in ,

அக்கம் பக்கம் (சிறுகதை) – பவானி உமாசங்கர்

Oplus_131072

எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்    

ஃபிளாட்ஸ் வாசலில் லாரி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. “பார்த்து பார்த்து இறக்குங்க” என்ற கட்டளையும் கட்டில் பீரோ இறங்கும் பெரிய ஒலியும் கேட்டது சரஸ்வதிக்கு

“எதிர் வீட்டுக்கு குடி வராங்க போல” என்றவள் “ஏங்க யார் வராங்கன்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவள் கணவன் மாதவனிடம் விசாரித்தாள்.

“யாரோ பொள்ளாச்சிக்காரங்களாம் கீழ் வீட்டு ரமணா சொன்னாரு” என்றான் மாதவன் அசுவாரசியமாக. 

“அப்பா… எனக்கு கொஞ்சம் பொழுது போகும்” என்று கூறி உற்சாகமானாள் சரஸ்வதி.

“ஏன் கீழ் வீட்டு மாமி கூட பேசுற வம்பு போதாதாக்கும்” என்ற கணவனை முறைத்த சரஸ்வதி “நீங்க உங்க ஃப்ரண்டோட வாக்கிங் போற போது பேசுறத விட இது கம்மிதான். கஞ்சி ஆத்தி வச்சிருக்கேன் வந்து குடிங்க என்று கணவனுக்கு கட்டளையிட்டாள். 

சரஸ்வதி மாதவன் தம்பதியரின் முப்பது  வருட தாம்பத்தியத்தில் இதுபோல் ஒருவரை ஒருவர் சாடிக் கொள்வது சகஜம். அந்த ஊடலிலும் ஒரு அன்பு இழையோடும். உனக்கு நான் எனக்கு நீ. நம்மை நாமதான் கவனிச்சுக்கணும் என்ற உண்மை வெளிப்படும். தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லையே என்பதற்காக அவர்கள் கவலைப்பட்ட காலம் மலையேறிவிட்டது. 

நாற்பது  வயதுக்கு மேல் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என சரஸ்வதி விரும்பிய போது கூட மாதவன் மறுத்து விட்டான். இந்த வயசுல இப்படி ஒரு கால் கட்டு நமக்கு தேவையில்லை. அதுக்கு பதிலா பார்க்குற குழந்தைகளை எல்லாம் நம்ம குழந்தைகளா நினைச்சு அவங்களுக்கு உதவி செய்வோம் என்று கூறியவன் அதன்படியே நடந்தான்.

வருடம் தவறாமல் குழந்தைகள் காப்பகத்துக்கு பெரிய அளவில் பணம் கொடுப்பான். அக்கம் பக்கம் இயலாதவர்களின் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை தாராளமாக வாங்கிக் கொடுத்து உதவுவான். அதில் இருவருமே மனதிருப்தி அடைந்து வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டனர். 

பல மாதங்களாக பூட்டி இருந்த எதிர் வீட்டுக்கு யாரோ குடிவரப் போவதால் சரஸ்வதி அவர்களை பார்க்க ஆர்வமுடன் இருந்தாள். வீட்டு சாமான்களை இறக்கி வைத்தவர்களை மேற்பார்வை பார்த்த இளைஞன் சரஸ்வதியிடம் “அம்மா குடிக்க தண்ணி கொஞ்சம் குடுங்க” என்று கேட்டான்.

அவனிடம் “தம்பி “நீங்கதான் இங்க குடி வரீங்களா” என்று கேட்ட சரஸ்வதியிடம் “நாங்க இல்லைங்க, புதுசா கல்யாணம் ஆன என் அக்காவும் மாமாவும் இங்க குடி வராங்க” என்று கூறிச் சென்றான்.               

மறுநாள் அங்கு பால் காய்ச்சி குடியேறியவர்கள் பிரபுவும் வினயாவும். இருவரும் வந்து பால் காய்ச்சி முடித்து விட்டு  உடனடியாக ஆபீஸ் கிளம்பிவிட்டனர். சரஸ்வதிக்கு ஆச்சரியமும் அங்கலாய்ப்புமாய் இருந்தது. இதென்ன பெரியவங்க யாருமில்லாம அக்கம் பக்கம் வீட்டுக்காரங்களை கூட கூப்பிடாம பால் காய்ச்சிட்டாங்க என்ற  கேள்வியுடன் கீழ் வீட்டு மாமியிடம் சரஸ்வதி வருத்தமாக கூறிய போது

“இந்த காலத்துல பெரும்பாலானவங்க இப்படித்தான் யாரும் வேண்டாம்னு இருக்காங்க. அவங்களுக்கு மனுஷங்களை விட மெஷின்களை தான் ரொம்ப பிடிச்சிருக்கு. எந்த நேரமும்  மொபைல் போன் கம்ப்யூட்டர் என்று பார்க்கிறதுல மனுஷங்களோட அருமை தெரியுறது இல்லடி சரஸ்வதி” என்றார் மாமி. 

ஒரு வாரம் சரஸ்வதிக்கு வழக்கம் போல் பொழுது வெறுமையாக ஓடியது. அன்று காலை கோலம் போட கதவைத் திறந்த சரஸ்வதி எதிர் வீட்டின் கதவு திறந்து  சிறிய கோலம் போட்டு இருந்ததை பார்த்தாள். உள்ளே பேச்சு குரலும் மனித நடமாட்டமும் தெரிந்தது கண்டு அவள் மனம் மகிழ்ந்தது. 

காலை பரபரப்பு ஓய்ந்து மாதவனும் ஆபீஸ் சென்றபின் ஓய்வாக அமர்ந்து ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள் சரஸ்வதி.

“உள்ளே வரலாங்களா” என்ற குரல் கேட்கவும் “வாங்க வாங்க” என்று சரஸ்வதி வந்தவரை வரவேற்றாள்.

“நான் உங்க எதிர் வீட்டு வினயாவோட மாமியார். இவங்க வீடு பால் காய்ச்சும் போது கூட வர முடியல. நானும் அவரும் நேத்து ராத்திரிதான் வந்தோம்” என தன்னை அவர்  அறிமுகப்படுத்திக் கொண்டார்.  

“அப்படிங்களா” என்ற சரஸ்வதி “எனக்கு உங்க மகன் மருமகளோட இன்னும் அறிமுகமாகலைங்க. ஏன்னா அவங்க எப்போதும் வேலைனு பிஸியா இருக்காங்க” என்றாள் சற்று சலித்த குரலில்.    

“ஆமாங்க சிறுசுங்களுக்கு அக்கம் பக்கம் பழக்கம் வச்சுக்கணும்னு தெரிய மாட்டேங்குது. அவசரம் ஆத்திரத்துக்கு அவங்க தான் முதல்ல உதவுவாங்க. அது எங்க தெரியுது இந்த பிள்ளைங்களுக்கு” என்று கூறியவர் சற்று நேரம் பொதுவாக பேசிவிட்டு “அப்பறமா வீட்டுக்கு வாங்க” என்று அழைப்பும் விடுத்தார் வினயாவின் மாமியார்.

அந்த வாரத்தில் சரஸ்வதிக்கு வினயா, பிரபுவை பற்றிய விவரமும் அறிமுகமும் கிடைத்தது.

மாதவனோ “என்ன ஹேப்பியா எதிர் வீட்டுக்காரங்க பேசலைன்னு சொன்னயே” என்று கிண்டல் செய்தான் “அவங்க அப்பா அம்மா இங்கே ஒரு வாரம் இருப்பாங்க அப்புறம் எப்படின்னு பார்க்கலாம் “என்றாள் சரஸ்வதி.

“அட நீ வீட்ல இருக்க அவங்க வேலைக்கு போக வேண்டாமா. அதனால முடிஞ்ச போது பேசுவாங்க” என்றான்  மாதவன் புன்னகையுடன்.

“ஏன் வீட்ல இருக்கிறவங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாம பொழுது போக்குவோம்னு நினைக்கிறீங்களா? ஒருநாள் வீட்டு வேலை செஞ்சு பாருங்க அப்ப தெரியும்” என்று கோபமாக பேசிய சரஸ்வதியிடம், “தாயே தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சிடு எனக்கு பசிக்குது டிபன் தரயா” என்றான் மாதவன் கூப்பிய கரங்களுடன்.

பெரியவர்கள் ஊருக்குச் சென்றதும் எதிர்வீடு வழக்கம் போல் அடைத்த கதவாகவே இருந்தது.

“என்ன ஒரு பாலு காய் வாங்கக்கூட வெளியே வர மாட்டாங்களா, எப்ப வராங்க எப்ப போறாங்கன்னு தெரிய மாட்டேங்குது. ஒரு ஜன்னல் கூட திறக்க மாட்டேங்குறாங்க” என புலம்பிய சரஸ்வதியிடம் “அவங்க சின்னஞ்சிறுசுங்க அப்படித்தான் இருப்பாங்க” என்றான் மாதவன் நகைத்தபடி

அன்று ஞாயிற்றுக்கிழமை சற்று நிதானமாகவே எழுந்த சரஸ்வதி வாசற்கதவை திறந்தாள் அப்போது எதிர்வீட்டில் இருந்து “வினய் வினய்  என்ன மா செய்யுது என்னைப்  பாரு” என்ற பிரபுவின் கெஞ்சும் குரலும் வினையாவின் முனகல் சத்தமும் கேட்க, சரஸ்வதியால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. பாய்ந்தோடி போய் எதிர் வீட்டின் கதவை தட்டினாள்.            

உடனே கதவை திறந்த பிரபு “ஆன்ட்டி வினயாவுக்கு உடம்புக்கு முடியல கொஞ்சம் பாருங்க” என்றான் கண்களில் நீருடன்.

அங்கே மிகவும் சோர்ந்து சுவற்றில் சாய்ந்து மயங்கிய நிலையில் இருந்தாள் வினையா. மடமட என ஒரு செம்பில் நீர் எடுத்து வந்த சரஸ்வதி மெதுவாக அவள் முகத்தில் தெளித்து “வினயா அம்மாடி” என்று  அவள்  கன்னத்தை தட்டி தன்மேல் சாய்த்துக் கொண்டாள். 

லேசாக கண்விழித்த வினயா” தலை சுத்துது ஆன்ட்டி மயக்கம் வர மாதிரி இருக்குது” என்றாள் மெல்லிய குரலில்.

“கொஞ்சம் தண்ணி குடிம்மா” என்று மெதுவாக சரஸ்வதி அவள் வாயில் சிறிது நீரைப் புகட்டினாள். நீரை குடித்ததும் சற்று தெளிந்த மாதிரி இருந்த வினயா இரண்டு நிமிடங்களில் “ஐயோ வாமிட் வர மாதிரி இருக்குது ஆன்ட்டி” எனக்கூறி வாயை பொத்திக் கொண்டு ஓடினாள்.

வாந்தி எடுத்த வினயா வாஷ்பேசின் அருகிலேயே சுருண்டு படுத்து விட்டாள்

“நான் வேணா ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யவா” என்று கேட்டான் பிரபு.

ஒரு வினாடி திகைத்த சரஸ்வதி “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ப்பா. நேத்து நைட்டு சாப்பிட்டது ஏதாவது ஒத்துக்காம இருக்கும். இஞ்சி எலுமிச்சை தேன் கலந்து ஒரு ஜூஸ் கொடுக்கிறேன். அதை குடிச்சா சரியாகிவிடும். ஒண்ணும் இருக்காது நீ பயப்படாதே, அப்படியும் சரியாகலைன்னா வேணா டாக்டர்கிட்ட போகலாம்” என்று பிரபுவிடம் ஆறுதலாக கூறினாள்.

சிறிது நேரம் கழித்து வினயாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்த சரஸ்வதி அவளிடம் மெல்ல விசாரித்ததில் அவளுக்கு நாள் தள்ளிப் போயிருந்தது தெரிய வந்தது. அந்த மகிழ்ச்சியான விஷயம் தெரிந்த பின் எதிர்வீட்டில் எப்போதும் ஜனக்கூட்டம் தான் மாற்றி மாற்றி வினயாவை பார்க்க ஆட்கள் வந்த வண்ணம் இருந்தனர். விடுமுறை நாட்களில் யாரும் வரவில்லை என்றால் வினயாவும் பிரபுவும் சரஸ்வதி வீட்டுக்கு வந்துவிடுவர். 

சரஸ்வதி வினயாவுக்கு பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து சாப்பிட வைப்பாள். சரஸ்வதிக்கு தானே உண்டாகி இருப்பது போன்ற ஒரு உணர்வு. அவள் வினயாவை தன் கண்மணி போல் பார்த்துக் கொண்டாள். அவர்கள் வீட்டு பெரியவர்கள், நீங்க பெரியவங்களா எதிர்வீட்டில் இருக்கிறதால நாங்க ஊர்ல தைரியமா இருக்கோம் என்று சரஸ்வதியிடம் கூறிச் சென்றனர்.

அன்று வினையா அவளிடம் “ஆன்ட்டி ஓல்ட் இஸ் கோல்ட் அப்படிங்கறத நீங்க நிரூபிக்கிறீங்க” என்றாள் புன்னகையுடன்.

“ஏன் அப்படி சொல்ற” என்று கேட்ட சரஸ்வதியிடம்

“பொதுவா உங்கள மாதிரி பெரியவங்களுக்கு நாங்க யூஸ் பண்ற டெக்னாலஜி தெரியாது. எங்க உணர்வுகள் புரியாதுன்னு நினைச்சு உங்களை  ஒதுக்கி வைச்சிடுவோம்.  ஆனா உங்களோட பழகும் போது தான் உங்க அனுபவ அறிவு எங்களுக்கு ரொம்ப தேவையான ஒண்ணுன்னு புரிஞ்சுகிட்டோம். அதுமட்டுமில்லாம நாம தினமும் சந்திக்கிற பக்கத்து வீட்டு மனிதர்கள் நமக்கு ரொம்ப முக்கியம்னு தெரிஞ்சிக்கிட்டோம் ஆன்ட்டி” என்றாள் வினயா உணர்ச்சி பொங்க. 

“நீ சொல்றது உண்மைதான் வினயா. நாங்க கூட்டு குடும்பத்தில் வளர்ந்ததால எங்களுக்கு வீட்டு பெரியவங்க சாமி மாதிரி. அதே சமயம் எல்லார் கூடவும் பேசுவோம், சிரிச்சு விளையாடுவோம். எல்லா வீட்டுலயும் ஒரு அப்பத்தாவோ அம்மாச்சியோ இருப்பாங்க எங்க முகத்துல சின்ன மாற்றம் இருந்தால் கூட அதை பார்த்த உடனே தெரிஞ்சுக்கு வாங்க. அது என்னன்னு எங்களோட பேசி, அது உடலோ மனமோ எதுவாக இருந்தாலும் பிரச்சினையை தீர்த்து வைச்சிடுவாங்க.

நீங்க சொல்ற ஸ்ட்ரெஸ்ங்குற வார்த்தையே எங்களுக்கெல்லாம் தெரியாதும்மா. அப்போ கண்டிப்போட கூடிய அன்பு இருந்தது. அதெல்லாம் இப்ப இல்ல, இருந்தாலும் மனம் விட்டு பேசினாலே பாதி பிரச்சனை காணாம போயிடும். ஒரு குட்டி ஸ்மைல் எல்லாத்தையும் மாத்திடும் என்ற சரஸ்வதியை கண்கள் பனிக்க அன்புடன் அணைத்துக் கொண்டாள் வினயா.

“நீ உன் பிள்ளையை பெத்து கொடு. நானே அவனை வளர்த்து தரேன் கண்ணா ” என்றாள் சரஸ்வதி பாசத்துடன்.

எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)                          

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சகுனம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    வழி வழியாய் வந்ததொரு (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு