in ,

அரை பிறந்தநாள் (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“பங்களாவும் ,காரும், பணமும், நகையும் இருந்து என்ன பண்ண இந்த வீட்டில தவழ ஒரு குழந்தை இல்லையே” மங்களத்தின் மூன்று வருட ஏக்கத்தை அவள் வார்த்தைகள் பிரதிபலித்தன .மருமகள் அபர்ணா இன்னும் குழந்தை உண்டாகவில்லையே என்று அவள் வேண்டாத தெய்வம் இல்லை.. போகாத கோயில் இல்லை…

“அபிஷேக்கு கல்யாணமாகி மூணு வருஷங்கள் தானே ஆகுதம்மா…எல்லாம் சீக்கிரம் தானே கிடைக்கும்” என்றார் அவள் கணவன் ராஜசேகர்.

ஆனால் தன் மனக்குறையையோ.. ஆசையையோ.. மகனிடமும், மறுமகளிடமோ காண்பித்துக் கொள்ள மாட்டாள்.

அவள் கணவன் ராஜசேகரும் அது பற்றி எதுவுமே பிள்ளைகளிடம் கேட்கக் கூடாது..அவர்கள் மனத்தை மனதை புண்படுத்தி விடக்கூடாது என்று தீர்மானமாக சொல்லிவிடுவார்.

மங்களத்தின் வேண்டுகோள் கடவுளின் காதில் கேட்டுவிட. அவர்கள் ஆசையை நிறைவேற்ற அபர்ணா குழந்தை உண்டான போது குடும்பமே குதுக்கலித்தது.மருமகளை உள்ளங்கையில் தான் வைத்து தாங்கினாள் மங்களம்.

விமர்சையாக வளைகாப்பு நடக்க .. தாய் வீட்டுக்கு கிளம்பினாள் அபர்ணா.உரிய காலத்தில் அழகிய ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தாள்.

குழந்தை “ஆர்யா” பெயர் வைக்கும் விசேஷம் சிறப்பாக நடைபெற, அதன்பின் மருமகளையும் பேரனையும் அழைத்து வந்தார்கள் மங்களமும் , ராஜசேகரும். அபிஷேக்குக்கும், அபர்ணாவுக்கும் ஆர்யாவே உலகமாக்கிப் போனான். அவனுடைய ஒவ்வொரு அசைவையும் போட்டோ எடுப்பதும் அதை முகநூலில் போடுவதும் …இருவருக்கும் விருப்பமான ஒன்று. அதுவும் குழந்தையை விதவிதமான போஸ்களில் படம் எடுக்கும் போது மங்களம் மனம் பதறித் தான் போவாள் .

“ஏம்மா அபர்ணா குழந்தையை போயி இப்படி கஷ்டப்படுத்தறீங்களே கூடைக்குள்ள அதைப் படுக்க வச்சு.. அதுக்கு இப்பவே அலங்காரம்.. தலையில கிரீடம்.. பாவம் சின்ன பிள்ளை ..”

“அம்மா அதெல்லாம் இந்த காலத்துல ஃபேஷன்.. உங்க காலத்துல அதெல்லாம் கிடையாது …அதான் உங்களுக்கு புதுசா இருக்கு” வித விதமாக டிரஸ்சை மாத்தி போட்டோ எடுப்பதில் ஆர்வமாக ஈடுபட்டான் அபிஷேக்.

மங்களத்தின் அண்ணன் வேதாச்சலம் வர அவள் கவனம் திரும்பியது

” அண்ணா வாங்க எவ்வளவு நாளாச்சு ..உங்களப் பாத்து ..”

” மங்களா நீயும், அத்தானும் பிள்ளைகளும் நல்லா இருக்கீங்களா? ஆர்யா குட்டி என்ன பண்றான்?”

“அதை ஏன் கேக்குறீங்க அண்ணா.. விதவிதமா டிரஸ் மாத்தி அந்த பச்ச புள்ளைய போட்டு படுத்தி தான் எடுக்குறாங்க.. புருஷனும் பொண்டாட்டியும். கேட்டா எல்லாம் இந்த காலத்து நாகரீகம்னு சொல்றாங்க ..”

” எல்லாம் காலத்தோடு கோலம்.. அதெல்லாம் கண்டுக்காத விடு.உன்னை எங்க வீட்டு பக்கம் காணல.. இருக்கிறது ஒரே தங்கச்சி.. இந்த அண்ணனை மறந்துட்ட பாத்தியா ..”

” மச்சான் வாங்க.. மறந்தது உங்க தங்கச்சி இல்ல. அவளுக்கு எப்போதுமே உங்க நினைப்புதான் ஆனால் அவ பேரன் ஆர்யா குட்டி அவள விட மாட்டேங்குறான் எப்போதும் அழுகை தான் ..அவனை கவனிக்க ஒரு ஆளுக்கு நேரம் சரியா இருக்கு “

“இருக்கும் இருக்கும் ” குழி பயிர கொடில ஏத்தனும் இல்ல” ..பிள்ளை வளக்குறதுனா லேசா “

“அப்புறம் அண்ணன் சொல்ல மறந்துட்டேனே நம்ம ஆர்யாவுக்கு ஆறாம் மாசம் நடக்குது “

” ஓ..அன்னப் பாயசம் கொடுக்க போறியா? “

“மச்சான் முழுசா விஷயத்தை கேளுங்க..ரெண்டு நாளா அம்மாவுக்கும் பிள்ளைக்கும் ஒரே லடாய்தான். ஆர்யாவுக்கு ஆறாம் மாசம் ஆனதுனால அரை பிறந்தநாள்னு கொண்டாடப் போறாங்களாம். “

“இது என்ன புதுசா இருக்கு ஒரு வருஷம் முடிஞ்சதும் பிறந்தநாள் கொண்டாடுவோம் அதுதானே நம்ம வீட்டுல வழக்கம். அதுவே பிள்ளைங்க பிறந்த தேதியில கேக் வெட்டி பிறந்தநாள் பெருசா கொண்டாடுறாங்க… நமக்கு ஜென்ம நட்சத்திரம் தான் கணக்கு .குழந்தை பிறந்த மாசத்துல அந்த நட்சத்திரத்துல அர்ச்சனை பண்றது ஆயுஸ் ஹோமம் பண்றது விசேஷம் “

“அதைத்தான் அண்ணா நான் சொல்றேன்.. ஆனால் அபிஷேக்கும் அபர்ணாவும் கேட்க மாட்டேங்கிறாங்க .ஆறு மாச குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட்டினா திருஷ்டி பட்டு போய்டாதா? இந்த காலத்துல எல்லாரும் கொண்டாடுறாங்களாம்.. அதான் நண்பர்கள.. முக்கியமான உறவுக்காரங்கள..கூப்பிட்டு செய்யனும்னு ஒரே பிடிவாதமா நிக்கிறாங்க “

“சரி விடு இந்த காலத்து பிள்ளைங்க சொன்னா கேட்கவா போறாங்க? அவங்க இஷ்டப்படியே விடு” என்று முடித்தார் வேதாச்சலம் .இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்ததில் ராஜசேகருக்கும் நிம்மதி மங்களம் அண்ணன் சொன்னால் தட்ட மாட்டாள் .

“நான் வேற யாரையும் பெருசா கூப்பிடல. நீங்க மட்டும் வந்துடுங்க.. வர்ற ஞாயிற்றுக்கிழமை. அபிஷேக் சொல்லுவான்..அண்ணி மக வீட்டுக்கு அமெரிக்கா போயிருக்காங்க.. நீங்களாவது தவறாம வந்து கலந்துகோங்க “

“நீ சொல்லவே வேணாம் நான் வந்துடுறேன்” கிளம்பினார் வேதாச்சலம் .

 அப்புறம் என்ன..ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர் அபிஷேக்கும் அபர்ணாவும் ..

பலூன் தோரணம் அரை வட்ட வடிவில் அந்த பிரம்மாண்டமான பங்களாவின் வாசலை அலங்கரித்தது உள்ளே நுழைந்ததும் உள் அலங்காரங்கள் அரை வட்ட வடிவில் பிரகாசிக்க …சிறிய மேடையின் பின்னே இருந்த அலங்கார பூ வடிவமும் அரை கேக் வடிவத்தை எடுத்துக் காட்ட…மின்விளக்குகளால் அந்த தோட்டமே ஜொலித்தது ..

சிம்பிளான அலங்காரத்தில், வந்தவர்களை வரவேற்று கொண்டிருந்தாள் மங்களம்.. அவளுக்கு சினேகிதிகள் அதிகம் கிடையாது என்றாலும் மருமகள் அபர்ணாவிற்கும் மகன் அபிஷேக்கும் நிறைய சினேகிதர்கள்.. குழந்தை ஆர்யாவின் அரை வருட பிறந்தநாள்..சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது .

என்னதான் அண்ணன் சமாதானம் சொல்லிவிட்டு போட்டாலும் மங்களாவுக்கு அது மனதில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வாக இருந்தது. ஒரு வருடம் வரையில் காத்திருந்து, பிறந்தநாள் கொண்டாடலாம் என்று சொல்லி பார்த்தாலும் மகனும் ,மருமகளும் ஒத்துக் கொள்ளவில்லை.

அவசரமான இந்த அரை பிறந்தநாள் எதற்கு என்று மனதில் தோன்றினாலும் அதை வெளியே சொல்ல முடியாது . காலத்தின் மாற்றம் …அதற்காக பிள்ளைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது, என்று எல்லோரையும் உபசரித்துக் கொண்டிருந்தாள்.

பாதி வடிவத்தில் வடிவமைக்கப் பட்டிருந்த கேக் மேஜையை அலங்கரித்தது . குழந்தை பகட்டான உடையில் பளபளத்துக் கொண்டிருந்தான். அந்த கசகசப்பில் அழும் குழந்தையை பார்க்க மங்களத்திற்கு பாவமாக இருந்தது குழந்தை சார்பாக பெற்றோர் கேக்கை வெட்ட ஆரவாரம் வீட்டை அதிர வைத்தது.

தன் சார்பாக தான் அழைத்திருந்த ஒரே விருந்தாளியான தன் அண்ணன் வர, ஓடிச்சென்று மங்களம் அவரை உபசரித்து உள்ளே அழைத்து வந்தாள். குழந்தையை வாழ்த்தி பரிசு கொடுத்தவர் மங்களாவை அழைத்துக்கொண்டு பூஜை அறைக்கு நடந்தார் .

தன் கையிலிருந்த ஒரு ஜோடி தங்க வளையலை மங்களத்தின் கையில் கொடுத்து விட்டு, சுவாமி முன் இருந்த விபூதியை எடுத்து அவள் நெற்றியில் இட்டு, குங்குமத்தை வைத்து, “தீர்க்க சுமங்கலியாக நீடூழி வாழவேண்டும்” என்று வாழ்த்தினார் அன்று 60வது வயது பிறந்தநாள் காணும் தன் தங்கையை…அவர் காலில் விழுந்து வழங்கிய மங்களத்தை தூக்கி அணைத்துக் கொண்டார். இந்த பாச நாடகத்தை பார்த்த ராஜசேகர் மனம் நெகிழ்ந்து போனார்.

அரை பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அறுபதை மறந்த உறவுகள் சத்தம் காதைப் பிளந்தது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தங்க ரதம் (சிறுகதை) – சுஶ்ரீ

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 9) – ஜெயலக்ஷ்மி