in ,

நண்பனின் மகள் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கிண்டியிலிருந்து திருவெற்றியூர் செல்லும் பேருந்து,  காலை 7 மணிக்கு கிளம்பத் தயாரானது.  கிளம்பும் நேரத்தில் கியர் சரி வர வேலை செய்யாதக் காரணத்தால் வண்டியில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரையும் வேறு வண்டியில் செல்லுமாறு ஓட்டுநர் ஆறுமுகம் பயணிகளிடம்  கூறினார். அனைவரும், அடுத்து கிளம்பும் வண்டியை  நோக்கிச் சென்றனர்.

ஒரு வழியாக மூன்று மணி நேரத்தில் பேருந்து ரெடியானது. ஓட்டுநர் ஆறுமுகம் பேரூந்தை மெதுவாக நகர வைத்தார். மணி 10.30க்கு மவுண்ட் ரோடு  LIC நிறுத்தத்தில்  ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபனும் சிரித்துக் கொண்டே வண்டியில் ஏறுவதை பேருந்தின் இடது பக்க கண்ணாடியில் பார்த்த ஆறுமுகம் அதிர்ச்சி அடைந்தார்.

அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்துக் கொண்டனர்.  திரும்பி அவர்களைப் பார்க்க அவருக்கு விருப்பமில்லை. ஆனால், அவர் கவனம் முழுவதும் அவர்கள் இருவரைப் பற்றியே இருந்தது. நடத்துநரை அழைத்து அந்த இருவரை அடையாளம் கூறி, எந்த நிறுத்தத்தில் இறங்கப் போகிறார்கள் என்று கேட்டார்.

நடத்துநர் அவர்களைப் பார்த்து, “சென்ட்ரல் ரயில் நிலையம்” என்ன விஷயம் என்றார்.

“சொல்றேன்” என்று கலக்கத்துடன் தயங்கியபடியே கூறினார் ஆறுமுகம்.

“அண்ணே அந்த பையனை எங்கேயோப் பார்த்த ஞாபகம்” என்று நடத்துநர் கூறினார்.

அடுத்த நிறுத்தம் வந்தவுடன்,  அவசர அவசரமாக தன் நண்பரின் மனைவி கற்பகத்திற்கு போன் செய்து Bluetooth ஐ தன் காதில் சொறுகினார் ஆறுமுகம்.

போனை எடுத்த அவர்  நண்பர் மனைவி  “சொல்லுங்க அண்ணா” என்றாள்.

“தங்கச்சி, இன்னிக்கு காலைல ரமா என்ன டிரஸ் போட்டுக் கொண்டு காலேஜ்க்கு போனாள்?”  என்று ஆறுமுகம் கேட்டார்.

“இன்னிக்கு அவ காலேஜ்ல ஏதோ பேன்சி டிரஸ் போட்டியாம்,  அதனால மஞ்சள் நிறத்தில் சுடிதார் அணிந்து கொண்டு  போனாள்” என்று கற்பகம் கூறினாள்.

“போகும் போது பேக் ஏதாவது எடுத்துணு போனாளா?” என்று ஆறுமுகம் கேட்டார்.

ஆமாம்,  “காலேஜ்க்கு போய் பட்டுப்புடவை கட்டிக்கணும்னு சொல்லி ஒரு மூணு பட்டு புடவையும்,  2 செயின், ஆரம், கம்மல் எல்லாம் எடுத்துக்குணு  போவதா என்கிட்ட சொல்லிட்டு தான் போனாள், என்ன விஷயம் அண்ணே?” என்று கற்பகம் கேட்டாள்.

அதற்குள்   பேருந்தை புறப்பட வேண்டி, நடத்துநர்   விசிலடித்தார்.

“அப்புறமா பேசறேம்மா”  என்று சொல்லி விட்டு, போனை ஆஃப் செய்தார் ஆறுமுகம்.

ஆறுமுகம் நடத்துநரை அழைத்து “அந்த இரண்டு பேரின் பக்கத்தில்  கொஞ்சம் நேரம் நின்று அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்” என்று கேட்டு விட்டு தன்னிடம்  வந்து சொல்லும்படி  கூறினார்.

“எதுக்கு அண்ணே? இப்படி படபடப்பா பேசறீங்க”, என்று நடத்துநர் கேட்டார்.

“முதல்ல நான் சொல்றதை தயவு செய்து  செய்யேன்”  என்று கூறினார் ஆறுமுகம்.

நடத்துநரின் முன் சீட்டில் தான் அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தனர். எனவே நடத்துநருக்கு அவர்கள் பேசிக் கொள்வது மிகவும் நன்றாகவே கேட்டது.

“நாம  3 மணிக்கு புறப்படும் கோவை எக்ஸ்பிரசில் கோவைச் சென்று இரவு தங்கறோம். நம் திருமண ஏற்பாடுகளை என் நண்பர்கள் செஞ்சிருப்பாங்க. நாளை காலைல நமக்கு கல்யாணம் சரியா..? கவலைபடாதே”,  என்று அவன் கூற, அவள் சந்தோஷப்பட்டாள்.

“என் அப்பாகிட்ட நம்ம கல்யாணத்தைப் பத்தி சொல்லட்டுமா?” என்று அவள் கேட்டாள்.

“நாளைக்குக் கல்யாணம் முடிந்தவுடன் சொல்லாம்” என்றான் அவன். அதைக் கவனித்த  நடத்துநர், உடனே சென்று ஓட்டுநர் ஆறுமுகத்திடம் கூறினார்.

தன் வாட்ச்சைப் பார்த்தார் ஆறுமுகம். மணி 12.30. திருவெற்றியூர்ச் செல்ல மணி 1.30 ஆகிடுமே. உடனே நாம் திரும்ப சென்ட்ரல் வர வேண்டும், எனவே  திருவெற்றியூர் சென்றவுடன் உடல்நிலை சரியில்லை என்றுக் கூறி அரை நாள் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டே பேருந்தை ஓட்டினார்.

திருவெற்றியூர் வந்தவுடன் Time keeper அலுவலகம் சென்று தனக்கு உடல்நிலை சரியில்லை, பேரூந்தை இயக்க இயலாது என்று கூறி அரைநாள் விடுப்பு வேண்டும் என்று கேட்டார். அவர்கள் ஒப்புக் கொண்டு  விடுப்பு கொடுத்தனர். நடத்துநர் கண்ணனிடம் தான் அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டதாவும், நாளை பேசிக் கொள்ளலாம் என்று கூறி விட்டு ஆட்டோவை தேடிப் போனார் ஆறுமுகம்.

நடத்துநர் கண்ணனுக்கு ஆறுமுகத்தின் தவிப்பு புரியவில்லை. ஆட்டோவில் ஏறி சென்ட்ரலுக்கு வந்துச் சேர 2.30 மணி ஆனது. வரும் வழியில் காவல் நிலைய ஆய்வாளரான தன்  நண்பனுக்குப் போன் செய்து அவசரம் என்றும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும்படி கூறியதால், அவரும் அங்கு வந்து காத்திருந்தார்.

“ஆறுமுகத்தை பார்த்தவுடன் என்னடா எதுக்கு அவசரமாய் வர சொன்னே?” என்று அவர்  நண்பர் காவல் ஆய்வாளர் கேட்டார்.

LIC நிறுத்தத்தில் அவர்கள் இருவரும் தன் பேருந்தில் ஏறியதிலிருந்து சென்ட்ரலில் இறங்கி, கோவைச் செல்ல திட்டமிட்டிருப்பதை ஆறுமுகம் கூறினார்.

“அது சரிடா! யார் அவர்கள்? எதற்கு என்னை வரச் சொன்னே?”  என்று ஆய்வாளர் கேட்டார்.

“உன் பொண்ணு ரமாடா அது. ஒரு பையனோட கோவைக்குப் போய் கல்யாணம் பண்ணிக்கப் போறா” என்று கூறினார் ஓட்டுநர் ஆறுமுகம்.

உடனே ஆய்வாளர் அதிர்ச்சியடைந்து வேகமாக,  ரயில்வே நிலைய மாஸ்டரிடம் சென்று விஷயத்தைக் கூறி, தாங்கள் அவர்களைத் தேடி கண்டுபிடித்து, தங்களிடம் கூறும்  வரை வண்டி கிளம்ப சிக்னல் தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு, அவர்கள் இருவரையும் தேட ஆரம்பித்தனர்.

அந்த இருவரையும் இவர்கள் பார்த்து விட, காவல் ஆய்வாளரைப் பார்த்தவுடன் அந்த பையன் தப்பி ஓட முயல,  ஒன்றும் புரியாமல் ஆய்வாளரின் மகள் தன் தந்தையை அந்த நேரத்தில் பார்த்து விட்ட பயத்தில் கலங்க, ஆய்வாளர் அங்கிருந்த மற்றெருவரின் உதவியுடன் அவனைப் பிடித்து விட்டார்.

அவனை ஆறுமுகத்திடம் இழுத்து வந்து  “இவனை ரொம்ப நாளாகவே, காவல்துறையில் தேடிக் கொண்டிருந்தோம். இவன் பெண்களை மயக்கி பேசி அவர்களைத் திருமணம் செய்துக் கொள்வதாக கூறி,  வீட்டிலிருந்து நகைகளை எடுத்து வரச் செய்து, வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்துக் கொண்டு ஒரு நாள் அவர்களுடன் சந்தோஷமாக இருந்து விட்டு, பின்னர் அவர்களின் நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அவர்களை அதே இடத்தில் விட்டு, விட்டு சென்று விடுவான். உன் தயவால் இவன், இன்று சிக்கிக் கொண்டான் என்று கூறி, தன் மகளை இவனிடமிருந்து காப்பாற்றியதற்கு நன்றிடா” என்று நா தழுக்க கூறினார்  காவல் ஆய்வாளர்.

இதைக்கேட்ட காவல் ஆய்வாளரின் மகள் அழுதபடியே, தன் தந்தையிடம் “தன்னை மன்னிக்கும்படி” வேண்டினாள். அவர் தன் நண்பனின் காலில் விழும்படி கூறினார்.

ஓட்டுநர் ஆறுமுகத்தின் காலில் விழுந்து வணங்கி நன்றி கூறினாள் ரமா.

எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாடலிசை வானம் பாடி

    வந்தது தமிழ்ச்செல்வியா (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு