எழுத்தாளர் மனோகர் மைசூரு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சென்னையின் ஒரு சாதாரண காலை. வெள்ளிக்கிழமை. கடைத்தெரு மெதுவாக விழித்துக் கொண்டிருந்தது. ஹோட்டல்களில் சுறுசுறுப்புக்கான சத்தங்கள். பூக்கடை வாசனை பரவுகிறது. ஆட்டோக்கள் நெரிசலில் கத்துகின்றன. ஒவ்வொரு கடையும் ஷட்டர் திறந்து நாளை வரவேற்கிறது.
அந்த நேரத்தில் ஒரு குரல் மேலே எழுந்தது. சாமி ஒரு சன்னியாசி. காவி உடை. தோளில் சின்ன துணிப்பை. கையில் ஒரு சிறிய மணி. தெரு தெரு ஆக நடந்து, கடை கடையாக நின்று, பஜனை பாடுகிறார்.
‘ஹரி ஓம்… ஹரி ஓம்…’
குரல் கம்பீரமாக ஆழமாக இருந்தது. மணியோசை தெருவின் சத்தத்தைக் கொஞ்சம் விலக்கியது.
கடைகடையாக கடைக்காரர்கள் பத்தோ இருபதோ ரூபாய் நீட்டினார்கள். சாமி கைக்கூப்பி வாங்கினார். கூப்பியக் கையை கொஞ்சம் நேரம் அப்படியே வைத்திருந்தார். பின்னர், வாங்கியதை தன் தோளில் இருந்த பையில் போட்டுக்கொண்டார். ஆசீர்வாதம் தருவதற்குக் கையை உயர்த்தினார். அதுவே ஒரு சைகை மொழி.
தெரு முடியும் இடத்தில் ஒரு டாஸ்மாக் கடை. ரொம்பவும் பிசி. உள்ளே இரண்டு மூன்று பேர். யாரோ நேற்றிரவு தொடர்ந்து இன்று காலையிலும் வந்திருக்கிறான். மற்றவன் உள்ளே நிற்காமல் வெளியே வந்துக் குடிக்கிறான். வெட்கமும் விடவில்லை, பழக்கமும் விடவில்லை. சாமி அந்தக் கடை முன்னும் நின்றார்.
தெருவில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் — ரவி என்று பேர் — நடுக்கத்துடன் பார்த்தான். ரவி ஒரு வளரும் எழுத்தாளர். அவருக்கு முதல் பாடமே ‘உன்னைப் சுற்றிப்பார். கதைகள் உன்னை சுற்றி வரும். ஒவ்வொரு அசைவும் கதைகளின் வார்த்தைகள்’. ‘இங்கே நிற்பாரா? இங்கே பஜனை பாடுவாரா?’. அவனுக்குள் ஓர் ஆர்வம். கவனித்தான்.
சாமி பாடினார். அதே குரல். அதே மணி. ‘ஹரி ஓம்… ஹரி ஓம்…’.
கடைக்காரன் கொஞ்சம் தயங்கினான். அன்றைக்கு நல்ல வரும்படி போலும். ‘போ..போ’ என்று துரத்தவில்லை. பிறகு பத்து ரூபாய் நீட்டினான்.
குடித்துக்கொண்டிருந்தவன் ஒருவன் திரும்பினான். கண்கள் சிவந்திருந்தன. ஆனால் சாமியின் கண்களோடு கண்கள் சந்தித்தன. அவனும் தடுமாறி ஒரு ஐந்து ரூபாய் நீட்டினான்.
சாமி வாங்கினார். கை கூப்பினார். பிறகு — யாரும் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. சாமி அந்த குடிகாரனின் முகத்தைப் பார்த்தார். ஒரு கணம். அவன் தலையில் கையை வைத்தார். மெல்லிய குரலில் சொன்னார்:
‘நல்லா இரு, உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு தம்பி.’
அவ்வளவு தான். குடிகாரன் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவன் கண்ணிலிருந்து ஒரு துளி கீழே விழுந்தது — குடிக்கும் முன்பும் அல்ல, குடித்த பிறகும் அல்ல — அந்த ஒரு வார்த்தையால்.
