in

வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – அத்தியாயம் 7) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை

வாழ்க்கை ❤ (அத்தியாயம் 7)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6

ல் விளக்கி விட்டு காபி குடித்த சிவா “என்ன ஒரு மாதிரி இருக்கிறாய்?” என்று கேட்டான்.

“ஒன்றுமில்லை”

“சரி விடு, நேற்று நண்பர்கள் கூட்டத்திலே கூட பேசிக் கொண்டார்கள். திவ்யா உன்னை அத்தா என்று கூப்பிடுவதில் எனக்கும் விருப்பமில்லைதான். இருந்தாலும் என் நண்பர் குடும்பத்தில் உன்னிடம் அப்படி கேட்டிருக்கக் கூடாது. அவர்கள் மிகவும் சாதாரணமாகத்தான் கேட்டார்கள், ஆனால் என்னால் கூட தாங்க முடியாமல் போய் விட்டது.”

“பரவாயில்லை”

“மற்றவர்கள் பேசுவதற்கெல்லாம் அவர்கள் திருப்திப்படும்படி நாம் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. நாம் நமக்காகத்தான் வாழ் வேண்டும்.”

“நான் அந்த சம்பவத்தை அப்போதே மறந்து விட்டேன்.”

“ஆனால் உன் முகம் இன்னும் அந்த சம்பவத்தையே நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறதே. ராத்திரி முழுவதும் தூங்க வில்லையா?”

“நன்றாகத் தூங்கினேன்.”

“கண்கள் நன்றாகச் சிவந்து போயிருக்கின்றன, பொய் சொல்கிறாய்?”

“சரி விடுங்கள்” என்று பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “சீக்கிரம் கிளம்புங்கள், எனக்குத் திவ்யாவை புறப்பட வைத்து  ஸ்கூலுக்குக் கொண்டு போய் விட வேண்டும்.”

“சரி” என்று காபி டம்ளரை திரும்பக் கொடுத்தவன், “திவ்யாவை ஸ்கூலில் விட்டுவிட்டு நீ கடை பக்கம் வருகிறாயா? நீயும் வீட்டிலே உட்கார்ந்து போரடித்துப் போயிருப்பாய். அங்கே வந்தால் உனக்கும் கொஞ்சம் மாறுதல் கிடைக்கும். வரும்போது பழங்கள் எல்லாம் வாங்கி தந்து அனுப்புகிறேன்”

“நான் கூட கேட்க வேண்டுமென்று நினைதேன், நீங்களே சொல்லி விட்டீர்கள். இங்கேயே அடைந்து கிடந்து மிகவும் கஷ்டமாகத் தானிருக்கிறது.”

“ரொம்ப நன்றி அத்தான்.”

“இதற்கெல்லாம் எதற்கம்மா நன்றி. திவ்யா எத்தனை மணிக்கு ஸ்கூலுக்கு போக வேண்டும்?”

“எட்டு மணிக்கு”

“சரி நீ அவளை எழுப்பி புறப்பட வை. நான் ஒரு போன் பண்ணி விட்டு வருகிறேன். ஆங்… சொல்ல மறந்து விட்டேன். இன்றைக்கு நம்ம வீட்டிற்கு ஜெயமோகன் வருவதாக போன் பண்ணியிருந்தான்.”

“ஜெயமோகனா?”

“என்ன புவனா தெரியாத மாதிரி கேட்கிறாய். உனக்கு அவனைத் திருமணம் செய்து வைக்க முடிவெல்லாம் செய்து, அப்புறம் ஏதோ பிரச்சினையிலே திருமணம் நின்று நின்று போய் விட்டதாம்.”

பதில் சொல்லாமல் சிவாவின் முகத்தைப் பார்த்தாள் புவனா.

“மும்பையிலே பாண்டூப்பிலே அவனுடைய அக்கா வீட்டிலேதான் தங்கி இருக்கிறான். என்னுடைய பாஸ்போர்ட் விஷயமாக பேசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இன்றைக்கு காலையிலே இந்தப் பக்கம் வேலை இருக்கிறது வந்து பார்த்து பேசிவிட்டுப் போகிறேன் என்றான்.”

“உங்களுக்கு எதற்கு பாஸ்போர்ட், வெளிநாடு போகிறீர்களா?’

“ஆமாம்… ஒரு சிங்கப்பூர் பார்ட்டிக்கு காய்கறிகளும் பழங்களும் ஏற்றுமதி செய்யலாம் என்றிருக்கிறோம். அது விஷயமாய் அவனைப் போய் சிங்கபூரில் பார்த்து வர வேண்டியது இருக்கிறது”

“பாஸ்போர்ட் அப்ளை பண்ணியாச்சா?”

“ஆமா… ஜெயமோகன் வந்தால் உட்கார சொல், நான் இப்போது வந்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினான் சிவா.

‘ஜெயமோகன் வருவானா? அவன் வந்தால் என்ன பேசுவது’ கொஞ்சம் மனதுக்குள் திக்திக்கென்றிருந்தது.

தேவகி அக்காவிடம் கூட, போனமுறை அவர்கள் ஊருக்கு வந்திருக்கும் போது இவனைப் பற்றி பேசியிருக்கிறோம்.

“பார்ப்பதற்கு கறுப்பாக இருந்தாலும் ரஜினிகாந்த் மாதிரி துறுதுறுன்னு எப்பவும் சுறுசுறுப்பாக இருப்பார். எனக்கு அவரை ரொம்ப பிடித்திருக்கிறது. எங்கள் வீட்டில் திருமண விஷயமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று புவனா சொன்ன போது, “எனக்கென்னவோ அந்த ஜெயமோகன் அவ்வளவு நல்லப் பையனாகத் தெரியவில்லை புவனா” என்றாள் தேவகி

“மும்பையில் எங்கள் வீட்டிற்கு இரண்டு முறை வந்திருக்கிறான். அவன் பார்வையே சரியாக இல்லை. உங்க சிவா அத்தான் கூட அவன் நடத்தை சரியில்லை என்றும், நான்கைந்து பெண்களோடு சுற்றுவதாகவும் சொல்லி இருக்கிறார். பார்த்து செய்யுங்கள்” என்றாள் தேவகி.

“இல்லை தேவகி அக்கா. அவர் மிகவும் நல்ல மனிதர். உங்களிடமும் அத்தானிடமும் யாரோ தப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்”

“சரி உன் விருப்பம். நல்லபடியாக கேட்டுத் தெரிந்து கல்யாணம் செய்து கொள்ளுங்கள்” என்றாள். 

அதன் பிறகு எல்லாம் பேசி முடித்தப் பிறகு ஜெயமோகனுக்கும் ஊரிலே வேறு பெண்ணொருத்தியோடு தொடர்பு இருப்பது தெரிந்த பிறகு, இந்தத் திருமணம் வேண்டாம் என்று ராணியம்மாவும் புவனாவும் தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள்.

உறவினர்கள் பலர் வந்து பக்குவமாகச் சொல்லி ஜெயமோகனை மணந்து கொள்ளச் சொன்னார்கள்.

“புவனா… கல்யாணத்திற்கு முன்னால் பையன்கள் அப்படி இப்படித்தான் இருப்பார்கள், நீதான் கல்யாணத்திற்கு அப்புறம் திருத்த வேண்டும். பையன் பம்பாயில் நல்ல வேலையில் இருக்கிறான். இந்தச் சம்பந்தம் கூடி வரும் போது வேண்டாம் என்று சொல்ல வேண்டாம்” என்று சொல்லிப் பார்த்தார் சிவலிங்கம் மாமா.

புவனா ஒரேயடியாக மறுத்து விட்டாள். மனதில் உருவாகியிருந்த ஜெயமோகன், அவன் இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்தான் என்று தெரிந்ததும், ராமன் ராவணாக மாறிப் போயிருந்தான்.

அந்த மனக்கசப்பு கொஞ்சமாக அடங்கிப் போய் அப்புறம் தேவகி இறந்ததால், சிவாவைத் திருமணம் செய்துக் கொள்ளச் சொன்ன போது புவனாவின் மனம் கொஞ்சம் குழம்பித் தவித்தது.

‘ஜெயமோகனை மணந்திருந்தால் இப்படி இரண்டாந்தரமாக… அதுவும் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக மாறித் தவித்திருக்க மாட்டேனோ? ஏன் எனக்குள் நான் அடிக்கடி குழம்பிப் போய் என்னையே நோகடித்துக் கொள்கிறேன்’

நினைவும் நிஜங்களும் போட்டி போட்டு சிவாவை மணப்பதில் தனக்குள்ளே இருந்த ஆர்வத்தை உணர்ந்து கொண்டு தான், இரண்டாம் தாரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று சிவாவை மணந்து கொள்ளச் சம்மதித்தாள்.

“அத்தா… பால் தர்றியா?” குழந்தை தூக்கத்திலிருந்து மெதுவாக கலைந்து எழுந்தது.

எப்போதும் பால் தயாராகக் கலந்து வைத்திருக்கும் புவனா “எடுத்துட்டு வர்றேன் கண்ணு” என்று அடுப்படிக்குள் நுழைந்து பால் எடுத்து வந்து அவளுக்கு ஊட்டி விட்டு விட்டு, “திவ்யா கண்ணு, ஸ்கூலுக்கு புறப்படணும் எழும்பும்மா என் செல்லக்கண்ணு” என்று அவளைத் தூக்கினாள்.

“எனக்கு தூக்கம் வருகிறது அத்தா”

“அப்படிச் சொல்லக் கூடாது கண்ணு. ஸ்கூலுக்கு நேரத்திற்கு போக வேண்டாமா?” என்று அவளைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமிற்கு போனவள் வாசலில் நிழலாடுவதைப் பார்த்து திரும்பினாள்.

ஜெயமோகன் நின்று கொண்டிருந்தான். ஏற்கெனவே ஜெயமோகன் வருவதைப் பற்றி சிவா சொல்லியிருந்தாலும், இவ்வளவு சீக்கிரம் வருவான் என்று புவனா எதிர்பார்க்கவில்லை.

என்ன பேசுவது என்று திணறிய புவனா, “வாங்க மோகன், உட்காருங்கள்” என்றாள்.

“எப்படியிருக்கே புவனா?” என்று கேட்டவாறு உள்ளே வந்து அமர்ந்தான் ஜெயமோகன்.

“ரொம்ப நல்லாயிருக்கேன். கொஞ்சம் அவசரமாக வேலையிருக்கிறது, உட்காருங்க வந்துடறேன். அத்தான் போன் பண்ணப் போயிருக்காங்க, இப்போது வந்து விடுவார்கள்.” அவனைத் தவிர்த்து விட்டு திவ்யாவை புறப்பட வைப்பதில் மும்முரமாக இருந்தாள்.

திவ்யாவிற்கு உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “புவனா சந்தோசமாக இருக்கிறாயா?” என்று கேட்டான் ஜெயமோகன்.

“ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?” எதிர்க்கேள்வி கேட்டாள் புவனா.

“இல்லை கல்யாணம் முடிந்தவுடனே இப்படி ஒரு சின்னப் பெண்ணுக்குத் தாயாகி இந்த மாதிரி அல்லாடிக் கொண்டிருக்கிறாயே அதான்…”

“நானாக விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்க்கை தானே இது, அதனாலே ரொம்பவும் சந்தோஷமாகத்தானிருக்கிறது.”

“என்னைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லையே என்று வருத்தமில்லையா?”

ஜெயமோகனை திரும்பிப் பார்த்து, “இரண்டாம் தாரமாக கல்யாணம் பண்ணிக் கொண்டு ஒரு சின்னக்குழந்தைக்கு தாயாக அல்லாடிக்கொண்டு, நினைக்கும் போது எனக்கே கஷ்டமாக இருக்கிறது. தினம் தினம் இந்த ரணத்துக்குள்ளே இருப்பவளுக்கு எப்படி இருக்கும்.”

‘எத்தனையோ பெண்களோடு சுற்றியவந்தானே? இவனுக்கு நான் எந்த வகையில் சந்தோஷம்? இவன் என்னோடு இருப்பானா? இல்லை இன்னொரு பெண்ணைத் தேடிப் போவானா? என தினம் தினம் சந்தேக வாழ்க்கையோடு உன்னோடு வாழ்க்கையில் செத்துக் கொண்டிருப்பதற்கு இந்த வாழ்க்கை எத்தனை உன்னதமானது.’ என்று கத்தி விடலாமா என நினைத்தவள் வார்த்தைகளையும் கோபத்தையும் மறைத்துக் கொண்டு

“எல்லோருக்கும் நாம் விரும்பிய மாதிரி வாழ்க்கை கிடைத்து விடுவதில்லை மோகன். நாம் விரும்பியது எல்லாம் கிடைத்து விட்டால் அப்புறம் இறைவனை நாம் நினைக்கக் கூட மறுத்து விடுவோம். நீங்கள் இருங்கள், நான் கொண்டுபோய் திவ்யாவை ஸ்கூலில் விட்டு விட்டு வந்து விடுகிறேன்” என்று திவ்யாவைத் தூக்கிக் கொண்டு கிளம்பிய போது, “வந்தவனுக்கு ஒரு டீ கூட தரக்கூடாதா புவனா?” என்று கேட்டான் ஜெயமோகன்.

‘எதிர்பார்த்தவர்கள், மனதுக்குப் பிடித்தவர்கள் வந்தால் டீ என்ன சாப்பாடே போட வேண்டியதுதான். ஆனால் உனக்கு குடிக்கத் தண்ணீர் தருவது கூட தவறுதான.’ என்று மனதுக்குள் கருதிக்கொண்டு, “திவ்யாவிற்கு ஸ்கூலுக்கு நேரமாகி விட்டது. அத்தான் இப்போது வந்து விடுவார்கள். அவர்களோடு பேசிக் கொண்டிருங்கள். நான் வந்து விடுகிறேன்” என்று வேகமாக நடந்தாள்.

ஜெயமோகனுக்கு உள்ளுக்குள்ளே எரிச்சலும் கோபமும் நிரடியது. இவள் இந்த மாதிரி எடுத்தெறிந்து பேசுவாள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. என்னைப் பார்த்ததும் கதறிக் கதறி அழுவாள்.

‘ஜெயமோகன் நான் உங்களைக் கட்டிக்கொள்ள மறுத்து விட்டு இப்படி வந்து மாட்டிக் கொண்டு அல்லாடுகிறேனே… நான் எப்படித்தான் என் வாழ்நாளைக் கழிக்கப் போகிறனோ? எத்தனை நாள் தான் இப்படி அல்லாடப் போகிறனோ?’ என்று தலையை அடித்துக் கொண்டு அழுவாள் என்று எதிர்பார்த்தால், இப்படி சந்தோஷமாக இருந்து கொண்டு என்னைக் கண்டுகொள்ளாமல் எவ்வளவு இறுமாப்பாய் போகிறாள்?

எழுந்து போய் விடலாமா? இங்கு வந்தது தப்போ? என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது சிவா வந்தான்.

“என்ன ஜெயமோகன் எப்போது வந்தாய்? காபி சாப்பிட்டாயா?” என்று கேட்டான்.

“எல்லாம் ஆயிற்று”

“நான் சொன்ன விசா விஷயம் என்னாயிற்று?”

“கூடிய சீக்கிரம் ஆகிவிடும்”

“என்ன? ஏதோ ஒரு மாதிரியாய் இருக்கிறாய்? புவனா ஏதாவது சொன்னாளா? புவனா? ஏய் புவனா? இவள் எங்கே போனாள்?”

“உங்கள் பெண் திவ்யாவை பள்ளியில் கொண்டு விடுவதற்கு போயிருக்காங்க’”

“என்ன ஜெயமோகன் உடல் நிலமை சரியில்லையா? குரல் கூட ஒரு மாதிரி இருக்கு?”

“அதெல்லாம் ஒன்றுமில்ல வரட்டுமா?” என்று எழுந்து சென்றான் ஜெயமோகன்.

புவனா முடிவு பண்ணித் துணிகளை எல்லாம் தன் பெட்டியில் எடுத்து வைத்தாள்.

“அத்தா நீ ஏன் துணியெல்லாம் அடுக்கிறே. நாம் எங்கேயாவது போகிறோமா?” என்று கேட்டாள் திவ்யா.

“நான் எங்க வீட்டுக்குப் போகிறேன்”.

“நானும் வருவேன்.”

“வேண்டாம் நீ உங்கள் அப்பா கூட இருந்துகொள். நான் எங்க அம்மாகிட்ட போகிறேன்.”

“என்னையும் கூட்டிக் கொண்டு போயேன்.”

“அப்படீன்னா என்னை அம்மா என்று கூப்பிடு.”

“அய்யே அம்மா மொம்மை கொண்டு வர கடவுள்கிட்ட போயிருக்காங்க. நீ அத்தா”

“என்னை அம்மா என்று கூப்பிட மாட்டாயா?”

“ம்கூம். நீ அத்தா தானே. அப்புறம் எப்படி அம்மான்னு கூப்பிட முடியும்?”

“அப்போ நான் எங்கம்மாகிட்ட போகிறேன்.”

“நானும் வருவேன்”

“உன்னைக் கூட்டிக்கொண்டு போக மாட்டேன்.” என்று புவனா சொன்னதும் “ஓ” வென்று அலறிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் திவ்யா.

அங்கு வந்த சிவா, “ஏன் திவ்யா அழுகிறாள்?” என்று கேட்டவன் “எங்கே கிளம்பி விட்டாய் புவனா?” என்று கேட்டான்.

“எங்க அம்மாவிடம் போகிறேன். எனக்கு ஊருக்குப் போவதற்கு டிக்கெட் எடுத்துக் கொடுங்கள்.”

“என்ன தீடீரென்று அம்மா நினைவு வந்து விட்டதா? சரி வந்து ஆறு மாதம் ஆகி விட்டது. ஒருமுறை நீயும் திவ்யாவும் ஊருக்குப் போய் விட்டு வருவது தான் நல்லது.”

“நான் தனியாகத்தான் எங்கள் ஊருக்குப் போகப் போகிறேன்.”

“என்னாச்சு புவனா?”

“நான் போராடிப் பார்த்து விட்டேன் அத்தான். உங்கள் மூத்த மனைவி, அதாவது திவ்யாவின் அம்மா அவள் மனதில் ஆழமாகப்  பதிந்து போயிருக்கிறார்கள். என்னை திவ்யா ‘அம்மா’ என்று கூப்பிடுவாள் என்று எதிர்பார்த்தது என் தப்புதான். அவளை என்னால் ஜெயிக்க முடியாத போது நான் இங்கே இருப்பதில் அர்த்தமில்லை அத்தான். நான் எவ்வளவு சொல்லியும் ‘அத்தா’ என்று தான் கூப்பிடுறாளே ஒழிய ‘அம்மா’ சொல்ல மறுக்கிறாள்.”

“அதனாலே உடனடியாக ஊருக்குப் புறப்பட்டு விட்டாயா?”

“உங்களுக்குக் கிண்டலாகவோ கேலியாகவோ கூட இருக்கலாம்.”

“பின்னே என்ன… இந்தச் சின்னப் பெண் உன்னை அம்மா என்று கூப்பிடவில்லை என்று சொல்லி ஊருக்குக் கிளம்புகிறாயே.”

“நான் திவ்யாவின் மனதில் இடம் பிடித்து விட நினைத்தேன். நான் தான் அவளுக்கு அம்மா, அவளுக்கு எல்லாம் என்று உணர வைத்து ஜெயித்து விட நினைத்தேன். முடியவில்லை, கிளம்புகிறேன்.”

“முடிவே பண்ணி விட்டாயா?”

“என் முடிவில் மாற்றமேயில்லை.”

“சரி எப்போது கிளம்புகிறாய்? திவ்யாவை கூட்டிக்கொண்டு போகிறாயா?”

“என்னை மன்னித்து விடுங்கள் அத்தான். அவளால் என்னை அம்மாவாக பாவிக்க முடியாத போது எனக்கு இந்த உறவே தேவையில்லை என்ற முடிவோடு தான் கிளம்புகிறேன்.”

“அதாவது என்னைக் கூட உதறி விட்டுப் போகிறாயா?”

“வேறு வழியில்லை”

“நான் செய்த தவறைச் சொல்லி விட்டுப் போனால் எனக்குள் உணர்ந்து திருத்திக் கொள்ள முடியும்.”

“இனி உணர்ந்து என்ன பிரயோஜனம்?”

“சரி நான் என்ன தவறு செய்தேன் என்றாவது சொல்லிவிட்டுப் போ.”

“நீங்கள் நினைத்திருந்தால் திவ்யாவிடம் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லி அவள் மனதில் நான் தான் அம்மா என்று பதிய வைத்திருக்க முடியும்.”

“நான் அதற்கு முயற்சி செய்யவில்லை என்று நினைக்கிறாயா?”

“ஆமாம். எது வேண்டுமானாலும் ‘அத்தா’விடம் கேள் என்று தான் அவளிடம் சொன்னீர்களே யொழிய ‘அம்மாவிடம்’ கேள் என்று சொன்னதேயில்லை.”

“ஓ… இவ்வளவு பெரிய அபாண்டத்தை என் மேல் தூக்கிப் போடுகிறாயா?”

“அத்தான் இது அபாண்டமில்லை, பொய்யுமில்லை. வலிக்கக் கூடிய உண்மை. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு ஊருக்குப் போவதற்கு ரயில் டிக்கெட் ஏற்பாடு செய்யுங்கள்.”

கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்த சிவா, “ஓகே. நாளைக்கே இரயில் டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்கிறேன்.” என்று கொஞ்சம் வருத்தத்தோடு திவ்யாவை பிடுங்கிக் கொண்டு வெளியே வந்தான் சிவா.

தொடரும் (புதன் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    “மாரீஸ்வரன்” எனும் “மாரி” (சிறுகதை) – ✍ டாக்டர். பாலசுப்ரமணியன், சென்னை

    தாயின் மடியில் (சிறுகதை) – ✍ பீஷ்மா