in

தொலையா கணங்கள்… – ✍ இந்துமதி கணேஷ் 

தொலையா கணங்கள்

ப்பா சொன்ன அந்த ஒற்றை வாசகம், என்னை ரெக்கையில்லாமல் பறக்கச் செய்தது

இந்த சித்திரை விஷுவிற்கு உங்களையும் அத்திரி மலைக்கு கூட்டி போகிறேன் என்று சொன்னது தான் தாமதம், ஒரே பரபரப்பு எனக்கு. அப்போது நான் 9ஆம் வகுப்பில் இருந்தேன் 

ஒரு வாரம் முழுவதும், எப்போதடா கிளம்புவோம் என்ற இன்ப பரபரப்பிலேயே கழிந்தது

பயணங்கள் இனிமையானவை. அதிலும் பெற்றோர், அக்காவை போன்ற வயதுடைய சித்தி, பிரியத்திற்குரிய தோழியும் கூட வரும் பயணம் மனமெங்கும் ஆவலை கிளப்பியிருந்தது

தோழி உமாவுடைய அப்பா மணி மாமா தான் ஏற்பாடு, அவருக்கு அத்திரிமலை தண்ணீர் பட்ட பாடு, அடிக்கடி போய் வருவார்

சித்திரை விஷுவிற்கு அப்பா மட்டுமே அங்கு போவார். அம்மா அழகாக பழங்களை அடுக்கி, ஓம் டாலர் செயினை ஆப்பிள் கண்ணாடிக்கு போட்டு, சித்திரைக் கனியைப் பார்க்கச் சொல்வாள்

அப்படி அருமையாய் விடியும் காலை, அப்பா இல்லாததால் முழுமையடையாததாய் எனக்கு தோன்றும். மூன்றே பேர் உள்ள வீட்டில் ஒருவர் இல்லாமல் எப்படி நிறையும்?

“அப்படி என்ன விசேஷம் சித்திரை விஷுவிற்கு மட்டும் அங்கே பொய் விடுகிறீர்கள்?” என்று கேட்டால், “சித்தர்களின் பரிபூரண அருள் கிட்டும்” என்பார்

அந்த அருளை  நாங்களும் பெறப் போகிறோம் என்ற மகிழ்ச்சி எனக்கு

எங்கள் ஊரான அம்பாசமுத்திரத்தில் இருந்து, சிவசைலம் ஒரு அரைமணி நேரம். அங்கிருந்து பத்து நிமிடத்தில் கடனாநதி அணை, அணையிலிருந்து மலைக்கு மேல் பயணம் செய்ய வேண்டும்

மலைக்கு மேல் ஒரு பத்து கிலோமீட்டர் பயணம் செய்தால், அத்திரி மகரிஷி தவம் செய்து பூஜித்த சிவன் கோவிலை அடைந்து விடலாம்

மிக சுருக்கமான பயணமாக தோன்றுவது, மலை ஏறும் போது தான் கடினமானதாய் மாறும்

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த அம்பாசமுத்திரம் ஒரு அற்புதமான ஊர். இங்கு வந்தாலே அருகில் இருக்கும் பாபநாசம், மணிமுத்தாறு, குற்றாலம் என்று பல இடங்களை பார்த்து விடலாம்

வெளியில் எங்கும் போக முடியாவிட்டாலும், பரணி ஆற்றில் முங்கி எழும் சுகமே அலாதியானது

நானும் உமாவும் பள்ளியில் கூட அத்திரி மலை போவதை பற்றியே பேசி கொண்டிருந்தோம். அதைக் கேட்ட தோழிகளுக்கும் கூட, எங்களுடன் வரும் ஆசை ஏற்பட்டது 

ஒரு நாள் முழுவதும் கானகத்தில் கழிக்க போவது குறித்தும், காட்டு யானைகள், ராஜ நாக கதைகள் என்று எங்கள் அப்பா சொன்ன கதைகளை பகிர்ந்தபடி இருந்தோம்.  

விஷுவிற்கு ஒரு நாள் முன்னரே கிளம்பி விடுவார்கள், அன்று அத்திரி மலையில் தங்கி விட்டு, மறுநாள் மாலை தான் வீடு திரும்புவார்கள்

அத்திரி மலையில் கரடிகள் உண்டாம், அது பொதிகை மலையின் ஒரு பகுதி

கொஞ்ச நாட்களாய் வடநாட்டில் இருந்து அங்கு வந்து தங்கி இருந்த சாமியாரை மரமேறி வந்து கரடி கடித்த கதையை அப்பா சொல்லும் போதெல்லாம் எனக்கு மயிர் கூச்செறியும்

அப்பா தயவு செய்து அழைத்து போங்கள் என்று பல நாட்களாய் கெஞ்சியதன் பலன் தான், அந்த முறை குடும்பமாய் ஒரு 20 பேர் கிளம்பினோம்

மதிய சாப்பாடு முடிந்த கையோடு ஆளுக்கு சிறிய பையுடன் ஒரு வேனில் கிளம்பினோம். 

பலவாறு எச்சரித்தபடி எங்களை அழைத்து போனார்கள். இது காடு இங்கெல்லாம் விளையாடாமல் ஒழுங்காய் இருந்தால் மட்டுமே பயணம் சிறப்பானதாய் முடியும் என்ற எச்சரிக்கை உணர்வு எங்களுக்கும் வந்திருந்தது

அத்திரி மகரிஷி தவம் செய்த போது அவருக்கு சேவை செய்வதற்காய் காசிக்கு போகாமல் குருபக்தியுடன் அங்கேயே தங்கிவிட்ட கோரக்கருக்காய் அத்திரி மகரிஷி அங்கேயே கங்கையை வரவழைத்தாராம் 

அந்த ஊற்று இன்றும் கங்கையின் சிலையுடன் அங்கிருக்கிறது என்ற கதைகளை சொல்லியபடி எங்களை வழி நடத்தினார் அப்பா

அப்பா ஒரு தேர்ந்த கதை சொல்லி, தான் தமிழ்நாடு கேரளா பார்டரில் செக் போஸ்டில் பணி புரிந்த போது நடந்த பல சம்பவங்களை சுவாரஸ்யமாய் கதை போல சொல்லியபடியே எங்களை நடக்க வைத்தார்

அதிலும், ஒரு ரப்பர் கடத்தல் லாரியை ஜீப்பில் துரத்தி பிடிக்க போன போது, குறுக்கே ஒரு ஒற்றை கொம்பன் யானை வந்ததை அப்பா சொல்லும் போது, நாங்களே அந்த மலைச் சரிவில் யானைக்கு முன் நின்றதை போல உணர்வை அடைந்தோம்

பதின்மங்களில் இருந்த எங்களுக்கு, கதை கேட்பது மிகுந்த உற்சாகத்தை தந்ததால், நாங்களும் வேகமாய் நடந்தோம்

கடனாநதி அணையில் தண்ணீரே இல்லை. கோடைகாலம் ஆதலால், அணையை கடக்க சுலபமாய் இருந்தது

மலை மேல் ஏற தொடங்கிய போது தான், சுற்றிலும் உள்ள பசுமைகள் விளங்க தொடங்கியது. பச்சையில் இத்தனை வகையான பச்சை உண்டா என்ற வியப்பு வந்தது  துளிர் இலைகளின் தளிர் பச்சை, முதிர்ந்த இலைகளின் ஆழ்ந்த பச்சை, தொடர் மழையால் பாசி படிந்த பாறைகளின் இளம் பச்சை என, எல்லாமே குளுமையும் அழகுமாய் இருந்தது

ஒவ்வொரு மரமும் மூன்று ஆள் அகலத்திற்கு விரிந்து, சூரிய ஒளியே தரையில் படாதவாறு ஒரு கவிகையைச் செய்திருந்தன

சில இடங்களில் கடினமான ஏற்றங்கள் கூட இருந்தது. கயிற்றை பிடித்து ஏற வேண்டிய இடங்களில் எல்லாம், அப்பாவும் மாமாக்களும் எங்களையும் அம்மாக்களையும் ஏற்றிவிட்டு உதவினர்

இரு இடங்களில் மட்டுமே அப்படி மிக கடினமாய் இருந்தது. மற்றபடி மலைப் பயணம் என்பது என் வாழ்வில் அதுவே முதல் முறை என்பதால், எனக்கு மிக ஆர்வமாகவே இருந்தது

எத்தனையோ ஊர்களுக்கு போனதுண்டு எனினும், இரவு முழுவதும் காட்டில் தங்கி இருந்து, இறைவனையும் இயற்கையையும் தரிசிக்கும் பேறு பெண்களுக்கு எளிதில் கிடைத்து விடாது

தற்போதுள்ள காலகட்டத்தில், யாரையுமே மலையேறக் கூடாது என்று அனுமதி மறுக்கிறது வனத்துறை 

என்னுடைய இளமை பருவத்திலேயே எனக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு அது

நாங்கள் அத்திரி மலைக்கு போய் சேர்ந்த போது, அங்கிருந்த வடநாட்டு குருஜி எங்களை வரவேற்றார். கொஞ்ச நாட்களுக்கு முன், அவர் மட்டும் வசிக்க அங்கு ஒரு குடில் அமைத்திருந்தார்

அந்த குடில் மிக சிறியதாகவே இருந்தது, எங்களை உள்ளே அழைப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர், மறுநாள் காலை பூஜையில் சந்திப்பதாய் கூறி குடிலுக்குள் மறைந்தார்

மிகச் சிறிய கருவறையில், சிவனும் ஐந்து பேரே நிற்க கூடிய மண்டபமும் கொண்ட அத்திரி கோவில் என்னை திகைப்பில் ஆழ்த்தியது

இவ்வளவு சிறிய கோவிலுக்கா நாம் இவ்வளவு கஷ்டபட்டு ஏறி வந்தோம் என்ற ஆச்சர்யம்.குளிர்ந்த நீருடைய ஊற்றில் விளையாடி களித்தோம்

அந்த ஊற்று நீர் அவ்வளவு சுவையானதாய் இருந்தது. கூடடையும் பறவைகளின் ஒலியும், வண்டுகளின் ரீங்காரமும் மெல்லக் கவியும் இருளும் ரசிக்க தூண்டும் அதே சமயம், பயத்தையும் விதைத்தது

அத்திரி கோவிலில் இருந்து பார்த்தாலே இன்னொரு கட்டிடம் தெரிந்தது. அது என்ன என்று கேட்டால, அது ஒரு மசூதி என்றும், அங்கே ரம்ஜானுக்கு மட்டுமே வந்து தங்கி இருந்து ஆடுகளை பலி கொடுத்து உண்பார்கள் என்றும் சொன்னார்கள்

பொதுவாய் மலை மீதி ஏறி வந்து பலியிடுவது எல்லாம் இந்துக்களின் வழக்கம், இங்கு மசூதியிலும் அப்படி நடப்பது ஆச்சரியமாகவே இருந்தது

மேலும் அருகருகே இரண்டு மதக்கோவில்கள் இருப்பது, ஆச்சர்யமான ஒரு மகிழ்வையே தந்தது

கொண்டு வந்திருந்த பொருட்களை கொண்டு செய்த கூட்டாஞ்சாதம், அவ்வளவு சுவை மிகுந்ததாய் இருந்தது

குச்சிகளை கொண்டு தீமூட்டி, அருகில் பாயில் படுத்து நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்தபடி துயின்ற இரவு, வாழ்நாளில் என்றும் மறக்க முடியாதது

யாராவது இருவர் மாறி மாறி காவல் இருந்து எங்களை பாதுகாத்தனர். தூரத்தில் கேட்ட நரியின் ஊளை அச்சமேற்படுத்திய போதும், கூட்டமாய் அனைவரும் இருப்பதால் பாதுகாப்பாய் உணர்ந்தோம்

மலை ஏறி வந்த களைப்பில் கண்ணயர்ந்திருந்த போதும், நள்ளிரவில் கடுங்குளிர் தாக்கியது. அம்மாவின் சேலை முந்தானையில் ஒண்டியபடி இரவு படுத்த போதும், குளிர் அதிகரித்தபடியே இருந்தது

காட்டில் கேட்கும் பல விலங்குகளின் குரலும் மனதில் திகிலை ஏற்படுத்தியது, எப்போதடா விடியும் என்று காத்திருந்த அந்த இரவு, மிக நீண்டதாய் தோன்றியது

எப்போதோ என்னையும் அறியாமல் கண்ணயர்ந்து சில மணி நேரத்தில் பறவைகளின் ஒலிகள் கேட்கத் தொடங்கியது

முழுவதும் புலராத அந்த வைகறை பொழுதில் ஊசிச் சாரலாய் என் மேல் விழுந்த துளிகளை ரசித்தபடி, துயில் முழுவதும் கலையாமல் படுத்திருந்த என்னை எழுப்பினார் அம்மா

“பன்னீர் மழை பொழியுதுடா எழுந்து பாரு” என்றார்

நாசியெங்கும் பன்னீரின் வாசத்தை உணர்ந்தபடி, பிரமிப்பிலிருந்து மீளாமலே பன்னீர் மழையைப் பார்த்தேன்

கவிதைகளிலும் கதைகளிலும் மட்டுமே வாசித்தறிந்த பன்னீர் மழையில் நனைவது, எனது விலாப்புறங்களில் சிறகை சொருகியது போன்ற பரவசத்தை தந்தது. எனது உடல் எடையற்றதாய் மாறி காற்றில் மிதந்தது

இயற்கையின் பெரும் கொடையால் காடே மணத்து கிடந்தது. வான் நோக்கி முகமுயர்த்தி பன்னீர் துளிகளை முகத்தில் ஏந்திய நொடி, நானே ஒரு பன்னீர் பூவாகி இருந்தேன் 

என் உள்ளங்கையில் பன்னீர் பிடித்து அருந்திய கணம் அந்த சித்திரை வைகறை என்னுள் தன்னை சேமித்துக் கொண்டது

அந்த இடத்தில் மட்டும் தான் அப்படி நடக்கிறதா அல்லது மொத்த காட்டிலும் அப்படி நிகழுமா என்று அறிய எண்ணி, சில அடிகள் ஓடிப்போய் பார்த்தேன். கோவிலை சுற்றி மட்டுமே இந்த அற்புதம் நிகழ்ந்தது

இதில் அறிவியல் ரீதியாக எதுவும் உண்மை உள்ளதா என்பதை எல்லாம் ஆராயும் பருவமில்லை எனக்கு. ஆகவே இந்த நிகழ்வை மிகப்பெரிய ஆசிர்வாதமாகவே கருதினேன்

இன்று வரை இந்த அனுபவத்தை நினைத்து பார்க்கும் போதே எனக்கு இதயம் சிலிர்க்கும். இயற்கையின் பெருங்கருணைக்காய் நன்றி சொல்ல இதழ் பிரித்த நொடி, உரத்த குரலில் ஓங்கி ஒலித்தது திருவாசகத்தின் ‘தென்னாடுடைய சிவனே போற்றி’

என் இதழ்களும் புன்சரிப்புடன் முணுமுணுத்தது ‘எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என 

குறிப்பு: பாலை மரம் என்கிற மரத்தில், மரநிறத்தில் உள்ள வண்டுகள் நீர் போன்ற ஒரு சுரப்பியை பீச்சி அடிக்கும். அது கீழிருந்து பார்க்கும் போது பன்னீர் மழையாக தெரியும் என்பதை, இணையம்  மூலம் சமீபத்தில் அறிந்தேன்

#ad 

                      

             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சோட்டா பீம் ஓவியம் By மார்நாடு (நான்காம் வகுப்பு)

    கொரானா… – ✍ பானுமதி பார்த்தசாரதி