* * *
பார்த்துக்கொண்டிருந்த ரவி சாமியின் பின்னால் போனான். தெரு முடிவில் அவரைப் பிடித்தான்.
‘சாமி, ஒரு கேள்வி கேட்கலாமா?’
சாமி நின்றார். சிரித்தார்.
‘சாமி… அவன் குடிகாரன். கெட்டப்பழக்கம் உள்ளவன். அவனுக்கும் ஆசீர்வாதம் கொடுக்கணுமா? அவன் நல்லா இருக்கணும்னு கடவுளிடம் கேக்கணுமா? இது சரியா?’
சாமி சற்று நேரம் பேசவில்லை. தெரு ஓரத்தில் நின்று வானத்தைப் பார்த்தார். பிறகு திரும்பினார்.
‘தம்பி, அவன் ஒரு குடிகாரன் — ஆமா. ஆனால் அவன் ஒரு மனிதன் — அதுவும் ஆமா.’
ரவி யோசித்தான்.
‘நான் அவனை மாத்தல. அது என் வேலை இல்ல. ஆனா அவன் மனசுல ஒரு நல்ல விதை விழணும்னு நான் விரும்புறேன். அந்த விதை எப்ப முளைக்கும்னு யாருக்கும் தெரியாது. ஒரு நாள் முளைக்கும் — இல்லை, முளைக்காமல் போகும். ஆனா, விதை இல்லாம முளைக்கவே முளைக்காது.’
ரவி பேசவில்லை.
‘அவன் கெட்டவன்னு ஒதுக்கி விட்டா, அவனுக்கு யார் நல்லது செய்வா? நல்லவங்களுக்கு மட்டும் நல்லது செய்தால், அது வியாபாரம் ஆகும். எல்லாருக்கும் செய்தால் மட்டுமே அது அன்பு ஆகும்.’
* * *
சில வாரங்கள் கடந்தன.
ரவி ஒரு நாள் அதே தெரு வழியே வந்தான். டாஸ்மாக் கடை முன்னே நின்றான்.
அன்று அங்கே அவன்-அந்த குடிகாரன் – இல்லை. ரவி கடைக்காரனிடம் கேட்டான்.
‘அந்த பய்யன்? வரலை. இனிமே வர மாட்டான். இந்த வாரம், நானே அவன் வீட்டுக்கு என்ன எதுன்னு விசாரிக்க ஆள் அனுப்பினேன். அவன் பொண்டாட்டி சொன்னாளாம் — குடி நிறுத்திட்டான்னு. என்ன ஆச்சுன்னு தெரியல. ஒரு சாமி ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போனான் — அதுக்கப்புறம் மாறிட்டான்னு சொல்றா. எனக்கு திகைப்பாப் போச்சு.’
ரவி அந்த இடத்தில் சிறிது நேரம் நின்றான். வெளியே தகிக்கும் வெயில். தெருவில் வண்டிகள் போவதும் வருவதுமான சத்தம். ஆனால் அவன் மனசில் அந்த குரல் மட்டும் ஒலித்தது.
‘நல்லா இரு, தம்பி.’
எத்தனை எளிதான வார்த்தைகள். எத்தனை ஆழமான விதை.
தண்ணீரோ, சூரிய வெளிச்சமோ மனிதனைப் பார்த்து தரப்படுவதில்லை — நல்லவன், கெட்டவன் என்று பாராமல் அனைவருக்கும் சரிசமானமாக கிடைக்கிறது. அன்பும் அப்படித்தான். யாரையாவது நல்லவன் ஆக்க வேண்டும் என்றால், முதலில் அவனை மனிதனாகப் பார்க்க வேண்டும். தண்டிப்பதால் மனிதன் திருந்துவதில்லை — அன்பு செலுத்துவதால் மட்டுமே உள்ளே ஒரு கதவு திறக்கும்.
எழுத்தாளர் மனோகர் மைசூரு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings