, மேல்போர்ஷன் வாடகைக்கு. முன்பு தங்கியிருந்தவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் புது வீடு கட்டிக்கொண்டு போயிருந்தார்கள். உடனே வீட்டை வெள்ளை அடித்து, கதவு ஜன்னல்களுக்கு பெயின்ட் அடித்து வீட்டை தயார் செய்தாகிவிட்டது. மெயின் கேட்டுக்கு வெளியே பெரிய எழுத்துகளில், ‘மேல் மாடி வாடகைக்கு விடப்படும் ‘ என்ற போர்டு ஒன்றையும் தொங்க விட்டாகிவிட்டது.
கடைசியாக குடியிருந்தவர்கள் பதினைந்தாயிரம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அக்கம்பக்கத்தில் இரண்டு பெட்ரூம் வீடு இப்போதெல்லாம் பதினெட்டு அல்லது பத்தொன்பது வரை போகிறது. முதலில் இருந்தவர்கள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் ஆரம்பத்தில் வாடகையை குறைத்துக் கொடுத்துவிட்டு பிறகு ஏற்றமுடியாமல் தவித்தார்கள். இப்போது வாடகையை இருபதினாயிரம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள் சுமதி.
இதுவரை இருபது பேராவது வந்து பார்த்துவிட்டு போயிருப்பார்கள். ஆனால் யாரும் பதினேழுக்கு மேல் ஏறவில்லை. இவளும் குறைக்கவில்லை.
நேற்று வந்தவர்கள், ஒரு சிறு குடும்பம். வீட்டை சுற்றிப்பார்த்துவிட்டு, ‘ வீடு ரொம்ப அம்சமா இருக்குங்க… எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு… வாடகை இருபதினாயிரம் சொன்னீங்க இல்லே… எங்களுக்கு சரிங்க… ‘ என்றாள் அந்தப் பெண். இவளுக்கு இன்ப அதிர்ச்சி.
புரோக்கர் சொல்லியிருந்தான், அவர்கள் இருவருமே வேலைக்குப் போகிறவர்கள் என்று. அதனால்தானோ என்னவோ இருபதினாயிரம் என்றதுமே பேரம் பேசாமல் ஒப்புக் கொண்டார்கள் போல.
‘வீட்டை இப்போ எப்படி பளபளான்னு கொடுக்கறேனோ, அதேமாதிரி நீங்க வீடு காலி பண்ணும் போது எனக்கு திருப்பித் தரனும்… ‘ என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லி வைத்தாள் சுமதி.
‘அதெலாம் கவலைப்படாதீங்க…சுத்தமா வெச்சுக்குவோம்… ’ என்றாள் அந்தப் பெண் சிரித்தபடி. சுமதிக்கு சந்தோஷம்.
‘சரிங்க… அட்வான்ஸ் எவ்வளவு…. ‘ என்று அந்தப் பெண் கேட்டதும், ‘நான் என்ன கேட்கப் போறேன்… ஊர்லே உள்ளதுதான்… பத்து மாசத்து வாடகையை அட்வான்ஸா கொடுத்துடுங்க… ‘ என்றுசொல்ல, ‘ நோ பிராப்ளம்ங்க… ‘ என்றாள் அந்தப் பெண்.
சுமதிக்கு மேலும் சந்தோஷம். உடனே, டீ குடித்துக்கொண்டே பேசலாம் என்று சொல்லி அவர்களை தங்களது போர்ஷனுக்கு கூட்டிச்சென்றாள்.
புரோக்கார் ஒரு வேலையாக போயிருந்தான். அவனும் வந்துவிடுவானே என்று அவனுக்கும் சேர்த்து டீயை கலக்கினாள். அதற்குள் சபேஷனும் வந்து சேர்ந்துவிட்டார்.
மிகவும் சந்தோஷத்துடன் வீடு பார்க்க வந்தவர்களை சுட்டிக் காட்டி, ‘ ஏங்க… இவங்க நம்ம வீட்டைப் பார்க்க வந்திருக்காங்க… வீட்டைக் காட்டிட்டேன்… அவங்களுக்கு வீடு பிடிச்சிருக்கு… ‘ என்றாள்.
அவர்களுக்கு கணவனைக் காட்டி, ‘ எங்க வீட்டுக்காரர்ங்க… உரக்கடை வச்சிருக்கார்… கடை பக்கம்ங்கறதால டீ குடிக்கக் கூட வீட்டுக்கே வந்திடுவார்… ‘ என்றாள் முகம் மலர.
அந்தப் பெண் தன் கணவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். சுமதிவுக்கு லேசாய் உறுத்த, ‘ என்னாச்சுங்க… வீடு பத்தியா… எதுவானாலும் என்கிட்டயே கேளுங்க சொல்றேன்…‘ என்றாள் சுமதி.
அந்தப் பெண் தன் கணவனைக் காட்டி… ‘ இல்லே… முன்னே இருந்தவங்க… வீட்டை ஏன் காலி பண்ணினாங்கன்னு தெரியலைன்னு இவர் கேட்டார்…‘ என்று இழுத்தாள் கணவனைக் காட்டி..
சற்றும் யோசிக்காமல், ‘அவங்க இங்கே வந்த யோகம், மூனே வருஷத்துல ஒரு இடம் வாங்கி வீட்டைக்கிட்டு ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் வீடு ஷிஃப்ட் பண்ணிட்டு போனாங்க… எங்க வீட்டு ராசி அப்படி… ‘ என்றவள் ஏதோ சொல்ல வந்து தயங்கினாள். பிறகு தயங்காமல் சொன்னாள்.
‘என்ன பிரச்சினைனா… வீட்டை நல்லா வச்சுக்கலை அவங்க… அதான் கஷ்டமா இருந்துச்சு. பாத்ரூமெல்லாம் ஆஸிட்டை ஊத்தி, பொரிய வச்சுட்டாங்க… வீட்டை அடிக்கடி ஒட்டடை அடிக்காமவிட்டு ஃபேன் எல்லாத்துலயும் பத்தை பத்தையாய் தூசி… கிச்சனை பிசுபிசுப்பாக்கிட்டாங்க… சேர் மேஜைகளை டர்டர்னு இழுத்து சுவரெல்லாம் டேமேஜ்… என்ன பண்ணறதுன்னுட்டு பொறுத்துக்குவோம்… ரெண்டு வாலுப் புள்ளைங்க இருக்கும்… ஒரு சின்ன சைக்கிள் வச்சிக்கிட்டு மடேர் மடேர்னு சுவத்துல மோதும்ங்க… பயங்கர டேமேஜ் போங்க… அதில்லாம மேல இருந்து பேப்பர்களை கிழிச்சு கிழிச்சு கீழே வீசும்ங்க… வாலுங்க… ‘
‘போதும் நிறுத்து… ‘ என்பதற்காக சுமதிவின் தோளை மெல்ல அழுத்தினார் சபேஷன். அவள் அதை சட்டை செய்யவில்லை. அந்த நேரம் பார்த்து புரோக்கர் உள்ளே நுழைய பேச்சை நிறுத்திவிட்டு புரோக்கருக்கு டீ கொண்டு வரப் போனாள். புரோக்கர் வீடு பார்க்க வந்தவர்களிடம் பேசினான். அவர்களும் வீடு பிடித்துவிட்டதாக சொல்ல, டீ கொண்டுவந்த சுமதியிடம் சொல்லி, அவர்களது ஃபோனுக்கு ஒரு மிஸ்டு கால் விடச்சொன்னான்.
வந்தவர்களிடம், ‘அவங்க நம்பர் வரும்ம்மா… நோட் பண்ணிக்கங்க… கூகிள் பேல டோக்கன் அட்வான்ஸ் போட்டுடுங்க…. அஞ்சாயிரம் போட்டுடறீங்களா…‘ என்றுவிட்டு, சுமதி பக்கம் திரும்பி… ‘ அம்மா ஒரு ஐயாயிரம் போடச் சொல்றேம்மா… அக்ரிமெண்ட் போடறப்போ… முழு அட்வான்ஸும் கொடுத்துடுவாங்க… ‘ என்றான் புன்னகையுடன்.
சுமதியோ அந்தப் பெண்ணிடமே, ‘என்கிட்டே கூகிள் பே இல்லைம்மா… சார் நம்பரை வாங்கிக்கங்க… அதுலேயே பணத்தைப் போட்டுடுங்க… ‘ என்றாள். உடனே சபேஷன் தன் நம்பரைக் கொடுக்க அதை வாங்கிக்கொண்டதும் கிளம்பிவிட்டார்கள் அவர்கள். வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள் சுமதி. உடனேயே வெளியே தொங்க விட்டிருந்த வாடகை போர்டை கழற்றி வீசினாள், ‘ இனிமே உனக்கு வேலை இல்லே போ …‘ என்றபடி..
அவர்களுடன் சேர்ந்து அப்போது கிளம்பிப் போன புரோக்கர்தான். இன்றைக்கு காலை… இதுவரை போன் போடவுமில்லை, எதுவும் கூப்பிட்டு சொல்லவுமில்லை… கொஞ்சம் ஏமாற்றத்துடனேயே மாடியை ஒரு முறை சுற்றிப்பார்த்தவள், மாடிக்கதவை தாழ் போட்டு விட்டு படிகளில் இறங்கிக்கொண்டே கணவனுக்கு ஃபோன் போட்டாள்.
‘ஏங்க… ஐயாயிரம் அட்வான்ஸ் வந்துடுச்சா, பாருங்க ’
‘கொஞ்சம் இரு… இன்னும் வரலை சுமி… இதோ நானே வந்திட்டிருக்கேன்…. டீ போட்டு வை… ‘
‘ஏன் இவர்கள் இன்னும் டோக்கன் அட்வான்ஸ் போடலை… ‘ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு உடனே புரோக்கருக்கும் போன் போட்டாள். அதே நேரம் சபேஷனும் வந்துவிட்டார்.
‘அம்மா… நேத்திக்கு சரின்னுதாம்மா சொல்லிட்டிருந்தாங்க… இன்னிக்கு காலையில கூப்பிட்டு வேற வீடு காட்டச் சொல்றாங்க… ’ என்றான் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல். ஆனால் சுமதிதான் திடுக்கிட்டுப்போனாள். உடனே, ‘ ஏம்பா… என்னாச்சு… ’ என்றாள்.
‘நீங்க முன்னால குடியிருந்தவங்களைப் பத்தி சொல்லிட்டிருந்தீங்கள்லியா… அது அவங்களுக்குப் பிடிக்கலை போல… பின்னால நம்மளைப் பத்தியும் அப்படித்தானே சொல்லுவாங்க… நம்மக்கிட்டேயும் ரெண்டு பிள்ளைகள் இருக்கு… அந்த வீடு வேண்டாம்னுட்டாங்க… ‘ என்றான்.
உதட்டோரம் சிரித்தபடி சொன்னார் சபேஷன்… ‘ நீ முன்னாடி குடியிருந்தவங்களைப் பத்தி அப்படி அதுவும் அவங்க முன்னாடி சொல்லியிருக்கக்கூடாது சுமதி. அது தப்பு. அதான் உடனே உன் தோளை அழுத்தி நிறுத்திக்கோனு ஜாடை செஞ்சேன்… நீ கவனிக்கலை… உன் வாய்த்துடுக்கை முதல்ல குறை… ‘ என்றார்.
எழுந்து போய் ‘வாடகைக்கு விடப்படும் ‘ போர்டை தேடியவாறே, ‘ இருபதினாயிரத்துக்கு சம்மதிச்சிட்டா அவங்க பெரிய இவங்களா… இவங்க என்ன வீடு வேண்டாங்கறது… நான் சொல்றேன்… வீடு அவங்களுக்கு தர்றதாவே இல்லை… அவங்க வரலைனா வீடு சும்மாவே கிடந்துடுமா… அப்படியே கிடந்தாலும் பரவாயில்லை… அவங்களுக்கு நான் வீடு தர மாட்டேன்… ‘ என்று முனுமுனுத்தாள்.
போர்டை மாட்டியபடி, ‘ பாருங்க… கண்டிப்பா வேற ஆளுங்க கிடைப்பாங்க…’ என்றாள்.
‘ நீ திருந்தவே மாட்டே… ‘ என்று எண்ணியபடி தலையிலடித்துக்கொண்டார் சபேஷன்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings