in , ,

உயிரைத் தந்துவிடு (அத்தியாயம் 4) – தி.வள்ளி, திருநெல்வேலி.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தொழிலதிபர் ராகவேந்தரின் வரவை எதிர்நோக்கி மொத்த மருத்துவமனையே காத்திருந்தது.வி.ஐ.பி கேட்டை திறந்து வைத்து செக்யூரிட்டி ரெடியாக காத்திருந்தார். ராகவேந்தரின் குடும்பத்தினர், நண்பர்களை சுமந்து கொண்டு நாலு படகு கார்கள் உள்ளே வர… அதை பின்தொடர்ந்து ‘உய்ங்..உய்ங்…’ என்ற சத்தத்துடன் ஆம்புலன்ஸ் உள்ளே நுழைந்தது .

அரை மயக்க நிலையிலிருந்த பெரியவர் ராகவேந்தரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலுங்காமல், குலுங்காமல் ஸ்ட்ரெச்சரைக் கொண்டு வந்து படுக்க வைத்து பத்திரமாக ஐ. சி. யு விற்கு கொண்டு வந்தனர் .

குடும்பத்தினர் அழுத கண்களுடன் தொடர்ந்து உள்ளே வந்தனர். சீப் டாக்டர், ராகவேந்தர் மகன் வருண் குமாரை தனியாக அழைத்து… “மிஸ்டர் வருண் குமார் டோண்ட் வொரி… நாங்க எல்லோருமே ரெடியா இருக்கோம். எங்க டீம் சாரை முழு கேர் எடுத்துக்கும். எல்லாத்துறை தலைமை டாக்டர்களும் இங்க கூடி இருக்காங்க …எல்லோருமே பெஸ்ட் டாக்டர்ஸ்…முதல் கட்டமா எல்லா பரிசோதனையும் எடுத்து பார்த்துட்டு சாருக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுகிட்டு அதுக்கப்புறம் சிகிச்சையை ஆரம்பிச்சிடலாம். நீங்க எல்லோரும் ரிலாக்ஸ்டா இருங்க நாங்க பாத்துக்குறோம் பக்கத்துல இருக்கிற சூட் ரூம்ல லேடீஸ்ஸையெல்லாம் உட்காரச் சொல்லுங்க ” என்று சொல்லிவிட்டு விரைந்தார்.  

ஏற்கனவே எல்லாத் துறை நிபுணர்களும் குழுமி இருக்க… மடமடவென ராகவேந்தர் மருத்துவ உடைக்கு மாற்றப்பட்டு சொகுசு படுக்கையில் கிடத்தப்பட்டார். முதலில் கொடுக்கப் பட வேண்டிய முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட … கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மருத்துவர்கள் அவரை எல்லா பரிசோதனைகளும் செய்தார்கள். எல்லாவித பரிசோதனை கருவிகளும் அவர் அறைக்கே கொண்டு வரப்பட… ராகவேந்தர் முழுமையாக பரிசோதிக்கப்பட்டார் .

அருகில் உள்ள அறையில் ராகவேந்தரின் இளைய மகன் வருண் குமார்,அவன் மனைவி நித்யா ,மகள்கள் அஞ்சனா, ஆராதனா, ராகவேந்திரரின் மனைவி வசுந்தரா, மூத்த மருமகள் கீர்த்தனா என எல்லோருமே கண்ணீருடன் காத்திருந்தனர் .ராகவேந்தரின் மூத்த மகன் தருண்குமார் வெளிநாடு போயிருக்க அவனுக்கு தகவல் சொல்லப்பட்டு அவனும் கிளம்பி வந்து கொண்டிருந்தான்.

நாசுக்காக கைக்குட்டையால் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்த அம்மா வசுந்தராவிடம் வருண்,” அம்மா அழாதீங்க… அப்பாவை எப்படியாவது காப்பாத்திடலாம்… வெளிநாட்டுலேயிருந்து டாக்டர்களை வரவழைக்கலாம்… இல்ல, தேவைப்பட்டா அப்பாவை வெளிநாட்டுக்கு கூட்டிட்டுப் போய் குணப்படுத்திடலாம்… நீங்க தைரியமா இருங்க” என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான்.

முழுமையான மருத்துவ பரிசோதனை முடிந்தது, 

“பரிசோதனை முடிவுகளை எடுத்துக்கிட்டு டாக்டர் ரமேஷ் என்னுடைய அறைக்கு வாங்க ..” என்றார் சீப் டாக்டர்.

சீஃப் டாக்டர் அறையில் அவருக்கு அடுத்தபடியாக இருந்த ரெண்டு மூத்த டாக்டர்கள் கூட இருந்தனர். 

டாக்டர் ரமேஷ் அனைத்து ரிப்போர்ட்களையும் சீப் டாக்டரின் பார்வைக்கு வைக்க…அவர் ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு அருகில் இருந்த சீனியர் இருவரிடமும் ரிப்போர்ட்டுகளை கொடுத்தார். மூவரும் சேர்ந்து கூடி விவாதித்தனர். பிறகு ராகவேந்தரின் மகனுடன் பேசிவிட்டு மேற்கொண்டு சிகிச்சை ஆரம்பிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் .

“டாக்டர் ரமேஷ்…மிஸ்டர். ராகவேந்தருடைய மூத்தமகன் மிஸ்டர் வருணை கூட்டிட்டு வாங்க… உங்ககிட்ட கேட்டா எதுவும் சொல்லாதீங்க. அவர் இங்க வந்த பிறகு நாங்களே பொறுமையாக விளக்கி சொல்லிக் கொள்கிறோம் “என்றார் 

“மிஸ்டர் வருண்…சீப் டாக்டர் உங்கள அவருடைய ரூமுக்கு கூப்பிட்டார்” என்று கூற…டாக்டர் ரமேஷுடன் சீப் டாக்டர் அறைக்கு வருண் நடந்தான்.

“டாக்டர்… அப்பாவ நல்லா செக் பண்ணி பாத்துட்டீங்களா? அப்பாவுக்கு என்ன ஆச்சு? இதுவரை அவர் ஒரு நோய்ன்னு படுத்ததே கிடையாது. எங்களுக்கெல்லாம் ரொம்ப கவலையா இருக்கு.. அம்மா ரொம்ப உடைஞ்சு போயிருக்காங்க. இதுவரைக்கும் ஒரு சின்ன தலைவலின்னு கூட படுக்காத மனுஷன் இப்ப இப்படி ஒரேடியா படுத்துட்டு இருக்கிறதை பார்க்க பயமா இருக்குது ” என்றான் படபடப்போடு.

“மிஸ்டர் வருண்…பதட்டப்படாதீங்க நீங்க முதல்ல தைரியமா இருந்தாத்தான் உங்க பேமிலி தைரியமா இருப்பாங்க. நாங்க சொல்றத கொஞ்சம் கவனமா உணர்ச்சிவசப்படாம கேளுங்க சாருக்கு எல்லா டெஸ்ட்டையும் பண்ணி பார்த்துட்டோம் இத சொல்றதுக்கு கஷ்டமா இருக்கு… பிரச்சனை என்னன்னா அவருடைய இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துடுச்சு… உடனே சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய வேண்டும். அது ஒன்னுதான் அவருடைய உயிரைக் காப்பாற்றும்.”

“டாக்டர் என்ன சொல்றீங்க… அப்பாக்கு இவ்வளவு பெரிய பிரச்சனையா? அப்பாவை நான் உடனே வெளிநாட்டுக்கு கூட்டிட்டுப் போகட்டா….இல்ல வெளிநாட்டிலிருந்து டாக்டர் யாரையாவது வரவழைக்கட்டுமா… சொல்லுங்க ..அப்பாவ உங்களால காப்பாற்ற முடியுமா இல்லை நான் வேற ஏதாவது ஒரு ஆஸ்பத்திரிக்கு அப்பாவ ஷிப்ட் பண்ணவா ..”

“மிஸ்டர் வருண் உணர்ச்சிவசப்படாதீங்க..அவருக்கு சிகிச்சை அளிக்கிறதுக்கு தேவையான உபகரணங்களும் திறமையான டாக்டர்களும் இந்த ஆஸ்பத்திரிலேயே இருக்காங்க அதனால நீங்க அதைப் பத்தி கவலைப்பட வேண்டாம் ...அப்பாவுக்கு இப்ப தேவை ஒரு மாற்று சிறுநீரகம்..அதுக்கு ஒரு டோனர் தேவை… உங்கள் குடும்பத்திலேயே யாராவது கொடுத்தால் நல்லது… பிளட் குரூப் எல்லாம் ஒத்துப்போகும்… எவ்வளவு சீக்கிரம் ஒரு டோனர் ரெடி பண்ணுறோமோ அவ்வளவு சாருக்கு நல்லது. இப்ப இருக்கிற உடம்பு கண்டிஷன்ல சாரை வெளிநாட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போக முடியாது… நான் வேணா வந்து உங்க அம்மாகிட்ட பேசுறேன்” என்றார் ..

வருண் தலையாட்ட … சீப் டாக்டர், வசுந்தராவைப் பார்த்து…”மேடம்…சாரை டெஸ்ட் பண்ணி பார்த்ததில், அவருடைய இரண்டு சிறுநீரகமும் செயலிழக்க ஆரம்பிச்சுடுச்சு… சிறுநீரக மாற்று சிகிச்சை தான் செய்யனும். அது ஒன்னு தான் இப்ப அவரை காப்பாற்ற முடியும்”

“என்ன டாக்டர் சொல்றீங்க…இவ்வளவு பெரிய நோயா அவருக்கு …இதுவரைக்கும் உடம்புல ஒரு பிரச்சனையும் இல்லாம தானே இருந்தது. திடீர்னு எப்படி இவ்வளவு பெரிய பிரச்சனை வந்தது அறுவை சிகிச்சை இல்லாம அவரை காப்பாற்ற முடியாதா?..மருந்து மாத்திரையில குணப்படுத்த முடியாதா …ஆப்ரேஷன் இல்லாமல் சரிப்படுத்த பாருங்களேன் ” என்றாள் வசுந்தராதேவி.

எதையும் புரிந்து கொள்ளாமல் பேசும் வசுந்தரா தேவியை எப்படி சமாதானமாகபடுத்தி புரிய வைப்பது என்பதில் சீப் டாக்டர் திணறித் தான் போனார் .

“ஒரு டோனர் கிடைக்கிற வரைக்கும், டயாலிசிஸ் செய்யலாம். ஆனால் கண்டிப்பாக சிறுநீரகத்தை மாற்றித்தான் ஆகணும். வேறு வழியில்லை.. ஏற்கனவே அவருடைய இதயமும் சற்று பலவீனமாக இருக்கிறது. டோனர் கிடைக்க, நாங்கள் எங்கள் மருத்துவமனை தரப்பிலிருந்து முயற்சி பண்ணுறோம். எல்லா மருத்துவமனைக்கும் ஃபேக்ஸ் அனுப்புகிறோம். உங்கள் குடும்பத்தினர் யாராவது அவருக்கு கிட்னி கொடுத்தால் மிகவும் நல்லது. ஏனென்றால் அவர் பிளட்..O நெகட்டிவ். இது ரேர் குரூப் டோனர் கிடைப்பது சற்று கடினம். நீங்கள் யோசித்து முடிவு செய்யுங்கள்” என்று கூறி விடைபெற்றார்.

குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போய் ஸ்தம்பித்துப் போனார்கள்…

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தொடரும்…

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயிரைத் தந்துவிடு (அத்தியாயம் 3) – தி.வள்ளி, திருநெல்வேலி. 

    இங்கு நீயொரு பாதி நானொரு பாதி (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி