in ,

தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 10) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கல்பனா அவளுடைய வீட்டில் யாரிடமும் ஏதும் சொல்லவில்லை. சத்யா சட்டக்கல்லூரியில் படிப்பதால் இப்போதெல்லாம் அவளுடன் அதிகமாகப் பேசவோ, பழகவோ முடிவதில்லை. கல்பனா அறிவியல் கலைக்கல்லூரியில் இருப்பதால் இப்போதெல்லாம் அவளைப் பார்ப்பது கூட மிக அரிதாகி விட்டது. அதனால் சத்யாவைப் பற்றிக் கவலைப் படவில்லை.

ஆனால் விடாமல் துரத்தும் கௌதமைப் பற்றி நினைத்தால் தான் அவளுக்குக் கொஞ்சம் கவலையாக இருந்தது.  ஆனால் ‘கடுமையாகப் பேசி அவன் தொடர்பைத் துண்டித்தே ஆகவேண்டும், வேறு வழியில்லை’ என்று முடிவு செய்தாள்.

கல்பனா வேலை செய்த நாட்கள் வரை விஜயா அவளுடைய சம்பளத்தை அவள் கணக்கில் வங்கியில் செலுத்தி விட்டாள். கல்லூரி லைப்ரரியில் பகுதி நேர வேலை வாங்கி விட்டாள். இவள் எதிர்பார்த்த அளவு சம்பளம் கிடைக்கவில்லை, ஆனாலும் வெளியில் எங்கும் அலைய வேண்டி இல்லாத்தாலும், மேலும் நினைத்ததைப் படிக்க முடிந்ததாலும், பல  புத்தகங்களை ‘ரெபர்’ பண்ணி படிக்க முடிந்ததாலும் இந்த வேலையும்  வசதியாகவே இருந்தது.

சத்யாவின் உண்மையான நட்பைத்தான் மிக இழந்தாள். ஆனால் கௌதமின் அன்புத் தொல்லையிலிருந்து விடுபட்டது சந்தோஷமா வருத்தமா என்பது அவளுக்கே புரியாத பதிராக இருந்தது.

லைப்ரரியி்ல் ஒரு நாள். கல்லூரிப் பாடங்களைத் தயார் செய்து கொண்டு, ஐ.ஏ.எஸ். மெயின் எக்ஸாமிற்கும் தயார் செய்து கொண்டுருந்தாள். மெயின் எக்ஸாம் இரண்டு பிரிவு. ஒன்று எழுதுவது, அதைக் கூட சுலபமாக செய்து விடலாம் போல் இருந்தது. மற்றொன்று இன்டர்வியூ. அதுதான் மிகவும் கடினம் என்று தோன்றியது.

வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளிலிருந்தோ அல்லது எந்த ஒரு சப்ஜெக்டிலிருந்தோ கேள்விகள் கேட்கப்படும். நமக்கு மிகவும் அபத்தமாகத் தோன்றும், அல்லது நம் உணர்ச்சிகளைத் தூண்டி கோபப்படுத்தும் கேள்விகளும் கேட்கப்படும்.

’ஒரு கோச்சிங் சென்டரில் சேர்ந்து படித்தால் இதெல்லாம் சுலபமாக இருக்கும். ஆனால் அதெற்கெல்லாம் எவ்வளவு பணம் செலவாகும்? பரீட்சைக்குப் பணம் கட்டவே நம்மால் முடியவில்லை. கோச்சிங் சென்டரில் எங்கு சேர்வது?’ என்று நினைத்துக் கொண்டாள்.

ஒரு நாள் கல்பனா எதிர்பாராத நேரத்தில், அவளைத் தேடி கௌதம் வந்து நின்றான்.

லைப்ரரியின் தலைமை அலுவலர், “கல்பனா, உன்னைத்தேடி யாரோ வந்திருக்கிறார்கள்” என்று சொல்ல, ‘என்னைத் தேடி யார் வரப் போகிறார்கள்’ என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்து பார்க்க, அங்கே கௌதம் நின்றிருந்தான்.

தீவிரமான முகத்துடன், “கல்பனா… உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும், உடனே வா” என்றான்.

“இப்போது எப்படி வர முடியும்? அலுவலக நேரம் ஆயிற்றே” என்றாள் கொஞ்சம் கோபமாக.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ பெர்மிஷன் போடுவாயோ லீவ் போடுவாயோ எனக்குத் தெரியாது. உடனே நீயாக வருகிறாயா, அல்லது நானே உன் மேலதிகாரியிடம் பேசட்டுமா?” என்றான் பிடிவாதமாக, சின்னக் குழந்தை போல் அடம்பிடிக்கும் குரலில்.

வேறு வழியில்லாமல் லைப்ரரியனிடம் அரைநாள் விடுப்பு சொல்லிவிட்டு அவனுடன் கிளம்பினாள்.

“உனக்கு என்ன ப்ராப்ளம் கல்பனா? ஏன் என்னுடன் பேசுவதைத் தவிர்க்கிறாய்?” என்றான்.

“ஏன் உங்களுக்கு உங்கள் அப்பா என்னை பேசியது தெரியாதா? ஏழைகள் தானே, என்ன பேசினாலும் தாங்கிக் கொள்வார்கள் என்ற எண்ணமா?. சார்… அவர் பேசியதெல்லாம் போகட்டும், உங்களுக்கு என் மேல் கொஞ்சமாவது நல்ல எண்ணம் இருந்தால் தயவு செய்து இனிமேல் என்னைத் தேடி வராதீர்கள்” என்று முடித்தாள்.

ஆரம்பத்தில் கோபமாகத் தொடங்கினாலும், முடிக்கும் போது கண்ணீரோடு ஆற்றாமையில்தான் முடித்தாள். அவள் கண்ணீரைத் துடைத்து, துடிக்கும் அந்தக் கண்களில் முத்தமிடத் துடித்தது அவன் மனது.

அவள் மேலும் அழுது கொண்டே, “எங்களைப் போன்ற ஏழைகள் பணக்கார வாலிபர்களைத் தேடிப்பிடித்து, ஓட்டல் அங்கே இங்கே என்று பல இடங்களுக்கு உங்களோடு காரில் கண்டபடி சுற்றுகிறோம் என்று மகா மட்டமாகப் பேசுகிறார். உங்கள் உறவுப்பெண் சங்கீதாவைத் திருமணம் செய்வது என்னால்தான் தடைபடுகிறது என்று உங்கள் அப்பா மட்டும் அல்லாமல், உங்கள் வீட்டில் எல்லோரும் நினைக்கிறார்கள். நான் ஏன் சார் உங்கள் சந்தோஷமான வாழ்க்கைக்கு குறுக்கே நிற்க வேண்டும்? எங்கிருந்தாலும் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது தான் என் சத்தியமான ஆசை” என்றாள் கண்களில் நீர் வழிய.

“நீ இருக்கும் இடத்தில் இருந்தால் தான் எனக்கு சௌகர்யமும் சந்தோஷமும். அதனால் யார் என்ன சொன்னாலும் நான் உன்னைப் பிரிய மாட்டேன், பிரிந்தால் உயிர் வாழ மாட்டேன்” என்றான் கௌதம்.

“ஸார், இந்த சினிமா டயலாக் எல்லாம் வேண்டாம். உங்களுக்கு நிஜமாகவே என் மேல் நல்ல அபிப்பிராயம் இருந்தால், என்னுடன் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்தி விடுங்கள். எங்களைப் போன்ற ஏழைகளுக்கு தன்மானம் மட்டும் தான் ஒரே சொத்து, அதையும் நீங்கள் பாழடித்து விடாதீர்கள் ” என்றவள், அப்போது சிக்னலில் கார் நிற்கும்போது, “இதுவே நம் கடைசி சந்தப்பாக இருக்கட்டும் பை” என வேகமாக இறங்கி கூட்டத்தில் காணாமல் போய் விட்டாள்.

திக்பிரமை பிடித்தாற் போல் இருந்த கௌதம், செய்வதறியாது கொஞ்சம் நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டு பிறகு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். பிறகு எவ்வளவு முயன்றும் அவளைக் காண முடியவில்லை.

வருடங்கள் இரண்டு ஓடி விட்டன. சத்யா மட்டும் நேரம் கிடைக்கும் போது இவளை வந்து பார்ப்பதுண்டு. இருவரும் ஒன்றாகவே ஐ.ஏ.எஸ். மெயின் பரீட்சைக்கு பணம் கட்டினார்கள். ஆனால் சத்யாவிற்கு அதற்குள் திருமணம் நிச்சயம் செய்து விட்டார் அவள் அப்பா. அதனால் அவளுக்கு பரீட்சை எழுத முடியவில்லை. படிக்க இருந்த ஆர்வமும் போய் விட்டது.

தன் எதிர்கால கணவருடன் பேசவே சத்யாவிற்கு பாதி நாட்கள் கழிந்து விடுகின்றது. மீதியுள்ள நாட்களில் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசி நிச்சயம் செய்து கொண்டு காரை எடுத்துக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் சுற்றுவது என்று வழக்கப்படுத்திக் கொண்டனர்.

ஒரு நாள் சத்யா, தங்களுடன் காரில் கொஞ்ச தூரம் வரும்படி கல்பனாவை மிகவும் கெஞ்சினாள்.

“முட்டாள் மாதிரிப் பேசாதே சத்யா! நான் உங்களுடன் வருவது எனக்கே ரொம்ப அசம்பாவிதமாக இருக்கிறது. ஏற்கெனவே உன் அப்பா என்னைப் பற்றிப் பேசியது உனக்குத் தெரியாதா?” என்று அவள் மறுத்து விட்டாள்.

“நீ ரொம்ப ஸெல்பிஷ் கல்பனா, உன்னைப் பற்றி மட்டுமே நீ நினைக்கிறாய். உன்னை மிகவும் நேசித்த என் அண்ணாவை பற்றி நினைத்தாயா?” என சாடினாள்.

இதற்குள் ரிட்டன் மெயின் எக்ஸாமும் நடந்தது. அதிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருக்கலாம் என்று நம்பினாள்.  அதனால் வாய் வழித் தேர்வும் (personality test) உற்சாகமாகவே செய்தாள். மொத்தம் 2000 மதிப்பெண்களுக்கு அதிகப்படியான மதிப்பெண்கள் வாங்கி தமிழகத்தில் முதலாவதாகவும், அகில இந்திய அளவில் எட்டாவதாகவும் தேறியிருந்தாள்.

நேர்முகத் தேர்வில் இவள் அளித்த பதில்கள் கேள்வி கேட்டவர்களையே ஆச்சரியப்பட வைத்தன.  அதனால் வேலூர் மாவட்டத்தில் சப்-கலெக்டர் போஸ்ட் கொடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் தங்கை காஞ்சனா, நர்ஸிங் கோர்ஸ் முடித்து விட்டு, அரசாங்க ஸ்காலர்ஷிப்பில் பி.எஸ்.ஸி. நர்ஸிங்கிலும் சேர்ந்து விட்டாள். எல்லாம் ஸ்காலர்ஷிப் தான். ஹாஸ்டல் வாசம் தான். அவள் தம்பி ரகுவும் டிப்ளமா மெக்கானிகல் இஞ்ஜினீயரிங் தான் படிப்பேன் என்று பிடிவாதமாக சொல்லி படித்தும் முடித்து விட்டு வங்கிக் கடன் மூலம் ஒரு ஒர்க்‌ஷாப்பும் திறந்து விட்டான்.

எல்லாவற்றிற்கும் இப்ராஹிம்தான் அவனுக்குத் துணை. ஒர்க்‌ஷாப்பில் அவனுக்கு நல்ல வருமானம். அம்மாவின் கை சாப்பாடு. எல்லாமாகச் சேர்ந்து அவன்தான் மிகவும் சந்தோஷமாக இருந்தான். இஞ்ஜினீயரிங் டிகிரி இல்லையென்றாலும், நல்ல வேலைத் திறமையால் நன்றாகவே சம்பாதிக்கவே செய்தான்.

கல்பனா, சத்யாவிடம் மட்டும் தினம் ஒருமுறை போனில் பேசி தன்னுடைய எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வாள். சத்யாவின் திருமண அழைப்பும் வந்தது.

அதில் சத்யாவின் பெயரையும், அவள் வருங்காலக் கணவனின் பெயரையும் ஒரு முறை படித்தவள், தங்கள் நல்வரவை விரும்பும் என்ற இடத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த டாக்டர் கௌதம் எம்.எஸ். என்றும் இன்னும் பல டிகிரிகளோடும் காணப்பட்ட அந்தப் பெயரிலேயே அவள் கண்கள் நிலைத்தன. கண்கள் கலங்க அந்தப் பெயரி்ல் அவள் தன் இதழ்களைப் பதித்தாள்.

கல்பனாவிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சத்யாவின் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு சென்னை கிளம்பி விட்டாள். அம்மாவுடனும், தம்பியுடனும் தங்கிக் கொண்டு, சத்யாவுடன் போனில் நலம் விசாரித்தாள்.

“நீ என் கல்யாணத்திற்குத் தானே வந்தாய்! முதலில் என்னைத்தானே வந்து பார்க்க வேண்டும்! என்னுடன் தானே தங்க வேண்டும்?  அதை விட்டு சின்ன பாப்பா போல் உன் அம்மா மடி மேல் உட்கார்ந்து கொண்டாயா?” என்றவள், அடுத்த அரை மணி நேரத்தில் கல்பனா வீட்டு வாசலில் வந்து நின்றாள்.

கூடவே வந்து நின்றது யார் என்று நினைக்கிறீர்கள்? கௌதம் தான் சிரித்துக் கொண்டு நின்றான்.

 “என்ன சப் கலெக்டர் அம்மா, நான் யாரென்று தெரிகிறதா?” என்றான் கிண்டலாக.

கல்பனாவின் முகம் வருத்தத்தால் கூம்பியது.  கண்களில் லேசாக கண்ணீர் திரையிட்டது. அதற்குள் கல்பனாவின் அம்மா எல்லோரையும் உள்ளே வரச் சொல்லித் தொந்தரவு செய்தாள்.

அப்போது தான் புதிதாகச் செய்த சூடான வெங்காயப் பகோடாவும், ரவாகேசரியும் கொண்டு வந்து வைத்தாள். சத்யாவிற்குப் பிடித்த மாதிரி சர்க்கரை கம்மியாக ஸ்ட்ராங்கான காபியும் கொண்டு வந்து வைத்தாள்.

“அம்மா, கௌதம் டாக்டராச்சே… ரொம்ப ஹெல்த் கான்ஷியஸாக இருப்பார்களே, காபி குடிப்பாரா என்று கேட்டுக் கொள் அம்மா?” என்றாள் கல்பனா.

சத்யா பேசிக் கொண்டே கல்பனாவின் அம்மாவோடு சமையலறைக்குள் சென்றாள். கௌதமும், கல்பனாவும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம்தான்.

அப்போது கல்பனாவையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த கௌதம், “என் மேல் கோபமா கல்பனா? நீ உன் கையால் விஷம் கொடுத்தால் கூட அது எனக்குப் புரோட்டின் பானம்தான். உன் மனம் நோகும்படி பேசியிருந்தால் என்னை மன்னித்து விடு. என்னோடு பேசாமல், ‘இதுவே நம் கடைசி சந்திப்பாக இருக்கட்டும், குட் பை’ என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாயே. என்னைப் பற்றிக் கொஞ்சமாவது சிந்தித்திருந்தால் அப்படிப் பேசி விட்டுப் போயிருப்பாயா? என் வாழ்க்கையே எப்போதும் தோல்விதானா? நீ வருவாய் என்றுதான் காத்திருந்தேன். நீ என்னை விட்டுப் பிரிந்தால் இங்கே இருப்பது வெறும் உயிரற்ற உடல்தான் என்பதை மட்டும் மறந்து விடாதே” என்றான். இப்போது அவன் கண்களில் கண்ணீர் திரையிட்டது.

 “என்ன சார், இப்படியெல்லாம் பேசலாமா?” என்றவள், மெதுவாக அவன் அருகில் வந்து அவன் கண்களைத் துடைத்தாள்.  

அவன், அவள் இடுப்பில் கை போட்டு தன்னருகில் இழுத்துக் கொண்டு, “இனி எப்போதும் என்னை விட்டுப் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்” என்றான். அப்போது தெருக்கதவு திறந்து கொண்டு கல்பனாவின் தம்பி ரகு வரவும் டக்கென்று இருவரும் விலகினார்கள்.

ரகுவிற்கு டாக்டரிடம் மரியாதை அதிகம். கொஞ்ச நேரம் கௌதமிடம் பேசிவிட்டு உள்ளே சென்று சத்யாவை கலாட்டா செய்து கொண்டிருந்தான்.  அவனுடைய சிறு வயது முதல் பழக்கம் ஆதலால், கல்பனாவிடம் பேசுவது போலவே அரட்டை அடிப்பான்.

அடுத்த நாள் விடியற்காலம் முகூர்த்தம் என்றதால், கல்பனா அப்போதே அவர்களுடனே வர வேண்டும் என்று அடம் பிடித்தாள் சத்யா.

“நாளை முகூர்த்த நேரத்தில் வருகின்றேனே! உன் அப்பா, பெரியண்ணா எல்லோரும் என்ன சொல்வார்களோ?” என்றாள் கல்பனா தயக்கத்துடன்.

“அப்பா ஒன்றும் சொல்ல மாட்டார். அவர் முன்பு உன்னிடம் கடுமையாகப் பேசியதற்கே வருத்தப்படுகிறார், மற்றவர்களைப் பற்றிக் கவலையில்லை” என்றாள் சத்யா. 

கொஞ்சம் பயத்துடன் தான் அவர்களுடன் சென்றாள் கல்பனா. முகூர்த்த நேரத்தில் கட்ட வேண்டிய ஆடைகளையும் எடுத்துச் சென்றாள்.     

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அமிலக் குப்பி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    நினைவுகளே தோரணங்கள்!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்