in ,

தாயுள்ளம் (சிறுகதை) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

ந்த பிரபலமான சினிமா நடிகையின் பிரமாண்டமான கார் நகரத்தை விட்டு தள்ளியிருந்த ஒரு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தின் முன் வந்து நின்றது. குடும்பப்பாங்கான நடிகை என்று பெயரெடுத்த வேதா காரிலிருந்து இறங்கினாள்.

பின்னால் இறங்கிய அவள் கணவனும் சினிமா நடிகன்தான். இருவரும் காதல்மணம் புரிந்தவர்கள். அவர்களின் ஏழு வயது ஆண் குழந்தையும், நான்கு வயது பெண் குழந்தையும் காரிலிருந்து இறங்கினர்.

அனைவரும் சாதாரண ஆடையில் இருந்தனர். பெண் குழந்தை மட்டும் பிறந்த நாள் உடையில் அதுவும் நடுத்தரக் குடும்பம் வாங்கும் சாதாரண, அதிகம் பகட்டில்லாமல் இருந்தது.

காப்பகத்தின் உரிமையாளர் வாசலில் நின்று வரவேற்றார். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஆரம்பமானது.நடிகையின் பெண் குழந்தை கேக் வெட்டியது. சுற்றி நின்றிருந்த காப்பகக் குழந்தைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்து மிகவும் மகிழ்ச்சியாக குதித்துச் சிரித்தனர்.

சிறிது தொலைவில் குழந்தைகளைப் பராமரிக்கும் பெண்மணிகள் நின்றிருந்த வரிசையில் இருந்த தாயம்மாவிற்கு சிறிது பயம் வயிற்றைக் கவ்வியது. அவளது பார்வை குழந்தைகளின் கூட்டத்தில் நின்றிருந்த ஐந்து வயது ராணியின் மீதே பதிந்திருந்தது.

மனம் பதைபதைத்தது. அடிக்கொரு முறை தாயம்மாவை ஏக்கப் பார்வைப் பார்த்தாள் ராணி. ‘நல்லவேளை போன வருசம் போல அழுகை, ஆர்ப்பாட்டம் இல்ல’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் தாயம்மா.

கேக்கும், அறுசுவை உணவும், புதிய உடையும் கிடைத்தது அன்று அந்த ஆதரவற்றக் குழந்தைகளுக்கு.

நடிகை குடும்பம் கிளம்பிய பின் ராணி ஓட்டமாக ஓடி வந்தாள் தாயம்மாவிடம். “ஆயா..ஆயா.. இந்த பாரு… புது கௌன்….” என்று நீட்டினாள்.

ராணியை அள்ளி அணைத்தபடியே “அட…உனக்குப் பிடிச்ச பச்சக் கலரு….வா …போட்டு விடறேன்”

“இல்ல…இல்ல…இப்பப் போடக் கூடாது… இது…என்னோட பிறந்த நாளுக்கு தான் போட்டுக்கணும்”

“பத்திரமா வெச்சுக்க…” என்று தன் பிஞ்சு விரல்களால் அபிநயம் காட்டினாள்.

என்ன பதில் சொல்வதென்று தடுமாறினாள் தாயம்மா… அடுத்தது என்ன நடக்கப் போகிறதோ?… என அவள் எதிர்பார்த்தபடி… “ஆயா..ஆயா…எனக்கு எப்ப பிறந்த நாள் வரும்? அன்னிக்கு என்னோட அம்மா.. அப்பாவ…கடவுள் கொண்டு வந்து விடுவாரா? கேக் வெட்டலாமா?…பலூன் நிறைய வாங்கணு….ம்…..” என்று சொல்லிக்கொண்டே பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் ராணி.

“என்னோட அம்மா….எங்க..? எனக்கு கேக் வெட்டணும்….” திரும்ப திரும்ப சொல்லியபடி அழுகை அதிகமாகியது. சில சின்னக் குழந்தைகளும் இவளுடன் சேர்ந்து அழ ஆரம்பித்தன. அவர்களை சமாதானம் செய்து தூங்க வைப்பதற்குள் திணறிப் போயினர் காப்பகப் பெண்மணிகள்.

“இவங்கள யாரு இங்க வந்து கொண்டாடச் சொன்னது? இந்தப் பிள்ளைங்களோட ஏக்கத்த இன்னும் அதிகமாக்கிட்டுப் போறாங்க….இன்னும் ஒரு வாரத்துக்கு நமக்குத் தலவலி… இதுகளைத் திரும்ப கட்டுக்குள்ள கொண்டாறதுக்குள்ள தாவு தீர்ந்து போயிரும்…” என்று தன் குமுறலைக் கொட்டித் தீர்த்தாள் குமுதவல்லி எனும் பெண்மணி.

அழுதது விசும்பலுடன் தூங்கிப் போன ராணியை பாயில் படுக்க வைத்துவிட்டு அருகிலேயே படுத்துக் கொண்டாள் தாயம்மா. தூக்கம் வராமல் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

சோறு சமைத்துக் கொண்டிருந்த தாயம்மா, “யக்கா…யக்கா…” என்ற குரல் கேட்டு குடிசையின் வாசலுக்கு விரைந்தாள். வாசலில் தேன்மொழி, பதைபதைப்புடன் நின்றிருந்தாள்.

“யக்கா….எனக்கு …நேத்து ராவுலேர்ந்து….லேசா சுரம் வந்துருச்சு. இங்க பால்வாடில முகாம் போட்ருக்காங்க….போய் செக்கப் பண்ணிட்டு வந்துர்றேன்….பிள்ளையைப் பாத்துக்கங்க….” என்று தன் கையைப் பிடித்திருந்த ராணியை விட்டு விட்டு சென்றாள். சென்றவள் திரும்பவில்லை.

நோய் தொற்று இருப்பதாகக் கூறி கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று விட்டார்கள். அங்கிருந்து ஃபோன் செய்தாள் “இன்னும் பத்து நாளைக்கு பிள்ளையை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று.  மூன்று நாட்களுக்குப் பிறகு ஃபோனில் பேசவில்லை.

அடுத்த தெரு பாண்டிம்மா தான் சொன்னாள், தேன்மொழி இறந்து விட்டாளென்று. அவள் கணவன் வடநாட்டில் வேலைக்குச் சென்றவன் திரும்பி வந்து தன் மனைவி இழந்த துக்கம் தாங்காமல் அழுது கொண்டே இருந்தான்.

குடிக்க ஆரம்பித்தான். ராணியை இவளிடம் விட்டுவிட்டான். அவ்வப்போது வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு செல்வான். ஒரு நாள் அதிகமாகக் குடித்து விட்டு  குழந்தையை அடிக்க ஆரம்பித்தான்.

குழந்தையின் கதறலைக் கேட்ட தாயம்மா ஓடிச்சென்று அவனைத் தள்ளிவிட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டாள். அவன் இவளை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே ராணியை இழுத்து கீழே தள்ளிவிட்டான்.

குழந்தை நெற்றியில் அடிபட்டு வீறிட்டாள். தாயம்மா ருத்ரகாளியாக மாறினாள். அவனை ஒரே தள்ளாகத் தள்ளி நெஞ்சில் ஓங்கி மிதித்து விட்டு குழந்தையை அள்ளி அணைத்தபடி குடிசையிலிருந்து வேகமாக வெளியேறினாள்.

அவன் இறந்துவிட்டான் என்று அவனைப் பார்க்க வந்த கூட்டாளி ஒருவன் கத்தி ஊரைக் கூட்டினான். தாயம்மாவிற்கு பயமாக இருந்தது. தன்னை போலீஸ் பிடித்து விடுமோ என்று. நல்ல வேளையாக அதிகமாகக் குடித்ததால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் என்று போலீஸ் கேஸை மூடிவிட்டது.

ராணியை தன் குழந்தையாக வளர்த்தாள் தாயம்மா. அவளுடைய மருமகள், ஒருநாள் “நீயே தண்டசாசோறு….இந்த சனியனுக்கு வேற நா வடிச்சுக் கொட்டணுமா?, போய் எங்கயாவது அநாதை விடுதில தள்ளு…நீயும் எங்காவது தொலஞ்சுப் போ….” என்று எரிந்து விழுந்தாள்.

அவள் சொல்வது சரிதான் என்று குழந்தையுடன் இந்த ஆசிரமத்திற்கு வந்தாள். நல்லவேளையாக அதன் நிர்வாகி குழந்தையுடன் தாயம்மாவையும் ஏற்றுக் கொண்டார். குழந்தை ராணியுடன் பிற குழந்தைகளையும் அன்பாகப் பார்த்துக் கொண்டாள்.

மறுநாள், குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வந்தவள், நேராக நிர்வாகி அறையின் வந்து வாசலில் நின்றாள். எட்டிப்பார்த்த நிர்வாகி மணிகண்டன் “என்னம்மா…ஏதாவது என்கிட்ட சொல்லணுமா?” என்று அன்பு ததும்பும் குரலால் கேட்டார்.

“ஆமாங்கய்யா…” என்று ஆரம்பித்தவள் அடுத்த வார்த்தைப் பேசத் தயங்கினாள்.

“பரவால்ல.. .எதுனாலும் எங்கிட்ட தைரியமா சொல்லலாம். அப்ப தான் எனக்கு குழந்தைகளைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்க முடியும். செய்யவும் முடியும்.”என்று ஊக்கப்படுத்தினார்.

“இல்லங்கய்யா….நேத்து வேதாம்மா வந்துட்டுப் போனதற்கப்பறம் ராணியும் சில குழந்தைகளும் அழ ஆரம்பிச்சுட்டாங்க….கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளும் சோகமாயிட்டாங்க….”

“ம்…..”

“இது… நான்… இங்க வந்துலேர்ந்து மூணு வருசமா பாக்கறேன். மனசுல இருக்கற சோகம் இந்த மாதிரி சமயத்துல அதிகமாயிறது…..அவங்கள சமாதானப்படுத்தி ஒரு நிலைக்குக் கொண்டு வர இரண்டு, மூணு நாள் ஆகுது. அன்னைக்கு சரியா தூங்கமாட்டாம அழுதுகிட்டே இருக்காங்க…..”

“ம்…..என்ன செய்யறது? தாய்,தகப்பன் இல்லாத சோகத்த நாம ஓரளவுக்குத்தான் போக்க முடியும். அவங்க தலைவிதியை மாத்த முடியுமா?” என்றார் வருத்தமாக.

“எனக்கு ஒரு யோசனை தோணுது….” என்று மீண்டும் சொல்லத் தயங்கினாள்.

“ம்…..சொல்லுங்கம்மா…”

“இல்ல…நாமலும் நம்ம பிள்ளைகளுக்குப் பிறந்த நாள் கொண்டாடலாமா?….”

“ம்….நல்ல யோசனைதான். நம்ம பிள்ளைங்க ஒரு இருநூறு பேர் இருக்காங்க. மாசத்துல எப்படியும் அஞ்சாறு பேருக்கு குறையாம பிறந்த நாள் வரும். எவ்வளவு செலவாகும் னு… பாக்கணும். அதுக்கு யார்கிட்ட உதவி கிடைக்கும்…னு பாக்கணும்….ம்…சரி… பாக்கலாம்…” என்றார் யோசனையுடன்.

“நமக்கு உதவி பண்றவங்க அவங்கப் பிறந்த நாளையும், அவங்கக் குழந்தைகள் பிறந்த நாளையும் இங்க கொண்டாடுவதற்குப் பதிலா இந்த பிள்ளைகளோடப் பிறந்த நாளை கொண்டாடச் சொல்லிக் கேட்கலாமா?”

“அதெப்படிம்மா….சொல்ல முடியும்..? அவங்க எல்லோரும் இந்த காப்பகத்தை ஆரம்பிச்சதுலேர்ந்து உதவி பண்றவங்க….”. சிறிது யோசித்தவர் “சரி…நான் முயற்சி செஞ்சுப் பார்க்கிறேன் என்றார்.

அவரின் பேச்சு மேம்போக்காக இருப்பதாக உணர்ந்த தாயம்மா மீண்டும் கவலையில் ஆழ்ந்தாள். மதியம் சாப்பிடும் பொழுதும், இரவு உணவு தயாரிப்பில் ஈடுபடும்பொழுதும் இதே சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். ஒரு யோசனைத் தோன்றியது.

எட்டாம் வகுப்புப் படிக்கும் தாரணியிடம் ஒரு கடிதம் எழுதச் சொல்லி வாங்கி வைத்துக் கொண்டாள். மறுநாள் காலை குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு செருப்புக் போடாத காலுடன் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் நடிகை வேதாவின் வீட்டிற்கு நடந்தாள்.

வாசலில் செக்யூரிட்டி அமர்ந்திருப்பதைப் பார்த்து சிறிது பயந்தாள். பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ,”சார்….இந்த லெட்டரை வேதாம்மாகிட்ட குடுக்கணும்…..நான் அவங்க பரம ரசிகை” என்று சிரித்தாள்.

“அதெல்லாம் குடுக்க முடியாதும்மா…..நடிப்ப பார்த்தோமா… ….ரசிச்சோமா…னு இருக்கணும். வீட்டுக்கெல்லாம் வரக்கூடாது. போ….போ….” என்று அதிகாரம் கலந்த கோபத்துடன் பேசி விரட்டினான்.

அவமானமாக இருந்தது. விருட்டென்று கிளம்பிவிட்டாள். தன் யோசனை மீது தானே வெறுப்புக் கொண்டாள்.

நாம் ஏன் பிறரைக் கெஞ்ச வேண்டும் ?….நாமே அந்தப் பணத்தை சம்பாதிக்க வேண்டும்.. என உத்வேகம் பிறந்தது. ராணியின் பிறந்த நாளுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அதற்குள் சம்பாதித்து விடலாம் என்ற நம்பிக்கையும் பிறந்தது. வரும் வழி முழுதும் எப்படி சம்பாதிப்பது என யோசித்துக் கொண்டே வந்தாள்.

மறுநாள் ஆசிரம நிர்வாகி மணிகண்டனிடம், “ஐயா….காலைல குழந்தைகளை பள்ளிக்கூடத்துல விட்டதுக்கு பொறவு ஆசிரம வேலையெல்லாம் முடிச்சுட்டு ஒரு இரண்டு மணிநேரம் சும்மாதான் இருக்கேன். அந்த நேரத்துல ஏதாவது வேலை செஞ்சா கொஞ்சம் பணம் கிடைக்குமே பிள்ளைகளுக்கு உபயோகமா இருக்குமே….ஐயா”

“ராணிக்கு பிறந்தநாள் கொண்டாட முடிவு எடுத்துட்டீங்க சரி பார்க்கலாம்”

மறுநாள் தான் குடிசைத் தொழிலாக நடத்தும் அப்பள வியாபாரத்தில் வேலைக்கு எடுத்துக்கொண்டார். வேலையில் சேர்ந்த ஒரு வாரம் ஆகியிருக்கும். அப்பளம் இட்டுக்கொண்டு இருக்கும் போது ஒருநாள் கூட வேலை பார்க்கும் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம், “சீக்கிரமா வேலையை முடிச்சுட்டு இன்னிக்கு சாவித்திரி சீரியல் பாக்க போகணும் ..இன்னிக்கு முக்கியமான கட்டம் …” என்றாள் பரபரப்புடன்.

“ஆமா, அந்த சாவித்திரிக்கு எதிரியா இருக்காளே சாந்தி  அவ அட்டகாசம் தாங்கல…”

“நல்லா நடிக்கிறாங்க…கெட்டவளா நடிக்கறதுக்கும் ஒரு திறமை வேணும்..”

“நீ வேற… நெசமாவே அவ குணம் அப்படித்தானோ என்னவோ.. இல்லைன்னா நிஜ வாழ்க்கைல நடிகை வேதா என்ன செஞ்சாலும் அதையே இவளும் செய்வா….” என்று சொன்னாள்.

“அப்படியா?..”

“ஆமா…நம்ம ஐயா நடத்தற ஆசிரமத்துக்கு வந்து வேதா தன்னோட குழந்தைகளோட பிறந்த நாளை கொண்டாடினாங்க….உடனே இவளும் தன்னோட வெட்டிங்டேவ ஆசிரமத்தை வந்து கொண்டாடறதா முடிவு பண்ணிருக்கா …என்னோட அக்கா மவ அவங்க வீட்ல தான் பாத்திரம் தேய்க்க போகும்….. அது சொல்லித்தான் எனக்குத் தெரியும்.”

இவர்களின் பேச்சைக் கேட்டதும் தாயம்மாவிற்கு ஒரு யோசனைத் தோன்றியது. அதை செயல்படுத்த முயற்சி எடுத்தாள். வெற்றியும் கண்டாள்.

இரண்டு வாரம் கழித்து வந்த ராணியின் பிறந்த நாளன்று இன்னும் பதினைந்து குழந்தைகளின் பிறந்த நாளும் சேர்த்து வெகு விமரிசையாக  ஆசிரமத்தில் கொண்டாடப்பட்டது.

சாந்தியை பேட்டி எடுக்க வந்த மீடியா, உங்களுக்கு எப்படி இந்த எண்ணம் தோன்றியது? என்ற கேள்விக்கு…”ஆமாம்…சின்ன வயசுலேர்ந்தே எனக்கு இந்த மாதிரி ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை இருந்தது. மத்தவங்கள மாதிரி தன்னோட பிறந்தநாளையோ  திருமண நாளையோ கொண்டாடறதுக்கு பதிலா இந்த குழந்தைகளை உண்மையா சந்தோஷம் படுத்தணும்னு தான் அவங்களோட பிறந்த நாளை கொண்டாட நினைச்சேன். அது தான் அந்த குழந்தைகளோட உண்மையான சந்தோஷம். இத நான் என்னை பிரபலப்படுத்திக்கவோ என்னை எல்லோரும் பாராட்டணும்கிறதுக்காகவோ  செய்யல…இதுல கிடைக்கற ஆத்ம திருப்திக்காகத்தான்” என்றாள் அடக்கமான பெருமிதத்துடன். தாயம்மா தன்னிடம் சொன்ன இந்த யோசனையை மறைத்து.

ராணி கேக் வெட்டியதும் முதல் துண்டை கொடுக்க தாயம்மாவைத் தேடினாள். “ஐயாவுக்கு கொடு” என்று சைகை காட்டினாள் ஓரமாக நின்றிருந்த தாயம்மா.

ராணி அவளைப் பார்த்து ஓடி வந்து கேக்கை தாயம்மாவின்  வாயில் திணித்துவிட்டு கண்கள் விரிய “அம்..மா…என்று ஆசையுடன் அழைத்தாள்.

அந்த குரலைக் கேட்ட தாயம்மா தான் இருபத்தைந்து வருடங்கள் கழித்து மீண்டும் தாயான பூரிப்புடன் கண்களில் முட்டிய கண்ணீருடன் ராணியை அள்ளி அணைத்துக் கொண்டாள்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காணாமல் போன கறுப்பி (சிறுகதை – முற்பகுதி) – நாமக்கல் எம்.வேலு

    காணாமல் போன கறுப்பி (சிறுகதை – பிற்பகுதி) – நாமக்கல் எம்.வேலு