இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ராஜஹம்சனும் மதுவந்தியும் காதலர்கள் கோயமுத்தூர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள் மதுவந்தி. ஹம்சனின் அக்கா உமையாளும் மதுவந்தி தான் தன் தம்பியின் மனைவியாக வேண்டும் என ஆசைப்படுகிறாள்.
ஊட்டியில் இருந்து மதுவின் தந்தை ஜெகன்நாதனுக்கு அவள் படிக்கும் கல்லூரியில் இருந்து வரும் போன் காலால் அவர் மிகுந்த கவலை அடைகிறார்.
ஊட்டியின் மாலை நேர குளிர்காற்று உமையாளின் உடலை சிலிர்க்க வைத்தது. அவள் மனம் முழுவதும் ஒரு சந்தோஷ எதிர்பார்ப்பில் துடித்தது. ஹம்சனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய பிரார்த்தித்தது. அதுவும் ராஜஹம்சனிடம் போனில் பேசிய பின்பு உமையாளுக்கு இருப்பு கொள்ளவில்லை. பேசாமல் மது பொக்கே ஷாப் சென்று மதுவந்தியின் பெற்றோரைப் பார்த்து பேசி விட்டு வரலாமா என்று கூட நினைத்தாள். ஆனால் அவள் கணவன் மனோகரோ இது நீ மட்டும் தீர்மானிக்கக்கூடிய விஷயம் அல்ல.
மதுவின் பெற்றோர், உன் அப்பா அம்மா என அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. அதனால் நீ கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என அவளிடம் அறிவுறுத்தினான்.
சம்பந்தப்பட்ட இருவரிடமும் காதல் மலர்ந்து விட்டது. ஆற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடப் போகிறது. பொறுமையாகவே இருப்போம் என உமையாளும் அமைதி காத்தாள்.
ராஜஹம்சன் அடிக்கடி தங்கள் கல்லூரிக்கு வருவதும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிடும் சாக்கில் மதுவந்தியை அபரிமிதமான காதலுடன் பார்ப்பதையும் கண்டு ப்ரியாவால் பொறுக்க முடியவே இல்லை.
அத்தான் தான் விவஸ்த்தை கெட்டதனமா அவளை பார்க்கிறார் என்றால் இவ பொண்ணுங்கறதையே மறந்திட்டு அத்தானைப் பார்த்து சொக்கி வழியறா. யாருக்கும் தெரியாத மாதிரி மதுவுக்கு மட்டும் புரியற மாதிரி ஹம்சன் அத்தான் வேற ஏதோ அவகிட்ட பேசுறாரு. இதெல்லாம் நல்லதுக்கே இல்ல.
இந்த அசிங்கத்தை சீக்கிரம் நிறுத்தணும். என்ன செய்யலாம். ஊட்டியில் மதுவோட கடைக்கு போன் செய்து அவ அப்பாவோட பேசினேன். அதைக் கேட்டு அவ அப்பா கோபமான மாதிரி தான் தெரிஞ்சது. ஆனா ரெண்டு நாள் ஆகிடுச்சு இன்னும் எதுவும் நடக்கலையே. ப்ரியாவுக்கு இதைப் பற்றி சிந்தித்து சிந்தித்து தலை வெடித்து விடும் போலிருந்தது.
இது பற்றி ரகுவரனிடம் சொல்லுவோமா என நினைத்தவள் ம்ஹீம்.. அவன் வேஸ்ட் என்னைத்தான் கிண்டல் செய்வான். உமை அக்கா ரேகா ஆன்ட்டி என ஒவ்வொருவராய் நினைத்துக் கொண்டு வந்தவள் சரவணன் என நினைத்ததும் மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு சடன் பிரேக் போட்டது போல் நிறுத்தினாள்.
இவனை எப்படி மறந்தேன் இவன வச்சு இவங்க காதலை கண்டிப்பாக உடைக்க முடியும் என்று முடிவு செய்ததும் ஒரு உற்சாக மனநிலைக்கு வந்தாள் ப்ரியா. ஆனால் சரவணனை பற்றி தனக்கு எந்த விவரமும் தெரியாது என்பதும் அவள் முன் நின்றது.
நல்லவிதமாக யோசிப்பவர்களை விட கெட்ட விதமாக யோசிப்பவர்கள் சின்ன நூல் இழை கிடைத்தாலும் அதை பிடித்து பெரிய வலை பின்னி விடுவர். அப்படியே ப்ரியாவும் தன் கல்லூரி ப்யூனிடம் சரவணன் பற்றிய சில விபரங்களை பெற்றாள். ஆனாலும் இந்த முயற்சி தலையைச் சுற்றி மூக்கை தொடுவது போல் ஆகிவிடுமா என்று சற்று கவலையும் அடைந்தாள்.
ப்ரியாவின் அதிர்ஷ்டம் அவள் வீட்டருகே இருந்த சுகாதார நிலையத்தில் அன்று போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தருவதால் நகராட்சியின் கண்காணிப்பாளராக சரவணன் அங்கு வந்தான். அவனைப் பார்த்த ப்ரியா மிகுந்த ஆவலுடன் அவனை அங்கு சென்று சந்தித்தாள்.
“என்ன அண்ணா மதுவை பார்க்க மறுபடியும் நீங்க எங்க காலேஜுக்கு ஏன் வரவே இல்ல” என்று ஒன்றும் தெரியாதவள் போல் கேட்டாள். அவளைப் பார்த்து முதலில் திகைத்தான் சரவணன்.
“அண்ணா நான் மதுவந்தியின் ஃப்ரண்டு” என்று ப்ரியா கூறியதும் ஞாபகத்துக்கு வந்தது போல் “நல்லா இருக்கயாம்மா உன் பேரும்மா” என்று பொத்தாம் பொதுவாக கேட்டான்.
ப்ரியாவும் சிரித்தபடி “நான் ப்ரியா அண்ணா, உங்க கூட கொஞ்சம் பேசணும். ஆனா வேலை நேரத்துல உங்களை தொந்தரவு செய்யல. நீங்க லஞ்ச் டைம்ல ஃப்ரீயா இருப்பீங்க தானே அப்போ வந்து நான் பேசுறேன் என் வீடு பக்கத்துல தான் இருக்கு” என்று கூறி சென்றாள்.
சரவணனுக்கு இவ என்ன பேசப்போறா. ஏற்கனவே ஆர்வக்கோளாறுல அந்த பெண்ணை போய் காலேஜ்ல பார்த்ததுக்கு வீட்டுல நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன் என விழித்தான். சொன்னபடி லஞ்ச் டைமில் அந்த சுகாதார மையத்திற்கு வந்தாள் ப்ரியா.
கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. ப்ரியாவை பார்த்த சரவணன் வெளியே வந்தான். “என்ன சொல்லணும் என்கிட்ட”என்று சற்று கண்டிப்புடனே கேட்டான் சரவணன் ப்ரியாவிடம்.” என்ன அண்ணா இவ்வளவு கோபமா பேசுறீங்க மது சொன்னதைத் தான் நான் உங்ககிட்ட சொல்ல வந்தேன்” என்றாள் ப்ரியா யோசிக்காமல்.
“மதுவா அந்தப் பொண்ணா உன் ஃப்ரண்டா” என்று ஆச்சரியமாக வினவினான் சரவணன். “ஆமாங்கண்ணா மதுவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்குது. ஆனா அன்னைக்கு ஒருத்தர் வந்தார் இல்ல, அவர் மது கிட்ட நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லி ரொம்ப தொந்தரவு பண்றாரு” என்று வாய்க்கு வந்தபடி பொய் சொன்னாள் ப்ரியா.
அடிப்படையில் சரவணன் மிகவும் நல்லவன். அன்று கல்லூரியில் நடந்த சம்பவத்தை திரும்ப மனதில் ஒட்டிப் பார்த்தான். ராஜ ஹம்ஸன் தன்னை காட்டி கோபமாக மதுவந்தியிடம் ஏதோ கேட்கவும் மதுவந்தியும் அதற்கு கோபமாக பதில் கூறியதும் அவன் நினைவில் காட்சியானது.
ஒருவேளை இந்த ப்ரியா பொண்ணு சொல்றது உண்மையா இருக்குமோ என்ற நினைப்பே அவனுக்கு ஜில்லென்று ஐஸ்கிரீம் தொண்டையில் இறங்குவது போல் இருந்தது. ஆஹா அப்படி மட்டும் இருந்தா யார் எதிர்த்தாலும் ஜாதகம் சரி இல்லைன்னு சொன்னாலும் மது தான் எனக்கு பொண்டாட்டி என தீர்மானித்தான் சரவணன்.
சில நேரங்களில் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள் அதுபோல சரவணனும் அந்த பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லியும் அந்த ஆளு அவளை டார்ச்சர் பண்றான்னா என்ன கொடுமையாயிருக்குது இதை தடுக்கணுமே என்று வீரா வேசமாக ஒரு திட்டம் தீட்டினான். எல்லாம் ப்ரியா செய்த ஜாலம்.
அவள் மதுவுக்கு சரவணன் மேல் அப்படி ஒரு காதல் இருப்பதாக பொய்யாக கட்டமைத்தாள்.” நீ ஒண்ணும் கவலைப்படாத ப்ரியா என்கிட்ட சொல்லிட்ட இல்ல இனி நான் பார்த்துக்கிறேன் மதுவையும் கவலைப்படாமல் இருக்க சொல்லு” என்றான் சரவணன் ஆறுதலாக.
ப்ரியாவோ “அண்ணா அந்த ஆளை அதான் ராஜஹம்சனை எல்லாம் லேசா நினைச்சுறாதீங்க. அவர் காரியம் நடக்கணும்னா அவர் என்ன வேணா செய்வாரு” என்றும் கூறி சரவணனை உசுப்பி விட்டாள். மேலும் “இந்த விஷயத்தில் ஏதாவது உதவி வேணும்னாலும் கேளுங்க நான் செய்கிறேன்” என்றும் கூறினாள்.
” அதுக்கெல்லாம் அவசியமில்லை. நான் பார்த்துக்கிறேன்ப்பா” என்று கூறிச் சென்றான் சரவணன். ப்ரியாவுக்கு ஒரு குரூர திருப்தி மனதில் படர்ந்தது. ஆனால் ப்ரியா அத்துடன் நிற்கவில்லை. அவ்வப்போது மதுவை பற்றியும் ராஜஹம்சனை பற்றியும் ஏதாவது பொய்களை சரவணனிடம் அள்ளி விடுவாள்.
சரவணனுக்கோ தான் மிகப்பெரிய பொறுப்பில் ஒரு பெண்ணை காப்பாற்றும் பணியில் இருப்பதாக நினைத்தான். ஏனெனில் அவன் ப்ரியாவை முழுமையாக நம்பினான்.
விசாகா மோட்டார்ஸின் பொன் விழாவிற்கு இன்னும் நான்கு நாட்களே இருந்ததால் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை சற்று தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. மதுவந்தியும் நீலாம்பரியும் ஆடும் பரதநாட்டியம் முதலாவதாக வரவேற்பு நடனமாக வைக்கப் பட்டிருந்தது. இருவருமே பரதம் கற்றவர்கள் ஆனதால் எளிதாக பயிற்சி செய்தார்கள். தொழிலாளர்கள் நலன் குறித்து ஒரு ஓரங்க நாடகம். அதன் பின் குழுவாக நாட்டுப்புறப் பாடலுக்கு ஒரு நடனம். வில்லுப்பாட்டில் ஒரு கதை சொல்வதாக வைத்து இரண்டு மணி நேரத்திற்கான கலை நிகழ்ச்சியாக அவர்கள் அதை அமைத்திருந்தனர்.
ராஜஹம்சனுக்கு நிகழ்ச்சி அமைப்பு மிகவும் திருப்தியாக இருந்தது. வழக்கமான பாணியில் இல்லாமல் நிகழ்ச்சி வித்தியாசமாக இருப்பதை கம்பெனி தொழிலாளர்களும் அவர்கள் குடும்பத்தினரும் நிச்சயமாக விரும்புவார்கள் என எண்ணி மகிழ்ந்தான். கலை நிகழ்ச்சி பொறுப்பாளரிடமும் கல்லூரி முதல்வரிடமும் நிகழ்ச்சியின் அமைப்பு குறித்து பாராட்டினான்.
அதன் பின் மாணவிகளை கம்பெனி பஸ்ஸிலேயே அரங்கத்திற்கு அழைத்துச் சென்று விழா முடிந்ததும் பத்திரமாக திரும்ப கல்லூரிக்கு அழைத்து வருவதும் எங்கள் பொறுப்பு என்று ராஜஹம்சன் அவர்களுக்கு உறுதி அளித்தான்.
அவன் தந்தை விசாகன் கூட அவனிடம் “தம்பி இது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமே பா” என்று அங்கலாய்த்தார்.
“அதெல்லாம் கவலைப் படாதீங்கப்பா அவங்களை பாதுகாப்பா கூட்டிட்டு வந்து கொண்டு விட்டுடலாம்” என்று அவருக்கு தைரியம் கூறினான் ஹம்சன். பொன்விழா அருகில் வர இருப்பதால் ஹம்சன் மதுவந்தியின் கல்லூரிக்கு தினமுமே மாலை சென்று கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.
ஹம்சனின் மனம் முழுவதும் மதுவே நிறைந்திருந்தாள். கல்லூரியில் அவளை பார்க்கும் போது அவளின் ஒவ்வொரு அசைவும் அவன் மேல் அவளுக்கு இருந்த காதலை அன்பை அழகாக வெளிப்படுத்தியது. ஹம்சன் தன் காதல் உணர்வுகளை மிகவும் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. மதுவைப் பற்றி யோசித்தபடி வந்த ஹம்சன் அப்போதுதான் ஒன்றை கவனித்தான். தன் காரை பைக்கில் ஒருவன் கண்காணிப்பது போல் தொடர்ந்து இரண்டு நாட்களாக பயணித்து வருவதைப் பார்த்தான்.
அவன் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. இன்று எப்படியும் அவன் யாரென கண்டுபிடித்து விட வேண்டும் என நினைத்து சற்று மெதுவாக பின் சற்று வேகமாக என காரை ஓட்டினான் ஹம்சன். அந்த பைக்கும் அதையே பின்பற்றியது.
மிகுந்த எரிச்சலுற்ற ஹம்சன் திடீரென காரை ஓரமாக நிறுத்தி, காரில் இருந்து இறங்கி பின்னால் வந்த பைக் முன் வந்து நின்றான். அவனிடம் பைக்ல இருந்து இறங்குங்க என்று அதட்டலாக கூறினான் ஹம்சன். ஆனால் பைக்கில் இருந்த சரவணனோ இறங்காமலே அமர்ந்திருந்தான்.
“இறங்குடா கீழே” என்று மரியாதையின்றி ஹம்சன் கூறவும் பைக்கில் இருந்து இறங்கிய சரவணன் ஹெல்மெட்டையும் கழற்றினான். “உனக்கு என்ன பிரச்சனை எதுக்கு ரெண்டு நாளா என்னை பின் தொடர்ந்துட்டு வர உனக்கு வேற வேலை இல்லையா” என்று சரவணனனிடம் கோபமாக கேட்டான் ஹம்சன்.
“ஹலோ நிறுத்துங்க சார் பொண்ணுங்களுக்கு விருப்பமில்லைன்னா அவங்கள விட்டுடணும். இப்படி தினமும் காலேஜுக்கு போய் டார்ச்சர் பண்ண கூடாது புரியுதா. தொடர்ந்து இப்படியே செஞ்சிட்டு இருந்தா அதுக்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் சரியா” என்று சரவணனும் மிரட்டலாக கூறினான் ஹம்சனிடம்.
ஒரு நிமிடம் அவன் என்ன பேசுகிறான் என்று ஹம்சன் புரிந்து கொள்ள முயற்சிப்பதற்குள் பைக்கில் ஏறிக்கொண்டு போய்விட்டான் சரவணன். இவன் யாரு கூத்துல கோமாளி மாதிரி எதையோ சொல்லிட்டு போறான்.
இவன் எந்த பெண்ணை பத்தி சொல்றான். மதுவந்தியை பத்தியா சொல்றான். அப்போதுதான் அவன் யாரென்று நினைவுக்கு வந்தது ஹம்சனுக்கு. இவன் வந்திக்கு அவள் பெற்றோர் பார்த்து வைத்துள்ள வரன் அல்லவா, ஆனால் மதுவந்தி இந்த பையனை எனக்கு பிடிக்கவில்லை என்று அவள் அம்மாவிடம் போனில் கூறி விட்டதாக சொன்னாளே.
வந்தியும் நானும் காதலர்கள் என்பது இவனுக்கு தெரியாது. அதனால்தான் இவன் இப்படி ஏதோ உளறி விட்டுப் போகிறான் என அசட்டையாக நினைத்து தன் காரை செலுத்தினான் ஹம்சன். ஆனால் அந்த சிறு அலட்சியம் ஹம்சனை ஒரு பேராபத்தில் தள்ளப் போகிறது என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை. இரண்டு நாட்கள் தன் ஆபீஸில் விடுமுறை எடுத்துக்கொண்டு ராஜஹம்சனை பின் தொடர்ந்து கவனித்த சரவணனுக்கு அவன் தினமும் மாலை மதுவந்தியின் கல்லூரிக்கு செல்கிறான் என்பது மட்டும் நிச்சயமாக தெரிந்தது.
அவன் உள்ளம் கொதித்தது.. வெளியூரிலிருந்து இங்கு படிக்க வரும் பெண்களை இப்படி தொல்லை செய்யும் ஆண்களை என்னவென்று சொல்லுவது. இவனுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என நினைத்த சரவணன் தன் நண்பன் ஒருவனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினான். ஆனால் அந்த திட்டம் அவனுக்கு ஒரு பாடத்தை கற்பிக்கப் போகிறது என்பதை அவன் அப்போது அறியவில்லை. எதற்கும் காலம் பதில் கூறும்.
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings