in ,

ரிடர்ன் (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

திருவரம்பூரில் இருந்து டவுன் பஸ் பிடித்து மத்திய பேருந்து நிலையம் வந்தான்.  ‘ ஒன் டூ ஒன் ‘ போர்டு போட்ட மதுரை பஸ்கள் நிறைய நின்றிருந்தன.  இஞ்சின் ஆனிலிருந்த ஒன்றில், ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டான்.  

நாகராஜ்க்கு ஒரு கார் சர்வீஸ் செய்யும் கம்பெனியில் மெக்கானிக் வேலை.  மெக்கானிகல் இஞ்சினீயரிங்கில் டிப்ளோமா படித்தான்.  எங்கெங்கோ வேலைத் தேடி, கடைசியில் திருவரம்பூரில் இருக்கும் அந்த மெக்கானிக் ஷாப்பில் வந்து வேலைக்குச் சேர்ந்தான். இருபத்தைந்தாயிரம் சம்பளம். தினசரி பேட்டா, தீபாவளிக்கு போனஸ்.  வீடு வேங்கூரில். ஆறு கிலோ மீட்டர் தூரம்தான். டூவீலரில் வந்துபோகலாம்.

அருகில் வந்த கண்டக்டரிடம், மாட்டுத் தாவணிக்கு ஒரு டிக்கட் கேட்டு வாங்கிக்கொண்டான். டிக்கட்டை வாங்கிய பிறகு மெல்ல கண்களை மூடிக்கொண்டான். மீனாக்ஷி இவனது கண்களுக்குள் வந்து் ஒரு ஹாய் சொல்லிவிட்டு மறைைந்தாள்.  யோசனை ஓடியது.

வேலை கிடைத்ததும் ரொம்பவும் குதூகலத்துடன் வேங்கூருக்கு பஸ் பிடிக்கப் போனான். அப்பா அம்மாவிடம் சாக்லேட் கொடுத்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளலாமே என்றெண்ணி கண்ணுக்குத் தெரிந்த ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்குள் நுழைந்தான்.

அது ஒரு மீடியம் சைஸ் கடைதான். ஒரு பெண் மட்டும் காணப்பட்டாள். ஃபோனில் பேசிக் கொண்டிந்தவள், இவனைப் பார்த்ததும் ஃபோனை வைத்துவிட்டு வந்தாள்.  ‘ஃபைவ்ஸ்டார் சாக்லேட்… ‘ என்றான்.

ஒரு டப்பாவுக்குள் கைவிட்டபடியே, ‘ ஒவ்வொன்றும் இருபத்தைந்து ரூபாய்… ‘ என்றாள் அவள்.

‘ ஐந்து போதும், ஆனாலும் ஆறாகக் கொடுங்கள்… ‘  என்றான், புன்னகையுடன்.

‘ நூற்றைம்பது ரூபாய் கொடுங்கள்… ‘ என்று சொன்னபடி ஆறு சாக்லேட்டுகளை எடுத்து ஒரு கவரில் போடப் போனாள்.

‘ ஐந்தை மட்டும் அதில் போடுங்கள்… ஒன்றை கையில் கொடுங்கள்… ‘ என்றான். பணத்தைக் கட்டினான். அந்த ஒரு சாக்லேட்டை கையிலெடுத்து அவளிடம் நீட்டினான்.

முகத்தில் அதிர்ச்சியைத் தேக்கி, ‘ என்கிட்டே எதுக்கு நீட்டறீங்க… ‘ என்றாள்.

‘ ரெண்டு சந்தோஷமான விஷயம்ங்க… ‘ என்றான் இவன்.

‘ புரியல… ‘ என்றாள் அவள்.

‘ நான் உள்ளே வரும்போது நீங்க பேசிக்கிட்டிருந்ததை கவனிச்சேன்… உங்களுக்கு இன்னிக்கு பிறந்த நாள்னு தெரிஞ்சுக்கிட்டேன்… அது ஒரு சந்தோஷமான விஷயம் தானே… ‘ என்றுவிட்டு சாக்லேட்டை இன்னும் நீட்டிகொண்டே, ‘ அழகான இந்தப் பொண்ணுக்கு என்னோட இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்… ‘ என்று புன்னகைத்தான்.

அவளது முகத்தில் சட்டென பரவசம்.

‘ என்னோட பிறந்த நாள்னா எனக்குதானே சந்தோஷம். கடைக்கு சாமான் வாங்க வந்த உங்களுக்கெப்படி… ‘ என்று மடக்கினாள் அவள்.

‘ ஏங்க… ஒரு அழகான பொண்ணு… பர்த்டேனு தெரிஞ்சிடுச்சு… நான் வேற சாக்லேட் வாங்கிட்டிருக்கேன். அதை கையில வச்சிக்கிட்டு வெறும் வார்த்தையால எப்படிங்க வாழ்த்து சொல்றது… அதான் வாழ்த்துக்கள் சொல்றேன்… ப்ளீஸ் ரெண்டையும் வாங்கிக்கங்களேன்… ‘

அவளது முகத்தில் இப்போது புன்னகை தாண்டவமாடியது. சாக்லேட்டை வாங்கிக்கொண்டு புருவங்களை வளைத்தாள். ‘ ரெண்டுன்னு சொன்னீங்க… ‘

சிரித்தான் இவன், ‘ இன்னொன்னு… என்னோட வாழ்த்துக்கள்… ‘

‘ ஓ… ‘ என்றவள், ‘ தேங்க்ஸ்… தேங்க்ஸ்… ‘ என்றுவிட்டு, ‘ ஒன்னு உங்க சாக்லேட்டுக்கு… இன்னொன்னு உங்க வாழ்த்துக்கு… ‘ என்றாள்.

இப்போது கேட்டாள், ‘ சரி… முதல்லேயே ரெண்டு சந்தோஷம்னு சொன்னீங்க… அது என்ன இன்னொரு சந்தோஷம்… ‘

‘ ஓ… அதுவா… எனக்கு வேலை கிடைச்சிருக்குங்க… அதான் அந்த ரெண்டாவது சந்தோஷம்… ‘

‘ உங்களுக்கு வேலை கிடைச்சா உங்களுக்கு சந்தோஷம்… எனக்கெதுக்கு சாக்லேட்… ‘

‘ என்னோட சந்தோஷத்தை உங்ககிட்ட பகிர்ந்துக்கலாமேனுதான்… ‘

இன்னும் கொஞ்சம் ஆர்வமானாள். ‘ சரி.. எங்கே… என்ன வேலை… ‘

‘ நாலு கட்டிடம் தள்ளி ஒரு மெக்கானிக் ஷாப் இருக்கு… உங்களுக்குத் தெரியுமான்னு எனக்குத் தெரியலை…  அங்கேதான்…  மெக்கானிக் வேலை… ‘

புருவங்களை சுருக்கியவள்… ‘ கடை பேரு… ‘ என்றாள்.

உடனே பாக்கெட்டில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான்.

புன்னகை செய்தாள். ‘ அப்போ நாம இனிமே தினமும் சந்திப்போம்… ‘ என்றாள்.

‘ தினமுமா… ‘ திடுக்கிட்டான் இவன்.

‘ ஆமா… அந்தக் கடை பக்கத்துல ஒரு வீடு இருந்ததா… ‘

‘ கவனிக்கலை… ‘

‘ பரவாயில்லை… அந்த வீடு எங்களோடதுதான். அந்தக் கடையும் நாங்க கட்டி வாடகைக்கு விட்டதுதான்… கடை ஓனர் எங்களுக்கும் தெரிஞ்சவர்தான்… ‘

திடீரென்று குதூகலம் இவனுக்கு.  ஒரு அழகான பெண். ஒர்க்ஷாப் அவர்களுடையது என்கிறாள். பக்கத்திலேயே அவளது வீடு என்கிறாள். தானாகவே இனி தினமும் சந்தித்துக் கொள்வோம் என்கிறாள். வேறென்ன வேண்டும்.

உடனே கையை நீட்டினாள் அவள், ‘ வாழ்த்துக்கள்… ‘ என்றபடி.

தனது கையை தனது சட்டையில் துடைத்துவிட்டு இவனும் நீட்டினான்.

‘ என் பேரு மது… மதுமிதா… ‘ சொல்லிவிட்டு சிரித்தாள்.

‘ என்பேரு ராஜ்… நாகராஜ்… ‘ இவனும் இளித்தான்.

அப்படித்தான் ஆரம்பித்தது அவர்களது தொடர்பு… அது நட்பாக மாறி பிறகு காதலாக மாறி… கல்யாணத்தில் முடிந்து…

மது வீட்டில் ஒப்புக்கொண்டார்கள். நாகராஜ் வீட்டிலிருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. ஜாதி குறுக்கிட்டது. எல்லாம் அசுரவேகத்தில் நடந்து முடிந்தது.

மாமியார் வீட்டிலேயே தங்கிக்கொண்டான். மெக்கானிக் வேலையும் பார்த்துக் கொண்டான்.  அன்பான மனைவி… பிடித்த வேலை. சந்தோஷமாய் போய்க் கொண்டிருந்தது, வாழ்க்கை… கொஞ்ச நாள் முன்னாள் வரை…

மெல்ல மெல்ல மது அம்மாவின் கைப்பாவை என்று தெரிந்தது. அவனது சம்பளம் மொத்தத்தையும் மாமியாரே வாங்கிக்கொண்டார்கள். ஏ.டி.எம்.கார்டையும் பிடுங்கிக் கொண்டார்கள்.  மது மறுத்து பேசவில்லை. வெறுத்துப் போனான்… சண்டை பற்றிக் கொண்டது. கொஞ்சநாளில் முற்றியும் கொண்டது.  முறுக்கிக்கொண்டு போனார்கள்.

வீட்டில் தங்கப் பிடிக்காமல் தனது மெக்கானிக் நன்பனின் ரூமில் தங்கிக் கொண்டான். தண்ணி அடித்தான். சிகரெட் பிடித்தான்.  துக்கம் குறையவில்லை. தண்ணி ரொம்பவும் அடித்தான். சிகரெட் நிறைய பிடித்தான். மெக்கானிக் ஷாப்புக்கு போவதை நிறுத்தினான். முதலாளி கூப்பிட்டார். மனது சரியில்லை என்று ஃபோனை கட் பண்ணினான்.

வீட்டுக்கு ஒருமுறை போய்ப்பார்த்தான். மது பேசவில்லை. மாமியார் பழையபடியே முறுக்கிக் கொண்டு போனாள். பசியுடன் போயிருந்தான். டீ கூட கொடுக்கவில்லை. சாப்பிட சொல்லவுமில்லை. வெறுப்புடன் நண்பனின் ஜாகைக்கே திரும்பிவிட்டான்.

எதேச்சையாய் மீனாக்ஷி கூப்பிட்டாள். அவனுடன் டிப்ளோமா படித்தவள். அவள் இருப்பது மதுரையில்.  விவரம் சொன்னான் அழுகையுடன்.

‘ அவசரப் பட்டுவிட்டாய்… ‘   

‘ அவள் அழகில் மயங்கிவிட்டேன்… ‘

‘ சரி… ஒரு சேஞ்சுக்காக மதுரைக்கு வந்து போ… மீனாக்ஷி காத்திட்டிருப்பா… ‘  

‘ கடவுளைப் பார்த்து என்ன பண்ணப் போறேன்… ‘

‘ மண்டு… நான் மதுரை மீனாட்சியை சொல்லலை… என்னைச் சொன்னேன்… நான் மட்டும்தான் வீட்டுல இருக்கேன்… வந்து தங்கிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டு போ… எல்லாம் சரியாகிடும்… ‘ என்றாள்.

சபலம் தட்டியது.

ஸ் நகர்ந்தது.  முழித்துப் பார்த்தான். பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தது. மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான். 

மீனாட்சிக்கு நிறைய ஆண் நண்பர்கள் உண்டு.  இவனிடம் கூட ஒருமுறை வந்து தனது காதலைச் சொல்லியிருக்கிறாள்.

இப்போது இடையில் சொன்னாள், ‘பேசாம நீ என்னையேக் கல்யாணம் பண்ணிட்டிருந்திருக்கலாம்… ‘

‘ விதி யாரை விட்டது… ‘ கண்களை மூடியநிலையிலேயே இப்போது சிரித்துக்கொண்டான், விரக்தியாய்.

‘ என்னை விரும்பிய மீனாட்சியை பார்க்கப் போகிறேன்… ‘ மனது குறுகுறுத்தது.

திடீரென்று ஃபோன் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான். மதுவின் நம்பர்.  

‘ ஏங்க… எங்க இருக்கீங்க… உடனே வீட்டுக்கு வாங்க… எங்கம்மா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாங்க… முட்டி உடைஞ்சு ரத்தமா கொட்டுது… ‘ பதறினாள் மது.

ஃபோனை கட் பண்ணிவிட்டு, முனகிக்கொண்டான். ‘ பாதகி… ‘ கடுப்பு வந்தது.

மறுபடியும் அலறியது ஃபோன். ‘ ஏங்க… வந்துட்டிருக்கீங்களா… மயக்கம் போட்டுட்டாங்க அம்மா… ஐயோ வாங்களேன்… ப்ளீஸ்… எங்கம்மாவைக் காப்பாத்துங்க… ‘

அவள் அழுது பார்த்திருக்கிறான். அதில் திமிர் இருக்கும். இப்போது இந்த அழுகை நெஞ்சை என்னவோ செய்தது.

‘ மீனாக்ஷி காத்திட்டிருப்பா… ‘  தோழி சொன்னது எக்கோவாக கேட்டது.

‘ வந்துட்டிருக்கீங்களா… ‘ மது சொன்னதும் மறுபடியும் கேட்டது.

நெஞ்சுக்குள் என்னவோ செய்தது.   சட்டென எழுந்தான்.

‘ கண்டக்டர் வண்டியை கொஞ்சம் நிறுத்தச் சொல்லுங்க… ‘ கத்தினான்.

ஜன்னல் வழியே பார்த்தான். மன்னார்புரம் ரவுண்டானா தெரிந்தது.  

இறங்கினான். ஆட்டோ பிடித்தான்.

‘ எங்கே ஸார்… ‘

‘ திருவரம்பூர்… ‘

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பட்ஜெட் பரிமளா (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

    குளியலறை (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு