2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5
வித்யாவை பார்த்ததும் ஏதோ சொல்ல வாய் எடுக்க, “ம்ஹ்ஹும்… பேச வேண்டாம்” என்று வாய் மேல் விரலை வைத்துக் காட்டி அவனை அமைதிப்படுத்தினாள் வித்யா.
கோமதிக்கு அவனைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. ஆனால், வித்யா முகத்திலோ குருரமான ஒரு புன்னகையொன்று தெனாவெட்டாய் தெரிந்தது.
ஐந்து நிமிட அமைதிக்குப் பின் நாங்கள் புறப்படுகிறோம், என்று ஜாடை காட்டிவிட்டு கிளம்பிய வித்யாவை அவன் பார்த்த பார்வையில், அம்பிகாவதி… காத்தவராயன்… மஜ்னு… இதயத்தைத் திருடாதே நாகார்ஜுன் என எல்லோரும் தெரிந்தனர்.
ஆஸ்பத்திரிக்கு வெளியே பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றதும், கோமதி வித்யாவை வெறுப்பாய் பார்த்தாள்.
“என்னடி முறைக்கிற?” கேட்டே விட்டாள் வித்யா.
“நீ செஞ்சது உனக்கே நல்லா இருக்கா?” கடுப்பாய்க் கேட்டாள் கோமதி.
“எக்ஸாட்லி!… ரொம்ப சந்தோஷமா இருக்கு”
“இதில் உனக்கென்ன சந்தோஷம்?”
“அதென்னமோ தெரியலை கோமதி… யாராவது ஒருத்தர் வலில துடிக்கறதைப் பார்த்தா எனக்குள்ளார பரிதாபத்துக்குப் பதிலா சந்தோஷம்தாண்டி வருது… சின்ன வயசிலிருந்தே அப்படித்தான்”
அவளோடு மேற்கொண்டு பேச விரும்பாமல், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் கோமதி.
“சரி சரி மூட் அவுட் ஆகாதே!… நான் இப்படியே அந்த பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போய் சிவாவையும் பார்த்துடலாம்னு நினைக்கிறேன்… நீ வர்றியா?” என்று கேட்ட வித்யாவிற்கு,
“வரலை” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் கோமதி.
“சரி பரவாயில்லை நான் மட்டும் போகிறேன்” என்ற வித்யா, கடந்து சென்ற ஆட்டோவைக் கைதட்டி அழைத்து, அதில் ஏறி அமர்ந்தாள்.
ஆட்டோ கிளம்பியதும் வெளியே கையை நீட்டி, “டாட்டா” காட்டிச் சென்றவளை எரிச்சலுடன் பார்த்தாள் கோமதி.
“இவள் என்ன மாதிரி?… இவளோட நான் ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கறது நல்லதா?… இல்லை எனக்கு நானே வெச்சுக்கற ஆப்பா?” அவள் மனம் சஞ்சலப்பட்டது.
கோமதி சொன்ன கல்லூரிக் காலக் கதையை எந்தவித இடைபுகுதலும் இல்லாமல் முழுவதுமாய் கேட்டு முடித்த கோமதியின் தாய், விழிகளை பெரிதாக்கிக் கொண்டு, “என்னால நம்பவே முடியலடி! சினிமாவுல தான் இந்த மாதிரி எல்லாம் பார்த்து இருக்கேன். நிஜவாழ்க்கையில இன்னைக்கு தான் கேள்விப்படறேன். ஆண்டவா… உலகம் ரொம்பக் கெட்டுப் போச்சு!” என்றாள்.
“அம்மா… இதுக்கே நீ இப்படிப் பேசுறேன்னா… இதோட முடிவைச் சொன்னா நீ மயக்கம் போட்டு விழுந்திடுவே”
“ஓ… கதை இன்னும் இருக்கா? சொல்லு… சொல்லு… சீரியல் கதையை விட சீரியஸ் கதையாயிருக்கே அந்த வித்யா கதை”
“அந்தக் கராத்தே வீரன் மூணு மாசம் கழிச்சுத்தான் காலேஜுக்கு வந்தான்!… அதுவும் எப்படி?… நொண்டிக்கிட்டு!..”
“அடப்பாவமே!” அங்கலாய்த்தாள் கோமதியின் தாய்.
“கத்தி வயித்துல பாய்ஞ்சதுல இடுப்பு பக்கம் நரம்புகள் பாதிக்கப்பட்டு நடையே போயிடுச்சு!… மொதல்ல நடப்பானா மாட்டானான்னு சந்தேகமா இருந்துச்சாம்!.. அப்புறம் படாதபாடுபட்டு… ஏக ட்ரீட்மெண்ட் குடுத்து… ஓரளவுக்கு நடையை கொண்டு வந்திருக்காங்க. பாவம்… கராத்தே கிராத்தேவையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு சராசரி மாணவனா மாறிட்டான்!… அந்த இன்னொரு பையன்… அதான் சிவா… அவன் கதை… இதை விடச் சோகம். அந்த சிவா வீட்டுக்கு ஒரே பையனானதால் பேரன்ட்ஸ் அவன் மேலே உயிரையே வச்சிருந்தாங்க. மகன் கத்திக் குத்துப்பட்டு உயிருக்கு போராடிட்டு இருக்கிறதை பார்த்த அவங்க அம்மா அங்கேயே மயக்கம் போட்டு விழுந்து படுத்த படுக்கையாகிட்டாங்க. மகன் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வர்றதுக்குள்ள அம்மா பரலோகமே போய் சேர்ந்துட்டாங்க”
“த்சொ….த்சொ!… அப்புறம்?”
“அப்புறம் என்ன? நீ படிச்சு கிழிச்சது போதும்னு அவன் அப்பா அவனை காலேஜை விட்டு நிறுத்தி தன் கூட மில்லுல சேர்த்துக்கிட்டார். அவன் படிப்பு போச்சு. வரப் போற புருஷன்…. இந்த ராட்சசிகிட்ட மாட்டிகிட்டு என்ன பாடுபடப் போறானோ?” கோமதி முகம் தெரியாத அந்த இளைஞனுக்காக பரிதாபப்பட்டாள்.
“ஹும்… கல்யாணத்துக்கு பிறகாவது அவ திருந்திட்டா பரவால்ல” உண்மையான கவலையோடு சொன்னாள் கோமதி.
வித்யாவின் வீடு.
தபாலில் அனுப்பப்பட வேண்டிய கல்யாண பத்திரிகைகளுக்கு அட்ரஸ் எழுதிக் கொண்டிருந்தாள் வித்யா. டிவியில் டிஸ்கவரி சேனல் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு வரிக்குதிரையை நாலைந்து சிறுத்தைகள் துரத்தித் துரத்திக் குதறும் காட்சி அதீத சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.
திடீரென்று அந்த யோசனை வந்தது வித்யாவிற்கு. கற்பனையில் அதை நினைத்துப் பார்த்த போது அவளுக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது.
“மாப்பிள்ளை சுந்தரோட அட்ரஸுக்கு ஒரு இன்விடேஷனை அனுப்பி வச்சா என்ன?…. யார் அனுப்பியிருப்பாங்க?… எவர் அனுப்பியிருப்பாங்கன்னு தெரியாம மண்டையை பிச்சுக்கட்டுமே!”
வேகமாய் ஒரு பத்திரிகையை எடுத்து, மிஸ்டர் சுந்தர்ராமன் பி.காம், என்று எழுதியவள், அப்படியே நிறுத்தி விட்டு விழிகளை மேல் நோக்கிப் பார்த்தபடி எதையோ தீவிரமாக சிந்தித்தாள் அவளுக்குள் அந்த அமிலக் குடுவை உடைந்து மனதின் சுவரெங்கும் விகாரம் ஒட்டிக் கொண்டது.
“இன்விடேஷன் அனுப்பறதை விட ஒரு மொட்டைக் கடுதாசி போட்டுப் பார்க்கலாம்” சட்டென அந்த இன்விடேஷன் கிழித்தெறிந்து விட்டு, ஒரு வெள்ளைத் தாளெடுத்து எழுத ஆரம்பித்தாள்.
“முட்டாள் சுந்தரராமா… நாட்டில் எத்தனையோ பெண்கள் இருக்கும் போது உனக்கு இந்த வித்யா தான் கிடைத்தாளா? இதுவரை மூன்று பேரை காதலித்து நாலுமுறை அபார்ஷன் செய்தவள் உனக்கு இல்லத்துணைவியா? உன்னோடு முதலிரவுக்கு வரும் அவள் ஏற்கனவே முப்பது இரவுகளைப் பார்த்தவள், பாவம்டா நீ. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடலை!… யோசித்து முடிவு எடு!”
இப்படிக்கு,
யாரோ”
எழுதி முடித்ததும் அதை கவரில் இட்டு ஸ்டாம்ப் ஒட்டினாள்.
“படிச்சு முடிச்சதும் பயல் அரண்டு போயிடுவான்!… பைத்தியம் பிடித்தவனாட்டம் அலையப் போறான் பாரு!” நினைத்துப் பார்க்கவே சந்தோஷமாய் இருந்தது வித்யாவுக்கு.
அடுத்த மூன்றாம் நாள் அந்த சுந்தரராமனின் ரியாக்ஷனைப் பார்க்க விரும்பியது வித்யாவின் மனம். “இப்ப அவன் எந்த நிலையில் இருப்பான்?… பார்க்கணும் போல இருக்கே?” மொபைலை எடுத்து கால் செய்தாள்.
சுந்தரராமன் லைனுக்கு வந்தான். “ஹலோ சுந்தர் ஹியர்” அவன் குரல் லேசாய் கமறியிருந்தது.
“ஏங்க நீங்க இப்ப ஃப்ரீயா இருக்கீங்களா?” கொஞ்சலாய் கேட்டாள் வித்யா.
“ம்ம்ம் ஃப்ரீ மாதிரி தான்!… ஏன் எதுக்கு கேட்கிறே?”
“கொஞ்சம் டிரஸ் மெட்டீரியல்ஸ் பர்ச்சேஸ் பண்ணனும்!… நீங்க கூட இருந்தீங்கன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்?” என்றாள் போலிக் கொஞ்சலுடன்.
“நான் எதற்கு?” இழுத்தான்.
“ம்ஹும்… நீங்க கண்டிப்பா வரணும்!… இதுவரைக்கும் எனக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் யூஸ் பண்ணினேன்!… இனிமே உங்களுக்குப் பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ண வேண்டாமா?… அதனால நீங்களே வந்து செலக்ட் பண்ணித் தாங்க!… ப்ளீஸ்” குரலில் சாக்லேட் கலந்தாள், மனசுக்குள் சயனைட் கலந்தாள். அவன் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டான்.
“தேங்க்ஸ்ங்க… சரியா ஈவினிங் அஞ்சு மணிக்கு சிங்கப்பூர் பிளாசா வந்துடுங்க!… ஓகே பை!” இணைப்பிலிருந்து வெளியேறியவள் வாய் விட்டுச் சிரித்தாள்.
இஞ்சி தின்ற குரங்கு மூஞ்சி… ஆடு திருடின கள்ளன் மூஞ்சி… தேள் கொட்டின திருடன் மூஞ்சி… எல்லாத்தையும் இன்னைக்கு ஒரு ஆளோட முகத்துல பார்க்கப் போறேன்….”
****
பார்ப்பவர்கள் முகத்தில் ஓங்கி அடிப்பதைப் போன்ற ஒரு ஜவ்வு மிட்டாய்க் கலரில், சரியான பிட்டிங்கில் இல்லாத சுடிதாரை அணிந்து கொண்டு, வெகுஅலட்சியமாக தலைமுடியைப் பறக்க விட்டுக் கொண்டு, முகத்துக்கு பவுடர் கூட போடாமல், கிரீம் கூடப் பூசாமல் கிளம்பினாள் வித்யா.
தான் அசிங்கமான தோற்றத்தில் போனால் அவன் மனம் வருத்தப்படும் என்பது அவளுக்குத் தெரியும், அந்த வருத்தம் தானே அவளுக்கு சந்தோசமே. சிங்கப்பூர் பிளாசாவின் முன் தன் வண்டியை நிறுத்தி சுற்றும்முற்றும் பார்த்தாள்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings