இதற்கு முன் வெளியிடப்பட்ட Montreal, Canada பயணக் கட்டுரையை நிறைய பேர் வாசித்து கருத்துக்களை அனுப்பி இருந்தீர்கள். அதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி
இன்று நாம் பார்க்கப் போவது அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற ஊர் பிட்ஸ்பெர்க் (Pittsburgh)
எனக்கு மிகவும் பிடித்த ஊர்களில், பிட்ஸ்பர்க்கும் ஒன்று. அதற்கு காரணம், அந்த இடத்தின் நில அமைப்பு. சமதளமாய் இருக்கும், திடீரென குன்று போல் மாறும். தொடர்ந்து அழகிய ஏரி நம் கண்ணில் படும்
பிட்ஸ்பர்க்கை சுற்றிப் பார்க்கும் முன், பயண முஸ்தீப்புகளை பார்த்து விடுவோம்
கனடாவில் மே மாதம் மூன்றாம் திங்கட்கிழமை, விக்டோரியா டே என்ற தேசிய விடுமுறை நாள்
ராணி விக்டோரியாவின் பிறந்த நாளை கௌரவிக்கும் விதமாய் 1845ம் ஆண்டு அந்த நாள் ஏற்படுத்தப்பட்டது. அதோடு, கனடா இறையாண்மை (sovereignty) பெற்ற நாளின் நினைவாகவும் அந்த நாள் சிறப்பிக்கப்படுகிறது
இப்படி மாதத்திற்கு ஏதேனும் ஒரு நாள் வெள்ளி அல்லது திங்கள் கிழமைகளில் வரும். அப்படியே சனி ஞாயிறும் சேர்ந்து லாங் வீக்கென்ட் என, பெரும்பாலானோர் ஊர் சுற்ற கிளம்பி விடுவர்
நாங்களும் 2011ம் வருடம் வந்த விக்டோரியா நாள் விடுமுறைக்கு, பிட்ஸ்பெர்க் செல்ல திட்டமிட்டோம். அதோடு, அந்த வாரத்தில் எங்கள் திருமண நாளும் வந்ததால், அதற்கும் சேர்த்து டு இன் ஒன் ட்ரிப்பாக ஆனது அது
அதற்கு முந்திய வருடம் (2010) சிகாகோ சென்ற போது, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அமெரிக்க எல்லையில் நிற்க நேர்ந்தது, அன்று சனிக்கிழமை என்பதால் அத்தனை கூட்டம்
ஒவ்வொரு வண்டியாய் நிறுத்தி, விசா எல்லாம் சரியாக இருக்கிறதா என பரிசோதித்து, அதன் பின் தான் அனுமதித்தார்கள்
அந்த அனுபவத்தில், இம்முறை ஒரு நாள் கூடுதலாய் சொந்த விடுமுறை எடுத்துக் கொண்டு, வெள்ளி காலை 5.30க்கே கிளம்பலாம் என முடிவு செய்தோம்
முதல் நாள்
1.பயணம் இனிதே ஆரம்பம்
என்று நாம் திட்டமிட்ட நேரத்திற்கு கிளம்பி இருக்கிறோம். அன்றும் அதுப் போல் தான் ஆனது
என்ன செய்வது, எனக்கு அந்த ஊரின் காய்ந்த ரொட்டியும் இலை தழையும், தொடர்ந்து மூன்று நாள் உண்பதெல்லாம் இயலாத காரியம்
அதன் காரணமாய், முதல் நாளுக்கேனும் சமைத்து எடுத்துக் கொள்ளலாம் என எல்லாம் செய்ததில், வீட்டில் இருந்து கிளம்பவே ஆறரை மணி ஆகிவிட்டது
நாங்கள் வசித்த இடம், அமெரிக்க எல்லையில் இருந்து கிட்டத்தட்ட ஒன்றே கால் மணி நேர பயணம் (125km)
கார் QEW என்றழைக்கப்படும் நெடுஞ்சாலையில் (Highway) வேகமெடுத்தது
“கேமரா எடுத்தாச்சா? ஹோட்டல் புக்கிங் பிரிண்ட் அவுட் எடுத்தியா? GPS எங்க? எதுக்கும் மேப்பும் backup வேணுமே, அது எங்க? பாஸ்போர்ட் இருக்கு தான?” இப்படி நாங்கள் இருவரும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டே, 7.45 மணிக்கு பீஸ் பிரிட்ஜ் எக்ஸிட் (Peace Bridge Exit) சென்று சேர்ந்தோம்
2.அமெரிக்க எல்லை – Peace Bridge Exit
“Welcome to NEW YORK – The Empire State” என வரவேற்கும் அந்த பார்டரில் காத்திருந்த போது எடுத்த படம் இதோ
அப்போதே கிட்டத்தட்ட முப்பதிற்கும் மேற்பட்ட கார்கள் காத்திருந்தன. “இரவே வந்து துண்டு போட்டு வைத்திருப்பார்களோ?” என எனக்கு தோன்றியது. கேட்டால் வம்பாகிவிடுமென மௌனமாய் வேடிக்கை பார்க்கலானேன்
ஒரு வழியாய் எங்கள் முறை வந்தது
அங்கிருந்த ஆபிசர், என் கணவரிடம் “Whats in the car?” எனக் கேட்டார்
என்னிடம் கேட்டிருந்தால் “டயர், லைட், பிரேக், பெட்ரோல் எல்லாம் இருக்கு” என விலாவாரியாய் கூறி இருப்பேன்
“Nothing major” என்றார் என் கணவர்
“மேஜர் இல்ல அவர் ஆபிசர்” எனக் கூற நினைத்தேன். சொன்னால், வண்டி வீட்டுக்கு திருப்பப்படும் அபாயம் இருந்ததால் மௌனமானேன்
நான் முழித்த முழியில் “இவள் ஒசாமாவின் ஒன்று விட்ட தங்கையாய் இருப்பாளோ?” என ஆபிசருக்கு சந்தேகம் வந்ததோ என்னவோ, கேள்வி மேல் கேள்வி கேட்டு, அதன் பின் ஒரு வழியாய் செல்ல அனுமதித்தார்
I90 சாலையில் எங்கள் பயணம் தொடர்ந்தது
வழியெங்கும் தோட்டம், மாட்டுப் பண்ணை, குதிரைப் பண்ணை, மலை, காடு என பயணம் ரம்மியமாய் இருந்தது
அப்போது எங்கள் கேமராவில் சிக்கிய படம்
அதன் பின், வழியில் ஓரிடத்தில் நிறுத்தி, கொண்டு சென்ற காலை உணவை முடித்து விட்டு, பயணத்தை தொடர்ந்தோம்
அங்கிருந்து க்ரூவ் சிட்டி (Grove City) செல்லும் வழியில், ஒரு காட்சி கண்ணை கவர்ந்தது
ஒரு வீட்டின் கூரையை மாற்றிக் கொண்டிருந்தார்கள். பனி / மழை / வெயில் என அனைத்தும் அதீதமாய் இருக்கும் ஊர் என்பதால், 10 அல்லது 15 வருடத்திற்கு ஒரு முறை கூரையை மாற்றுவது அவசியம்
நாங்கள் வசித்த இடத்தில், பெரும்பாலும் இரண்டடுக்கு வீடுகள் என்பதால், கூரை மாற்றுவதை கண்கூடாய் கண்டதில்லை. எனவே இது பார்ப்பதற்கு சுவாரஷ்யமாய் இருந்தது. அந்த படம் இங்கு உங்களுக்காக…
3.Prime Outlet Mall – Grove City
அதன்பின் கிட்டத்தட்ட மூன்று மணி நேர பயணத்திற்கு பின், க்ரூவ் சிட்டியின் (Grove City) Prime Outlet Mall வந்து சேர்ந்தோம். அந்த மால் இப்போது Premium Outlets என பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டது
அந்த மாலில் பீங்கான் பொருட்கள், உடைகள் எல்லாம் நல்ல ஆபரில் கிடைப்பதாக தோழி ஒருவர் கூறி இருந்ததால், அங்கு செல்வதென முன்பே திட்டமிட்டிருந்தேன்
இந்த ட்ரிப் பிளான் செய்ததே அதற்குத் தானே என்றது மைண்ட்வாய்ஸ். Lets ignore the mindvoice 😊
அங்கு பார்த்த பின், கனடாவை விட அமெரிக்காவில் துணிகள் விலை குறைவென தோன்றியது
ஒரு முறை அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்த போது, ஷாப்பிங் செய்ய கூட்டம் கூட்டமாய் கனேடிய மக்கள் அமெரிக்கா சென்றதாய் கேள்விப்பட்டேன்
தோழி சொன்னது போல் அங்கு கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்கள் (crockeries) மலிவாகவும் தரமாகவும் இருந்தன
அந்த மாலில் ஒரு கடையின் வெளிப்புற வடிவமைப்பு அழகாக இருந்தது. அந்த படம் இதோ…
4. Pittsburgh City
ஷாப்பிங் முடித்து, மதிய உணவும் முடித்து, அங்கிருந்து கிளம்பினோம். அடுத்த ஒருமணி நேரத்தில் பிட்ஸ்பெர்க் சென்று சேர்ந்தோம்
Pittsburgh Holiday-Innல் செக்கின் செய்து விட்டு, ஊர் சுற்றக் கிளம்பினோம்
ஏசியில் நம் விருப்பத்திற்கு மிதமான டெம்பரேச்சர் செட் செய்தது போல், அளவான குளிருடன் இருந்தது அந்த ஊர்
நம் ஊட்டி போல் மேட்டுப்பகுதி அதிகமாகவும், சமவெளி குறைவாகவும் இருந்தது
மே மாதமென்பதால், மழை வெயில் என மாறி மாறி கேரளாவை நினைவூட்டியது. பிட்ஸ்பெர்க்
1758ம் ஆண்டு, வில்லியம் பிட் என்ற பிரிட்டிஷ் ஸ்டேட்ஸ்மென் அவர்களை கௌரவிக்கும் விதமாய், இந்த ஊருக்கு பிட்ஸ்பெர்க் என பெயரிடப்பட்டது
“Steel City” என்றும், “City of Bridges” என்றும் இந்த நகரை அழைக்கிறார்கள்
நூற்றுக்கணக்கான இரும்பாலைகளும், 400க்கும் மேற்பட்ட பாலங்களும் இருப்பதால், இந்த காரணப் பெயர்களை பெற்றது இந்த நகரம்
மவுண்ட் வாஷிங்டன் மலையை குடைந்து ஏற்படுத்தப்பட்டிருந்த லிபெர்ட்டி டனல் (Liberty Tunnel) வழியாக பயணித்தது, நிச்சயம் ஒரு மறக்க முடியாத அனுபவம். டனல் உள்ளே சென்ற போது எடுத்த புகைப்படங்கள் சரியாய் வரவில்லை
அங்கு ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு, எங்கள் வழக்கமான நகர்வலத்தை துவங்கினோம்
நதியின் மேல் அமைக்கப்பட்டிருந்த ஒரு பாலம், கண்ணைக் கவர்ந்தது
இரும்பால் கட்டமைக்கப்பட்டிருந்த அந்த இரு வழிப் பாலத்தில், நடைபாதையும் அமைக்கப்பட்டிருந்தது
அந்த பாலத்தின் ஒற்றையடி பாதையில் நின்று பார்த்த போது
– ஒரு பக்கம் ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள்
– மறுபக்கம் மலையும் அதற்கு செல்ல ரயில் பாதையும்
– இன்னொரு பக்கம் 3 Rivers Stadium
– கீழே Allegheny, Monongahela என்ற இரண்டு நதிகள் இணைந்து Ohio River என அழைக்கப்படுகிறது (முக்கூடல் சங்கமம்)
– மற்றும் அந்த நதியில் ஊர்ந்து செல்லும் படகு
கண்ணையும் மனதையும் நிறைத்த அந்த காட்சிகளின் அழகில், அங்கிருந்து நகரவே மனம் வரவில்லை
மவுண்ட் வாஷிங்டன் மேல் நின்று, அந்த அழகை எங்கள் டிஜிட்டல் SLR சிறைபிடித்த அந்த இரு படங்கள் இதோ…
முதல் நாள் அதற்கு மேல் ஊர் சுற்ற நேரம் இருக்கவில்லை. இரவு உணவை முடித்துக் கொண்டு விடுதியை சென்றடைந்தோம்
இரண்டாம் நாள்
1.Point State Park
முதல் நாள் பார்த்த பாலத்தைக் கடந்து, மறுபக்கம் சென்றதும், பச்சை பட்டாடையை விரித்தது போன்ற அழகான புல்வெளியுடன் வரவேற்றது பாயிண்ட் ஸ்டேட் பார்க் (Point State Park)
படம் பார்க்க…
18ம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் காலனியாக்கத்தில் இருந்த அமெரிக்காவுக்கும், பிரெஞ்சுக்கும் இடையே நடந்த போரில், இந்த பார்க் உள்ள இடம், அதை சுற்றியுள்ள நதிகள், மலை என அனைத்தும் பெரும் பங்கு வகித்தது
மலை, சமதளம், நீர் என மாறுபட்ட நில அமைப்புகள் கொண்ட இந்த இடம், பிரிட்டிஷ் படைகளுக்கு போர் வியூகம் அமைக்க ஏதுவாய் அமைய, பிரெஞ்சு படை தோல்வியை தழுவியது என்கிறது வரலாறு
ஹிஸ்டரி கிளாஸ் நடத்தி போர் அடித்துவிட்டேனோ? கிளாஸ் ஓவர், மறுபடி ஊர் சுற்றலாம் வாங்க😊
பார்க்கில் ராக் கிளைம்பிங் (Rock Climbing) சவால் அமைத்திருந்தார்கள். முயற்சி செய்யலாம் என்று தான் நினைத்தேன், “பாவம் பிழைத்துப் போகட்டும்” என விட்டுவிட்டேன் 🤣
இதோ அதன் படம்…
2. Duquesne Incline – மர ரயில்பெட்டியில் பயணம்
அடுத்து, 367 அடி உயர மவுண்ட் வாஷிங்டன் சென்றோம். அந்நாளில், மவுண்ட் வாஷிங்டன் “நிலக்கரி மலை” என அழைக்கப்பட்டதாம்
பெயர்க் காரணம் சொல்லாமலே புரியும் என நினைக்கிறன், இருந்தாலும் சொல்லி விடுகிறேன். ஆம், அங்கு நிறைய நிலக்கரி சுரங்கங்கள் இருந்ததால் அந்த பெயர் பெற்றது
பிட்ஸ்பெர்க் செல்பவர்கள், இந்த மலை மீது சென்று, அங்கிருந்து ஊரை ரசிக்காமல் வரமாட்டார்கள். ஆங்கிலத்தில் “Aerial View” என்பார்கள், அது போல் அழகான வியூ அது
பாலம், நதி, ஸ்டேடியம் பற்றியெல்லாம் கூறியபின், மேலே இணைந்திருந்த அந்த படம், இந்த மலையின் மேல் நின்று எடுத்தது தான்
1877ம் ஆண்டு நிறுவப்பட்ட Duquesne Incline என்ற மரத்தால் செய்யப்பட்ட கேபிள் காரில் பயணித்து, மலையின் மேல் பகுதிக்கு சென்றோம்
அத்தனை பழைய Incline என்றதும், எனக்கு கொஞ்சம் திக் திக் என்றானது. ஆனால், நல்ல அனுபவமாய் இருந்தது
தூரத்தில் இருந்து பார்த்தால், பட்டு பூச்சி ஊர்ந்து செல்வதை போல், அழகாய் கட்சி அளித்த அந்த குட்டி ரயில் படம் இதோ…
3.Mount Washington
ரயிலில் மலையை சென்றடைந்ததும், அங்கு ஒரு exhibit போல் அமைத்திருக்கிறார்கள். அதில் இருந்த பிட்ஸ்பெர்க் வரலாற்றை விளக்கும் படங்கள், என்னைப் போன்ற வரலாற்று பிரியர்களுக்கு நல்ல விருந்து
1936ம் ஆண்டு பெருவெள்ளம் பற்றியும், 1845ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்து பற்றியும் அங்கு அறிந்து கொண்டேன்
மார்ச் 17, 1936 – பனி உறைந்து நின்ற அந்த நாளில், எப்போதும் இருக்க வேண்டிய உறை குளிர் வெப்பநிலை, திடீரென உயர்ந்தது
அதன் காரணமாய், நதியில் இருந்த பனிக்கட்டிகள் எல்லாம் உருகத் தொடங்கியது. போதாதற்கு அன்றிரவு பெரும் மழையும் கொட்டியது
அதன் விளைவாய், மார்ச் 18ம் நாள், 24 அடி கொள்ளளவு கொண்ட நதியின் நீர், 46 அடி பெருவெள்ளமாய் உருவெடுத்தது
கிட்டத்தட்ட ஒரு லட்சம் கட்டிடங்கள் சேதமடைந்ததாம். அதோடு, இரும்பாலைகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்தது
நான்கு நாட்களுக்கு பின் தான், நதி நீர் இயல்பு நிலைக்கு சென்றது
அதேப் போல், 1845ல் நடந்த தீ விபத்தும், அந்நகரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது
ஒரு தொழிலாளி, நீரை சூடாக்க பற்ற வைத்த நெருப்பு, காற்றின் வேகத்தில் பரவியது
Globe Cotton Factory வரை அந்த நெருப்பு பரவ, அந்த நகரின் மூன்றில் இரு பங்கு கட்டிடங்கள் எரிந்து சாம்பலாயின. அதை புனரமைக்க பல நாட்கள் ஆனது
மறுபடி ஹிஸ்டரி கிளாஸ் போயிட்டேன் போலவே 😃. Ok no more history, only Geography
பொருட்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாய் கிப்ட் ஷாப் ஒன்றும் அங்கு இருந்தது
அதன் அருகில், Observation Deck அமைத்திருந்தார்கள். அங்கு நின்று தான் ஊரின் அழகை ரசித்தோம், மேற்கண்ட புகைப்படங்களும் எடுத்தோம்
இடையிடையே நான் உண்ணத் தகுந்த உணவகம் தேடி அலைந்ததில், சற்று நேர விரயமானது. ஆதலால், இரண்டாம் நாள் ஊர் சுற்றல் நிறைவுக்கு வந்தது
மூன்றாம் நாள்
பிட்ஸ்பர்க் பெருமாள் கோவில் (S.V.Temple)
இந்த கோவிலுக்கு செல்ல வேண்டுமென பல நாட்களாய் நினைத்திருந்தோம். அன்று தான் அதற்கு நேரம் வந்தது போலும்
அன்று எங்கள் மணநாளாகவும் அமைந்ததில், ரெட்டிப்பு மகிழ்ச்சி
ஹோட்டலில் இருந்து கிளம்பும் போதே மழைத் தூறல் ஆரம்பித்தது
சின்ன குன்று போன்ற அமைப்பின் மேல் இருந்தது கோவில்
அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், ஒரு முறையேனும் இந்த கோவிலுக்கு சென்றிருப்பார்கள்
S.V.Temple என்று கூறினால், அங்குள்ள மக்களுக்கு புரியும். அதாவது ஸ்ரீ வெங்கடேஸ்வரா டெம்பிள், அதன் சுருக்கமே S.V.Temple
அந்த கோவிலில் ஒன்பது மணிக்கு தான் சுப்ரபாத பூஜை. சீதோசனம் மாறிக் கொண்டே இருக்கும் அவ்வூரில், பெருமாளுக்கு கூட சற்று தாமதமான திருப்பள்ளி எழுச்சி தான்
ஒம்பதரை மணி சத்தியநாராயணா பூஜைக்கு பதிவு செய்திருந்தோம், அதில் கலந்து கொண்டு, நல்ல திருப்தியான பூஜை மற்றும் தரிசனம்
கோவில் படம்… (Side View)
தரிசனம் முடிந்ததும், பிரசாத Stall சென்றோம்
லட்டு, புளியோதரை, தயிர் சாதம், உப்புமா, சாம்பார் சாதம் என நம் ஊர் உணவு வகைகளை கண்டதும், பசி அதிகமானது
ஹோட்டல் உணவெல்லாம் ஒரு நாள் தான், அதன் பின் வீட்டு சாப்பாட்டுக்கு மனம் ஏங்கத் தொடங்கி விடுவது தான் நிதர்சனம்
பிரசாத Stall படம்…
உணவுக்கு பின், வீடு நோக்கிய பயணத்தை துவங்கினோம். Pittsburgh பயணம் இனிதே நிறைவுற்றது
அடுத்த பயணக் கட்டுரையில் சந்திப்போம். வாசித்தமைக்கு நன்றி
என்றும் நட்புடன்,
Like this:
Like Loading...
Wow, feels like just I literally went for the trip. Your writing makes me like the country than I ever did. Great going!!!
Thank you for the compliments Priya,made my day 🙂
சூப்பர் படங்களுடன் விவரமான கட்டுரை. படித்து, பார்த்து ரசித்தேன். ஒரே ஒரு படம் மட்டும் ரிபீட் ஆகியுள்ளதோ?
மிக்க நன்றி சார். படம் ரிப்பீட் ஆகி உள்ளதா? பார்க்கிறேன் சார், கவனித்து சொன்னதற்கு நன்றி
மிகவும் அற்புதமான பயணக்கட்டுரை சகோதரி…படித்து ரசித்தேன்…உங்கள் எழுத்தில் நகைச்சுவை இழையோடுகிறது…கலிபோர்னியாவிற்கு ஒரு முறை வந்து தங்கி செல்லுங்கள். என் நண்பரிடம் சொல்லுங்கள்…
மிக்க நன்றி அண்ணா. உங்கள் அழைப்புக்கும் மனமார்ந்த நன்றி. நிச்சயம் அவரிடம் பகிர்கிறேன்
அருமையாக விவரித்திருக்கிறீர்கள். கோயில் உள்ளே எல்லாம் படங்கள் எடுக்க முடியாதோ? கோயிலின் முன்பக்கம் கோபுரங்கள் உள்ளனவா? இன்க்ளைன் ரயில் ரொம்பவே குட்டியாய் இருக்கு. அந்தப் படம் தான் 2 தரம் வந்திருக்குனு நினைக்கிறேன். மற்றப் படங்களும் விபரங்களும் அருமையாய்க் கொடுத்திருக்கீங்க! எனக்கும் இந்தச் சாப்பாட்டுப் பிரச்னையால் தான் அதிகம் ஊர் சுற்ற முடிவதில்லை. இந்தியாவுக்குள் என்றால் பரவாயில்லை. அம்பேரிக்காவில் ரொம்பக் கஷ்டமாய் இருக்கிறது. வயிறு தகராறு பண்ண ஆரம்பிச்சுடும்.
நன்றி மாமி, கோவில் உள்ளே படங்கள் எடுத்தோம், எல்லாவற்றிலும் நாங்களும் இருப்பதால் பகிரவில்லை. ஆஹா உங்களுக்கும் சாப்பாட்டு பிரச்சனயா? நான் எங்க போனாலும் கட்டு சாதம் காட்டறேன்னு எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க, “சாப்பாடு முக்கியம் அமைச்சரே”கட்சி நான், சோ வேற வழியில்லை 😃
Thank as Appavi for your excellent narration. You got not mind voice but diamond voice
Thank you so much for the appreciation Uncle