எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ஆனி மாசத்துல யாராவது கல்யாணம் வைப்பாளோ”பங்கஜம் தன் கணவர் வைத்தியிடம் அலுத்துக் கொண்டாள்.
“அதில்லைடி மாப்பிள்ளையோட அண்ணா தன் குடும்பத்தோட அமெரிக்கா போய் செட்டில் ஆகப்போறாளாம், ஆனி,ஆடினு பாத்திண்டிருந்தா பெரிய பையன் குடும்பம் இல்லாம எப்படிகல்யாணம் பண்றதுனு மாமி கவலைப் படறா.”
“அவா யாரோ குரு ஸ்வாமிகளிடம் கேட்டாளாமே, அவரும் ஆனி மாச கடோசி ஞாயித்துக் கிழமை வைக்கலாம்,விசேஷமா இருக்குன்னுட்டாராமே.”
“ஆமாண்டி பங்கஜம், நல்ல சம்பந்தம், பையன் அப்படியே தங்கம், என்ன மரியாதையா நடந்துக்கறார். அவா இஷ்டத்துக்கு முகூர்த்தம் வைக்கட்டும் விடு, ஊதிப் பெரிசாக்காதே.
“சரி ,சரி, எனக்கு மட்டும் என்ன ஏதோ சிறுசுகள் கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இருக்கட்டுமேனுதான் சொன்னேன் கல்யாணம் ஆனவுடனே ஆடினு சொல்லி பிரிச்சு வைக்கணுமேனு ஆதங்கம் வேற என்ன”
மெட்ராஸ்ல இருந்து ஶ்ரீதரன் குடும்ப சகிதம் திருப்பதிக்கு மல்லிகாவை பொண்ணு பாக்க போறப்ப ஒரு கூட்டமாதான் போனா. அம்மா,அப்பா,அண்ணா,மன்னி அவா குழந்தேள், அக்கா, அத்திம்பேர்,அவா குழந்தேள்னு டிரெயின்ல புளியோதரை,தயிர்சாதம் பூரி,கேசரினு கூடைல கட்டிண்டு பிக்னிக் மாதிரி கலகலனு போனா.
கீழ்த் திருப்பதி ஸ்டேஷன் வந்து வெளில வரப்ப பொண்ணைப் பெத்த வைத்தீஸ்வரன், அவரோட ஏதோ சொந்தம் பாச்சு மாமா ஸ்டேஷன் வாசல்ல காத்திண்டிருந்த ஒரு வாக்சால் வேனோட. எல்லாத்தையும் திணிச்சுண்டு வைத்தீஸ்வரனோட பூர்வீக வீடு இருந்த சீனிவாச மங்காபுரம் நோக்கி விரைந்தது (15 மைல் வேகத்தில்) அந்த வேன் குலுங்கி குலுங்கி. வைத்தி டிரைவர் பக்கத்தில் உக்காந்து “பாத்துப் போடா, குழில ஏத்தி இறக்காமனு” அடிக்கடி பாடம் எடுத்திண்டிருந்தார்.
சுண்ணாம்பு காவிப் பட்டை அடித்த அந்த அக்ரஹார வீடே ஒரே கலகலப்பு. இப்பவே கல்யாண வீடு மாதிரி. அந்த வீட்டு முகப்பில் லலிதா கிரகம்னு அழகா மார்பிள்ல செதுக்கியிருந்தது.
“இது எங்க தாத்தா கட்டின வீடு , பாட்டி பேருதான் லலிதா, வழிப் போக்கர்கள் வந்தா இருக்க கொள்ள இந்த ரெண்டு திண்ணையும், இது நெல் கொட்டி வைக்கற களஞ்சியம்”, வைத்தி ரன்னிங் கமென்ட்ரி கொடுத்துண்டே எல்லோரையும் அழைத்து வந்தார்.
மணக்க மணக்க முந்திரியோட நெய் மிதக்கும் கேசரி, அரையடி நீளத்துல உப்பிச் சிவந்த வாழைக்காய் பஜ்ஜி, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய தட்டில் வீடே மணக்கும் ஆவி பறக்கும் பசும்பால் காபி டம்ளர்களுடன் அன்னமாய் மிதந்து வந்த மல்லிகாவைப் பார்ததவுடன் கூடத்தில் பேச்சு நின்று போனது.
ஏற்கனவே சூடாய் இருந்த பாதி வாழைக்காய் பஜ்ஜியை முழுங்கவும் முடியாமல், எடுக்கவும் முடியாமல் திணறிப் போனான் ஶ்ரீதரன். இவ்வளவு அழகான பெண் தன் மனைவியாக வாய்ப்பாளா என திகைத்தான்.
அவன் முன் தட்டு நீட்டப் பட்ட போது இரு ஜோடிக் கண்களும் மோதிக் கொண்டன. காபி டம்ளரை எடுத்த கைகள் லேசாக நடுங்கியதைப் பாத்து ஒரே ஒரு மைக்ரோ வினாடி மல்லிகாவின் கண்கள் சிரித்தது.
எல்லோருக்கும் திருப்தி.ஆச்சாரிய குருவை ஆலோசித்து முகூர்த்த தினம் குறிக்கலாம்னு ஶ்ரீதரனோட அம்மா சொல்லிட்டா.
ஆரம்பத்துல சொன்ன வியாக்யானம்தான் இப்ப வைத்தி வீட்டில் நடந்தது. முடிவு பண்ணியாச்சு இனி வேறு பேச்சுக்கு இடமில்லை. அதிக நாள் பாக்கி இல்லை. வெள்ளிக்கிழமை கார்த்தால வாத்யாரைக் கூப்டு கணபதி ஹோமம் பண்ணி வாசல்ல முகூர்த்தக்கால் நட்டாச்சு.
லலிதா கிரகத்தில் இப்ப உற்சாகப் பரபரப்புக்கு குறைவில்லை. கூடத்தில் அக்ரகாரத்து மாமிகள் கூடி அப்பளம் இட்டார்கள். பின்புறம் மாட்டுக் கொட்டாய்க்கு பக்கத்துலய பந்தல், கோட்டை அடுப்பு போட்டு மணக்க மணக்க பட்சணங்கள் தயார் பண்ண வேம்பு ஐயர் குழு வந்தாச்சு.
மாப்பிள்ளை அழைப்புக்கு குருசாமி டிரைவிங் ஸ்கூல் மாஸ்டர் தன் ஜீப்பை (போன ஆயுத பூஜைக்கு அப்பறம்) நன்றாகக் கழுவி பூக்களால் அலங்கரித்து கொடுத்தார். நின்று போனால் எப்படி மோட்டாரை ஹேண்டில் சொருகி சுத்தி கிளப்பணும்னு டிரைவர் செந்திலிடம் பாடம் சொன்னார். குழந்தைகள் முண்டியடித்தன அந்த ஜீப்பில் ஏற.
அந்தக் கால முறைப் படி 3 நாள் தடபுடலாய் கல்யாணம். தெருவெல்லாம் பந்தல் போட்டு ஊருக்கெல்லாம் விருந்து. ஒரு வழியாய் கல்யாணம் முடிந்தது.சாந்தி முகூர்த்தம் இப்பவே வைக்கலாமா வேண்டாமானு பெரியவர்கள் வாக்குவாதம் ஶ்ரீதரனுக்கு டென்ஷனைக் கூட்டியது.
கடேசியா சீனியர் மோஸ்ட் அலமேலுப் பாட்டி அடிச்சு சொல்லிட்டா, இன்னிக்கே வைங்கோ இல்லைன்னா ஆடி பிறந்துடும் சிறுசுகள் ஏமாந்து போயிடும்னு.
மாடி அறை அந்த ஆகி வந்த பிரம்மாண்ட தேக்குக் கட்டிலுடன் உடனடியாக அலங்கரிக்கப் பட்டது. ஶ்ரீதரன் பட்டு வேட்டியும் அங்கவஸ்திரத்துடன் நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். என்ன பேசுவது அசலாத்து பெண்கள்கிட்ட பேசி பழக்கமில்லையே, நண்பன் ஆனந்த் ரவி சொன்னாப்பல வந்தவுடனே கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்துடலாமா. பயந்து போய் அழுதுட்டா என்ன பண்றது.இப்பவே உடம்பு உதறரதே.
அறைக்கு வெளில ஒரே பாட்டும் கும்மாளமும். யாரோ ஒரு பெண் தன் கீச்சுக் குரலில் “கன்னி வேண்டுமா,கவிதை வேண்டுமா,காதல் கதைகள் சொல்லட்டுமானு” பாடித்து. இன்னொரு பெண் தன் கட்டைக் குரலெடுத்து, ”அத்தான் என்னத்தான், அவர் என்னைத்தான்னு” வெக்கமே இல்லாம பாடித்து.
கதவு திறந்தது, பெண்கள் உள்ளே பிடித்துத் தள்ள தேவதையாய் பிரசன்னமானாள் மல்லிகா. பால் டம்ளரை ஶ்ரீதரன் கையில் கொடுத்து காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணினப்ப, ஏதோ ஒரு படத்தில் சர்வாலங்கார பூஜிதையா சாவித்திரி,ஜெமினி கணேசன் காலில் விழுந்தது அசந்தர்ப்பமாய் ஞாபகம் வந்தது.
சிரித்த படி மல்லிகாவின் தோளணைத்து கட்டிலில் அமர வைத்தான். மல்லிகா அப்படி ஒண்ணும் பயப்படலை. அவனைப் பார்த்து புன்னகைத்தாள். மெதுவே பேச்சுக் கொடுத்தான் ஶ்ரீதர். பேசும் போதே மெதுவாக கைகள் இணைந்தன.
“உனக்கு இந்த சாந்தி முகூர்த்தம் பற்றி தெரியுமா”
“ம்”
ஆச்சரியத்துடன் “தெரியுமா எப்படி எனக்கே இன்னும் முழுசா தெரியாதே”
“சீ, தெரியும்னா வாரப் பத்திரிகைகள்ல அரசல் புரசலா எழுதுவாளே அதுதான் தெரியும்”
கொஞ்சம் அருகில் வந்து இறுக்கினான். மல்லிகா, ”என்ன இப்படி எல்லாத்துலயும் அவசரம் உங்களுக்கு”
“ஆமாம் என் நண்பர் சொன்னாப்பல செய்யலையேனு சந்தோஷப் படு”
“அவர் என்ன சொன்னார்”
“இப்படி இறுக்கமா கட்டிப் பிடிச்சு…..”
“ம்ம்ம் மூச்சு முட்டறது விடுங்கோ, இப்படியா சீ”
இதுக்கு மேல வாசகர்களே நாம சமத்தாய் வெளியே இருப்போம் சிறுசுகள் சந்தோஷமா இருக்கட்டும்.
மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் புறப்படணும். பொண்ணை இப்ப கூட அனுப்பறதா இல்லை ஆடி புறந்தாச்சு. இரு இளம் பறவைகளும் இப்ப வேறு வேறு திசைகளில். ருசி கண்ட பூனை ஶ்ரீதரன் ஏக்கப் பெருமூச்சுகளுடன் இரண்டு மூன்று தினங்களைக் கழித்தான். மூன்றாவது நாள் காலை 5 மணிக்கே கோயம்பேடுல பஸ் பிடிச்சு நேரா திருப்பதி, அங்கேருந்து சீனிவாச மங்காபுரம். நடை தூரம்தான் அக்ரகாரம், போஸ்ட் ஆபீசுக்கு எதுத்த வீடுதான் லலிதா கிரகம்.
போஸ்ட் ஆபீஸ் வரை வந்தாச்சு எப்படி உள்ளே போறது மாமனார்,மாமியாருக்கு என்ன சொல்றது திகைத்து நின்றான்.
போஸ்ட் மேன், அந்த கிளார்க்கிட்ட பேசறது கேட்டது. கல்யாணம் முடிஞ்சு மூணு நாளாச்சு இன்னும் வாழ்த்துத் தந்தி வந்துண்டே இருக்கு. வைத்தி சாரும் அவர் சம்சாரமும் காலைலயே திருப்பதி பஸ்க்கு காத்திட்டிருக்கறதைப் பாத்தேன். இந்த தந்திகளை அந்த மல்லிகாப் பொண்ணுகிட்டயேதான் கொடுக்கணும் போல இருக்கு.
இது போறாதா, தெய்வம் தந்த வரம். தபால்காரர் டெலிவரி செய்யப் போனதையும், மல்லிகா ஏதோ பேசி சிரித்தவண்ணம் அவற்றை வாங்கி உள்ளே போனதையும் இங்கிருந்தே பார்த்தான். அடுத்த ஐந்து நிமிஷத்தில் மீண்டும் லலிதாகிரகத்து பெரிய கதவின் கொண்டி சத்தமெழுப்பியது.
திரும்ப யாரு இப்பனு அலுப்புடன் புறங்கையால் தலைமுடியை திருத்திக் கொண்டே கதவைத் திறந்தாள் மல்லிகா. அண்ணலும் நோக்க அவளும் நோக்கினாள் முகம் சிவக்க திகைப்புடன்.
உள்ளே வாங்கோ, அம்மா அப்பா திருப்பதி போயிருக்கா. என்ன திடீர்னு.இன்னும் சாமான்லாம் கூடம் பூரா இறைஞ்சு கிடக்கு, இருங்கோ ஜலம் கொண்டு வரேன். இன்னும் வெட்கம் பூராவுமாக விலகலை.
ஶ்ரீதரனுக்கும் அதே நிலை “நீ ஜலத்தோட டம்ளரை நீட்டறப்ப அன்னிக்கு ரூம்ல பால் டம்ளரை நீட்டின ஞாபகம்தான் வரது.”
“போங்கோன்னா கண்டதை பேசிண்டு, யாராவது இப்ப நம்மளைப் பாத்தா என்ன பேசுவா.”
யாரும் பாக்க மாட்டா உன்னை என்னால ஒரு க்ஷணம் கூட மறக்க முடியலை சட்னு வா பக்கத்துல. மல்லிகா அருகில் வரப்ப. மீண்டும் லலிதாகிரகத்து பெரிய கதவின் கொண்டி சத்தமெழுப்பியது.
அலமேலுப் பாட்டி வெளில இருந்து, ”ஏண்டி பொண்ணே மல்லிகா, உங்கம்மா பொண்ணு தனியா இருக்கா துணைக்கு போங்கோனு சொல்லிட்டுப் போனாளே”
பின் வாசல் கதவைத் திறந்து ஶ்ரீதரன் பஸ்ஸ்டாண்ட் நோக்கி நடந்தான்.
எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings