எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ரெங்கனின் படத்தின் மேல் வாடிய பூமாலை தொங்கிக் கொண்டிருந்தது. அருகே ஒரு குத்து விளக்கு எரிந்து கொண்டிருந்தது. படத்தின் முன்பக்கம் போட்டிருந்த படையலில் இருந்த ஊதுபத்திகள் அந்த வராண்டாவையே புகை மண்டலமாக்கிக் கொண்டிருந்தன.
கமலம் திண்ணையின் ஓரமாய் மரத்தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். அவளது பார்வை உறைந்து போய் எங்கோ வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தது.
சாவுக்கு வந்தவர்கள் எல்லோரும் ஒவ்வொருவராய் போய்விட்டனர். தங்கையும் தங்கை வீட்டுக்காரர் மட்டும் வாசலில் உட்கார்ந்திருந்தனர். இப்போது அந்தத் தங்கையும் மெல்ல எழுந்து அக்காவிடம் வந்தாள்.
‘ எக்கோவ்… வீட்டுல எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கும். பிள்ளைக ஸ்கூல் விட்டு வந்து, ‘ விருக் விருக்’ னு உட்கார்ந்திருப்பாங்க… நாங்க கிளம்பறோம்க்கா… ‘ அவளது வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்துகொண்டே போயின.
கமலத்தால் பேச முடியவில்லை. துக்கத்தால் தொண்டை அடைத்துப் போயிருந்தது. தலையை மட்டும் ஆட்டி வைத்தாள். அக்கா சரி சொல்லிவிட்டதாக அதை எடுத்துக் கொண்டாள் இவள்.
ஹாலின் மூலையில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சாவுக்கு வந்திருந்தவர்கள் கொண்டுவந்த சீர் வரிசைகள் அவை. அவைகளையும் அக்காவையும் மாறி மாறி பார்த்த இவள், மெல்ல மூட்டைகளின் அருகே சென்று ஒரு ஐந்து கிலோ அரிசி சாக்குப் பையைத் தூக்கிக் கொண்டாள். மெல்ல அக்காவிடம் வந்தாள்.
‘ எக்கோவ்… இந்த சின்ன பையை மட்டும் எடுத்துக்கறேன்க்கா… நான் வரட்டா… ‘
இப்போது அக்காவின் தலையாட்டலுக்காக இவள் காத்திருக்கவில்லை. கிளம்பிவிட்டாள். சொல்லாமல் போகவேண்டும் என்பதாலோ என்னவோ மௌனமாய் அவளை பின்தொடர்ந்து போய்விட்டான் அவளது புருஷனும்.
சாமியானாக்காரன் பந்தலைக் கழற்றி டெம்போவில் ஏற்றிக்கொண்டிருந்தான். நாற்காலி, பெஞ்ச் எல்லாமும் டெம்போவில் ஏற ஏற, வாசலே வெறிச்சோடிப் போய்கொண்டிருந்தது.
வந்தவர்கள் எல்லோரும் ஏற்கனவே ஒவ்வொருவராய் போய்விட்டதால், வீடும் இப்போது வெறுமையாகிப் போனது. மயான அமைதி, வீட்டிலும்.
காலையில் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்ந்த பெருங்கூட்டம், இங்கும் அங்குமாய் அலைந்த மக்கள் அலை, அழுகையும் ஒப்பாரியும் பேச்சுக்களுமாய் கிடந்த இரைச்சல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து… தலைகளும் மெல்ல மெல்ல காணாமல் போய், இப்போது… இனியும்… இவள் மட்டுமே… பேச்சற்று… தனிமரமாய்…
ஊதுபத்தி புகை கொஞ்சம் குறைந்திருந்தது போல இருந்தது. திரும்பி போட்டோவைப் பார்த்தாள். மெலிதாய் புன்னகைத்துக் கொண்டிருந்தார் ரெங்கன். ஊதுபத்தி எரிந்து சாம்பலாகிக் கிடந்தது.
தளர்வுடன் மெல்ல போய் பக்கத்தில் இருந்த அட்டைப்பெட்டியைத் திறந்து நான்கு ஊதுபத்திகளை எடுத்து குத்து விளக்கில் பற்றவைத்து ஒரு வாழைப் பழத்தில் செருகினாள்.
மறுபடியும் போட்டோவைப் பார்த்தாள். கடைசி வரை பேசிக் கொள்ளவே இல்லை. இருவருக்கும் பேச்சு வார்த்தை முறிந்து வருடக் கணக்கு ஆகியிருக்கும்.
மூக்கை உறிஞ்சிக்கொண்டாள் அவள்.
காலையில், ‘ அவளும் ‘ வந்திருந்ததாக யாரோ இவளது காதுபட ரகசியம் சொன்னார்கள்.
இனி யார் வந்தால் என்ன, வராவிட்டால்தான் என்ன… வெறுப்பு வந்தது, இப்போது.
‘ தோ பார்… அங்கே போனா எனக்கு சந்தோஷம் கிடைக்குது, ஒரு மன அமைதி கிடைக்குது… போகக் கூடாதுன்னு நீ சொல்லக்கூடாது… ‘
சண்டை வரும்போதெல்லாம் அப்படித்தான் சொல்லுவார் அவர். அவர் மட்டும் போனால் பரவாயில்லை. கையில் இருக்கும் காசு பணம் எல்லாம் கூட அல்லவா அங்கே போய்க்கொண்டிருந்தன.
‘ கடைசி காலத்துக்கு நாமும் திண்டாட வேண்டுமா… ‘ இப்படி எத்தனையோ முறை தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள் அவள்.
இவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஆனால் அவளுக்கு ‘ ஒரு பையன் ‘ என்று கேள்விபட்டிருக்கிறாள். தூக்கத்தில் கூட ‘ என் ராசா… ‘ என்று அவர் பிதற்றுவதை கேட்டிருக்கிறாள். அந்தப் பையன் பெயர் ராசேந்திரன் என்று அவள் கேட்காமலேயே அவர் ஓரிருமுறை சொல்லியிருக்கிறார், இவளிடம்.
ஆஸ்த்மா முற்றிப்போய் மூச்சிரைத்து இளைப்பும் வந்து, ‘ அங்கே ‘ போகமல் இங்கேயே தங்கிவிட்டார். சாப்பாடும் குறைந்து போனது.
அவருடன் நிறைய சண்டை போட்டாகிவிட்டது. அழுது பார்த்தாகி விட்டது. இப்போது செத்துவிட்டார்… எல்லோரும் இவளைக்கட்டிகொண்டு அழுதபோது இவளுக்கு மட்டும் ஏனோ அழுகையே வரவில்லை. ஒப்புக்குச் சப்பாணியாய் எல்லோருடனும் சேர்ந்து அழுகுரலை வெளிப் படுத்தினாள். வடியாத கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். வராத சளியை சிந்திக்கொண்டாள்.
மெல்ல மெல்ல இருள் சூழ்ந்தது. அப்போது பக்கத்துவீட்டு ராஜாத்தி ஒரு தூக்குப் பையை கொண்டு வந்து அவளருகே வைத்தாள்.
‘ அக்கா… இட்லியும் சட்னியும் வச்சிருக்கேன்… வெறும் வயிறா இருக்காதேக்கா… சாப்பிட்டுட்டு படுக்கா… அசால்ட்டா வச்சிட்டு படுத்துடாத…. ‘
‘ எனக்கு வேண்டாம்… பசிக்கலை… ‘ என்றாள் அவள். ஆனாலும் அதை சொல்லக் கூட அவளுக்கு தெம்பு இல்லை.
‘ இல்ல இல்ல… சாப்பிடு… ‘ என்றுவிட்டு போய் விட்டாள் ராஜாத்தி.
சட்டென நினைவு வந்து எழுந்து போய் லைட் ஸ்விட்ச்களைப் போட்டாள். வெளியே கொடிக்கயிறுப்பக்கம் அவளது கவனம் போனது.
‘ அய்யா கடைசியா போட்டிருந்த டிரெஸ்… துவைச்சு பத்திரமா எடுத்து வைங்க. முப்பது கும்பிடும்போது இதை வச்சு படைக்கனுமில்லையா… ‘
யாரோ அவளது காதுபட மதியம் சொன்னது, இப்போது ஞாபகத்துக்கு வந்தது. அவைகளை யாரோ துவைத்துக் காயப் போட்டிருக்கிறார்கள். சட்டை தொங்கியது. வேஷ்டியைக் காணவில்லை.
வெளியே போனாள். வேஷ்டி காற்றடித்து கீழே விழுந்து கிடந்தது. அதை எடுத்து உதறி, சட்டையையும் எடுத்துக்கொண்டு திரும்பினாள். வாசலில் கிடந்த ஒரு கல்லில் கால் பட்டு கொஞ்சம் தடுமாறினாள். அந்தச் சமயம் அந்தச் சட்டை முகத்தில் பட்டது. ரெங்கனின் வாசனை.
எப்போதாவது அவரது வேஷ்டி சட்டைகளை அவள் எடுத்து மடிக்கும்போது அடிக்கும் அதே வாசனை.
திரும்பி வந்தாள். ஊதுபத்திகள் மறுபடியும் எரிந்து முடிந்து போயிருந்தன. விளக்கிலும் எண்ணெய் தீர்ந்து மெலிதான சுடர் தெரிந்தது.
‘ அக்கா பதினஞ்சு நாளுக்காவது இந்த இடத்துல விளக்கு அணையாம எறியணும்க்கா… மறக்காம தினமும் ஏற்றி வச்சிடுங்க… ‘
யாரோ சொன்னது மறுபடியும் காதுகளில் விழுந்தது.
விளக்கில் எண்ணெய் ஊற்றி திரியை சரிசெய்து எரிய விட்டாள்.
வயிறு காலியாகிக் கிடந்தது. ஆனாலும் சாப்பிட மனதில்லை.
தனது கட்டிலில் போய் படுத்துக்கொண்டாள். சில கணங்களில் திரும்பிப் படுத்தாள். அடுத்த அறையில் அவரது கட்டில் தெரிந்தது. அந்தக் கதவை எப்போதும் சாத்த மாட்டார் அவர். ஏதோ நினைத்துக் கொண்டது போல எழுந்து அங்கே போனாள். காலியான கட்டிலைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள். அவர் வைத்துக்கொள்ளும் தலையணையை தொட்டுப்பார்த்துக் கொண்டாள். நெஞ்சு அடித்துக்கொண்டது.
திரும்பி வந்து படுத்துக் கொண்டாள். கண்களை மூடிய பொழுது, மக்கள் வருவதும், அழுவதும், அலைவதும், பேசுவதும்… நிழலாய் அவளது கண்களுக்குள் வந்து போயின. நெஞ்சில் ஏதோ முட்டியது. தொண்டையை அடைத்தது.
எட்டு மணிக்கெல்லாம் அவர் சாப்பிட்டுவிடுவார். அதுவும் இரண்டு இட்லிகள்தான். ‘ திடுக் ‘ என எழுந்தாள். ராஜாத்தி கொடுத்த பையைத் திறந்தாள். டிபன் பாக்ஸில் ஆறு இட்லிகளும் சட்னியும் இருந்தது. மேஜைக்கு கொண்டு வந்தாள். கவிழ்த்து வைக்கப் பட்டிருந்த தட்டில் ஒன்றை எடுத்தாள். அது ரெங்கன் சாப்பிடும் தட்டு.
‘ ரெண்டு இட்லிக்கு மேல எதுக்கு வைக்கறே… ‘ என்று சத்தம் போடுவார்.
இப்போது இரண்டு இட்லியையும் சட்னியையும் வைத்து எடுத்துக்கொண்டுபோய் போட்டோ முன் வைத்தாள். போட்டோவைப் பார்த்தாள்.
‘ உனக்கு இப்போ தெரியாதுடி… நான் இல்லாத காலத்துல நினைச்சுப் பார்ப்பே… ‘
இவள் மீது கோபப்படும்போதேல்லாம் அவர் சொல்லும் வார்த்தைகள்.
நெஞ்சுக்குள் அழுகை முட்டியது. கண்கள் கசிய ஆரம்பித்தன.
மீதமிருந்த இட்லிகளை பார்த்தாள். சாப்பிட மனதில்லை. அப்படியே மூடிவைத்துவிட்டு கட்டிலுக்குத் திரும்பினாள்.
படுத்தபடி அடுத்த அறையை பார்த்தாள். எழுந்து அவரது கட்டிலுக்குப் போனாள். கட்டிலை வருடிக் கொடுத்தாள்.
அப்படியே அவரது கட்டிலைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தாள். அழுகை வெடித்தது. இதுவரை வராத அழுகை.
பெருங்குரலெடுத்து அழவாரம்பித்தாள்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings