எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இன்னும் ஒரு பத்து நாள் சேர்த்து விடுப்பு போட்டிருக்கலாமோ என்று இப்போது தோன்றியது சேகருக்கு.
சென்னையில் இருந்து கிளம்பிய அந்த ரயில் புகையை கக்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் சிலமணி நேரங்களில் திருச்சி ஜங்ஷனை அடைந்து விடலாம் என்று பக்கவாட்டில் தெரியும் பலகைகள் பறைசாற்றின.
இராணுவத்தில் சிப்பாயாக வேலை பார்க்கிறான். ஜம்முவிலிருந்து ரெயிலில் சென்னை வந்து சேர்ந்து, அங்கிருந்து திருச்சி போகும் ரெயிலில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தான்.
திருச்சி போய்விட்டு அங்கிருந்து பஸ் பிடித்து வயலூர் போகவேண்டும். பிள்ளையார் கோவில் ஸ்டாப்பில் இறங்கி ஒரு மைல்தூரம் தோப்புகளுக்கு இடையிலும் வயல் வெளிகளுக்கிடையிலும் நடந்து போகவேண்டும். வீடு வந்துவிடும்..
போன தடவை வந்திருந்தபோழுதே அம்மா சொல்லியிருந்தார்கள், முன்னாடியே குவார்ட்டர்ஸ் கேட்டு வை, அப்போதான் கல்யாணம் ஆகி போகும்போது சிரமம் இல்லாம இருக்கும் என்று.
அவனது மாமன் மகள் தமிழ்ச்செல்வியை தன் மகனுக்கு கட்டி வைக்கவேண்டும் என்பது அவளுக்கு நெடுநாள் ஆசை. செல்விக்கும் ஆசை தான். ஏன் அவனுக்கும் கூடத்தான்….!
போன தடவை வந்திருந்தபோழுதே செல்வி இவனை செல்லமாய் கோபித்துக் கொண்டாள்… ‘யோவ் மிலிடரி …. ஒழுங்கா என் கழுத்தில சீக்கிரம் தாலியைக் கட்டி கூட்டிக்கிட்டு போ… நீ மட்டும் ரயிலேறி பொசுக் பொசுக்னு போயிட்டு வர்றே.. நான் எப்போ வந்து அந்த ஊரெல்லாம் பார்க்கறதாம்… ’ என்று.
‘பிள்ளையார் கோவில் எல்லாம் இறங்குங்க…‘ என்ற குரல் அவனது சிந்தனைக் களைந்தது. எழுந்தான். பெட்டி பைகளை எடுத்துக்கொண்டான். அளவிலடங்கா பரவசத்துடன் ஊர் மண்ணில் காலெடுத்து வைத்தான்.
மனதிற்குள் வந்து ‘ஹாய்‘ சொன்னாள் தமிழ்ச்செல்வி. தன்னிச்சையாக அவனது முகம் மலர்ந்தது. கோவிலருகில் ஒரு பெண்மணி பூ விற்றுக்கொண்டிருந்தாள். ஒரு ரூபாயைக் கொடுத்து இரண்டு பொட்டலங்களை வாங்கிக் கொண்டான்.
ஊரைக் கொஞ்சம் சுற்றிக்கொண்டு போனால் மாமாவின் வீடு வரும். அங்கே போய் தமிழ்ச் செல்வியைப் பார்த்து பூவையும் தின்பண்டங்களையும் கொடுத்துவிட்டு விட்டு அப்புறம் நமது வீட்டுக்குப் போகலாம். உடனே மனது ஜிவ்வென்றது.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் தெரிந்தன. பிறகு தென்னந்தோப்பு. பிறகு வாய்க்கால் பாலம். அதைத் தாண்டினால் அய்யனார் கோவில் மேடு. இடதுபுறம் போனால் அக்ரஹாரம். வலதுபுறம் போனால் குடியானத் தெரு. உள்ளே சுமார் முப்பது தலைக் கட்டுகள்.
தென்னந்தோப்பைத் தான்டி அய்யனார் கோவில் மேட்டில் காலடி எடுத்து வைத்தான். பனைமரங்கள், ஆல மரங்கள், அரச மரங்கள் என்று காற்றுக்கு பேயாட்டம் ஆடின. காற்று அவைகளினிடையில் பாய்ந்து ஒருவிதமான பயமுண்டாகும் சத்தத்தை கொடுத்தன.
அந்த உயர உயரமான மரங்களினிடையே ஆஜானுபாகுவாய் சுமார் பதினைந்தடி உயரத்துக்கு அய்யனார் சிலை. அதன் இரண்டு புறமும் அதில் பாதி உயரத்துக்கு இரண்டு குதிரைகள், அதன் மேல் சிப்பாய்கள். அதன் பக்கங்களில் துப்பாக்கியுடன் காவலர்கள், நாய்கள்…
‘ மாமா…’
திடீரென்று அந்தக் குரல் கேட்டதும் திடுக்கிட்டான்… சுற்றும் முற்றும் பார்த்தான்.
யார் கூப்பிட்ருப்பார்கள்… எந்தப் பக்கமிருந்து அந்த சத்தம் வந்தது… யோசித்தான். சுற்றிலும் பார்த்தான். மேலே அண்ணார்ந்து மரங்களையும் பார்த்துக்கொண்டான். பிறகு மேற்கொண்டு இரண்டு எட்டுக்கள் வைத்தான்.
அந்த நேரம் பார்த்து காற்று பலமாக அடித்தது. நிலைகொள்ள முடியாமல் அவனும் கொஞ்சம் ஆடித்தான் போனான்.
‘ மாமோவ்… ‘
இப்போது சற்றே பயம் தொற்றிக்கொண்டது அவனை.
டேய் நீ இராணுவ வீரன்… பயப்படலாமா என்றது உள்மனது…
சுற்றிலும் பார்த்தான். யாரையும் காணவில்லை. ஒரு பழைய பாட்டை பாடிக்கொண்டு மேலே நடந்தான். அது தமிழ்ச் செல்வியின் குரல் போல இருந்ததுதே. யோசனை ஓடியது.
நாம் வருவதை அறிந்துகொண்டு நமக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக ஒளிந்து ஒளிந்து வருகிறாளா… திடுதிப்பென்று ஐயனார் சிலைக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டாள் அவள். திகைத்துப் போனான் அவன்.
‘என்ன புள்ள…. சூறாவளி காத்து மாதிரி பாய்ஞ்சு வர்றே… ‘
‘மாமா நா சூறாவளி மாதிரி பாய்ஞ்சு வரல… ஆனா நீதான் பேயறஞ்ச மாதிரி முழிக்கிறே மாமா… ’
‘யார்…? நானு…? பேயறஞ்ச மாதிரி…? சைனா பார்டர்ல இருபது டிகிரி மைனஸ் உறைபனியிலேயும் துப்பாக்கிய புடிக்கிறவன்… தெரியுமில்ல… ‘ என்றபடி கண்ணடித்தபடி தனது கட்டை மீசையையும் முறுக்கி விட்டுக்கொண்டவன், ‘ சரி புள்ள… நீ எங்க இந்த பக்கம்… ? ’ என்றான்.
‘மாமா நீ என்கிட்டே சொல்லாம கொள்ளாம என் முன்னாடி வந்து நிக்கலாம்னு நினைக்கலாம்… ஆனா நான் வந்து நிக்கக் கூடாதா… நீ ஊருக்கு வர்றதா உங்க வீட்டுக்கு சொல்லிட்டே… அதை அத்தைக்கிட்ட போட்டு வாங்கிட்டேன்ல… சரி சரி…. மசமசன்னு நிக்காம எனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்லு… சட்டுன்னு வாங்கிட்டு ஓடறேன். மலர்கொடி.. பூங்காவனம் எல்லாம் வாய்க்காலுக்கு முன்னாடியே போய்ட்டாளுங்க… நான் தான் லேட்டு. நீ சீக்கிரம் வரணும்னு அய்யனாரப்பன்கிட்ட நூறு தடவையாவது வேண்டிக்கிட்டு இருந்திருப்பேன், தெரியுமா… தூரத்துலே பார்த்ததுமே ஒளிஞ்சுக்கிட்டேன். சரி சரி… முதல்ல எனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கே சொல்லு… ’
அவள் மடமடவென பொரிந்து தள்ளினாள். சிரித்தான் இவன்.
‘உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா… ‘ என்றபடி பைக்குள் இருந்த பூ பொட்டலத்தை வெளியில் எடுத்தான். அவளிடம் அதை நீட்டினான். அவள் சட்டென திரும்பிக் கொண்டாள்.
இவன் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
‘ஏம்புள்ள… கோபமா… உனக்குப் பூ புடிக்காதா என்ன… இல்ல என் மேல வேற ஏதும் கோபமா… திரும்பிக்கிட்டு நிக்கறே… ‘ என்றான்.
கொஞ்சம் கோபத்துடன் திரும்பியவள், ‘ஏ மக்கு மாமா… நான் உன்கிட்ட கோவிச்சுக்கிட்டு வேற எங்கே போவேன்… நான் ஏன் திரும்பினேன்னு தெரியலயா… பூவை நீயே வச்சுவிடனுமுனுதான்… வச்சுவிடு… ’ என்றுவிட்டு மறுபடியும் திரும்பி நின்றுகொண்டாள்.
சிரித்துக்கொண்டே பூவை சூடிவிட்டான், ஜடையை ரசித்தபடியே.
அதற்குள் சட்டென திரும்பியவள். ‘மாமோவ்… எனக்கு இப்போதைக்கு இது போதும்… இப்போ ஆத்து வாய்க்கால்ல குளிக்கப் போறேன்… மத்ததை எல்லாம் உங்க வீட்டுக்கு வர்றேன்ல அப்போ கொடு… வாங்கிக்கறேன்… ‘ என்றுவிட்டு சிட்டாய் பறந்தாள். அதற்குத் தகுந்தாற் போல அவளது ஜடை தாலாட்டம் போட்டது.
வந்தாள், பேசினாள், ஓடியேவிட்டாளே… !
மடைதிறந்த வெள்ளம் மாதிரியல்லவா பேசினாள். இந்தப் பேச்சை கேட்கத்தானே ஆவலுடன் ஓடி வந்தோம். ஆனாலும் நிற்காமல் ஓடிவிட்டாளே… உள்ளுக்குள் செல்லமாய் வருந்தியபடி மேற்கொண்டு நடந்தான்.
பண்ணைக்குள் நுழையும் போதே சின்ன பாப்பாவை பார்த்தான்… பசுமாட்டை இழுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தாள்…
‘என்ன சேகரு… தந்தி காலைலதானே அடிச்சதா சொன்னாங்க… அதுக்குள்ளே வந்துட்டே… எப்படி… ’
மாடு அவளை இழுக்க அதை கட்டுப்படுத்த முடியாமல் கையிற்றை சுண்டி இழுத்தபடி நின்றிருந்தாள்.
‘ தந்தியா… ‘ திகைத்தான் இவன்.
‘ அவளும் திகைத்தாள். ‘ ஓ விஷயம் தெரியாதோ… சரி சரி… போ… நீயே தெரிஞ்சுக்குவே… ‘ என்றுவிட்டு மேற்கொண்டு பேசாமல் நடந்தாள்.
‘ பாப்பா… என்னாச்சு…. யாருக்கு என்ன… ‘ என்று படபடத்தான். அவளோ அது எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
கொஞ்சம் பயமும் உண்டானது. அம்மாவுக்குத்தான் ஏதும் உடம்பு சரியில்லையோ… வேறு ஏதாவது…. ச்சே ச்சே… அப்படி ஒன்றும் இருக்காது என்றெண்ணியபடி மேலே நடந்தான். இப்போது நடையில் ஒரு வேகம் வந்துவிட்டது. நெஞ்சுக்குள் ஒரு பதட்டமும் வந்து விட்டது.
மாமாவின் வீட்டுக்கு அப்புறம் போய்க்கொள்ளலாம், முதலில் நமது வீட்டுக்குப் போகலாம்… என்று முடிவு செய்துகொண்டு பாதையை மாற்றி ஓடினான். கட்டிலில் அம்மா படுத்திருந்தார்கள். இவனைப் பார்த்ததும் எழுந்துகொண்டார்கள்.
‘ தம்பி வாப்பா… ‘
‘ அம்மா… முதல்ல எனக்கு பதில் சொல்லு… உனக்கு உடம்புக்கு ஒன்னுமில்லையே… தந்தி அடிச்சீங்களாமே, எதுக்கு… ‘
ஓவென்று அழுதாள், அவள்.
‘ அம்மா யாருக்கு என்னாச்சு… ‘
‘ தமிழ்ச் செல்வி… ‘
அவளுக்கு மேற்கொண்டு பேசமுடியாமல் வாய் அடைத்தது.
‘தமிழ்ச்செல்வியா… வர்ற வழியில்தானே அவளை பார்த்து பேசிட்டு வாறேன்… அவளுக்கென்ன… ‘
‘ நேத்து ராத்திரியே செத்துப் போயிட்டாப்பா… ‘
மேற்கொண்டு அவள் சொன்னது எதுவும் இவன் காதுகளில் விழவில்லை.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings