சஹானா
பயணம்

பறவைப் பார்வையும் குருவிப் பார்வையும்🙂 (ரோட்டோருஆ பயணம் – நியூஸிலாந்து – இறுதிப்பகுதி) – எழுதியவர்: துளசி கோபால்

கிராமத்துலே இருந்து கிளம்பி, ஊருக்குள்ளே இருக்கும் ஷாப்பிங் சென்டருக்குப் போய், அங்கே இருந்த ஃபுட்கோர்ட்டில் லஞ்சுக்கு எதாவது ஆப்டுமானு பார்த்தால் இண்டியன் ஸ்டார் எக்ஸ்ப்ரெஸ்னு ஒண்ணு கண்ணில் பட்டது

‘ச்சனா பட்டூரா காம்போ’ ஒண்ணு வாங்கி, லஞ்சை முடிச்சுட்டு அடுத்த இடத்துக்குப் போனோம். போற வழியில் நம்ம ஸ்வாமி நாராயண் கோவில் கண்ணில் பட்டது.   உச்சிகால பூஜைக்குப் பின் கோவில் மூடி இருக்குமே…. சாயங்காலமா வரணும். மூளையில் முடிச்சு 😀

ரெட்வுட் ஃபாரஸ்ட்னு ஒரு  இடம்.  இங்கே இருக்கும் மரங்கள் எல்லாம் மனிதக் கைகள் நட்டதே! இப்போ ஆச்சு 120 வயசு! ஆயிரத்துத்தொளாயிரத்துலே ஆரம்பிச்சுருக்காங்க. ஆரம்பத்துலே 170 வகை மரங்களை நட்டாங்களாம்.  அதுலே போனது போக இப்ப மிஞ்சுனது கொஞ்சமே !

அதுக்கப்புறமும் கொஞ்சம் கொஞ்சமா இந்த 120 வருஷத்துலே மரம் நடறதை மட்டும் விடவே இல்லை. மொத்தம் லக்ஷத்து முப்பத்தியஞ்சாயிரம் சொச்சம் (135907.96 ) ஏக்கர் பரப்பளவில் இருக்கும் வாகாரேவாரேவா காட்டில் இந்த ரெட்வுட் பகுதி,   அது பாட்டுக்கு ஒரு 14,000 ஏக்கர் அளவில் பரந்து விரிஞ்சு கிடக்கு

இதில் கலிஃபோர்னியா ரெட்வுட் என்னும் மரங்கள் மட்டும் 15 ஏக்கர் அளவில்! காட்டுக்குப் பெயர் கொடுத்தவை இவை 🙂

1970 வரை, பொதுமக்கள் வந்து போக அனுமதி இல்லை. அதுக்கப்புறம் தான் காட்டைத் திறந்து விட்டுருக்காங்க. சனம், நடைப்பயிற்சி, நாயை நடக்கக் கூட்டிப் போகும் நாய்வாக்,  சைக்கிள், குதிரை சவாரி, குடும்பத்தோடு பிக்னிக் இப்படி அனுபவிச்சுக்கிட்டு இருக்கு

ஒண்ணும் இல்லைனா…. தனிமையிலே இயற்கையோடு இருக்கறதும் வேண்டித் தானே இருக்கு!  உண்மையில் ஓங்கி உயர்ந்து நிற்கும் பெரிய மரங்களடியில் நாம் போய் நின்னால், மனுசன் எத்தனை சிறியவன்னு தோணும் எனக்கு!

இங்கே எங்கூர் பார்க்கில் கூட  இருபது ஆள் உயர மரங்கள் இருக்கு!  எல்லாம் 165 வருசக்கணக்கு !

இந்த ரெட்வுட் பகுதியில் தான் ட்ரீவாக்னு தரைக்கு மேலே நடந்து போகும் விதமா ஒரு நடைபாதை போட்டுருக்காங்க. ஐடியா சூப்பர்! 2015 ஆம் வருஷம் டிஸம்பர் மாசக் கடைசியில்  வேலை முடிஞ்சு, பொது மக்களுக்குத் திறந்து விட்டாச்சு!

மொத்தம் 700 மீட்டர் தூரம்! உலகத்துலேயே நீளமான பாதை என்ற பெருமை வேற!! பெரிய பெரிய மரங்களுக்கிடையில்  மேலே தொங்குபாலம் போலப் போகுது.  ஒவ்வொரு மரத்தைச் சுத்தியும்  வட்ட வடிவ மேடை. அங்கே உக்கார்ந்து இயற்கையை ரசிக்க இருக்கைகள்.

118 வயசான மிகப்பெரிய மரங்கள் 27ஐ இணைச்சு 28 தொங்கு பாலங்கள். இதுலே ஒரு சில ஜங்ஷன்கள் வேற !

இங்கே தான் நாம் போய்க்கிட்டு இருக்கோம் இப்போ!  கார் பார்க்கில் வண்டியை நிறுத்தும் போதே தலைக்கு மேலே பாலங்கள், பாதைக்குக் குறுக்கால்  போகுது!

சுத்தி வர ஏராளமான மரங்கள்!  கீழே மட்டும் பார்த்துட்டுப் போகலாமுன்னா இலவசம் தான்.  மேலே ஏறி நடக்கணுமுன்னா ஒரு கட்டணம்  உண்டு.

இதுலே பாருங்க…  இந்த ஏற்பாட்டைத் திறந்து வச்ச அடுத்த வருஷமே இன்னொரு புது ஐடியா தோணிப் போய், ராத்ரியில்  பாலத்துலே நடந்துக்கிட்டே காட்டைப் பார்க்கும் விதமா விளக்குகள்  தொங்க விட்டுருக்காங்க. சூப்பர் ஹிட் !

பகலில் காட்டுப் பாலங்கள் மேலே நடந்து போய் வர ஒரு கட்டணம். ராத்ரியில் போய் வர  ஒரு கட்டணம். பகலிலும் ராத்ரியிலும் பார்க்கணுமுன்னா காம்போ வகையில் ஒரு கட்டணம். உண்மையில் இந்த காம்போ டிக்கெட் மலிவுதான். வெறும் அஞ்சே டாலர்  கூடக் கொடுத்தால் போதும்

நமக்கோ, கண் அவ்வளவா சரியில்லை. ராத்ரியில் பார்க்கிறேன்னு நடந்து போய் எங்கியாவது விழுந்து வச்சா? அதுவும் ஊர் சுத்திப் பார்க்க வந்த இடத்தில்?  இதுக்குத் தான்  நான் எப்பவும்  சொல்றது, கொஞ்சம் சின்ன வயசாவும், ஆரோக்கியமான உடல் நிலையும் இருக்கும் போதே  ஊர் உலகத்தைச் சுத்திப் பார்க்கக் கிளம்பணும்னு…  ஹூம்… எங்கே முடியுது ? கடமைகள் துரத்துதே …

பகல் நடைக்கு மட்டும் டிக்கெட்  வாங்கிக்கிட்டோம். சின்னதா ஒரு  கூண்டு மறைப்புக்குள் இருக்கும் படிகளில் ஏறியாச்சு.  பாதை அங்கிருந்து தொடங்குது.  ரொம்ப சாதுவான உயரம், வெறும் ஆறு மீட்டர்தான்.  ரெண்டு பக்கங்களிலும் மரங்களை ரசிச்சுக்கிட்டுப் போகப்போக உயரமும் கூடிக்கிட்டே போய்க் கடைசியில் பாலத்துலேயே கட்டி விட்டுருக்கும்

படிகளில் ஏறிப்போனா, மேலே சின்னதா ஒரு குடில் அமைப்பு.  நாம் இப்போ 25 மீட்டர்  உயரத்துலே!  மரப்பலகைத் தரையில் கண்ணாடி பதிச்ச இடங்கள் ரெண்டு

கீழே பார்க்கும் போது சட்னு ஒரு பயம் வந்தது உண்மை (இதைவிடவும் உயரமான, 192 மீட்டர் உள்ள  ஆக்லாந்து ஸ்கை டவரில் இப்படித்தான்  கண்ணாடித் தரை போட்டு வச்சுருக்காங்க. அங்கேயும் பயந்துக்கிட்டே தான் அதன்மேல் நடந்து போனேன், அப்போ 20 வயசு குறைவு )

நல்ல உறுதியான கட்டமைப்பு தான்.  மரங்களை இணைச்சுப் போட்டுருக்கும்  தொங்கு பாலத்தின் முறுக்குக் கம்பிகள் 12 டன் எடை தாங்குமாம். ஒரே சமயத்துலே ஒரு பாலத்துலே அதிகபட்சமா 8 பேர் போகலாம்

ஜெர்மனியில் இருந்து நிபுணர்களை வரவழைச்சு, ஆறே வாரங்களில் கட்டுமானம் முடிஞ்சுருக்கு! விவரங்கள் எல்லாம் அங்கங்கே போட்டு வச்சுருக்காங்க

இதைத் தவிர  மரங்களின்  வகைகள், தகவல்கள், சின்னப் பிள்ளைகளுக்கான க்விஸ் போன்றவைனு  போகும் வழியில்  ஏராளம். காடு விரும்பிகளின் சொர்கம்!

கைக்குழந்தைகளுடன் வருபவர்கள் வசதிக்காக, Baby capsule பொருத்தி இருக்கும் தள்ளு வண்டிகள் வச்சுருக்காங்க! எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போனது பயணிகள் சௌகரியத்துக்காக ஒவ்வொண்ணையும் யோசிச்சுக் கவனமா செயல்படுத்தும் சுற்றுலாத்துறையின் சேவை

எங்கே போனாலும் சுத்தமான கழிப்பறைப் பற்றிச் சொல்லவே வேணாம். ஹப்பா… என்ன ஒரு ஆசுவாஸம், குறிப்பாப் பெண் பயணிகளுக்கு !

நாப்பது நிமிட்லே இந்த நடையை முடிக்கலாமாம். எனக்கு அதைப் போல ரெண்டு மடங்காச்சு. போனேன், வந்தேன்னு முடியுதா ? ஒவ்வொண்ணையும் பார்த்து, ரசிச்சு, க்ளிக்கினு எவ்ளோ இருக்கு, இல்லே 🙂

மரங்களை இணைச்சுனு சொல்றோமே தவிர, எந்த ஒரு மரத்தையும் தொடாமல்,  நோகடிக்காமல் தான் மரப்பாதையே போட்டு வச்சுருக்காங்க.  மரம் இன்னும் வளரும் போது  உடல்பாகம் பெருத்துப்போகும் தானே… அதுக்கேத்த மாதிரி சுற்றளவின் இடைவெளியைக் கூடப் பெருசு பண்ணிக்கும் வகையில் பொருத்தி வச்சுருப்பது சிறப்பு !

மரநடை என்ற புது அனுபவம் கிடைச்ச  மகிழ்ச்சியில்,  அங்கிருந்து கிளம்பி ஊருக்குள் நுழைஞ்சு போகும் வழியில், திரும்பக் கண்ணில் பட்ட ஸ்ரீ ஸ்வாமி நாராயண் கோவிலாண்டை நிறுத்தி, எத்தனை மணிக்குக் கோவில் திறப்பாங்கன்ற விவரம், வாசல் போர்டில் இருக்கானு பார்க்கப்போனால்… நாலு மணியாம்

ஆனால் கோவில்கதவு ஒரு பக்கம் திறந்திருக்கு!  உள்ளே போனால் இன்ப அதிர்ச்சி!  அச்சு அசல் எங்கூர்க் கோவில் போலவே, தரையில் போட்டுருக்கும் கார்பெட் உட்பட

என்ன ஒண்ணு, எங்கூரில்  வெளியே தெருவில் இருந்து பார்த்தால் கோவில் என்ற அடையாளமே இருக்காது. ஆனால் ரோட்டோருஆ  கோவில்,  ஹிந்துக் கோவிலாவே இருக்கு!  எங்க கோவிலை விட நாலு வயசு குறைவு வேற! உள்ளே பண்டிட் இருந்தார்.  அவரிடம் கொஞ்ச நேரம் பேசிட்டு, அனுமதியுடன் படங்களை எடுத்துக்கிட்டேன்.

பொதுவா நியூஸிலாந்தில், இயற்கை அழகு தான் கொட்டிக் கிடக்கு. தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பில்லாத வகையில் நாடெங்கும் பல இடங்களில் ஏரிகள்!   சின்னதும் பெருசுமா 3,820 ஏரிகள் இருக்கறதாக் கணக்கு சொல்லுது அரசு. இதுலே  ஆகச் சின்னதுனு சொன்னா ரெண்டரை ஏக்கர் பரப்பளவு!

இவ்ளோ தண்ணீர் இருப்பதால்  நீர்விளையாட்டு அதிகம். ஏரியின் அளவைப் பொருத்து  விளையாட்டுகளும், அதற்கேற்ற அமைப்புகளுமா இது ஒரு பெரிய பிஸினஸ் இங்கே!

இந்த ரோட்டோருஆ’வில் நல்ல பெருசாவே  20 ஏரிகள் இருக்கு!  இளவயதினருக்கும்,  ஆர்வம் உடைய மற்றவர்களுக்கும் இங்கெல்லாம் போனால் நேரம் போவதே தெரியாது. முதியவர்களுக்கும் சில பல நீர்விளையாட்டுகள் இருக்குன்னாலும், நான் அதுக்கெல்லாம் லாயக்கே இல்லை என்பதால் ஏரிகளை வேடிக்கை பார்ப்பதோடு முடிச்சுக்குவேன்.

மறுநாள் இப்படி வேடிக்கைகளோடு பொழுது போச்சு நமக்கும். அடுத்த நாள் காலை ஊரை விட்டுக் கிளம்பினோம்

இயற்கையை நேசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் சொர்கம் இந்த நியூஸிலாந்து என்பதை சொல்லிக்கொண்டு,  இதில் ஒரு சிறு பகுதியை உங்களோடு பகிர்ந்துக்க வாய்ப்பளித்த சஹானா இணைய இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும் இங்கே பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். வணக்கம்

என்றும் அன்புடன்,
துளசி

நன்றி நன்றி நன்றி 
மூணு பதிவுக்கு மூணு நன்றினு கணக்குல சொல்லைங்க, அப்படி சொன்னா அது துளசி மேடம் கொடுத்த நேரத்துக்கு ஈடாகாது. அவங்களோட டெடிகேஷன், நெஜமாவே என்னை ஆச்சர்யப்பட வெச்சுடுச்சு

புதன்தோறும் பதிவு போட்டுலாம்னு சொல்லி இருந்தேன். மூணு வாரமும், திங்கள் இரவே பதிவை ரெடி பண்ணி அனுப்பி வெச்சுட்டாங்க. இதை நானும் கடைபிடிக்கணும்னு நினைக்கிறேன், ஆனா முடியறது தான் இல்லை. இனியாச்சும் செய்யணும், Thanks for being an inspiration Tulsi mam

சஹானா இணைய இதழுக்கு உங்கள் நேரத்தை பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி.

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்


Similar Posts

2 thoughts on “பறவைப் பார்வையும் குருவிப் பார்வையும்🙂 (ரோட்டோருஆ பயணம் – நியூஸிலாந்து – இறுதிப்பகுதி) – எழுதியவர்: துளசி கோபால்
  1. நல்லா இருக்கு,. அங்கெல்லாம் போய்ப் பார்க்கிறது என்பது கனவு. படிச்சுத் தெரிஞ்சுக்க முடியுதே! அந்த மரப்பாதையில் நடக்க ஆசைதான்! படங்களைப் பார்த்துத் திருப்திப் பட்டுக்கறேன்.

    1. Thank you. நானும் நியூசிலாந்து பக்கம் போனதில்ல மாமி, let’s see 🙂. நீங்க நார்த் அமெரிக்கா பெரும்பாலும் பாத்து இருப்பீங்க இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: