எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மன்னர் விஜயராஜன் தனது அரசவையில் வீற்றிருந்தார். நேரம் காலைப் பொழுது. அவர் தனது சகாக்களுடன் அலுவல் அல்லாத சுவராசியமான சம்பாஷணையில் இருந்தார். அப்போது ஆராய்ச்சி மணி ஒலிக்கும் சப்தம் கேட்டது. “யார் இப்பொழுதில் ஆராய்ச்சி மணி அடிப்பது?” – என்று வினவினார். மாடக்காவலாளி “இளைஞன் ஒருவன் ஆராய்ச்சி மணியை ஒலிக்கிறான்!” – என்று குரல் கொடுத்தான். அந்த இளைஞன் மன்னர் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான்.
“சொல்! எதற்காக ஆராய்ச்சி மணியை ஒலித்தாய்?” – மன்னர் கேட்டார்.
“மன்னா! புதிதாகத் துறைமுக வரி என்றொரு வரியைத் தாங்கள் குடிமக்கள் மீது விதித்துள்ளீர்கள்! அவ்வரியை ஒரு திங்கள் அவகாசத்திற்குள்ளாக அனைவரும் செலுத்தவும் அறிவுறுத்தி உள்ளீர்கள்! இது அடாத வரி! இதை தாங்கள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!” – என்றான்.
மன்னர் கோபம் கொண்டார். சௌந்தர்யமான காலைப் பொழுதை அவன் கெடுப்பதாக எண்ணினார். “அரசனுக்கே ஆலோசனையா?” – என்றவர் “இவனை வெளியேற்றுங்கள்!” – என்றார்.
“மன்னா! எனக்காக நான் இந்தப் பிரேரணையைக் கொண்டு வரவில்லை! பெரும்பான்மை மக்களின் மனஓட்டத்தை வெளிப்படுத்தவே நான் துணிந்தேன்!” – என்றான் அவன். காவலர்கள் அவனை இழுத்துச் சென்றனர். மன்னர் மனசஞ்சலம் அடைந்தார்.
“மந்திரியாரே! இந்த இளைஞன் குறிப்பிடுவது போல் நாம் விதித்துள்ள புதிய வரியால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனரோ?” – என்று வினவினார்.
“மன்னா! நாம் யாருக்காக வரி விதிக்கிறோம்! குடிமக்களின் நலனுக்காத்தானே! ராஜ பரிபாலனம் குறித்து ஏதுமறியாச் சிறுவன் ஏதோ பிதற்றிச் செல்கிறான்! தாங்கள் மன விசனம் கொள்ள வேண்டாம்!” – என்றார் மந்திரியார்.
“அப்படியானால் சரி!” – என்று அரைகுறை மனதுடன் சமாதானமானார் மன்னர்.
நாதபிரம சுந்தரனார். இவர் ஒரு சமண சமயப் புலவர். தேசம் தேசமாகச் சுற்றுபவர். அவர் விஜயராஜன் ஆண்டு வந்த தேசத்திற்கு வந்திருந்தார். ஓவ்வொரு தேசத்திற்கு வரும் பொழுதும் அந்த மக்களின் உளக்கிடக்கையை அறிந்து கொண்டு அதன்படி மன்னர்களைச் சந்திப்பது அவர் வழக்கம்.
பரிசில் வேண்டித் துதி பாடுவதினும் இடித்துரைப்பது மேலானது என்று கருதுபவர். அவரின் வருகை அறிந்து நாட்டின் அறிஞர் பெருமக்கள் பலர் அவரைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்களிடம் தான் அரசல்புரசலாகக் கேள்விப்பட்ட அரசன் விதித்துள்ள துறைமுக வரி குறித்து கேட்டார்.
“நம் தேசம் பிற தேசங்களுடன் கடல் வணிகத்தில் ஈடுபட்டு வருவது தாங்கள் அறிந்ததே! நம்மிடம் கடல் எல்லை இல்லாத காரணத்தால் நாம் அண்டை நாட்டுத் துறைமுகம் வாயிலாக இப்பணியினைச் செய்து வருகிறோம்! இதனால் சரக்குகளைக் கையாள்வதில் கால விரயம் பொருள் விரயம் நுழைவுக் கட்டணம் அது இது என்று ஏராளம் இழப்புகளைச் சந்திக்க வேண்டி வருகிறது! நம்மிடம் கடல் பரப்பு இல்லையே தவிர வற்றாத சீவநதி உள்ளது! நல்ல ஆழமும் அகலமும் கொண்ட நதி! அதில் நம்மால் துறைமுகம் அமைக்க இயலும்! அவ்வாறு அமைந்தால் நாடு கடந்த வணிகத்தின் முழுமையான பலன் நம் அரசுக்கும் மக்களுக்கும் கிட்டும்! ஆனால் ஆற்றில் துறைமுகம் அமைக்க வேண்டுமானால் அதற்கு ஏராளம் நிதி தேவைப்படும்! பலத்த யோசனைக்குப் பின்பு அந்த நிதியை நம் மக்களிடம் இருந்து திரட்டுவது என்று முடிவு செய்தே மன்னரால் இந்தத் துறைமுக வரி கொண்டு வரப்பட்டது!” – என்;று விரிவாக விளக்கினர் அறிஞர் பெருமக்கள்.
அதை மிகுந்த கவனமுடன் கேட்டுக் கொண்ட புலவர் “நோக்கம் நல்ல நோக்கம்தான்! ஆனால்…!” – என்றபடி மோவாயைத் தடவியபடி யோசனையில் ஆழ்ந்தார்.
முனிவர் ஒருநாள் மன்னரைச் சந்திக்கச் சென்றார். “தங்களின் கீர்த்தி குறித்து நான் அறிவேன்! தாங்கள் இவ்வவைக்கு வருகை தந்தமைக்கு நன்றி! அமருங்கள்!” என்றபடி இருக்கையை காட்டினார் மன்னர்.
பரஸ்பர குசல விசாரிப்புகளுக்குப் பின்னால் மன்னர் “தாங்கள் இங்கு வந்ததன் நோக்கத்தை நான் அறிந்து கொள்ளலாமா?” – என்று வினவினார்.
“தாங்கள் புதிதாக விதித்துள்ள துறைமுக வரி தொடர்பாக பேசவே வந்தேன்!” – என்று சற்று அழுத்தமாகச் சொன்னார் முனிவர். அவையில் ஒரு கணம் அமைதி நிலவியது.
முனிவரே தொடர்ந்;து “அவ்வரி விதிப்பில் தவறு இல்லை! ஆனால் அதில் ஒரு சிறு மாற்றம் கொணர வேண்டும்!” – என்றார். மன்னருக்கு இந்தத் துறைமுக வரி எனும் வார்த்தை ஏற்கனவே சிரநோவு தரும் விடயமாக மாறி இருந்தது. அவர் மிகுந்த மனச்சலிப்புடன் இருந்தார்.
; “என்ன மாற்றம் கொண்டு வர வேண்டு;ம்?” – அசுவராசியமாக வினவினார்.
“நம் தேசத்தின் பெரும்பான்மை மக்கள் ஒரு துறைமுகத்தை தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் நேரில் கண்டவர் இலர்! அதனால் துறைமுக வரியைத் தேவையில்லாமல் அரசன் தங்கள் மீது திணிப்பதாக அவர்கள் எண்ணுகின்றனர்! – என்றார் முனிவர். அவரே தொடர்;ந்து “ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும் என்பது போல் இந்தத் துறைமுக வரி என்ற வார்த்தையில் ஒரு சொல்லாடல் பிழையும் உள்ளது!” – என்றார்.
“என்ன பிழை?” – வினவினார் மன்னர்.
“துறைமுக வரி என்பது ஒரு முடிவுற்ற வார்த்தையாக இருக்கிறது! இதற்குப் பதிலாக உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி என்றிருந்தால் மக்கள் யோசிப்பார்கள்.! எந்த மேம்பாடு என்ற கேள்வி எழும்! துறைமுகக் கட்டுமானம் எனும் போது அதில் ஒரு புரிதல் உண்டாகும்! அடிப்படை கட்டமைப்பின் நீட்சியாக நாளையே தாங்கள் இருக்கும் சாலை வசதிகளை மேம்படுத்த எண்ணலாம்! யாத்தரீகர்கள் உண்டு உறங்கிச் செல்ல சத்திரங்கள் அமைக்க விளையலாம்! விளைபொருட்களை சேமிக்க கூடுதல் களஞ்சியக் கட்டிடங்களைக் கட்ட முனையலாம்! புதிதாக பாடசாலைகள் அமைக்க முற்படலாம்! ஏன்? மக்கள் இளைப்பாறிச் செல்ல ஆங்காங்கே மரங்கள் நடுவது கூட கட்டமைப்பில்தான் வரும்! சுகாதாரக் கட்டமைப்பு! இதற்காகத் தாங்கள் குடிமக்களிடமிருந்து தொடர்ந்து ஒரு சிறிய அளவிலான வரியை வசூலிக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கும்!” – என்றார் புலவர்.
மன்னர் நிமிர்ந்த அமர்ந்தார். அவருக்கு முனிவரின் வார்த்தைகளில் ஒரு நியாயம் இருப்பதாகப் பட்டது. “சொல்லுங்கள் முனிவரே! இப்போது நான் என்ன செய்ய வேண்டும் எனத் தாங்கள் விரும்புகிறீர்கள்?” –என்று கேட்டார்.
“துறைமுகவரி அனைத்து மக்களுக்குமான வரி என்பதாக இல்லாமல் கடல் வணிகத்தோடு நேரடித் தொடர்புடைய வணிகர்களுக்கு மட்டுமான வரி என்பதாக மாற்றம் செய்ய வேண்டும்! துறைமுகவரி என்பதற்குப் பதிலாக கட்டமைப்பு மேம்பாட்டு வரி எனும் சிறிய அளவிலான தொடர் வரி விதிப்பைத் தாங்கள் புதிதாக அமுல் படுத்த வேண்டும்! நல்ல விளைச்சலால் மக்கள் செழித்துக் கிடக்கும் காலத்தில் இதனைச் செய்ய வேண்டும்;!” – என்றார் முனிவர்.
“தங்கள் கருத்து நன்றாக உள்ளது! நான் ஏற்கிறேன்! இருந்தும் எனது சகாக்களுடன் விவாதித்தபின் இது குறித்து இறுதி முடிவு எட்டப்படும்! எமது தேசத்தின் வளர்ச்சியில் தாங்கள் காட்டிய அன்பிற்கு நன்றி!” – என்றார் மன்னர். புலவரும் தான் வந்த காரியம் நல்ல முறையில் முடிந்தது குறித்த பெருமிதத்துடன் அங்கிருந்து புறப்பட்டார்.
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings