in ,

இளமை எனும் இளவேனிற்காலம் (சிறுகதை) – சுஶ்ரீ

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மழை பனின்னா கூட பொறுத்துக்கலாம் இந்த வெயிலைத் தாங்க முடியலைப்பா, இதுக்காக ஒவ்வொரு இளவேனிற்காலத்திலும், சே பல் உடையற மாதிரி கரடுமுரடான தமிழ் வேண்டாம். நம்ம இந்த நூற்றாண்டின் அழகுத் தமிழுக்கே வருவோம்.

ஒவ்வொரு சம்மர் ஹாலிடேயிலும் குளிர் பிரதேசத்துக்கா போக முடியும், ஆனாலும் கொடைக்கானலுக்குப் போகலாம்னு தீர்மானம் பண்ணியாச்சு.

உங்களுக்குதான் தெரியுமே நான் மதுரைலதான் இருக்கேன்னு தெரியாதவங்களுக்கு சொல்றேன். மதுரைல பிறந்து வளந்து படிச்சு முடிச்சு வேலைக்கும் போயிட்டிருக்கற இளைஞன் நான். அப்படி ஒண்ணும் பெரிய உத்யோகம்னு அலட்டிக்க மாட்டேன். ஒரு மில்லுல உத்யோகம், அஸிஸ்டன்ட் ஸ்பின்னிங் மாஸ்டர், கெளரவமான வேலைதான்.

இவ்வளவு சொன்னயே ஶ்ரீதரா, உன் வீடு எங்கே இருக்குனு சொன்னயானு கேக்கற நண்பர்களே, வடக்கு வெளி வீதில சிம்மக்கல்லை நோக்கி நடங்க,கடோசில கவட்டை மாதிரி ரோடு பிரியுதா(Y), லெஃப்ட் எடுத்தா சிம்மக்கல், ரைட் எடுத்தா எங்க தெரு வக்கீல் புதுத் தெரு. அங்கே எஸ்.எஸ் ஸ்டேஷனரி ஷாப்க்கு எதுர்ல வக்கீல் மேகநாதன். எம்.ஏ. பி.எல்’னு மரப்போர்டு தொங்குதா, அந்த வீட்டு பின் கட்டுலதான் நாங்க இருக்கோம். நாங்கன்னா நானு, அம்மா, அப்பா மூணு பேர்தான்.

சேகர்கிட்ட சொன்னேன் கொடைக்கானல் போறேன்னு. ஆர்வமா கேக்கறான் “எப்படா யார் கூடனு”

“ஆமாம் ஹனிமூன் போறேன் பொண்டாட்டியோட அதான் நீயும் வரயானு கேட்டேன்.”

“உனக்கு இப்போதைக்கு கல்யாணம் ஆகாது. 2 வருஷத்துக்கு மேலே ஆகும்னு நரசிங்கம் ஜோஸ்யர் சொன்னார்னயே”.

“தெரியுதில்லை, அப்பறம் ஏன் நோண்டறே.”

“சரி போவோம் ஒய்ஃப்கிட்ட கேக்கறேன், ஆமாம் ராமு எதோ சொன்னானே வடக்கு வெளி வீதி ஈ.எஸ்.ஜ. ஆஸ்பத்திரிக்கு பக்கத்து வீட்டுப் பொண்ணோட உனக்கு ஸ்நேகம்னு, அது என்னாச்சு“

அவன் கேட்டவுடன் பழைய நினைவுகள் முட்டி மோதி வந்தது. காலேஜ் போறப்ப, சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் போறதுக்கு நிறைய பஸ் வந்து நிக்கற அங்கேதான் போகணும். அப்ப காலைல பஸ்க்காக அங்கே நிப்பேன். எதுர்ல உள்ள பஸ்ஸ்டாப்ல மீனாட்சி காலேஜ், மெடிகல் காலேஜ் போற பெண்கள் கூட்டம். அதுல என்னைக் கவர்ந்த அந்தப் பெண். சிம்பிளா பாவாடை தாவணி, நீண்ட கூந்தல் கரு நாகமா முன்னால தொங்க விட்டுட்டு  பளிச்னு இருப்பா.

ஒரு நாள் லன்ச்சுக்கு எதிர்ல உள்ள மாடர்ன் லாட்ஜ்ல இட்லி பார்சல் வாங்கிட்டு வெளியே வரேன். பக்கத்துல இருந்த வீட்டுக் கம்பிக் கதவை டக்னு திறந்து மார்போட ரெண்டு கனத்த புஸ்தகங்களை அணைச்சிட்டு அவளும் இறங்கி வரா. சட்னு பிரேக் போட்டு நின்னேன். இல்லைன்னா டப்பா சிதறியிருக்கும், இட்லி டப்பாங்க.

“சாரி” கிளி கொஞ்சியது.

“நல்லவேளை என் வயிறு பிழைச்சது இட்லி டப்பா விழுந்திருந்தா என் லன்ச் கோவிந்தா”

மீண்டும் வெள்ளி மணி சிணுங்கியது, ஓ சிரிக்குது அந்த சின்னக் குயில்.

“மீனாட்சி காலேஜா”

“நொ செகண்ட் இயர் மெடிகல்”

“நான் ஶ்ரீதர் தியாகராஜால ஃபோர்த் இயர் டெக்ஸ்டைல் உங்களை தினம் பாக்கறப்பவே   நினைச்சிப்பேன் மீனாட்சி காலேஜ் க்வாலிடியா தெரியலையேனு.”

“பை நான் வரேன் என் பஸ் வருது”

இப்படி ஆரம்பிச்சு எதிர்ல பாக்கறப்பல்லாம் தூரத்துல இருந்தே சின்னப் புன்முறுவல் அவ்வளவுதான்.

அந்த சண்டே சினிப்பிரியால புது ஹிந்திப்படம் பாக்கலாம்னு ராமு, சேகர் இன்னும் ரெண்டு காலேஜ் பசங்களோட போனேனா, அங்கே அவளைப் பாத்தேன் அவ தோழிகளோட.

என் மீது பார்வை பட்டவுடன், “ரெண்டு எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கு தேவைப்படுமா”

“நாங்க 5 பேர் சரி கொடுங்க, கவுன்டர்ல 3 வாங்கிக்கறோம்.”    

“ஏய் சுசீலா, வாடி முத பெல் அடிச்சாச்சு.” சத்தம் கேட்டு என் கைல டிக்கெட்டை திணிச்சிட்டு கொடுத்த பணத்தை வாங்கிட்டு ஓடிட்டா.

ஓ சுசீலாவா நல்ல பேர்தான் மனசுக்குள்ளே சுசீலானு ரெண்டு மூணு தடவை சொல்லிப் பாத்தேன்.

இடைவேளைல அவங்க இருந்த இடத்துக்குப் போய் பாப்கார்ன் வாங்கிட்டு வரவானு கேட்டேன். எல்லாம் சிரிச்சதுகள். சுசீலாதான் “சும்மா இருங்கடி, சார் முடிஞ்சா ஒரு தண்ணி பாட்டில்”

ஜில்னு ஒரு தண்ணி பாட்டில் வாங்கிக் கொடுத்தேன், எவ்வளவோ சொல்லியும் கேக்காமா ரெண்டு பத்து ரூபா தாளை கைகள்ல திணிச்சா. அதுவும் அதிர்ஷ்டம்தான், அந்த பட்டு விரல்கள் கொஞ்சமா என்னைத் தீண்டியதே.

அம்மா கேக்கறா, ”என்னடா ஆச்சு கைல எதாவது அடி பட்டுடுத்தா”

“இல்லையே ஏன் அப்படி கேக்கறே?”

“பெண்கள் விரல்கள்ல தொப்பி மருதாணி வச்சிண்டா விரல்களை ஒருமாதிரி விரிச்சு வச்சிண்டே திரிவா அந்த மாதிரி நீயும் பண்றயேனுதான்”

“போம்மா எதையாவது சொல்லிட்டு”

அந்த சுசீலாவுக்கும் இந்த மாதிரி தோணுமோ? இந்தப பெண்கள் சீக்கிரம் மனம் திறந்து பேச மாட்டார்கள். மாசங்கள் ஓடறது ஒரு முன்னேற்றமும் இல்லை, எதிர்ல பாத்தா ஒரு புன்முறுவல் அவ்வளவுதான். ஒரு நாள் அவங்க வீட்டுப் பூட்டைதான் பாத்தேன், அது எப்ப திறக்கும் தெரியலை.

டிகிரி முடிந்தது, காம்பஸ் இன்டர்வ்யூல வேலையும் கிடைச்சது. என் மனசுக்குள்ள உள்ள அந்த தேவதை கண்ல படவே இல்லை. சரி இது ஜஸ்ட் பாசிங் க்ளவ்ட்னு மனசை தேத்திக்க நினைச்சப்ப இல்லை இது மழை மேகம்தான்னு அது நடந்தது. அந்த இளவேனில் காலத்தில்..

வாசல்ல சத்தம், ”நாக கன்னிகை, பார்க்கத் தவறாதீர்கள், பாம்பு உடல், பெண் முகம், மரணக்கிணறில் மயிர்க்கூச்செரியும் சாகசம், ராட்சத ராட்டிணம், இன்னும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரே இடம் தமுக்கம் மைதானத்தில் சித்திரைப் பொருட்காட்சி காணத் தவறாதீர்கள்.”

தொடர்ந்து ஒலி பெருக்கியில் “ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதில்தான் சுகம், ஹா…ஹா..” பாடலுடன் அந்த வேன் விரைந்தது.

சாயந்திரம் தமுக்க மைதானம் ஜனசமுத்திரத்தில் மூழ்கியது. தனியா வந்த நான் அசுவாரஸ்யமா உள்ளே நுழைந்தேன். இத்தனை மகிழ்ச்சியான முகங்களைப் பாக்கறப்ப நம்மை அறியாம உற்சாகம் நம்மளையும் தொத்திக்கிறது. எங்கே பாத்தாலும் கடைகள், நடுநடுவே ராட்சச அப்பளம், பஞ்சு மிட்டாய்,அவிச்ச கடலை மசாலா சேத்து பொட்டலத்தில் இன்னும் என்னென்னவோ. எல்லாரும் சந்தோஷமாய் இருந்தார்கள்.

“பாத்து செலவு பண்ணுடி பரிமளா, கண்டதை வாங்கித் தின்னாதீங்கோ, அப்பறம் டாக்டருக்கு அழணும்.”

“சரியான கஞ்சம்பெட்டி வருஷத்துல ஒரு நாள் ஒரு பத்து ரூபா கூட செலவு பண்ணினா என்னவாம்” முனகிக் கொண்டே குழந்தைகளை தரதரனு இழுத்துக் கொண்டு சட்னு அடுத்த நொடியே எல்லாத்தையும் மறந்து அந்த கவரிங் நகைக்கடைக்குள் ஆர்வமாய் நுழையும் பரிமளாக்கள்.

ஒவ்வொரு குடும்பத்தையா, வேடிக்கை பாத்துட்டே கூட்டத்துல நடந்தேன். அடேயப்பாடி ராட்சத ராட்டிணம் பேரு சரியாதான் வச்சிருக்காங்க. இந்தக் குழந்தைகட்கு பயமே இல்லை, மேலே போறப்ப உற்சாகமா கத்துதுங்க, கீழே இறங்கறப்ப அடிவயித்தை பிடிச்சிட்டு கவுந்துக்குதுங்க. கொஞ்சம் பெரியவங்கதான் பயமுகத்தை மறைக்க முடியாம கலக்கத்தோட சைட் கம்பியை இறுக்கமா பிடிச்சிட்டு உக்காந்திருக்காங்க.

ராட்டிணம் நின்றது ஒவ்வொரு தொட்டிலா இறக்கி காலி பண்றார் ஆபரேட்டர். ஏய் அதோ அந்த மூணாவது தொட்டிலில் இருந்து இறங்கறது அவளேதான் சுசீலா. கீழே இறங்கி அந்த பெரியவரை, மூதாட்டியை அணுகினாள். அந்த மூதாட்டி அவளை அணைத்துக் கொண்டார். “ஏண்டிம்மா பிசாசு பிடிச்ச மாதிரி சுத்தறதே தலை சுத்தலையோ”

“இல்லை அத்தை ஜாலியா இருந்தது.”

ஓ அத்தை மாமாவா அவங்களுக்கு கல்யாணம் ஆகாத பையன் இல்லாம இருந்தா சரி..இப்ப என்னைப் பாத்துட்டா. ”ஏய் ஶ்ரீதர் மேலே ஏறி சுத்துங்க ஜாலியா இருக்கும்”

“எனக்கு இதெல்லாம் அலர்ஜிப்பா”

“மாமா, அத்தை இது ஶ்ரீதர் இன்ஜினியர்”

நான் மரியாதை கலந்து கை குப்பினேன், அவர்கள் சற்று சந்தேகம் கலந்து வணக்கம் சொன்னார்கள்.

“அம்மா சுசீ நாங்க இப்படி கொஞ்சம் காத்தாட புல் தரைல உக்காந்திருக்கோம் நீ கடை கண்ணியெல்லாம் பாத்துட்டு சீக்கிரம் வந்து சேரு.”

நான் அவ பின்னாலயே நடந்தேன், ”என்னாச்சு”

“இப்ப தஞ்சாவூர் மெடிகல் காலேஜ்ல இன்டர்ன்ஷிப் பண்றேன் மாமா அத்தையோட இருக்கேன்”

அப்பறம் தெரிய வந்தது, அப்பாவோட திடீர் மரணம், அடுத்து அம்மானு நிலைகுலைஞ்சு போன கதை. மதுரை வீடு பூட்டிக் கிடக்கு.

மெதுவாக, ”நன்றிக்கடன், கல்யாண வயசுல மாமா பையன்னு ஏதாவது”னு இழுத்தேன்

கலகலனு சிரிச்சா, ”பையன் இருக்கான் ஆனா 11வது படிக்கறான், ஆமாம் எதுக்கு கேட்டீங்க?”

“இன்னும் தெரியலையா?”

“சொல்லாம எப்படித் தெரியுமாம்”

“இத்தனை மாசமா உன்னைப் பாக்க முடியாம தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா”

“அப்ப இத்தனை நாளா ஏன் ஒண்ணும் சொல்லலையாம்” இதை சொல்றப்ப அவ முகம் பீட்ரூட்.

சட்னு அவ கையை என் கைல எடுத்துட்டு, ”சுசீ, சுசீ, சுசீலா.” வேற ஒண்ணும் வாயிலிருந்து வரலை, தொண்டை அடைத்தது.

“சரி சரி பப்ளிக் பிளேஸ், கண்ட்ரோல் பண்ணிக்கங்க.”

அந்த நாளைக்கப்பறம் வந்த நாலைந்து மாதங்கள்தான் சொர்க்கமோ.

இந்த அபிராமி மில்காரனுக்கு பேராசை, இங்கே வர வருமானத்தை வச்சு மில்லை ஓட்டினா என்னவாம், ஜெர்மனில ஏதோ ஒரு பெரிய டெக்ஸ்டைல் கம்பெனியோட கொலாப்பரேஷனாம். சரி வச்சிக்கோ என்னை ஏன் தொந்தரவு பண்ணணும்.

ஆறு மாசம் டிரெய்னிங்னு என்னை ஒரு மனசா செலக்ட் பண்ணி அனுப்பறாங்க. ஆறுமாசம்தானே போயிட்டு வாங்க நல்ல எதிர்காலம் இருக்கும்னு சுசியும் சொன்னதால இந்த ‘டிரெஸ்டன்’ என்னும் குளிர் நரகத்துக்கு, சாரி நகரத்துக்கு வந்து சேர்ந்தேன். நல்ல அடக்கமான வீடு, வேலைக்கு சி்ஷூனு சைனாப் பையன்னு வசதிதான்.

அப்ப்ப ஊர்ல அம்மா, அப்பா, சுசிலாவோட ஃபோன் பேசினேன். சுசிலா பத்தி பேரண்ட்ஸ்க்கும் தெரியும், டாக்டர் பொண்ணுன்றதால மறுப்பேதும் இல்லை. சுசிலா 2 மாசம் கான்டாக்ட்ல இருந்தா,  அப்பறம் திரும்ப அந்தர்த்யானம். கிட்டத்தட்ட ஒரு வருஷ காலத்துக்கப்பறம்தான் திரும்ப முடிஞ்சது. சுசீலா எங்கே தெரியலை, வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.

அம்மா, ”சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா, அந்த நர்ஸ் பொண்ணு என்ன ஆச்சு.”

“அம்மா, சுசீலா டாக்டர்ம்மா”

“ஏதோ ஒண்ணு சீக்கிரம் பண்ணிக்கோ”

அவளை எங்கே தேடுவேன்.

இப்ப ஆரம்பத்துக்கு வாங்க, முதல்ல சொன்ன இளவேனிர்காலம் கொடைக்கானல் டிரிப் கூட வர சேகர், கார்லயே போக தீர்மானம் ஆச்சு.

காலைல 6 மணிக்கே புறப்பட்டாச்சு, 9 மணிக்குள்ளே போயிடலாம். காட்டேஜ் கூட மூணு நாளைக்கு புக் பண்ணியாச்சு. நிதானமாதான் டிரைவ் பண்ணினேன். வழில ஒரு வ்யூ பாயின்ட் இறங்கி தாளையாறு நீர் வீழ்ச்சியின் அழகை ரசிச்சோம். திடீர்னு தப்னு சத்தம், சேகர் கீழே விழுந்து கிடக்கான். ஒரே பயம் அவனை அள்ளிக் கார்ல திணிச்சு பக்கத்துல உள்ள ஆஸ்பத்திரி விசாரிச்சு போனேன்.

அந்த கிராமத்தில் மலைச்சரிவுல டிஸ்பென்சரி கம் வீடு போல டாக்டர் சுசீலா மாதவன்னு போர்டு. அவளேதான் கல்யாணம் ஆச்சு போல. என்னாச்சுனு எழுந்து வந்தா, இப்ப சேகர் கொஞ்சம் நார்மல்.

“திடீர் மயக்கம்”

அவனைப் பரிசோதித்த டாக்டர், ஒண்ணுமில்லை எக்சர்ஷன், சட்னு  ஆல்ட்டிட்யூட் மாறினதால மயக்கம், ரெஸட் இஸ் எனஃப்.

இப்ப சாவகாசமாய் என்னைப் பாத்தா, ”எப்படி இருக்கீங்க, ஜெர்மனி லைஃப் எப்படி”னு கேட்டுட்டே வெளியே நடந்தா.

சற்று கோபம் சற்று பதட்டத்துடன் நான், ”திடீர்னு வெட்டி விட்டுட்டு போவேனு எதிர் பாக்கலை, எப்ப கல்யாணம் ஆச்சு”

என்னை நிதானமாய் ஏறெடுத்துப் பாத்தா, “மாதவன்றதைக் கேக்கறயா அது என் அப்பா, உக்காரு இந்த சோஃபால பூரா சொல்றேன். என் இன்டர்ன்ஷிப் முடிஞ்சு டிஸ்டிங்ஷன்ல டிகிரி. டிபார்ட்மென்ட்  சார்புல தஞ்சாவூர் வாணிமஹால் ஹோட்டல்ல செலிப்ரேஷன். புரொபசர் காளிதாஸ்தான் ஏற்பாடெல்லாம். பங்ஷன் முடிஞ்சு புறப்படறப்ப ராத்திரி 10 மணி. என்னவோ தலை சுத்தற மாதிரி ஃபீலிங். காளிதாஸ் என்னைத் தாங்கி கூட்டிட்டு போனார். திரும்ப முழிக்கறப்ப அவன் மடில என் தலை, குனிஞ்சு உதட்ல முத்தமிடறான்.

பதறி எழுந்தேன் “என்ன சார் இப்படி பண்றீங்க“

சட்னு எழுந்து இறுக அணைத்து மீண்டும் இதழ்களில் முத்தமிட்டு படுக்கைக்கு அணைத்து இழுத்தான். அவன்கிட்ட இருந்து தப்பி எப்படி வெளியே வந்தேன்னு இன்னுமே ஆச்சரியமா இருக்கு. அந்த சண்டாளனை சும்மா விடறதில்லைனு தீர்மானம் பண்ணி நான் ஆக்‌ஷன் எடுக்கறதுக்குள்ளே அடுத்த நாளே எதையோ குடிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டான். இப்ப சொல்லு உன்னைத் தேடி வர தைரியம் எனக்கு எப்படி வரும்”

நான் கண்ணீருடன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டேன். எப்படி எப்படியோ பேசி சமாதானம் பண்ணினேன். சேகர் நின்று எங்களை வேடிக்கை பாத்தான், ”நான் வேணா பஸ்ல மதுரைக்கு திரும்ப போகட்டா”

 நானும் சுசீலாவும் கண்ல தண்ணி சில்வர் ஃபால்சா கொட்ட சிரிச்சோம். 

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)  

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காலமிது காலமிது (சிறுகதை) – சுஶ்ரீ

    சின்னக் கண்ணன் அழைக்கிறான் (சிறுகதை) – சுஶ்ரீ