in

வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – அத்தியாயம் 4) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை

வாழ்க்கை ❤ (அத்தியாயம் 4)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3

“கல்யாணத்தை ரொம்பா சிம்பிளாக வைத்துக் கொள்ளலாமே, வீண் ஆடம்பரம் வேண்டாம்”

“அதுவும் சரிதான். ஆனால் சிவா… எங்க வீட்டிலே நடக்கிற முதல் கல்யாணம்”

“அத்தே எனக்குப் புரியுது, ஆனால் வீணாக ஆடம்பரமெல்லாம் வைத்து ஏன் களேபரம் பண்ணணும்னு பார்க்கிறேன். இதிலே நான் பூமாலை போட்டுக் கொண்டு புவனா கூட உட்கார்ந்திருக்க, திவ்யாவின் மனதில் விபரீதமாக எண்ணங்கள் எதுவும் எழுந்து விடக் கூடாதுன்னு தான்…”

“எப்படியும் குழந்தைக்குத் தெரிந்து தானே ஆக வேண்டும்”

“அதற்காக இப்போது திடீரென்று ஒரு அதிர்ச்சி தர வேண்டாமே”

“என் வீட்டில் எல்லோருக்கும் ஒருநேர சாப்பாடாவது போட்டாகணும் மாப்பிள்ளை”

“ம் ம்… சரி. இப்படிச் செய்வோமே. நம்ம ஊர்க் கோயிலிலே சின்னதாக் கல்யாணச் சடங்குகளை முடிச்சுக்குவோம். அப்புறம் உங்க வீட்டிலே எல்லோரையும் கூப்பிட்டு பப்படம் பாயாசத்தோட விருந்தே போட்டுருங்க”

“அதுவும் சரிதான் மாப்பிள்ளை”

“அதனால்தான் நீங்க கார்டெல்லாம் அடிக்க வேண்டாம்னு சொல்றேன்”

“சரி நான் சொந்தக்காரங்களுக்கு நேரிலே போய் சொல்லிக் கொள்கிறேன். வரட்டுமா?”

 

காலையிலே குளித்து முடித்து விட்டு புத்தாடை உடுத்திக் கொண்ட போது, “அப்பா எங்கே கிளம்பிட்டே?” எழுந்து கண்ணைத் துடைத்துக் கொண்டு வந்தாள் திவ்யா.

“அப்பா வெளியே போயிட்டு வர்றேம்மா, நீ சித்தப்பாவுடன் போய் சாக்லேடு வாங்கிட்டு வர்றியா?”

“ஏண்டா அவளையும் கூட்டிண்டுப் போலாமே” என்றாள் சிவாவின் அம்மா கோகுலம்மாள்.

“வேண்டாம்மா, தம்பி கோயிலுக்கு வர வேண்டாம். இவளைப் புறப்பட வைத்து நேரே புவனா வீட்டிற்கு வந்துடட்டும். நானும் புவனாவும் மாலைப் போட்டுக் கொண்டு நிற்கிறதும்… நான் தாலி கட்டிறதும் எனக்கென்னவோ திவ்யா பார்க்க வேண்டாம்னு தோணுது”

“பரவாயில்லை, எப்போதாவது தெரிந்து தானே ஆக வேண்டும். இப்போதே அவளுக்கும் கொஞ்சம் புரிய வேண்டியது நல்லது தானே என்று நினைக்கிறேன்”

“வேண்டாம்மா, புவனா எங்களோட இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமா திவ்யாவிற்கு புரியட்டும்”

“சரி”

“பாப்பா… அப்பா வெளியே கிளம்பறேன். நீ குளிச்சு புது டிரஸ் போட்டுக் கொண்டு சித்தப்பா கூடப் போய் சாக்லேட் வாங்கிக் கொண்டு வா. நாம அத்தா வீட்டிலே சாப்பிட போகலாம், அங்கே பாயாசம் அப்பளம் எல்லாம் இருக்கும்”

“ம்கூம்… நானும் இப்ப உங்கூட வருவேன்”

“சொன்னாக் கேளு, அப்பாவுக்கு நெறய வேலையிருக்கு”

“நான் பாட்டிக் கூட நிக்க மாட்டேன், நானும் உங்கூடத் தான் வருவேன்”

“சரி, குளிச்சு டிரஸ் பண்ணு கூட்டிட்டுப் போறேன்”

“நீ என்னைத் தூக்கிக் குளிப்பாட்டு, இல்லேன்னா நீ என்னய உட்டுட்டு போயிருவே”

“திவ்யா… அப்பா சொன்னா கேக்கணும்”

“ம்கூம்… நானும் வர்றேன்”

கோகுலம்மாள் திவ்யாவை பிடுங்க முயற்சிக்க, “வரமாத்தேன் போ” என்றவாறு சிவாவின் கழுத்திக் கட்டிப் பிடித்துக் கொண்டது.

“சரி நான் கிணற்றுக்கு வருகிறேன். உன் பக்கத்திலேயே நிற்கிறேன். பாட்டி உன்னைக் குளிப்பாட்டட்டும், சரியா கண்ணு” கோவத்தை அடக்கிக் கொண்டான் சிவா.

“ம்… சரி” என்று தலையாட்டினாள் திவ்யா.

திவ்யாவிற்கு புத்தாடை உடுத்தி அவளையும் தூக்கிக் கொண்டான் சிவா. வீட்டின் முன்னால் வந்த டாக்ஸியில் எல்லோரும் ஏறிக்கொள்ள கார் கோயிலை நோக்கி ஓடியது.

புவனாவின் குடும்பம் ஏற்கனவே கோயிலில் குழுமியிருந்தார்கள். திவ்யா இறங்கி ஓடிப்போய், “அத்தா” என்று புவனாவைக் கட்டிக் கொண்டாள்.

புவனா மாலையும் கழுத்துமாக நிற்கிறதால் முழந்தையை தூக்க முடியாமல் நின்றாள்.

“அத்தா இப்ப உன்னைத் தூக்க முடியாது வந்துரு” கோகுலம்மாள் திவ்யாவை தூக்கினாள்.

“விடு பாட்டி, நான் அத்தாகிட்டயே நிற்கிறேன்” குழந்தை அடம் பிடித்தது.

“மாலையை மாத்திக்கோங்க” அர்ச்சகர் சொல்லவும் திவ்யா திரும்பிப் பார்த்து, “அய்ய் அப்பாவும் மாலை போட்டிருக்கு” திவ்யா சிவாவிடம் கையை விரித்துக் கொண்டு ஓடினாள்.

“அப்பா பூஜை செய்யட்டும் தொந்தரவு செய்யாதே” சிவாவின் தம்பி குமார் திவ்யாவை தூக்கினான்.

“என்னை விடு சித்தப்பா, நான் அப்பாகிட்ட போறேன்” குழந்தை குமாரிடம் இம்சை பண்ணியது.

குமார் அவளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள “ஓ” வென்று அலறிய திவ்யா, குமாரை உதறிக் கொண்டு சிவாவிடம் ஓடி வந்தாள்.

ஓடி வந்த திவ்யாவைத் தூக்கிக் கொண்டு அருகில் நின்ற புவனாவைப் பார்த்தான் சிவா. புவனாவின் கண்களில் முட்டிக்கொண்டு நின்ற கண்ணீர் திரண்டு கன்னத்தில் வழைந்தது.

அருகில் வந்த சிவா வேறு யாருக்கும் கேட்காதவாறு, “இப்போது வேண்டுமானாலும் திருமணத்தை நிறுத்தி விடலாம் புவனா, இத்தனைப் பிரச்சினைகள் வருமென்று நான் எதிர்பார்த்ததுதான்” என்றான்.

கண்களைத் துடைத்துக் கொண்டு, “பரவாயில்லை அத்தான்” என்றாள் புவனா.

“ராகு காலம் வருவதற்கு முன் தாலி கட்டி விட்டால் உத்தமமாக இருக்கும், முதலில் மாலையை மாத்திக்கோங்க” என்றார் அர்ச்சகர்.

எதிலும் ஈடுபடாமலிருந்த திவ்யா, “அப்பா நீயும் அத்தாவும் ஏன் மாலை போட்டிருக்கீங்க?” என்றாள், பூ இதழ்களை மாலையிலிருந்து பிய்த்தவாறு.

“அது… கண்ணுக்குட்டிக்கு தெரியாதா? அத்தாவை உன் அம்மா ஆக்கிக் கொள்வதற்கு தான்” என்று பொறுமையாக திவ்யாவின் கன்னத்தில் முத்தமிட்டான்.

“அத்தா ஏன் அம்மாவாகணும். அம்மாதான் கடவுள்கிட்ட பொம்மை வாங்கிண்டு வரப் போயிருக்காயில்லியா?”

“அது… அது… அம்மா வரதுக்கு நாளாகுமில்லியா கண்ணு”

“அப்படியா? ஆமா… நான் இப்ப என்ன செய்யணும்? என்ன இப்படியே வச்சுகிறியா? ரொம்ப நல்லாயிருக்கு”

“இல்லை கண்ணு அப்பாவும் அத்தாவும் பூஜை பண்ணணும் கடவுள்கிட்டே கேட்டு இந்த திவ்யாவிற்கு சாக்லேட் கேட்டு வாங்கித் தரணும்”

“எனக்கு இவ்ளோ பெரிய சாக்லேட் தர்றியா?” கையை விரித்துக் காட்டினாள்.

“கொஞ்சம் நீயும் சித்தப்பாவும் போய் கடையிலே சாக்லேட் வாங்கிட்டு வர்றீங்களா?” திவ்யாவை கீழே இறக்கி விட்டான்.

“அப்பா நான் இங்கேயே நின்னுகிறேன், சித்தப்பாவை சாக்லேட் வாங்கி வரச் சொல்றியா?”

“சரி”

“சீக்கிரம் மாலையை மாத்திக்கோங்கோ” என்றார் அர்ச்சகர்.

திவ்யா, புவனாவிடம் வந்து, “ஏன் அத்தா பூமாலையெல்லாம் போட்டிடுக்கே” என்று திரும்பவும் பூதம் கிணறு வெட்ட ஆரம்பித்தாள்.

சிவாவிற்கு பொங்கி வந்த கோவத்தை அடக்கிக் கொண்டு மாலையை மாற்றினான். புவனாவும் மாலையை மாற்ற “அய்” என கை கொட்டி சிரித்தாள் திவ்யா.

புவனாவின் அம்மா அருகில் வந்து, “ராகு காலம் வர்றதுக்கு இன்னும் பத்து நிமிசந்தான் இருக்கு. தாலியை எடுத்து கொடுங்க” என்றாள்

அர்ச்சகர் திரும்பி சிவாவைப் பார்க்க, “எல்லாம் கொஞ்சம் வேகமாக நடக்கட்டும்” என்றான் பொதுவாக.

உடனடியாக அர்ச்சகர் தாலியை எடுத்து நீட்ட, “அது என்னது?” அருகில் வந்த திவ்யா.

“இந்தா சாப்பிடு” என்று ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொடுத்தார் அர்ச்சகர்.

திவ்யா, ”அந்தத் தட்டைக் காட்டு”என்றாள்.

“பொண்ணு நீ ரொம்பத் தொந்தரவு செய்றே. அங்கே போய் நில்லு” என்றார் அர்ச்சகர்.

சிவாவிடம் ஓடி வந்த திவ்யா, “அப்பா அந்த தட்டிலே என்ன இருக்கிறதுன்னு காட்டச் சொல்லேன்” என்றாள்.

அர்ச்சகரைப் பார்த்தான் சிவா. அவர் தட்டை எடுத்து நீட்ட, சிவா அதை வாங்கி திவ்யாவிடம் காட்டினான்.

மஞ்சள் கயிறு தேங்காய், பழம் எல்லாம் எதுக்கு வச்சிருக்குப்பா?’’

‘‘சும்மா‘‘

அப்படியா, ஆமா இனி என்னச் செய்யப் போறே?’’

‘‘பார்த்துண்டேயிரு கொழந்தை… இப்படி ஏதாச்சும் வம்பு பண்ணிண்டேயிருந்தே உன்னை பூதத்திடம் புடிச்சி கொடுத்திட வேண்டியது தான்” என்றார் அர்ச்சகர்.

“அப்பா” என்று பயந்து கொண்டே சிவாவிடம் வந்தாள் திவ்யா.

“உண்மையிலே நீ பயப்படாதே கண்ணு” என்றான் சிவா.

என்ன நினைத்தாளோ இல்லை பயந்து போனாளோ ஓடிப் போய் சித்தப்பாவிடம் ஒட்டிக் கொண்டாள்.

சிரித்துக் கொண்டே தாலியை நீட்டினார் அர்ச்சகர். எடுத்துத் திரும்பிய சிவா புவனாவின் முகத்தைப் பார்த்தான். இவ்வளவு நேரம் நடந்த கலட்டாவையும் மீறி அவள் முகத்தில் புன்னகை படர்ந்தது.

அருகில் கண்ணால் அழைத்தான் சிவா. புவனா அருகில் வர, எல்லோர் முகத்திலும் சலனங்கள் கலைய தாலியைக் கட்டினான் சிவா.

எல்லோர் கைகளில் இருந்த அட்சதையை தூவ, அங்கே இறுகிப் போயிருந்த மௌனம் கலைக்கப்பட்டு மெதுவாக கலகலப்பு ஏற்பட்டது.

“சித்தப்பா இவ்ளோ பெரிய சாக்லேட்” என்று கையை விரித்துக் காட்டினாள் திவ்யா.

“கடைக்குப் போவோமா?” என்று கேட்டவாறு திவ்யாவைத் தூக்கிக் கொண்டு கிளம்பினான் சிவாவின் தம்பி.

 

“புவனா நான் பணம் புரட்டி வச்சிருக்கேன், வீணாகக் கவலைப்படாதே” என்றாள் அம்மா

“எப்படி?” என்றாள் புவனா.

“என் கழுத்தில் கிடந்த தாலியை அடகு வைத்தேன்” என்று அம்மா சொன்ன போதுதான் அம்மாவின் கழுத்து வெறுமனே இருப்பது புரிந்தது.

“இப்படியெல்லாம் இந்தக் கல்யாணம் நடக்க வேண்டுமா?”

“சீ… இந்த மாதிரி சும்மாச் சும்மா அழக்கூடாது. போய் புறப்படுகிற வழியைப் பார்” என்று புவனாவை அனுப்பி விட்டு சிவாவின் அம்மாவிடம் வந்து, “இந்தாங்க நான் சொன்னப் பணம் ரூபாய் இருபத்தையாயிரம்” என்று கொடுத்து விட்டு, “புவனாவின் கழுத்தில் இருபத்தைந்து பவுனுக்கு தங்கம் போட்டிருக்கிறேன். அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் புறப்படும் போது வீணாக சலசலப்பு காட்ட வேண்டாம்” என்றாள்.

“அதெல்லாம் சரி, மறுவீடு காண எத்தனை பெட்டி சரி செய்திருக்கே?”

“வாங்க, அதையும் காட்டி விடுகிறேன். அப்புறம் சீர் சரியாகச் செய்யவில்லைன்னு என் பொண்ணு பெறகு கண்ணைக் கசக்கிக்கிட்டு வந்து நிக்க வேண்டாம்” என்று சிவாவின் அம்மாவை அழைத்துச் சென்று சீர் வரிசையைக் காட்டினாள்.

“இந்தா இருக்கு”

“கட்டில் மெத்தை”

“வெளியே வண்டியிலே வச்சிருக்கேம்மா”

“சரி முறுக்குப் பெட்டி இருபத்திரண்டு வைக்கச் சொன்னேனே, இருபது தானே இருக்கு”

“இன்றைக்கு சந்தையிலே பெட்டிக்கு அலைஞ்சேன் மைனி கிடைக்கலே, நான் வேணும்ணா பையிலே போட்டு அனுப்பறேன்”

“அதெப்படி நான் எவ்வளவு நாளைக்கு முன்னாலே சொன்ன விசயம்? நீ எல்லாம் சிவா வீட்டுக்குத் தானேண்ணு இளக்காரமாக உட்கார்ந்திருந்தே அப்படித் தானே?”

“அய்யோ அப்படியெல்லாம் இல்லை மைனி” என்று புவனாவின் அம்மா பதற, அங்கே திருமணத்திற்கு வந்திருந்த பெண்மணி கூட்டத்திலிருந்து, “என்னவோ புது மாப்பிள்ளை கல்யாணம் மாதிரி ரொம்பாத்தான் அலட்டிக்கிறாங்க, இரண்டாந்தரக் கல்யாணம் தானே” என்று சொல்ல

“அது எவடி சொன்னது? எம்பையன் எப்பவும் புது மாப்பிள்ளைத் தாண்டி” என்று கத்தினாள்.

பின் மெதுவாக, “சரி சரி… பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒழுங்காக அனுப்பி வைக்க பார்” என்றாள்.

தொடரும் (புதன் தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வெள்ளை தேவதை (சிறுகதை) – ✍ விடியல் மா. சக்தி

    என்னவளே ❤ (கவிதை) – ✍ சங்கரி முத்தரசு, கோவை