சுயமுன்னேற்றம்

THE CAUCUS RACE – ஒரு அதிசய ஓட்டப்பந்தயம் (மீரா ஜானகிராமன்) – ஜனவரி 2021 போட்டிக்கான பதிவு

ம் சிறுவயதில் ‘ALICE IN THE WONDERLAND’ என்ற குழந்தைகளுக்கான புதினத்தை படித்திருப்போம். அதில் கதை நாயகி ஆலீஸ் வினோதமான உலகில் மாட்டிக் கொண்டு விசித்திரமான சம்பவங்களை சந்திப்பாள். இறுதியில் அவை அனைத்தும் கனவு என்பதாக கதை முடியும்.

அதில் ஒரு கட்டத்தில் பலவிதமான விலங்குகள் ஆலீஸின் கண்ணீர் குளத்தில் விழுந்து நனைந்து விடும். ஈரம் உலர எல்லா மிருகங்களும் ஓட்டப்பந்தயம் ஓட தீர்மானிக்கும். ஆலீஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எல்லா விலங்குகளும் திசைக்கு ஒன்றாக ஓட ஆரம்பிக்கும்

தானும் ஓட வேண்டுமா? வேண்டாமா? என்று புரியாமல் ஆலீசும் ஓடுவாள். எப்போது ஆரம்பிக்க வேண்டும்? எப்போது முடிக்க வேண்டும்? எவ்வளவு தூரம் ஓட வேண்டும்? என்ற கணக்கெல்லாம் இல்லாமல் சுமார் அரை மணிநேரம் ஓடி முடித்த பின் எல்லா விலங்குகளும் ஆலீஸிடம் வந்து, “எங்களில் யார் வெற்றி பெற்றவர்?” என்று கேட்கும். ஆலீசும் நீங்கள் அனைவரும் வெற்றி பெற்றீர்கள் என்பாள். அதை கேட்டு மகிழ்ச்சியடைந்த விலங்குகள் அவளிடம் பரிசு தருமாறு கேட்கும்.

என்ன பரிசு தருவது என்று புரியாமல் ஆலீஸ் தன் சட்டை பையில் கையை விட, அதில் ஒரு இனிப்பு பொட்டலம் இருக்கும். அதிலிருந்து எல்லா விலங்குகளுக்கும் இனிப்பு தருவாள். அவையும் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் செல்லும்.

ஆம், ஆலீஸின் அதிசய உலகத்தில் மட்டுமல்ல, நம் உலகத்திலும் இதே அதிசய ஓட்டப்பந்தயம் தான் நடக்கிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையானவர்கள். ஓவ்வொருவர் பந்தயமும் வெவ்வேறு நேரத்தில் துவங்கி வெவ்வேறு நேரத்தில் முடிகின்றன.

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் வெற்றி பெற்றவரே. எல்லோருக்கும் மனநிம்மதி என்னும் பரிசு நிச்சயம் கிடைக்கும், அடுத்தவருடன் ஒப்பிட்டுக் கொள்ளாத வரையில்.

“நான் யாருக்கும் போட்டியாளர் இல்லை. என் போட்டி என்னோடு தான்” என்ற  வாசகங்கள் அடிக்கடி  வாட்சாப் ஸ்டேடஸ் ஆக வலம் வருகின்றன. இது ஒரு மகத்தான உண்மை.

“அவங்கப்பா பைக் வாங்கி தந்திருக்கார். நீங்க எனக்கு சைக்கிள் தான் வாங்கி தந்திருக்கீங்க” என ஒப்பிடும் பிள்ளைகள் ஒரு பக்கம்

“உன் வயசு தானே அவனுக்கும், அவன் மார்க்கை பார் உன் மார்க்கை பார்” என ஒப்பிடும் பெற்றோர் மறுபக்கம்

இம்மாதிரியான ஒப்பீடுகள், உறவை சிதைத்து பகையை வளர்ப்பதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை

“தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு வேறு தான்” என்று சொல்வார்கள்

கை ரேகை முதற்கொண்டு பெற்ற பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமே ஒரே மாதிரி இருப்பதில்லை. பின், எப்படி அடுத்தவருடன் ஒப்பீடு செய்து கொள்வது சரியாகும்?

நம்மை நம்மோடே ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது தான் சரியான ஒப்பீடாக இருக்க முடியும்

சென்ற வருடம் நாம் எப்படி இருந்தோம்? தற்போது எப்படி இருக்கிறோம்? அது படிப்போ, விளையாட்டோ, பொருளாதார நிலையோ, வியாபாரமோ, உடல் நிலையோ, எதுவாக இருந்தாலும் சென்ற வருடத்தை விட, நாம் மேம்பட்டிருக்கிறோமா இல்லையா என்று ஒப்பிட்டு பார்த்து தேவையான சீர்திருத்தங்களை செய்து கொள்வோமாயின், நம் வாழ்க்கையில் குறைந்த பட்ச நிம்மதி என்பது உறுதிபடுத்தப்படும்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி வாழ்க்கை தனித்தனி இலக்குகள். வெவ்வேறு கால வரையரைகள்.  மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு கொள்வது  என்பது, நம் பொன்னான வாழ்நாட்களை வேண்டாத சிந்தனைகளில் வீணடிப்பதாகும்.

இதுவே ஆலீஸ் இன் த ஒன்டர்லேண்ட் கதையின் மைய பகுதியாக வரும், “CAUCUS RACE” கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடமாகும்

#ad

Click here to avail Pongal Special Deals in Amazon

Similar Posts

2 thoughts on “THE CAUCUS RACE – ஒரு அதிசய ஓட்டப்பந்தயம் (மீரா ஜானகிராமன்) – ஜனவரி 2021 போட்டிக்கான பதிவு
  1. The caucus race article is very nice . உண்மை தான் . நாம் நம் தரத்தை உயர்த்திக் கொள்ளவே முயற்சி செய்ய வேண்டும் . புது வருஷத்தில் நமது முயற்சி திருவினையாக எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!