வீட்டிலிருந்தே சம்பாதிக்கும் ஆர்வம்
தற்காலத்தில், புதிதாக அறிமுகமாகிக் கொள்ளும் பெண்கள் பேசிக் கொள்ளும் இரண்டாவது வார்த்தையே, “வீட்டுலருந்தே செய்யறா மாதிரி ஏதாவது வேலை இல்லன்னா பிசினஸ் இருந்தா சொல்லுங்க” என்பது தான்
எப்படியாவது, சொந்தக்காலில் நின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற முனைப்பு பெண்களிடம் அதிகரித்து விட்டது. மகிழ்ச்சி
வீட்டிலிருந்தே செய்கிற வேலை என்றால் வீட்டையும் பார்த்துக் கொண்டு கொஞ்சம் பணமும் சம்பாதிக்கலாமே. இரட்டை குதிரையை ஒரே வண்டியில் பூட்டுவது போல், வீட்டிலிருந்தே வேலை செய்வது இரட்டை குதிரை சவாரியை சாமர்த்தியமாக செய்வதாகுமல்லவா? தற்காலத்தில் தான் போன் மூலமாகவே செய்யக்கூடிய வேலைகள் நிறைய கிடைக்கின்றனவே. ரொம்ப சரி.
நடைமுறை சாத்தியங்கள்
ஆனால், இது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம்? இந்த கொரோனா கால கட்டத்தில் வாட்சாப்பில் புடவை, நகை விற்பனையை துவக்கியுள்ளவர்கள் பலர். எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே வட்டத்திலிருப்பவர்கள். ஒரு குறுகிய வட்டத்தில் எப்படி நிரந்தரமாக வியாபாரம் செய்ய முடியும்?
எல்லோரும் ஒரே வியாபாரத்தில் இருப்பதால் தோழிகளாக இருந்தவர்கள் போட்டியாளர்களாக மாறி விட்டனர்.
ஆன்லைன் புடவை, நகை வியாபாரத்தை துவங்கி அதில் நஷ்டமடைந்ததால் ஏற்பட்ட விரக்தியாலும், கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தாலும் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு செய்தி சென்ற வாரம் படிக்க நேர்ந்தது. முகநூலில் லைக், ஷேர் செய்து பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரத்தை நம்பி பலர் பணத்தை இழந்ததாக மற்றொரு செய்தி.
இப்படி மாட்டிக் கொள்பவர்கள் அதிர்ஷ்டத்தை நம்பும் சோம்பேறிகள் இல்லை. ஆராயாமல் அல்லல் படும் அப்பாவிகள். இவர்கள் உழைக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், அந்த உழைப்பு எங்கே எப்படி செலுத்தப்பட வேண்டும் என்று தான் தெரியவில்லை.
தோற்ற பின், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் ஏச்சு பேச்சுக்களுக்கு ஆளாகிறார்கள். அதனால், நமக்கெல்லாம் வியாபாரம் சரியாக வராது என்று ஒதுங்கி விடுகிறார்கள்.
ஆராய்ந்து அறிந்து செய்தலின் அவசியம்
வியாபாரம் அது ஆன்லைனோ, நேரடியாகவோ, அந்த பொருள் அல்லது சேவைக்கு எவ்வளவு தேவை இருக்கிறது, அதை எந்தளவுக்கு நம்மால் பூர்த்தி செய்ய முடியும் என்பதை கூர்ந்து பார்த்து விட்டு செய்வது நல்லது.
அதோடு ஒவ்வொரு பொருளின் தேவையும் கால தேச வர்த்தமானங்களுக்கு உட்பட்டது. உதாரணமாக சென்னையில் ஸ்வெட்டர் தேவை அதிகபட்சம் இரண்டு மாதங்கள் தான். ஒரு முறை வாங்கி விட்டால் அதையே அடுத்த வருடங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நம் நட்பு வட்டாரத்தில் புடவை, நைட்டி, நகை விற்பவர்கள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் நிச்சயம் நாலு பேர் இருப்பார்கள். கூர்ந்து கவனித்தால் புரியும்.
யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறேன் என்று, ‘புளிக்குழம்பு‘ செய்வது எப்படி என்று வீடியோ போட்டு விட்டு, நாளையே பணம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது.
வெற்றிக்கான பார்முலா
சுருக்கமாக சொல்வதென்றால் எல்லோரும் செய்வதை நாமும் செய்தால் வெற்றியடைய முடியாது. சற்றே வித்தியாசமாக சிந்தித்து நம் கற்பனை திறனை புகுத்தி செய்யப்படும் சிறு விஷயங்களும் மகத்தான வெற்றியை அடையும்.
நம் சிந்தனை, உழைப்பு இரண்டும் சரியான விகிதத்தில் சேரும் போது வெற்றி நிச்சயம்
Nice